பாளையங்கள்
மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டன. சில பாளையங்கள் அளவில் மிகச் சிறியதாகவும் சில மிகப் பெரியதாகவும் இருந்தன. உதாரணமாக திண்டுக்கல் பகுதியில் மட்டும் பதினெட்டு பாளையங்கள் இருந்தன. மொத்தப்பாளையங்களில் நான்கில் ஒரு பகுதி இந்தப் பகுதியில் இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல பாளையங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அதிகமாகக் கொண்டு அமைந்திருந்தன.
தன்னுடைய ஆட்சிப் பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை முழுக்க பாளையக்காரர்களிடம் அளிக்கப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல், நீதி நிர்வாகம், படைகளை வைத்திருத்தால் ஆகியவையும் பாளையக்காரர்களின் உரிமையாக இருந்தது. ஆனால் மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல், பாளையக்காரர் மரண தண்டனையை வழங்க இயலாது. வருவாயைப் பொருத்த அளவில் நிலவரியே முக்கிய வருமானத்தைத் தந்தது. விளைநிலத்தின் தரத்திற்கேற்ப நில வரி வசூலிக்கப்பட்டது. அதைத் தவிர சுங்க வரியும் காவல் வரியும் வசூலிக்கப்பட்டன. கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசுக்குப் பாளையக்காரர்கள் செலுத்தி வந்தனர். பெரும்பாலும் பணமாகவே இது செலுத்தப்பட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக காவல்காரர் என்போர் நியமிக்கப்பட்டனர். தானியங்களையும், கால்நடைகளையும் ஊர்மக்களின் சொத்துக்களையும் பொது இடங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்தக் காவல்காரர்களிடம் இருந்தது. ஏதாவது திருட்டு நடந்தால், அதற்கான பொறுப்பை காவல்காரரே ஏற்றுக்கொள்ளவேண்டும். திருடனைக் கண்டுபிடிக்காமல் போனால், அதற்கு காவல்காரர் தன் சொந்த செலவிலிருந்து ஈடுகட்ட வேண்டும் என்ற முறை இருந்தது. இதன் காரணமாக காவல்காரர்கள் மிகுந்த முனைப்புடன் தங்கள் பணியை நிறைவேற்றினர். இரவில் ரோந்து செல்வது, வெளியூரிலிருந்து வரும் ஆட்களைக் கண்காணிப்பது, ஊரில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்து தங்கள் தலைவர்களுக்குத் தகவல் அளிப்பது போன்ற பல வேலைகளைக் காவல்காரர்கள் செய்தனர்.
படைபலத்தைப் பொருத்தவரை, பாளையங்கள் பெரும்பாலும் காலாட்படைகளையே வைத்திருந்தன. சில பாளையங்களில் குதிரைப் படை இருந்தது. பல்வேறு விதமான ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தினர். படைகளையும் ஆயுதங்களையும் வேகமாகக் கொண்டுசெல்ல மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசுக்குப் படைகள் தேவைப்படும்போதெல்லாம் தங்கள் படைகளை பாளையக்காரர்கள் கொடுத்து உதவினர்.
விஜயநகர அரசில் மாற்றங்கள்
இதுபோன்ற அதிகார மாற்றங்களும் நிர்வாகச் சீர்திருத்தங்களும் நடந்து கொண்டிருக்கும் போது, விஜயநகர அரசில் மீண்டும் ஒரு வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. அச்சுத ராயர் மறைந்ததை அடுத்து அவரது மகனான வேங்கட தேவனைப் பெயரளவுக்கு அரியணையில் அமர்த்தி, அச்சுதரின் மைத்துனனான திருமலை தேவன் அரசாளத் தொடங்கினான். ஆனால் அச்சுதராயரின் மனைவிக்கும் அவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வேங்கட தேவன் கொல்லப்படவே, திருமலை தேவன் தானே அரசன் என்று பிரகடனப் படுத்திக்கொண்டான். ஆனால் கிருஷ்ணதேவராயரின் மாப்பிள்ளையான ராமராயர், அரசு அதிகாரிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு திருமலை தேவனைக் கொன்றுவிட்டு, சதாசிவராயரை பொயு 1542ம் ஆண்டு அரியணையில் அமர்த்தினார். ஆனால் சகல அதிகாரங்களையும் தன்னுடன் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தினார். தமிழகப் பகுதிகளை நிர்வகிக்க விட்டல ராயர் என்பவரை அவர் நியமித்தார்.
விஜயநகரப் பேரரசில் ஏற்பட்ட இந்தக் குழப்பம் தமிழகத்திலும் எதிரொலித்தது. கயத்தாறு பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த வெட்டும் பெருமாள் என்பவர், தென்காசிப் பாண்டியர்கள் மீது போர் தொடுத்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த உன்னிக்கேரள வர்மன் என்ற அரசனும் விஜயநகரத்திற்குத் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டுக் கலகம் செய்ய ஆரம்பித்தான். இவர்களை அடக்குவதற்கு விட்டல ராயர் ஒரு படையோடு வந்தார். விஸ்வநாதரும் அவரோடு சேர்ந்து கொண்டார். விஜயநகரப் படை வெட்டும் பெருமாளை கயத்தாரில் தோற்கடித்துத் துரத்தியது. அதன்பின் கோட்டாற்றுக்குச் சென்று உன்னிக்கேரள வர்மனையும் வென்றது. இந்த வெற்றியை அடுத்துத் தமிழகப் பகுதிகள் முழுவதற்கும் மகாமண்டலேஸ்வரராக விட்டலராயர் பொறுப்பேற்றார். ஆகவே, மதுரைத் தலவரலாறும் விட்டல ராயரையே இக்காலகட்டத்தின் அரசராகக் குறிப்பிடுகிறது. விஸ்வநாதர் மதுரையின் நாயக்கராக இருந்தாலும் அவர் விட்டலராயரின் கீழ்ப் பணிபுரிந்ததால் அப்போதைய ஆவணங்கள் இப்படிக் குறிப்பிட்டன போலும்.
விட்டல ராயர் மகாமண்டலேஸ்வரராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே மீண்டும் பிரச்சனைகள் எழுந்தன. தமிழக கோவில்கள் பலவற்றை கொள்ளையடிக்க வணிகம் செய்ய வந்த போர்ச்சுகீசியர் திட்டமிட்டனர். அவர்களை அடக்க படையோடு மீண்டும் விட்டலராயர் தென் தமிழகத்திற்கு வந்தார். இதற்கிடையில் தமிழகத்தின் கடற்கரை முழுவதையும் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்த இஸ்லாமியர்களை விரட்டிவிட்டனர். விஸ்வநாத நாயக்கரின் படைகளும் விட்டலரின் படைகளும் இந்தப் போர்ச்சுக்கீசியரின் கடற்படைகளோடு மோதி அங்கிருந்து அவர்களைத் தோற்கடித்துத் துரத்தினர். போர்ச்சுக்கீசியரின் ஒரு படைப்பிரிவு ராமேஸ்வரம் தீவைக் கைப்பற்றிக்கொண்டது. வேடாலை என்ற இடத்தில் ஒரு மணற்கோட்டை எழுப்பி, ராமேஸ்வரம் செல்லும் யாத்திரிகர்களிடம் வரி வசூலிக்கத் தொடங்கினர் போர்ச்சுக்கீசியர்கள். இதனால் வெகுண்ட விட்டலராயார், ராமேஸ்வரம் நோக்கிச் சென்று போர்ச்சுக்கீசியர்களை வென்று அந்த மணற்கோட்டையை இடித்துத் தள்ளினார். அவர்கள் மேற்கொண்ட மதமாற்றச் செயல்களையும் அவர் தடுத்து, அரசுக்குத் திறை செலுத்த அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.
இப்படி விஜயநகரத்தின் உதவியுடன் தன்னுடைய ஆட்சிப் பகுதிகளில் மீண்டும் அமைதியை நிலைநாட்டினார் விஸ்வநாத நாயக்கர்.
தென்காசிப் பாண்டியர்கள்
அச்சுதராயரின் காலத்தின் போது அவருடைய உதவியைப் பெற்று தன்னுடைய நாட்டைத் திரும்ப அடைந்த ஶ்ரீவல்லப பாண்டியன் காலத்திலிருந்தே தென்காசிப் பாண்டியர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்குமான உறவு இணக்கமாகவே இருந்தது. விட்டலராயரின் படையெடுப்பின் போது இது மேலும் உறுதிபெற்றது. மதுரை நாயக்கர்களுக்குத் தொடர்ந்து கப்பம் கட்டி வந்தாலும், தென்காசிப் பாண்டியர்கள் அவர்களுடைய ஆட்சிப் பகுதியில் முழு அதிகாரம் படைத்தவர்களாகவே இருந்தனர். நைஷதம், கொக்கோகம் போன்ற நூல்களை இயற்றியவரான அதிவீரராம பாண்டியர் 1558ல் இளவரசராக இருந்தார். அவரும் விஸ்வநாதரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 1558ல் இருவரும் இணைந்து சாசனங்களை வெளியிட்டனர். இவற்றிலிருந்து மதுரை நாயக்கர்களுக்குத் தென்காசிப் பாண்டியர்களுடனான நட்புறவு தொடர்ந்து இருந்தது என்பது தெரியவருகிறது.
கோவில் திருப்பணிகள்
நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஒருபுறம், அவ்வப்போது நடந்த போர்கள் ஒருபுறம் என்று இருந்தாலும் தன்னுடைய ஆட்சிப் பணிகளில் இருந்த கோவில்களின் திருப்பணியில் விஸ்வநாதர் பெரும் கவனம் செலுத்தினார். மதுரை சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள இந்திரவிமானத்தைச் சீரமைத்துத் தன் திருப்பணியைத் தொடங்கிய அவர், ஆதனூர், திருக்காணை, காட்டுமேலைப்பறம்பு, இளமணல்லூர் போன்ற கிராமங்களை மதுரைக் கோவிலின் வருவாய்க்காக நன்கொடையாக வழங்கினார். மதுரைக் கோவிலுக்குப் பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து அவற்றை மீண்டும் கோவிலுக்கே எழுதிவைத்தார். அவற்றைத் தவிர பல்வேறு ஆபரணங்களையும் கோவிலுக்கு அவர் வழங்கியதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அபிஷேக பண்டாரம் என்ற பதவியை ஏற்படுத்தி கோவில் நிர்வாகம், அபிஷேகம், பூஜைகள், விழாக்கள் ஆகியவை அவர் தலைமையில் நடத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.

மதுரைக் கோவிலில் விஸ்வநாதர் செய்த திருப்பணிகளை, திருப்பணி மாலை இவ்வாறு குறிப்பிடுகிறது.
“செம்பொற் பதக்கமுட னானவா பரணமுஞ்
சேர்ந்தபரி கலமாதருங்
கஞ்சவயல் சூழுமொம் மட்டிமா தளையின்மேற்
கயல்குதிகொ ளாதனுருங்
காக்கள் செறி யுந்திருக் கானையும் பூகவயல்
காட்டுமே லைப்பறம்பும்
மஞ்சுதவழ் சோலைசூ ழிளமணல் லூரையும்
மருவுமிந் திரவிமானம்
வளமையொடு பழமைபுதி தாகவே பொன்பூசி
மகிமையுட னேயுதவினான்
விஞ்சிவரு திருவடி தனைப்பொருது திறைகொண்டு
மீனவனை வாழ்வித்தமால்
மேவுதென் கச்சிநா யகன்விசுவ நாதனுயர்
வெற்றிப்ர தாபமுகிலே”
அவருடைய அதிகாரிகளில் சிராமலை செவ்வந்தி செட்டி என்பவரும் அவருடைய குடும்பமும் பல திருப்பணிகளை மதுரைக் கோவிலில் செய்தார்கள். சிராமலைச் செவ்வந்திக்கு வேலன் (வேலப்பன்), திருவம்பலம் என்று இரு மகன்கள் இருந்தனர்.
சிராமலைச் செவ்வந்திச் செட்டிதான் மதுரையின் அழகான தெற்குக் கோபுரத்தைக் கட்டியவர். அதைத் தவிர மீனாக்ஷி அம்மனின் விமானத்திற்கும் சுந்தரேஸ்வரர் விமானத்திற்கும் பொன் வேய்ந்தவரும் அவரே. அதற்காக முப்பத்து இரண்டு பானைத் தங்கத்தை அவர் அளித்ததாக திருப்பணிமாலை தெரிவிக்கிறது. சித்திர கோபுரத்தைத் திருப்பணி செய்தவரும் ஆய்க்கட்டுக் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே ஆவார். அவருடைய மகனான திருவம்பலம் மீனாக்ஷியம்மன் சன்னதியில் உள்ள மூர்த்தி மண்டபத்தைக் கட்டினார் (தற்போது அது மாற்றப்பட்டு கிளிக்கூடு மண்டபத்தின் ஒரு பகுதியாக உள்ளது). இன்னொரு மகனான வேலன், சுவாமி சன்னதி கொடிமரத்தைக் கட்டினார். சுவாமி சன்னதியின் தரைப் பகுதியை முழுவதும் புனரமைத்தவர் அவரே.*
தவிர கோவில் நிர்வாகத்திலும் பல மாற்றங்களை விஸ்வநாதர் ஏற்படுத்தினார். மதுரை மீனாக்ஷி அம்மனின் பட்டாபிஷேகத்தின் போது செங்கோல் வாங்கும் உரிமையை மீண்டும் பெற்றார் விஸ்வநாதர். ஹரி பட்டர் என்பவரை தன் குருவாக ஏற்றுக்கொண்ட விஸ்வநாதர் அவரிடமே தீட்சையும் பெற்றுக்கொண்டார். ஸ்தானிகராக குலசேகரப் பெருமாள் வம்சத்தினர் இருந்து வந்த நிலையில், சதாசிவ பட்டர் என்பவருக்கும் அதிகாரங்கள் அளித்து விஜயநகர அரசருக்கு மதுரையிலிருந்து ப்ரசாதங்கள் கொண்டு செல்லப் பணித்தார் விஸ்வநாதர். ஆனால் அதற்கான செலவுகளை இரு ஸ்தானிக பட்டர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார். குலசேகர பட்டரால் இந்தப் பணத்தைத் தர இயலாததால், தன்னுடைய மூன்று நாள் பரிசாரக அதிகாரத்தை சதாசிவருக்கு அளித்ததாக ஸ்தானிகர் வரலாறு குறிப்பிடுகிறது. பின்னாளில் இந்த இரு ஸ்தானிக பட்டர்களுக்கும் இடையில் பிணக்குகள் உருவாக இது காரணமாக இருந்தது.
மதுரையோடு மட்டும் நின்றுவிடாமல், ஶ்ரீரங்கம் கோவிலையும் சீரமைத்து அங்கே கோவிலைச் சுற்றித் தெருக்கள் அமைத்து மக்களை குடியேற்றினார். கோவில் திருப்பணிக்காக மூன்று லட்சம் பொன்னை அவர் செலவிட்டதாகக் கோவிலொழுகு கூறுகின்றது. திருச்சியில் உள்ள தெப்பக்குளத்தைக் கட்டியவரும் விஸ்வநாத நாயக்கரே. இதைப் போலவே நெல்லையப்பர் கோவிலிலும் பல திருப்பணிகளை விஸ்வநாத நாயக்கர் செய்தார்.
(தொடரும்)
படம்: விஸ்வநாத நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட மதுரைக் கோவிலின் தெற்குக் கோபுரம்
*The Madurai Temple Complex – A.V. Jeyachandran