Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

Chepauk Stadium

கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன் மசூலிப்பட்டினத்திலிருந்து மெட்ராஸுக்கு வந்த அவர்கள் நகரத்தின் முதல் குடிமக்கள் ஆவர்.

கோட்டையின் நெரிசலைக் குறைக்க, மெட்ராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ் சுங்க அலுவலகத்தைக் கோட்டையிலிருந்து வடக்கே மாற்றியபோது, கப்பல்கள் அதற்கு எதிரே நின்றன. 2 மைல்களுக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இருந்து பொருள்களைக் கொண்டு செல்வதையே பிரதான தொழிலாகக் கொண்ட மசூலா மீனவர்கள், தினமும் பயணிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்

கோட்டைக்கு வடக்கே தங்களுடைய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு புதிய இடம் கோரினர். அவர்களுக்கு ராயபுரம் ஒதுக்கப்பட்டது. சேப்பாக்கம் காலியானது. அப்போது பார்த்து கோட்டைக்குள் வாழ அனுமதி கேட்ட ஆற்காடு நவாப் இங்கு அரண்மனை கட்டும்படி கம்பெனியால் கேட்டுக்கொள்ளப்பட்டார்

சேப்பாக்கத்திற்குக் காலனித்துவ மற்றும் ஆற்காடு வரலாறு அதிகம் என்றாலும் இன்று அது ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டுமே அறியப்படுகிறது – கிரிக்கெட்!

கிரிக்கெட் ஓர் அசுரன் போன்றது, இது மற்ற விளையாட்டுகளில் மக்களின் ஆர்வத்தை விழுங்கிவிட்டது என்று குற்றம் சாட்டுபவர்கள் பலர். இன்றும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கிரிக்கெட் விளையாடாத நாடுகள் மட்டுமே அதிகப் பதக்கங்களைப் பெறுகின்றன.

இங்கிலாந்தில் பல தலைமுறைகளாகக் கிரிக்கெட் ஒரு குழந்தைகளின் விளையாட்டாக மட்டுமே இருந்தது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியவர்களால் கிரிக்கெட் விளையாடப்படுகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

மற்ற நாடுகளை விட கிரிக்கெட் இந்தியாவிற்கு முன்பே வந்தது. அனைத்துப் பிரிட்டிஷ் ராணுவப் பகுதிகளிலும் கிரிக்கெட் மைதானங்கள் இருந்தன

கிரிக்கெட் விளையாட்டு 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் தோன்றிய இது, கிழக்கிந்திய நிறுவனத்தின் விரிவாக்கத்துடன் சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டாக மாறியது.

1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப்பின் வசிப்பிடமான சேப்பாக்கம் அரண்மனையின் மைதானம் அவ்வப்போது ஆங்கிலேயரால் கிரிக்கெட் விளையாட உபயோகிக்கப்பட்டது இன்று இருக்கும் ஸ்டேடியத்தின் நுழைவாயிலில் உள்ள மூன்று இந்தோ சாராசெனிக் பாணி தூண்கள் பழைய அரண்மனை மைதானத்தின் கடைசி எச்சங்களாகும். இத்தூண்கள் நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் ஆட்சிக்கு முந்தையவை.

நவாப் திவாலான பின்பு அரண்மனையை ரூ.589,000க்கு ஏலத்தில் வாங்கியது கம்பெனி. 1865ஆம் ஆண்டு அரண்மனை மைதானத்தில் கிரிகெட்டைத் தரிசிக்க பிரத்யேகக் கட்டடம் கட்ட சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு அரசு அனுமதி வழங்கியது. 1866ஆம் ஆண்டு இந்தப் பெவிலியன் கட்டி முடிக்கப்பட்டது. கட்டட வல்லுனர் ராபர்ட் பெலோஸ் சிஷோல்ம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பை வடிவமைத்தார். மைதானத்தைச் சுற்றி அரங்கம் இல்லை, கிரிக்கெட் மைதானம் மட்டுமே. ஒவ்வொரு போட்டிக்கும் அதைச் சுற்றி தற்காலிக மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகளால் அரங்கம் அமைக்கப்படும்.

1916ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பழமையான கிரிக்கெட் மைதானமாகும்.

முதலில் ‘எம்.சி.சி அரங்கு’ என்றும் ‘பழைய பொறியியல் கல்லூரி வளாகம்’ என்றும் பின்னர் அரங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின் ‘சிதம்பரம் அரங்கு’ என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் பொதுவாக ‘சேப்பாக் ஸ்டேடியம்’ என்றே உலகம் முழுவதும் அழைக்கின்றனர்

ஆரம்பக் காலத்தில் வெள்ளையர்களுக்கு மட்டுமே விளையாட அனுமதியுண்டு. அதை மாற்றியமைத்தவர் புச்சிபாபு என்ற செல்வந்தர்.

மயிலாப்பூரில் வாழ்ந்த புச்சி பாபு நாயுடு ஒரு பணக்கார துபாஷ் குடும்பத்திற்குத் தத்தெடுக்கப்பட்டார். பணக்காரக் குடும்பங்கள் கவர்னெஸ் என்றழைக்கப்பட்ட ஐரோப்பிய ஆயாக்களைக் குழந்தைப் பராமரிப்பிற்காக வைத்திருந்தனர்

இவர்கள் எல்லாம் மாலை நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் சென்று சேப்பாக்கம் மைதானத்தின் ஓரத்தில் ஒன்று கூடுவார்கள். ஓர் இளம் புச்சி ஐரோப்பியர்கள் விளையாடும் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்டார், ஆனால் இந்தியர்கள் இந்த மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்பது அவரை உறுத்தியது.

பின்னர் பெரும் முயற்சி செய்து புச்சி பாபு தன் வாழ்நாளில் அதை நிகழ்த்திக் காட்டினார்.

இன்று சர்வதேச அளவில் இந்தியா இந்த விளையாட்டில் முதலிடம் பெற்றிருப்பது அவரது முயற்சியால் என்று சொல்லலாம்.

1915ஆம் ஆண்டின் கடைசி நாளில், ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான பிரசிடென்சி போட்டி முதல் அதிகாரப்பூர்வப் போட்டியாக நடைபெற்றது.

பிரசிடென்சி போட்டிகள் தொடங்கியதில் இருந்து மாநிலத்தில் இந்த சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட்டின் முக்கிய தளமாக மாறியது.

இந்த மைதானத்தில் விளையாடிய நாட்டின் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் வரலாறு படைக்கப்பட்டது. ஏஜி ராம் சிங், 11 விக்கெட்டுகளுடன் மெட்ராஸ் பந்துவீச்சில் மைசூர் அணிக்கு எதிராக ஒரே நாளில் வெற்றி பெற்றது மெட்ராஸ்.

இங்கு விளையாடிய முதல் டெஸ்ட் 1933-34இல் டக்ளஸ் ஜார்டினின் இங்கிலாந்து மற்றும் சிகே நாயுடுவின் இந்தியா இடையே நடைபெற்றது.

1951-52இல் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ததும் இங்கு தான்.

1986ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி, விளையாட்டு வரலாற்றில் சமன் செய்யப்பட்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்

பொங்கல் அறுவடைத் திருநாளை ஒட்டி, பொங்கல் டெஸ்ட் என அழைக்கப்படும் டெஸ்ட் போட்டியை ஜனவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் நடத்துவது வழக்கம்.

சில அறியப்படாத காரணங்களுக்காகப் போட்டிகள் பூங்கா நகரத்தில் உள்ள மாநகராட்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டன

ராஜா ஸர் அண்ணாமலை செட்டியாரின் இரண்டாவது மகன் எம்.ஏ. சிதம்பரம். ராஜா மெட்ராஸில் இசை மற்றும் கல்வி நிகழ்வுகளைக் கணிசமாக மாற்றியவர். அவரது மகன் எம்.ஏ. சிதம்பரம் 1956 இல் இந்தியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவரானார்.

எம்.ஏ. சிதம்பரம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) தலைவராக 32 ஆண்டுகள் இருந்தார். சேப்பாக்கத்தில் உள்ள கிளப் மைதானத்தில் கான்கிரீட் அரங்கைக் கட்டுவது என முன்மொழிந்தார். அதன் தொடர்பாக டிஎன்சிஏ மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். 1980ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த மைதானம் பின்னர் அவரது நினைவாக எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயரிடப்பட்டது.

மைதானத்தின் மொத்தப் பரப்பளவு 752,000 சதுர அடி.  முழுவதும் அரசுக்குச் சொந்தமான நிலம்.  மைதானம் அரசாங்கத்திற்கும் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் உள்ளது.

கிரிக்கெட்டை மட்டுமே ரசிக்கும் கூட்டம் ஒவ்வொரு போட்டியிலும் இந்த மைதானத்தில் குவிகிறது. பாகிஸ்தான் இந்தியாவை வென்றாலும் கூட, நின்று கைதட்டி ஆரவாரம் செய்யும் ஒரே கூட்டம் இதுவாக இருக்கலாம்

கிரிக்கெட் 21ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய பணம் புரளும் வணிகமாக மாறியது, வீரர்களை மக்கள் கடவுள்கள்போல நடத்துகிறார்கள். சினிமாக்காரர்களுக்கே இருந்த புகழ்ச்சியெல்லாம் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கும் கிடைத்தது. அதுபோல சேப்பாக்கம் அரங்கும் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.

இது தமிழ்நாடு கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் பிரதான மைதானமாகும்.

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *