‘மன அழுத்தத்தை எப்படிச் சரி செய்வது?’
‘குடும்பத்திடம் ஆறுதல் தேடலாம்’
‘ஹாஹா…குடும்பத்தினரால் தானே பிரச்சினை!’
‘சமூகம்?’
‘அது மட்டும் யோக்கியமா என்ன?’
‘நண்பர்கள்?’
‘எனக்கு அப்படி யாருமில்லை’
‘எனில் நீ ஒரு மனநல மருத்துவரைத்தான் சந்திக்க வேண்டும்’
‘இல்லை…நான் மிகவும் நேசிக்கும் சினிமா என்னுடன் இருக்கும்போது நான் ஏன் மனநல மருத்துவரைச் சந்திக்க வேண்டும்? என்னுடைய மன அழுத்தத்தைப் போக்க சினிமா ஒன்று போதும்…’
‘ம்…முயற்சி செய். வாழ்த்துகள்’
குரு தத், தனக்குத்தானே கேள்விகளை எழுப்பி அதற்குண்டான விடைகளையும் சொல்லிக் கொண்டார்.
அவர் நேசித்த சினிமா அவருக்குக் கை கொடுத்ததா?
சரி, யார் இந்த குரு தத்?
நண்பர்களே! இவ்வார பிரபலங்களின் உளவியல் கட்டுரை சிறப்புமிக்கது. ஏன் தெரியுமா? இத்தொடரில் முதன் முறையாக ஒரு இந்தியரைப் பற்றி பார்க்கப் போகிறோம்!
ஆம்…இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த, சினிமாத்துறையில் பல புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த, இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சினிமா கலைஞராகப் பார்க்கப்படும் குரு தத்தைப் பற்றித்தான் இக்கட்டுரையில் ஆராயப் போகிறோம்.
தத்துக்கு இருந்த மன அழுத்தம் எதனால் உருவானது? அதனால் அவர் அனுபவித்த சிக்கல்கள் என்னென்ன? அவை அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன?
பார்ப்போம்…
0
தத், 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை ஓர் வங்கி ஊழியர். தாய், ஆசிரியர். பிறந்தது பெங்களூராக இருந்தாலும், வளர்ந்தது எல்லாமே கல்கத்தாவில்தான். கல்கத்தாவின் பண்பாடும் கலாச்சாரமும் தத்தை ஈர்த்தன. பின்னாளில், தன்னுடைய செல்லப் பெயரான ‘குரு’வுடன் ‘தத்’தை இணைத்துக் கொண்டதுகூட கல்கத்தா மீது அவருக்கிருந்த காதலால்தான். ஆம்…’வசந்த குமார் படுகோனே’ என்பதுதான் தத்தின் இயற்பெயர்!
‘சிறுவயதில் தத் எப்படிப்பட்டவர்?’
இக்கேள்வியை அவருடைய நெருக்கமானவர்களிடம் முன்வைத்தால், அவர்கள் சொல்வது இதைத்தான்.
‘தத், யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவருக்கு நண்பர்கள் குறைவே. அன்பை நேரிடையாக வெளிப்படுத்தத் தெரியாது. எல்லா உணர்ச்சிகளையும் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்வார்…’
இறுதிவரை அவருடைய குணாதிசயம் இப்படித்தான் இருந்தது.
ஆனால் தத்துக்கு ‘கலை’ மீது ஆர்வம் இருந்தது. அதிலும் இசை மற்றும் நடனம் என்றால் கொள்ளைப் பிரியம். பள்ளிப்படிப்பு முடிந்ததும், கல்கத்தாவின் பிரபல நடனப் பள்ளியான ‘உதய சங்கர் டான்ஸ் அகாடமி’யில் சேர்ந்தார்.
பொதுவாக இதுபோன்ற கலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு, மனச்சோர்வு உண்டாகும் வாய்ப்புகள் குறைவே. கூடவே அவர்களுடைய குடும்பச் சூழலும் இனிமையாக அமைந்திட வேண்டும். ஆனால் தத்துக்கு அதுதான் பிரச்னையாகவே அமைந்தது!
ஆம்…நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் குடும்ப அமைப்பைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆணாதிக்கமும் பெண்ணடிமையும் தாண்டவம் ஆடிய காலகட்டம் அது. பெண்கள் வேலைக்குப் போவதே அரிது. அப்படியே சென்றாலும், வீட்டில் அவர்களுக்கான சுதந்திரம் என்பது கேள்விக்குறியே.
தத்தின் தந்தை, சர்வாதிகாரிபோலவே குடும்பத்தில் எல்லோரிடமும் நடந்து கொண்டார். பெரும்பாலும் அவருடைய கோபத்திற்குப் பலியாவது, தத்தின் தாயாகத்தான் இருக்கும். இருவருக்குள்ளும் அடிக்கடி நடக்கும் சண்டையின் மத்தியில்தான் தத் வளர்ந்தார். தத் மட்டுமல்ல, அவருடன் பிறந்த மற்ற நால்வருக்கும் இதே நிலைமைதான்.
இறுக்கமான இந்தக் குடும்பச் சூழல், தத்தின் மனதை ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். தந்தையின் மோசமான நடத்தை, உலகைப் பற்றிய அவரின் பார்வையை மாற்றியது. வாழும் இவ்வுலகைப் பற்றி எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தத்தின் குடும்பம், கல்கத்தாவில் இருந்து மும்பைக்கு நகர்ந்தது. அங்கே பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் நடன இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தார் தத். சினிமாவின் மற்ற தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டார். தேவ் ஆனந்த், ராஜ் கோஸ்லா போன்றவர்களை தத் சந்தித்தது அங்கேதான்.
1951 ஆம் ஆண்டு, தத் இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளியானது பாஸி (Baazi). அதில் வரும் ‘tadbeer se bigadi hui…’ எனும் பாடல், மிகவும் பிரபலம். அதைப் பாடிய கீதா ராயின் குரலில் மயங்கினார் தத்.
பிறகென்ன? விரைவிலேயே கீதா ராய், கீதா தத் ஆனார். இருவரும் 1953ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால் தத்தின் திருமண வாழ்க்கை, அவர் எதிர்பார்த்ததைப் போன்று அமையவில்லை. அடிக்கடி வெடிக்கும் மனைவியுடனான மோதல்கள், தத்தின் மனதைக் கலவரப்படுத்தின. கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான், தத்துக்கு குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. மிதமிஞ்சிய குடி, அவருடைய தூக்கத்தைக் கெடுத்தது. தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார் தத்.
இந்தச் சமயத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே தனிமை, சோகம், ஏமாற்றம், போராட்டம் என வாழ்வின் இருண்ட பக்கங்களை மட்டுமே காண்பித்தன. இன்று பெரியளவில் கொண்டாடப்படும் தத்தின் ‘கிளாசிக்’ திரைப்படங்கள் யாவும் இறுக்கமான மனச் சூழலில் அவர் உருவாக்கியதே.
0
தத்தின் படைப்புகளில், இரண்டைப் பற்றி மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. ப்யாசா / Pyaasa (1957)
சமூகத்தின் மீது அதீத கோபம் கொள்ளும் ஒரு சாதாரண இளைஞனின் கதை, ப்யாசா.
தன்னுடைய கவிதைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற போராடும் விஜய், சமூகத்தால் நிராகரிக்கப்படுகிறான். அதே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விலைமாதுவான குலாபோவின் நட்பு அவனுக்குக் கிடைக்கிறது. அவள், அவனுடைய கவிதைகளை ஏற்கிறாள். அவனைக் காதலிக்கவும் செய்கிறாள். முடிவில் இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.
சமூகத்தின் உணர்ச்சியற்ற தன்மை, ஒரு மனிதனின் போக்கை எவ்வாறு மாற்றுகிறது என்பதை இப்படத்தின் மூலம் நுணுக்கமாக பதிவு செய்திருப்பார் தத்.
உளவியலில், ‘நிராகரிப்பு உணர்வு (Rejection Sensitivity)’ என்ற ஒன்று இருக்கிறது. சமூகத்தால் ஒருவன் அடிக்கடி நிராகரிக்கப்படும்போது, எதிர்காலத்திலும் அவை தொடரும் என்கிற பயம் உண்டாகும். அந்தப் பயம், சமூகத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு நிலையை உருவாக்கிவிடும். தத்துக்கு இந்த உணர்வு நிறையவே இருந்தது.
2. காகஸ் கே புல் / Kaagaz Ke Phool (1959)
தத்தின் சொந்த வாழ்க்கையை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது.
பிரபல திரைப்பட இயக்குனரான சுரேஷின் சொந்த வாழ்க்கை, மனைவியுடனான கருத்து வேறுபாடுகளால் உடைகிறது. பெற்ற மகளைப் பார்க்கக்கூட, அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தனிமையில் தவிக்கும் சுரேஷ், ஷாந்தி என்பவளைச் சந்திக்கிறார். அவளைத் தன்னுடைய திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார். ஷாந்தியுடனான நெருக்கம், அவருடைய மகளுக்குப் பிடிக்காமல் போகிறது. எனவே இருவரும் பிரிகின்றனர்.
ஒருகட்டத்தில் மகளின் காவலுரிமையும் பறிபோக, ஆழ்ந்த துயரத்தில் வீழ்கிறார் சுரேஷ். குடிக்கு அடிமையாகி ஒட்டுமொத்த செல்வத்தையும் இழக்கிறார். சோகமான நிகழ்வுடன் முடிகிறது இத்திரைப்படம்.
ப்யாசாவில் விஜய் கதாபாத்திரத்தையும், காகஸ் கே புல்லில் சுரேஷ் கதாபாத்திரத்தையும் தத்தே ஏற்று நடித்திருப்பார். ‘ப்யாசா’ சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த பார்வையை வெளிப்படுத்தும் திரைப்படம் என்றால், ‘காக்ஸ் கே புல்’ முழுக்க முழுக்க அவருடைய சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படம்.
0
சினிமாவில் இப்படித் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த தத்துக்கு, வீட்டில் மனைவி உடனான கருத்துவேறுபாடுகள் முற்றின. மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, தத்தை நிரந்தரமாகப் பிரிந்து சென்றார் கீதா.
போதாக்குறைக்கு ‘காகஸ் கே புல்’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவ, சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் இழந்தார் தத் (அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே)
தத், அதன் பிறகு திரைப்படம் இயக்குவதையே கைவிட்டது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல. ஏனெனில் தனது துயரத்தை மக்கள் இனி கேட்கமாட்டார்கள் என்கிற முடிவுக்கு அவர் ஏற்கனவே வந்திருந்தார்.
அக்டோபர் 10, 1964 அன்று காலை தன்னுடைய அறையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார் தத். அவர் அருகில் சில மது பாட்டில்களும், பல தூக்க மாத்திரைகளும் சிதறிக் கிடந்தன.
முன்னிரவு, பாடகி லதா மங்கேஷ்கரை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தனது மனைவியும் பிள்ளைகளும் அங்கே இருக்கிறார்களா என்று விசாரித்திருக்கிறார். ‘இல்லை…’ என்ற பதில் வந்திருக்கிறது.
தத்தின் இந்தத் துயரம் அவரோடு முடிந்துவிடவில்லை. அவருடைய குடும்பத்தையும் மொத்தமாக விழுங்கியது. கணவர் இறந்த பிறகு, கீதா மனநலம் பாதிக்கப்பட்டார். அவரையும் குடி விட்டுவைக்கவில்லை. கல்லீரல் செயலிழப்பால், 1972ஆம் ஆண்டு மரணித்தார் கீதா.
தத்தின் மூத்த மகன் 1985ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இரண்டாவது மகனின் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.
2015 மார்ச்சில், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் தத்தை ‘மெலன்கொலி ஐகான் (Melancholy Icon)’ என குறிப்பிட்டிருந்தனர். ‘மெலன்கொலி’ என்பது தீவிர மன அழுத்தத்தைக் குறிக்கும் சொல். ‘மன அழுத்தத்தை வெளிப்படுத்த ஒரே வழியாகக் கலையைத் தேர்வு செய்து கொண்டார் தத்…’ என்றும் அதில் எழுதியிருந்தனர். உண்மைதான். மன அழுத்தத்தின் வடிகாலாகத்தான் சினிமாவைப் பயன்படுத்தினார் தத்!
ஆனால் அவர் நேசித்த சினிமாவும் அவரைக் கைவிட்டதுதான் காலத்தின் முரண்.
இந்தியச் சினிமாவுக்கு தத் அளித்த பங்களிப்புகளில் முக்கியமானது, க்ளோஸ் அப் ஷாட்டுகளுக்கு 100 மி.மீ. லென்ஸை அறிமுகப்படுத்தியது. இது பின்னர் ‘குருதத் ஷாட்’ என்றே அழைக்கப்பட்டது. பாடல்களைக் காட்சிப்படுத்துவதிலும், பெண்களைத் திரைப்படங்களில் அவர் கையாண்ட விதமும் இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் உள் அடுக்குகளை நுட்பமாக ஆராய்ந்த பெருமை அவருக்கே இருக்கிறது.
இறுதியாக தத்தின் வார்த்தைகள் கொண்டே இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்…
‘நான் இயக்குநர் ஆக வேண்டும் என்று நினைத்தேன், ஆகிவிட்டேன். நடிகர் ஆக வேண்டும் என்று நினைத்தேன், ஆகிவிட்டேன். நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன், எடுத்து விட்டேன். என்னிடம் பணம் இருக்கிறது. கார் இருக்கிறது. பங்களா இருக்கிறது. ஆனால் எதுவுமே இல்லாததுபோலத்தான் நான் உணர்கிறேன். மரணம் என்னை விரைவில் நெருங்கும்…’
தத் இறக்கும்போது அவருடைய வயது வெறும் முப்பது ஒன்பது. குறுகிய காலத்தில், இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் முதன்மையானவர் தத்.
அவர் இறந்த அக்டோபர் 10, ‘உலக மனநல தினம்’ என்பது ஓர் உபரித் தகவல்.
(தொடரும்)

