சென்ற பகுதிகளில் திருமலை நாயக்கர் செய்த போர்கள் பற்றித் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். அதனால், தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதுமே போர்களில் கழித்தவர் திருமலை நாயக்கர் என்று எண்ணவேண்டாம். ஒருபுறம் அவ்வப்போது போர்கள் நடந்தபடி இருக்கும்போதே, நாட்டின் நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி அதைச் சீர்திருத்திய பெருமை திருமலை நாயக்கருக்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்கள் திருமலை நாயக்கருக்கு அடங்கி நடந்தனர். நாட்டின் நிர்வாகம் குழப்பமில்லாமல் நடந்தது. விளைச்சல் அதிகமாகி வருவாயும் பெருகியது. மதுரை நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகபட்ச வருமானம் வந்தது திருமலை நாயக்கரின் காலத்தில்தான். அதனால்தானோ என்னவோ அவர் அதை விஜயநகர அரசர்களிடம் பங்குபோட விரும்பாமல், முடிவில் தன்னாட்சி பெற்றார்.
திருமலை நாயக்கர் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் மதுரைக் கோவிலில் அவர் செய்த சீர்திருத்தங்கள் முதன்மை பெறுகின்றன. தன்னுடைய தலைநகரை மதுரைக்கு அவர் மாற்றியதற்கு ஒரு முக்கியமான காரணமாக அவருடைய நோயை ஆலவாய் அண்ணல் குணப்படுத்தியதும் அதற்காக அவர் செய்துகொண்ட வேண்டுதலும் என்பதைப் பார்த்தோம். ஐந்து லட்சம் பொன்களுக்கு மதுரைக் கோவிலில் திருப்பணியும் திருவாபரணங்களும் செய்து வைப்பேன் என்ற தனது வேண்டுதலை, மதுரை வந்ததும் நிறைவேற்ற திருமலை நாயக்கர் முயன்றார். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை.
அரியநாதருக்கு பின், நாயக்கர் அரசில் எவரும் கோவிலின் நிர்வாகத்தில் சரியான கவனம் செலுத்தாததனாலும் சில ஆண்டுகள் தலைநகரமே மதுரையில் இயங்காததனாலும் மதுரைக் கோவிலின் நிலைமை சீர்கெட்டிருந்தது. திருமலை நாயக்கர் மதுரை வந்தபோது கோவிலின் நிர்வாகம் அபிஷேகப் பண்டாரம் என்பவரிடம் இருந்தது. அவர் தற்கால வழக்கப்படி கோவிலின் வருமானம் என்பது நிர்வாகிகளுக்கே என்ற கொள்கை உள்ளவராக இருந்தார். பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் கொள்ளையடிக்கப்பட்டு அவர் வீட்டில் சேர்ந்தன. ஆகவே பூஜைகள் சரிவர நடைபெறவில்லை. மீனாக்ஷியே திருமலை நாயக்கரின் கனவில் தோன்றி ‘திருமலை என்னை யாரும் கவனிக்கவில்லையே’ என்று சொன்னாதாக மதுரைப் பக்கம் இன்னமும் சொல்லப்படுவது உண்டு. அந்த அளவிற்குக் கோவிலின் நிலைமை இருந்தது. ஆனால் அதிரடியாக அபிஷேக பண்டாரத்தின் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலை உருவாக்கிக்கொள்ள திருமலை நாயக்கர் விரும்பவில்லை. அவருடைய பணத்தாசையைக் கண்டுகொண்ட திருமலை நாயக்கர் அவருக்கு நிலங்களையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து கோவிலின் நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ஆனால் அபிஷேக பண்டாரத்திடம் கொஞ்சம் நீதி உணர்வு இருந்தது. ஆகவே,திருமலை நாயக்கர் கொடுத்த பணத்தில் கொஞ்சம் எடுத்து கோவிலில் ஒரு பிரகாரம் ஒன்றைக் கட்டி முடித்து அங்கே தனக்கு ஒரு சிலையையும் வைத்துக்கொண்டார். சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரம் அவர் கட்டியதே என்று சொல்லப்படுகிறது.
ஒருவழியாகக் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்ட திருமலை நாயக்கருக்கு அடுத்த சிக்கல் கோவில் பட்டர்களிடமிருந்து வந்தது. கோவில் பூஜைகளை குலசேகர பாண்டியர் வகை என்றும் விக்கிரமபாண்டியர் வகை என்றும் இரு குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இதில் குலசேகர பட்டர் வம்சம் கம்பண்ணரின் காலத்திலிருந்தே இருந்து வந்தது. நாயக்கர்கள் காலத்தில் விக்கிரமபாண்டியர் வகையினர் நியமிக்கப்பட்டனர். பூஜை முறைகளைக் கவனித்துக்கொள்வதில் இரு தரப்பினருக்கும் அடிக்கடி பூசல் மூண்டது. இதனால் வழிபாடுகளுக்கு தடங்கல் ஏற்பட்டது. இதைக் கவனித்த திருமலை நாயக்கர், அவர்களுக்குள் சமாதானம் செய்து வைத்து கோவிலின் பூஜைமுறைகளை பின்வருமாறு வகைப்படுத்தினார்
- சிவாச்சார்யர் – பூஜைகள், உற்சவம், பிரதிஷ்டை, பிராயச்சித்தங்கள் மேற்பார்வை, சீடர்களைத் தயார் செய்தல்
- அர்ச்சகர் – கருவறையில் அர்ச்சனைகள், நாள் பூஜை ஆகியவற்றைச் செய்தல்
- ஸ்தானீகர் (தேவகார்யம்) – உற்சவருக்கு அலங்காரம் செய்து வீதி உலா செய்வித்தல். தொடர்பான விழாக்களை நடத்துதல்
- பாசகர் – இறைவனுக்கான நைவேத்தியங்களைத் தயார் செய்தல்
- பரிசாரகர் – சிவாச்சார்யர் / அர்ச்சகருக்கு உதவி செய்தல். விளக்கேற்றல்.
- திருமாலை – பூஜைக்கு வேண்டிய பூக்கள், மாலைகளைத் தயார் செய்தல்
- வேதபாராயணம் – வேதங்களை ஓதுதல், யாகசாலையில் யாகங்களைச் செய்தல், உற்சவங்களுக்கு முன்பு நடைபெறும் நியமங்களைச் செய்தல்.
மேற்கண்ட பூஜைப் பணிகளை விக்கிரமபாண்டியர் பட்டர் வகைக்கும் குலசேகர பட்டர் வகைக்கும் பிரித்துக் கொடுத்த திருமலை நாயக்கர், ஒரு மாதத்தில் கோவில் வேலைகளை விக்கிரமபாண்டியர் வகையினர் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மறு செவ்வாய் வரை 16 நாட்களும் குலசேகர பாண்டியர் வகையினர் செவ்வாய் மாலை முதல் ஞாயிறு மாலை வரை 12 நாட்களும் சுழற்சி முறையில் கவனித்து வருமாறு செய்தார். விழாக்களில் பூஜை முறைக்கேற்ப அந்தந்த வகைப் பட்டர்களுக்கு முதல் மரியாதை அளிக்கும்படி ஏற்படுத்தினார். திருவிழாக்களில் கட்டளை இருதரப்பினருக்கும் சரியாக வருமாறு செய்தார். கோவில் உற்சவங்களில் இரு பிரிவினருக்கும் தகுந்த இடத்தைக் கொடுத்து கௌரவித்தார். இந்த ஒழுங்குபடுத்தலின் காரணமாக, பட்டர்களின் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பூசல்கள் நின்று பூஜைகள் இடையூறுகள் இல்லாமல் வழக்கம் போல நடைபெற ஆரம்பித்தன.
அடுத்ததாக தன்னுடைய கவனத்தைக் கோவில் ஊழியர்கள் மேல் செலுத்தினார் திருமலை நாயக்கர். அபிஷேகப் பண்டாரம் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தவரை, தலைவரே கொள்ளையடிக்கும் போது நமக்கென்ன என்ற எண்ணத்தில் கோவில் பணத்தை தங்களிஷ்டப்படி எடுத்துச் செலவு செய்துகொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள். திருமலை நாயக்கர் கையில் கோவில் நிர்வாகம் வந்ததும் அப்படிச் செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துப் பேசிய திருமலை நாயக்கர் ஐராவத நல்லூர், வலையபட்டி, வலையன்குளம், நெடுமதுரை, பெரிய ஆலங்குளம், சொக்கநாதன்பட்டி, ஆண்டிப்பட்டி, தாதன்பட்டி, சின்னமநாயக்கன் பட்டி, போடிநாயக்கன் பட்டி, கொண்டையன் பட்டி, தும்பிச்சி நாயக்கன் பட்டி, சம்பக்குளம், விராலிபட்டி, கிண்ணிமங்கலம், சடைச்சிபட்டி உள்ளிட்ட இருபத்தி ஐந்து கிராமங்களை அவர்களின் நிர்வாகத்தில் விட்டு, அந்த கிராமங்களிலிருந்து கிடைக்கக்கூடிய 12000 பொன் வருவாயை கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார். இதையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர் அளித்தார்
- நிர்வாக / சிப்பந்திப் பொறுப்பு கட்டளை – இந்த வகைக் கிராமங்களைக் கவனித்துக் கொள்பவர்கள், சில குறிப்பிட்ட கோவில் பணிகளைக் கவனிக்கவேண்டும்
- அர்ச்சனாபாகம் – இந்த வகைக் கிராமங்களிலிருந்து கிடைக்கூடிய வருவாய், நித்தியப்படி பூஜைகளுக்கு ஆக வேண்டிய செலவுகளுக்காக அளிக்கப்படவேண்டும்
- அறக்கட்டளை – இந்த வகை கிராமங்களில் நிலங்கள் இறையிலியாக வழங்கப்பட்டு அவற்றிலிருந்து வரும் வருவாய் சிறப்பு பூஜைகளுக்கும் திருவிழாக்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.
திருடனின் கையில் சாவியைக் கொடுத்தது போன்ற இந்த நடவடிக்கையின் காரணமாக அவர்கள் இந்த ஏற்பட்டுக்கு ஒப்புக்கொண்டு அந்த கிராம நிர்வாகங்களைக் கவனிக்கலாயினர். இந்தக் கட்டளைகளிலிருந்து இன்று வரை மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் ஆறு கால பூஜைகள், வசந்த உற்சவம், தெப்ப உற்சவம் போன்ற திருவிழாக்கள் ஆகியவற்றுக்குத் தேவையான பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திருமலை நாயக்கர் கட்டளையில் ஆவணப்படுத்தப்பட்ட சில செலவினங்களைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்தியிருக்கிறார்கள்
ஆவணி மூலத் திருநாள் – 100 பணம்
தெப்பத் திருநாள் – 150 பணம்
தெப்பத் திருவிழாவின் போது மைய மண்டப அலங்காரம் – 50 பணம்
வேதபாராயணம் செய்யும் பத்து பிராமணர்களுக்கு – ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 4 சக்கரங்கள்
நாதஸ்வர வித்வான்கள் இருவருக்கு – ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 4 சக்கரங்கள்
குடை / சுருட்டி தாங்கி வருவோருக்கு – 15 பணம்
யானைக்குத் தீனி வாங்க – மாதம் ஒன்றுக்கு 10 சக்கரம்
மேற்குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட செலவினங்களிலிருந்து எந்த அளவிற்குத் துல்லியமாக கோவிலின் செலவுகள் கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன என்று தெரிந்துகொள்ளலாம். இவை ஒழுங்காகச் செலவிடப்படுகின்றதா என்று மேற்பார்வை பார்க்க ஶ்ரீபண்டாரக் கணக்கர் என்ற ஒரு அலுவலரை ஏற்படுத்தி அவருக்குத் துணையாக பல கணக்கர்களையும் திருமலை நாயக்கர் நியமித்தார்.
சகல அதிகாரங்களும் கொண்ட அரசராக இருந்தாலும், கோவில் நிர்வாக விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதிரடி முடிவுகளை அமல்படுத்தாமல், அமைதியான முறையில் மதுரைக் கோவிலை திருமலை நாயக்கர் சீரமைத்த பணி பாரட்டுக்குரியது. இது போன்ற சீர்திருத்தங்களை மதுரைக் கோவிலில் மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம், அழகர் கோவில், திருவாதவூர், ஶ்ரீவில்லிப்புத்தூர் போன்ற அருகிலுள்ள பல கோவில்களிலும் திருமலை நாயக்கர் மேற்கொண்டார். அதன்பின், தான் வாக்களித்தபடி பல்வேறு திருவாபரணங்களை செய்து வைத்தார்.
குதிரை வாகனத்தின் போது சுவாமி அணியும் இரத்தினத்தாலும் முத்தாலும் செய்யப்பட்ட தலைப்பகை, நாயக்கர்களின் ரத்தினக் கொண்டை, திருக்கல்யாணக் கிரீடம், நீலநாயக்கப் பதக்கம் (பின்னாளில் விக்டோரியா மகாராணியார் இதன் அழகில் மயங்கி இந்த ஆபரணத்தை இங்கிலாந்து கொண்டு சென்றாராம். நல்லவேளையாக பிரிட்டிஷ் கஜானாவிற்குச் செல்லாமல் இது திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது), குதிரை ரத்தின அங்கவடி, கண்டபேருண்ட பட்சிப் பதக்கம், ரத்தின சூரியகாந்திப்பூ, ரத்தின வெண்டயம், நாகர் ஒட்டியாணம், துரைப் பதக்கம், சங்கு சக்கரப் பதக்கம், ரத்தினச் செங்கோல் (இன்றும் மீனாக்ஷி அம்மன் பட்டாபிஷேகத்தில் இந்தச் செங்கோலே அணிவிக்கப்படுகிறது), பள்ளியறைக் காளாஞ்சி, சொர்ண கும்பா, பவளக்கொடி மாலை ஆகியவை திருமலை நாயக்கர் செய்துகொடுத்த ஆபரணங்களில் சில.
அடுத்து திருமலை நாயக்கர் செய்த திருப்பணிகளைப் பார்ப்போம்.
(தொடரும்)