ராமநாதபுரத்தின் சேதுபதியுடன் நடந்த போரின் போது சடைக்கன் சேதுபதியும் அவர் மருமகனான வன்னித்தேவரும் ராமேஸ்வரம் தீவுக்குள் தன் படைகளுடன் சென்று அங்கே அரண் அமைத்துக்கொண்டவுடன், அவர்களை முன்னேறித் தாக்குவது பற்றி ராமப்பையர் தன் உபதளபதிகளுடனும் பாளையக்காரர்களுடனும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திருமலை நாயக்கர் அனுப்பிய ஓலையுடன் சென்ற தூதுவன் ராமப்பையரைச் சந்தித்தான். அந்த ஓலையில் போரை நிறுத்திவிட்டு மதுரைக்கு வருமாறு ராமப்பையருக்குத் திருமலை நாயக்கர் ஆணையிட்டிருந்தார். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள விஜயநகர அரசுரிமையில் நேர்ந்த சிக்கல்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.
வேங்கடரும் ஶ்ரீரங்கனும்
பெத்த வேங்கடர் விஜயநகரத்தின் அரசுரிமையை ஏற்றதும் அதைப் பிடிக்காமல் திம்மராஜு என்பவன் அவருக்குத் தொல்லைகள் அளித்ததையும் அவனுக்குத் தமிழகத்தின் நாயக்கர்கள் உதவி செய்ய முன்வராததால் அவன் அடங்கிப்போனதையும் பார்த்தோம். அதன்பின் ஆந்திரத்தின் தெற்குக் கடலோரப் பகுதிகள் சிலவற்றை திம்மராஜுக்கு அளித்து அவனை அங்கே ஆட்சி செய்துவருமாறு வேங்கடர் சொல்லியிருந்தார். ஆனாலும் அவன் வேங்கடரைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளைத் தொடர்ந்தான். அவற்றைத் தன் சகோதரன் சென்ன வேங்கடரின் மகனான ஶ்ரீரங்கனின் உதவியால் சமாளித்து வந்தார் வேங்கடர்.
ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு படையைத் திரட்டிக்கொண்டு வேங்கடருடன் நேரடியாக மோதத் துணிந்தான் திம்மராஜு. பொயு 1635ம் ஆண்டில் நடந்த இப்போரில் செஞ்சி நாயக்கரோடு சேர்ந்து போரிட்டு ஶ்ரீரங்கன் திம்மராஜுவை முறியடித்தான். போரில் செஞ்சி நாயக்கரால் திம்மராஜு கொல்லப்பட்டதை அடுத்து வேங்கடருக்கு அவனால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கியது. அதன்பின் சிறிது காலம் வேங்கடர் அமைதியாக ஆட்சிசெய்து வந்தார். இக்காலகட்டத்தில் தமிழகத்தின் நாயக்கர்களோடு அவர் போர் செய்தார் என்று ஏசு சபைக் கடிதங்கள் சில குறிப்பிடுகின்றன. ஆனால் அவற்றில் சிறிதளவும் உண்மையில்லை என்பதைச் சாசனங்கள் சுட்டுகின்றன.
உதாரணமாக, திருவடி தேசத்தில் உள்ள முள்ளிநாடு, வீரவநல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த குனியூர் என்ற கிராமத்தை சில அந்தணர்களுக்கு திருமலை நாயக்கருடைய கோரிக்கையின் பேரில் வீர வேங்கட மகாராயர் தானம் செய்ததாகக் குனியூர் செப்பேடு கூறுகிறது. ஆகவே திருமலை நாயக்கர் வேங்கடரோடு நெருக்கமாகவே இருந்திருக்கிறார். வேங்கடருடைய ஆட்சியும் திம்மராஜுவின் மறைவுக்குப் பின் சிறிது காலம் போர்கள் இல்லாமல் அமைதியாகவே கழிந்திருக்கிறது.
ஆனால் அமைதியான இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. எந்த ஶ்ரீரங்கன் திம்மராஜுவுக்கு எதிரான போரில் வேங்கடருக்கு வெற்றி தேடித்தந்தானோ எவனைத் தன் சகோதரன் மகன் என்ற அன்போடு அரசில் பல உரிமைகளை அளித்து வேங்கடர் போற்றி வந்தாரோ, அந்த ஶ்ரீரங்கனே வேங்கடருக்கு எதிராகத் திரும்பினான். வேங்கடரிடம் அரசைத் தனக்கு அளிக்குமாறு வற்புறுத்தினான். ஆனால் வேங்கடர் அதை மறுக்கவே, விஜயநகர அரசின் பரம எதிரிகளில் ஒன்றான பீஜப்பூரின் சுல்தானிடம் சென்று வேலூரின் மீது படையெடுக்குமாறு தூண்டிவிட்டான். கரும்பு தின்னக் கூலியா என்று நினைத்த பீஜப்பூர் சுல்தான் 1638ம் ஆண்டு வேலூரின் மீது படையெடுத்து வந்தான். ஆனால் அவனோடு போரிட்டு துரத்தினார் வேங்கடர். ஆனால் முயற்சியைக் கைவிடாத ஶ்ரீரங்கன், மறுபடியும் பீஜப்பூர் சுல்தானை அழைக்கவே மீண்டும் படையெடுத்து வந்தான் அவன்.
மிகக் குறுகிய காலத்தில் இன்னுமொரு போரைச் சந்திக்க வலுவில்லாத காரணத்தால் வேங்கடர், நாயக்கர்களின் உதவியைக் கோரினார். பீஜப்பூருக்கு எதிரான இந்தப் போரில் விஜயநகர அரசருக்கு உதவாவிட்டால் விஜயநகர அரசு அழிந்துவிடும் என்பதையும் அதன் பின் நாயக்கர்களின் நிலை அபாயகரமாகிவிடும் என்பதையும் உணர்ந்திருந்த திருமலை நாயக்கர், அப்போதைய சூழ்நிலையில் வேங்கடருக்குக் கை கொடுப்பதே சரியான நடவடிக்கை என்று தீர்மானித்து ராமப்பையருக்கு ஓலை அனுப்பினார்.
பாட்சா முப்பதினாயிரங்குதிரை
கணவாயை வந்துகட்டிக் கொண்டா ரென்று சொல்லி..
இராயரிட சீமையெல்லாம் நாலுதிக்குங் கொள்ளையிட்டு
விசையாபுரமும் வேலூருங் கொள்ளையிட்டு
இராயரிட காயிதமும் நமக்குவந்த தென்றுசொல்லி
உடனே வேலூர் விரைந்து, படையெடுத்து வரும் பீஜப்பூர் சுல்தானை வெல்லவேண்டும் என்று அவர் அதில் எழுதியிருந்தார். மன்னனின் கருத்தில் உள்ள உண்மையை உணர்ந்த ராமப்பையர், உள்நாட்டுப் போரை எப்போது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து தன்னுடைய மாப்பிள்ளை கொண்டய்யனையும் சில பாளையக்காரர்களையும் அழைத்து தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைக் காத்து வரச் சொன்னார். அதன்பின் தன்னுடைய படையின் பெரும்பகுதியை அழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்றார் ராமப்பையர். அங்கு திருமலை நாயக்கரைச் சந்தித்து வேண்டிய விவரங்களை அறிந்து கொண்டு வேலூரை நோக்கிப் பயணமானார்.
வடமதுரை தன்னின் வளமுடன் சென்றிறங்கி
திண்டுக்கல்லும் கடந்து தேக்கமலை தன்னில் வந்து
மற்றநாள் தானும் மன்னன் புலிராமய்யனும்
மணப்பாரை தன்னில் மன்னவனும் சென்றிறங்கி
திருச்சினாப்பள்ளி கடந்து சீரங்கம் தன்னில் வந்து
சமயபுரம் கண்ணனூர் தன்னிலே வந்திரங்கி
என்று அவர் சென்ற வழியை ராமப்பையன் அம்மானை குறிப்பிடுகிறது. அதன்பின் வேலூர் வந்து வேங்கடராயரைச் சந்தித்தார் ராமப்பையர்.
இராயனுட சமூகந்தனை நன்றாக வந்து கண்டு
ஆண்டவனே யிப்போ அழைத்த பணிவிடை யென
ராமப்பயனுரைக் கேட்டு ராயருந்தானேது சொல்வார்
துருக்கர் பெரும்படைதான் தொலையாத வான் பரியும்
கணவாய் வழியில் வந்து கடல்போல் வந்ததுகாண்
சீமையழித்துத் தீக்கொழுத்தி விட்டார் காண்
அதுகண்டு நாமும் அழைப்பித்தோம் ராமய்யனே
என்று சொன்னார் வேங்கடர். அதன்பின் ராமப்பையரை உபசரித்து போருக்கு அனுப்பினார். அந்தப் பகுதிகளைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் வேண்டும் என்ற காரணத்தால் இக்கரை நாயக்கரிடமிருந்த வெங்கடகிருஷ்ணருக்கு ஓலை அனுப்பினார் ராமப்பையர். வேங்கடகிருஷ்ணய்யரும் ஒரு படையுடன் வர, ராமப்பையர் தன் படையுடன் பீஜப்பூர் சுல்தானை பெங்களூருக்கு அருகில் சந்தித்தார். மிகக் கடுமையாக நடந்த இப்போரில்,
மன்னன் புலிராமன் மட்டில்லாச் சேனையுந்தான்
துருக்கர் பெரும்படையைச் சூறையிட்டுத் தான் விரட்டி
ஆறு கடக்க அலைகுலையத் தான் துறத்தி
வெட்டி விருதறுத்தான் வேந்தன் புலிராமய்யனும்
வெற்றி கொண்டு ராமய்யனும் வீரியங்கள் பேசிவந்தான்
பீஜப்பூர் சுல்தானின் பெரும்படையை விரட்டி அடித்தார் ராமப்பையர். அவனிடமிருந்து பல யானைகளையும் குதிரைகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றிக்கொண்டு வேலூர் திரும்பி வேங்கடரைச் சந்தித்தார். இந்த வெற்றியால் மனம் மகிழ்ந்த வேங்கடர் ராமப்பையரைத் தன்னுடனே இருக்குமாறு கூறினார். ஆனால் “கச்சித் திருமலையேந்திரனை காணாமல் நானிருந்தால் கண்கள் புகையாகுமைய்யா கர்த்தனே” என்று அதை மறுத்துவிட்டு மதுரை திரும்பினார் ராமப்பையர். திருமலை நாயக்கரிடம் அவர் கொண்டிருந்த அன்பின் ஆழம் இதிலிருந்து வெளிப்படுகிறது அல்லவா.
மதுரை திரும்பிய ராமப்பையருக்கு திருமலை நாயக்கர் பெரும் வரவேற்புக் கொடுத்தார். அந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற பெண்களெல்லாம்.
மன்மதன்காண் என்பாரும் மதிச்சந்திரன் காணென்பாரும்
இராஜனிவ னென்பாரும் இராமய்யன் காணென்பாரும்
துருக்கர் துரைமக்களைத்தான் துரத்திவந்த சேவகன்காண்
என்று அவர்களைப் புகழ்ந்தார்களாம். அப்படி அவரை வரவேற்ற திருமலை நாயக்கர் அவருக்குக் கனகாபிஷேகம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால், ராமப்பையர் அதை விரும்பவில்லை.
என்ன வெற்றிகண்டேன் எனக்குக் கனகஞ்சொரிய
சேதுமறவனைத்தான் சென்று பிடித்து வந்தால்
கனகமுடனே அப்போது கருதலாம் தானமெல்லாம்
என்று சொல்லிவிட்டு ஏற்கனவே பாதியில் விட்டு வந்த ராமநாதபுரம் போரை முடிக்கவேண்டுமென்ற காரணத்தால் விரைவாக ராமேஸ்வரம் நோக்கிச் சென்றார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் சேதுபதி அவருடைய அரணை மிகவும் வலுப்படுத்தியிருந்தார். தீவான ராமேஸ்வரத்தை அடைவதை மிகக் கடினமான வேலையாகவும் ஆக்கியிருந்தார். கடலைக் கடந்து நீந்தியோ படகிலோ யாராவது வந்தால் அவர்களை அங்கேயே சமாப்தி செய்துவிட காவலர்களை ராமேஸ்வரத்தின் எல்லை முழுவதும் நிறுத்தியிருந்தார். அவற்றைத் தவிர, தீவைச் சுற்றிப் போர் நிகழப்போவதால் ஒரு கடற்படை மிகவும் அவசியம் என்று கருதிய சடைக்கன் சேதுபதி அப்போது இலங்கையில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்த டச்சுக்காரர்களுக்குத் தூதனுப்பினார். இந்தியாவில் எப்படியாவது கால்பதித்து விடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த டச்சுக்காரர்களும் இதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி சேதுபதிக்கு உதவ முன்வந்தனர்.
இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ராமப்பையர், சரியான ஏற்பாடுகள் செய்யாமல் ராமேஸ்வரத்தைத் தாக்குவது தற்கொலைக்குச் சமானம் என்று அறிந்தார். குறிப்பாக டச்சுக்காரர்களின் கடற்படைத் தாக்குதலைச் சமாளிக்க சரியான வலிமை தமக்கு வேண்டும் என்று திருமலை நாயக்கருக்குத் செய்தி அனுப்பினார். திருமலை மன்னரும் தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் தளம் அமைத்துக்கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களுக்கு, தமக்கு உதவி செய்யுமாறு தூதனுப்பினார். ஏற்கனவே அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதில் போர்ச்சுக்கீசியர்களுக்கு சரியான சவாலாக டச்சுக்காரர்கள் உருவெடுத்து வந்தனர். ஆகவே எதிரிக்கு எதிரி நமது நண்பன் என்ற கொள்கைக்கு ஏற்ப போர்ச்சுக்கீசியர்கள் திருமலை நாயக்கருக்கு உதவ முன்வந்தனர். திருமலைநாயக்கர் செய்த சில தவறுகளைப் பட்டியலிட்டால், அதில் முதலாவதாக வெளிநாட்டவர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் உதவி கோரியதைச் சொல்லலாம். இது பின்னாளில் அவர் பல சமரசங்களைச் செய்துகொள்ள வழி வகுத்தது.
போர்ச்சுக்கீசியர்கள் உதவியளிக்க முன்வந்த தகவலை ராமப்பையருக்குத் தெரிவித்த திருமலை நாயக்கர், அவரை முன்னேறுமாறு ஆணையிட்டார். அதன்படி ராமப்பையர் மண்டபத்திற்கு தன் படையோடு வந்திறங்கினார்.
வாய்த்த துறைமுகத்தில் வந்துநின்று ராமய்யனும்
அயோத்தி ராமர் அடைத்த திருவணைதான்
ஏதடாவென்றான்
ராமர் கட்டிய பாலம் எங்கே என்று அங்கிருந்தவர்களைக் கேட்க அவர்கள் ராமர் பாலத்தைக் கடலில் காட்டினார்கள். அதேபோல ஒரு பாலத்தை ராமேஸ்வரத்திற்குக் கட்டவேண்டும் என்று தன் படைகளுக்கு ராமப்பையர் ஆணையிட்டார்.
நல்லதிரு வணையை நாமடைக்க வேணுமென்று
நாள்நட்சத்திரம் நன்றாகத் தான்பார்த்து
தேங்காயுடைத்தார்கள் தென்னவர்கள் மன்னர் முன்னே
ஆனால் அலைபாயும் கடலில் பாலம் கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன?
ஆக்க முடியுமோடா ஆழச் சமுத்திரத்தை
காவேரியாறுமல்ல கை வாய்க்கால் தானுமல்ல
பூவேரி தானுமல்ல பொன்னீர் மடுவுமல்ல
ஆழச்சமுத்திரைத்தை அடைக்க வென்றுதான் துணிதல் இந்நாட்டில் கண்டதில்லை
என்று படைவீரர்கள் அங்கலாய்க்கவே, ராமப்பையர் தானாகவே கற்களைச் சுமந்து சென்று பாலம் கட்ட ஆரம்பித்தார்.
இராமனே கல்சுமந்தால் நாமெடுக்க லாகாதோ
என்று சொல்லி மன்னெரெல்லாரும் தான் கூடி
ஏலோலம் மிகப்பாடி எடுத்தார்கள் கல்லதனையும்
இந்தப் பாலம் கட்டிய கதையை ராமப்பையன் அம்மானை சுவையாகச் சொல்லிச் செல்கிறது. பல்வேறு சமூகத்தினரும் கல்சுமந்து ராமேஸ்வரத்திற்குப் பாலம் கட்டினராம். ஏழு நாட்களில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதாய் அம்மானை சொல்கிறது. பாலம் கட்டி முடித்தவுடன், நாயக்கர் படை பாலத்தில் ஏறி ராமேஸ்வரம் தீவை நோக்கிச் சென்றது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த சேதுபதிகளின் படை வீரர்கள் எரிவாணங்களை வீசி படையின் முன்னேற்றத்தைத் தடுத்தனர்.
சுட்டார் குழல்கார் துங்கமுடி மன்னரையும்
எரிந்தார் எரிவாணம் எல்லையற்ற சேனையின்மேல்
வாணம் பிற்பட்டு மயங்கி கடலில் விழ
பட்டார்கள் ராமன் படை பாற்கடலில் தானிறைந்தார்.
இந்தப் போரினால் பாலத்தில் முன்னேற முடியாமல் ராமப்பையரின் படை திகைத்துப் பின்வாங்கியது. அந்த நேரத்தில் போர்ச்சுக்கீசியர்களின் படை வந்து சேர்ந்துகொண்டது. அவர்களை ராமப்பையர் கடல் வழியாகச் சென்று எதிரிகளைத் தாக்குமாறு ஆணையிட்டார். அதன்பின் அங்கே தீவிரமான கடற்போர் தொடங்கியது.
பறங்கிகளெல்லரும் பாசை சொல்லி பல்கடித்து
இராமனாத சுவாமி நல்ல பெருந்தீவை
வந்து வளைத்துக் கொண்டார் வாய்த்த பறங்கியர்கள்
சேதுபதியோடு சேர்ந்த டச்சுக்காரர்களும் கடலில் தங்களின் படகுகளோடு சென்று போர் புரிய ஆரம்பித்தனர். அவர்களுக்குத் துணையாக வன்னித்தேவரும் சென்றார். இப்படி கடற்போரில் எல்லாருடைய கவனமும் திரும்பியிருக்கும் நேரத்தில் பாலத்தின் வழியாக ராமப்பையரின் படை முன்னேறியது. விரைந்து ராமேஸ்வரம் சென்ற அவர்கள் சேதுபதியின் படைகளைத் தாக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக வன்னித்தேவர் மீண்டும் நிலத்திற்கு வந்து ராமப்பையரின் படைகளோடு போரிட ஆரம்பித்தார். மிகக் கடுமையான போர் அங்கே நடந்தது.
காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
துண்ட துண்டமாகத் துணிக்கப்பட்டு வீழ்வாரும்
சென்னியற்று வீழ்வாரும் தெரிப்பட்டு வீழ்வாரும்
குறைபிணமாய் நின்று கூத்தாடி வீழ்வாரும்
வேலவனே என்பாரும் விதிவசமோ என்பாரும்
இப்படி இருதரப்பிலும் பலர் மடிந்தனர். அந்நாள் போர் முடிந்து பாசறை திரும்பிய வன்னித்தேவருக்கு வைசூரி நோய் கண்டது. இதற்கு எதிராக ராமப்பையருக்குப் பில்லி சூனியம் வைக்கப்பட்டதாக ராமப்பையன் அம்மானை சொல்கிறது.
நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் விடாமல் வன்னித்தேவர் போருக்குச் சென்றார். பாம்பன் துறையருகே இருதரப்பும் மீண்டும் மோதிக்கொண்டனர். நோயைப் பொருட்படுத்தாமல் வன்னித்தேவர் வீரப்போர் புரிந்தார். ஆனால் அவர் கைகளும் சளைத்தன. படைகளும் பின்னடைந்தன. பாசறைக்குத் திரும்பிய வன்னித்தேவர், சடைக்கன் சேதுபதியிடம் ராமப்பையரோடு சமாதனமாகப் போய்ச் சரணடையுமாறு சொல்லிவிட்டு உயிர்நீத்தார்.
என்வார்த்தை தன்னை யினி கேளும் மன்னவனே
படைத்தலைவர் தன்னையும் பாங்காக நம்பாதே
ஆனை குதிரை அடங்கலும் நம்பாதே
மன்னன் புலிராமனுக்கு வாகாக ஓலைதனை
கண்டு வணங்கக் காகிதமும் தானெழுதும்
அவன் தமையன் வைத்தியனார் அவர்மேல் ஆணையிட்டு
நம்பிக்கை ஓலை நமக்கு வரவேண்டும்
என்று சொன்ன வன்னித்தேவர் இறந்து பட்டதும் ஆறாத்துயரம் அடைந்த சடைக்கன் சேதுபதி ராமப்பையருக்கு அடைக்கல ஓலை அனுப்பினார். அதனை ஏற்று ராமப்பையர் சடைக்கன் சேதுபதியை அழைத்துவரச் சொன்னார். அவரைக் கூட்டிக்கொண்டு மதுரைக்குத் திரும்பினார்.
வெற்றியுடன் மதுரை திரும்பிய ராமப்பையரை திருமலை நாயக்கர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். சடைக்கன் சேதுபதியைப் பார்த்து “என் பாதம் காணாமல் இருக்க முடியுமா உன்னால்” என்று திருமலைநாயக்கர் கேட்க, சடைக்கனும் “என் மருமகன் வன்னி இருந்தால் உங்கள் பாதத்தைத் தரிசித்திருக்க மாட்டேன்” என்று துடுக்காக மறுமொழி உரைத்தார். இதைக் கண்டு வெகுண்ட திருமலை நாயக்கர் சடைக்கன் சேதுபதியைச் சிறையில் போட்டதாகவும் திருமாலின் அருளால் சடைக்கன் சேதுபதியின் விலங்குகள் தாமாக நீங்கியதாகவும் ராமப்பையன் அம்மானை தெரிவிக்கிறது. அதைக் கேட்ட திருமலை நாயக்கர் திருமாலின் அருள் பெற்ற சடைக்கன் தவறு செய்ய மாட்டார் என்று கருதி அவரை விடுதலை செய்ததாகவும் அது குறிப்பிடுகிறது. ஆனால் ஆய்வாளர்கள், சடைக்கன் சேதுபதியின் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்த திருமலை நாயக்கர், அவரையே ராமநாதபுரம் அரசை ஆளப் பணித்தார் என்று கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் சடைக்கன் சேதுபதியிடம் ராமநாதபுரம் அரசு ஒப்படைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் போரில் ராமப்பையர் இறந்துவிட்டதாக நெல்சன் தெரிவிக்கிறார். ஆனால் இது உண்மையல்ல என்பதை ராமப்பையன் அம்மானை தெளிவாக்குகிறது. மதுரைக்குத் திரும்பிய ராமப்பையருக்கு பல வெகுமதிகள் கொடுத்து அவரை யானை மீது ஊர்வலமாக திருமலை நாயக்கர் வரச்செய்ததாகவும் அது கூறுகிறது. அது மட்டுமல்ல, திருமலை நாயக்கரின் சார்பில் கோவாவுக்கு அவர் தூதுவராகச் சென்றதை ஏசு சபைக் கடிதம் ஒன்று தெரிவிக்கிறது. ஆகவே ராமநாதபுரம் சேதுபதிகளுடனான போருக்குப் பின்னும் சில ஆண்டுகள் அவர் உயிருடனிருந்தது தெளிவு.
(தொடரும்)