Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி

மதுரை நாயக்கர்கள் #16 – திருமலை நாயக்கர் – தன்னாட்சி

இரண்டாம் சடைக்கன் சேதுபதியிடம், ராமநாதபுரம் அரசைத் திருப்பி அளித்த பிறகு சேது நாட்டின் தொல்லைகள் ஒருவாறு ஓய்ந்துவிட்டது என்று திருமலை நாயக்கர் எண்ணியிருந்தார். ஆனால் அது விரைவிலேயே பொய்த்துப் போனது. நாடு திரும்பிய சடைக்கன் சேதுபதி, தன்னுடைய மருமகனான வன்னித்தேவர் போர்க்களத்தில் இறந்துபட்டதால் தன் சகோதரியின் மகனான ரகுநாதருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவைத்தார். ஏற்கனவே அரசுப் பதவி கைவிட்டுப் போன புகைச்சலில் இருந்த ‘தம்பி’க்கு இது மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. அதனால் தகுந்த சமயம் பார்த்து பொயு 1645ம் ஆண்டு அவன் சடைக்கன் சேதுபதியைக் கொன்றுவிட்டான். சேதுநாட்டின் அடுத்த அரசராகப் பொறுப்பேற்க ரகுநாத சேதுபதிக்கு அவைப்பிரமுகர்கள் ஆதரவு தெரிவிக்கவே மீண்டும் ஒருமுறை அங்கே உள்நாட்டுப் போர் மூளும் சூழ்நிலை உருவானது.

இதைக் கவனித்த திருமலை நாயக்கர் இம்முறை அரசுரிமைக்குப் போரிட்டவர்களிடையே சமாதானம் செய்துவைக்கத் தீர்மானித்தார். ரகுநாதரையும் தம்பியையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் சேது நாடு மூன்றாகப் பிரிக்கப்பட்டது அதில் ராமநாதபுரத்தை ரகுநாதத் தேவரும், சிவகங்கையைத் தம்பியும் திருவாடானையை ரகுநாதத் தேவரின் சகோதரர் தணக்கத் தேவரும் அரசாள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாகவே தணக்கத் தேவரும் தம்பியும் அடுத்தடுத்து இறந்து போகவே, சேதுபதிகளின் சீமை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ரகுநாதத் தேவரே அதன் சேதுபதியாகப் பொறுப்பேற்றார். திறமை மிக்கவரும் வீரருமான ரகுநாதத் தேவரின் ஆட்சியில் அமைதி நிலவியது. ராமேஸ்வரம் தீவையும் கோவிலையும் அழகுபடுத்தினார் ரகுநாத சேதுபதி. அதனால் ராமேஸ்வரக் காவலர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். திருமலை நாயக்கரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் ரகுநாத சேதுபதி. அவர் செய்த உதவிகள் பலவற்றைப் பின்னால் பார்ப்போம்.

மீண்டும் விஜயநகரச் சிக்கல்கள்

இதற்கிடையில் விஜயநகர ஆட்சியில் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கின. வேங்கடருக்குத் தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த ஶ்ரீரங்கன், மதுரைப் படைகள் பீஜப்பூர் சுல்தானை விரட்டியடித்த பிறகு சிறிது காலம் சும்மா இருந்தான். ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் வேங்கடருக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய சொந்தச் சகோதரன் மகனே இப்படித் தொடர்ந்து பிரச்சனைகள் கொடுப்பதால் மனமுடைந்த வேங்கடர், அரசுப் பதவியைத் துறந்து சித்தூர்க் காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். அங்கேயே இறந்தும்போனார்.

அரசனில்லாத விஜயநகர ஆட்சிப் பொறுப்பை ஶ்ரீரங்கன், மூன்றாம் ஶ்ரீரங்கர் என்ற பெயரோடு ஏற்றுக்கொண்டார். தமக்கு நெருங்கியவரான வேங்கடருக்குத் துரோகம் செய்து ஶ்ரீரங்கர் அரியணையில் அமர்ந்தது திருமலை நாயக்கருக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அரசுப் பதவிக்கு மரியாதை கொடுத்து முதலில் திருமலை நாயக்கர் அவரோடும் சுமுகமாகவே போக முயன்றார். ஶ்ரீரங்கர் பெயரில் திருமலை நாயக்கர் அளித்த தானங்களைப் பற்றிய சில சாசனங்கள் அதற்குச் சான்றாக உள்ளன. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கோல்கொண்டா சுல்தானின் படையெடுப்பை ஶ்ரீரங்கர் எதிர்கொள்ள நேரிட்டது. அதை முறியடிப்பதற்காக தன்னுடைய நண்பனான பீஜப்பூர் சுல்தானிடம் உதவி கேட்டார் ஶ்ரீரங்கர். அதை ஏற்றுக்கொண்டு பீஜப்பூர் சுல்தானும் ஒரு படையை அனுப்பினான். அதை சும்மா அனுப்புவானா ? பெரும் தொகை ஒன்றை அதற்காகப் பெற்றுக்கொண்டான் பீஜப்பூர் சுல்தான்.

பீஜப்பூர் படைகளின் உதவி கொண்டு 1644ம் ஆண்டு நடந்த இந்தப் போரில் கோல்கொண்டா சுல்தானை ஶ்ரீரங்கர் முறியடித்தாலும், தான் பீஜப்பூர் சுல்தானுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை தமிழகத்து நாயக்கர்களிடமிருந்து வசூலித்தார் ஶ்ரீரங்கர். இதனைத் திருமலை நாயக்கர் ரசிக்கவில்லை. சிற்றரசர் ஒருவர் பேரரசருக்குக் கப்பம் கட்டுவது, அவருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் பேரரசிடமிருந்து படைகள் வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் இங்கே மீண்டும் மீண்டும் பேரரசைக் காப்பாற்ற தாம் படைகளை அனுப்ப வேண்டிய நிலையும் தமக்கே ஏதாவது ஆபத்து நேரிட்டால் யாரும் காப்பாற்ற வராத நிலையும் இருப்பதைக் கண்ட திருமலை நாயக்கர், விஜயநகர அரசுக்கு ஏன் கப்பம் கட்டவேண்டும் என்று யோசித்தார். அக்கால கட்டத்திலேயே திருமலை மன்னருக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடி இருபது லட்சம் ரூபாய்கள். அதில் மூன்றில் ஒரு பகுதியை, அதாவது 40 லட்சம் ரூபாயை கப்பமாக விஜயநகர அரசுக்குக் கட்டவேண்டியிருந்தது. இவ்வளவு தொகையை எந்தப் பயனும் இல்லாமல் கப்பமாகக் கட்ட திருமலை நாயக்கர் விரும்பவில்லை.

தாம் மட்டுமே முரண்பட்டால் அதில் சிக்கல்கள் வரும் என்று கருதி, தமிழகத்தின் மற்ற இரண்டு நாயக்கர்களான செஞ்சி நாயக்கரிடமும் தஞ்சை நாயக்கரிடமும் பேச்சு வார்த்தை நடத்தத் தீர்மானித்தார் திருமலை நாயக்கர். இதற்கான ‘உச்சி மாநாடு’ ஒன்றை திருச்சிக்கு அருகில் கூட்டினார். இந்த மாநாட்டு விவரங்களைப் பற்றி ஏசு சபை உறுப்பினரான பாதிரியார் டி கோஸ்டா பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“திருச்சிக்கு அருகே மூன்று பெரிய வரவேற்புப் பந்தல்கள் அமைக்கப்பட்டன. மதுரையிலிருந்து 30,000 போர் வீரர்களோடு திருமலை நாயக்கர் திருச்சிக்குச் சென்று மற்ற இரண்டு நாயக்கர்களுக்காகக் காத்திருந்தார். அப்போது தஞ்சையை ரகுநாத நாயக்கரின் மகனான விஜயராகவ நாயக்கர் ஆண்டுகொண்டிருந்தார். அவரும் ஆயிரக்கணக்கான போர் வீரர்களோடு திருச்சியை அடைந்தார். செஞ்சி நாயக்கர் ஒரு லட்சம் போர் வீரர்களோடு வந்தார். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இம்மூவரும் அங்கே சந்தித்தனர். அரைமணி நேரம் அன்போடு உரையாடிய பின்னர் அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர். மறுநாள் போர்ச்சுகீசிய முறைப்படி சிறப்பு விருந்து ஒன்றிற்கு திருமலை நாயக்கர் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்து முடிந்ததும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின் பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு தஞ்சை அரண்மனைக்கு விருந்துக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் தஞ்சை அரண்மனையில் தீ விபத்து ஏற்படவே விஜயராகவ நாயக்கர் உடனே தஞ்சைக்குத் திரும்பிச் சென்றார்.

மூன்று நாட்களுக்குப் பிறகும் விஜயராகவ நாயக்கர் வராததால், திருமலை நாயக்கரும் செஞ்சி நாயக்கரும் தஞ்சைக்குச் சென்று அரண்மனையில் அவரைச் சந்தித்தனர். பேச்சுவார்த்தை அங்கே நடைபெற்றது. ஶ்ரீரங்கர் இளைஞராகவும் தடுமாறும் புத்தி உள்ளவராகவும் இருப்பதால் அவரோடு உறவு கொள்வது ஆபத்தில் முடியும் என்று திருமலை நாயக்கர் வலியுறுத்தினார்.ஆகவே அவருக்குக் கப்பம் கட்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் மாறாக அவரோடு தாம் மூவரும் சண்டையிட்டு தங்கள் வலிமையை நிலை நிறுத்தலாம் என்றும் கூறினார். அதை செஞ்சி நாயக்கர் ஆதரித்தார். ஆனால் விஜயராகவ நாயக்கர் இதற்குச் சம்மதிக்கவில்லை. ஶ்ரீரங்கருடைய படைபலம் பெரிது என்றும் நம் மூவரையும் எளிதாக அவர் வென்று விடுவார் என்றும் விஜயராகவர் கூறினார். போர் ஒன்று ஏற்பட்டால் நாடு ஒட்டுமொத்தமாகச் சீரழிந்துவிடும் என்று அவர் சொன்னார். ஆனால் கப்பம் கட்டுவதால் எந்த லாபமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திய திருமலை நாயக்கர், அதற்குப் பதிலாக அன்பளிப்புப் பொருட்களை அளிக்கலாம் என்றார். எப்படியும் ஶ்ரீரங்கர் தங்கள் மீது படையெடுப்பார் என்று உறுதிபடக் கூறினார் திருமலை நாயக்கர்”.

இப்படிப் போய்க்கொண்டிருந்த பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டாமல் நிறைவடைந்தது என்கிறது ஏசு சபைக் கடிதம். வெறும் கையோடு திருமலை நாயக்கர் மதுரை திரும்பினார். இந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்களை விஜயராகவ நாயக்கர், ஶ்ரீரங்கரிடம் “போட்டுக் கொடுத்துவிட்டார்”. ஆத்திரமடைந்த ஶ்ரீரங்கர், தன்னை எதிர்த்துக் குரல் கொடுக்கும் திருமலை நாயக்கரை அழிக்காவிட்டால் தமக்கு ஆபத்து நேரும் என்று நினைத்து படை ஒன்றைத் திரட்டி மதுரை மீது போரிட வந்தார். 1645ம் ஆண்டில் மதுரை அரசுக்கும் விஜயநகர அரசுக்கும் இடையில் பெரும்போர் ஒன்று நிகழும் சூழ்நிலை நிலவியது. அப்போது தன்னுடைய வலதுகரம் போன்ற ராமப்பையரை இழந்திருந்த திருமலை நாயக்கர், அரசைக் காப்பாற்ற ஒரு யுக்தி செய்தார். கோல்கொண்டாவின் சுல்தானுக்குப் பணம் கொடுத்து அவனை வேலூர் மீது படையெடுத்து வரத் தூண்டினார் (சிலர் பீஜப்பூர் சுல்தான் என்று கூறுவார்கள்). கரும்பு தின்னக் கூலியா என்ற மகிழ்ச்சியோடு கோல்கொண்டாவின் சுல்தான் வேலூரை நோக்கிப் படையோடு வந்தான். முதலுக்கே மோசம் வந்துவிடும் என்று அஞ்சிய ஶ்ரீரங்கர், மதுரைப் படையெடுப்பைக் கைவிட்டு வேலூருக்குச் சென்றார்.

மிகுந்த சிரமப்பட்டு கோல்கொண்டா சுல்தானின் படைகளை முறியடித்துத் துரத்தினார் ஶ்ரீரங்கர். ஆனால் சில நாட்களிலேயே படைகளை மேலும் சேர்த்துக்கொண்டு மீண்டும் போருக்கு வந்தான் கோல்கொண்டா சுல்தானின் படைத்தலைவனான மீர் ஜூம்லா. இம்முறை ஶ்ரீரங்கரால் அவனைச் சமாளிக்க முடியவில்லை. போர்க்களத்திலிருந்து தோற்றோடி தென் தமிழகம் வந்தார் ஶ்ரீரங்கர். தமிழகத்து நாயக்கர்களின் உதவி கிடைத்தால் அன்றி, சுல்தான்களை முறியடிப்பது இயலாத விஷயம் என்பதைப் புரிந்துகொண்ட ஶ்ரீரங்கர் அவர்களிடம் உதவி கேட்டார். ஏற்கனவே ஶ்ரீரங்கர் மீது வெறுப்புடன் இருந்த திருமலை நாயக்கரும் செஞ்சி நாயக்கரும் கையை விரித்துவிட்டனர். விஜயராகவ நாயக்கர் படைகளைத் தர முடியாது ஆனால் தன்னால் அடைக்கலம் அளிக்க முடியும் என்று கூறவே தஞ்சைக்கு வடக்கில் உள்ள காடுகளில் சிறிது காலம் ஶ்ரீரங்கர் வாழ நேரிட்டது. இதற்கிடையில் வேலூரைக் கைப்பற்றிக் கொண்ட கோல்கொண்டா சுல்தானின் தளபதி, அடுத்ததாக செஞ்சிக் கோட்டையின் மீது தன் பார்வையைச் செலுத்தினான்.

தன்னுடைய நண்பரான செஞ்சி நாயக்கர் அபாயகரமான நிலையில் இருப்பதைக் கண்ட திருமலை நாயக்கர் அவருக்கு உதவத் தீர்மானித்தார். முப்பதாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டிக்கொண்டு செஞ்சிக்கு விரைந்தார் அவர். போதாதற்கு பீஜப்பூர் சுல்தானிடம் படையுதவி கேட்டுத் தூதனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட பீஜப்பூர் சுல்தான், பதினேழாயிரம் வீரர்களை அனுப்பினான். செஞ்சிக்கோட்டையில் நடந்த போரில் முதலில் நாயக்கரின் படை வெற்றி பெற்றது. ஆனால் மீர் ஜும்லா, தந்திரமாக “ஒரே மதத்தில் உள்ளோர்கள் பிரிந்தது போதும்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பீஜப்பூர் சுல்தானோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு கோட்டையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பினான். தனக்கு ஆதரவாக வந்த பீஜப்பூர் படைகள் செய்த துரோகத்தினால் செய்வதறியாது திகைத்தார் திருமலை நாயக்கர். இது செஞ்சிப் படைகளின் ஆத்திரத்தையும் கிளறிவிடவே அவர்களும் திருமலை நாயக்கருக்கு எதிராகத் திரும்பினார்கள். அங்கே ஏற்பட்ட குழப்பத்தில் பீஜப்பூரின் வீரர்கள் செஞ்சியை எளிதாகக் கைப்பற்றினர். இது நடந்தது 1646ம் ஆண்டு.

தனிமைப்படுத்தப்பட்ட திருமலை நாயக்கர், வேதனையோடு மதுரை திரும்பினார். ஶ்ரீரங்கர், தஞ்சாவூரில் இருப்பதை அறிந்த பீஜப்பூர் படைத் தளபதி தஞ்சையை நோக்கி வந்தான். அந்தப் போரில் விஜயராகவ நாயக்கர் படுதோல்வி அடைந்தார். ஆனால் ஶ்ரீரங்கர் மைசூருக்குத் தப்பிச் சென்றார்.அவருக்கு அங்கே மைசூர் அரசரான காந்திரவ நரசர் அவருக்கு அடைக்கலம் அளித்தார். தஞ்சையை வென்ற பீஜப்பூர் படைகள் மதுரையை நோக்கி வந்தன. தீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பது போல பீஜப்பூர் படைகள் தன் மீதே போர் தொடுக்க வருவதை அறிந்த திருமலை நாயக்கர் ஆத்திரமடைந்தார். அவருக்கு உதவியாக ரகுநாத சேதுபதி படைகளுடன் வந்தார். மதுரையைச் சுற்றியிருந்த கள்ளர் சமூகத்தினரும் திருமலை நாயக்கருக்கு உதவியாக நின்றனர். மதுரைப் படை பீஜப்பூர் சேனையோடு தீரத்தோடு போரிட்டு அவர்களைத் தோற்கடித்துத் துரத்தியது. தமக்கு உதவிய ரகுநாத சேதுபதிக்கு திருமலை சேதுபதி என்ற விருதை அளித்துக் கௌரவித்தார் திருமலை நாயக்கர்.

பீஜப்பூருக்கு ஏற்பட்ட தோல்வியைக் கேள்விப்பட்ட ஶ்ரீரங்கர் மைசூர் அரசரின் துணையோடு அவர்களை வென்று மீண்டும் விஜயநகர ஆட்சியை மீட்க முயன்றார். இந்தக் காலகட்டத்தில் திருமலை நாயக்கர் அவர்களோடு சேர்ந்து சுல்தான்களை எதிர்த்திருந்தால் வரலாற்றின் போக்கே மாறியிருக்கும் என்று நெல்சன் கருதுகிறார். ஆனால் திருமலை மன்னர் அப்படிச் செய்யவில்லை. தொடர்ந்து மைசூர் அரசர்களால் தமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை நினைத்தோ என்னவோ அவர் எந்த உதவியையும் அளிக்கவில்லை. இந்தப் போருக்கான பணத்தை வேலூரின் மக்களிடமும் திருப்பதி கோவிலிலிருந்தும் திரட்டிய ஶ்ரீரங்கர், மைசூர்ப்படையோடு சேர்ந்து பீஜப்பூரை எதிர்த்தார். ஆனால் அந்தப் போரில் படுதோல்வி அடைந்து அவர் திரும்ப நேரிட்டது.

இம்முறை சுல்தான்களால் தமக்கு ஏதும் பிரச்சனைகள் வரக்கூடும் என்று நினைத்து மைசூர் அரசரும் அவருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை. ஆகவே பெத்தனூரில் தஞ்சமடைந்த ஶ்ரீரங்கர், தமது அரசைப் பெற பல வகையிலும் முயன்றார். 1653ல் ராமராவ் என்பவனை முகலாய அரசன் ஔரங்கசீப்பிடம் தூதனுப்பி பீஜப்பூர் சுல்தானிடமிருந்து தமக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரினார். அதற்கு ஔரங்கசீப் எந்த பதிலையும் அளிக்கவில்லை. 1655ம் ஆண்டு மீண்டும் ஒருவனைத் தூதனுப்பி இரண்டரைக் கோடி ரூபாயும் இருநூறு யானைகளும் அனைத்து அணிகலன்களைக் கொடுப்பதாகவும் தக்காணத்து சுல்தான்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்தால் கப்பம் கட்ட இசைவதாகவும் ஏன் இஸ்லாமிய மதத்தைத் தழுவக்கூடத் தயார் என்றும் ஶ்ரீரங்கர் தெரிவித்ததாக பேராசிரியர் ஜாதுநாத் சர்க்கார் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கும் ஔரங்கசீப் அசைந்து கொடுக்கவில்லை. அதன்பின் போக்கிடமில்லாமல் வாரிசுமில்லாமல் ஶ்ரீரங்கர் 1672ம் ஆண்டு மறைந்துபோனார். அவரோடு ஹரிஹர, புக்கரால் தோற்றுவிக்கப்பட்ட விஜயநகரப் பேரரசும் மறைந்துபோனது.

இவை எல்லாம் நடப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பே, அதாவது பீஜப்பூரின் மீது அடைந்த வெற்றிக்குப் பின், திருமலை நாயக்கர் தன்னாட்சி பெற்று சுதந்தரமாக மதுரை அரசை ஆட்சி செய்யலானார்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *