மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. மதுரை நாயக்க வம்சத்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கொட்டியம் நாகம நாயக்கர் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும் காஞ்சியிலிருந்து வந்தவர் என்றும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சதாசிவராயரின் கிருஷ்ணாபுரம் செப்பேடுகள் மதுரை கிருஷ்ணப்ப நாயக்கரை ‘காஞ்சிபுரத்தின் தலைவர்’ என்று புகழ்கின்றன.
கிருஷ்ணாபுரம் செப்பேடுகள்
மதுரை நாயக்கர்கள் வம்சத்தின் சிறந்த அரசரான திருமலை நாயக்கரின் அரசவையில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவரான தமிழ்ப் புலவர் குமரகுருபரர், தாம் பாடிய மீனாட்சியம்மை குறம் என்ற நூலில்
நீர்வாழி தென்மதுரை நின்மலனார் அருள்வாழி
கார்வாழி அங்கயற்கண் கன்னிதிரு வருள்வாழி
சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி
பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே
என்று திருமலை நாயக்கரை ‘கச்சிநகர் திருமலை பூபதி’ என்று குறிப்பிட்டுப் பாடுகிறார். இவற்றிலிருந்து காஞ்சிபுரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் மதுரை நாயக்கர்கள் என்பது உறுதியாகிறது. அங்கே பிறந்த நாகம நாயக்கர் பணிபுரிவதற்காக விஜயநகருக்குச் சென்றிருக்கக் கூடும். சாளுவ வீர நரசிம்மரின் காலத்திலேயே அங்கே நாகம நாயக்கர் பணியில் அமர்ந்துவிட்டார் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. பொயு 1484ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று நாகம நாயக்கரை சாளுவ நரசிம்மரின் முதன்மைப் பணியாளனாகக் குறிப்பிடுகிறது.
விஜயநகரப் பேரரசில் பண்டகசாலைக் காப்பாளர் (கொட்டியம் என்ற பெயருக்குப் பொருள்), கஜானா அதிகாரி, படைத்தலைவர் போன்ற பல பொறுப்புகளையும் அவர் ஏற்று நடத்தினார். அதன் காரணமாக சாளுவ நரசிம்மரின் தளபதியாக இருந்த நரச நாயக்கரின் அன்பைப் பெற்று அவருடைய படையில் ஒரு முக்கியப் பொறுப்பையும் வகித்தார் நாகம நாயக்கர். அடுத்ததாக விஜயநகரப் பேரரசின் தலைமையை துளு வம்சத்தினர் ஏற்பதற்கு தன்னுடைய உதவியையும் நாகம நாயக்கர் அளித்திருக்கிறார். இதனால் கிருஷ்ணதேவராயரின் பிரதான படைத்தலைவர்களில் ஒருவராகவும் நாகம நாயக்கர் இருந்தார்.
இப்படிப் பல சிறப்புகளைப் பெற்று பெரும் பதவியில் இருந்தபோதிலும் நாகம நாயக்கருக்குத் தன் வம்சம் விளங்க ஒரு மைந்தன் இல்லயே என்பது பெரும் குறையாக இருந்தது. அதன் காரணமாக அவர் காசிக்குச் சென்று பல்வேறு விதமான பூஜைகளைச் செய்து, தானங்களை அளித்திருக்கிறார். அவர் காசிக்குச் சென்ற போது தம்முடைய பணிகளை ராமபத்திர நாயக்கர் என்பவரிடம் விட்டுச் சென்றார் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. காசி விஸ்வநாதரிடம் அவர் செய்த பிரார்த்தனைகளில் விளைவாக அவருக்கு ஒரு மகன் பிறந்ததாக இரண்டாம் வேங்கடரின் குனியூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
அதன் காரணமாக, தன் மகனுக்கு விஸ்வநாதன் என்ற பெயரை வைத்து அவனுக்குச் சிறுவயதிலிருந்தே பல்வேறு விதமான போர்ப்பயிற்சிகள் அளித்து வளர்த்தார் நாகம நாயக்கர். விஸ்வநாதன் பிறந்த வருடம் சரிவரத் தெரியவில்லை என்ற போதிலும், தோராயமாக பொயு 1500ம் ஆண்டு அவர் பிறந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விஸ்வநாதனுக்குப் பதினாறு வயதான போது அவனை கிருஷ்ணதேவராயரிடம் அறிமுகப் படுத்தி வைத்தார் நாகமர்.
வீரத்தின் உருவமாக இருந்த விஸ்வநாதனைப் பார்த்ததும் கிருஷ்ணதேவராயருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே அவனைத் தன் அடைப்பக்காரனாக அருகிலேயே அமர்த்திக்கொண்டார். வெறும் வெற்றிலை மடித்துக் கொடுப்பவனாக மட்டும் இல்லாமல், அரசு ரகசியங்கள் பலவற்றையும் அறிந்து அரசருக்கு ஆலோசனை தரும் அந்தப் பணியை மிக இளம் வயதிலேயே பெற்ற விஸ்வநாதன், தன் திறமையால் விஜயநகருக்கும் ஒடிசாவின் கஜபதி அரசருக்கும் இடையில் நடந்த போரில் பங்கேற்றான். அதில் தன்னுடைய வீரத்தைக் காட்டவே, விஜயநகரப் படையில் ஒரு படைப்பிரிவின் தலைவனாக அவன் நியமிக்கப்பட்டான். அதன்பின், கிருஷ்ணதேவராயரோடு ரெய்ச்சூர் போரிலும் பங்கேற்று விஜயநகரம் அந்தப் போரில் வெற்றி பெறுவதில் முக்கியப் பங்கு வகித்தான்.
இப்படித் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்த காரணத்தால்தான், தொடர்ந்து தொல்லைகளைத் தந்துகொண்டிருந்த மதுரையின் அரசப் பிரதிநிதியாக விஸ்வநாதனை கிருஷ்ணதேவராயர் நியமித்தார். அந்தக் கடினமான பதவியை ஏற்பதற்காக தன் படையுடன் மதுரை சென்ற விஸ்வநாதன், தன் நெருங்கிய நண்பனான அரியநாதனையும் கூட்டிச் சென்றான்.
அரியநாதர்
காஞ்சிபுரத்தின் அருகே உள்ள மெய்ப்பேடு (மப்பேடு) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அரியநாதர். அவரைப் பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. நண்பர்களோடு அவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கே ஒரு சோதிடர் வந்தாராம். அவர் அரியநாதரைப் பார்த்து, இங்கே பொழுதை வீணாக்காமல் விஜயநகரம் செல். அங்கே உனக்குப் பெரும் பதவிகள் காத்திருக்கின்றன என்று சொன்னார். அதுமட்டுமல்லாமல், அப்படிப் பெரும் பதவி அடைந்தவுடன், உன் சொத்தில் பாதியை எனக்குத் தருவாயா என்று அவர் கேட்க, இது ஏதோ விளையாட்டு என்று முதலில் நினைத்த அரியநாதரும் அதற்கு ஒப்புக்கொண்டார். விடாக்கண்டரான சோதிடர், அதை ஒரு ஓலைச்சுவடியில் எழுதி வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார். இவ்வளவு நம்பிக்கையுடன் சோதிடன் சொன்னதைப் பார்த்த அரியநாதர், விஜயநகரம் சென்றுதான் பார்ப்போமே என்று அன்றே தன் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு விஜயநகரத்திற்குக் கிளம்பினார்.
அவர் அங்கே சென்றபோது விஜயநகரத்தில் நவராத்திரி விழா நடந்துகொண்டிருந்தது. விஜயநகரப் பேரரசின் பெருவிழா அது. நாடு முழுவதிலுமிருந்து அரசப் பிரதிநிதிகளும், நாயக்கர்களும், படைத்தலைவர்களும் வந்து அரசரிடம் தங்கள் பரிசுகளைச் சமர்ப்பிப்பார்கள். அரசர் தினமும் ஊர்வலம் வந்து அம்மனுக்குப் பூஜை செய்வார். இப்படிக் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த விழாவைப் பார்த்துக்கொண்டு நடந்த அரியநாதர், ஓரிடத்தில் பெரும் கூச்சல் எழும்பியதைக் கண்டு அங்கே சென்று வேடிக்கை பார்த்தார்.
அந்த இடத்தில் பெரிய எருமைகள் அம்மனுக்குப் பலி கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த ஏற்பாடுகளை நாகம நாயக்கர் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டது. பலிக்குக் கொண்டுவரப்பட்ட எருமை ஒன்றின் கொம்புகள் பக்கவாட்டில், அதன் கழுத்தோடு நீளமாகச் சென்றிருந்தன. அம்மனுக்குப் பலி கொடுக்கப்படும்போது ஒரே வெட்டில் அதன் தலை துண்டாகவேண்டும். ஆனால், கொம்புகள் கழுத்தோடு சென்றிருப்பதால், ஒரு வெட்டு அல்ல, பல வெட்டுகளாலும் அதன் கழுத்தைத் துண்டாக்க முடியாது. பலிக்கு என்று கொண்டுவந்த எருமையைத் திருப்பி அனுப்புவதும் அபசகுனம். என்ன செய்வது என்று எல்லோரு விழித்துக்கொண்டிருக்கும்போது அரியநாதர் ஒரு யோசனை சொன்னார்.
அதன்படி, பலிபீடத்தின் எதிரே ஒரு குழி கொஞ்சம் ஆழமாகத் தோண்டப்பட்டது. அதில் மாட்டுத்தீவனம் நிரப்பப்பட்டது. அதன் அருகே வந்த எருமை, தீவனத்தைச் சாப்பிடுவதற்காக நன்கு குனிந்தது. அப்போது அதன் கொம்பு நிமிர்ந்ததால், ஒரே வெட்டாக அதன் கழுத்து வெட்டப்பட்டு பலி நிறைவேற்றப்பட்டது. இப்படி ஒரு சமயோசிதமான யோசனையைச் சொன்ன அரியநாதரைப் பாரட்டிய நாகமர், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பின், தன்னோடு கணக்குப் பிள்ளையாக அமர்த்திக்கொண்டார். அதன்காரணமாக, நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாதனோடு அரியநாதருக்கு நட்பு ஏற்பட்டது. பின்னாளில் விஜயநகரம் வந்த அந்த ஜோதிடரின் மகன், தன் தந்தை எழுதிய ஓலையைக் காட்டியவுடன் தன்னுடைய சொத்தில் பாதியைத் தர அரியநாதர் முன்வந்ததாகவும், ஆனால் அதை வாங்காமல் தனக்கு வேண்டியதை மட்டும் வாங்கிக்கொண்டு அவன் திரும்பியதாகவும் சொல்வதுண்டு.
இந்தக் கதை உண்மையோ இல்லையோ, அரியநாதரும் விஸ்வநாதரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அரியநாதரின் வீரத்தையும் மதிநுட்பத்தையும் கண்ட விஸ்வநாதர், மதுரைக்குச் செல்லும்போது அவரையும் கூடவே அழைத்துச் சென்றார்.
மதுரையில் பிரதிநிதியாக அமர்ந்தவுடன், ஏற்பட்ட குழப்பங்களைச் சரி செய்த விஸ்வநாதர் கிருஷ்ணதேவராயருக்குப் பின் விஜயநகர அரசராக அமர்ந்த அச்சுதராயரிடம் விஸ்வாசமாக இருந்தார் என்பதையும் அதன் காரணமாக மதுரை நாயக்கப் பதவியை அடைந்தார் என்பதையும் பார்த்தோம். ஆரல்வாய்மொழிக் கணவாய்ப் போர் முடிந்த பிறகு உதயமான தஞ்சை நாயக்கரோடு சேர்ந்து மதுரை நாயக்க அரசுக்கான எல்லைகளை வகுத்தார் விஸ்வநாதர். அதன்படி வல்லம் தஞ்சைக்கு அளிக்கப்பட்டது. திருச்சி மதுரையிடம் வந்தது.
மதுரை சுல்தான்கள் ஆட்சி அகற்றப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் தொடர்ந்து மாறிக்கொண்டு வந்த ஆட்சி, உள்நாட்டுக்கலகங்கள் ஆகியவற்றால் சீரடையாத நிலையில் இருந்த நிர்வாகத்தைச் சீர்திருத்துவதில் விஸ்வநாதர் கவனம் செலுத்தினார்.
தன்னுடைய நண்பரும் வீரமும் விவேகமும் நிறைந்தவருமான அரியநாதரை தன்னுடைய தளவாயாகவும் (தளபதி) பிரதானியாகவும் (பேரமைச்சர்) நியமித்தார் விஸ்வநாதர்.
அக்காலத்தில் திருச்சிப் பகுதியில் கள்வர்கள் தொல்லை அதிகமாக இருந்தது. தொண்டை மண்டலம், சோழ நாடு, மேற்கே கேரளம் ஆகியவற்றிற்குச் செல்லும் பெருவழிகளின் மையமாக இருந்ததால் வணிகர்கள் திருச்சியின் வழியே செல்வதை வழக்காமக் கொண்டிருந்தனர். காவிரியின் கரைகளில் உள்ள காடுகளில் வசித்து வந்த கொள்ளையர்கள் இந்த வணிகர்களுக்குப் பெரும் தொல்லையாக இருந்தனர்.
அந்தக் காடுகளைத் திருத்திக் கொள்ளையர்களை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார் விஸ்வநாதர். அதையடுத்து இந்தப் பகுதிகளில் வணிகர்கள் பயமின்றிச் சென்று வந்தனர்.
திருச்சியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சீர்படுத்தும் பணியில் விஸ்வநாதர் ஈடுபட்டிருந்தபோது தெற்கில் கயத்தாறு என்ற இடத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த ‘பஞ்ச பாண்டியர்கள்’ மதுரை அரசை எதிர்த்துக் கலகம் செய்தனர். இந்தப் பஞ்ச பாண்டியர்கள், பாண்டிய அரசர்களின் தாயாதியர் என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலரோ அவர்கள் பாண்டியர்களின் சிற்றரசர்களாக இருந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தென்காசியைத் தலைமையாகக் கொண்டு பாண்டிய அரச வம்சத்தினர் அக்காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்தனர் என்று பார்த்தோம். ஆகவே இந்தப் பஞ்சபாண்டியர்கள் பாண்டிய வம்சத்தினராக இருக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இந்தக் கலகத்தை அடக்க அரியநாதர் மதுரையிலிருந்து புறப்பட்டார். இந்தப் பஞ்ச பாண்டியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, போரைத் தவிர்க்க அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆகவே நாயக்கர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் இடயே போர் தொடங்கியது. இதற்கிடையில் திருச்சியில் இருந்த கயத்தாறு வந்த விஸ்வநாதர் தனது சாதுர்யமான முயற்சிகளினால் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். பஞ்ச பாண்டியர்களுக்குத் தகுந்த கௌரவம் அளிப்பதாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்படியாக மதுரை அரசின் தென்பகுதியிலும் அமைதி நிலைநாட்டப்பட்டது.
(தொடரும்)