Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்

விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை மதித்துக் கப்பம் கட்டி வந்தனர் என்று பார்த்தோம். எப்படி தங்களுக்குக் கட்டுப்பட்ட பாளையக்காரர்களிடமிருந்து வரவேண்டிய தொகையைக் கறாராக வசூலித்து வந்தார்களோ அதேபோல தாங்கள் கட்டவேண்டிய தொகையை விஜயநகர அரசுக்குத் தவறாமல் செலுத்தி வந்தனர் மதுரை நாயக்கர்கள். கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் போன்றவர்களின் காலத்தில் விஜயநகரம் பேரரசாக இருந்தபோதும் சரி, பின்னால் தலைக்கோட்டைப் போரில் தோற்று பெனுகொண்டா, சந்திரகிரி என்று தலைநகரங்களை மாற்றி அவர்களது வலிமை குறைந்தபோதும் சரி, மதுரை நாயக்க மன்னர்களின் விஸ்வாசம் அசையாமல் தொடர்ந்தது. ஆனால் எந்த ஒரு விஷயமும் ஒரு சமயத்தில் மாற்றம் அடைந்தே தீர வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா. அது போல மதுரை நாயக்கர்களின் விஸ்வாசத்திற்கும் ஒரு முடிவு முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் வந்தது.

முத்து கிருஷ்ணப்ப நாயக்கருக்கு முத்து வீரப்பர், திருமலை, குமரப்பா என்று மூன்று மகன்கள் இருந்தனர். இதில் குமரப்பா என்ற மகன் இருந்தாரா இல்லையா என்பது பற்றி ஆய்வாளர்களிடையே சர்ச்சைகள் நிலவுகின்றன. அதைப் பற்றிய விவரங்களைப் பின்னால் விரிவாகப் பார்ப்போம். இப்போது முத்துவீரப்ப நாயக்கரின் ஆட்சியைக் கவனிப்போம்.

பொயு 1609ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார் முத்து வீரப்பர். மிகவும் துடிப்பு மிக்கவராகவும் துணிச்சலாக முடிவுகளை எடுக்கக் கூடியவராகவும் இருந்தவர் முத்து வீரப்ப நாயக்கர். அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே விஜயநகர அரசராக இருந்த வேங்கடபதி ராயர் தன்னுடைய தலைநகரை சந்திரகிரிக்கும் அதன்பின் தமிழகத்தின் வேலூருக்கும் மாற்றியிருந்தார். இது ஒருபுறமிருக்க, மைசூரின் ஆட்சி அதிகாரத்தையும் விஜயநகர அரசர்கள் இழந்துவிட்டிருந்தனர். அங்கே உடையார்கள் தன்னாட்சி பெற்று அதிகாரம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். எங்கோ தொலைவில் தலைமை அரசு இருப்பது வேறு, மிக அருகில் அதன் தலைநகர் அமைந்து ஆட்சி செய்வது வேறு என்பதை முத்து வீரப்பர் அறிந்திருந்தார். விரைவில் விஜயநகர அரசாலும் மைசூர் அரசாலும் தொல்லைகள் வரக்கூடும் என்று அவர் கணித்தார். அதனால், மதுரை நாயக்க அரசின் தலைநகரை திருச்சிக்கு மாற்றினார். அங்கே அவரது முன்னோர்கள் கட்டியிருந்த கோட்டையை மேலும் வலுப்படுத்தினார்.

இவையெல்லாம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தாலும், விஜயநகர அரசிடம் ஆரம்பத்தில் அவர் அணுக்கமாகவே நடந்து கொண்டார். 1609ம் ஆண்டு வெளியிடப்பட்ட செப்பேடு ஒன்றில் முத்துவீரப்பரின் கோரிக்கையை ஏற்று வேங்கடபதிதேவராயர் நாகேனல்லூரு என்ற கிராமத்தைத் தானமாக அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து முத்து வீரப்பருக்கும் விஜயநகர அரசருக்கும் சுமுகமான உறவே இருந்ததாக ரங்காச்சாரி என்ற வரலாற்றாய்வாளர் கூறுகிறார். ஆனால் ஏசு சபைப் பாதிரியார் வைகோ எழுதிய குறிப்பில் “முத்து வீரப்பர் விஜய நகர அரசருக்குக் கட்டவேண்டிய கப்பத்தை ஒழுங்காகக் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தார். ஒரு முறை கூட தானாக முன்வந்து கப்பம் கட்டவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அவரது ஆட்சியின் போது விஜயநகர அரசில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக இருந்திருக்கக் கூடும். அந்தக் குழப்பங்கள் காரணமாக விஜயநகர அரசிலிருந்து விடுபட்டு தன்னாட்சி பெற முத்துவீரப்பர் முடிவெடுத்தார். அதற்கான தகுந்த சமயத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

விஜயநகர அரசில் ஏற்பட்ட மாற்றங்கள்

முத்துவீரப்பர் சரிவரக் கப்பம் கட்டாததற்கு விஜய நகர அரசுரிமையில் ஏற்பட்ட குழப்பங்களும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டோம் அல்லவா. அவை என்னென்ன என்று பார்ப்போம். தலைநகரை வேலூருக்கு மாற்றிய வேங்கடபதிராயர், அதன்பின் நீண்ட நாள் உயிரோடு இருக்கவில்லை. சீக்கிரமே அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அப்போது ஒரு கவலை அவரை வாட்டியது. வேங்கடபதிராயருக்குச் சந்ததி இல்லாத காரணத்தால், அவரின் இரண்டாவது மனைவியான பாயம்மா என்பவர் எங்கே அரசு தங்களை விட்டுப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வேலை செய்தார். அரண்மனையில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்ட அவர், தானும் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி அனைவரையும் நம்பவைத்தார். அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன், அது தன் குழந்தை என்று எல்லாரிடமும் சொல்லி அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரும் தொகையைக் கொடுத்துச் சரிக்கட்டிவிட்டார். ஆனால், தன் வம்சத்தின் பிறக்காத அந்தக் குழந்தையை அடுத்த வாரிசாக அறிவிப்பது தகாது என்ற எண்ணம் வேங்கடபதி ராயரை உறுத்தியது. அதனால், தன் அண்ணனான ராமனின் மகன் ஶ்ரீரங்கனை அழைத்து அவனே அடுத்து பட்டத்திற்கு உரியவன் என்று அறிவித்துவிட்டார் வேங்கடர். அதன்பின் சில நாட்களில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஆனால் பாயம்மாவிற்கு அரசை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை. தன் உறவினனும் கோலாரை ஆட்சி செய்துகொண்டிருந்தவனுமான கொப்பூரி ஜக்கராயனை உதவிக்கு அழைத்தார். அவன் ஒரு படையுடன் வந்து பாயம்மாவிற்குப் ‘பிறந்த’ குழந்தையே அடுத்த அரசன் என்று அறிவித்து ஶ்ரீரங்கரையும் அவரது குடும்பத்தையும் வேலூர் சிறையில் வைத்துவிட்டான். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட வேங்கடபதிராயரின் நெருங்கிய நண்பனும் பல போர்களில் விஜயநகர அரசுக்கு உதவியவனுமான யச்சம நாயக்கன், ஶ்ரீரங்கரைத் தப்புவிக்க ஒரு சலவைத் தொழிலாளியை நியமித்தான். கடும் முயற்சியெடுத்து ஶ்ரீரங்கரையும் அவர் குடும்பத்தையும் அந்தச் சலவைத் தொழிலாளி தப்புவிக்க முயலும்போது மீண்டும் அவர்கள் மாட்டிக்கொண்டனர். ஶ்ரீரங்கனின் மகனான ராமன் மட்டும் தப்பிச் சென்றான். இதைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த ஜக்கராயன், ஶ்ரீரங்கரையும் அவர் குடும்பத்தார் அனைவரையும் கொன்றுவிட்டான். இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட யச்சமன், தானே ஒரு படை திரட்டி வந்து வேலூர்க் கோட்டையிலிருந்து ஜக்கராயனைத் துரத்தினான். ராமனை அடுத்த அரசராக அறிவித்தான்.

தன் முயற்சியில் மனம் தளராத ஜக்கராயன், மீண்டும் தனக்கு அரசு வேண்டும் என்று தமிழகத்தின் மூன்று நாயக்கர்களிடம் உதவி கேட்டான். இதுபோன்ற ஒரு சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த முத்து வீரப்பர் அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார். விஜயநகரின் அதிகார பூர்வ வாரிசைத் தோற்கடித்துத் துரத்திவிட்டால் மதுரை தன்னாட்சி பெறும் என்று அவர் கணக்குப் போட்டார். செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்பரும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அப்போது தஞ்சாவூரை ஆட்சி செய்துகொண்டிருந்த ரகுநாத நாயக்கர் இதை ஏற்கவில்லை. விஜயநகரத்தின் வாரிசு அல்லாத ஒருவருக்குத் தான் துணை செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டு யச்சமனுக்குத் தான் தன் உதவி என்று அறிவித்துவிட்டார்.

மதுரைப் படைகளும் செஞ்சிப் படைகளும் ஜக்கராயனோடு கைகோர்க்க, யச்சமனும் தஞ்சை ரகுநாத நாயக்கரும் ஒன்று சேர்ந்தனர். இரு தரப்புப் படைகளும் பொயு 1616ம் ஆண்டு கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் என்ற இடத்தில் கடுமையாக மோதிக்கொண்டன. அளப்பரிய வீரத்தைக் காட்டிய ரகுநாத நாயக்கர் ஜக்கராயனின் படைகளைத் தோற்கடித்து அவனைப் போர்க்களத்தில் கொன்றார். தோற்றோடிய செஞ்சி நாயக்கரை புவனகிரியில் தன் படைகளோடு சந்தித்து அங்கும் அவரைத் தோற்கடித்துத் துரத்தினார். மதுரை முத்து வீரப்ப நாயக்கர் திருச்சிக் கோட்டைக்குப் பின்வாங்கினார். வெற்றியடைந்த விஜயநகரப் படைகள் வேலூருக்குச் சென்று அங்கே ராமனுக்கு முடிசூடின. தன்னாட்சி பெறும் முயற்சியில் தோல்வியடைந்த முத்து வீரப்பர் மீண்டும் விஜயநகர அரசுக்கு கப்பம் கட்ட வேண்டியவரானார்.

இந்த நிகழ்வைப் பற்றி ஏசு சபைக் கடிதம் ஒன்று தெரிவிக்கிறது. காவியங்களான சாஹித்யரத்னாகரமும் ரகுநாதாப்யுதயமும் இந்த நிகழ்வுகளைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கின்றன. லியோன் பெஸ்ஸி என்பவர் “மதுரை நாயக்கர் தன் அரசவையையும் படைகளையும் 1616ல் இந்தப் போரின் காரணமாக திருச்சிக்கு மாற்றினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே தலைநகர் மாற்றம் நடந்துவிட்டது என்பது தெளிவு.

தென்காசிப் பாண்டியர்கள்

ஒருபுறம் விஜயநகரோடு மோதல்கள் இருந்தாலும், தெற்கில் தென்காசிப் பாண்டியர்களோடு சுமூகமான உறவையே முத்து வீரப்பர் கொண்டிருந்தார். வரதுங்கராம பாண்டியரும் வரகுண ராம குலசேகர பாண்டியரும் முத்து வீரப்ப நாயக்கரோடு நட்புரிமை பாராட்டி வந்ததை, தோப்பூர்ப் போரில் பங்கு கொண்ட பாண்டியப் படைகள் நிரூபிக்கின்றன. ஆனால் முத்து வீரப்பர் காலத்தோடு தென்காசிப் பாண்டியர்களின் அரசு வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டது. சங்ககாலத்திலிருந்து தமிழகத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்துவந்த பாண்டியர்கள் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவர்கள். பாண்டிய அரசு அழிய நாயக்கர்கள்தான் காரணம் என்று பலர் சொல்லி வந்தாலும், பாண்டியர்களோடு தொடர்ந்து நட்போடு நாயக்க மன்னர்கள் இருந்தனர் என்பதைப் பல சாசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பாண்டிய குல ஸ்தாபனாச்சார்யா என்று அவர்களுக்கு உதவியதால் நாயக்க மன்னர்கள் பலர் விருதுப் பெயர்களையும் சூட்டிக்கொண்டனர். நாயக்க அரசு மதுரையில் உருவான பின்னரும் ஒரு நூற்றாண்டு பாண்டியர்களின் அரசு தெற்கில் நீடித்து இருந்தது ஒருவரோடு ஒருவர் கொண்டிருந்த நல்லிணக்கத்தைக் காட்டுகிறது.

மைசூர்ப் போர்

முத்து வீரப்பர் கணித்ததைப் போலவே மைசூர் அரசு விரைவில் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தது. தன்னை வலுப்படுத்திக் கொண்ட பிறகு மைசூரின் அரசரான உடையார், தன் எல்லைகளை விரிவுபடுத்த நினைத்தார். தோப்பூர்ப் போரில் மதுரை நாயக்க அரசு தோல்வியடைந்ததைக் கண்ட அவர் முகிலன் என்பவரின் தலைமையில் ஒரு படையை 1620ம் ஆண்டு திண்டுக்கல்லை நோக்கி அனுப்பிவைத்தார். விருப்பாட்சி, கன்னிவாடிப் பாளையக்காரர்கள் தங்கள் படைகளோடு சென்று மைசூர்ப் படைகளைத் தோற்கடித்து விரட்டினர். இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த முத்து வீரப்ப நாயக்கர், விருப்பாட்சி பாளையக்காரருக்கு ‘பாதைக் காவல்’ என்ற பட்டத்தையும் கன்னிவாடிப் பாளையக்காரருக்கு ‘சின்ன மைசூரான்’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார்.

ஏசு சபைக் குழப்பங்கள்

இதற்கிடையில் மதுரை ஏசு சபையில் சிக்கல்கள் எழுந்தன. ‘புதுமையான’ முறைகளைக் கையாண்டு மதமாற்ற முயற்சிகளில் வெற்றி கண்ட நொபிலிப் பாதிரியார், 1610ம் ஆண்டு மதுரையில் ஒரு தேவாலயத்தைக் கட்டினார். அவருக்கு உதவியாக வைகோ என்ற பாதிரியாரையும் சேர்த்துக்கொண்டார். மும்முரமாகச் செயல்பட ஆரம்பித்த இந்த மதமாற்ற முயற்சிகளை முத்துவீரப்ப நாயக்கர் கண்டித்தார். அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கத் தொடங்கினார். வைகோ எழுதிய கடிதம் ஒன்றில் ‘அரண்மனையிலிருந்து கடுமையான வார்த்தைகள் வந்தன” என்று குறிப்பிட்டிருக்கிறார். எருமைக்கட்டியின் பாளையக்காரர் மட்டுமே தங்களுக்கு ஆதரவு தந்ததாகவும் அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, இங்குள்ளவர்களைப் போலவே பூணூல் அணிந்து கொள்வது, மாமிசம் உண்ணாமல் இருப்பது, பொட்டு வைத்துக் கொள்வது, சந்தியா வந்தனம், முன்னோர்களுக்குத் திதி போன்ற சடங்குகளைச் செய்வது ஆகியவற்றை மேற்கொள்வதின் மூலம் நொபிலி தங்கள் மதக் கோட்பாடுகளை மீறிவிட்டார் என்று பெர்னாண்டஸ் ஏசு சபைத் தலைமையகத்தில் புகார் செய்தார். தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத போது, திடீரென்று வந்து மக்களை மதம் மாற்றும் முயற்சியில் வெற்றி பெற ஆரம்பித்த நொபிலியைக் கண்டு அவருக்கு எரிச்சல் வருவது நியாயம்தானே. ஆரம்பத்தில் நொபிலியின் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தது தலைமையகம். ஆனால் அங்கேயும் ஒரு மாற்றம் நடந்தவுடன், நொபிலியின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தது. பெர்னாண்டஸின் செல்வாக்குக் கூடியது. அவருடைய பணிகளை நிறுத்துமாறு 1613ம் ஆண்டு தலைமையகத்தால் நொபிலி கேட்டுக்கொள்ளப்பட்டார். அடுத்த பத்து வருடங்களுக்கு தலைமையகத்துடன் அவர் போராட வேண்டியிருந்தது. இதன் காரணமாக மதுரையில் மதமாற்றப் பணிகள் முற்றிலுமாக நின்றுபோயின. 1624ம் ஆண்டு வைகோ பாதிரியார் குறிப்பிட்டதைப் போல “மதுரையைப் போல மதமாற்றத்திற்குக் கடும் தடையை எங்கும் சந்தித்ததில்லை” என்பது உண்மையாயிற்று.

கோவில் திருப்பணிகள்

தன் முன்னோர்களைப் போலவே மதுரைக் கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்தார் முத்துவீரப்ப நாயக்கர். அவருக்கு உறுதுணையாக செவ்வந்தி சகோதரர்கள் பல திருப்பணிகளை மதுரையில் செய்திருக்கின்றனர். முத்துவீரப்ப நாயக்கர் செய்த திருப்பணிகளைச் சொல்லும் ‘திருப்பணி மாலை’

தண்டாள நகையெங்க ளங்கயற் கண்ணம்மை
தனது பா சுத்தில்வாழுந்
தக்கமது ராபுரிச் சொக்கநா யகர்திருச்
சந்நிதி விளங்கியிடவே
கொண்டல்படி மகமேரு வரைதனைக் குத்திக்
குடைந்துவெளி யாக்கிமற்றக்
குலகிரிக ளைத்தூண்க ளாகவே வெளியிற்
குறித்திடை நிறுத்திபதென
மண்டலந் தனிலுள்ள மண்டபக் குலதீப
மண்டபங் கட்கு நாயன்
மண்டப சிரோரத்ன மானவீ ரவசந்த
மண்டபங் கட்டுவித்தான்.
வெண்டாள மணிவிசுவ நாதகிருஷ் ணயவீரன்
மெச்சும்விசு வப்பனன்பான்
மேவுமுத் துக்ருஷ்ண மகிபால னருள்முத்து
வீரப்ப பூபாலனே.

அதாவது அங்கயற்கண்ணி அம்மை பாகத்தில் உறைய மதுரையில் வாழும் சொக்கநாதர் திருச்சன்னதி விளங்க, பல மண்டபங்களை முன்னால் கட்டி அதிலும் குறிப்பாக வீர வசந்த ராயர் மண்டபத்தை முத்துவீரப்ப நாயக்கர் கட்டினார் என்று குறிப்பிடுகிறது.

முத்துவீரப்பரின் பங்களிப்பு

மதுரை நாயக்கர் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய அரசராக முத்து வீரப்ப நாயக்கரைச் சொல்லலாம். அதுவரை விஜயநகர அரசுக்கு அடங்கியிருந்த முறையை மாற்ற வேண்டி தன்னாட்சி பெற விரும்பிப் போர்க்கொடி உயர்த்தியவர் முத்து வீரப்பர். அந்த முதல் முயற்சியில் அவர் வெற்றிபெறா விட்டாலும், அதற்கான அடித்தளமிட்டவர் அவர்தான் என்பதை மறுக்க முடியாது. முன்யோசனையோடு செயல்பட்டு தலைநகரை மாற்றிய விதத்திலும் மைசூர் அரசால் தங்களுக்கு ஆபத்து வரும் என்பதைக் கணித்த வகையிலும் அவர் ஒரு சிறந்த ராஜதந்திரியாவே செயல்பட்டார். மதத்தைப் பொறுத்த வரையில் மதமாற்றத்திற்கு எதிராக உறுதியான முடிவையும் எடுத்தவர் அவரே. மதுரை நாயக்க அரசின் தன்னாட்சிக் கனவுகளுக்கு அஸ்திவாரமிட்டவர் என்ற வகையில் முக்கியமான அரசராக அவரைக் குறிப்பிடலாம்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *