வரலாற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமிழக அரசர்கள் ஒவ்வொருவராக அழியும்வரை அவர்கள் பாதுகாப்பின் கீழ் கலாச்சாரம் இருந்தது.
கலையை ஆதரித்த கடைசி மன்னர்களாம் தஞ்சாவூர் சரபோஜிகள். அவர்களின் கீழ் கர்நாடக இசை அதன் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொண்டது.
அதன்பின் 1900 வரை, தமிழகத்தில் கலாச்சாரத்தை அனுபவிக்க இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று திருவிழாக்கள் நடக்கும் பொது இடங்களில் இலவசமாக அனுபவிக்கலாம். ஆனால் அது ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று என்று அவ்வப்போதுதான் நடக்கும். அடிக்கடி நடப்பது பணம் புரளும் வீடுகளில் மட்டும் தான்.
மிராசுதாரர்கள் அல்லது ஜமீன்தார்கள் போன்ற புரவலரின் நான்கு சுவர்களுக்குள்தான் இசை அடங்கியிருந்தது. அழைப்பின் பேரில் மட்டுமே மற்றவர் நுழைய முடியும். மாயவரத்தில் ஒரு மிராசுதாரரின் வீட்டுக் கல்யாணத்தில் நடந்த கச்சேரியில் அழைப்பில்லாமல் சென்று, தான் இசையைக் கேட்டதாக கல்கி எழுதுவார்.
கலைஞர்களின் நல்வாழ்வு அல்லது கலையின் வளர்ச்சிப் பற்றிக் கவலைப்படுவதற்கு நேரமில்லாமல் கிழக்கிந்திய நிறுவனம் வணிகத்தில் மட்டும் ஈடுபட்டிருந்தது. இருப்பினும் ஆங்கிலேயர்களைச் சார்ந்திருந்த துபாஷ்கள் கலையின் புரவலர்கள் ஆனார்கள்.
மெட்ராஸில் கருப்பர் நகரம் தோன்றியவுடன்தான் மெல்ல மெல்ல அது வணிக நகரம் மட்டுமல்ல ஒரு கலாச்சார மையம் என்றும் நிரூபித்தது. மெட்ராஸின் அபரிமிதமான வளர்ச்சி பெரும்பாலான இசைக்கலைஞர்களை ஈர்த்தது. துபாஷின் நன்கொடையை நம்பி சங்கீத மும்மூர்த்திகளில் இருவர்கூட கருப்பர் நகருக்கு வந்தனர்.
ஆனால் இங்குக்கூட, பாரம்பரியக் கலாச்சாரத்தின் பெரும்பகுதி பொதுமக்களைச் சென்றடையவில்லை. இசைக்கலைஞர்கள் ஆரம்பத்தில் மெட்ராஸின் புதிய பணக்கார உயர் அடுக்கைச் சார்ந்தே இருந்தனர்.
பின்னர் புரவலர்கள் மெல்லக் குறையக் குறையக் கர்நாடக இசையின் எதிர்காலம் துல்லியமாகத் தெரிந்தது,. ரசிகர்கள் இனி கட்டணம் செலுத்தியே இசை அல்லது நடனத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை வரப்போகிறது என்று பலரும் புரிந்து கொண்டனர். டிக்கெட் வழங்கும் செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கலாச்சாரம் ஜனநாயகமாக மாறி அனைத்து வகுப்பு மக்களையும் ரசிகர்களாக உள் இழுத்தது. இல்லாவிட்டால் இந்தக் கலைகள் என்றோ தொலைந்து போயிருக்கலாம்.
ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது?
கச்சேரிக்குப் பிறகு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு தட்டை அனுப்புவதுதான் முதல் வகை டிக்கெட். பார்வையாளர்கள் அவர்கள் விரும்பிய தொகையைப் பங்களிக்க முடியும்.
1927ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. பூர்ண ஸ்வராஜ் தீர்மானத்துக்கான தீவிர விவாதங்களில் ஈடுபட்ட பிரதிநிதிகளை மாலையில் மகிழ்விப்பதற்காக அதனுடன் ஒரு இசை மாநாடும் நடத்தப்பட்டது. அதன் வெற்றியின் காரணமாக நிரந்தர மியூசிக் அகாடமி அமைக்கலாம் என்ற எண்ணம் உருவானது. பார்வையாளர்களை ஒன்று சேர்ப்பதற்காகச் சபாக்கள் மெட்ராஸில் உருவாகத் தொடங்கி சில ஆண்டுகள் ஆகியிருந்தன. மியூசிக் அகாடமி உருவாவதற்கு முன்பு திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி ஸ்வாமி சபா, மயிலாப்பூரில் மைலாப்பூர் சங்கீத சபா மற்றும் கருப்பர் நகரில் தொண்டைமண்டலம் சபா போல பல சபாக்கள் இருந்தன.
1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆர்மேனியன் தெருவில் கோகலே மண்டபத்தில், சர்.சி.பி. ராமசுவாமி ஐயரால் திறந்து வைக்கப்பட்டது அகாடமி.
பல சபாக்களில் இதுவும் ஒன்று என்று நினைத்தார்கள் பலர். ஆனால் அகாடமி முதல் நாளிலிருந்தே கர்நாடக இசைக்கான கோட்பாடுகள் மற்றும் தரத்தை நிர்ணயிக்கும் சபையாக மாறும் உத்தேசத்துடன் செயல்பட்டது.
1929இல் இசை பற்றிய வருடாந்திர மாநாடுகளை நடத்தும் நடைமுறையைத் தொடங்கியது அகாடமி. டிசம்பரில் இசை விழாவை நடத்தும் போக்கையும் அதுதான் முதலில் ஆரம்பித்தது. பிற்காலத்தில் மார்கழி உற்சவம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், மார்கழி மாதத்தின் புனிதம் காரணமாக இது நடக்கவில்லை. பல ரசிகர்கள் வக்கீல்களாக இருந்ததன் காரணமாக உயர் நீதிமன்ற விடுமுறையின் போது நடந்தது.
ஆனால் அதென்னவோ தெரியவில்லை… டிசம்பரில் தான் மெட்ராஸில் சுனாமி, வெள்ளம் மற்றும் சூறாவளிகளில் என்று பேரிடர்கள் நடக்கும். முக்கிய தலைவர்களின் மரணங்களும் நிகழும். அந்த நாட்களில் மட்டும் கச்சேரிகள் நடக்காது.
செனட் ஹவுஸ், தியோசாபிகல் சொசைட்டி, ரிப்பன் பில்டிங்ஸ் பின்புறம் உள்ள பூங்கா, ஓல்டு உட்லண்ட்ஸ் ஹோட்டல், சுந்தரேஸ்வரர் மண்டபம் மற்றும் பி.எஸ் உயர்நிலைப் பள்ளி மைதானம் ஆகியவற்றில் மியூசிக் அகாடமி வருடா வருடம் விழாவை நடத்தியது.
இப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு புது இடத்தைத் தேடும் நிலையைப் போக்க, 1940 களில் தனக்கென சொந்த இடத்தைத் தேடத் தொடங்கியது அகாடமி. ஆனால் இந்த முறை அது தீர்க்கமாகச் செய்த முடிவு, அந்த இடமானது மயிலாப்பூரில் இருக்க வேண்டும் என்பதுதான். மெட்ராஸ் நகரம் தெற்கே விரிவடைந்ததும் பெரும்பாலான ரசிகர்களும் அப்பகுதியில் குடியேறி விட்டதால் கருப்பர் நகரில் ரசிகர் தட்டுப்பாடு ஆனது.
கதீட்ரல் சாலையில் உள்ள இருபத்தெட்டு கிரவுண்டு நிலம் ரூ.1.12 லட்சத்தில் வாங்கப்பட்டது. பம்பாய் கட்டடக் கலைஞரான ஜி.எம். பூதா 1,500 பேர் அமரும் வகையில் ஒலியியலில் கவனம் செலுத்தும் வகையில் ஓர் அரங்கத்தை வடிவமைக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டார், இதனால் இசைக்கலைஞரின் உண்மையான குரல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் கேட்கும்படி இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அது முடியாத காரியமாக இருந்தது. முதல் பத்து வரிசைகளில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கு மட்டுமே பாட்டு கேட்கும் என்று கட்டடக் கலைஞர் கூறினார். அறங்காவலர்கள் இசையை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான அவர்களின் தேடலில், பாரம்பரியத்தைக் கைவிடத் தயாராக இருந்தனர்.
பூட்டா ஓர் அழகான இரண்டடுக்கு, மணி வடிவ அரங்கத்தை அமைத்தார். இத்தகைய வித்தியாசமான அமைப்புக்குக் கான்கிரீட் தேவைப்பட்டது. அகாடமியின் சிறப்பை உணர்ந்த நேரு, பறந்து வந்து புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அன்றிலிருந்து மியூசிக் அகாடமி அதன் சொந்த வளாகத்தில் இருந்து கர்நாடக இசையை வடிவமைத்து வருகிறது.
அதன் முதல் நூற்றாண்டு விழாவை நெருங்கும் மியூசிக் அகாடமி இதனிடையே பல சர்ச்சைகளைச் சந்தித்துள்ளது
அகாடமி அதன் ஆரம்ப ஆண்டுகளில் இசை தொடர்பான பிரச்னைகளில் தீர்மானங்களை நிறைவேற்றும் போக்கைக் கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று டி. சௌடியாவின் ஏழு சரங்கள் கொண்ட வயலின் மீதான தீர்மானமாகும். வயலின் ஒலி பாடகர்களின் குரலை மூழ்கடித்ததாக அகாடமி உணர்ந்ததால், அவர்கள் சௌடியாவைக் கண்டித்தனர். சௌடியா வெளியே சென்று தனது சொந்த சபாவைத் தொடங்கினார்.
அதன் வருடாந்திரத் தலைமை விருந்தினரின் சமூக அந்தஸ்தினால் கவரப்பட்டு, திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகளை வரிசையாக அழைத்தது அகாடமி. அதே நேரத்தில், மாநிலத்தின் முந்தைய அரசர் சுவாதி திருநாள் ராமவர்மாவைப் புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் அகாடமி முன்வைத்தது.
விழாக்களில் அவர்கள் மும்மூர்த்திகளின் ஓவியங்களுக்கு அடுத்ததாக அவரது ஓவியத்தையும் வைத்தனர். ஆனால், திடீரென இசையமைப்பாளராக ராஜா வந்தது பலரையும் கலங்க வைத்தது. இதற்கு முன் கர்நாடக இசை மேடையில் இந்த மன்னரைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லையே என்று சில விமர்சகர்கள் உரக்க ஆச்சரியப்பட்டனர்
திருவிதாங்கூர் மகாராஜாவிடம் பணியாற்றிய இசைக் கலைஞர் வடிவேலுவின் பேரனும் வீணைக் கலைஞருமான கே.பி. சிவானந்தம், மன்னரின் பாடல்கள் தனது மூதாதையரால் தான் எழுதப்பட்டது என்பதற்கான பனை ஓலை ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். பின் வீணை வித்தகர் பாலசந்தர் களமிறங்கியதும் இந்தச் சிறிய சர்ச்சை பூதாகரமானது. திடீரென சர்ச்சையைக் கிளப்பிய சிவானந்தம் வினோதமாக மௌனம் சாதிக்க, அடுத்த ஆண்டு சங்கீத கலாநிதி என்னும் அகாடமியின் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அகாடமி சந்தித்த மிகப் பெரிய முரண்பாடு தமிழ் இசையால்தான். மேடையில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெறுவதை அகாடமி உறுதியாக எதிர்த்தது. சுப்புலட்சுமி போன்ற பல பிரபலங்களை மியூசிக் அகாடமி அதன் செயல்பாடுகளில் பங்கேற்க விடவில்லை அதன் ஆண்டறிக்கையில் தமிழ் இசையைத் தரக்குறைவான வார்த்தைகளில் குறிப்பிட்டது. இதன் விளைவாகத்தான் ராஜா அண்ணாமலை செட்டியார் தலைமையில் தமிழிசைச் சங்கம் உருவானது. இதுவே தமிழ்ப் பண்டிதர்களையும் தமிழ்ப் பாடல்களை எழுதவும், தேடவும், அவற்றை இசையமைக்கவும் தூண்டியது. இசைத் தமிழும் வளர்ச்சி கண்டது.
இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் அப்பால், மெட்ராஸ் கலாச்சாரத்தின் வானில் ஒளிர்கிறது மியூசிக் அகாடமி.
அகாடமியுடன் தொடர்பு கொண்டிருப்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாக இன்று மாறியுள்ளது. அகாடமியின் ஒரு புரவலராக அல்லது அதன் மேடையில் ஒரு கலைஞராக, அல்லது அதன் முன் வரிசையில் ஒரு ரசிகராக இருக்கப் பலரும் ஆசைப்படுகிறார்கள்.
0