Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #18 – திருமலை நாயக்கர் – திருப்பணிகளும் திருவிழாக்களும்

மதுரை நாயக்கர்கள் #18 – திருமலை நாயக்கர் – திருப்பணிகளும் திருவிழாக்களும்

விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்து மதுரைக்கோவிலில் அதன் இடிபாடுகளைச் செப்பனிடும் பணிகளும் சிறிய திருப்பணிகளும் நடந்து வந்தாலும், கோவில் திருப்பணிகள் அதிகமான அளவில் நடந்தது திருமலை நாயக்கரின் காலத்தில்தான். அவர் செய்த பணிகளைப் பற்றி திருப்பணி மாலை பின்வருமாறு பட்டியலிடுகிறது.

தாணிபுகழ் மேருகிரி பலவுரு வெடுத்து நற்
சந்நிதா னத்தில்வந்து
தவமுற்ற தென்ன நூற் றிருபத்து நாலுகா
றன்னிலே யெந்தநாளும்

திரமான புதுமையா மண்டபங் கட்டியே
சித்திரமு மெழுதியந்தச்
செய்யமண் டபமணியு மாலையென விருபாற்
சிறந்தமண் டபமியற்றிக்

குரவார் கருங்குழ லங்கயற் கண்ணம்மை
கொன்றையணி சொக்கேசனார்
கூடிவிளை யாடியும் வசந்தமெனும் நல்விழாக்
கொண்டருள வேசெய்தனன்

பாராச சேகரன் பரராச பூஷணன்
பரராச ராசதிலகன் பாராசர்
பணிமுத்து க்ருஷ்ணப்ப பூபனருள்
பாலதிரு மலைபூபனே.

மதுரையில் கோடைக்காலம் தோறும் வசந்த விழா நடைபெறும்.அந்த விழா நடைபெறுவதற்கு உகந்த மண்டபம் கோவிலில் இல்லை என்பதைக் கண்ட திருமலை நாயக்கர், கிழக்கு கோபுர வாசலுக்கு எதிராக வசந்த மண்டபம் ஒன்றைக் கட்டினார். அது புது மண்டபம் என்ற பெயரில் இப்போது அழைக்கப்படுகிறது.

புதுமண்டபம்

தம்முடைய சிற்பம் உட்பட, நாயக்க மன்னர்களுடைய சிற்பங்களை அந்த மண்டபத் தூண்களில் வடிக்கச் செய்தார் திருமலை மன்னர். அது தவிர புராண, இதிகாசங்களிலிருந்து பல தெய்வ உருவங்களையும் அங்கே சித்திரங்களாகவும் சிலைகளாகவும் வடிக்கச் செய்தார். அருமையான சிற்பங்களோடு கூடிய இந்த மண்டபத்தைச் சுற்றிலும் அகழி போன்ற பாதையை வெட்டி அது முழுவதும் நீர் நிரப்பச் செய்து, வசந்த விழாவின் போது மீனாக்ஷி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் அங்கு எழுந்தருளச் செய்தார் திருமலை நாயக்கர். இது தொடங்கி பல திருப்பணிகளில் திருமலை நாயக்கருக்கு வழிகாட்டியவர் ஶ்ரீ நீலகண்ட தீட்சிதர்.

நீலகண்ட தீட்சிதர்

காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் நீலகண்ட தீட்சிதர். மஹான் அப்பைய தீட்சிதரின் சகோதரரின் மகன் இவர். தன்னுடைய பெரிய பாட்டனாரிடம் கல்வி பயின்று சமஸ்கிருதத்தில் பெரும் புலமை பெற்று விளங்கினார் தீட்சிதர்.

நீலகண்ட தீட்சிதர்
அப்பைய தீட்சிதரிடமிருந்து நூல்களைப் பெறும் நீலகண்ட தீட்சிதர்

தன்னுடைய பாட்டனாரின் ஆசியைப் பெற்று மதுரை வந்த நீலகண்ட தீட்சிதர், மீனாக்ஷி அம்மன் கோவிலில் தேவி மஹாத்மியத்தை உபன்யாசம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருமலை நாயக்கர்,நீலகண்ட தீட்சிதரின் புலமையைக் கண்டு மகிழ்ந்து தன்னுடைய அவையில் அவரை அமைச்சராக நியமித்தது மட்டுமின்றி, அவரையே தன்னுடைய குருவாகவும் ஏற்றுக்கொண்டார். மதுரையில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை ‘சிவலீலா வர்ணம்’ என்ற பெயரில் ஒரு பெரும் காவியமாக இயற்றினார் நீலகண்ட தீட்சிதர். புதுமண்டபம் கட்டும்போது அங்கே ஏகபாத மூர்த்தியின் சிலையை நிறுவ சிலர் எதிர்ப்புத் தெரிவித்த போது ஆகமங்களைச் சுட்டிக்காட்டி, ஆகம விதிப்படி ஏகபாத மூர்த்தியை பிரதிஷ்டை செய்வது சரியே என்றும் நிரூபித்தவர் தீட்சிதர். இவரை பற்றிய சுவையான கர்ண பரம்பரைக் கதை ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதைப் பின்னால் பார்ப்போம். பிற்காலத்தில் அமைச்சர் பதவியை விட்டுச் செல்ல நீலகண்ட தீட்சிதர் முடிவு செய்தபோது, திருமலை நாயக்கர் தாமிரபரணி நதிக்கரையில் பாலமடை என்ற ஊரை அவருக்குத் தானமாகக் கொடுத்தார். அங்கேயே தனது மீதி வாழ்நாளைக் கழித்தார் தீட்சிதர்.

மதுரைக் கோவில் திருப்பணிகள்

திருமலை நாயக்கர் செய்த மேலும் சில திருப்பணிகளைப் பற்றிச் சொல்லும் திருப்பணி மாலை

முனைவேல் விழியங் கயற்கண்ணி சந்நிதி முன்மடத்து
ளனைவோர்க்கு மன்னமுந் தோழியம் மாட னறைக்குமது
தினமே தினியில் நடக்கும் படிக்கீத் திசையுங்கொண்டான்
புனவேலி தந்தனன் கச்சித் திருமலை பூபதியே.

சங்கா ரெங்கள் மதுரா புரிச்சொக்கர் சந்நிதியிற்
பொங்கு கொடிக்கம்ப மாபலி பீடம்பொன் பூசுவித்தான்
செங்கம லத்திரு வாழ்முத்து க்ருஷ்ணப்பன் செல்வனெங்கும்
பொங்கி வளர்ந்த புகழான் திருமலை பூபதியே.

நன்னுத லங்கயற் கண்ணி தனக்கு நலம்பெறவே
யுன்னத மாகுங் கொடிக்கம்ப மாபலி பீடமுடன்
சொன்ன மளித்துப்பொன் பூசுவித் தான்சுக போகனெங்கள்
மன்னன் திருமலை பூபன் மதுரை வரோதயனே

சொக்கநாதர் சன்னதியிலும் மீனாட்சி அம்மன் சன்னதியிலும் கொடிமரத்தைச் செப்பனிட்டு அதைத் தங்கத்தால் பூசச் செய்தார். அருகே பலிபீடங்களைச் செய்து வைத்தார். மீனாட்சி அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள ஆறுகால் பீடத்தை அடுத்த பிரகாரத்தை முழுவதுமாகத் திருப்பணி செய்தார். இரு சன்னதிகளிலும் உள்ள துவாரபாலகர்களின் சிற்பங்களை செப்புச் சிலைகளாகச் செய்வித்தார். அஷ்டசக்தி மண்டபத்தை அம்மன் சன்னதிக்கு முன்பாகக் கட்டி அதில் தன்னுடைய தேவியர்களின் உருவங்களையும் வைத்தார்.

மீனாட்சி அம்மனின் கோவிலின் உள்ளே தெற்குக் கோபுர வாசல் வழியாகச் செல்லும்போது கிளி மண்டபம் என்று ஒன்று இருக்கிறது. அதன் அருகில் உள்ள மண்டபம் முன்பு கரியமாணிக்கப் பெருமாள் சன்னதிக்கு அருகே இருந்தது. சுல்தானிய ஆட்சியின் போது அந்த மண்டபம் சிதைக்கப்படது. அதன் பகுதிகளை எடுத்து வந்து அம்மன் சன்னதிக்கு அருகே மீண்டும் கட்டினார் திருமலை நாயக்கர். சங்கிலி மண்டபம் என்று அது அழைக்கப்படுகிறது. அதன் தூண்களில் உள்ள அனுமார், பாண்டவர்களின் சிறபங்கள் அது முன்பு கரியமாணிக்கப் பெருமாள் கோவில் அருகில் இருந்ததற்கான சாட்சியங்களாகும்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் திருமலை மன்னர் எப்படிச் செப்பனிட்டார் என்பதையும் ஒரு திருப்பணி மாலைப் பாடல் சொல்கிறது

உரக்கவெகு ரொக்கம் கொடுத்துப் படங்குதூண்
உத்திரம் முதல்பழங்கல்
ஒடிந்தன பிடுங்கிநவ மாய்அமைத் துக்காரை
யோடுசீ ரணம் அகற்றி
அரைத்தகண் ணாம்பைவெல் லச்சாறு விட்டுநன்
றாய்க்குழைத் துச்செங்கலும்
அடுக்காப் பரப்பிக் கடுக்காயொ(டு) ஆமலகம்
அரியதான் றிக்காய்உழுந்(து)
ஒருக்கால் இருக்கால் இடித்துநன் னீரினில்
ஊறிய கடுஞ்சாறுவிட்(டு)
ஊழிக்கா லங்களினும் அசையாத வச்சிரக்
காரைவிட் டோங்கும் அம்மை
சிரக்காலம் வாழவே மீனாட்சி கோயிலும்
செப்பமிடு வித்துநன்றாய்ச்
செய்வித்த புண்ணியம் சதகோடி புண்ணியம்
திருமலை மகீபனுக்கே.

சிதிலமான பகுதிகளும் உத்திரங்களும் பழங்கற்களும் முதலில் அப்புறப் படுத்தப்பட்டது. அதன்பின் நன்றாக சுண்ணாம்பை அரைத்து அதில் வெல்லச்சாற்றை விட்டுக் குழைத்து கடுஞ்சாறு தயார் செய்யப்பட்டது. பிறகு செங்கற்களை அடுக்காகப் பரப்பி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், உழுந்து ஆகியவற்றை இரண்டு தடவை இடித்து அதில் நல்ல நீரில் ஊறிய கடுஞ்சாற்றையும் ஊழி வந்தாலும் அசையாத வஜ்ஜிரத்தையும் விட்டுப் பிசைந்து, அந்தப் பசையை வைத்து கோவில் மண்டபங்களைச் செப்பனிடச் செய்தார் திருமலை மன்னர். அவருக்கு சதகோடி புண்ணியம் உண்டாகுக என்கிறது இந்தப் பாடல். அப்படிக் கட்டப்பட்ட மண்டபங்கள் இன்றுவரை உறுதியாக நிற்கின்றன.

இவற்றைத் தவிர, தனக்காக ஒரு பெரும் அரண்மனை ஒன்றைக் கட்டத்தொடங்கினார் திருமலை நாயக்கர். அதற்காக மண் தோண்டிய இடத்தைக் குளமாக வெட்டி, அதில் மீனாட்சி அம்மனின் தெப்பத் திருவிழாவை தன்னுடைய பிறந்த தினமான தைப்பூச நாளில் கொண்டாடச் செய்தார். அங்கே மண் தோண்டும்போது கிடைத்த விநாயகர் சிலையை, முக்குறுணி விநாயகர் என்ற பெயரோடு மதுரைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் அவர். மீனாட்சி அம்மன் கோவிலைத் தவிர அதன் உப கோவில்களாக இருந்த திருப்பரங்குன்றத்திலும் அழகர் கோவிலிலும் பல திருப்பணிகளைச் செய்தார் நாயக்கர். திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபம் அவர் காலத்தில் கட்டப்பட்டதுதான். கோவிலில் முருகன் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் தன் இரு தேவியரோடு தான் இருக்கும் சிலையை வைக்கச் செய்தார். போலவே அழகர் கோவிலிலும் பல மண்டபங்களைச் செப்பனிட்டுக் கட்டினார் திருமலை மன்னர்.

சித்திரைத் திருவிழா

திருமலை நாயக்கர் மதுரைக் கோவிலுக்குச் செய்த பணிகளில் முக்கியமான ஒன்று, சுவாமி தேரையும் அம்மன் தேரையும் புதிதாகச் செய்துவைத்தது. பிரம்மாண்டமான தேர்களைச் செய்து வைத்த திருமலை நாயக்கருக்கு அதில் ஒரு பிரச்சனை வந்தது.

தேர்கள் இரண்டும் பெரிதாக இருந்ததால் அவற்றை இழுக்க அதிக ஆட்கள் தேவைப்பட்டனர். மதுரையில் அக்காலத்தில் தேர்த்திருவிழா மாசி மாதம் நடைபெற்று வந்தது. மதுரைக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களுக்கு, திருவிழா நடைபெறும் மாதங்களில் சுவாமி சுற்றி வருவதைப் பொருத்து அவற்றின் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஆவணி மூலத் திருவிழா நடைபெறும் போது ஆவணி மூல வீதிகளில் சுவாமி சுற்றி வரும். போலவே மாசி மாதம் மாசி வீதிகளில் திருத்தேர்கள் வலம் வரும்.

மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால், பக்கத்து கிராமங்களிலிருந்து அதிக அளவு ஆட்கள், அதிலும் தேரை இழுக்கக்கூடிய ஆட்கள், திருவிழாவிற்கு வரவில்லை. இந்தச் சிக்கலை எப்படிச் சமாளிப்பது என்று தன்னுடைய குருவான நீலகண்ட தீட்சிதருடன் சேர்ந்து ஆலோசித்தார் திருமலை நாயக்கர்.

மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் சித்திரா பௌர்ணமித் திருவிழா முக்கியமானதாகும். சித்திரை மாதம் பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷி என்ற தவளை வடிவில் இருந்த முனிவர் ஒருவருக்கு கள்ளழகர், வைகை ஆற்றில் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடந்து வந்தது. அந்த விழாவுக்காக, அழகர் பெருமான் மலையிலிருந்து புறப்பட்டு வைகை ஆற்றங்கரையில் இருந்த தேனூர் என்ற இடத்திற்கு வருகை தருவார். சித்திரா பௌர்ணமி தினத்தன்று அக்கம் பக்கத்து கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் கூடி அந்த நிகழ்ச்சியைக் கண்டு களிப்பார்கள்.

இதைப் பார்த்த திருமலை நாயக்கர், அந்தக் கூட்டத்தை மதுரைத் தேர்த்திருவிழாவிற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டார். மாசியிலிருந்து சித்திரைக்குத் தேர்த்திருவிழாவை மாற்றினார். பங்குனி உத்திரத்தில் கொண்டாடப்பட்டு வந்த மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையும் சித்திரைக்கு மாற்றினார். தேனூர் சென்று கொண்டிருந்த அழகரை, மதுரையின் எல்லைக்கு வரவழைத்து வைகையாற்றில் இறங்க வைத்தார். தேனூர் மக்கள் இதை ஆட்சேபிக்காமல் இருக்க, மதுரை வைகை ஆற்றங்கரையில் அவர்களுக்கு ஒரு மண்டபம் கட்டிக்கொடுத்தார். அந்த மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வை நடத்தச் செய்தார்.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

இது போதாதென்று, திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப் பெருமானையும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக மதுரை வரச் செய்தார். அவரோடு கோவிலில் தனிச்சன்னதியாக உள்ள பவளக் கனிவாய்ப் பெருமாளும் மதுரை வருவார். அவரை வைத்தே மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணத்தின் போது தாரை வார்க்கும் வைபவத்தை நடத்தச் செய்தார் நாயக்கர். அப்படி முருகனும் பெருமாளும் மதுரை வரும்போது அந்த ஊரில் உள்ள ஆட்களையும் அழைத்து வந்தனர்.

பவளக்கனிவாய் பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் முருகனோடு திருக்கல்யாண வைபவம்

இப்படி மதுரை வரும் அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் சித்திரைத் திருவிழாவிற்கு திருக்கல்யாண நாளன்றே வந்து அம்மனின் கல்யாண வைபவத்தைக் கண்டு களித்துவிட்டு அடுத்த நாள் தேர்த்திருவிழாவிலும் பங்கு பெற்றனர். அடுத்த நாளில் மதுரை வரும் அழகரை வரவேற்று எதிர்சேவை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, அழகர் மறுபடியும் மலைக்குச் செல்லும் வரை மதுரையிலேயே தங்கியிருந்தனர். இதன் மூலம் சித்திரைத் திருவிழாவை ஒரு பெரும் விழாவாக மாற்றிய பெருமை திருமலை நாயக்கரையே சேரும்.

சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மையின் பட்டாபிஷேக விழா என்பது முக்கியமான நிகழ்வு. அந்நாளில் மதுரை அரசியாக முடிசூடும் மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று அம்மனின் பிரதிநிதியாக நாயக்கர்கள் ஆளுவது ஐதீகம் என்பதை முன்னரே பார்த்தோம். அந்த நிகழ்ச்சியை பெரும் தடபுடலுடன் நடத்திக் காட்டினார் திருமலை நாயக்கர். திருக்கோவிலின் ஶ்ரீதள புத்தகம் அதைப்பற்றி பின்வருமாறு விவரிக்கிறது.

‘துரைகள் செங்கோல் வாங்குகிற போது நடக்கிற சட்டம் எப்படியானால் சகாத்தம் 1544-க்கு மேற் செல்லாநின்ற துந்துபி வருடம் வரைக்கும் செங்கோலை மூலஸ்தானத்தில சாத்துவித்துத் துரைகள் வாங்கி வருவார்கள். அப்பால் திருமலை சவுரி அய்யன் நாளையில் ஸ்தலம் பிரபலமாகி உற்சவங்களும் உண்டுபண்ணி வைத்ததன் பேரில் சித்திரை மாதம் எட்டாம் திருநாள் காலமே ஸ்தானீகாள் இருவகைப் பட்டமாரும் ராஜா சமூகத்தில் அறியப் பண்ணுவிக்கிறது. உடனே துரையவர்கள் (திருமலை நாயக்கர்) ஸ்நானபானம் பண்ணி ஆசாரமாய் உபவாசமிருந்து, தீபம் வைத்தவுடனே சுவாமிக்கு அலங்காரமாகி அம்மன் கோவில் ஆறுகால் பீடம் அலங்காரம் பண்ணி அந்த மண்டபத்தில் ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளப் பண்ணுவித்து, அநேக தீவட்டிகள். ஆடல் சோபிதமாய் பட்டாபிஷேகத்துச் சுவர்ண கும்பத்தில் திருமஞ்சனம் அனந்தகுண சதாசிவ பட்டர் விதிப்படி மந்திரகர்மங்கள் நடப்பிப்பார்கள்.

ஸ்தானீகாள் ஏழுபேரும் கருவூலம் ஆபரணப் பெட்டியைத் திறந்து, பட்டாபிஷேக கிரீடமும், செங்கோலும், கெட்டி முதலிவகை தற்புருஷதேவமுதலி தெவமுதலிக்கு ஒருவர் மகர முத்திரையும், ஒருவர் மகரக் கொடியும், விழுப்பாத ராயனுக்குப் பெரிய பொன்னெழுத்தாணியும், பாண்டி நாட்டு முதலியாருக்கு ரிஷப முத்திரையும், கேசவ தீக்ஷதரய்யருக்கு நாகர முத்திரையும், இவ்வளவும் திருவாபரணத் தட்டிலே எடுப்பிவித்துக் கொண்டு, ஸ்தானீகாள் சங்கீத மேளத்துடனே வருகிறது. வந்தவுடனே அம்மன் சமட்சமத்திலே (அருகில்) வைத்து, நம்பியார் பூசை பண்ணி, உடனே பட்டாபிஷேகமும் நடந்து, இருவகைப் பட்டமாரும் கிரீடமும் செங்கோலும் சாத்துவித்து, நெய்வேதனமுமாகி இருக்கும். உடனே கட்டியக்காரரைக் சமயம் வரலாமென்று ஏவி சுவாமியிடத்தில் அறியப்பண்ணுவித்த மாத்திரத்தில் அவுதா அம்பாரி பண்ணியிருக்கிற பட்டத்து ஆனையின்மேலேறிக் கொண்டு, அலங்காரம் எழுபத்திரண்டு பாளையப்பட்டுத் துரை மக்களும் அவரவர் விருதுகளுடனே சனங்களுடனே ஆயுதபாணிகளாய்ப் பதினெட்டு வகை மேள வாத்தியங்களுடனே அநேக தீவட்டி, பகல் வத்தியுடனே வாணவித்தைகள், நாடகசாலைப் பெண்கள் கேளிக்கையுடனே துரையவர்கள் செங்கோல் வாங்கக் கோயிலுக்கு வருகிற வைபவம் எழுதி முடியாது.

உடனே கோவில் வாசலில் வந்து யானையை விட்டிறங்கிச் சகல சம்ப்ரமத்துடன் ஆறுகால் பீடம் வந்து சேர்வார்கள். அங்கு அம்மனுக்குச் சோடச உபசார தீபாராதனை நடக்கும். தெரிசனமானவுடனே இருவகைப் பட்டமாரும் விபூதி முதலான பிரசாதம் கொடுத்து, சுவாமிக்குச் சாத்தியிருக்கிற நிலைமாலையும் இரட்டைமாலையும் எடுத்து, துரைக்கும் சமர்ப்பித்து, சாதராப் பரிவட்டம், இரட்டைப் பரிவட்டம் கட்டிச் செங்கோலையும் எடுத்துக் கையில் கொடுப்பார்கள். பின்னர் ஸ்தானீகாள் முதலான ஏழு பேருக்கும் சந்நிதானத்தில் விபூதிப் பிரசாதம் சந்தனம் கொடுத்து, அவரவர் முத்திரைகளை எடுத்து இருவகைப் பட்டமாரும் அவரவரிடத்தில் கொடுப்பார்கள். அவரவர் அதை வாங்கிக்கொண்டு துரையுடனே சந்நிதி வாசலுக்கு வந்து, உடனே துரையை யானை மேற்கொண்டு, பட்டணப் பிரவேசம் வருவார்கள். ஸ்தானீகாள் பட்டமார் இரண்டு பேர்கள் பல்லக்கிலும், மற்ற அஞ்சு நிர்வாகிகள் குதிரை, சுருட்டியிலும் ஏறிக்கொண்டு துரையுடன் கூடவே பட்டணப் பிரவேசம் வருவார்கள். சுவாமி கோவில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளியிருக்கிற இளையநயினாரையும் வீதிக்கு எழுந்தருளப் பண்ணி சேத்தியில் எழுந்தருளி அபிஷேகம், நெய்வேதனம், தீபாராதனைகளாகிப் பல்லக்குச் சொக்கர் எழுந்தருளி, கோவில் பீகமுத்திரை (கதவுகளை மூடி முத்திரையிடல்) ஆகும்.

சகல சம்பிரமத்துடனே கும்பலாகப் பட்டணப் பிரவேசம் வந்து, அரண்மனையில் ஆஸ்தான மண்டபம் போய்ச் சேர்வார்கள். ஆஸ்தான மண்டபம் அநேக விதமாய்ச் சிங்காரித்து நடுவே சிங்காசனம் போட்டிருக்கும். அதிலே செங்கோலை எழுந்தருளப் பண்ணித் தாமும் கிட்ட இருப்பார்கள். ஸ்தானீகாளுக்குச் சமீபத்தில் இருக்கச் சொல்லி உத்தரவாகும். செங்கோலுக்கு நெய்வேதனம், தீபாராதனை நடக்கும். பிரதானி தளவாய் முதலான பாளையக்காரத் துரைமக்கள், சீமையார் சகல சகலத் தீராளும் துரைக்குக் காணிக்கை கொடுத்துக் கண்டுகொள்வார்கள். அது நடந்ததின்பேரில் முன்னமே சதாசிவப்பட்டர், மாளுவ சக்ரவர்த்திகள் இரண்டு பேருக்கும் சாதிராவும் கடயமும் வெகுமதியாகும். மற்ற அஞ்சு நிருவாகிகளுக்கும் சால்வையும் கடுக்கனாவது கண்டாபரணமாவது வெகுமதி செய்வார்கள். மற்றப் பரிசனங்களுக்கெல்லாம் அவரவருக்கு உண்டான சட்டத்தின்படி வெகுமதி நடக்கும்.

ஸ்தலத்தார் பரிசனங்களைச் சுவாமி காரியம் பாருங்கள் என்பதாய்க் கோவிலுக்குப் போய்வரச் சொல்லி உத்தரவாகும். அப்பால் அரண்மனையைச் சார்ந்த பிரபுக்கள் பாளையக்காரர் குலாங்கிஷங்களுக்கெல்லாம் வெகுமதி நடப்புவித்துச் சரிவத்திராளையும் விடுதிக்குப் போகச் சொல்லி உத்தரவு செய்துபோட்டுத் துரை அந்தப்புரத்துக்கு எழுந்தருள்வார். செங்கோல் ஆஸ்தான மண்டபத்தில் சிங்காசனத்தில் இருக்கும். மறுநாள் காலமே புனற்பூசை பண்ணிச் செங்கோல் கோவிலுக்கு வந்து சேரும். இந்தப் படிக்கான வைபவங்களில் சித்திரை மாதத்தில் நாச்சியாருக்கு பட்டாபிஷேகம் நடக்கும்.’

மேற்கண்டவற்றிலிருந்து பட்டாபிஷேக விழாவைத் திருமலை நாயக்கர் எவ்வளவு விமரிசையாக நடத்தியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்றும் அம்மனின் பட்டாபிஷேக வைபவம் அதே ஆறுகால் பீடத்திலேதான் நடக்கிறது.

சித்திரைத் திருவிழாவை மட்டுமல்லாமல், சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்களைக் கொண்டாடும் விதத்தில் ஆவணி மூலத் திருநாளையும் உருவாக்கியவர் திருமலை நாயக்கர் தான். சித்திரையின் போது அம்மனுக்குப் பட்டாபிஷேகம் நடப்பது போல, ஆவணியில் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடக்கும். நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு விற்றது போன்ற பல திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருநாளில் நடக்கும். இது போலவே மாதத்திற்கு ஒன்று என்று மதுரையை விழா நகராக ஆக்கிய பெருமை திருமலை நாயக்கருக்கு உண்டு. இவை அத்தனையையும் ஆகம விதிகளை மீறாமல் அவர் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருவிழாக்களுக்கெல்லாம் தகுந்த நிவந்தங்களையும் நிலக்கொடைகளையும் அளித்து அவற்றிற்கான கட்டளைகளைத் தனித்தனியாக ஏற்படுத்தி வைத்தார் திருமலை மன்னர். தனது நிர்வாகத்திலிருந்த கோவிலை, பூவணநாத பண்டாரம் என்பவரின் பெயருக்கு மாற்றி அவரையே மேற்படித் திருவிழாக்களையும் கட்டளைகளையும் மேற்பாற்வையிட நியமித்தார் நாயக்கர்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *