Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #10 – கன்னிமாரா நூலகம்

கட்டடம் சொல்லும் கதை #10 – கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா நூலகம்

நூலகங்கள் நகரத்து அறிவின் களஞ்சியமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. ஒரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும்.

பெருமைப்படக்கூடிய பல நூலகங்களை மெட்ராஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால், எக்மோரில் உள்ள கன்னிமாரா நூலகம் போல் அவைகள் பிரபலமாக இல்லை.

திப்பு சுல்தான் படையெடுப்பின் பயம் விலகியதும், பல ஆங்கிலேயர்கள் கோட்டையை விட்டு வெளியேற முடிவு செய்தனர். 3 பக்கங்களிலும் கூவம் சூழப்பட்ட எக்மோர், வெள்ளையர்கள் தங்கள் தோட்ட வீடுகளைக் கட்டுவதற்குக் குளிர்ச்சியான சூழலாக இருந்தது. எக்மோர் வேகமாக வளர ஆரம்பித்தது

மருத்துவரான எட்வர்ட் பால்ஃபோர் என்பவர் மூலம் எழும்பூரில் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. ஆசியாவின் முதல் மிருகக்காட்சிசாலையையும் அவர் அங்கு அறிமுகப்படுத்தினார்

அருங்காட்சியகமும் மிருகக்காட்சி சாலையும் ஒரே வளாகத்தில் இருந்ததால், செத்த காலேஜ் மற்றும் உயிர் காலேஜ் என்ற பிரபலமான சொல் தோன்றியது.

அப்போது இங்கிலாந்தில் ஹைலிபரி என்ற கல்லூரி இருந்தது. இங்குதான் இந்தியாவை ஆளும் அரசு ஊழியர்களுக்கு ஆரம்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி கல்லூரியில் இந்தியாவைப் பற்றிய புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகம் இருந்தது. கல்லூரியில் அதிகப்படியான புத்தகங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டவுடன் அவற்றை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. புத்தகங்கள் கப்பல் மூலம் வந்தன.

1861 இல் மெட்ராஸ் அரசாங்கம் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பெற்றபோது, கோட்டையில் அவற்றை வைக்க இடமில்லை. எனவே அவை அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டன.

1862 ஆம் ஆண்டில் கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல், சென்னை அருங்காட்சியகத்தை ஒட்டி ஒரு சிறிய நூலகத்தை பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தின் அடிப்படையில் அமைத்தார்.

பாந்தியன் வளாகத்தில் மூன்று நூலகங்கள் இருந்தன. கோட்டை புத்தகங்களின் தொகுப்பு, மெட்ராஸ் இலக்கிய சங்கம் மற்றும் கன்னிமாரா அருங்காட்சியக நூலகம். மற்றவர்கள் விரைவில் வேறு இடங்களுக்குச் சென்றனர்.

1890 ஆம் ஆண்டு வரை கன்னிமாரா நூலகம் மெட்ராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக மட்டும் இருந்தது. பிரபலமாகவும் இல்லை. மக்கள் அதைப் பெரிதாகப் பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை.

அப்போது வளர்ந்து வரும் நகருக்கு, அதுவும் புதிதாகப் பல கல்லூரிகள் நிறுவப்பட்ட நகருக்கு ஓர் இலவசப் பொது நூலகத்தின் தேவை உணரப்பட்டது.

நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டடத்தில் நகரம் ஒரு பெரிய நூலகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆளுனர் கன்னிமாரா பிரபு விரும்பினார்.

உறவினர் ஒருவர் உயர் உத்தியோகத்தில் இருப்பது பதவி உயர்வுக்கு உதவும். ஒருவரின் மாமனார் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தால், யாரும் கேட்க வேண்டியதில்லை. அதுதான் ராபர்ட் போர்க்கிற்கு நடந்தது. ராபர்ட் போர்க் இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் டல்ஹவுசியின் மகளை மணந்தார். அதனால் அவரது அரசியல் வாழ்க்கை வேகமாக மேல்நோக்கிச் செல்லும் என்று கணிக்கப்பட்டது. மெட்ராஸ் கவர்னர் உலகின் பல நாடுகளை விடப் பெரிய நிலப்பகுதியை ஆட்சி செய்ததால் அது ஒரு மதிப்புமிக்க பதவியாக இருந்தது. அதை அடையப் பலத்த போட்டி நிலவும். எனினும் ராபர்ட் மெட்ராஸ் கவர்னர் ஆனது யாருக்கும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ‘லார்ட் கன்னிமாரா’ என்ற பட்ட பெயரில் பதவியேற்றார்.

ராபர்ட் போர்க் நல்லாட்சி செய்து பெயரெடுத்தார். பஞ்ச நிவாரண நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று மேற்பார்வையிட்டார். மெட்ராஸ் ரயில்வேயைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக நீட்டிக்க வற்புறுத்தினார். எப்போதும் துர்நாற்றம் வீசும் ஜார்ஜ் நகரமும் பயனடைந்தது, அவர் ஒரு சாக்கடை வடிகால் திட்டத்திற்கு உத்தரவிட்டார்.

பிரசிடென்சியின் ஆளுநரான கன்னிமாரா பிரபு, ஒரு பொது நூலகத்தின் அவசியத்தை உணர்ந்து 22 மார்ச் 1890 அன்று ஒரு பெரிய நூலகத்துக்கு அடித்தளம் அமைத்தார்.

கட்டடம் முடிந்தவுடன் நூலகத்தையும் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.. ஆனால் விரைவில் அவருக்கு ஒரு கண்டம் காத்திருந்தது.

அப்போது கவர்னர் கூவம் கரையில் உள்ள அரசினர் தோட்டத்தில் தான் வசித்து வந்தார். அவரது மனைவி சூசன் ஊட்டி விடுமுறையில் இருந்து ஒருநாள் முன்னதாகத் திரும்பினார். கவர்னர் பங்களாவில் அவள் பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது.

அங்கே ஆளுனர் கூத்தும் கும்மாளமுமாய் இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். கோபமடைந்த மனைவி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கவர்னர் மாளிகையை விட்டு வெளியேறினாள். அவள் அந்த இரவையும் அடுத்த மூன்று மாதங்களையும் இப்போது கன்னிமாரா ஹோட்டல் என்று அழைக்கப்படும் இடத்தில் கழித்தாள். அவள் அதோடு நிற்காமல் மீண்டும் இங்கிலாந்து சென்று விவாகரத்து கோரினாள். அவ்வளவுதான். ராபர்ட்டின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தது. ஒரு பெரிய உச்சம் அடையும் என்று அறிஞர்கள் கணித்த அவரது அரசியல் வாழ்க்கை திடீரெனப் பூஜ்ஜியமாக மாறியது.

இன்று இருக்கும் நூலகத்தின் மந்தமான கான்கிரீட் வெளிப்புறத்தால் ஒருவர் ஏமாறக்கூடாது. உள்ளே இருப்பது காலனித்துவக் கட்டடக்கலையின் புதையல் ஆகும்.

இந்தோ சாராசெனிக் கட்டடக்கலை பாணி நூலகம் இர்வினால் வடிவமைக்கப்பட்டு நம்பெருமாள் செட்டியால் கட்டப்பட்டது.

மைசூர் மகாராஜா அரண்மனையைக் கட்டியவர் இர்வின். மெட்ராஸில் அவர் மத்திய ரயில் நிலையத்தின் வடிவமைப்பை முடித்தார் (ஆரம்பத்தில் ஹார்டிங் மூலம் வடிவமைக்கப்பட்டது). மேலும் பல கட்டடங்களை வடிவமைத்தார். இருப்பினும் அவர் தனது கன்னிமாரா நூலகத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார், ஜார்ஜ் டவுன் கடற்கரைச் சாலையில் உள்ள மெட்ராஸ் வங்கி கட்டடத்திலும் அதே வடிவமைப்பைப் பயன்படுத்தினார். இது இப்போது மாநில வங்கியின் தலைமையகம்.

நம்பெருமாள் செட்டி பல செங்கல் சூளைகளை வைத்திருந்தார். அந்த இடம்தான் இன்றைய சூளைமேடு. கூவம் ஆற்றின் மூலம் செங்கற்கள் படகுகளில் கொண்டு செல்லப்பட்டன. ஆழம் இல்லாத கூவம் இது போன்ற அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே படகு சவாரிக்குப் பயன்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கன்னிமாராவின் தொலைநோக்குப் பார்வை மறக்கப்படவில்லை, நூலகத்திற்கு அவர் பெயரே சூட்டப்பட்டது.

இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்துப் புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களின் நகலைப் பெறும் நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் கன்னிமாரா பொது நூலகமும் ஒன்றாகும்

தேசிய நூலக அந்தஸ்து பெற்றவுடன் இந்தியாவில் வெளியிடப்படும் ஒவ்வொரு புத்தகத்தையும் சேகரித்து வைக்கப் பழைய கட்டடம் போதுமானதாக இல்லை. புத்தக வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க 1974 இல் ஒரு கான்கிரீட் கட்டடம் உருவானது. பார்ப்பதற்கு ஒரு நூலகத்தை விட அரசாங்க அலுவலகம் போல் தெரியும் இந்தக் கட்டடத்துக்குள் மட்டும்தான் பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது மக்களால் அணுக முடியாத பழைய புத்தகங்கள் பழைய கட்டடத்தில் உள்ளன. பழைய நூலகத்துக்குள் வருடம் ஒரு முறை நூலக தினம் கொண்டாடப்படும் போது எல்லோரும் செல்லலாம். சென்றவர்கள் எல்லாம் பிரமித்துப் போகும் அளவுக்கு அழகு அந்த நூலகம்.

1939 வரை நூலகம் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அது ஒரு தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்டது

கன்னிமாரா பிரபுவுக்கு அதிர்ஷ்டம் இல்லாவிட்டாலும், அவர் பெயரில் உள்ள நூலகம் எதிர்காலத்தில் செழித்து வளர்ந்தது.

கன்னிமாரா பொது நூலகத்தில் புத்தகங்கள், வரைபடங்கள், மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உட்பட 6,00,000 புத்தகங்கள் உள்ளன. இந்நூலகம் நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கும் பழமையான புத்தகங்களின் களஞ்சியமாகும். இதில் நாட்டின் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க படைப்புகள் மற்றும் தொகுப்புகள் உள்ளன.

0

Google Map Link

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *