தான் வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றிய போதிலும் திருமலை நாயக்கர், மதுரை சொக்கநாதப் பெருமானை தனது இஷ்ட தெய்வமாகப் பூஜித்தார். அத்வைத மரபைச் சேர்ந்த நீலகண்ட தீட்சதரைத் தனது குருவாகக் கொண்டார். சைவ சித்தாந்த மரபைச் சேர்ந்த குமரகுருபரரை ஆதரித்தார். இப்படி சனாதனத்தின் பல்வேறு மரபுகளையும் போற்றியவராக திருமலை நாயக்கர் இருந்ததைக் காணமுடிகிறது. எந்த விஷயத்திலும் தடாலடி முடிவுகளை எடுக்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும் ஆன்மிகம், கோவில் தொடர்பான விஷயங்களில் நிதானத்தையே கடைபிடித்தார் என்பதை மதுரைக் கோவில் சீர்திருத்த விஷயங்களில் பார்த்தோம்.ஹிந்து மதத்தின் பல சம்பிரதாயங்களையும் மட்டுமல்லாமல் எல்லாச் சமயங்களையும் ஒரே விதமாக நடத்தக்கூடிய பண்பை திருமலை நாயக்கர் பெற்றிருந்தார் என்பதை அவர் மற்ற சமயங்களை நடத்திய முறைகளிலிருந்தும் அறிய முடிகிறது.
கிறித்தவ மதப் பிரசாரம்
ஏசு சபையைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட போட்டியால் ராபர்ட் டி நொபிலி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சமயப் பிரசாரத்தைச் செய்ய முடியாமல் சும்மா இருக்க நேரிட்டது என்று பார்த்தோம் அல்லவா. திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த பிறகு நொபிலி மீண்டும் புதிய உத்வேகத்துடன் தனது மதப் பிரசாரத்தைத் தொடங்கினார். மற்றவர்களின் பிரசாரப் பாணியைப் பின்பற்றாமல் தான் மொட்டையடித்துக்கொண்டு காவி உடையை அணிந்துகொண்டு காலில் ஹிந்து மதத் துறவிகள் போல மரத்தால் ஆன காலணிகளை மாட்டிக்கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு ஆசிரமம் போல ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்து தனது மதப் பிரசாரத்தைத் தொடங்கினார் நொபிலி. தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு ஆகிய மும்மொழிக்கொள்கையைப் பின்பற்றி தனது சீடர்களிடம் அந்தந்த மொழிகளில் பரப்புரை செய்து தனது சமயப் பணிகளை அவர் நடத்த ஆரம்பித்தார்.
இது மற்ற ஏசு சபைத் தொண்டர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதால் மீண்டும் அவர் மீது புகார் சொல்லத் தொடங்கினர். போலவே மற்ற மதத்தவரும் நொபிலிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கவே, பொயு 1623ம் ஆண்டு அவர் மதுரையை விட்டுக் கிளம்ப நேரிட்டது. முதலில் சேந்தமங்கலத்திற்குச் சென்ற அவர், சில காலம் அங்கே தமது பரப்புரையை நடத்தி வந்தார். ஆனால் அங்கேயும் அவருக்கு எதிராக குரல் எழும்பத் தொடங்கவே,அங்கிருந்து கிளம்பி சேலத்திற்குச் சென்றார். அங்கே தளபதி நாயக்கர் என்ற பாளையக்காரர் ஆட்சி செய்து வந்தார். நாயக்கரின் தம்பி நொபிலிப் பாதிரியாரின் சீடராக ஆனதால், அங்கே நொபிலிப் பாதிரியாருக்கு ஆரம்பத்தில் தொல்லைகள் அதிகம் இருக்கவில்லை. சில காலம் அவரது பிரசாரம் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் நடைபெற்று வந்தது.
பொயு 1627ம் ஆண்டு மதுரை ஏசு சபையில் பாதிரியாராக இருந்த வைக்கோ நோய்வாய்ப்படவே, நொபிலியை மீண்டும் மதுரை செல்லுமாறு தலைமையகம் அறிவுறுத்தியது. அதை ஏற்று மார்டின்ஸ் என்பவரை சேலத்தில் தனக்குப் பதிலாக நியமித்துவிட்டு மதுரை சென்றார் அவர். ஆனால் அவர் திருச்சிக்கு வந்தபோது, வைக்கோ பாதிரியார் உடல் நலம் பெற்றுவிட்டதாகவும் அதனால் அவர் திருச்சியிலேயே தங்குமாறும் ஆணை வந்தது. அதன் காரணமாக அவர் திருச்சியில் தங்கி பரப்புரையைத் தொடங்கினார். வழக்கம் போல இங்கே அவருக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. திருச்சியின் ஆளுநராக இருந்தவர், நொபிலிப் பாதிரியாரைச் சிறையில் அடைத்துவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் அங்கிருந்து கிளம்பி கொச்சி சென்றுவிட்டார். இந்தக் காலகட்டத்தில் திருமலை நாயக்கர் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டிருந்ததால் இந்த விவகாரங்களைக் கவனிக்கவில்லை.
1638ம் ஆண்டு மதுரை திரும்பிய நொபிலிப் பாதிரியார் அங்கே வந்ததும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விஷயம் திருமலை நாயக்கர் காதுகளுக்குச் சென்றது. மதச் சிக்கல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பாத நாயக்கர் அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டர். சேதுபதியுடனான போரில் போர்ச்சுகீசியர்களின் உதவியைப் பெற்ற திருமலை நாயக்கர் அவர்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்திருந்தார். அதில் மதப் பிரசாரம் செய்யும் உரிமையும் ஒன்று. ஆகவே மதப் பிரசாரம் செய்யும் பாதிரியார்களைச் சுதந்தரமாக விடவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்தது. ஆனால் மதமாற்றத்துக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் கிளம்பிய வண்ணமே இருந்தன. பல பாதிரியார்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டனர். திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பாளையக்காரர்களே இதைச் செய்யவேண்டியிருந்தது. 1644ம் ஆண்டு நொபிலிப் பாதிரியார் திருமலை நாயக்கரைச் சந்தித்து மதப் பிரசாரத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளையும் பாதிரியார்கள் துன்புறுத்தப்படுவதையும் பற்றி முறையிட்டார். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்றும் குறை சொன்னார்.
இதைக் கேட்ட திருமலை நாயக்கர் சிறைப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் அவர்களைத் துன்புறுத்தக்கூடாது என்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் திருப்பி அளித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இருந்தாலும் இந்த உத்தரவு சரிவரக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை டாகாஸ்டா என்ற பிரசாரகரின் கடிதத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுகிறார் “நமக்குப் பகைவர்கள் அதிகமாக உள்ளனர். மதுரை நாயக்கர் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டவராக இருந்தாலும் நம் பகைவர்களின் குற்றங்களிலிருந்து அவை நம்மைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை”. ஆகவே தொடர்ந்து மத மாற்றத்திற்கு எதிரான குரல்கள் கிளம்பிக்கொண்டே இருந்தன என்று ஊகிக்கலாம். இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட நொபிலிப் பாதிரியார் சில காலம் இலங்கைக்குச் சென்று அங்கே வசித்தார். பிறகு சென்னை மயிலாப்பூருக்குத் திரும்பி அங்கே தனது மதப் பிரசாரத்தைத் தொடர்ந்தார். தமது 79ம் வயதில் அங்கேயே மறைந்தார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் மதப் பிரசாரங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. அடிக்கடி மத மோதல்கள் வேறு நடைபெற ஆரம்பித்ததால், ஆங்காங்கே ஆட்சி செய்த பாளையக்காரர்கள் மதப் பிரசாரர்களைத் துன்புறுத்துமாறு தமது காவலர்களுக்கு ஆணையிட்டனர். பல பிரசாரகர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து மதப் பிரசாரம் செய்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் காரணமாக டாகஸ்டா மீண்டும் திருமலை நாயக்கரைச் சந்தித்து முறையிட்டார். அதனால் மீண்டும் திருமலை நாயக்கர் பிரசாரகர்களைத் துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க நேரிட்டது. முன்பு போலவே இந்த உத்தரவும் சரிவரக் கடைப்பிடிக்க முடியவில்லை. மதமாற்றத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அது பொது மக்களிடையே இருந்து வந்த காரணத்தால், அதை கடுமையாக அடக்க திருமலை நாயக்கரும் விரும்பவில்லை. ஒரு புறம் போர்ச்சுக்கீசியருக்குக் கொடுத்த வாக்கின் காரணமாக பிரசாரத்தை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த போதிலும் அதை எதிர்த்தவர்களை அடக்க அவர் விரும்பவில்லை. எதிர்ப்புகளை “கண்டும் காணாமல்” அவர் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து மதமாற்றத்திற்கான எதிர்ப்பு நிலவியது.
இது ஒருபுறமிருக்க திருமலை நாயக்கர் கிறித்துவ மதத்தைத் தழுவிவிட்டதாக ஒரு புரளி கிளம்பியது. பல்வேறு சமயங்களையும் பொறுமையாக ஏற்று அவற்றை அடக்க விரும்பாத தன்மையை திருமலை நாயக்கர் கொண்டிருந்ததால், கிறித்துவ சமயத்தினரிடையே நாயக்கர் காட்டிய அன்பைத் தவறாப் புரிந்து கொண்ட சிலர் இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டனர். ஆனால் கடைசி வரை மீனாட்சி அம்மனின் பக்தராகவே திருமலை நாயக்கர் இருந்தார் என்பதே வரலாறு நமக்குக் காட்டும் செய்தியாகும்.
போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும்
திருமலை நாயக்கரின் சமயக் கொள்கைகளில் போர்ச்சுக்கீசியரிடம் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை முக்கியப் பங்கை வகித்தது என்று பார்த்தோம். ஐரோப்பாவிலிருந்து வர்த்தகம் செய்ய இங்கு வந்த போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் தங்களுக்கான இடத்தைப் பெற ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை மூண்டது. இது நாயக்கர் ஆதிக்கம் நிலவிய இடங்களில் நடந்தாலும், திருமலை மன்னர் இந்தச் சண்டைகளில் தலையிடவில்லை என்பதையே காண்கிறோம். இந்த நிலையில் திருமலை நாயக்கருக்கும் சேதுபதிக்கும் நடந்த போரில், சேதுபதி டச்சுக்காரர்களைத் துணைக்கு அழைக்கவே, திருமலை நாயக்கர் போர்ச்சுக்கீசியரின் உதவியை நாட வேண்டியதாகிவிட்டது. அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி கடற்கரைப் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் கோட்டைகளை அமைத்துக்கொள்ளலாம் என்றும் 50 போர்ச்சுக்கீசிய வீரர்களோடு 100 பணியாளர்களும் 3000 மீனவர்களும் பாதுகாப்புக்காக அந்தக் கோட்டைகளில் அமர்த்தப்படுவதற்கு திருமலை நாயக்கர் உடன்பட்டிருந்தார். ஏழு மாதா கோவில்களை அவர்கள் கட்டிக்கொள்ளவும் அனுமதி அளித்திருந்தார்.தாம் விரும்பிய படி மதப்பிரசாரம் செய்யவும் திருமலை நாயக்கர் ஒப்புக்கொண்டிருந்தார்.
இக்கட்டான போரின் இடையில் அவர் அளித்த இந்த வாக்குறுதிகள், திருமலை நாயக்கருக்குப் பல பிரச்சனைகளை விளைவித்தன. மேற்கண்ட மத மோதல்கள் ஒருபுறமிருக்க, தங்கள் எதிரிகளான போர்ச்சுக்கீசியர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளைக் கண்டு டச்சுக்காரர்கள் ஆத்திரமடைந்தனர். 1646ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய அரசன், இந்தியாவில் இருந்த டச்சுக்காரர்களைத் தோற்கடித்துத் துரத்துமாறு ஆணையிட்டான். அதற்கு உதவுமாறு திருமலை நாயக்கரிடம் போர்ச்சுக்கீசியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று தென் தமிழகக் கரையிலிருந்து டச்சுக்காரர்களை நாயக்கரின் படைகள் வெளியேற்றின. காயல்பட்டினம் போன்ற இடங்களிலிருந்து இப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது டச்சுக்காரர்களின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.
அதன் காரணமாக 1649ம் ஆண்டு, இலங்கையிலிருந்து பத்துக் கப்பல்களோடு புறப்பட்ட டச்சுக்காரர்களின் படை ஒன்று திருச்செந்தூருக்கு அருகே தரையிறங்கியது. மிக பழைமை வாய்ந்த அந்தக் கோவிலைக் கைப்பற்றிய டச்சுப் படையினர், அங்கே படைத்தளம் அமைத்தனர். அடுத்ததாக, போர்ச்சுக்கீசியர்களின் கோட்டை அமைந்திருந்த தூத்துக்குடியின் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி அதையும் கைப்பற்றினர். அங்குள்ள மீனவர்கள், டச்சுக்காரர்களைத் துரத்துவதற்கு நாயக்கருக்கு உதவி செய்ததால் அவர்கள் தண்டத்தொகை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி அவர்களைச் சித்ரவதை செய்தனர். டச்சுக்காரர்களை அங்கிருந்து விரட்டிய திருமலை நாயக்கர், அவர்கள் திரும்ப வருவார்கள் என்று எதிர்பார்த்து அங்கே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டும். அவர் அதைச் செய்யாததால் கடற்கரையோரத்தில் வசித்து வந்த மீனவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். பணம் கொடுக்க முடியாத மீனவர்களிடமிருந்து ஒப்பந்த சீட்டு ஒன்றை வாங்கிச் சென்ற டச்சுக்காரர்கள்,அந்த மீனவர்களின் படகுகளை இழுத்துக்கொண்டு சென்றனர். இது போன்று அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு திருச்செந்தூர் கோவிலும் இலக்கானது.
தொடர்ந்து டச்சுக்காரர்களின் பிடியில் திருச்செந்தூர் கோவில் இருந்ததால், அங்கே தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குப் பெரும் இடையூறுகள் ஏற்பட்டன. அதனால், அவர்கள் திருமலை நாயக்கரிடம் சென்று முறையிட்டனர். அதை ஏற்ற நாயக்கர், ஒரு படையை திருச்செந்தூர் நோக்கி அனுப்பினார். டச்சுக்காரர்களுக்கும் நாயக்கரின் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்கள் தோல்வியடைந்தனர். அவர்களில் பலர் உயிரிழக்க நேரிட்டது. அதற்குத் தகுந்த ஈடு செய்ய வேண்டும் என்று திருமலை நாயக்கரிடம் டச்சுப் படைத்தலைவன் கோரிக்கை வைத்தான். அதைத் திருமலை நாயக்கர் மறுக்கவே, திருச்செந்தூர்க் கோவிலைக் கொள்ளையடித்த டச்சுக்காரர்கள், அங்கிருந்து ஆறுமுக நயினார், நடராஜர் உட்பட பல விக்கிரகங்களை அங்கிருந்து தூக்கிச் சென்றனர்.
ஆனால் இலங்கை செல்லும் வழியில் அவர்களின் கப்பல் பெரும் புயலில் அகப்பட்டுக் கொண்டது. தாங்கள் கொண்டுவந்த விக்கிரகங்களின் சக்தியால்தான் அது நடந்தது என்று நம்பிய அவர்கள், அந்த விக்கிரகங்களைக் கடலில் தூக்கிப் போட்டுச் சென்றனர்.
அதன்பின், திருமலை நாயக்கரின் பிரதிநிதியாக திருச்செந்தூரில் இருந்த வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப்பெருமான் வந்து தான் இருக்கும் இடத்தைக் கூறியதாகவும், அதை வைத்து டச்சுக்காரர்கள் தூக்கிச் சென்ற விக்கிரகங்களை அவர் மீட்டதாகவும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும், வணிகம் செய்ய இங்கு வந்த ஐரோப்பியர்களின் அட்டூழியங்கள் திருமலை நாயக்கர் காலத்திலேயே இங்கு தொடங்கி விட்டதை இந்த நிகழ்வுகளால் புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)