Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மதுரை நாயக்கர்கள் #20 – திருமலை நாயக்கர் – செப்பேடுகள்

மன்னர்களின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகளைக் காட்டும் காலக்கண்ணாடியாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் ஆகியோரது செப்பேடுகள் புகழ்பெற்றவை. பல செப்புத்தகடுளைக் கொண்ட அவை, வளையங்களால் கோர்க்கப்பட்டு மண்ணில் பல காலம் புதையுண்டிருந்தன. பிறகு அவை கண்டெடுக்கப்பட்டு அவற்றில் உள்ள செய்திகள் உலகிற்கு அறிவிக்கப்பட்டன. பொதுவாக கோவிலுக்கோ அல்லது தனி மனிதர்களுக்கோ விடப்பட்ட நிவந்தத்திற்கான ஆவணங்களாக இருக்கும் இந்த அரசர்களின் செப்பேடுகளில் அரச பரம்பரை, அவர்கள் செய்த வீரச்செயல்கள் ஆகியவை ‘பிரசஸ்தி’ என்ற பெயரில் குறிப்பிடப்படுவது வழக்கம்.

ஆனால் திருமலை நாயக்கர் காலத்துச் செப்பேடுகள் ஓரிரண்டு செப்பு இதழ்களைக் கொண்டவையாகவே இருக்கின்றன. நிவந்தங்களைத் தவிர மேலும் பல சுவையான செய்திகளைக் கொண்ட இவற்றைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

அமைப்பு முறை

திருமலை மன்னர் அளித்த செப்பேடுகளில் பல மெல்லியவை. ஆகவே இவற்றில் வெட்டப்பட்டிருக்கின்ற எழுத்துகள் மறுபுறத்தில் புடைத்துக்கொண்டு தெரிகின்றன. பண்டைத் தமிழ் மன்னர்களின் செப்பேடுகள் போல ஓலைச்சுவடி வடிவில் இல்லாமல், உயரம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் தகடுகள் வடிவில் இவை செய்யப்பட்டிருக்கின்றன. போலவே பண்டைச் செப்பேடுகளில் உள்ள ‘ஸ்வஸ்திஶ்ரீ’ யுடன் தொடங்கும் மங்கல வார்த்தைகள் எல்லாச் செப்பேடுகளிலும் காணக் கிடைப்பதில்லை. மாறாக பிள்ளையார் சுழியான ‘உ’ காணப்படுகிறது. அதையடுத்து ‘றாமசெயம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. சில செப்பேடுகளில் மட்டும் பிரசஸ்தி எனப்படும் வம்சாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன. சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு ஆகியவை இச்செப்பேடுகளில் காணப்படும் கால அளவுகளாகும். தென் தமிழகப் பகுதியில் வெளியிடப்பட்ட செப்பேடுகளில் கொல்லம் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை நாயக்கர் பேரில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேடுகளின் நிறைவுப் பகுதியில் அவருடைய கையொப்பமும் எந்த இடத்தில் அது அளிக்கப்பட்டதோ அப்பகுதியின் பாளையக்காரரின் கையொப்பமும் காணப்படுகின்றன.

உதாரணமாக,

‘யிந்தப்படிக்கி ராசமானிய ஸ்ரீதிரிதிருமலை நாயக்கறவற்கள் திலுக்கறத்தால் கையி ஒப்பம்’ – (தருமத்துப்பட்டிச்செப்பேடு)

‘யிந்தப்படிக்கி சுற்த்தறாகிய திருமலை னாயக்கறவற்கள் திருக்கறத்தால் ஒப்பம் பாளையகாரன் முத்துலிங்கத் தும்பிச்சினாயக்கற் கய்யி ஒப்பம்’ – (மங்கலரேவுச் செப்பேடு)

செப்பேடுகள் எந்த தானத்திற்காக அளிக்கப்பட்டதோ அதற்குக் கேடு விளைவிப்பவர்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்பதைக் கூறும் பகுதி ஒம்படைக் கிளவி எனப்படும். திருமலை மன்னர் செப்பேடுகளில் காணப்படும் சில ஒம்படைக் கிளவிகள்.

