Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

மதுரை நாயக்கர்கள் #13 – திருமலை நாயக்கர் – முதல் போர்கள்

திருச்சியிலிருந்து மதுரைக்குத் தலைநகரை மாற்றிய திருமலை நாயக்கர், வலுவான படை ஒன்றைத் திரட்டத் தொடங்கி அருகிலுள்ள அரண்களை வலுப்படுத்தத் தொடங்கியதன் காரணம், நாடு அன்றிருந்த சூழ்நிலையில் விரைவில் போர்கள் வரும் என்ற எதிர்பார்ப்புத்தான். அவர் கணிப்புப் பொய்க்கவில்லை. ஆட்சியின் ஆரம்பத்திலேயே அவரைப் போர் தேடிவந்தது.

முதல் மைசூர்ப் போர்

விஜயநகர அரசிலிருந்து விடுபட்டு தன்னாட்சிப் பிரகடனம் செய்த மைசூர் அரசு, தன் எல்லைகளை விரிவுபடுத்தச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தது. மதுரை நாயக்கர்களுடன் முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் போரில் ஈடுபட்டு அது தோற்ற வரலாற்றை ஏற்கனவே பார்த்தோம். அந்தத் தோல்வியின் வடுவை மறைப்பதற்காகவும் தன்னுடைய ஆட்சியின் எல்லையை தெற்கில் விரிவுபடுத்தவும் படை ஒன்றை மைசூரின் அரசரான சாமராஜ உடையார் மதுரையை நோக்கி அனுப்பிவைத்தார். அதற்கு ஹரசூர நந்தி ராஜா என்பவர் தலைமை தாங்கிவந்தார். இந்தப் போரைப் பற்றிய விவரங்களை மெக்கின்ஸி ஓலைச் சுவடிகள் பதிவு செய்திருக்கின்றன.

மைசூரிலிருந்து படை வரும் தகவலை அறிந்த திருமலை நாயக்கர் தன்னுடைய தளபதியான ராமப்பையரை அழைத்து அவரது தலைமையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அடங்கிய படையை அனுப்பிவைத்து மைசூர்ப்படைகளை எதிர்த்துச் சண்டை செய்யுமாறு பணித்தார். திண்டுக்கல்லின் எல்லையிலேயே மைசூர்ப்படைகளைத் தடுத்து நிறுத்துமாறும் ராமப்பையருக்கு அவர் ஆணையிட்டார். அதற்காக கன்னிவாடியின் பாளையக்காரரான ரங்கண்ண நாயக்கருக்கு ஓலை ஒன்றையும் அனுப்பினார். ரங்கண்ண நாயக்கரும் பெரும் வீரர், விவேகம் மிக்க மதியூகி. நாயக்கருக்கு 7000 பொன்னைக் கொடுத்து உதவியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய படைகளைத் திரட்டி ராமப்பையரின் படைகளோடு அதை ரங்கண்ணர் இணைத்தார், மைசூர்ப்படைகளை திண்டுக்கல்லுக்கு வடக்கில் மலைக்கணவாய் ஒன்றில் திருமலை நாயக்கரின் படைகள் சந்தித்தன.

அந்தப் பகுதியைப் பற்றி அதிகம் தெரியாத மைசூரின் படைகள் மதுரைப் படைகளின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறின. ராமப்பையரும் ரங்கண்ண நாயக்கரும் வீரப்போர் புரிந்தனர். அவர்களைச் சமாளிக்க முடியாமல் மைசூர்ப் படை பின்வாங்கி ஓடியது. “ஓடுபவரைத் துரத்துவது எளிது” என்ற பழமொழிக்கேற்ப மைசூர்ப் படைகளை மதுரைப் படைகள் விரட்டிச் சென்றன.

அடிக்கடி போர் தொடுத்துத் தொல்லை அளிக்கும் மைசூர் அரசுக்குச் சரியான பாடம் புகட்டாவிட்டால் மீண்டும் அங்கிருந்து பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை உணர்ந்திருந்த ராமப்பையர், அந்தப் போரில் மைசூர்ப் படைகளை அடியோடு அழிக்க உறுதி பூண்டார். அதன்படி மைசூர்க் கோட்டைக்குள் சென்று ஒளிந்துகொண்ட படைகளை அழிக்க, கோட்டையை முற்றுகையிட்டார். அந்த முற்றுகை சில நாட்கள் நீடித்தது. உள்ளே சிக்கிக்கொண்ட மைசூர்ப் படைகளின் உறுதியும் தளர்ந்தது. மதுரைப் படைகளுக்கு வெற்றி கிடைக்கும் நேரத்தில் ஒரு புதுச்சிக்கல் வந்தது.

எப்போதுமே வெற்றியாளர்களின் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பற்றி அவதூறு பரப்பும் கூட்டம் ஒன்று உண்டல்லவா. அதுபோலவே ராமப்பையர் விரைவாக மன்னரின் அபிமானத்தைப் பெற்றது மட்டுமின்றி, முதல் போரில் வெற்றியை அடைந்தது மதுரையில் சிலருக்கு அவர் மீது அசூயையை வளர்த்தது. அப்படிப்பட்டவர்கள் சும்மா இருப்பார்களா. திருமலை நாயக்கரிடம் சென்று ராமப்பையரைப் பற்றி அவர்கள் அவதூறு சொன்னார்கள். ராமப்பையர் அரசைக் கைப்பற்றச் சதி செய்கிறார் என்றும், மைசூர்ப் போர் முடிந்தவுடன் திருமலை நாயக்கரை அகற்றிவிட்டு அரியணையில் அமரப் போகிறார் என்று அரசரிடம் அவர்கள் கூறினர். திருமலை நாயக்கர் இதை முதலில் நம்பவில்லை. அதைக் கண்ட அந்தக் கூட்டம், “மைசூர் முற்றுகையை உடனே முடித்துக் கொண்டு நாடு திரும்புமாறு அவருக்குக் கட்டளை இடுங்கள், அவர் திரும்பி வந்தால் ராமப்பையர் உங்களுக்கு அடங்கியவர் என்பதை ஒப்புக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நாங்கள் சொன்னதுதான் நடக்கும்” என்றனர்.

இதைக் கேட்டுக் குழம்பிய திருமலை நாயக்கர் அவர்கள் கூறியபடி தூதுவர்களை அனுப்பச் சம்மதித்தார். அதன்படி இருவர் ராமப்பையரிடம் தூது சென்றனர். மைசூர் சென்ற அவர்கள் ராமப்பையரைச் சந்திக்கப் பயந்து ரங்கண்ண நாயக்கரிடம் சென்று தங்கள் வந்த செய்தியைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட ரங்கண்ணர் அவர்களை ராமப்பையரிடம் அழைத்துச் சென்றார்.

திருமலை மன்னர் உடனே உங்களை நாடு திரும்பும்படி அழைக்கிறார் என்றும் ஆகவே தங்களுடன் கிளம்பி அவர் வரவேண்டும் என்றும் அவர்கள் ராமப்பையரிடம் வற்புறுத்தினர். ராமப்பையருக்குத் தர்மசங்கடமான நிலைமை. மைசூர்ப் படைகளை முழு வெற்றி கொள்ள இதை விடச் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆகவே மதுரைக்குச் செல்லத் தயக்கம் காட்டினார். இன்னும் ஓரிரு நாட்களில் போர் முடிந்துவிடும் என்றும் அதன்பின் வெற்றியோடு திரும்பிவருவதாக மன்னரிடம் சொல்லுங்கள் என்றும் அவர் அந்தத் தூதுவர்களிடம் சொன்னார். ஆனால் அதைக் கேட்க மறுத்த அந்த இருவரும் தங்களுடன் வருமாறு சொல்லி ராமப்பையரின் கைகளைப் பற்றி இழுத்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ராமப்பையர், ரங்கண்ண நாயக்கர் தடுத்தும் கேட்காமல் தன் வாளை எடுத்து அந்த இருவரின் கைகளையும் வெட்டிவிட்டார்.

கைகள் இழந்த இருவரும் திருமலை நாயக்கரிடம் வந்து முறையிட்டனர். சஞ்சல மனத்தை உடைய திருமலை நாயக்கரை ஓரளவு இந்த நிகழ்வு குழப்பியது என்றுதான் சொல்லவேண்டும். ராமப்பையரின் பேரில் அவர் சந்தேகம் கொண்டார். இதற்கிடையில் மைசூரின் கோட்டைக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மதுரைப் படைகள் அங்கே பெருவெற்றி அடைந்தன. அந்த இடத்திலிருந்து பெரும் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு நாடு திரும்பின. வெற்றியோடு திருமலை நாயக்கரை அவையில் சந்தித்த ராமப்பையர், மைசூரிலிருந்து கொண்டு வந்த செல்வத்தை அவர் முன்னால் வைத்து தன் வாளையும் கீழே வைத்து தன் தவறைப் பொறுக்குமாறு வேண்டினார். சந்தேகம் விலகிய திருமலை நாயக்கர், ராமப்பையரைத் தழுவிக் கொண்டார்.

இந்தப் போரில் தமக்கு வெற்றி தேடித்தந்த காரணத்தால் ரங்கண்ண நாயக்கர் கட்டவேண்டிய கப்பப் பணத்தையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார்.

திருவடி தேசத்துடன் போர்

இரண்டாம் தேவராயரின் காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் வந்த திருவடி தேசம் என்ற திருவாங்கூர் அரசு, விஜயநகரத்தின் பிடியிலிருந்து விடுபட அடிக்கடி முயற்சிகள் எடுத்தது நமக்குத் தெரிந்த செய்தி. மதுரை நாயக்கர் அரசு அமைந்த ஆரம்ப நாட்களில் விஜயநகரப் பேரரசர் அச்சுதராயருக்கு எதிராக திருவடி தேசத்தைச் சேர்ந்த உதயமார்த்தாண்ட வர்மன் என்ற அரசன் கலகம் செய்தான். தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த அச்சுதராயர், மதுரை அரசர் விஸ்வநாத நாயக்கரோடு சேர்ந்து உதயமார்த்தாண்ட வர்மனை வென்றார். அதன்பிறகு சதாசிவராயரின் காலத்தில் உன்னிக்கேரள வர்மன் என்ற திருவடி அரசன் விஜயநகரப் பேரரசுக்குத் திறை கட்டுவதை நிறுத்தியது மட்டுமின்றி தென்காசிப் பாண்டியர்களின் மீது படையெடுத்து அந்த அரசுக்குச் சொந்தமான சில பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டான். அவனை அடக்க விட்டலராயர் படையெடுத்து உன்னிக்கேரளவர்மனை வென்று திருவடி தேசத்தை மீண்டும் விஜயநகரத்திற்குக் கப்பம் கட்டும்படி செய்தார். போலவே முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரின் காலத்திலும் திருவடி தேசத்துடன் போர் நடந்ததாக சில ஆவணங்கள் கூறுகின்றன.

அதன்பின் சிறிதுகாலம் அடங்கியிருந்த திருவடி தேச அரசர்கள், திருமலை நாயக்கரின் காலத்தில் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இதைப் பற்றி நாயக்கரின் ஆவணங்கள் விரிவாகப் பதிவுசெய்யாவிட்டாலும், திருவாங்கூர் அரசன் உன்னிக்கேரள வர்மனின் கல்வெட்டு ஒன்று “திருமலை நாயக்கரின் படையெடுப்பால் ஏற்பட்ட சேதத்திற்கான” வரிகளைப் பற்றிப் பதிவு செய்கிறது. “மாங்குளத்தையும் மணக்குடியையும் சேர்ந்த நாட்டார்கள் நாம் கல்குளத்தில் உள்ள வீட்டில் இருக்கும்போது வந்து விண்ணப்பம் ஒன்றைச் செய்தனர். அதன்படி கன்னி மாதத்தில் (புரட்டாசி) விளைச்சல் ஏதும் இல்லாததாலும் கும்ப மாத (மாசி) விளைச்சல் திருமலை நாயக்கரின் படையெடுப்பால் பாழ்பட்டுப் போனதாலும் அந்த வருடத்தில் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்த முடியாத நிலைமை இருப்பதைத் தெரிவித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு நாஞ்சில் நாட்டின் தென்பகுதியில் நமக்கு வரவேண்டிய வரியிலிருந்து விலக்கு அளித்தோம்” என்று அந்தச் சாசனம் தெரிவிக்கிறது.

இந்தப் படையெடுப்பு உன்னிக் கேரளவர்மன் திறை செலுத்தாததால் விஜயநகர அரசின் சார்பில் திருமலை நாயக்கரால் மேற்கொள்ளப்பட்டது என்று இரண்டாம் வேங்கடரின் குனியூர்ச் செப்பேடுகளால் தெரிகிறது. இதில் திருமலை நாயக்கரே நேரடியாகப் பங்குகொண்டதாகவும் தெரிகிறது. தவிர இந்தப் போரில் மதுரைப் படைகளுக்கே வெற்றி கிடைத்தது என்பது அதற்கடுத்த போர்களில் நாஞ்சில் நாட்டின் படைகள் திருமலை நாயக்கரின் சார்பில் போரிட்டதிலிருந்து தெளிவாகிறது. இந்த வெற்றியின் காரணமாக திருவடி தேசம், மதுரை நாயக்கர்களுக்கு அடங்கிய அரசாக பல ஆண்டுகள் நீடித்தது. ஜான் ந்யூஹாப் என்ற ஆய்வாளர் திருவாங்கூர் மன்னர்கள் மதுரை நாயக்கர்களுக்குப் பயந்து பத்தாயிரம் வீரர்கள் அடங்கிய படையை நிரந்தரமாக வைத்திருந்தனர் என்று பொயு 1664ம் ஆண்டுக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கிறார். (History of Nayaks of Madura – P 122 by Sathyanatha Iyer)

சேதுபதி நாட்டில் குழப்பம்

திருமலை நாயக்கரின் தந்தையான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் சேதுபதி நாட்டின் எல்லைகளை வரையறுத்து அதற்கு அரசனாக சடைக்கன் சேதுபதி என்ற தளவாய் சேதுபதியை நியமித்தார் அல்லவா. சில ஆண்டுகள் ஆட்சி செய்த சடைக்கன் சேதுபதிக்கு அடுத்தபடியாக அவரது மகன் கூத்தன் சேதுபதி என்பவர் ஆட்சிக்கு வந்தார். திருமலை நாயக்கரோடு நெருங்கிய நட்புக் கொண்ட கூத்தன் சேதுபதி, திருமலை மன்னரின் பெயரில் செப்பேடுகளை வெளியிட்டிருக்கிறார். கூத்தன் சேதுபதி காலத்தில் ராமேஸ்வரம் கோவிலில் பூஜைகள் செய்துவந்த மராட்டிய அர்ச்சகர்களும் குருக்கள் சபையோரும் கோவில் நடைமுறைகளை முறையாக நடத்துவோம் என்று இசைவு தெரிவித்து எழுதிக் கொடுத்த ஒப்பந்தம் ஒரு செப்பேட்டில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதின் திருமலை நாயக்கர்களின் தளவாய் என்று கூத்தன் சேதுபதி குறிக்கப்பட்டிருக்கிறார்.

கூத்தன் சேதுபதிக்கு வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மனைவியின் மூலம் ஒரு மகன் இருந்தான். அதன் காரணமாக அவன் அடுத்த வாரிசாக நியமிக்கப்படுவதை அவைப் பிரமுகர்களும் மக்களும் விரும்பவில்லை. எனவே கூத்தன் சேதுபதியின் சகோதரனான இரண்டாம் சடைக்கன் சேதுபதி கூத்தன் சேதுபதிக்குப் பின் முடிசூடினார். ஆனால் ‘தம்பி’ என்று நாயக்கர் ஆவணங்களில் குறிப்பிடப்படும் கூத்தன் சேதுபதியின் மகன், தானே உண்மையான வாரிசு என்றும் அரசு தனக்கே உரியது என்றும் பிடிவாதம் பிடித்தான். இதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அவன் திருமலை நாயக்கரிடம் சென்று முறையிட்டான். திருமலை நாயக்கர் இதைக் கேட்டுச் செய்தது என்ன?

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *