Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

மதுரை நாயக்கர்கள் #1 – நுழைவாயில்

சித்தி விநாயகனே தென் கூடல் வாழ்பவனே
பக்தியுடனம்மானை பாட வரமருள்வாய்
வெற்றி விநாயகனே வேலவற்கு முன்னோனே
சித்த மிரங்கி திருவாக்குத் தந்தருள்வாய்

– ராமப்பையன் அம்மானை

பின்னணி

தமிழகத்தில் உள்ள நகரங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையை உடையது மதுரை. பாண்டியர்களின் தலைநகராக சங்க காலத்திலிருந்தே இருந்து வரும் மதுரை இடை இடையே மற்ற அரசர்களின் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்திருக்கிறது. சங்க காலத்தை அடுத்து மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதன்பின் மதுரையில் மீண்டும் பாண்டியர்களின் ஆட்சியை கடுங்கோன் நிலைநிறுத்திய பிறகு இடைக்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் மதுரை பெரும் மேன்மையை அடைந்தது. பொயு 10 நூற்றாண்டில் சோழர்களின் எழுச்சியை அடுத்து, ராஜராஜசோழனாலும் அதன்பின் ராஜேந்திர சோழனாலும் வெல்லப்பட்ட மதுரை நூறாண்டுகள் சோழர்களின் வசம் இருந்தது. அவர்களிடமிருந்து மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும் மதுரையையும் பாண்டியப் பேரரசையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றனர். செல்வச் செழிப்பு மிக்க நகரமாக மதுரை அக்காலத்தில் இருந்தது என்று மார்க்கோ போலோ போன்ற பயணிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மதுரையின் இந்தச் செல்வச் செழிப்பு டெல்லி சுல்தான்களின் கண்களை உறுத்தியதை அடுத்து மும்முறை மதுரையின் மீது சுல்தான்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. பொயு 1311ல் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூர், மாறவர்மன் குலசேகரபாண்டியனின் புதல்வர்களான சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரைப் பயன்படுத்திப் பாண்டிய நாட்டில் நுழைந்தான். மதுரையைச் சூறையாடிய மாலிக்கபூர் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும் செல்வத்தோடு டெல்லி திரும்பினான். அதன்பின் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பராக்கிரம பாண்டியன் மதுரையின் மீது அடுத்து நிகழ்ந்த குஸ்ரூ கானின் படையெடுப்பை ஓரளவு சமாளித்தான். ஆனால் மூன்றாம் முறையாக பொயு 1323ம் ஆண்டு மதுரையின் மீது படையெடுத்த உலூக்கான் என்ற முகமது பின் துக்ளக், பராக்கிரம பாண்டியனை வீழ்த்தியது மட்டுமல்லாமல் அவனைச் சிறைப்பிடித்துக் கொன்றும் விட்டான். அத்தோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது. பாண்டியர்களின் தாயாதியர் தமிழகத்தின் தெற்கில் திருநெல்வேலியிலும் தென்காசியிலும் இருந்து கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

டெல்லி திரும்புவதற்கு முன் மதுரையில் ஆசன்கான் என்பவனை தனது பிரதிநிதியாக நியமித்துவிட்டுச் சென்றான் உலூக்கான். ஆனால் சில ஆண்டுகளிலேயே மதுரையைத் தன்னாட்சி பெற்ற சுல்தானகமாக அறிவித்தான் ஆசன்கான். சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் முன் எப்போதும் இல்லாத பேரழிவைச் சந்தித்தது மதுரை. மக்கள் கூட்டம் கூட்டமாக ப்ளேக் போன்ற நோய்களால் மடிந்தனர். நாட்டில் கொடுங்கோன்மை நிலவியது. மதுரையின் முக்கியக் கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், கூடலழகர் கோவில் போன்ற கோவில்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. சுல்தான்களை அகற்ற ஹொய்சாளர்களின் அரசனான மூன்றாம் வல்லாளன் எடுத்த முயற்சியும் தோல்வியடைந்து, அவர் மதுரைக் கோட்டை வாசலில் தோலை உரித்துத் தொங்க விடப்பட்டார்.

இந்நிலையில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் தோன்றிய விஜயநகரப் பேரரசு, தமிழகத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தது. அதைத் தோற்றுவித்த அரசர்களின் ஒருவரான புக்கரின் மகன், குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து மதுரை சுல்தானாக இருந்த சிக்கந்தர் ஷாவைத் தோற்கடித்து சுல்தானகத்தை ஆட்சியிலிருந்து அகற்றினார். தமிழகத்தில் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் நல்லாட்சி நிறுவப்பட்டது.

பொயு 1371லிருந்து விஜயநகரப் பிரதிநிதிகள் மதுரையை ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் முதலாமவரான குமார கம்பண்ணரின் கல்வெட்டுகள் தமிழகத்தில் பரவலாகக் கிடைப்பதிலிருந்து தமிழகத்தின் பெரும்பகுதி அவரது ஆட்சியின் கீழ் இருந்தது என்பது தெளிவு. ஆனால், பாமினி சுல்தான்களுக்கும் விஜயநகர அரசர்களுக்கும் போர் மும்முரமானதை அடுத்து கம்பண்ணர் நாடு திரும்பவேண்டியதாயிற்று. அடுத்ததாக கம்பண்ணரின் மகன் எம்பண்ண உடையார் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். மதுரைத் தலவரலாறு தெரிவிக்கும் செய்திகளிலிருந்து கம்பண்ணரின் மகனான எம்பண்ணரும் மருமகனான பொற்காசு உடையாரும் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்று தெரிகிறது.

இதற்கிடையில் விஜயநகரப் பேரரசில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக மதுரையின் மீதான அவர்களின் பிடி தளர்ந்துகொண்டே வந்தது. பொயு 1405ல் இரண்டாம் தேவராயரின் அமைச்சரான லக்கண உடையார் என்பவர் மதுரையின் அரசப் பிரதிநிதியாக ஆட்சிசெய்தார் என்று மதுரை ஸ்தானிகர் வரலாறு கூறுகிறது. அவரை அடுத்து அவரது சகோதரர் மாடண்ணா ஆட்சி செய்தார். இவர்கள் இருவரின் ஆட்சிக்காலம் 48 ஆண்டுகள் நீடித்தது. லக்கண்ணாவின் ஆட்சிக்காலத்தின் போது அவர் இலங்கையின் மீது படையெடுத்து வென்றார். அதன் பிறகு விஜயநகர அரசர்கள் தங்களை தக்ஷிண சமுத்ராதிபதி என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினர்.

வாணாதிராயர்கள்

லக்காணாவின் ஆட்சிக்காலத்தின் போது அவர் முன்பு பாண்டியர்களின் சிற்றரசர்களாக இருந்த வாணாதிராயர்களை மதுரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். பிற்காலப் பாண்டியர்களின் ஆரம்ப காலத்திலிருந்தே பாண்டியர்களுக்கு உதவி செய்தவர்கள் வாணாதிராயர்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர்களுக்கு எதிராகப் போர் செய்தபோது அவனோடு சேர்ந்து போரிட்டதால், சோழநாட்டின் ஒரு பகுதியை அவர்களுக்கு அளித்தான் சுந்தரபாண்டியன். அதன்பின் பாண்டியர்களின் பல கல்வெட்டுகள் வாணர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. என்ன காரணத்தால் லக்கண்ணா இவர்களைத் தேர்ந்தெடுத்து விஜயநகரின் பிரதிநிதிகளாக நியமித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரை, ராமநாதபுரம் பகுதிகளை வாணாதிராயர்களும் தெற்கே பாண்டியர்களும் ஆட்சி செய்து வந்தனர்.

வடக்கிலிருந்து வந்த தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததால், விஜயநகர அரசர்கள் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை வாணாதிராயர்களிடமே முற்றிலுமாக ஒப்படைத்துவிட்டனர். பொயு 1453 லிருந்து ஆட்சி செய்யத் தொடங்கிய வாணாதிராயர்கள் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகரைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டவர்கள். அவர்களின் முதல் அரசரான உறங்காவில்லிதாசன் என்ற மஹாபலி வாணாதிராயருக்கு திருமாலிருஞ்சோலை நின்ற மாவலிவாணாதிராயன் என்ற பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. வாணர்களின் குறிப்பிடத்தக்க அரசர்களில் ஒருவர் தன்னை மதுராபுரி மகாநாயகன் என்றும் விஜயநகர அரசரின் சிற்றசர் என்றும் குறிப்பிட்டுக்கொள்கிறார்.

ஆனால் இந்த நிலை நீண்ட நாள் நீடிக்கவில்லை. விஜயநகரை ஆண்ட சங்கம வம்ச அரசர்களின் கடைசி அரசர்களான மல்லிகார்ஜுன ராயரும் விரூபாக்ஷ ராயரும் வலிமை குன்றியவர்களாக இருந்ததால், வாணாதிராயர்கள் தன்னாட்சி பெற முற்பட்டனர். அக்காலகட்டத்தில் ஆட்சி செய்த புவனேகவீரன் சமரகோலாகலன் என்ற வாணாதிராயர், வடக்கே காஞ்சி வரை படையெடுத்துச் சென்று அந்தப் பகுதி முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டது என்று பிரகடனம் செய்துகொண்டார். தவிர விஜயநகர ஆட்சிக்குக் கட்டுப்பட்டவனாக தான் இல்லை என்றும் சுதந்தர நாட்டை ஆள்வதாகவும் புவனேகவீரன் குறிப்பிட்டுக்கொண்டார்.

சங்கம வம்சத்தை அடுத்து சாளுவ வம்சம் விஜயநகரில் ஆட்சிக்கு வந்தபோது அந்த வம்சத்தின் ஆட்சியைத் தோற்றுவித்த சாளுவ நரசிம்மர், காஞ்சியின் மீது படையெடுத்து புவனேகவீரனை அங்கிருந்து தெற்கு நோக்கித் துரத்திவிட்டு அந்தப் பகுதிகளையெல்லாம் விஜயநகரோடு இணைத்துக்கொண்டார். அதன்பின் அவரது மகனுடைய காலத்தில் விஜயநகர அரசின் காவலனாகப் பொறுப்பேற்ற நரச நாயக்கர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். ஶ்ரீரங்கத்தில் கலகத்தை ஏற்படுத்திய கோனேரிராஜனை பொயு 1499ல் வென்ற அவர், மதுரை மீது தாக்குதல் நடத்தி அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த மறவபூபன் என்ற மன்னனை வென்றதாகக் குறிப்பிட்டுக்கொள்கிறார். இந்த அரசன் வாணாதிராயர்களில் ஒருவராக இருக்கக்கூடும். அதன் பின் தெற்கு நோக்கிச் சென்றார நரசநாயக்கர். அப்போது தென்காசியைத் தலைநகராகக் கொண்டு மானாபூஷணன் என்ற ஜடாவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன் ஆட்சி செய்து வந்தான். அவனைத் தோற்கடித்து விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி கப்பம் கட்டச் செய்தபின், ராமேசுவரம் போன்ற புண்ணியதலங்களைத் தரிசித்து விட்டு விஜயநகரம் திரும்பினார் நரசநாயக்கர்.*

இந்தப் படையெடுப்பு விஜயநகர அரசாங்காத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிரந்தரமாக தங்களுடைய அரசப் பிரதிநிதிகள் தமிழகத்தில் இல்லாத வரை அங்கிருந்து தொடர்ந்து தொல்லைகள் வரும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதற்கான முயற்சிகள் நரசநாயக்கரின் மகனான கிருஷ்ண தேவராயரின் காலத்தில் எடுக்கப்பட்டன.

(தொடரும்)

*இந்த விவரங்களை எல்லாம் அடியேன் எழுதிய விஜயநகரப் பேரரசு என்ற நூலில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *