ஆட்சிக்கு மூன்று வாரிசுகள் இருந்ததால் வாரிசுரிமைச் சிக்கல்கள் வருமல்லவா. அப்படித்தான் வீரப்ப நாயக்கருக்கு அடுத்து பதவிக்கு யார் வருவது என்ற பூசலும் இருந்தது. ஆனால், தொடர்ந்து நான்காம் தலைமுறையாக நாயக்கர் வம்சத்திற்கு உறுதுணையாக இருந்த அரியநாதர் இந்தச் சிக்கல்கள் முற்றாமல் பார்த்துக்கொண்டார். முறைப்படி வீரப்ப நாயக்கரின் மூத்த மகனான கிருஷ்ணப்பருக்கு அரசராக முடிசூட்டி முந்தைய அரசர்களுக்குத் துணையாக இருந்தது போல அவருக்கும் ஆட்சியில் உதவியாக இருந்து வரலானார்.
அடுத்த இரு மகன்களில் விசுவப்பர் இளவரசராக நியமிக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கவனித்து வந்தார். நெல்சன் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இருவரும் இணைந்தே ஆட்சியைக் கவனித்து வந்ததாக (மீண்டும்) குறிப்பிட்டிருக்கின்றனர். எப்படி வீரப்ப நாயக்கரின் ஆட்சியைப் பற்றித் தவறாகக் குறிப்பிட்டிருந்தார்களோ அதைப் போலவே இதுவும் உண்மையல்ல என்பதை பொயு 1596ம் ஆண்டிலிருந்து 1600 வரை இரண்டாம் கிருஷ்ணப்பரின் ஆட்சிப் பகுதி முழுவதும் கிடைக்கும் பல சாசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் விசுவப்பரின் கல்வெட்டுகள் ஒன்றும் கிடைக்கவில்லை. போலவே மூன்றாவது மகனான கஸ்தூரி ரங்கப்பர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றிய விவரங்களும் இக்காலகட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.
வீர கிருஷ்ணா என்ற இயற்பெயருடைய கிருஷ்ணப்பர் 1595ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். அவரது ஆட்சி அமைதியாகவே நடைபெற்றது. அவரது ஆட்சியின் பொயு 1596ம் ஆண்டுச் சாசனம் ஒன்று ‘வல்லப நரேந்திரனின் சிம்மாசனத்தில் உறுதியாக அமர்ந்து’ அவர் ஆட்சி செய்ததாகக் குறிப்பிடுகிறது. ‘பாண்டிய பார்த்திவ கிருஷ்ண நிருபதி’ என்று மற்றொரு சாசனம் அவரைப் புகழ்கிறது. இவற்றிலிருந்து தென்காசிப் பாண்டியர்களுக்கும் இரண்டாம் கிருஷ்ணப்பருக்கும் இடையே நல்லுறவு இருந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
விஜயநகர அரசைப் பொருத்த மட்டில், முதலாம் வேங்கடரின் கட்டுப்பாட்டிலேயே மதுரை நாயக்க அரசு தொடர்ந்து இருந்தது. இரண்டாம் கிருஷ்ணப்பர் தன் முன்னோர்களின் வழியில் வேங்கடருக்கு அடங்கியே ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியின் போது 1597ம் ஆண்டு அளிக்கப்பட்ட மதுரைச் செப்பேடுகளில் கிருஷ்ணப்ப நாயக்கரின் வேண்டுகோளை ஏற்று மருதங்குடி, காருபுரம் ஆகிய இரு கிராமங்களை பல வைஷ்ணவ பிராமணர்களுக்கு முதலாம் வேங்கடர் தானமாக அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஸ்வநாதர்-கிருஷ்ணர்-வீரபூபதி-கிருஷ்ணர் என்று நாயக்க வம்சாவளி அதில் கூறப்பட்டுள்ளது. பத்மநேரி (நாங்குநேரி) செப்பேடுகளில் திருவடி ராஜ்யத்தைச் சேர்ந்த கிராமம் வேங்கடபதிராயரால் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட விவரம் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் அந்த நிலக் கொடை வேங்கடபதிராயரை தன்னுடைய தலைவராகவும் முதன்மைக் கொடையாளராகவும் அங்கீகரித்த கிருஷ்ணப்ப நாயக்கரால் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செப்பேடுகள் விஸ்வநாத நாயக்கர் திருவடி தேசத்தையும் வாணாதிராயர்களையும் வென்ற விவரங்களைப் பதிவு செய்கிறது.
போலவே கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த வெல்லங்குடிச் செப்பேடுகள், வீர வேங்கடபதிராயர் வீரபூப சமுத்திரம் என்ற கிராமத்தை வீர கிருஷ்ண நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க தானமாக அளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது. அந்தக் கிராமம் திருவடி தேசத்தைச் சேர்ந்த முள்ளி நாடு என்ற இடத்தில் அமைந்திருந்தது என்றும் விஸ்வநாத நாயக்கர் திருவடி தேசத்தை வென்று அந்த இடங்களை எல்லாம் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார் என்றும் கூறுகிறது. வேங்கட ராயரின் ஆட்சிக் காலத்தில் அதிவீரராம பாண்டியர் மூன்று தனி நபர்களுக்கு தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் நிலங்களைச் சர்வ மான்யமாக வழங்கிய செய்தியை ஒட்டப்பிடாரத்தில் கிடைத்த சாசனம் ஒன்று தெரிவிக்கிறது.
மேற்கண்டவற்றால், திருவடி தேசம் வரையிலான பகுதி இரண்டாம் கிருஷ்ணப்பரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பதையும் அவரும் தென்காசிப் பாண்டியர்களும் விஜயநகர அரசர்களின் கீழ் அடங்கியே ஆட்சி செய்து வந்தார்கள் என்பதும் தெளிவாகிறது.
இருப்பினும் கிருஷ்ணப்பரின் ஆட்சியின் பிற்பகுதியில் பல சோகங்கள் அவரைச் சூழ்ந்தன. தனக்குச் சந்ததி இல்லாத கவலை அவரை வாட்டியது. இது ஒருபுறமிருக்க, 1600ம் ஆண்டு அவரது தம்பியும் ஆட்சியில் அவருக்குத் தோளோடு தோள் கொடுத்தவருமான விசுவப்பர் இறந்து பட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் நாயக்க வம்சத்திற்குப் பெரும் தொண்டு செய்து தன் வாழ்நாளைக் கழித்த அரியநாதரும் மறைந்தார். மதுரை நாயக்க வம்சத்தை அதன் தொடக்க நாளிலிருந்து தூண் போலக் காத்து வந்த அரியநாதர் மறைந்தது கிருஷ்ணப்பரை சோகத்தில் ஆழ்த்தியது. அரியநாதரின் இறப்பைக் குறிப்பிடும் ம்ருத்யுஞ்சயச் சுவடிகள் “மதுரை நாயக்கர் ஆட்சியில் பிரதானியாகவும் தளவாயாகவும் இருந்த அரியநாதர் சார்வரி வருடம் சித்திரை மாதம் 7ம் நாள் மறைந்தார்” என்று கூறுகிறது.
இதை வைத்து அரியநாயதர் வீரப்ப நாயக்கரின் ஆட்சியின் போதே மறைந்ததாகச் சொல்வோர் உண்டு. ஆனாலும் பல ஆய்வாளர்களின் குறிப்புகளின் படி 1600ம் ஆண்டில் 80 வயதைக் கடந்த நிலையில் அரியநாதர் மறைந்ததாகவே எடுத்துக்கொள்ளலாம். இப்படி அடுத்தடுத்து தனக்குத் துணையாக இருந்தவர்கள் மறைந்ததாலோ என்னவோ, இரண்டாம் கிருஷ்ணப்பரும் அடுத்த ஓராண்டிலேயே அதாவது 1601ம் ஆண்டில் இப்பூவுலகை விட்டு மறைந்தார். ஐந்து வருடங்களும் ஐந்தே மாதங்களும் கொண்ட குறுகிய கால ஆட்சியில் பிரச்சனை எதுவுமில்லாமல் மதுரை நாயக்கரின் ஆட்சிப் பரப்பும் மாறாமல் தனது அரசை நிலைநிறுத்திவிட்டு கிருஷ்ணப்பர் சென்றார்.
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்
அரியநாதரைப் போல ஒரு ராஜதந்திரி இல்லாத குறையை கிருஷ்ணப்ப நாயக்கர் மறைந்தவுடன் மதுரை நாயக்கர் வம்சம் அறிந்துகொண்டது. இரண்டாம் கிருஷ்ணப்பருக்குச் சந்ததி இல்லாத காரணத்தாலும் அவருக்கு அடுத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டிருந்த விசுவப்பர் அவருக்கு முன்பே இறந்துபட்டதாலும் விசுவப்பரின் மகனான முத்து கிருஷ்ணப்பருக்கு முடிசூட்ட அரசவைப் பிரமுகர்கள் முடிவெடுத்தனர். ஆனால் இரண்டாம் கிருஷ்ணப்பரின் இன்னொரு தம்பியான கஸ்தூரி ரங்கப்பர் மதுரை ஆட்சியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றிக் கொண்டார். இதை அரசவைப் பிரமுகர்களும் மக்களும் விரும்பவில்லை. அவர் பதவியேற்ற ஒரு வாரத்தில் ‘சந்தியா மண்டபத்தில்’ வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நாட்டில் ஆங்காங்கே தூக்கிய கலவரங்கள் காரணம் என்று சொல்லப்பட்டாலும் இந்தக் கொலையைச் செய்தவர்கள் யார் என்பது இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.
கஸ்தூரி ரங்கப்பர் கொல்லப்பட்டதை அடுத்து முத்துக் கிருஷ்ணப்பர் அரியணையில் அமர்ந்தார். இவரை இரண்டாம் கிருஷ்ணப்பரின் மகன் என்று சில ஆய்வாளர்கள் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இரண்டாம் வேங்கடரின் குனியூர்ச் செப்பேடுகள், மதுரைத் தலவரலாறு ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நாயக்க வம்சாவளி விவரங்கள் முத்துக் கிருஷ்ணப்பரை விசுவப்பரின் மகன் என்று உறுதியாகக் கூறுகின்றன.
வீரம் மட்டுமல்ல சிறந்த நிர்வாகத் திறனும் மிக்கவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர். ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் கடற்கரைப் பகுதிகளில் நிலவிய குழப்பங்களைத் தீர்ப்பதில் அவரது கவனம் சென்றது.
நாயக்கர் ஆட்சி மதுரையில் உருவானது முதல் வங்காள விரிகுடாக் கடற்கரை மீது அவர்கள் கவனம் அதிகமாகச் செல்லவில்லை என்ற கருத்தை சில வரலாற்றாய்வாளர்கள் முன் வைக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. வணிகம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதுமில்லாமல் அங்கு வாழ்ந்த மீனவர்களை மதம் மாற்றி தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டனர். அது மட்டுமல்லாமல், அங்கே வரி வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவற்றையும் தன்னிச்சையாக அவர்கள் கையில் எடுத்துக்கொண்டனர். விஸ்வநாதர் ஆட்சிக்காலத்தில் விட்டலராயர் மூன்று முறை படையெடுத்து அவர்களை ஒடுக்கியதைப் பார்த்தோம். ஆனால் அதன்பின்னும் தங்களது அதிகாரத்தை அவர்கள் கடற்கரைப் பகுதிகளில் செலுத்திவந்தனர். பாளையங்கள் உருவாகப்பட்டு அப்பகுதிகள் பெரும்பாலும் வாணாதிராயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் நாயக்கர்களால் கடற்கரைப் பகுதிகளை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலவில்லை. அதன் காரணமாக அங்கே இருந்த ராமேஸ்வரம் போன்ற ஹிந்துக்களின் புனிதத் தலங்களுக்கு போர்ச்சுக்கீசியர்களால் அடிக்கடி பிரச்சனைகள் உருவாகி வந்தன. இந்தச் சிக்கலைத் தீர்க்க முதலில் முன்வந்தவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்.
சேதுபதிகள்
சோழர்கள் காலத்திலிருந்து ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்கள் சேதுபதிகள். சேது என்ற ராமர் பாலத்தைக் காக்கும் காவலர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது. பின்னால் பிற்காலப் பாண்டியர்களின் சிற்றரசர்களாக அவர்கள் தொடர்ந்தனர். மதுரையில் நாயக்கர்களின் ஆட்சி ஏற்பட்டு பாளையங்கள் பிரிக்கப்பட்ட போது, மறவர் சீமையின் பெரும்பகுதி வாணாதிராயர்களிடம் சென்றது. மீதிப் பகுதிகளை கவனிக்க இரு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது அந்தப் பகுதிகளில் பெரும் குழப்பத்தையும் தடி எடுத்தவன் தண்டல் காரன் என்ற நிலையையும் ஏற்படுத்தியது. கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடற்பகுதிகளில் போர்ச்சுகீசியர்கள் கோட்டைகள் அமைத்துக்கொண்டு இலங்கை வரையான கடற்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர் காலத்திலிருந்து இருக்கும் செல்வாக்கு மிக்க முத்துக் குளிக்கும் உரிமையைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு பெரும் பணம் சம்பாதித்து வந்தனர்.
இக்காலகட்டத்தில் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் ராஜகுரு ராமேஸ்வரத்திற்குச் சென்றார். வழியெங்கும் நடைபெறும் கொள்ளைகளையும் ஆட்சியே இல்லாத நிலைமையையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது அவருக்குத் துணையாகச் சென்றவர் சடைக்கன் சேதுபதி என்ற மறவர் சீமையின் காவலராவார். இந்த நிகழ்வைப் பற்றி ஓலைச்சுவடிகள் கூறியிருப்பதைப் பார்ப்போம் “தன்னரசு நாடாய், ஊருக்குஊர் கோட்டை உண்டு பண்ணி அரண்மனைக்கு வார வரிசை கொடாமல், எங்கே பார்த்தாலும், காடுவளத்துக்கொண்டு சீமை கொள்ளையிடுகிறதும், சேதுமார்க்கத்தில் ராமேசுவரத்துக்குப் போகிற பரிசுகளை சில்லரை பண்ணி, வெட்டிக்குத்தி, பறித்து போறதுமாயிருந்தது. கர்த்தாக்களாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கருடைய குருக்கள் ராமேசுவரத்துக்கு தலயாத்திரை சென்றார். அப்போது போகலூரில் இருந்த உடையார் சேதுபதியானவர், குருக்களுக்கு காவலாக இராமேசுவரம் வரைக்கும் போய் வழிப்பாதையில், சல்லியமில்லாமல், பத்திரமாய் பார்த்து குருக்கள் இராமேசுவரத்துக்குப் போய் மதுரை வருகிறவரைக்கும் கூடவே வந்தார் ……”.
ஊர் திரும்பிய ராஜகுரு, விவரங்களை மன்னர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரிடம் தெரிவித்தார். நிலைமையைச் சீர் செய்ய விரும்பிய முத்துக் கிருஷ்ணப்பர் சடைக்கன் சேதுபதியைப் பாராட்டி மறவர் சீமைக்குத் தலைவராக அவரை நியமனம் செய்தார். அந்த நாட்டின் எல்லைகளை வகுத்து ஆவணப்படுத்தினார். உள்நாடு மட்டுமல்லாமல், கடலில் உள்ள தீவுகள் (இப்போது சர்ச்சைக்குள்ளாயிருக்கும் கச்சத்தீவு உட்பட) பலவற்றையும் சேதுபதிகளுக்குச் சாசனம் செய்து கொடுத்தார்.
சடைக்கன் சேதுபதி முதலில் ராமேஸ்வரத்திலிருந்தும் அதன்பின் போகலூர் என்ற இடத்திலிருந்தும் ஆட்சி செய்தார் என்று தெரிகிறது. “காளையார் கோவில், பட்டமங்கலம் ஆகிய இடங்களில் பயங்கரமான குழப்பங்களை உருவாக்கிய குறும்பர்களை அவர் அடக்கினார்” என்று சாசனங்கள் கூறுகின்றன. கடல் பகுதியில் பறங்கியர்களது ஆதிக்கத்தை ஒடுக்கி அமைதியை சடைக்கன் சேதுபதி நிலை நாட்டினார். முத்துக் குளிக்கும் உரிமையை மீண்டும் மீட்டெடுத்தார். ராமேஸ்வரத்திற்கு யாத்திரீகர்கள் தங்கு தடையின்றிச் சென்றுவர வழி செய்தார். அவரது ஆட்சிக்காலத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்குப் பல நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. அந்த நிலக்கொடைகளை மூன்று தாமிர சாசனங்கள் பதிவு செய்திருக்கின்றன. முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரால் ‘தளவாய்’ பட்டம் அளிக்கப்பட்டதால் இவரைத் தளவாய் என்ற பெயரில் அந்தச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
ராபர்ட் டி நொபிலி
பெர்னாண்டஸ் என்பவரால் மதுரையில் வீரப்ப நாயக்கர் காலத்தில் ஏசு சபை தொடங்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். தொடர்ந்து மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவந்த பெர்னாண்டஸால் ஒருவரைக்கூட தன் மதத்திற்கு மாற்ற முடியவில்லை என்றும் அதற்கான காரணங்களையும் கண்டோம். ஒரு கட்டத்தில் பெர்னாண்டஸ் நாயக்க மன்னரிடம் இது பற்றி முறையிட்ட போது, மதத்தைப் போதிக்கத்தான் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர மதம் மாற்றும் உரிமை அவருக்கு இல்லை என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் ராபர்ட் டி நொபிலி என்பவர் மதுரையில் ஏற்பட்ட தேக்க நிலையைக் கண்டு, ‘தான் ஒரு இந்தியராகவே செயல்பட்டு, அவர்களை மதம் மாற்றுவேன்’ என்ற சபதத்துடன் யூரோப்பிலிருந்து புறப்பட்டார். இத்தாலியைச் சேர்ந்த அவர் 1606ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை வந்தடைந்தார். பெர்னாண்டஸுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணங்களை ஆராய்ந்த அவர், தம்மைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் வேலையைக் கைவிட்டு ‘ரோமாபுரியைச் சேர்ந்த பிராமணன்’ என்று தன்னைக் கூறிக்கொண்டார். மதம் மாற்ற அவர் மேற்கொண்ட திட்டங்களுக்கு மூன்று கூறுகள் இருந்தன. அதாவது முதலாவது பிராமணர்களைப் போன்ற வாழ்வியல் முறையை மேற்கொள்வது, இரண்டாவது ஹிந்து மதத்திலிருந்து சடங்குகளை எடுத்துக் கொள்வது, மூன்றாவது சமஸ்கிருதம், தமிழ், தெலுகு போன்ற உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டு இங்கே உள்ள இலக்கியங்களைப் படித்து அந்த வழியிலேயே மக்களிடம் உரையாடுவது ஆகிய மூன்று கூறுகளின் அடைப்படையில் தன்னுடைய திட்டங்களை அவர் செயல் படுத்தத் தொடங்கினார்.
அதன் படி பிராமணர்களைப் போல பூணூலை அணிந்துகொள்ளத் தொடங்கினார் நொபிலி. அவர்களது சடங்குகளையும் செய்ய ஆரம்பித்தார். அவருக்குத் துணையாக கிடைத்த உள்ளூர் பிராமணர் ஒருவரை மதமாற்றம் செய்து ‘பொனிபேஷியோ சாஸ்திரி’ என்று அவருக்குப் பெயர் வைத்தார். கோவில், அருள், வேதம், பூசை போன்ற பெயர்களை தன்னுடைய மதத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினார். இந்தத் திட்டத்தை அவர் கையாளத் தொடங்கியபோது ஆரம்பத்தில் அவருக்கு வெற்றிகள் கிடைக்கத் தொடங்கின. அவரது ‘புகழ்’ பரவத் தொடங்கியது. 1609ல் நொபிலி எழுதிய கடிதமொன்றில் “பிராமணர்கள் என்ற புயலைக் கடந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முத்துக்கிருஷ்ணப்பரின் ஆளுமை
போர்கள் எதையும் செய்யாமல் தன்னுடைய ஆட்சிப் பகுதிகளை நிலைநிறுத்திக் கொண்ட முத்துக்கிருஷ்ணப்பர் மிகச் சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமேயில்லை. சேதுபதிகளின் சீமையை அவர் உருவாக்கியது அதற்கொரு சிறந்த உதாரணம். தொலைநோக்குப் பார்வையோடு அவர் செயல்படுத்திய இந்த நடைமுறை பிற்காலத்தில் நாயக்க மன்னர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போதெல்லாம் கைகொடுத்தது. தொடர்ந்து சிக்கல்களில் ஆழ்ந்திருந்த விஜய நகர அரசர்களுக்கு அவர் தொல்லை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் அந்த அரசர்களுடனான உறவு அவர் காலத்தில் இருந்து தொய்வு அடையத் தொடங்கியது. இருப்பினும் தன்னுடைய நாணயங்களில் ஒரு புறம் ‘திருவேங்கட’ என்று விஜயநகர அரசரின் பெயரையும் மறுபுறம் ‘முத்துக்கிருஷ்ண’ என்று தன் பெயரையும் பொறித்தே அவர் அச்சடித்துவந்தார்.
ஏசு சபையினரின் நடவடிக்கைகளை அதிகம் கட்டுப்படுத்தாமல் அதே சமயம் அவர்களுக்கு அதிகாரங்களை அள்ளிக்கொடுக்காமல் சரிசமமாகவே அவர் நடத்தி வந்தார் என்பது அவரது சமயப் பொறையைக் காட்டுகிறது. கடற்கரையோரத்தில் அவரது ஆதிக்கம் 1609ம் ஆண்டில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது என்பதை கன்னியாகுமரி அம்மனுக்கு அவர் அளித்த கொடை பற்றிய கல்வெட்டும் அந்தப் பகுதியில் ஆட்சியாளர்கள் அவருக்குக் கப்பம் செலுத்தினார்கள் என்று கால்ட்வெல் ஒரு கடிதத்தை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டதும் தெளிவுபடுத்திகிறது. மற்றபடி கோவில் திருப்பணிகள், நீர்ப்பாசனத்திற்காகக் குளங்கள் வெட்டுதல் போன்ற நாட்டு நலப்பணிகளில் தன் காலத்தை முத்துக் கிருஷ்ணப்பர் செலவிட்டார். திருப்பரங்குன்றத்திற்கு அருகில் கிருஷ்ணாபுரம் என்ற ஊரை இவர் ஏற்படுத்தியதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
(தொடரும்)