‘யிதைப் பின்னோற்கள் அடி அறிவு செய்தால் காறாம் பசுவைக் கொன்ற தோசத்திலும் பிராமனாளைக் கொன்ற தோசத்திலும் அடைந்து போவாறாகவும்’ (தருமத்துப்பட்டிச் செப்பேடு)

‘கெங்கைக்கரை யிலே ஏளு காராம் பசுவை கொன்ற தோசத்திலே போவாறாகவும் பெத்ததாயைக் கழுத்தைக் கட்டினாப் போலவும் யேளு கோலிலு திருவிளக்கு நிருத்தின தோசத்தில் போவாறாகவும்’ (அம்மைய நாயக்கனூர்ச்செப்பேடு)

சில செப்பேடுகளில் தானத்தை அழித்தால் தெய்வம் கேட்கும் என்று குறிக்கப்பட்டுள்ளது.

‘யிதை யாதாமொருதற் அடி அளித்தால் புது நாயினார் பெருமாள் கேள்பாற்’ – (மங்கலரேவுச் செப்பேடு)

இதைத் தவிர செப்பேடுகளை வெட்டிய ஆசாரிகளின் பெயர்களும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்படித் தொடங்கும்போது பிள்ளையார் சுழியுடன் இவை தொடங்கினவோ அதைப் போல செப்பேடுகளின் கீழேயும் பிள்ளையார் சுழி உள்ளது.

இனி செப்பேடுகளில் உள்ள சில செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.

சிந்துமேட்டுப்பட்டிச் செப்பேடு – புலியிடமிருந்து காப்பாற்றியதற்குப் பரிசு

திருமலை நாயக்கர் ஒரு தடவை வேட்டைக்குச் சென்றிருந்தார். அவருடன் அவரது மெய்க்காவலரான ரங்கசாமி நாயக்கர் என்பவரும் சென்றிருந்தார். வேட்டை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, திருமலை மன்னரை நோக்கி ஒரு புலி வாலை முறுக்கிக் கொண்டு வந்தது. உடனே ரங்கசாமி நாயக்கர், கல்வெடியால் இரண்டு குண்டுகள் போட்டு புலியைச் சுட்டு வீழ்த்தினார். அதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று ரங்கசாமி நாயக்கரைக் கேட்க, அவரும் தன்னுடைய கிராமத்தில் நாட்டாண்மை மரியாதை கோரினார். அதை இந்தச் செப்பேடு மூலம் அளித்தார் திருமலை நாயக்கர். அதைத் தவிர ரங்கசாமி நாயக்கருக்கு ஒரு ஆபரணத்தையும் அளித்து அவருக்கு அங்கேயே விருந்தளித்து மகிழ்வித்தார் திருமலை நாயக்கர் என்று இந்தச் செப்பேடு கூறுகிறது.

இலந்தைக் குளம் செப்பேடு – புலிவேட்டைக்குப் பரிசு

ஒரு சமயம் மதுரையிலிருந்து திருமலை நாயக்கர் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு ஆண்டாளை வழிபடச் சென்றுகொண்டிருந்தார். வத்திராயிருப்பு அருகே அவரது பரிவாரங்கள் வந்தபோது அங்கே ஒரு பெண் தலைவிரி கோலமாக அவரிடம் வந்து புலம்பினாள். அவளிடம் விசாரித்த போது, தன் கணவனை புலி ஒன்று கொன்றுவிட்டதாகவும் அதனால்தான் நிராதரவாக ஆகிவிட்டதையும் தெரிவித்தாள். உடனே பாளையக்காரர் ஶ்ரீரங்க ராயரை அழைத்த திருமலை நாயக்கர், அந்தப் புலியை உடனே கொல்ல வேண்டுமென்று ஆணையிட்டார். ஶ்ரீரங்கநாயக்கர் ‘வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு யார் அந்தப் புலியைக் கொல்லப்போகிறீர்கள்’ என்று கேட்க, மூவரையத் தேவன் என்பவர் முன்வந்தார். அவரும் அவருடைய உறவினர் அறுவரும் அந்தப் புலியைத் தேடிக் கொன்றனர். அதனால் மனம் மகிழ்ந்த திருமலை நாயக்கர் மூவரையத் தேவனுக்கு ‘ திருமலை மூவரையத் தேவன்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தார். ஒரு கிராமத்தையும் பரிசாகக் கொடுத்து செப்புப் பட்டயத்தை வழங்கினார். இந்தச் செய்திகளை இலந்தைக் குளம் செப்பேடு தெரிவிக்கிறது.

அம்மையநாயக்கனூர்ச் செப்பேடு – பல்லக்குத் தூக்கியமைக்கு

தற்போது கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் உள்ள ஊர்தான் அம்மையநாயக்கனூர். ஒரு சமயம் திருமலை நாயக்கர் அவசர வேலையாக திருச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது அவருக்கு வழக்கமாகப் பல்லக்குத் தூக்கும் பணியாளர்கள் தங்களது உறவினர்கள் உடல்நிலை குன்றியிருப்பதால் வர இயலாது என்று மறுத்துவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் திருமலை நாயக்கர் தவித்தபோது, அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த சிலர் தாங்கள் பல்லக்குத் தூக்கி வருவதாகக் கூறி முன்வந்தனர். திருமலை நாயக்கரும் அதற்குச் சம்மதிக்கவே, மூன்று தினங்களில் மதுரையிலிருந்து திருச்சிக்குச் சென்று மீண்டும் மதுரைக்கு அவரைப் பல்லக்கில் அவர்கள் தூக்கி வந்தனர். திருமலை மன்னர் சரியான சமயத்தில் உதவிய அவர்களுக்கு நிலக்கொடை அளிக்க முன்வந்தார். ஆனால் நிலம் தங்களிடம் தங்காது என்று மறுத்த அவர்கள் அந்த ஊர் நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையைக் கோரிப்பெற்றனர். அந்த விவரம் இந்தச் செப்பேடுகளில் காணப்படுகிறது.

ராமநாதபுரம் செப்பேடு

திருமலை நாயக்கர் அளித்த நான்கு செப்பேடுகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவை. அதில் முக்கியமான இந்தச் செப்பேடு வெளியிடப்பட்ட ஆண்டு ஜனவரி 13, 1632 (பிரஜோற்பத்தி ஆண்டு தை 15). இந்தச் செப்பேட்டில் ராமேஸ்வரம் கோவிலில் பூஜைப் பணிகளைக் கவனித்து வரும் குருக்கள்மார், சபையோர், தமிழ் ஆரியர் ஆகியோர் ஒன்று கூடி எந்தெந்தத் தெய்வங்களுக்கு யார் யார் பூஜை செய்வது, அதற்கு உண்டான பங்குகள் என்னென்ன. விழாக்கள் நடத்துவது யார் போன்று பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டனர். அதை ஓலையில் எழுதி திருமலை நாயக்கருக்கும் தளவாய் சேதுபதிக்கும் இசைமுறிவாக எழுதிக்கொடுத்தனர். அந்த ஆவணமே இந்தச் செப்பேட்டில் உள்ளது.

அதன்படி குருக்கள்மார், ராமநாதசுவாமியைப் பூஜை பண்ணுவது, மலைவளர்காதலியம்மனை பூஜை செய்வது, பல்லக்கு நாயகரைப் பூஜை செய்வது, வெள்ளைத் துர்க்கையம்மனைப் பூஜிப்பது திருவாபரணங்கள் சாற்றுவது திருவிழாக்களுக்கு சுவாமி அம்மனை எழுந்தருளப்பண்ணுகிறது போன்ற பணிகளைச் செய்வதென்றும் மற்ற பரிவார தேவதைகளுக்கு பூஜை செய்வது, நைவேத்தியம் செய்வது, யானைமேல் திருமஞ்சன நீர் கொண்டுவருவது போன்ற பணிகளைச் சபையார் செய்வது என்றும் உற்சவத்திற்கு சுவாமிகளைக் கேடயத்தில் எழுந்தருளப்பண்ணுகிறது, உற்சவங்களில் நைவேத்தியம் தயாரிப்பது போன்ற பணிகளைச் சைவப் பண்டாரங்கள் செய்துவந்தனர்.

வெள்ளியங்குன்றம் செப்பேடு

அழகர் கோவிலுக்கு அருகே உள்ள ஊர் வெள்ளியங்குன்றம். இது ஒரு பாளையப்பட்டாக இருந்தது. ஜனவரி 4ம் தேதி 1670ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு இந்த ஊர் பாளையக்காரர்களாகவும் பின்னால் ஜமீன்தார்களாகவும் இருந்தவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்தது. அதில் காணப்பட்ட விவரம் பின்வருமாறு.

ஒருமுறை அழகர்கோவிலில் புகுந்த திருடர்கள், கோவில் ஆபரணங்களையும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் களவாடிச் சென்றுவிட்டனர். கோவில் அதிகாரிகள் திருமலை நாயக்கரிடம் இதுபற்றி முறையிடவே, நாயக்கரும் வெள்ளியங்குன்றப் பாளையக்காரரான இம்மிடி கனகராமயக் கவுண்டரை அழைத்து அந்தக் கொள்ளையர்களைப் பிடித்துவரவேண்டும் என்றும் கொள்ளைபோன பொருட்களைத் திரும்பக் கொண்டுவரவேண்டுமென்றும் ஆணையிட்டார். அதன்படி திருடர்களைப் பிடித்த கவுண்டர், அவர்களிடமிருந்து பொருட்களை மீட்டு அவர்களின் தலையை வெட்டி திருமலை மன்னர் முன்பு கொண்டுவந்தார். மகிழ்ச்சியடைந்த திருமலை நாயக்கர் வெள்ளியங்குன்றம் பாளையம் தரவேண்டிய காட்சி, கப்பம் போன்றவற்றை நீக்கி (மாப்பு செய்து) அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா, ஆடித் திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகிய விழாக்களின் போது கவுண்டரின் குடும்பத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஆணையையும் அளித்தார்.

மதுரைத் தலத்து ஓதுவார் செப்பேடு

மதுரைத் தலத்தில் திருமுறை ஓதும் ஓதுவார்களாகப் பணிபுரிந்த தாண்டவமூர்த்தி ஓதுவாருக்கு காணியாட்சியாக நிலம் வழங்கியதை இந்தச் செப்பேடு ஆவணப்படுத்துகிறது. செங்குளம் என்ற இடத்தில் நன்செய் நிலம் 35 காணியும் புன்செய் நிலம் 23 விரைப்பாடும் (அதாவது 23 கலம் விதைகளை விதைக்கக்கூடிய நிலப்பரப்பு) அவருக்கு வழங்கப்பட்டது. தமிழுக்காக திருமலை நாயக்கர் எதுவும் செய்யவில்லை என்ற வாதத்தை மறுக்கும் உறுதியான சாட்சியாக இந்தச் செப்பேடு உள்ளது. தவிர, தமிழ்த் திருமுறைகள் கோவில்களில் ஓதுவதை திருமலை நாயக்கர் போன்ற பல நாயக்க மன்னர்கள் ஆதரித்ததையும் இச்செப்பேடு தெளிவுபடுத்துகிறது.

மங்கலரேவுச் செப்பேடு

சாதிப்பூசலைத் திருமலை நாயக்கர் தீர்த்துவைத்ததைச் சொல்லும் செப்பேடு இது. சிந்துரெட்டி என்பவர் தன்னுடைய கிராமமான சின்னாரெட்டிப்பட்டியை விற்பனை செய்ய முயன்றார். அதை சோலப்பரெட்டி என்பவர் வாங்க முன்வந்தபோது, சிந்துரெட்டி அவருடைய சாதியை இழிவாகப் பேசிவிட்டார். இதனால் மனம் நொந்த சோலப்பரெட்டி, நன்மறம் என்ற இடத்தில் அப்போது தங்கியிருந்த திருமலை நாயக்கரிடம் முறையிட்டார். சாதியைக் குறிப்பிட்டு இகழ்ந்த செய்தியைக் கேட்டு வெகுண்ட திருமலை நாயக்கர், சிந்துரெட்டியிடமிருந்து அந்த ஊரைப் பறிமுதல் செய்து சோலப்ப ரெட்டிக்கு அளித்தார். அந்த ஊரின் சில பகுதிகளை மட்டும் வாழ்வாதாரத்திற்காக சிந்துரெட்டிக்கு அளித்தார் திருமலை நாயக்கர். இந்தச் செய்திகளை மங்கலரேவுச் செப்பேடு கூறுகிறது.

சிறுவாலை ஜமீன் செப்பேடு

திருமலை நாயக்கரின் முக்கிய அலுவலர்களான தளவாய் ராமப்பையன், பிரதானி வைத்தியப்பையன், அமுதார், திருமலை நம்பி ஆகியோர் அழகர் கோவில் கொடிமரத்தின் முன்பு கூடி, இம்மிடி அச்சிராம கவுண்டருக்கு அளித்த உரிமைகளைப் பற்றி இந்தச் செப்பேடு பேசுகிறது. அவர் திருக்கோவிலையும் சுவாமி வலம் வருகின்ற வீதிகளையும் காவல் காத்துக் தருவதற்காக சுவாமியின் திருவிடையாட்டமான சிறுவாலை கிராமத்தைக் காவல் காணியாட்சியாக வழங்கியதை செப்பேடு பதிவு செய்திருக்கிறது. ஊரின் எல்லைகளைக் குறிப்பிட்டு காவல் சீர்மையில் அடங்கிய இடங்கள் அங்கே காவல் காப்போரின் சொல் சுதந்தரம் ஆகியவற்றையும் விரிவாக இந்தச் செப்பேடு குறிப்பிட்டிருக்கிறது. சித்திரைத் திருவிழா, ஆடித் திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகிய விழாக்களின் போது கவுண்டருக்கு அளிக்கவேண்டிய மரியாதைகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

தருமத்துப்பட்டிச் செப்பேடு

திருமலை நாயக்கர் தனது படைகளுடன் மேற்குத் திசை சென்று வரும்போது, புளியங்குளம் என்ற இடத்தில் அவரை வரவேற்ற இருளப்பக்கவுண்டன், புன்னைத் தேவன் என்ற இருவரும் அரசருக்கும் அவரது படைகளுக்கும் இருபொழுது உபசரணைகள் செய்தனர். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர், அந்த ஊரில் யாரும் இல்லாது அழிந்து போயிருப்பதைக் கவனித்தார். அதன் பின் ஊரைச் சீரமைத்து அங்கே குடிகளை கொண்டு வந்து குடியமர்த்தி, ஊரை இரண்டாகப் பிரித்து அதன் நாட்டாண்மை உரிமையை இருவருக்கும் பகிர்ந்தளித்தார் திருமலை நாயக்கர். தருமத்துப்பட்டிச் செப்பேடு இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்தப் புளியங்குளம் என்ற ஊர் தற்போது மதுரை அருகே வடபழஞ்சிக்கு அடுத்து உள்ள ஊராகும்.

போலிச்செப்பேடுகள்

இவற்றைத் தவிர திருமலை நாயக்கரின் பெயரில் வெளியிடப்பட்ட போலிச்செப்பேடுகளும் உள்ளன. உதாரணமாக திருமலை நாயக்கரின் உத்தரவின் பேரில் அவரது தளவாயான ராமப்பையர் பழனி கோவிலின் பூஜை முறையை மாற்றியதாக செப்பேடு ஒன்று உள்ளது. அது பின்வருமாறு…

இதில் உள்ள சக ஆண்டும் கலியுக ஆண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், இரண்டு ஆண்டுகளையும் ஆங்கில ஆண்டுகளுக்குப் பொருத்திப் பார்த்தால் பொயு 1444 சாலிவாஹன சகாப்தம் 1366ஆகவும் பொயு 1476 கலியுக சகாப்தம் 4578க்கும் பொருந்தி வருகிறது. திருமலை நாயக்கர் ஆட்சி செய்ததோ பொயு 1623ம் ஆண்டு முதல். காலக்கணக்கில் உள்ள குளறுபடியைத் தவிர பழனி கோவிலில் ஆதிசைவர்கள் பூஜித்து வந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் அதற்கு முன்பே மல்லிகார்ஜுன ராயர் காலத்திலிருந்து உள்ளன. அப்படியிருக்க திருமலை மன்னர் பூஜை முறையை மாற்றியதாகச் சொல்வது தவறான செய்தியாகும்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *