Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்

கிருஷ்ணப்பருக்குப் பிறகு அவரது புதல்வரான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா. மதுரை நாயக்கர் வரலாற்றில் இந்த இடத்தில் சில ஆய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிருஷ்ணப்ப நாயக்கருக்கு வீரப்பர், விஸ்வநாதர் என்று இரு மகன்கள் இருந்தார்கள். கிருஷ்ணப்பருக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து மதுரையை ஆட்சி செய்தார்கள் என்று நெல்சன் குறிப்பிட்டிருக்கிறார். “இரண்டு பேர் ஆட்சி செய்யக்கூடிய நடைமுறை இக்காலத்தில் தொடங்கியது. அது ஒரு புதிய ஆட்சிமுறையை அறிமுகம் செய்தது” என்று குறிப்பிடும் நெல்சன் அதற்கான ஆதாரமாகக் காட்டுவது டெய்லர் என்ற ஆய்வாளர் மொழிபெயர்த்த சில ஓலைச்சுவடிகளை. அவற்றில் விஸ்வநாதர் இரண்டாவதாக அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை வைத்து இருவருமே ஆட்சி செய்தார்கள் என்ற முடிவுக்கு நெல்சன் வந்துவிட்டார். மற்ற நூல்களும் ‘சின்ன துரை’ என்று விஸ்வநாதரைக் குறிப்பிடுகிறதே தவிர அவரை அரசர் என்று கூறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. மதுரை நாயக்கர் வரலாற்றைத் தெளிவாக எடுத்துக்காட்டும் ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகளில் இருவர் ஆட்சி செய்ததாகக் குறிப்பிடவே இல்லை. பிறகு ஏன் இந்தக் குழப்பம் வந்தது ?

தமிழக வரலாற்றில், சங்க காலத்திலிருந்தே மூவேந்தர்கள், அரசரை ஒருவராக நியமித்த பிறகு யுவராஜப் பட்டாபிஷேகம் செய்து இளவரசராக, அதாவது அடுத்த வாரிசாக ஒருவரை அறிவிப்பது வழக்கமாக இருந்தது. உதாரணமாக பாண்டியர்களின் அரசர் மதுரையிலிருந்து ஆட்சி செய்யும் போது அவர்களின் இளவரசர் கொற்கையிலிருந்து நிர்வாகத்தைக் கவனிப்பார். சோழர்கள் காலத்தில் தஞ்சையில் அரசர் இருந்தால் சிதம்பரத்திலோ அல்லது பழையாறையிலோ இளவரசர் இருப்பார். இப்படி இளவரசராக நியமிக்கப்பட்டவருக்கு சாசனங்கள் அளிப்பது போன்ற பல உரிமைகள் உண்டு.

விஸ்வநாத நாயக்கருக்கு கிருஷ்ணப்பரே ஒரே மகன் என்பதால் இதுபோன்ற அறிவிப்புக்குத் தேவை ஏற்படவில்லை. ஆனால் கிருஷ்ணப்பருக்கு இரு மகன்கள் இருந்ததால், ஒருவரை அரசராகவும் மற்றொருவரை இளவரசராகவும் நியமித்திருக்கிறார்கள். இந்த நடைமுறைகள் சரிவரத் தெரியாததால் இருவருமே அரசர்கள் என்று நெல்சன் போன்றோர் கருதிவிட்டனர். இது பல்வேறு நூல்களிலும் பின்னால் ‘Joint Rulers’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இது தவறான செய்தியாகும். வீரப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவரையே அரசர் என்று கூறுகின்றன. அவரது சகோதரரான விஸ்வநாதரின் கல்வெட்டுகள் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. நாயக்கர் காலத்துச் செப்பேடுகளான இரண்டாம் வேங்கடரின் குனியூர்ச் செப்பேடுகள், வெல்லங்குடிச் செப்பேடுகள், தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகள் ஆகியவை நாயக்க வம்சாவளி அரசர்களைப் பற்றித் தெரிவிக்கின்றன. அவை எதுவுமே இப்படிப்பட்ட இரு அரசர்கள் இருந்த நடைமுறையைப் பற்றிக் கூறவில்லை. ஆகவே இளவரசராக இருந்த விஸ்வநாதரை அரசர் என்று நினைப்பதற்கான எந்த முகாந்தரமும் இல்லை என்பது தெளிவு.

வீரப்ப நாயக்கர் 1572ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அவரது பாட்டனாரின் நண்பரான அரியநாதர் வீரப்பருக்கும் உறுதுணையாக இருந்து ஆட்சியில் தளவாய், பிரதானி பதவிகளை வகித்து உதவி செய்தார். பீஷ்ம பிதாமகரைப் போல வயது முதிர்ந்த அரியநாதரின் ஆலோசனைகளைக் கேட்டு வீரப்பர் ஆட்சியை நிர்வகித்தார். இதிலும் சிலர், அரியநாதர் வீரப்பரை வெறும் பொம்மை அரசராக நடத்தினார் என்று கூறுகின்றனர். இதற்கும் எந்த முகாந்தரமும் இல்லை. வீரப்பர் காலத்துச் சாசனங்கள் பல அவரது நிர்வாகத் திறனுக்கு சாட்சி அளிக்கின்றன.

வாணாதிராயர் கலகம்

வீரப்பரின் ஆட்சிக் காலத்தில் அவர் முதலில் எதிர்கொண்ட சோதனை வாணாதிராயர்களின் கலகம். இந்த வாணாதிராயர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தமிழகத்தின் வடபகுதியில் ஆட்சி செய்யத் தொடங்கிய வாணர்கள், பிற்காலப் பாண்டியர்களின் சிற்றரசர்களாக இருந்து சோழர்களுக்கு எதிரான போர்களில் உதவி செய்தனர். அதன் பிறகு சுல்தான்களின் ஆட்சியில் அதிகம் சலசலப்பு ஏற்படுத்தாத வாணர்கள், விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகள் மதுரையை ஆட்சி செய்தபோது அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். லக்கண்ண நாயக்கர் விஜயநகரம் திரும்பும்போது மதுரைப் பகுதியின் ஆட்சியாளர்களாக வாணாதிராயர்களை நியமித்தார். அழகர் கோவில், ஶ்ரீவில்லிப்புத்தூர் போன்ற கோவில்களுக்குப் பல திருப்பணிகள் செய்த வாணாதிராயர்கள் பின்னால் தன்னாட்சி செய்ய முயன்றபோது விஸ்வநாத நாயக்கர் இவர்களை அடக்கினார். ஆனால் வாணாதிராயர்களோடு தொடர்ந்து பகைமை பாராட்ட விரும்பாமல் அவர்களுக்கு மதுரையின் கிழக்கே சில பாளையங்களை அளித்து அவர்களை அங்கே ஆட்சி செய்யச் செய்தார். மானமதுரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், தேவிப்பட்டணம் ஆகிய இடங்களில் இவர்களது கல்வெட்டுகள் காணப்படுவதை அடுத்து அங்கெல்லாம் இவர்கள் ஆட்சி நிலவியது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தபோது, தங்களது பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக மானாமதுரை, காளையார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள கோட்டைகளைப் பிடித்துக்கொண்டு அந்தப் பகுதிகளெல்லாம் தமக்கே சொந்தம் என்று மாவலி வாணாதிராயர் என்ற வாணர்களின் அரசர் அறிவித்தார். ஆனால் மிக வேகமாகக் களம் இறங்கிய நாயக்கர்களின் படை அவர்களைத் தோற்கடித்துக் கோட்டைகளை மீட்டது. அவர்களுடைய பாளையக்காரர்கள் என்ற அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் வீரப்பரோடு சமாதானம் செய்துகொண்டு தாங்கள் இழந்த பகுதிகளை இவர்கள் பெற்றதாகத் தெரிகிறது. திருக்கோவிலூரில் உள்ள ஒரு கல்வெட்டு இவர்களை மதுரை நாயக்கர்களின் விசுவாசமிக்கவர்களாகக் குறிப்பிடுகிறது. அதிலிருந்து மீண்டும் தங்கள் பாளையத்தை இவர்கள் பெற்றனர் என்று அறிந்துகொள்ளலாம்.

தென்காசிப் பாண்டியர்கள்

மற்றபடி வேறு எந்தப் பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் வீரப்பரின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனை எதையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. வீரப்பரின் 1594ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று அவர் எல்லாப் பாளையக்காரர்களிடமிருந்தும் வரி வசூலித்து ஆட்சியை நடத்தியதாகக் குறிப்பிடுகிறது. அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர் போன்ற தென்காசிப் பாண்டியர்களும் வீரப்பரோடு நட்பு பாரட்டியே வந்தனர். வரதுங்க ராம பாண்டியரின் புதுக்கோட்டைச் செப்பேடுகள், வீரப்ப நாயக்கரின் அனுமதியைப் பெற்று அங்குள்ள ஒரு கோவிலுக்கு கிராமம் ஒன்று நிவந்தமாக வழங்கப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.

விஜயநகர அரசுடனான உறவு

விஜயநகரப் பேரரசில் ஏற்பட்ட குழப்பங்கள் வீரப்ப நாயக்கரின் காலத்திலும் தொடர்ந்தன. சதாசிவ ராயரை பெயரளவுக்கு ஆட்சியில் அமர்த்திவிட்டு அதிகாரங்கள் அனைத்தையும் தாமே வைத்துக்கொண்டிருந்த திருமலைராயர், ஒரு கட்டத்தில் சதாசிவராயரைச் சிறையிலடைத்துவிட்டு தாமே ஆட்சி செய்யலானார். பின்னர், தனது ஆட்சிப்பகுதியை மூன்றாகப் பிரித்து ஆந்திரநாட்டுப் பகுதிகளை மூத்த மகனான ஶ்ரீரங்கனுக்கும் கர்நாடகாப் பகுதிகளை இரண்டாவது மகனான ராமனுக்கும் தமிழகப் பகுதிகளை மூன்றாவது மகனான வேங்கடருக்கும் அளித்தார். வயது முதிர்ந்தவுடன் ஶ்ரீரங்கருக்கு முடிசூட்டிவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டார்.

பாமினி சுல்தான்களுடன் ஓயாது போர் செய்துகொண்டிருந்த ஶ்ரீரங்கரும் ஶ்ரீரங்கப்பட்டினத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த ராமரும் இறந்துபடவே வேங்கடர் விஜயநகருக்கு அரசராக முடிசூட்டிக் கொண்டார். இப்படி நடந்த பல்வேறு ஆட்சி மாற்றங்களினால் நாயக்கர்களின் மீதான விஜயநகர அரசர்களின் பிடி தளர்ந்து கொண்டே போயிற்று. ஆனாலும் தன் மூதாதையர்களைப் போல வீரப்பர் தொடர்ந்து விஜயநகருக்குக் கப்பம் கட்டி வந்தார். கிருஷ்ணாபுரத்தில் உள்ள 1577ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் சேரன்மாதேவியில் உள்ள 1578ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் வீரப்ப நாயக்கரை ஶ்ரீரங்கரின் சேவகராகக் குறிப்பிடுகின்றன. போலவே வேங்கடரின் ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகளும் வீரப்பர் விஜயநகர அரசின் மீது கொண்டிருந்த விஸ்வாசத்தைக் காட்டுகின்றன.

தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகள்

ஒன்பது செப்பேடுகள் கொண்ட தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகள் வீரப்ப நாயக்கர் அளித்த கொடை ஒன்றைப் பற்றிக் கூறுகின்றன. விஜயநகர அரசரான வேங்கடபதி ராயரின் காலத்தைச் சேர்ந்த இந்தச் செப்பேடுகள் சக வருடம் 1508ல் அதாவது பொயு 1586ம் ஆண்டு அளிக்கப்பட்டவை. விஜயநகர அரசர்களின் வம்சாவளியோடு தொடங்கும் இவை, வேங்கடபதி ராயர் திருப்பதி வந்திருந்த போது மதுரை நாயக்க அரசரான வீரபூபரின் கோரிக்கையை ஏற்று கங்கவரப்பட்டி என்ற கிராமத்தின் பகுதிகளை வீரபூப சமுத்திரம் என்ற பெயரில் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கினார் என்று தெரிவிக்கிறது. திருப்பதி வேங்கடேசப்பெருமானின் முன்னிலையில் இந்தத் தானம் வழங்கப்பட்டதாக செப்பேடு கூறுகிறது.

தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகள் – Epigraphia Indica Vol 12
தளவாய் அக்ரஹாரம் செப்பேடுகள் – Epigraphia Indica Vol 12

கிருஷ்ணப்பரின் மகனும் விஸ்வநாதரின் பேரனுமான வீரபூபரின் விருதுகளான சமயத் த்ரோஹரகண்டன், தக்ஷிணசமுத்ரேசன் போன்றவற்றைக் குறிப்பிட்டு மதுரை சுந்தரேஸ்வரருக்கு அழகான சிற்பங்கள் கொண்ட மண்டபத்தை வீரப்பர் வடித்தார் என்று செப்பேடு குறிக்கிறது. நவரத்தினக் கற்களால் ஆன ஆயுதம் ஒன்றை அன்னை மீனாட்சிக்கு அவர் அளித்ததாகவும் செப்பேட்டில் உள்ளது.

வேங்கடபதி ராயருக்கு தாத்தாச்சாரியார் என்பவர் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகச் செப்பேட்டில் ஒரு குறிப்பு உள்ளது. இவர் விஜயநகர அரசபரம்பரைக்குக் குருவானதைப் பற்றி ஒரு சுவையான சம்பவம் உள்ளது. ஶ்ரீராமானுஜரின் தாய்மாமனும் பெரிய திருமலை நம்பி என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரைச் சரித்திரத்தால் புகழப்படுபவருமான ஶ்ரீசைல பூர்ணரின் வம்சத்தில் வந்தவர் இந்தத் தாத்தாச்சாரியார். திருமலை நம்பியின் வம்சத்தில் நரசிம்மாச்சாரியார் ரங்காச்சாரியார் என்று இரு சகோதரர்கள் இருந்தனர். இருவரும் வேலை தேடி விஜயநகரம் சென்றனர். அப்போது அங்கே விருபாக்ஷர் என்ற அரசர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். ஒரு சமயம் அவரை அவரது உறவினர்கள் கொல்ல முற்பட்டபோது அவர்கள் அனைவரையும் அவர் சாதுர்யமாகக் கொன்று தீர்த்தார். அப்படிக் கொல்லப்பட்ட அனைவரும் பிசாசுகளாக ஒரு அரண்மனையில் உலவிக்கொண்டிருந்தனர். அருகில் ஓர் அரண்மனையில் தங்கிக்கொண்டு அரசரான விரூபாக்ஷருக்குத் தொடர்ந்து தொல்லைகளும் கொடுத்து வந்தனர்.

அங்கே போய்ச்சேர்ந்தனர் இந்த இரண்டு சகோதரர்களும். அதுதான் அரசரின் அரண்மனை என்று அவர்கள் (தவறாக) நினைத்ததைப் போலவே, அங்கே அந்தப் பிசாசுகள் அரசவையை நடத்திக்கொண்டிருந்தன. அவர்களின் அரசராக இருந்த ஒருவர், இந்த இரு சகோதரர்களையும் ராமாயணத்தைத் தினப்படி பாராயணம் செய்யுமாறு கட்டளையிட்டார். ஒரு நாளுக்கு ஒரு தினாரா வீதம் கூலி தருவதாகவும் பட்டாபிஷேகம் படிக்கும் நாளில் அதிகப்படி கூலி தருவதாகவும் சொன்னார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தச் சகோதரர்கள் தினமும் ராமாயணத்தைப் பாராயணம் செய்து வந்தனர். பட்டாபிஷேகத்தை வாசித்து முடித்தவுடன் அவர்களுக்குச் சரியான சன்மானமும் கிடைத்தது. தொடர்ந்து ராமாயணத்தைக் கேட்டுவந்த பிசாசுகளும் நற்கதியை அடைந்து பூவுலகை விட்டுச் சென்றன. இந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட விருபாக்ஷர் தனது தொல்லைகள் நீங்கியதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். இரு சகோதரர்களையும் தனது அரண்மனைக்கு அழைத்துக் கௌரவித்ததோடு மட்டுமல்லாமல் அங்கேயும் ராமாயணத்தைப் பாராயணம் செய்யச் சொன்னார். மேலும் அவர்களின் மூத்தவரான நரசிம்மாச்சாரியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்தான் இந்தத் தாத்தாச்சாரியார்.

இப்படிப் பட்ட வரலாற்றுப் பின்புலமுடைய தாத்தாச்சாரியாரால் பட்டாபிஷேகம் செய்யபெற்ற வேங்கடர், மதுரை வீரப்பநாயக்கர் கேட்டுக்கொண்டபடி தானம் அளித்தார் என்று கூறும் இந்தச் செப்பேடு அதன்பின் தானம் பெற்ற அந்தணர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. சுமார் 120 அந்தணர்களின் பெயர்களும் கோத்திரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தை வேங்கடராயரின் ஒப்புதலோடு வீரப்ப நாயக்கர் அளித்தது, விஜயநகர அரசுக்கு அடங்கியே தன் ஆட்சியை அவர் நடத்தியதைக் காட்டுகிறது.

திருப்பணிகள்

வீரப்ப நாயக்கர் பல்வேறு கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டார் என்பதைப் பல கல்வெட்டுகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரான்மலையில் உள்ள 1588ம் ஆண்டுக் கல்வெட்டு அவர் கோவிலுக்குச் செய்த தானத்தைக் குறிப்பிடுகிறது. போலவே ஈரோட்டில் உள்ள ஒரு கல்வெட்டும் கோவில் திருப்பணி ஒன்றைக் கூறுகிறது. திருநெல்வேலியில் காணப்படும் அவரது சாசனம் ஒன்று பெருமாள் கோவிலுக்கு அவர் கிராமங்களைத் தானமாக வழங்கினார் என்று தெரிவிக்கிறது. இதைத் தவிர சிதம்பரம் கோவிலின் மதில்களைச் செப்பனிட்டு உயரமாகக் கட்டியிருக்கிறார் வீரப்ப நாயக்கர். பல அக்ரஹாரங்களை நிவந்தமாக அளித்திருக்கிறார். மதுரைக் கோவிலில் அவர் செய்த திருப்பணிகளைப் பட்டியலிடும் திருப்பணி மாலை,

“கூடலம் பதிஇறைவர் முன்வெள்ளி விடையமுது
குலவியிட ஒருகல்லினால்
குறடுகோ புரவாயி லில்கதவு தென்வாயில்
கொள்சுருட் படிபரமனார்
ஆடுமா மண்டபத் தளவிசை திருப்பள்ளி
அறையில்உயர் படிகள்உமையாள்
ஆலயத் தளவிசை திருக்கதவு பல்லக்கொ(டு)
ஆனபொற் பட்டம்அழகார்
ஓடைசூழ் வீரப்பன் நல்தோப்பும் அத்தோப்பில்
ஓங்கும்உயர் மணிமண்டபம்
ஓதும்இவை போல்இனிய பணிவிடைகள் சொக்கருக்(கு)
ஒருமையுட னேஉதவினான்
மேடையும் ஆடரங்(கு) எங்கும்மட வார்கள்பயில்
வீதிசூழ் தானைஅதிபன்
வேதியர்கள் காவலர்கள் நாவலர்கள் வாழவரு
வீரையன் வீரப்பனே”

என்கிறது. அதாவது சுவாமி கோவிலின் நுழைவு வாயிற்கதவை அமைத்தல், மூலஸ்தானத்தில் கற்குறடை அமைத்தல், தென்புற வாயில் படிக்கட்டு, வெள்ளியம்பல நடராசர் கோவில் தளவரிசை, திருப்பள்ளியறைப் படிகள், சொக்கநாதர் மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நாயக்கர் கட்டினார். இவர் செய்த மற்ற திருப்பணிகளைப் பற்றித் தளவாய்புர அக்ரஹாரச் செப்பேடுகளில் பார்த்தோம்.

ஏசு சபையினரின் வருகை

வீரப்ப நாயக்கரின் காலத்தில்தான், அதாவது 1592ம் ஆண்டு, ஏசு சபையினர் தங்களது மதத்தைப் பரப்புவதற்காக மதுரை வந்தனர். தங்களின் வழிபாட்டுத் தலமான சர்ச் ஒன்றைக் கட்டிக்கொள்ளவும் வீரப்பரிடம் அனுமதி கோரினர். இவற்றைப் பற்றி அதிகம் விஷயம் தெரியாத வீரப்ப நாயக்கர் அதற்கு அனுமதி கொடுத்தார். பெர்னாண்டஸ் என்ற பாதிரியாரின் தலைமையில் ஏசு சபையினர் தங்களது மதப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தைக் கட்டிய பெர்னாண்டஸ் ஒரு கல்விக்கூடத்தையும் ஏற்படுத்தினார். முதலில் மேட்டுக்குடியினரை மதம் மாற்றினால் மற்றவர்களை மாற்றுவது எளிது என்று நினைத்த அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது எண்ணம் பலிக்கவில்லை. சுமார் பதினான்கு ஆண்டுகள் கடுமையான மதப்பிரச்சாரம் செய்த போதிலும் ஒருவர் கூட மதம் மாற முன்வரவில்லை. இதற்கான காரணம், மக்கள் அவர்களை மாட்டுக்கறி உண்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள் என்று நினைத்ததால்தான் என்று அவர்களில் ஒருவரே குறிப்பிட்டிருக்கிறார். ஆல்பர்ட் லஸாரியோ என்பவர் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் “மக்களின் இந்த எண்ணத்தை மாற்றுவது மிகவும் கடினம், போர்ச்சுக்கீசியரின் வீரமோ அவர்கள் அடைந்த வெற்றிகளோ மக்களின் மனத்தை மாற்றவில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் தங்கள் மதத்தை விட்டு அவர்கள் மாற மறுக்கிறார்கள்” என்று அங்கலாய்த்திருக்கிறார். இந்த நிலைமையை மாற்ற பெர்னாண்டஸுக்கு தகுந்த உபாயம் தெரியவில்லை. இப்படியாக மதுரை மக்களை மதம் மாற்றச் செய்த முதல் முயற்சி தோல்வியடைந்தது.

வீரப்ப நாயக்கரின் ஆட்சித்திறன்

மதுரை நாயக்கர்களின் வம்சத்தில் மிக நீண்ட காலத்திற்கு, அதாவது சுமார் 22 வருடம், அமைதியான ஆட்சியைத் தந்த பெருமை வீரப்பரையே சேரும். இத்தனைக்கும் ஈரோட்டிலிருந்து தெற்கே குமரி வரை அவரது ஆட்சி பரவியிருந்தது. வாணாதிராயர்களோடு ஏற்பட்ட போரைத் தவிர வேறு எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்திருக்கிறார். இப்படி அருமையான ஆட்சியைக் கொடுத்த வீரப்பர் 1595ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பூவுலகை விட்டு மறைந்தார். அவருக்கு கிருஷ்ணப்பார், விசுவப்பர், கஸ்தூரி ரங்கப்பர் என்று மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் அடுத்து ஆட்சிக்கு வந்தது யார்?

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *