பரராச சேகரன் பரராச பூஷணன்
பரராச ராச திலகன்
பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள்
பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை
மதுரை நாயக்கர் வம்சத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமன்னராக விளங்கிய திருமலை நாயக்கரின் வரலாற்றை இனி காண்போம்.
ஆட்சிப் பொறுப்பு
மதுரை நாயக்கர் அரசை தன்னாட்சியாக்க முயன்ற முத்துவீரப்ப நாயக்கருக்கு சந்ததி இல்லாததால் அவர் தனது தம்பியான திருமலை நாயக்கருக்கு முடிசூட்டினார். இந்த நிகழ்வு நடந்தது எப்போது என்பது பற்றி இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. மதுரைத் தலவரலாறு ‘_துந்துபி வருடம் மார்கழி மாதம் முத்துவீரப்ப நாயக்கர் தம்பி முத்துத் திருமலை நாயக்கரய்யனவர்கள் சந்நிதியிலே ஶ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் கடாக்ஷத்துக்கு மிகவும் பாத்திரமாகி’ பட்டம் சூட்டிக்கொண்டார் என்று கூறுகிறது. இது தோராயமாக 1623ம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் குறிக்கிறது. இதை ம்ருத்யஞ்சய ஓலைச்சுவடிகளும் ஆமோதிக்கின்றன. இந்தத் தேதியை வைத்து முத்து வீரப்ப நாயக்கர் அதற்கு முன்பு இறந்துபட்டார் என்றும் அதன்பின் திருமலை அரியணை ஏறினார் என்றும் பலர் கூறுகின்றனர்.
ஆனால் முத்து வீரப்ப நாயக்கரின் கல்வெட்டுகள் 1623ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னும் கிடைப்பது இது சரியான தகவல் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. உதாரணமாக மே மாதம் 1623ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு முத்துவீரப்பர் அளித்த கொடை ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. போலவே 1624ம் ஆண்டைச் சேர்ந்த முத்துவீரப்பரின் கல்வெட்டுகளும் உள்ளன. இக்காலகட்டத்தில் திருமலை நாயக்கரின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் ஆட்சிக்காலத்தின் முதல் சாசனம் 1634ம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் வேங்கடரின் குனியூர்ச் செப்பேடுகள் தான். வைகோ பாதிரியாரின் 1626ம் ஆண்டுக் கடிதம் ஒன்றும் முத்துவீரப்ப நாயக்கரையே அதிகாரம் மிக்கவராகக் குறிப்பிடுகிறது. முகமது ஷரீப் ஹனாபி என்ற வரலாற்றாசியர் எழுதிய குறிப்புகள் ஒன்றில் அவர் மதுரைக்குச் சென்றிருந்தபோது ‘அதன் ஆட்சியாளர் மறைந்தார்’ என்று கூறுகிறார். சத்தியநாதய்யர் இந்தக் குறிப்பை ஹனாபி 1628ம் ஆண்டில் எழுதியிருக்கலாம் என்று ஊகிக்கிறார். அதை வைத்து முத்து வீரப்ப நாயக்கர் மறைந்தது 1628ம் ஆண்டு என்று அவர் கருதுகிறார்.
இந்தக் குறிப்புகளை வைத்துச் சிலர் திருமலை அரியணை ஏறியது 1629ம் ஆண்டுக்குப் பிறகே என்று கூறுகின்றனர். ஆனால் அக்காலத்து ஆவணங்களான மதுரைத் தலவரலாறு, ம்ருத்யுஞ்சயச் சுவடிகள், பாண்டியர் வரலாற்று ஆவணங்கள் ஆகியவை ஒன்றுபோல துந்துபி ஆண்டையே திருமலை நாயக்கர் முடிசூடிய வருடமாகக் குறிப்பிடுகின்றன என்பதையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
மேற்குறிப்பிட்டவற்றை தொகுத்துப் பார்க்கும்போது, சந்ததி இல்லாத முத்து வீரப்பர், தனக்குப் பின் வாரிசுரிமைச் சண்டைகள் வரக்கூடாது என்று கருதி திருமலை நாயக்கருக்கு பொயு 1623ம் ஆண்டில் முடிசூடியிருக்கக்கூடும் என்று கருதவேண்டியிருக்கிறது. அதன்பின் முத்துவீரப்ப நாயக்கரின் பெயரால் திருமலை நாயக்கர் ஆட்சி செய்திருக்கக்கூடும். முத்துவீரப்பர் 1628ம் ஆண்டு மறைந்தவுடன், திருமலை நாயக்கர் முழு அதிகாரம் பெற்ற மன்னராக ஆட்சியில் அமர்ந்திருக்கக்கூடும். நெல்சன், ரங்காச்சாரி போன்ற ஆய்வாளர்களும் திருமலை நாயக்கர் 1623ம் ஆண்டு முடிசூடியதையே ஆமோதிக்கின்றனர்.
பொயு 1584ம் ஆண்டு, அதாவது பார்த்திப வருடம் தை மாதம் முழுநிலவு நாளான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் திருமலை நாயக்கர். திருமலை சௌரி நாயனு அய்யலுகாரு என்ற முழுப்பெயரைக் கொண்ட அவர் தனது முப்பத்து ஒன்பதாம் வயதில் ஆட்சிபீடம் ஏறினார். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் வரும் பிரபல வசனமான ‘நாயக்கரே நீங்க நல்லவரா கெட்டவரா’ என்ற கேள்வியை யாராவது அவரிடம் கேட்டிருந்தால், அந்தப் படத்தில் வரும் பாத்திரத்தைப் போலவே ‘தெரியலையேப்பா’ என்று அவர் சொல்லியிருக்கக்கூடும். அந்த அளவு மிகவும் கலவையான ஆளுமையைக் கொண்டவர் திருமலை.
நாயக்கர் வரலாற்றை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவரான ரங்காச்சாரி, திருமலை நாயக்கரின் வழிமுறைகளைக் கண்டனம் செய்திருக்கிறார். ஆனால், நாயக்கர்களின் வரலாற்றைத் தொகுத்து எழுதிய சத்தியநாதய்யர் தன்னுடைய அறிமுக அத்தியாயத்தில் சில ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ‘வரலாற்று நிகழ்வுகளை அக்காலகட்டத்தின் சூழ்நிலைகளை வைத்தே கணிக்கவேண்டும். ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் நெப்போலியன் மேற்கொண்ட போர்முறைகளைப் பற்றியோ நேப்பிள்ஸில் நெல்சனின் குணாதிசயங்கள் ஏன் அப்படி இருந்தது என்பது பற்றியோ தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல் அங்கே நடந்ததை நடந்தபடி கூறுவதே சரியானது’ என்கிறார். அதன் அடிப்படையிலேயே நாம் திருமலை நாயக்கரின் சரித்திரத்தை அணுகவேண்டும்.
மதுரை நாயக்க வம்சத்தில் அரசாண்ட பதிமூன்று அரசர்களின் நடுநாயகமாக, ஏழாவது அரசராகப் பதவியேற்றவர் திருமலை நாயக்கர். நடுநாயகம் என்பதற்கேற்ப சிறந்த அரசராக அவர் திகழ்ந்தார். திருமலையின் தமையனார் ஆட்சி செய்த திருச்சி மாநகரிலேதான் அவர் முடிசூடிய நிகழ்வும் நடந்தது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது வடக்கே கோவை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை மதுரையின் ஆட்சி பரந்து விரிந்திருந்தது. ஆனால் மதுரை அரசின் அண்டை நாடுகளில் நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
யச்சம நாயக்கரின் உதவியோடு விஜயநகர அரசுப் பொறுப்பேற்ற ராமதேவன் தன்னுடைய தகப்பனைக் கொன்றவனும் பரம எதிரியுமான ஜக்கராயனின் தம்பி மகளைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் அதிருப்தியுற்ற யச்சமன் விஜய நகர அரசுப் பதவியிலிருந்து விடுபட்டு தன்னுடைய ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். மைசூரில் உடையார் அரசர்கள் தன்னாட்சி பெற்று விஜயநகர அரசின் அதிகாரத்திலிருந்து விலகிவிட்டார்கள். அதன்பின் தங்களுடைய அரசை விரிவுபடுத்த எல்லா முயற்சிகளையும் செய்ய ஆரம்பித்தனர். தஞ்சை நாயக்கரோடு மதுரை நாயக்கர்களின் உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். தெற்கில் திருவடி தேசத்தைச் சேர்ந்த அரசர் மீண்டும் சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். போதாதென்று, தமிழகத்தின் கடற்கரையோரமாக போர்ச்சுக்கீசியர்கள் குடியேறி அங்குள்ள மீனவர்களை மதம் மாற்றினர். தங்களுக்குத்தான் வரி கொடுக்கவேண்டுமென்று அவர்களை நிர்பந்தப்படுத்தவும் செய்தனர்.
இப்படிப் பல நெருக்கடிகள் சூழ்ந்த சமயத்தில் அரசுப் பொறுப்பேற்ற திருமலை நாயக்கரின் கவனம் முதலில் தன்னுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்வதில் சென்றது. அதற்கான பல்வேறு ராஜதந்திர முறைகளையும் கையாண்டார் அவர். தனது ஆட்சியின் ஆரம்பகாலத்தில் தன்னைச் சுற்றியுள்ள அண்டை அரசர்களோடு நல்லுறவு பேணவே செய்தார் திருமலை நாயக்கர். குறிப்பாக தனது அண்ணனைப் போல விஜயநகர அரசோடு முரண்படாமல், தொடர்ந்து கப்பம் கட்டி வந்தார். 1630ம் ஆண்டு விஜயநகர அரசனான ராமதேவன் மறைந்து அவருக்குப் பின் ராமராயரின் பேரனான பெத்த வேங்கடர் ஆட்சிக் கட்டிலில் ஏறினார். சில நாட்களிலேயே ராமதேவனின் சிற்றப்பனான திம்மராஜு என்பவன், அரசு தனக்கே உரியது என்று கலகம் செய்ய ஆரம்பித்தான். திருமலை நாயக்கரும் செஞ்சி, தஞ்சை ஆகிய அரசுகளின் நாயக்கர்களும் வேங்கடரையே ஆதரித்தனர். அதனால் திம்மராஜுவின் முயற்சி பலனளிக்கவில்லை என்றாலும் அரசுக்கு அவன் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தான். தனது தம்பி மகனான ஶ்ரீரங்கனின் உதவியோடு இதைச் சமாளித்து வந்தார் வேங்கடர்.
தலைநகர் மாற்றம்
இந்நிலையில் திருமலை நாயக்கர் தன் தலைநகரை பொயு 1634ம் ஆண்டு திருச்சியிலிருந்து மீண்டும் மதுரைக்கு மாற்றினார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுவது பின்வரும் நிகழ்வுதான்.
குமார கம்பண்ணரின் காலத்திலிருந்தே மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேக நிகழ்வன்று அம்மனின் கையிலிருந்து செங்கோலை வாங்கி அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக விஜயநகர அரசர்களும் அவர்களுக்குப் பின் வந்த நாயக்க அரசர்களும் ஆட்சி செய்து வந்தனர். திருச்சியிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்த திருமலை நாயக்கர், அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு தடவை மதுரைக்குப் புறப்பட்டு வந்தார். அந்தச் சமயம் அவர் கடுமையான மண்டைச் சளியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். எத்தனையோ மருத்துவம் செய்தும் அந்த நோய் குணமாகவில்லை.
மதுரை செல்லும் வழியில் திண்டுக்கல்லில் அவர் தங்கியிருந்தபோது இரவு முழுவதும் சளித்தொல்லையால் அவதியடைந்தார். அப்போது அவர் கனவில் எல்லாம் வல்ல சித்தர் உருவில் தோன்றிய மதுரை சோமசுந்தரக் கடவுள் ‘திருமலை, பண்டைப் பதியான மதுரையில் நிலையாகத் தங்கி மீனாட்சி அம்மைக்கும் சொக்கநாதருக்கும் வழிபாடுகள் செய்து திருவிழாக்கள் நடத்தி வருவாயாக. உன்னுடைய நோய் விரைவில் நீங்கும்’ என்று கூறி திருநீறு தந்தருளினார். கனவிலிருந்து விழித்த திருமலை நாயக்கர் அதன் பின் உறங்கவில்லை. ‘மீனாட்சி சுந்தரேஸ்வர் அருளால் என் நோய் குணமானால் நான் நிலையாகவே மதுரையில் தங்கி ஆட்சி செய்வேன். மதுரைக் கோவிலுக்கு ஐந்து லட்சம் பொன் செலவில் திருப்பணிகளும் திருவாபரணமும் செய்து வைப்பேன்’ என்று வேண்டிக்கொண்டார்.
மறுநாள் காலை பல் துலக்கும்போது அவருடைய சளி வெளியேறியது. மதுரைக்கு வந்த அவர் ஆலயம் சென்று அங்கயற்கண்ணிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வழிபாடுகள் நடத்தினார். அதன்பின் அவர் நோயும் குணமானது. இதைப் பற்றி தன்னுடைய அவைப் பிரமுகர்களிடம் ஆலோசித்த அவர், கனவில் சொக்கநாதர் கூறியதைப் போல தன்னுடைய தலைநகரை மதுரைக்கு மாற்றினார். இந்த நிகழ்வை நெல்சன் தனது நூலில் குறிப்பிட்டு தலைநகர மாற்றத்திற்கான காரணம் இதுவே என்று கூறுகிறார். (Madura Country Manual, J H Nelson, Page 122)
ஆன்மிக ரீதியாக இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் அரசியல் ரீதியாக தலைநகர் மாற்றத்திற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜயநகர அரசு மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்ததைக் கண்ட திருமலை நாயக்கர் விரைவில் அந்த அரசுக்கு ஆபத்து வரும் என்று கணித்தார். அப்படி வேலூருக்கு ஆபத்து வருமானால் அதை அடுத்து திருச்சிக்கு அபாயம் நேர அதிக நாள் ஆகாது என்ற காரணத்தாலும் வடமேற்கே மைசூர் அரசிடமிருந்தும் ஆபத்து வரக்கூடும் என்ற காரணத்தாலும் பாதுகப்பான இடமான மதுரைக்குத் தன் தலைநகரை அவர் மாற்றினார்.
முத்துவீரப்ப நாயக்கரின் சிந்தனைக்கு நேர்மாறான திட்டமாக இது தெரிந்தாலும், காலங்கள் மாறியதையும் நாம் கவனிக்கவேண்டும். ஆபத்தான் மூன்று இடங்களுக்கு (வேலூர், மைசூர், தஞ்சை) மதுரையை விட அருகில் இருந்தது திருச்சி. தவிர முத்து வீரப்பரின் காலத்தில் தெற்கிலிருந்து தொல்லைகள் எதுவும் இல்லை. ஆனால் திருமலையின் காலத்தில் திருவடி தேசத்தின் எதிர்ப்பையும் போர்ச்சுக்கீசியர் ஏற்படுத்திய குழப்பங்களையும் அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. இது போன்ற பல விஷயங்களையும் ஆழ்ந்து சிந்தித்த பிறகே அவர் நாட்டின் மையமான மதுரை நகருக்குத் தன் தலைநகரை மாற்றியிருக்கக்கூடும்.
நெல்சன் இந்த தலைநகர் மாற்றத்தைப் பற்றி எழுதும்போது ‘திருச்சியில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபிறகு திருமலை நாயக்கர் மதுரைக்குத் தலைநகரை மாற்றினார்’ என்கிறார். ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகளோ இது 1626ம் ஆண்டு நிகழ்ந்தது என்று கூறுகின்றன. ஆனால் 1634ம் ஆண்டிலிருந்து மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களைச் சுற்றி அதிகமாகக் கிடைக்கும் திருமலை நாயக்கரின் கல்வெட்டுகளை வைத்து தலைநகர் மாற்றம் நடந்தது 1634ம் ஆண்டில் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம்.
மதுரைக்குத் தன் தலைநகரை மாற்றிய பிறகு நாட்டுப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் திருமலை நாயக்கர். ஏசு சபைக் கடிதம் ஒன்று ‘நாயக்க அரசர் மறைந்ததும் (முத்து வீரப்பர்) அவரது மகனும் (தம்பியை மகன் என்று தவறாகக் குறிப்பிடுகிறது இந்தக் கடிதம்) மதுரை நாயக்க வம்சத்தில் சிறந்தவருமான திருமலை நாயக்கர் பதவியேற்றார். தன்னுடைய முன்னோரைப் போல, விஜயநகர அரசிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார். அதற்காக வலுவான இரு கோட்டைகளைக் கட்டினார். 30000 பேருக்கு அதிகமான படையைத் திரட்டினார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறது. ஒரு சில தகவல் பிழைகள் இருந்தாலும், திருமலை நாயக்கர் வரும் அபாயங்களை எதிர் நோக்க வலுவான படை ஒன்றைத் திரட்டினார் என்பதை மறுக்க முடியாது.
தன்னுடைய படைகளுக்குத் தளவாயாக (தளபதி) ராமய்யன் என்ற ராமப்பையரை திருமலை நாயக்கர் நியமித்தார். அந்தணர் குலத்தைச் சேர்ந்த ராமப்பையர் மதுரை அருகே உள்ள சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது கூத்தியார்குண்டு என்று அந்த ஊர் அழைக்கப்படுகிறது. அந்த ஊர் சிவன் கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்தவர் ராமப்பையர். அவருடைய திருவுருவச் சிலை அந்தக் கோவிலில் உள்ளது. பெரும் வீரரான ராமப்பையரின் பெயரில் அம்மானை ஒன்று இயற்றப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தளபதிகளில் அம்மானை பாடப்பெற்றவர் ராமப்பையர் ஒருவரே என்று சொல்லலாம்.
(தொடரும்)