பல திருப்பங்கள் நிறைந்த திருமலை நாயக்கரின் வரலாற்றில் அவரோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் செவிவழிச் செய்திகளாகக் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
நீலகண்ட தீட்சதருக்குத் தண்டனை
திருமலை நாயக்கர் தனது குருவாக நீலகண்ட தீட்சதரைக் கொண்டார் என்பதையும் அவரை வைத்துப் பல்வேறு கோவில் திருப்பணிகளை நிறைவேற்றினார் என்பதையும் பார்த்தோம் அல்லவா. புதுமண்டபம் கட்டப்படும்போது அங்கே தன்னுடைய முன்னோர்களின் சிலைகளையும் தேவியர் இருவருடன் கூடிய தன்னுடைய சிலையையும் அங்கே வைக்க உத்தரவிட்டிருந்தார் திருமலை நாயக்கர். அதன்படி அரசியின் சிலையை சிற்பி ஒருவர் செதுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தச் சிலையின் தொடைப்பகுதியில் உளி பட்டு அங்கே ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது. பின்னப்பட்ட சிலையைப் பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தால், அதை அப்படியே ஒதுக்கிவிட்டு இன்னொரு கல்லில் அரசியின் சிலையைச் செதுக்க ஆரம்பித்தார் அந்தச் சிற்பி. அப்போது மீண்டும் அரசியின் சிலையின் தொடைப்பகுதியில் உளி ஆழமாகப் பதிந்து ஒரு பள்ளத்தை உண்டாக்கியது. இப்படி ஒவ்வொரு சிலையிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்தால் எத்தனை சிலைகளைச் செதுக்குவது என்ற கவலையில் சிற்பி ஓரமாகப் போய் அமர்ந்துவிட்டார். மற்ற சிற்பங்களை எல்லாம் செதுக்கும்போது ஏற்படாத இந்த இடையூறு ஏன் அரசியின் சிலையைச் செதுக்கும்போது ஏற்படுகிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை.
அப்போது புதுமண்டபத்தின் கட்டுமான வேலையை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்த நீலகண்ட தீட்சதர் அங்கே வந்தார். சிற்பி வேலை செய்யாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட அவர், என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்தார். கண்களை மூடி ஒரு நிமிடம் தியானித்த பிறகு, சிற்பியிடம் ‘அந்தப் பள்ளத்தை அப்படியே விட்டுவிடு, அரசியின் தொடையில் இருக்கும் வடுவே அது’ என்று சொல்லிச் சென்றுவிட்டார். சிற்பியும் சிலையைத் திருமலை நாயக்கர் சிலைக்கு அருகே நிறுவிவிட்டார்.
ஓரிரு நாட்கள் கழிந்த பிறகு, திருமலை மன்னர் அந்தப் பக்கம் வந்து சிற்ப வேலைகளைக் கவனித்தார். மன்னரின் கூரிய கண்களுக்கு அரசியின் தொடையில் இருக்கும் அந்தப் பள்ளம் தப்பவில்லை. சிற்பியை அழைத்து பின்னப்பட்ட அந்தச் சிலையை ஏன் நிறுவினாய் என்று திருமலை நாயக்கர் விசாரித்தபோது, சிற்பியும் மன்னரிடம் உண்மையைத் தெரிவித்தார். அரசியின் தொடையில் இருக்கும் வடு நீலகண்ட தீட்சதருக்கு எப்படித் தெரிந்தது என்று ஆத்திரமடைந்த மன்னர், தீட்சதரின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். அவசர முடிவுகளை எடுப்பதில் பெயர் போனவரல்லவா திருமலை நாயக்கர். அரண்மனை திரும்பிய பிறகு காவலர்களை அழைத்து நீலகண்ட தீட்சதரை உடனே அழைத்து வருமாறு ஆணையிட்டார். அதன்பின் பிரதானியை அழைத்து நீலகண்ட தீட்சதரின் கண்களைக் குருடாக்கிவிடுமாறும், தான் அவரைப் பார்க்க விரும்பவில்லை என்றும் கூறிவிட்டு அந்தப்புரத்திற்குச் சென்றுவிட்டார்.
காவலர்கள் நீலகண்ட தீட்சதரின் வீட்டிற்குச் சென்றபோது அவர் மீனாட்சியம்மனைப் பூஜை செய்துகொண்டிருந்தார். பூஜை நிறைவடைந்து தீபாராதனை செய்யும் போது அவரிடம் காவலர்கள் சென்று அரசர் உடனே அழைத்து வரச் சொன்ன செய்தியைத் தெரிவித்தனர். மன்னன் எதற்கு அழைக்கிறான் என்பதை தீட்சதர் உடனே உணர்ந்துகொண்டார். கற்பூரத்தின் ஜ்வாலையால் உடனே தன் கண்களைப் பொசுக்கிக் கொண்ட அவர், காவலர்களிடம் அரசனுடைய தண்டனையைத் தாமே நிறைவேற்றிவிட்டதாகச் சொல்லும்படி கூறினார்.
நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் ஓடோடிச் சென்று பிரதானியிடம் நடந்ததைச் சொன்னார்கள். விஷயம் திருமலை நாயக்கரின் காதுகளுக்குச் சென்றது. பிரதானியிடம் மட்டுமே தாம் சொன்ன தண்டனையை தீட்சதர் உணர்ந்து கொண்டு அதை நிறைவேற்றியதை அறிந்த மன்னர், நீலகண்ட தீட்சதருடைய மகத்துவத்தை உணர்ந்து உடனடியாக அவர் வீட்டிற்குச் சென்று மன்னிப்புக் கேட்டார். அதன் பிறகு நீலகண்ட தீட்சதர் மீனாட்சியம்மனைப் போற்றி ‘ஆனந்த சாகர ஸ்தவம்’ என்ற நூலை இயற்றி தான் இழந்த கண்பார்வையைத் திரும்பப் பெற்றார். பின்னாளில் அவர் மீது பெரும் மரியாதை கொண்டு ‘பாலமடை’ என்ற கிராமத்தை அவருக்காக தானம் செய்தார் திருமலை நாயக்கர்.
மதுரைக் கோவில் சுரங்கம்
திருமலை நாயக்கர் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் என்பது தெரிந்த விஷயம். நினைத்த போது கோவிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆசை மன்னருக்கு இருந்தது. ஆனால் மன்னர் வருகிறார் என்றால் கோவிலில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே இதற்கு என்ன வழி என்பதை அவர் சிந்தித்தார்.
மதுரையில் சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் ஒன்று ‘சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை’ . அனாதரவான பெண் ஒருத்திக்காக திருப்புறம்பியத்திலிருந்து வன்னி மரம் ஒன்றும், அங்கிருந்த கிணறும் சிவலிங்கமும் மதுரைக்கே வந்து சாட்சி சொன்ன திருவிளையாடல் அது. அதை நினைவுபடுத்தும் விதமாக மதுரைக் கோவிலில் ஒரு வன்னிமரத்தை வைத்து அதனருகே ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார் மன்னர். அதன்பின் அருகே ஒரு கிணற்றை வெட்டச்சொன்னார். உண்மையில் அது கிணறு அல்ல. திருமலை நாயக்கர் அரண்மனைக்குச் செல்லும் சுரங்கம்தான் அது. அதன் வழியாக மதுரைக் கோவிலுக்கு வந்து சத்தமில்லாமல் மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்துவிட்டுச் செல்வார் திருமலை நாயக்கர். பின்னாளில் அந்த வன்னிமரம் மட்டும் அங்கிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு அருகிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக கல்லால் ஆன சிறு வன்னிமரத்தை கிணற்றின் அருகே நட்டுவைத்து விட்டனர். இன்றும் சுந்தரேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் மகாலட்சுமியின் சன்னதிக்கருகில் அந்த வன்னி மரத்தையும் கிணற்றையும் சிவலிங்கத்தையும் காணலாம். கிணற்றுக்குள் சுரங்கம் இருக்கிறதா என்பது சொக்கநாதருக்கே வெளிச்சம்.
சுப்ரதீபக் கவிராயர் சரித்திரம்
திண்டுக்கல்லுக்கு அருகே சுப்ரதீபக் கவிராயர் என்று ஒரு புலவர் வாழ்ந்துவந்தார். தமிழில் நல்ல புலமை கொண்ட அவருக்கு திருமலை மன்னரைப் பாடிப் பரிசு பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆகவே திருமலை நாயக்கரின் பெயரில் ஒரு சிருங்காரக் கவிதை நூலை இயற்றி அதை எடுத்துக்கொண்டு திருமலை நாயக்கரைச் சந்திக்கச் சென்றார் கவிராயர். ஆனால் அவர் சென்ற நேரம் சரியான சமயமல்ல. ஏதோ காரணத்தால் திருமலை நாயக்கர் பெரும் கோபத்தில் இருந்த நேரம் அது. சமயசந்தர்ப்பம் தெரியாமல் அங்கே சென்ற சுப்ரதீபக் கவிராயர், திருமலை நாயக்கரிடம் கவிதையைப் படித்துக் காட்டத் தொடங்கினார். ஆத்திரமடைந்த திருமலை மன்னர், கவிராயரை நன்றாகத் திட்டினார். அதனால் வெகுண்ட கவிராயரும் திருமலை மன்னரை வாய்க்கு வந்தபடி பேச, திருமலை நாயக்கர் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்.
ஒருவழியாக அங்கிருந்து தப்பித்துச் சென்ற கவிராயர், தன்னை அவமானப்படுத்திய திருமலை நாயக்கருக்குத் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும் என்ற ஆத்திரத்தில் திண்டுக்கல்லில் இருந்த கூளப்ப நாயக்கர் என்ற செல்வந்தரிடம் சென்றார். காவியத்தை அவர் பெயரில் மாற்றி எழுதிவிட்டார். அதுமட்டுமல்ல அந்தக் காவியத்தில் திருமலை நாயக்கரை கண்டபடித் திட்டி எழுதியிருந்தார். கூளப்ப நாயக்கன் காதல் என்ற பெயரில் அந்தப் பாடல் இன்றும் கிடைக்கிறது. பின்னாளில் சுப்ரதீபக் கவிராயர், இங்கே மதப்பிரச்சாரம் செய்ய வந்தவரும் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்டவருமான கான்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கியிடம் போய்ச் சேர்ந்து அவர் பல நூல்களை எழுத உதவினார்.
அரண்மனையில் திருடன்
திருமலை நாயக்கர் மஹாலில் இன்று எஞ்சியிருப்பது அதன் நாலில் ஒரு பகுதிதான். அவ்வளவு பிரமாண்டமான அரண்மனையாக இருந்தாலும் திருமலை நாயக்கரின் தேவியரில் ஒருவர் (அவர் தஞ்சை நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது) அந்த அரண்மனை தனது பிறந்த வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகையின் அளவு கூட இல்லை என்று சொன்னதாகவும் அதைக் கேட்டு வெகுண்ட திருமலை நாயக்கர் அவரைக் தண்டித்ததாகவும் ஒரு கதை உண்டு. ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
அதே போலச் சொல்லப்படும் இன்னொரு நிகழ்வு இது. ஒரு சமயம் திருமலை நாயக்கர், தனது அரண்மனையின் உறுதியைக் கண்டு வியந்து தன்னுடைய அதிகாரிகளிடம் இவ்வளவு உறுதியான அரண்மனையில் கள்வர்கள் நுழையமுடியாது என்று கூறினாராம். அதைக் கேட்ட ஒருவர் ‘காப்பானிற் கள்வன் மிகும்’ அதாவது காப்பவர்களை விட கள்வர்கள் அதிகம் என்றாராம். அது நடவாத விஷயம் என்று திருமலை நாயக்கர் சவால் விட்டாராம். அன்றிரவே ஒரு திருடன் அந்த அரண்மனையில் நுழைந்து அவரது படுக்கை அறையில் புகுந்து சில விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டானாம். மறுநாள் காலை அதை அறிந்த திருமலை நாயக்கர், அந்தத் திருடன் வந்து பொருட்களை ஒப்படைத்தால் அவனுக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாகப் பறையறிவித்தார். அதைக் கேட்ட அந்தத் திருடன் அரண்மனைக்கு வந்து பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். திருமலை நாயக்கர் தான் வாக்களித்தது போல ஒரு கிராமத்தை அவனுக்கு அளித்தாராம்.
இன்றும் திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றால் அந்தத் திருடன் நுழைந்த வழியான மேல்தளத்தில் உள்ள ஒரு துளையை அங்குள்ளோர் காட்டுவதுண்டு
ராமாயணச் சாவடி
அக்காலத்தில் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் புராணங்களையும் வாசிப்பதற்காகவும் அந்தக் கதையை மக்கள் கேட்பதற்காகவும் பல மண்டபங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். சாவடிகள் என்று அழைக்கப்பட்ட அது போன்ற ஒரு மண்டபம் மதுரையில் இருந்தது. வடக்கு மாசி வீதியில் ராமாயணச் சாவடி என்ற பெயரில் அந்த மண்டபத்தை யாதவ சமுதாய மக்கள் கட்டியிருந்தனர். அதன் வாசலில் வயதான ஒரு அம்மணி பால், மோர் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தார்.
ஒரு சமயம் திருமலை நாயக்கர் நகர் உலாச் சென்றார். அப்போது அவருக்குத் தாகம் அதிகமாகவே ராமாயணச் சாவடியில் இருந்த அந்த அம்மையாரிடம் கொஞ்சம் மோர் வாங்கிக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக்கொண்டார். அதற்குக் காசு கொடுக்க அவர் முனைந்தபோது, அந்த அம்மையார் தனக்குப் பணம் ஏதுவும் வேண்டாம் என்றும் மதுரைச் சித்திரைத் திருவிழாவின் போது சுவாமியின் அம்மனும் ஒரு நாள் அந்த ராமாயணச் சாவடியில் வந்து தங்கியிருக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். திருமலை நாயக்கரும் அதை ஏற்றுக்கொண்டு தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். இன்றும் மதுரைத் திருவிழாவின் போது ஐந்தாம் திருநாள் சுவாமியும் அம்மனும் இந்த ராமாயணச் சாவடிக்கு எழுந்தருளுகின்றனர்.
குமரகுருபரரின் வருகை
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கருக்கு தமிழ் நூல் ஒன்று தன் சபையில் அரங்கேற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் பிறப்பால் பேச முடியாதவராக இருந்தாலும் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேச்சுத்திறன் வரப்பெற்றவரான குமரகுருபரர் மதுரைக்கு வருகை தந்தார். மீனாட்சியம்மனின் மேல் பெரும் பக்தி கொண்டிருந்த திருமலை நாயக்கர் குமரகுருபரரை மீனாட்சியம்மனின் மீது துதி ஒன்றை இயற்றுமாறு வேண்டிக்கொண்டார். அதை ஏற்ற குமரகுருபரர், மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றினார்.
அந்த நூல் மதுரைக் கோவிலில் அரங்கேறியபோது ஒரு சிறு பெண் அங்கே நடந்துவந்து திருமலை நாயக்கரின் மடிமேல் அமர்ந்து அந்தப் பிள்ளைத் தமிழ் முழுவதையும் கேட்டு ரசித்தாள். அரங்கேற்றம் நிறைவடைந்த பிறகு தன் கழுத்தில் உள்ள மாலையை குமரகுருபரருக்கு பரிசாக அளித்துவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டாள். வந்ததது மீனாட்சியம்மனே என்பதை அறிந்த திருமலை நாயக்கரும் குமரகுருபரரும் அம்மனைப் போற்றினர் என்று கோவில் தலவரலாறு கூறுகிறது.
அதன்பின் மீனாட்சியம்மை குறம் என்ற நூலையும் குமரகுருபரர் இயற்றினார். அதில் திருமலை நாயக்கரை அவர் இப்படி வாழ்த்தியிருக்கிறார்.
நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி
கார்வாழி யங்கயற்கட் கண்ணிதிரு வருள்வாழி
சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி
பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே
(தொடரும்)