கறுப்பர் நகரம், மெட்ராஸ் சமூகம் மற்றும் வணிகத்தின் மையமாக இருந்தது. ஆனால் மெட்ராஸுக்குள் ரயில் வரவேண்டும் என்றபோது அதற்குப் போதிய இடமில்லை. (170 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் கருப்பர் நகருக்கு அடியில் வரும்) கோட்டையின் வடக்குப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் கட்டப்படுவதற்கு முன்பே மக்கள் மறுபுறம் குடியேறத் தொடங்கினர். சுங்கச் சாவடியைக் கோட்டையிலிருந்து கருப்பர் நகருக்கு மாற்றியதால், சேப்பாக்கத்தில் தங்கியிருந்த மசூலா மீனவர்கள், தினந்தினம் செல்ல முடியாத தொலைவில் இருந்தனர். அவர்கள் கப்பல்கள் நங்கூரமிடும் இடத்திற்கு அருகில் ஒரு பகுதியை ஒதுக்கச்சொல்லிக் கம்பெனியிடம் கோரினர். அவர்களுக்குக் கறுப்பு நகருக்கு வடக்கே சில ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. கூடவே, அவர்கள் ஒரு செயின்ட் பீட்டர் தேவாலயத்தைக் கட்ட கம்பெனியர் நிதியுதவியும் செய்தனர். இயேசுவின் சீடர், பீட்டர் தமிழில் ராயப்பா என்று அழைக்கப்பட்டதால், அந்த நகரம் ராயபுரம் ஆனது. அங்கு நெரிசலான பிளாக்டவுன் போலல்லாமல் ஒரு ரயில் நிலையத்திற்கு நிறைய இடம் கிடைத்தது. ராயபுரம் பகுதி, நகரம் மற்றும் துறைமுகத்திற்கு அருகிலும் இருந்தது கூடுதல் ஆதாயம்.
இந்தியாவின் முதல் ரயில் பம்பாயில்தான் ஓடியது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, கல் ஏற்றிச் செல்லும் சிறிய ரயில் ஒன்று சென்னை ரெட்ஹில்ஸ் முதல் சைதாப்பேட்டை சின்னமலை வரை இயக்கப்பட்டது. அதற்கும் முன்பு, சிந்தாதிரிப்பேட்டையில் ரயில் பாதையின் திறனைக் காட்ட செயல் விளக்கம் செய்யப்பட்டது. ஒரு வண்டி 2 காளைகளால் தண்டவாளத்தில் இழுக்கப்பட்டது. அவையே இந்தியாவின் முதல் தண்டவாளங்கள்.
1856ஆம் ஆண்டு ராயபுரம் ரயில் நிலையம் மெட்ராஸ் கவர்னர் ஹாரிஸால் திறந்து வைக்கப்பட்டது. இது நகரின் முதல் ரயில் நிலையம்.
ராயபுரம் ரயில் நிலையம் அரண்மனை போல் அமைக்கப்பட்டது. பெரிய வளைவுகள் மற்றும் காத்திருப்பு கூடங்கள் மற்றும் விசாலமான பயணிகள் மேடையுடன் இருந்தது. அறைகளில் வெப்பத்தைத் தணிக்கப் பெரிய பன்காக்கள் கூரையில் தொங்கவிடப்பட்டு, சிப்பந்திகளால் தொடர்ந்து வீசப்பட்டது.
ராயபுரம் முதல் ஆற்காட்டில் உள்ள வாலாஜா சாலை வரை இயக்கப்பட்ட முதல் ரயில், மவுண்ட் ரோடு சிம்ப்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. (பிற்காலத்தில் சிம்ப்சன் முதல் இந்திய கார் மற்றும் பேருந்தை உருவாக்கினர்.).
தொடக்க நாளில், ராயபுரத்தில் இருந்து ஆம்பூர் மற்றும் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இரண்டு சேவைகள் இயக்கப்பட்டன. முதல் ரயில் கவர்னர் மற்றும் 300 ஐரோப்பியர்களுடன் ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டை வரை தனது பயணத்தைத் தொடங்கியது. பயணிகளுக்கு ரயில் கம்பெனி சார்பாக ஆம்பூரில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டாவது ரயில் இந்திய அழைப்பாளிகளை திருவள்ளூர் வரை ஏற்றிச் சென்றது. அவர்களுக்கு விருந்து இருந்ததா என்று தெரியவில்லை.
‘தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ மெட்ராஸ் ரயில் நிலையத்தின் திறப்பு விழாவைப் படம் மற்றும் விளக்கத்துடன் சித்தரித்தது. ‘மெட்ராஸின் வறண்ட சமவெளி வழியாக ரயில் சென்றபோது, ரயிலை முதன்முறையாகப் பார்த்த எண்ணற்ற மக்கள், ரயில் அவர்கள் வழியாகப் பறந்தபோது சத்தமாக ஆரவாரத்துடன் முழங்கினர். மேய்ச்சல் நிலங்களைக் கடந்து செல்லும்போது, ரயிலின் சலசலப்பைக் கண்டு திடுக்கிட்ட கால்நடைகள் வெறித்தனமாகப் பாய்ந்து சென்றன.’
ராயபுரத்தில் இருந்து முதல் ரயில் புறப்பட்ட ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. சிப்பாய் கலகத்திற்குப் பிறகு துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டைக்கூட சுடாமல் இங்கிலாந்து ராணி இந்தியாவை கம்பெனியாரிடமிருந்து கைப்பற்றினார். விக்டோரியா, இந்தியாவின் பேரரசியாகத் தனது பதவியை மிக முக்கியமானதாக வைத்துக்கொண்டார். இருப்பினும் அவள் மிகவும் பருமனாக இருந்ததால், அவளுடைய நாற்காலியில் இருந்து எழுவதற்கு கூட அவளுக்கு உதவி தேவைப்பட்டது. அதனால் மக்கள் ஏற்கெனவே அவளது கிரீடத்தின் நகை என்று அழைக்கும் இந்தியாவிற்கு அவளால் செல்ல முடியவில்லை. அதனால் அவள் தன் மகன் எட்வர்டை இந்தியாவிற்கு அனுப்பினாள்.
எட்வர்ட் சிலோனில் இருந்து கப்பலில் வந்து இறங்கி தூத்துக்குடியிலிருந்து ரயிலில் வந்தார். காலையில் ராயபுரம் வந்து சேர்வார் என்று அறிந்து, திருவிதாங்கூர், கொச்சின், மைசூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இந்திய மன்னர்கள் குழு ராயபுரம் ஸ்டேஷனில் மணிக்கணக்கில் காத்திருந்தனர். வழியில் இளவரசர் தேனீர் அருந்த ரயில் நிறுத்தப்பட்டதால் தாமதமானது. எனினும் மன்னர்கள் பொறுமையாக நின்றனர்.
ரயிலும் வந்தது. பீரங்கி நூறு முறை முழங்க, இளவரசரின் ரயில் நிற்க வேண்டிய இடத்தைக் கடந்து 100 அடி தூரம் நகர்ந்துவிட்டது.
முடிசூடிய மன்னர்கள் அனைவரும் தயங்காமல் தங்கள் அரச கௌரவம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஓடி புதிய இடத்தில் இளவரசர் பெட்டியிலிருந்து வெளிவரக் காத்திருந்தனர். பின்பு இளவரசர் ரயில் நிலையத்தில் இருந்து தம்புச் செட்டி தெரு வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்
அடுத்த சக்ரவர்த்தியாக வரப்போகும் இளவரசருக்கு மெட்ராஸில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை வழங்க, பொருத்தமான மேடை இல்லை. எனவே ராயபுரம் நிலையத்தை மேடையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஒரு வாரம் வேலை செய்து ராயபுரம் ஸ்டேஷன் முழுவதும் 800 அடி நீளமும், 250 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான மேடையாக மாற்றப்பட்டது,
இளவரசருக்காக இரவு நேர நடன நிகழ்ச்சி நடத்தியது. அக்காலத்தில் பிரபல நடனக் கலைஞரான தஞ்சாவூர் ஞானா இசையுடன் நீண்ட நேரம் நடனமாடினார். நடனத்தின் போது கவனத்துடன் இருந்த இளவரசர், அடுத்து நிகழ்ந்த வீணை நிகழ்ச்சியில் பாதியிலேயே சலித்துப்போய் எழுந்து வெளியே நடந்தார்.
இந்தியாவில் ஆங்கிலோ – இந்திய சமூகம் எப்போதும் ரயில்வேயுடன் அடையாளம் காணப்படுகிறது. ஆங்கிலோ – இந்திய சமூகம் முதலில் காலனியாகக் குடியேறிய இடம் ராயபுரத்தில்தான். ராயபுரம் ரயில் நிலையத்தில் வேலை செய்தவர் குடும்பங்கள் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் அருகில், அரத்தூண் சாலை மற்றும் பி.வி. கோவில் தெருவைச் சுற்றியுள்ள மாதா சர்ச் தெருவில் வாழ்ந்தனர்.
ராயபுரத்தில் ஆங்கிலோ – இந்தியர்கள் தமக்கென ஒரு தனித்துவமான, துடிப்பான கலாச்சாரத்தை உருவாக்கிக்கொண்டனர்.
அவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட திராட்சை ஒயின், தேங்காய் சாதம் மற்றும் மீட்பால் கறி மிகப் பிரபலமானது.
ஆங்கிலோ – இந்தியர்களுக்குப் பாடுவதும் நடனமாடுவதும் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது.
மெட்ராஸின் பிற சமூகப் பெண்கள் பண்டைய கால விதிகளை உடைக்கக் காத்திருக்கும் நிலையில், ராயபுரத்தைச் சேர்ந்த ஆங்கிலோ – இந்தியப் பெண்கள் தங்கள் மெட்ராஸ் சகோதரிகளுக்கு வழி காட்டினார்கள். அவர்கள்தான் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து செயலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் எனப் பணிபுரிந்தனர். அவர்கள் விளையாட்டு மற்றும் அழகுப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்ட்ரல் நிலையம் 1873 இல் கட்டப்பட்டாலும், 1907 வரை ராயபுரம், ரயில்வே நிறுவனத்தின் முக்கிய மையமாக இருந்தது. 1922ஆம் ஆண்டு எழும்பூருக்கு மாற்றப்படும் வரை தனியார் நிறுவனமான சென்னை மற்றும் தெற்கு மஹரத்தா ரயில்வேயின் தலைமையமாகவும் ராயபுரம் நிலையம் இருந்தது.
இவையெல்லாம் ஒரு காலம். இன்று சரக்கு ரயில் போக்குவரத்துக்கு மட்டும் இந்த ரயில் நிலையம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வப்பொழுது ஒரு பயணிகள் ரயில் கடந்து போகும்.
பம்பாய் மற்றும் தானே ரயில் நிலையங்கள் இன்று அசல் கட்டமைப்புகளுடன் இல்லை என்பதால், ராயபுரம் ரயில் நிலையம் துணைக்கண்டத்தில் பழமையான ரயில் நிலையமாக உள்ளது. ஆனால் அதன் சரித்திரம் கூடத் தெரியாமல் ஆயிரம் ஆயிரம் மக்கள் தினமும் அதைக் கடக்கும் மேம்பாலத்தில் பயணிக்கின்றனர்.
0
படம்: Madras Railway station in 1871 (Moos, Ardaseer Framjee (1871) Journal of Travels in India. Volume 1. Education Society’s Press, Bombay.)
–