Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை

கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை

நவாப் அரண்மனை

புகழ்பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் அது புகழ்பெற்ற ஓர் அரண்மனையின் பகுதியாக இருந்தது. மைதானத்தின் வாயில் தூண்கள் இன்றும் அரண்மனையின் கட்டடக்கலை பாணியைக் கொண்டுள்ளன.

கிரிக்கெட் மைதானம் மட்டுமல்ல. இன்றைய பொதுப்பணித்துறை வளாகம், பல்கலைக்கழகம், மற்றும் அரசினர் தோட்டத்தின் ஒரு பகுதியும் அக்காலத்தில் அரண்மனை வளாகத்துக்குள்தான் இருந்தன.

கர்நாடக நவாபுகள் 1690 மற்றும் 1855 க்கு இடையில் தென்னிந்தியாவில் ஒரு பெரும் பகுதியை ஆண்டனர். டெல்லியின் முகலாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது அவர்களது ராஜ்ஜியம். மெட்ராஸுக்கு வடக்கே ஆற்காட்டில் தலைநகரைக் கொண்டிருந்தனர் நவாபுகள்.

கிழக்கிந்திய நிறுவனம் தனது கோட்டையைக் கட்டிய நிலம் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசில் இருந்தது. அவர்களிடமிருந்து கோல்கொண்டாவிற்குச் சென்றது. ஔரங்கசீப் கோல்கொண்டாவைத் தோற்கடித்தபோது, மெட்ராஸ் முகலாய எல்லைக்குள் நகர்ந்தது.

முகலாயப் பேரரசு பலவீனமடைந்தபோது, தொலைதூர மாகாணங்கள் முதலில் சுதந்திரத்தை அறிவித்தன. அப்போதுதான் நவாப் தன்னைச் சுதந்திர அரசனாக அறிவித்துக் கொண்டார்.

ஆரம்பக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நவாபின் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தனர். அவர்களின் கோட்டைப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உரிமைகள் நவாபால் உத்தரவாதம் அளிக்கப்பட்டன. நவாபுகள் திறமையான ஆட்சியாளராகத்தான் இருக்க முயன்றார்கள். அவர்கள் ஆற்காட்டின் சட்டதிட்டங்களை அமல்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர். அவர்களின் குத்தகைதாரர்களான, பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் சண்டையிட்டால், நவாபுகள் அவர்களுக்கு இடையே வலுக்கட்டாயமாகச் சமாதானத்தை நிலைநாட்ட முயற்சிப்பார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் துரதிர்ஷ்டவசமாக சரித்திரம் காணாத நிகழ்வு நடந்தது. அதுவும் அடையார் ஆற்றங்கரையில். 10,000 வீரர் பலம் வாய்ந்த ராணுவத்தின் தலைவராக இருந்த நவாபின் மகன் அன்வருதீன், 300 பேர் கொண்ட பிரெஞ்சு ராணுவத்தால் சாந்தோமில் தோற்கடிக்கப்பட்டார். பின்பொரு சந்தர்ப்பத்தில் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் ஒரு துணிச்சலான நடவடிக்கையில் நவாபுகளின் தலைநகரையே கைப்பற்றினான்.

ஒரு தலைநகரை இழந்தபின் மக்களின் மனத்தில் நவாபுகளின் மேல் வைத்திருந்த மதிப்பானது குறையத் தொடங்கியது. நவாப் யாராலும் வெல்ல முடியாத அரசர் என்ற பிம்பம் சுக்கு நூறாக உடைந்தது.

காலம் செல்லச் செல்லக் காலனித்துவச் சக்திகளின் வளர்ச்சியின் வேகத்துக்கு நவாபுகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. உண்மையில் இருவருக்கும் இடையே காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருந்த உறவுதான் இருந்தது. சில நேரங்களில் நட்பு நிரம்பி வழிந்தது. சில நேரங்களில் பகைமை புகைந்தது. காலம் மாறியவுடன் வரலாற்றின் தராசு ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் சாய்ந்தது.

எந்த அளவுக்கு என்றால், ஒரு காலத்தில், தான் முற்றுகையிட்ட அதே ஜார்ஜ் கோட்டைக்குள் நவாப் வாலாஜா முஹம்மது அலி தன் குடியும் குடித்தனமுமாக மாற விரும்பினார். முதலில் ஒப்புக்கொண்ட ஆங்கிலேயரால் கோட்டைக்குள் அவரது அரண்மனைக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அது கட்டப்படப்போகும் சாலை கூட அரண்மனைத் தெரு என்று அழைக்கப்பட்டது.

இந்தச் செயலில் ஆங்கிலேயர்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களைத் தினசரி கண்காணிக்க முடியும் என்பதால். நவாப் குடும்பத்தினர் அரசியல் குறும்புகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் முடியும்.

ஆனால் கடைசி நேரத்தில் ஆங்கிலேயர்கள் மனம் மாறினர். கோட்டைக்கு வெளியே ஓரிரு மைல் தூரத்தில் நவாப் தங்கினால் பரவாயில்லை என்று தோன்றவே, சேப்பாக்கத்தில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. கூவம் ஆற்றங்கரையில் அரண்மனையும் அந்தப்புரமும் கட்ட ஏதுவான இடம்.

ஆனால் ஏற்கெனவே சேப்பாக்கத்தில் ஒரு படகோட்டிச் சமூகம் வாழ்ந்து வந்தது. மசூலிப்பட்டிணத்திலிருந்து மதராஸ் வந்த முதல் நாள், ஆங்கிலேயர்களுடன் வந்த மசூலா படகோட்டிகள் அங்குதான் வசித்து வந்தனர். அச்சமயம் அவர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டிய சூழ்நிலை. கம்பெனி அவர்களுக்காக ராயபுரத்தில் ஒரு பெரிய இடத்தை ஒதுக்கி, அவர்கள் எதிர்ப்பு இல்லாமல் சுமுகமாகச் சென்றதற்குப் பரிசாகப் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தையும் அவர்களுக்காகக் கட்டிக்கொடுத்தார்கள். (ராயப்பா என்பது பீட்டரின் தமிழ் பெயர் – அதனால் ராயபுரம்)

அரண்மனை, கடலை எதிர்கொள்ளும் நிலத்தில் 117 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. கடலும் அப்போதைய சுத்தமான கூவம் நதியும் இந்த இடத்தை நவாப் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கு மிகவும் இதமான இடமாக மாற்றியிருக்க வேண்டும். கூவம் ஆற்றின் ஓரத்தில் ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் எண்கோணக் குளியல் மண்டபம் இருந்தது.

இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக்கலையை ஒரு கலவையாக்கி உருவான இந்தோ-சராசெனிக் பாணியில் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கட்டடங்களில் இதுவும் ஒன்றாகும். பிற்காலத்தில் இந்திய தலைநகர் புது தில்லியை உருவாக்கிய பாணியும் இதுதான்.

மரத் தூண்கள் மற்றும் உத்திரங்கள் கூரையைத் தாங்கிப் பிடித்திருந்தன. அழகிய சிற்பங்கள், அகலமான வளைவுகள், சிவப்பு செங்கல் சுவர்கள், கல் ஜன்னல்கள் ஆகியவற்றுடன் மிகுந்த கலைநயத்துடன் சேப்பாக்கம் அரண்மனை வடிவமைக்கப்பட்டது.

அரண்மனை இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது – வடக்குத் தொகுதி ‘கலாஸ் மஹால்’ என்றும், தெற்குத் தொகுதி ‘ஹுமாயூன் மஹால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டும் ஒரு பாலம் மூலம் இணைக்கப்பட்டது. இந்த அழகிய அரண்மனை பொறியாளர் பால் பென்ஃபீல்டால் 1768 இல் கட்டி முடிக்கப்பெற்றது. பால் பென்ஃபீல்ட், கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளர். நவாபுக்கு அவரது வேலைகள் பிடித்துப் போகவே, அரண்மனை கட்டும் ஒப்பந்ததாரராக மாறினார். இந்த அரண்மனையும் இதைத் தொடர்ந்து வந்த கருப்பர் நகர் சுற்றுச்சுவரும் பால் பென்ஃபீல்ட்டைப் பெரும் கோடீஸ்வரராக மாற்றியது.

புதுப்பிக்கப்பட்ட ஹூமாயுன் மஹால்

புதுப்பிக்கப்பட்ட ஹூமாயுன் மஹால்

புதுப்பிக்கப்பட்ட கலச மஹால்

புதுப்பிக்கப்பட்ட கலச மஹால்

நவாபுகள் இந்த அரண்மனையில் 87 ஆண்டுகள் வாழ்ந்தனர். சக்தியற்ற நவாப் அரசியல் ரீதியாக ஒரு வனாந்தரத்தில் இருந்தார். ஆனால் ஒரு விதத்தில் அது அவரது அரசவையில், குறிப்பாகப் பாரசீகக் கவிதைகளில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. நடனமும் கவிதையும் வளர்ந்தன. பாரசீகக் கவிதை முஷைராக்கள் (கவியரங்கம்) அரண்மனையில் நடக்கும்போது நவாப் பலமுறை புனைப்பெயரில் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்.

நவாபுகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு அவர் கைவசம் வைத்திருந்ததை விடக் கணிசமாக அதிகப் பணம் செலவானது. கலை ரசனைகள் அதன் விலையை இறுதியாக வசூலித்தது. அரண்மனை அவரது கடனை அடைக்க ஏலத்திற்கு வந்தது. அதை வாங்க கிழக்கிந்திய நிறுவனத்தை விடப் பெரியவர்கள் சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை. அவர்கள் அதன் உரிமையாளர்களாக மாறினர்

கையகப்படுத்திய பிறகு இப்பகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹமாம் கட்டடம் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டது. 1868 மற்றும் 1871 க்கு இடையில் வடக்குத் தொகுதி, ஹுமாயூன் மஹால், வருவாய் வாரியத்திற்கான புதிய பதிவு அலுவலகத்தை உருவாக்க ராபர்ட் சிஷோல்ம் என்பவரால் முழுமையாக மீண்டும் கட்டப்பட்டது.

முதலில் ஹுமாயூன் மஹால் ஒரு தரைத்தளத்தில் மட்டுமே இருந்தது, அதன் நடுவில் திவான்-இ-கானா தர்பார் மண்டபம் இருந்தது. அதன் மேல் ஓர் அழகான குவிமாடம் இருந்தது. சிஷோல்ம் அதைத் தட்டி மற்றொரு தளத்தைச் சேர்த்தார்

இதன் மூலம் வருவாய் வாரியத்திற்கான புதிய கட்டடத்தை உருவாக்கினார். புகழ்பெற்ற கிண்டி பொறியியல் கல்லூரி சில ஆண்டுகளாக இங்கிருந்து இயங்கியது

சுற்றுவட்டாரத்தில் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தாலும் கட்டடங்கள் பாழடைந்து கிடக்கின்றன. தீ விபத்துகள் நிகழ்ந்து, கூரை இடிந்து விழுந்த பின்தான் அரசு களத்தில் இறங்கி இந்தக் கட்டடங்களைச் சீரமைத்தது.

0

Google Map Link

பகிர:
nv-author-image

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *