தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்களில் அதிகபட்ச சர்ச்சைக்கு உள்ளானவராக திருமலை நாயக்கரைச் சொல்லலாம். நாயக்கர் வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான ரங்காச்சாரியார், திருமலை நாயக்கர் ‘ஆட்சித்திறன் அற்றவர்’ என்றும் ‘அரசியல் அறியாதவர்’ என்றும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் சுயநலக்காரர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் திருமலை மன்னரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது இந்தக் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை என்பது தெரியும். அந்தக் கால அரசியல் நிலையையும் மதுரை அரசின் அண்டை நாடுகள் எடுத்த முடிவுகளையும் சீர்தூக்கிப் பார்த்தே திருமலை நாயக்கர் தனது அரசியல் முடிவுகளை எடுத்திருக்கிறார் என்பது தெளிவு. அவற்றில் சில தவறாகப் போயிருக்கலாம், சில சந்தர்ப்பவாதம் போலத் தோன்றலாம். ஆனால் அவற்றையெல்லாம் திருமலை நாயக்கர் உள்நோக்கம் ஏதுமில்லாமல் அந்தந்த காலகட்டங்களைப் பொருத்தே எடுத்த முடிவுகள் என்பது தெளிவு.
உதாரணமாக ரங்காச்சாரியார் குறிப்பிடும் விஜயநகர மன்னர் ஶ்ரீரங்கனின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஶ்ரீரங்கனை திருமலை நாயக்கர் கைவிட்டுவிட்டதாக ரங்காச்சாரி குற்றம் சாட்டுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. ஶ்ரீரங்கனின் ஆட்சிக்காலத்தில், அவர் வேங்கடராயருக்குச் செய்த துரோகத்தையும் பெரிதாகக் கருதாமல் அவருக்குக் கப்பம் கட்டி வந்தவர் திருமலை நாயக்கர் என்பதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் பீஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களுக்கு இடையில் சண்டை மூட்டிவிட்டு அதற்குத் தேவையான பணத்தை நாயக்கர்களிடையே இருந்து வசூலித்ததே பிரச்சனையின் தொடக்கப்புள்ளி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
திருமலை நாயக்கர் தாமே முன்னின்று போர்களை நடத்தவில்லை என்றும் தனது தளவாயான ராமப்பையரைக் கொண்டோ அல்லது தன் தம்பி குமாரமுத்துவைக் கொண்டோதான் படையெடுப்புகளை நிகழ்த்தினார் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இதுவும் உண்மையல்ல, தான் பதவியேற்பதற்கு முன்னால் தனது அண்ணனான முத்துவீரப்ப நாயக்கர் நடத்திய போர்களில் திருமலை நாயக்கர் பங்கு கொண்டிருந்திருக்கிறார். போலவே திருவாங்கூர் அரசின் மீது நடந்த படையெடுப்பு, ராமப்பையர் மறைந்தவுடன் பீஜப்பூர் சுல்தான்களை எதிர்த்து நடத்திய போர் என்று பல போர்களில் திருமலை நாயக்கர் நேரடியாகப் பங்களித்திருக்கிறார். மூன்றாம் ஶ்ரீரங்கனோடு நடந்த போர்களையும் நேரடியாக நடத்தியது திருமலை நாயக்கர்தான்.
அக்காலத்தில் அரசர்கள் நேரடியாகப் பங்கேற்காமல் தளபதிகள் நடத்திய போர்கள் பல உண்டு. சோழர்கள், பாண்டியர்கள் காலத்திலும் அவர்களின் தளபதிகளான அரையன் ராஜராஜன், கிருஷ்ணன் ராமன் போன்றோர் நிகழ்த்திய போர்களை நாம் காண்கிறோம். அதனால் ராஜராஜனோ, ராஜேந்திரனோ போர்த்திறமை அற்றவர்கள் என்று கூறிவிடலாமா என்ன. ஆகவே திருமலை நாயக்கரும் சிறந்த வீரராக இருந்தார் என்பது தெளிவு. அவர் தனது தம்பி, ராமநாதபுரம் சேதுபதி ஆகியோரின் உதவியைக் கோரியது திருமலை நாயக்கர் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்ட பிறகுதான் என்பதையும் நாம் நினைவுகொள்ளவேண்டும். இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது வீரராகவும் திறமையற்றவர்களாகவும் உள்ள அரசர்கள் நீண்ட நாட்கள் அரசாள்வதில்லை. நீண்டதொரு ