ஏழு வெவ்வேறு சாலைகளை இணைத்து மவுண்ட் ரோட்டை உருவாக்கிய டி ஹேவில்லேண்ட் ஒரு பொறியாளர். மெட்ராஸுக்கு அவர் செய்திருந்தது கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஆற்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த பல போர்களில் பங்கேற்ற பிறகு, கட்டடக்கலையில் இருந்த தனது ஆர்வத்தில் நேரத்தைச் செலவிட விரும்பினார்.
மெட்ராஸ் நகரத்திற்கு அவர் ஆற்றிய பல பொறியியல் பங்களிப்புகளில் பெரும்பாலானவை இன்னும் உள்ளன. ஒன்று மட்டும் இல்லை.
1820இல் கட்டி முடிக்கப்பட்ட கடல் அரண் (bulwark) மெட்ராஸின் வளர்ச்சியில் முக்கியமானது. நகரத்தின் ஆரம்ப நாட்களில் கடல் மிகவும் சீற்றமாக இருந்தது. கடற்கரை அகலத்தில் மிகவும் சிறியதாக இருந்ததால் மோசமான வானிலையில் கடல் நீர் நகரத்தை ஆக்கிரமித்து 100 மீட்டர் வரை ஊடுருவியது. நகரின் வீடுகள் மற்றும் ஏற்றுமதி செய்யத் துணிகளைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகள் மிகவும் சேதத்தைச் சந்தித்தன.
மற்ற பொறியாளர்களின் விமர்சனங்களுக்கு எதிராக, டி ஹேவில்லேண்ட் கோபமான கடலில் இருந்து கோட்டை மற்றும் கருப்பு நகரத்தைப் பாதுகாக்க 2 மைல் நீளமான சுவரைக் கட்டினார். பல்லாவரத்திலிருந்து பல்லாயிரம் கற்களைக் கொண்டுவந்து சுவர் கட்டப்பட்டது. இந்தச் சுவர் இயற்கையிலிருந்து மெட்ராஸ் மக்களின் பாதுகாப்பிற்கும் வணிகத்திற்கும் பங்களித்து, அதன் விரைவான வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது. துறைமுகம் உருவானவுடன் கடற்கரை வளர்ந்தது. கடல் அடக்கப்பட்டதால் சுவரும் மறைந்தது.
டி ஹேவில்லேண்ட் சென்னையின் பழமையான 2 தேவாலயங்களைக் கட்டினார். திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்களுக்கு நிம்மதி. அவர்கள் தைரியமாகக் கோட்டையை விட்டு வெளியேறி சௌல்ட்ரி சமவெளியில் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோட்டையின் தேவாலயத்திற்குச் செல்வது கடினமாக இருந்தது. எனவே அவர்கள் மாம்பலம் ஏரிக்கு அருகில் ஓர் அழகான தேவாலயம் கட்ட முடிவு செய்தனர் (இன்று ஏரி தி.நகராக இருக்கிறது.)
செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் ஹேவில்லேண்டால் கட்டப்பட்டது. 136 அடி தேவாலயம் பலரைக் கவர்ந்தது, ஹேவில்லேண்ட் சற்றுத் துரதிர்ஷ்டசாலிதான். தேவாலய கல்லறைக் கூடத்தில் அவரது மனைவிதான் அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர்.
ஸ்காட்லாந்தில் இருந்து வந்தவர்கள் மெட்ராஸில் தங்களுக்கென ஒரு தனி தேவாலயத்தைக் கட்ட விரும்பினர். பல நாடுகளில் இருந்து மக்கள் ஆரம்பக்காலச் சென்னைக்கு வந்தனர். எல்லோருமே நகரத்தில் ஒரு வலுவான தாக்கத்தை விட்டுச் சென்றனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்காட்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் ஸ்காட்லாந்துக்காரர்கள். அவர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் செயலாற்றினர். ஆளுனர்களில் இருந்து சாதாரண வீரர்கள் வரை.
எப்படி எண்ணற்ற ஸ்காட் நாட்டவர்கள் மெட்ராஸை நோக்கிப் புலம் பெயர்ந்தனர்?
பிரிட்டிஷ் தீவுகளின் வடக்கில் ஸ்காட்லாந்து மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. சில சமயங்களில் சுதந்திரமாக, சில சமயங்களில் அடிபணிந்து, சில சமயங்களில் இங்கிலாந்தின் கூட்டாளியாக இருந்தது அதன் வரலாற்று நிலை.
ஐரோப்பாவின் மற்ற எல்லா நாடுகளும் ஒரு பேரரசைக் கொண்டிருப்பதைக் கண்ட ஸ்காட்டுகள் பேராசை கொண்டு, தங்களுடைய பணத்தில் பெரும்பகுதியைத் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு காலனியில் முதலீடு செய்தனர். அதன் பெயர் புதிய கேலடோனியா. ஸ்காட்லாந்துக்கே ஒரு புதைகுழியாகத் திகழ்ந்தது அது.
நிலத்தின் தேர்வு மோசமாக இருந்தது. பெரும்பாலான குடியேறிகள் மலேரியாவால் இறந்தனர். வருவாய் ஏதும் வராத நிலையில் கையில் இருந்த இருப்புத் தொகையும் கரைந்து போனது. காலனி கைவிடப்பட்டது. இந்தப் பைத்தியக்காரத் திட்டம் ஸ்காட்லாந்தில் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத்தைச் சூறையாடிவிட்டது. நாடு திவாலாகும் நிலையில், ‘நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா?’ என்று இங்கிலாந்திடம் மன்றாடினர்.
ஸ்காட்லாந்தில் வருமானம் இல்லாமல் பல இளைஞர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தில் சேர்ந்து இந்தியாவிற்கு வந்தனர்.
குமாஸ்தாக்கள், சிப்பாய்கள், வர்த்தகர்கள், பொறியியலாளர்கள், மத போதகர்கள், தேயிலை மற்றும் இண்டிகோ தோட்டக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் ஆசிரியர்களாக ஸ்காட்டுகள் இந்தியாவிற்குள் வந்தனர். ஒரு சில ஆண்டுகளில் அவர்களுள் சிலர் வைஸ்ராய்கள், கவர்னர்களாக உயர்ந்தார்கள்.
மெட்ராஸ் கவர்னராக இருந்து, மக்கள் நலன் சார்ந்த வரிவிதிப்பு முறைகளை உருவாக்கி, திருப்பதி மற்றும் மந்திராலயம் கோவிலின் இயக்கத்தைச் சீர்திருத்தினார், மன்றோ என்று அழைக்கப்படும் மிகவும் மரியாதைக்குரிய ஸ்காட் கவர்னர்.
இந்தியர்களுக்கு தகுந்த மரியாதை வர வேண்டும் என்று காங்கிரஸை உருவாக்கியவர் ஹூம் என்ற ஸ்காட். உலகமே எதிர்த்தபோது, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பெண்களைச் சேர்த்தவர் மருத்துவர் பால்ஃபர் என்ற ஒரு ஸ்காட். கூடுதலாக, அவர் இங்கு முதல் உயிரியல் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தைத் தொடங்கினார்.
சென்னையிலுள்ள ஸ்காட் மக்களின் மதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பாதிரியாராக டாக்டர் ஜான் ஆலன் அனுப்பப்பட்டார். அவர் ஸ்காட்லாந்து கிறிஸ்தவர்களை ஒன்று சேர்த்து நகரத்தில் ஸ்காட்லாந்து சபையின் கூட்டுப் பிரார்த்தனையை நிறுவினார். எல்லோருக்கும் தமக்கென ஒரு தேவாலயம் கட்டப்படவேண்டும் என்று ஆசை
மெட்ராஸின் இதர பகுதிகளை விட எக்மோர் மிகவும் முன்னதாகவே முக்கியத்துவம் பெற்றது. புகை சமிக்ஞைகள் மூலம் எதிரிகள் நெருங்குவதைப் பற்றி பிரதானக் கோட்டையை எச்சரிக்க ஆங்கிலேயர்கள் ஒரு சிறிய கோட்டையை அங்குக் கட்டினார்கள். எழும்பூர் சாலையும் பூந்தமல்லி சாலையும் சந்திக்கும் இடத்தில் தேவாலயத்துக்கு நிலம் அடையாளம் காணப்பட்டது.
ஆன்ட்ரூஸ் தேவாலயத்திற்கான திட்டங்கள் வரையப்பட்டன.
அதன் வடிவமைப்பு இங்கிலாந்தில் உள்ள செயின்ட் மார்ட்டின்-இன்-தி-ஃபீல்ட்ஸ் தேவாலயத்தை மாதிரியாகக் கொண்டது.
தேவாலயத்திற்கான நிலம் சதுப்பு நிலமாக இருந்தது. ஓர் உயரமான கட்டடம் அதன் மீது நிற்க வாய்ப்பு இல்லை. அடித்தளம் அமைப்பதும் கடினமாக இருக்கும் . அதனால் சுட்ட மண் வளையங்கள் நிலத்தில் புதைக்கப்பட்டு செங்கல்லும் சுண்ணாம்பும் ஒரு கலவையாய் நிரப்பப்பட்டன.
கிர்க் எனப்படும் ஆன்ட்ரூஸ் தேவாலயம் டி ஹேவிலாண்ட் மற்றும் கர்னல் ஜேம்ஸ் கால்டுவெல் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டது. தேவாலயத்தின் வடிவம் ஒரு வட்டம். இது கிழக்கு மற்றும் மேற்கில் செவ்வகக் கட்டடங்களைக் கொண்டிருந்தது.
24.5 மீ அகலம் கொண்ட வட்டப் பகுதி, வானத்தின் நீல நிறத்தில் ஒரு குவிமாடத்தால் முடி சூட்டப்பட்டுள்ளது. மாடத்தின் உட்கூரையில் தங்க நட்சத்திரங்களால் வரையப்பட்டிருப்பதால், வானத்தின் கீழ் பிரார்த்தனை செய்யும் உணர்வை ஒருவர் பெறுகிறார்.
கான்கிரீட் இல்லாத காலங்களில் குவிமாடம் ஒரு கட்டடக்கலை அற்புதம். குவிமாடத்தை ஆதரிக்க வட்டமாக 16 தூண்களால் அமைக்கப்பட்டன. அவற்றின் மேல் பல வளைவுகள் அமைத்து ஒரு சட்டத்தை உருவாக்கினர். இந்தக் கட்டமைப்பானது பெரிய குவிமாடத்தை ஆதரிக்கும் என்று கட்டடக் கலைஞர்கள் தெரிவித்தனர். அதன் மீது குவிமாடம் அமைக்கச் செங்கற்கள் அடுக்கப்பட்டன.
வானத்தை ஒத்திருக்க அதன் நீல உட்புறமானது, ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணப்படும் ஒரு விலையுயர்ந்த கல்லான லேபிஸ் லாசுலியுடன் கலக்கப்பட்ட நொறுக்கப்பட்ட கடல் சிப்பிப் பொடியால் வர்ணம் பூசப்பட்டது.
இவ்வளவு பெரிய குவிமாடத்தை ஆதரிக்க முடியும் என்று ஆரம்பத்தில் மக்கள் நம்பவில்லை. அதனால் அவர்கள் மத்தியப் பகுதியை மரத்தாலும் ஓலையாலும் மூடிவிட்டனர். டி ஹேவில்லேண்ட் அது சாத்தியம் என்பதை நிரூபிக்கத் தோட்ட மைதானத்தில் ஒரு மாதிரி குவிமாடம் கட்ட வேண்டியிருந்தது.
1821 பிப்ரவரி 25 அன்று புனித ஆண்ட்ரூஸ் தேவாலயமாக வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
இருநூறு ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மதராஸில் ஸ்காட்கள் இல்லை என்றாலும், தேவாலயம் இன்னும் மிகவும் பிரபலமான பிரார்த்தனை இடமாக உள்ளது.
மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஒரு பள்ளியாக இங்கே தொடங்கப்பட்டது. அந்த முதல் கட்டடத்தின் இடிபாடுகளை இப்போதும் தேவாலய வளாகத்திற்குள் நாம் காணலாம்.
(தொடரும்)