Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #23 – திருமலை நாயக்கர் – மீண்டும் போர்கள்

மதுரை நாயக்கர்கள் #23 – திருமலை நாயக்கர் – மீண்டும் போர்கள்

தனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல போர்களைச் சந்தித்து அவற்றில் வெற்றி பெற்று அரசை தன்னாட்சி பெறச் செய்த பிறகு, சில காலம் அமைதியான ஆட்சியைத் தந்த திருமலை நாயக்கர், அவரது கடைசி காலத்திலும் போர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.

நாயக்கருக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணத்தில் பல பாளையக்காரர்கள் கலகம் செய்யத் தொடங்கினர். அவர்களை ஓரளவுக்கு அவர் அடக்கினாலும், எட்டயபுரம் பாளையக்காரர் அக்கம் பக்கத்திலுள்ள சில பாளையங்களைச் சேர்த்துக்கொண்டு கலகக் கொடியைத் தூக்கிய போது, ராமநாதபுரம் சேதுபதியின் உதவியை திருமலை நாயக்கர் நாடவேண்டியிருந்தது. அதை ஏற்று ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி எட்டயபுரத்தின் மீது படையெடுத்துச் சென்று அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த திருமலை நாயக்கர் அவருக்குப் பல மரியாதைகள் செய்ததோடு, முத்துக்குளிப்பதில் இருந்து கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை ராமநாதபுரம் அரசே வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். ரகுநாத சேதுபதிக்கு “நாட்டுக் காவலர்” என்ற பட்டத்தைக் கொடுத்து, எப்படி நவராத்திரி விழா மதுரையில் சிறப்போடு கொண்டாடப்படுகிறதோ அதே போல ராமநாதபுரம் அரண்மனையிலும் கொண்டாட வழிவகை செய்தார்.

மூக்கறு போர்

1638ம் ஆண்டிலிருந்து மைசூரை ஆட்சி செய்த கந்திருவ நரச ராஜா, திருமலை நாயக்கர் மீது பெரும் வன்மம் கொண்டு அவரை அழிக்க, தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். தன்னாட்சி பெற்றதிலிருந்து மதுரை அரசிற்கு உட்பட்ட பகுதிகளை தனது அரசின் கீழ் கொண்டு வர முயன்று இரு முறை தோற்றுப்போன மைசூர் அரசு அந்த அவமானத்திற்குப் பழி வாங்கத் துடித்துக்கொண்டிருந்தது. மதுரைத் தளபதியான ராமப்பையர், மைசூர் வரைக்கும் வந்து கோட்டையை முற்றுகையிட்டு தங்களைத் தோற்கடித்ததை அவர்கள் மறக்கவில்லை. தவிர, விஜயநகர அரசின் மீது பீஜப்பூர் சுல்தானைத் தூண்டி அதை அழித்தது திருமலை நாயக்கர்தான் என்ற எண்ணம் கந்திருவ ராஜாவின் மனதில் கனன்று கொண்டு இருந்தது.

இதற்கிடையில் எழுபத்து இரண்டு வயதைக் கடந்த திருமலை நாயக்கர் மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். இதுதான் சரியான சமயம் என்று எண்ணிய மைசூர் அரசர் 1656ம் ஆண்டு மதுரையை நோக்கி ஒரு படையை அனுப்பி வைத்தார். தளவாய் ஹம்பையா என்பவர் இந்தப் படைக்குத் தலைமை தாங்கி வந்ததாகத் தெரிகிறது.

‘கல்லுளி மங்கன் போன வழி காடு மலையெல்லாம் தவிடுபொடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழகத்தில் நுழைந்த அந்தப் படை வீரர்கள் தாங்கள் சென்ற வழியெங்கும் பேரழிவை ஏற்படுத்தினார்கள். சத்தியமங்கலத்திலும் சேலத்திலும் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச் செய்தன. வயல்களைப் பாழ்படுத்தினார்கள். ஊர்களைக் கொள்ளையடித்து நெருப்பு வைத்தார்கள். இது மட்டுமல்லாமல், தங்கள் கையில் கிடைத்தவர்கள் எல்லாரையும், அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் பார்க்காமல் அவர்களின் மூக்குகளை அறுத்துச் சித்தரவதை செய்தார்கள். சிறை பிடிக்கப்பட்டவர்களின் மூக்குகளை எல்லாம் அறுத்து மைசூருக்கு அனுப்பினார்கள்.

இப்படிக் கொடூரமான போரைச் செய்துகொண்டு மதுரையை மைசூர்ப்படை நெருங்கி வருவதைக் கண்ட திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார். மைசூர்ப் படையை எதிர்த்துப் போரிட திறமையான தளபதிகள் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த அவர், தன் மனைவியை விட்டு ராமநாதபுரம் சேதுபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். தன்னுடையை நிலையை விளக்கி, மதுரையை நோக்கி வரும் மைசூரின் படையை அழிக்க சேதுபதி உதவவேண்டும் என்ற கோரிக்கையை அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ரகுநாத சேதுபதி தாமே 25000 வீரர்களைத் திரட்டிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார். அவரிடம் தன்னுடைய 35000 படை வீரர்களைக் கொடுத்த திருமலை நாயக்கர், விரைந்து சென்று மைசூர்ப் படையைத் தடுத்து நிறுத்துமாறு சேதுபதியிடம் கூறினார்.

அப்போது மைசூர்ப் படை திண்டுக்கல் வரை வந்திருந்தது. அதை நோக்கி ரகுநாத சேதுபதியின் தலைமையில் மதுரைப் படை கிளம்பியது. அதன் வலிமையை அறிந்திருந்த மைசூர்ப் படையின் தலைவன், தனக்கு உதவிப் படை வேண்டும் என்று கந்திருவ ராஜாவிடம் கோரிக்கை விடுத்தான். அதை ஏற்ற கந்திருவ அரசர் 20000 வீரர்கள் கொண்ட துணைப்படையை திண்டுக்கல்லுக்கு அனுப்பினார். அவர்கள் வந்து சேர்ந்தவுடன், மைசூர்ப் படையினர் மிகுந்த ஊக்கத்துடன் மதுரைப் படையினரைத் தாக்கினார்கள். ஆனால் ரகுநாத சேதுபதியின் பெருவீரத்தின் முன்னால், மைசூரின் படைவீரர்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இரு தரப்பிலும் சுமார் 12000 வீரர்கள் மடிந்த போதிலும், மதுரைப் படையினர் மைசூர் வீரர்களை முறியடித்துத் துரத்தினர். ஆகவே மீண்டும் ஒருமுறை மைசூர்ப் படையினர், புறமுதுகிட்டு ஓட வேண்டியதாயிற்று.

“தி ஹிஸ்டரி ஆஃப் கர்நாடகா கவர்னர்ஸ்” என்ற நூல், மதுரைப் படைகளுக்குக் கிடைத்த இந்த வெற்றிக்கான காரணம் ரகுநாத சேதுபதியே என்று புகழ்கிறது. வெற்றிச் செய்தியைக் கொண்டுவந்த ரகுநாத சேதுபதியைத் திருமலை நாயக்கர் கௌரவித்தார். அவருக்கு ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டத்தை அளித்து பல பரிசுகளைக் கொடுத்தார். தன்னுடைய ராணியின் சொல்லைக் கேட்டு சேதுபதி செய்த இந்த உதவியின் நினைவாக ‘ராணி சொல் காத்தார்’ என்ற இன்னொரு பட்டத்தை அளித்தார்.

மதுரை அரசைச் சேர்ந்த திருப்புவனம், திருச்சுழி, பள்ளிமடம் போன்ற ஊர்களை ராமநாதபுரம் அரசுக்கு அளித்தார் திருமலை நாயக்கர். இவற்றையெல்லாம் தவிர, சித்திரைத் திருவிழாவின் போது மதுரைக்கு வரும் அழகர் திரும்பிச் செல்லும்போது புஷ்பப் பல்லக்கில் அவரைத் திருப்பி அனுப்பும் மண்டகப்படியை நடத்திக்கொள்ளவும் சேதுபதிக்கு அவர் உரிமை அளித்தார். இன்று வரை ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்திலிருந்து தான் அழகர் புஷ்பப் பல்லக்கில் மலைக்குத் திரும்பிச் செல்கிறார்.

மதுரைப் படைகளின் தாக்குதல்

தகுந்த மரியாதைகளோடு சேதுபதியை திரும்ப அனுப்பியபிறகும் திருமலை நாயக்கரின் மனது அமைதி கொள்ளவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த எந்தவிதத் தவறும் செய்யாத ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் மூக்கறுபட்டுத் துடித்ததை அவரால் மறக்க இயலவில்லை. அந்தக் கொடுமைகளுக்கு தகுந்த முறையில் பழிவாங்க முடிவுசெய்த திருமலை நாயக்கர் தனது தம்பியான குமாரமுத்து நாயக்கரை அழைத்தார். தன்னுடைய படைகளை அவரிடம் கொடுத்து நடந்த நிகழ்வுகளுக்குத் தகுந்த முறையில் மைசூர் அரசுக்குப் பாடம் கற்பிக்குமாறு சொல்லி அனுப்பினார். படைகளோடு திண்டுக்கல் வந்த குமாரமுத்து, அங்கே அரங்கண்ண நாயக்கரையும் அக்கம் பக்கத்தில் உள்ள பாளையக்காரர்களையும் அழைத்து படைகளைத் திரட்டுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அரங்கண்ண நாயக்கரும் பதினெட்டு பாளையக்காரர்களும் குமாரமுத்துவோடு இணைந்து மைசூரை நோக்கிச் சென்றனர். தமிழகத்தைக் கடந்து நஞ்சன்கூடு வழியாகச் சென்ற அவர்களது படை வழியிலுள்ள பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டது. மைசூர்ப் படை வீரர்கள் செய்தது போலவே வழியில் உள்ளவர்களை எல்லாம் பிடித்து அவர்களின் மூக்குகளை அறுத்துக்கொண்டே மைசூர் வரைக்கும் அவர்கள் சென்றனர். மைசூர்ப் படைவீரர்களைச் சிறைப் பிடித்து அவர்கள் பலரின் மூக்குகளையும் அவர்கள் அறுத்தனர். மைசூரைக் கைப்பற்றி கந்திருவ ராஜாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியபிறகு, அவர்கள் நாடு திரும்பினர்.

வரலாற்றுச் சான்றுகள்

தமிழக வரலாற்றில் பல போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் மிகக் கொடூரமாக நடந்த போராக இந்த மூக்கறு போரைச் சொல்லலாம். இரு தரப்பிலும் சாதாரண மக்களில் பெரும்பாலானோர் துன்பத்திற்கு உள்ளாகி பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தது இந்தப் போரில்தான். இது மைசூர்ப் போர்வீரர்களின் தனி முறை என்று ஜெ.ஹெச். க்ரோஸ் என்பவர் தனது ‘கிழக்கிந்தியத் தீவுகளின் பயணம்’ என்ற நூல்களில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து மைசூர் வீரர்கள் இதை அக்காலத்தில் ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர் என்பது தெரிகிறது. ‘மூக்கறுப்பதில் மைசூர் வீரர்களுக்குத் தனித்திறமை உள்ளதாக’ அவர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மைசூர் கெஸட்டர் என்ற ஏட்டில் ‘மன்னர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களின் மூக்கறுப்பது பண்டைய வழக்கம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இதை ஏன் அவர்கள் சாதாரணர்களுக்குச் செய்தனர் என்பது விளங்கவில்லை. பிரையர் என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர், கர்நாடக நாட்டில் தாம் பிரயாணம் செய்தபோது ‘கந்திருவ ராஜாவைப் பற்றிச் சொல்லவேண்டும். அவரது போர் முறை மற்றவர்களின் போர் முறையிலிருந்து மாறுபட்டிருந்தது. எதிரிகளின் மூக்குகளை ஒருவகைக் கருவியால் எளிதாகவும் திறமையாகவும் அறுப்பதற்கு கந்திருவ ராஜா தமது வீரர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறார். அறுத்த மூக்குகள் மன்னரின் காலை உணவு வேளையின் போது அவர் காண்பதற்கு அனுப்பப் படும். பிறரைக் கொல்லவும் கூடாது அதே சமயம் தன்னோடு போர் செய்ய வராவண்ணம் அவர்களுக்குத் தகுந்த பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறையை அவர் பயன்படுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள குறிப்புகளின் படி அங்கே நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் இந்த மூக்கறுப்பு முறை இடம்பெற்றுள்ளது. “மைசூர் வீரர்கள் எதிரிகளைக் கொல்லாமல், அவர்களது மூக்குகளை மேல் உதட்டுடன் வைத்து அறுக்கும் ஒரு வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதற்காக ஒரு தனிப்பட்ட கருவியை அவர்கள் எடுத்துச் செல்கின்றனர். அதைக் கொண்டு அவர்கள் மிகத் திறமையாக மூக்கையும் மேலுதட்டையும் அறுத்து விடுகிறார்கள். எத்தனை மூக்குகளை வீரர்கள் கொண்டுவருகிறார்களோ, அதற்குத் தகுந்த படி மைசூர் அரசர் அவர்களுக்குப் பரிசளிக்கிறார். அதிலும் உதட்டிற்கும் மூக்குக்கும் இடையில் மீசையிருந்தால் பரிசின் அளவு கூடுகிறது. இப்படி மூக்கறுபட்டவர்கள், மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி நாளடைவில் இறந்து போகின்றனர். இந்தக் கொடூரமான போர்முறையினால் மைசூர் அரசோடு போர் செய்ய மற்றவர்கள் தயங்குகின்றனர்.” என்று அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது.

இவை ஒருபுறமிருக்க, மெக்கின்ஸி ஓலைச்சுவடிகள், மதுரைப் படைகளின் எதிர்த்தாக்குதலைக் குறித்த விவரங்களைப் பதிவு செய்திருக்கின்றன. குமாரமுத்து மதுரைப் படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற செய்தி அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மிக மோசமான போர் முறையைத் திருமலை நாயக்கருக்கு எதிராக மைசூர் அரசர் கையாண்டிருந்தாலும், முடிவில் அது அவரது நாட்டு மக்களுக்கு எதிராகவே திரும்பியது என்பது வரலாறு அளிக்கும் செய்தி.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *