மதுரைக்குத் தன் தலைநகரை மாற்றியவுடன் திருமலை நாயக்கர் தனக்கென ஒரு பெரும் அரண்மனையைக் கட்டத்தொடங்கினார். மதுரையில் கிழக்கு வெளி வீதிக்கும் தெற்கு மாசி வீதிக்கும் இடையில் அமைந்திருந்த இந்த பிரம்மாண்டமான அரண்மனை, தற்போது அதன் பல பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டதால், வடக்கு வெளி வீதியை அடுத்து அதன் நான்கில் ஒரு பகுதியாகச் சுருங்கிக் காணப்படுகிறது. இந்த அரண்மனையை பொயு 1636ம் ஆண்டு திருமலை மன்னர் கட்டி முடித்தார். தமிழக மன்னர்கள் எழுப்பிய அரண்மனைகளின் தனிச்சிறப்போடு எஞ்சி நிற்பது திருமலை நாயக்கர் மஹால் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனையே ஆகும்.
அமைப்பு
அரண்மனையில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்ற இரு பகுதிகள் இருந்தன. தற்போது உள்ளது சொர்க்க விலாசத்தின் ஒரு பகுதியே ஆகும். இந்த இரண்டு பகுதிகளைத் தவிர பல்லக்கு முதலான வாகனங்கள் வைக்கும் இடம், பெரிய பூஜை அறை, அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடக அரங்கம், , இசைக்கருவிகள் இசைக்கப்படும் இடம், பணியாளர்கள் வசிக்கும் பகுதி, குளங்கள், நந்தவனம் என்று பல்வேறு பகுதிகள் இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவருடைய சகோதரர் ரங்க விலாசத்திலும் வசித்தனர். இந்த அரண்மனையைப்பற்றி டெய்லர் பாதிரியார் தன்னுடைய கடிதத்தில் விவரித்திருக்கிறார்.
சொர்க்க விலாசம்
தற்போது சொர்க்க விலாசத்தில் உள்ள நுழைவாயில் அரண்மனையின் நுழைவாயில் அல்ல. அது வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தது. சொர்க்க விலாசத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய முற்றம் காணப்படுகிறது. அதைச் சுற்றி உயரமான தூண்கள் கொண்ட கட்டடப்பகுதி உள்ளது. முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் சாலை எனப்படும் கட்டடங்கள் இருக்கின்றன.
பெரும் தூண்களும் அருமையான சுதை வேலைப்பாடுகளோடு கூடிய சிற்பங்களும் மேலே விமானங்களும் நிறைந்த கலைக்கூடமாகக் காட்சியளிப்பது சொர்க்க விலாசம். இதன் மேலிருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரண்மனை வளாகத்தின் நடுவில் கல் பீடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் யானைத்தந்ததாலான அருமையான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு மண்டபம் ஒன்று இருந்தது. அதன் நடுவே ரத்தினங்களால் அமைந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்து திருமலை நாயக்கர் தன் சபையை நடத்துவது வழக்கம்.
சென்ற பகுதியில் பார்த்த பட்டாபிஷேக விழாவின்போது, செங்கோலை மீனாட்சி அம்மனிடமிருந்து பெற்று அதை ஊர்வலமாக எடுத்துவந்து இந்த சிம்மாசனத்தில் அமர்த்தி அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்வார் திருமலை மன்னர். அந்த நாள் மட்டும் செங்கோல் அரியணையில் இருக்க திருமலை நாயக்கர் கீழே அமர்வது மரபு. அம்மனின் பிரதிநிதியாக தான் நாட்டை ஆள்வதாக நாயக்க மன்னர்கள் செய்துகொண்ட பிரதிக்ஞையின் குறியீடு இது.
சொர்க்க விலாசத்தில் நடைபெறும் இன்னொரு பெரிய விழா நவராத்திரித் திருவிழா. மதுரைக் கோவிலில் நடைபெறுவதுபோலவே தனது அரண்மனையிலும் நவராத்திரியை வாணவேடிக்கைகளுடனும் இசை நாட்டிய நிகழ்ச்சிகளுடனும் திருமலை மன்னர் கொண்டாடுவார். விஜயநகர அரசர்களைப் பின்பற்றி, விஜயதசமி அன்று அவர் தன்னுடைய அரியணையில் கொலு வீற்றிருந்து பாளையக்காரர்கள் செலுத்தும் திறையை அவர் பெற்றுக்கொள்வார்.
சொர்க்க விலாசத்தின் மேற்கில் அந்தப்புரம் இருந்தது. அங்கிருந்த இரு அறைகளில் தற்போது ஓர் அறையின் பகுதியே மிஞ்சி இருக்கிறது. அங்கே கருங்கல் தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. அங்கு அமர்ந்துதான் பட்டமகிஷிகளும் மற்ற ராணிகளும் இசை, நடனம் போன்ற நிகழ்வுகளைக் கண்டு களிப்பார்கள். அதன் மூலையில் மேல் வளாகத்திற்குச் செல்லும் படிகள் உள்ளன. அதன் வழியாக மேலே சென்று மக்களுக்கு திருமலை நாயக்கர் தரிசனம் அளிப்பது வழக்கம்.
அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. அதற்கு வடக்கில் மல்யுத்தம், ஆட்டுக்கிடா சண்டை போன்றவை நடக்கும் முற்றம் இருந்தது. திருமலை நாயக்கர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர். இந்த இடத்தில்தான் அவர் தனது மல்யுத்தப் பயிற்சிகளை மேற்கொள்வார். ஆயுதசாலையின் மேற்கில் திருமலை நாயக்கரின் உறவினர்கள் வசித்த அறைகள் இருந்தன.
சொர்க்க விலாசத்தின் மேற்குப் பகுதியில் கிழக்கு மேற்காக நீளமாகவும் அழகு வாய்ந்ததாகவும் உள்ள பகுதி நாடகசாலை ஆகும். இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் மற்ற இரு பகுதிகள் உயர்ந்தும் தற்கால Amphitheaterபோல அமைந்துள்ளது. இதன் தூண்களிலும் மேல் விதானங்களிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மாலை நேரங்களில் திருமலை மன்னர் தனது தேவியர்களுடன் இங்கே வந்து இந்த இடத்தில் நடைபெறும் பல்வேறு விதமான கூத்துகளைக் காண்பது வழக்கம். இதன் அருகிலும் மேல் மாடத்திற்குச் செல்லும் படிகள் உள்ளன. நாடகசாலையின் மேற்கே வசந்தவாவி என்ற நீர்த்தடாகம் இருந்தது. இதன் வடகிழக்கில் கருங்கல் தூண்கள் நிறைந்த கோவில் ஒன்று அமைந்திருந்தது. அன்னை ராஜராஜேஸ்வரியின் கோவில் இது என்று கூறுவர். நவராத்திரி விழாவின் போது இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். கோவிலின் முன் ஒரு சிறு குளமும் நந்தவனமும் இருந்தன.
ரங்க விலாசம்
சொர்க்க விலாசத்தை அடுத்து ரங்க விலாசம் என்ற அரண்மனை அமைந்திருந்தது. தற்போது அது முற்றிலும் இடிக்கப்பட்டு, பத்துத் தூண்கள் மட்டுமே அதன் சாட்சியாக எஞ்சியிருக்கின்றன. பத்துத் தூண் தெரு என்ற பெயரிலேயே அந்தத் தெரு தற்போது அழைக்கப்படுகிறது. இதுவும் சொர்க்க விலாசம் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது என்று கருதலாம். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்ற கட்டடம் இருந்தது. இதற்கான நுழைவாயில் தெற்கு மாசி வீதியில் இருந்தது. அங்கே காவல் வீரர்களின் கூடமும் ஆயுதச் சாலையும் இருந்திருக்கின்றன.
பத்துத் தூண்களின் கிழக்கில் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் இருந்தது. அதை அடுத்து பதினெட்டு வகையான இசைக்கருவிகள் இசைக்கும் கூடம் ஒன்று இருந்தது. அதற்கு நவ்பத்கானா என்று பெயர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட சிதைந்த நிலையில் காணப்பட்ட அந்த இசைக்கூடம் பிற்பாடு இடிந்துபோயிற்று. அது இல்லாவிட்டாலும் அதன் நினைவாக இசைக்கூடம் இருந்த தெரு நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது.
சொர்க்க விலாசத்தையும் ரங்க விலாசத்தையும் அரண்மனையின் மற்ற பகுதிகளையும் சுற்றி உயரமான மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அதற்குப் பாரிமதில் என்று பெயர். சுமார் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்ட இந்த மதில் விழுந்துவிடும் நிலையில் இருந்ததால் 1837ம் ஆண்டு இடித்துத் தள்ளப்பட்டது. இந்த மதிலுக்கு வெளியே ஒரு பெரிய நந்தவனமும் அதன் நடுவில் ஒரு மண்டபமும் இருந்ததாம். அதில் திருமலை மன்னர் ஓய்வெடுப்பது வழக்கம்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த திருமலை நாயக்கரின் அரண்மனையை அவருடைய பெயரனான சொக்கநாத நாயக்கரே இடித்தார். மதுரையிலிருந்து திருச்சிக்குத் தலைநகரை மாற்றும்போது அப்படி இடித்த பொருட்களை அங்கே கொண்டு சென்று புதிதாக ஒரு அரண்மனை எழுப்ப முயன்ற அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. எழில்மிகுந்த இந்த அரண்மனை இடிபட்டதுதான் மிச்சம். அவர் இடித்ததுபோக மீதமிருந்த பகுதிகளில் பெருமளவு மழை வெள்ளத்தால் சேதமுற்றது. 1868ல் மெட்ராஸ் கவர்னராக இருந்த நேப்பியர் அரண்மனையின் பல பகுதிகளைப் புனரமைக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ததன் காரணமாகவே தற்போதுள்ள பகுதிகள் நமக்குக் கிடைத்தன. இரண்டு லட்சம் செலவில் அவர் அரண்மனையைப் புனரமைத்து 1872ம் ஆண்டு மீளுருவாக்கம் செய்தார். தற்போது இந்த அரண்மனை தமிழகத் தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது. திருமலை நாயக்கர் மஹாலில் கவின் மிகு ஒலி ஒளிக் காட்சியை அமைத்து அக்கால வரலாற்றை தற்போதைய தலைமுறை காணச்செய்த பெருமை காலஞ்சென்ற வரலாற்று அறிஞர் திரு. நாகசாமி அவர்களையே சேரும்.
தெப்பக்குளம்
தனக்கு அரண்மனை கட்டிக்கொள்வதற்காக மண் தோண்டிய இடம் பெரும் பள்ளமாகி விட்டதால், அந்த இடத்தில் திருமலை நாயக்கர் தெப்பக்குளம் ஒன்றை அமைத்தார் என்று செவிவழிச் செய்தியாகக் கூறுவதுண்டு. ஆனால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அரண்மனை கட்டத்தொடங்கும்போதே தெப்பக்குளத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் எதுவும் இல்லாததைக் கண்ட திருமலை நாயக்கர், மதுரையின் கிழக்கே உள்ள வண்டியூர் என்ற இடத்தில் தெப்பக்குளம் ஒன்றைக் கட்டத்தொடங்கினார். டெய்லர் பாதிரியாரின் ஏசு சபைக் கடிதம் இது திருமலை நாயக்கரால் ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது.
இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளங்களில் ஒன்று. திருமலை நாயக்கர் சமுத்திரம் என்று பெயர் வைக்கப்பட்ட இந்தக் குளம் வண்டியூரில் இருப்பதால் வண்டியூர்த் தெப்பக்குளம் என்றும் அதன் அருகில் மாரியம்மன் கோவில் ஒன்று இருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக 304.8 மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக 289.5 மீட்டர் அகலமும் 88258 சதுர மீட்டர் பரப்பளவையும் கொண்டது இந்தத் தெப்பக்குளம். குளத்தின் நடுவில் சிறந்த வேலைப்படுகள் நிறைந்த மண்டபம் ஒன்று உண்டு. அதன் நடுவில் விமானத்தோடு கூடிய ஒரு மண்டபமும் நான்கு மூலைகளில் சிறிய விமானங்களோடு கூடிய மண்டபங்களும் காட்சி தருகின்றன. நடுவில் உள்ள விமானத்தின் நிழல் மைய மண்டபத்திற்குள்ளேயே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றைச் சுற்றி சோலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்குளத்தைச் சுற்றி மதிலும் உட்புறமாகக் குளத்தைச் சுற்றி வருவதற்கு 1.5 மீட்டர் அகலம் கொண்ட கல் பாதையும் உள்ளன. பக்கத்திற்கு மூன்று படித்துறைகள் வீதம் மொத்தம் 12 படித்துறைகள் இந்தத் தெப்பக்குளத்தில் உள்ளன.
இந்தக் குளத்திற்கான நீரை வைகை ஆற்றிலிருந்து கொண்டுவருவதற்கான கால்வாய் உண்டு. பொயு 1635ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதாவது ஶ்ரீமுக ஆண்டு தை மாதம் இந்தத் தெப்பக்குள வேலை நிறைவு பெற்றது. தன் பிறந்தநாளான தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவை திருமலை நாயக்கர் நடத்தினார். அன்றைய தினம் காலையில் சுவாமியும் அம்மனும் கோவிலிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் வந்து சேர்வார்கள். அங்கு அழகுற அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் ஏறி குளத்தைச் சுற்றி வந்து மைய மண்டபம் சேர்வார்கள். மாலை வரை அங்கேயே தங்கியிருந்த விட்டு, இரவு வண்ண விளக்குகளுடனும் வாணவேடிக்கைகளுடனும் மீண்டும் தெப்பத்தில் உலாவந்து கோவில் திரும்புவார்கள். இன்று வரை இதே முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தெப்பக்குளத்தை வெட்டியபோதுதான், மிகப்பெரிய விநாயகர் சிலை அங்கிருந்து கிடைத்தது. முக்குறுணிப் பிள்ளையார் என்ற பெயரில் அந்த விநாயகர் மதுரைக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பிள்ளையாருக்கும் 35 லிட்டர் அரிசியில் பெரிய கொழுக்கட்டை ஒன்றைச் செய்து விநாயகர் சதுர்த்தியன்று படைப்பது வழக்கம். இதற்கான கட்டளையையும் திருமலை நாயக்கரே ஏற்படுத்தினார்.
புதுமண்டபம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வசந்த உற்சவம் காண்பதற்காக திருமலை மன்னர் அமைத்த வசந்த மண்டபமே இப்போது புதுமண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு முன்பு அங்கே இருந்த கோவில் அர்ச்சகர்களின் வீடுகள் இருந்தன. மண்டபம் கட்டப்படுவதால் அர்ச்சகர்களுக்காக கோவிலின் வட பகுதியில் குலசேகர பட்டர் வகைக்குப் பன்னிரண்டு வீடுகளும் விக்கிரமபாண்டியர் பட்டர் வகையினருக்கு பதினாறு வீடுகளும் கட்டிக்கொடுத்து அவர்களை அங்கே குடியமர்த்திய பிறகு, அவர்களின் பழைய வீடுகளை இடித்து அங்கே இந்த மண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டினார். தற்போதும் கோவில் பட்டர்களின் வீடுகள் வடபகுதியிலேயே அமைந்துள்ளதைக் காணலாம்.
அக்ஷய ஆண்டு வைகாசி மாதம் 10ம் நாள் பூர்வபட்சத்தில் தொடங்கிய (1628ம் ஆண்டு) இந்த மண்டப வேலை ஶ்ரீமுக ஆண்டு வைகாசி மாதம் (1635ம் ஆண்டு ) நிறைவடைந்தது. அழகிய சிற்பங்களுடனும் வேலைப்பாடுகளுடனும் கூடிய இந்த மண்டபம் 101.5 மீட்டர் நீளமும் 32 மீ அகலமும் 7.6 மீ உயரமும் கொண்டது. இதில் 124 சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தைச் சுற்றி நீர் நிரம்பும் வகையில் அகழி போன்ற பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தைக் கட்டியவர் பெயர் சுமந்திர மூர்த்தி ஆசாரி என்பர். போன வருடம் வரை கடைக்காரர்களால் நிரம்பியிருந்த இந்த மண்டபம், தற்போது கடைகள் அகற்றப்பட்டு தனது பழைய பொலிவை அடையத் தொடங்கியுள்ளது.
ராய கோபுரம்
எப்படி ஆடி வீதி நான்கு கோபுரங்களுக்கு உள்ளாக கோவில் வளாகத்தின் பகுதியாக உள்ளதோ, அதேபோல சித்திரை வீதியையும் ஆவணி மூல வீதியையும் கோவில் வளாகத்தில் கொண்டு வர நினைத்த திருமலை நாயக்கர், கிழக்கு கோபுரத்தின் முன்பாக ஆவணி மூலவீதியில் பெரும் கோபுரம் ஒன்றைக் கட்டத்தொடங்கினார். இந்தக் கோபுரத்தின் முதல் தளமே மற்ற நான்கு கோபுரங்களின் முதல் தளத்தை விட இரண்டு மடங்கு உயரம் என்றால், கோபுரத்தின் உயரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ராய கோபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த கோபுரம் என்ன காரணத்தாலோ முற்றுப் பெறவில்லை. அதன் எச்சங்களை இன்றும் காணலாம். அதன் அழகு மிக்க சிற்பங்கள் பல கடைகளால் இன்று மறைக்கப்பட்டுள்ளது.
தமுக்கம்
விளையாட்டுகளில் பெரும் ஆர்வமுள்ள திருமலை நாயக்கர், அந்த விளையாட்டுகளை மக்கள் காணவும் கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும் அமைத்த இடம்தான் ‘தமுகமு’. இப்போது தமுக்கம் மைதானம் என்று அழைக்கப்படும் இடத்தில் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளும் யானை, புலி போன்ற விலங்குகளோடு மற்போர் வீரர்களைச் சண்டையிடும் நிகழ்வுகளும் நடைபெற்ற இடமாகும். சதா போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக திருமலை மன்னர் இதை அமைத்ததாகக் கூறுவர்.
மேற்கண்டவற்றைப் போன்ற பெரும் கட்டடங்கள் மட்டுமல்லாமல், நாட்டிற்கு அத்தியாவசியமான பல கட்டமைப்புகளையும் திருமலை நாயக்கர் அமைத்தார். ஊட்டத்தூரிலிருந்து கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலை ஒன்றை அமைத்து ஆங்காங்கே பயணிகள் தங்க சத்திரங்கள் பலவற்றை கட்டினார் திருமலை மன்னர். கண்மாய்களை பாசிக் குத்தகைக்கு (மீன் பிடிப்பதற்கு) விட்டு, அதிலிருந்து கிடைத்த வருமானத்தால் மேலும் பல ஏரிகளைத் தோற்றுவித்தார். நீர்ப்பாசன வசதிக்காக பல கால்வாய்களையும் அமைத்தார். ஒரு பக்கம் போர்களுக்குத் தொடர்ந்து செலவு செய்து கொண்டும், ஆட்சியின் முற்பகுதியில் விஜயநகர அரசுக்குக் கப்பம் கட்டிக்கொண்டும் தன் வருமானத்தில் பெரும் பகுதியை செலவளித்த திருமலை நாயக்கர் மீதியுள்ள பணத்திலிருந்து கலையழகு மிகுந்த கட்டடங்களையும் உள்நாட்டுக் கட்டமைப்புகளையும் கட்டியது வியப்புக்குரிய விஷயமாகும்.
(தொடரும்)