Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

தளவாய் அரியநாத முதலியார்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை வென்றதால், அந்த அரசன் விஜயநகருக்குக் கப்பம் கட்டி அடங்கியிருந்தான். போலவே தென்காசிப் பாண்டியரான ஶ்ரீவல்லப பாண்டியரும் அச்சுத ராயருக்குத் தன் மகளைக் கொடுத்து விஜயநகரோடு சுமூக உறவு கொண்டிருந்தார். இந்தக் காரணங்களால் தென்பாண்டிச் சீமையில் அமைதி நிலவியது. அதைப் பயன்படுத்திக்கொண்ட விஸ்வநாதர், அந்தப் பகுதி மக்களோடு தன்னுடைய உறவை பலப்படுத்திக்கொண்டார். அவர்களோடு உரையாடுவது, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்ற செயல்களில் சிறிது காலம் கழிந்தது. அதனோடு திருநெல்வேலி நகரை விரிவுபடுத்திக் கட்டினார். புதிய கோட்டை கொத்தாளங்கள் ஏற்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றங்கரை பலப்படுத்தப்பட்டது. அதன் அருகில் இருந்த கிராமங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. புதிதாக கால்வாய்கள் வெட்டப்பட்டு நீர்ப்பாசனம் செம்மைப் படுத்தப்பட்டது. இந்தச் செயல்களினால் விஸ்வநாதரைப் பற்றிய மதிப்பு அப்பகுதி மக்களிடையே அதிகரித்தது.

இதற்கிடையில் புதிய பிரச்சனை ஒன்று முளைத்தது. கம்பம் – கூடலூர்ப் பகுதியிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்த சிலர் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். சோழ அரசன் ஒருவன் அவர்களது கோட்டைகளைக் கைப்பற்றிக்கொண்டதால் அவர்கள் மதுரை அரசுக்குக் கப்பம் கட்ட மறுத்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மேற்குக் கோடியில் உள்ள இந்த இடங்களை யாரும் அறியாமல் எப்படி சோழ நாட்டிலிருந்து வந்த அரசன் ஒருவன் கைப்பற்றியிருப்பான்? தஞ்சைப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த செவ்வப்ப நாயக்கருக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா போன்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா. ஆகவே இது அரசுக்கு எதிராக எழுந்த இன்னொரு கலகம் என்றே கொள்ளவேண்டும். அங்கே எழுந்த இந்தக் கலகத்தை அடக்குவதற்குத் தன் தந்தையின் நண்பரான ராம்பத்திர நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். ராமபத்திரர் அந்தப் பகுதி ஆட்சியாளர்களைத் தோற்கடித்து கலகத்தை அடக்கி அங்கிருந்த கோட்டைகளை மீட்டார்.

அதன்பின் மதுரை திரும்பிய விஸ்வநாதர், மதுரையில் இருந்த பாண்டியர் கோட்டை வாயிலை இடித்துப் புதிதாகக் கட்டினார். விவசாயம் அப்போது படுமோசமாக வீழ்ச்சியடைந்திருந்ததைக் கண்ட விஸ்வநாதர், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தி வைகை ஆற்று நீரை பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்த பல கால்வாய்களைக் கட்டினார். வைகையின் குறுக்கே கட்டப்பட்ட பேரணையும் சிற்றணையும் விஸ்வநாதர் காலத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று நெல்சன் குறிப்பிடுகிறார்.

விஸ்வநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் மதுரை அரசின் எல்லைகள் யாவை என்பதுபற்றி ம்ருத்யுஞ்சய ஓலைச் சுவடிகள் இவ்வாறு குறிக்கின்றன:

“நாட்டின் வடக்கு இல்லைகளாக உறட்டூரும் வாலிகொண்டபுரமும் (வால்கொண்டா) இருந்தன. கன்னியாகுமரி அதன் தெற்கெல்லையாக இருந்தது. மேற்கில் கோயம்புத்தூரும், ஈரோடும், தாராபுரமும் எல்லைகளாக இருந்தன, ராமேஸ்வரமும் அதை அடுத்த கடலும் கிழக்கு எல்லையாக இருந்தது”.

இதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தின் பெரும்பகுதி மதுரை நாயக்கர்களிடம் இருந்தது தெரியவருகிறது.

இப்படி ஒரு பெரிய அரசை ஆட்சி செய்துகொண்டு நாட்டு நிர்வாகத்தை சீரமைத்துக் கொண்டிருந்தாலும், மதுரை அரசின் கீழ் இருந்த பல சிற்றரசர்கள் தமிழகத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வருபவர்கள்; அவர்கள் நம்மை வெளியிலிருந்து வந்த அரசனாகவே கருதுவார்கள்; பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இந்த அரசர்களை ஒன்றிணைப்பது கடினம் என்பதை விஸ்வநாதர் உணர்ந்தார். நாட்டில் அமைதியும் செல்வச்செழிப்பும் நிலவ அவர்கள் கலகம் செய்யாமல் இருப்பது முக்கியம் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

காடுகள் அதிகம் உள்ள பகுதிகளைக் கொண்ட மதுரை அரசில் தொடர்ந்து கொள்ளையர்கள் தொல்லை இருந்தது. இதில் பலர் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள். ஒரு பிளவுபட்ட நாடு இது போன்ற பிரச்சனைகளைக் கையாள்வது கடினம், ஆகவே பல்வேறு அரசர்களை ஒன்றிணைப்பது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான ஒன்று என்ற காரணத்தால் அதற்கான செயல்திட்டம் ஒன்றைத் தீட்டும் முயற்சியில் விஸ்வநாதர் ஈடுபட்டார்.

ஆகவே இங்கே ஏற்கனவே ஆட்சி செய்துகொண்டிருந்தவர்களுக்கு ஓரளவு சுதந்தரம் அளித்து, அதேசமயம் அவர்களை மதுரைக்கு அடங்கிய சிற்றரசர்களாகத் தொடர்ந்து செயல்படவைக்க ஒரு நிர்வாக முறையைக் கொண்டுவர விஸ்வநாதர் முடிவு செய்தார். தன் நண்பரும் பிரதானியுமான அரியநாதருடன் சேர்ந்து ஆலோசித்து அவர் கொண்டுவந்த திட்டம்தான் பாளையப்பட்டு முறை.

பாளையப்பட்டு முறை

எப்படி அமரநாயக்க முறையை விஜயநகர அரசு செயல்படுத்தியதோ, கிட்டத்தட்ட அதே அடிப்படைகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்டதுதான் இந்த பாளையப்பட்டு முறை. நாடு எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதாக பாளையங்களைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ராஜய்யன் போன்ற ஆய்வாளர்கள் இதை மறுத்து ஏற்கனவே பல பாளையங்கள் இருந்ததாகவும் எழுபத்தியிரண்டு என்ற எண்ணிக்கை தவறு என்றும் கூறுகின்றனர். ஆனால் விஸ்வநாதரின் காலத்திற்கு முன்பு பாளையங்கள் என்ற பிரிவு தமிழகத்தில் இல்லை என்பதால் விஸ்வநாதரே பாளையங்களை அரியநாதரின் துணைகொண்டு உருவாக்கினார் என்று உறுதிசெய்துகொள்ளலாம். மேலும் நாயக்கர் காலம் முழுவதும் இந்தப் பாளையங்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே வந்ததையும் நாம் காண்கிறோம். அதனால் எழுபத்தியிரண்டு என்ற எண்ணிக்கை பின்னால் வந்திருக்கவேண்டும். இருப்பினும் பாளையங்களின் நாட்டுப் பாடல்கள் தரும் அக்காலகட்டத்தில் இருந்த பாளையங்களின் பெயர்கள் பின்வருமாறு :

1. பாஞ்சாலங்குறிச்சி
2. எட்டயபுரம்
3. நாகலாபுரம்
4. ஏழாயிரம் பண்ணை
5. காடல்குடி
6. குளத்தூர்
7. மேல் மாந்தை
8. ஆற்றங்கரை
9. கொல்லப்பட்டி
10. கோலார்பட்டி
11. கடம்பூர்
12. மணியாச்சி
13. தலைவன் கோட்டை
14. நெற்கட்டும் செவ்வல்
15. சொக்கம்பட்டி
16. ஊற்றுமலை
17. சேற்றூர்
18. சிவகிரி
19. சிங்கம்பட்டி
20. அழகாபுரி
21. ஊர்க்காடு
22. கரண்டை
23. சந்தையூர்
24. எழுமலை
25. ராசக்க நாயனூர்
26. கோட்டையூர்
27. மருங்காபுரி
28. மன்னார்கோட்டை
29. பாவாலி
30. இலக்கையனூர்
31. முல்லையூர்
32. கடவூர்
33. இடையக் கோட்டை
34. நிலக்கோட்டை
35. தேவாரம்
36. ராமகிரி
37. கல்போது
38. கன்னிவாடி
39. தொட்டப்ப நாயக்கனூர்
40. கம்பம்
41. காசையூர்
42. வாராப்பூர்
43. தோகைமலை
44. படதூர்
45. ஆய்குடி
46. சமுத்தூர்
47. விருப்பாட்சி
48. படமாத்தூர்
49. கண்டவ நாயக்கனூர்
50. காமய நாயக்கனூர்
51. தும்பிச்சி நாயக்கனூர்
52. நத்தம்
53. வெள்ளியகுன்றம்
54. மலையப்பட்டி
55. வடகரை
56. அம்மையநாயக்கனூர்
57. போடிநாயக்கனூர்
58. சக்கந்தி
59. பதவள நாயக்கனூர்
60. ரோசலப்பட்டி
61. வீரமலை
62. பெரியகுளம்
63. குருவிக்குளம்
64. ஆத்திபட்டி
65. இளசை
66. மதுவார்பட்டி
67. கோம்பை
68. கூடலூர்
69. கவுண்டன் பட்டி
70. குமரவாடி
71. உத்தப்ப நாயக்கனூர்
72. கொல்ல கொண்டான்

இந்தப் பாளையங்களுக்குத் தலைவராக தெலுங்கர்களும் கன்னடர்களும் பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் மற்ற தமிழ்ச் சிற்றரசர்களும் இருந்தனர். இந்தத் தலைவர்களுக்கு பாளையக்காரர்கள் என்ற பெயர் அளிக்கப்பட்டது. பாளையக்காரர்கள் சுயமாகப் படைகளை வைத்துக்கொள்ளும் உரிமை பெற்று தேவையானபோது மத்திய அரசுக்கு அந்தப் படைகளை அளித்து வந்தனர். அது தவிர தங்களுடைய ஆட்சிப் பகுதிகளில் வரிவசூலிக்கும் உரிமையையும் பாளையக்காரர்கள் பெற்றனர். வரும் வருவாயிலிருந்து மூன்றில் ஒரு பகுதியை அவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு அளித்துவிட வேண்டும். அமரநாயக்கர்களைப் போலவே தங்கள் பகுதிகளில் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் நீதி வழங்கவும் பாளையக்காரர்கள் உரிமை பெற்றனர்.

இந்தப் பாளையப்பட்டு முறையை வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கின்றனர். நெல்சன் ‘பாளையப்பட்டு முறை அக்காலகட்டத்தில் நிலவிய சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட சிறந்த முறை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கால்டுவெல் இது சிறந்த முறை அல்ல என்கிறார். அ.கி. பரந்தாமனாரோ ‘இதை அக்கால சூழ்நிலையைப் பொருத்து விமர்சிக்க வேண்டுமே அல்லாது, தற்போதைய நிலைமையை அதன் மேல் ஏற்றிப் பார்க்கக்கூடாது’ என்கிறார்.

ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது இதைவிடச் சிறந்த முறையை அரியநாதரும் விஸ்வநாதரும் ஏற்படுத்தியிருக்க முடியாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. பல்வேறு மொழி பேசுபவர்கள், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று கலவையாக இருந்த ஒரு சமூகத்தை ‘வெளியிலிருந்து’ வந்து ஆள்வது அவ்வளவு எளிய விஷயம் அல்ல. அக்காலச் சமூகச் சூழ்நிலையில் எல்லா அதிகாரமும் மத்தியில் குவிந்திருக்கும் முறை நீண்ட காலம் நிலைத்து இருந்திருக்காது என்பது தெளிவு. அதன் காரணமாகவே பாளையப்பட்டு முறையை செம்மையான நிர்வாக முறை என்று கருதவேண்டியிருக்கிறது. விஸ்வநாதர் காலத்திலிருந்து நிலைத்திருந்த காரணத்தால், பின்னாளில் பிரிட்டிஷர் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதும், இந்தியாவின் முதல் சுதந்தரப் போரை முன்னெடுத்ததும் இந்தப் பாளையக்காரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிர்வாகச் சீர்த்திருத்தமுறை ஒட்டுமொத்தமாக முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது மதுரை நாயக்கர்கள் காலத்தில்தான். மற்ற இரு பகுதிகளை ஆட்சி செய்த நாயக்கர்கள்கூட இப்படி ஒரு முறையை ஏற்படுத்தவில்லை. ஒரு முறையை உருவாக்குவது என்பது வேறு, அதைச் சிக்கலில்லாமல் செயல்படுத்துவது என்பது வேறு. அந்த வகையில் பெரும் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அரியநாதர் இதைச் செயல்படுத்தினார். பெரும்பாலான சிற்றரசர்கள் இந்தப் பாளையக்காரர் முறையை எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். ஓரிரு இடங்களில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தபோதும் அரியநாதர் அதைச் சாதுர்யமாக அடக்கிவிட்டார். அதன் காரணமாக முன்னேப்போதும் இல்லாத வகையில் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப் பகுதி ஒரு ராணுவ ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டது. மதுரைக் கோட்டை வாயிலில் எழுபத்தியிரண்டு கொத்தளங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாளையக்காரர் காவலாக நியமிக்கப்பட்டார்.

பாளையக்காரர்களாக பெரும்பாலும் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சிற்றரசர்களே நியமிக்கப்பட்டனர் என்றாலும் சில இடங்களில் தம்முடைய நிர்வாகிகளை பாளையக்காரர்களாக விஸ்வநாதர் நியமித்தார். உதாரணமாக கம்பம்-கூடலூர்ப் போரில் தனக்கு வெற்றியைத் தேடித்தந்த ராமபத்திர நாயக்கருக்கு வடகரை பாளையம் வழங்கப்பட்டது.

இந்த முறையால் விளைந்த நன்மைகள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

படம்: தளவாய் அரியநாத முதலியார்

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *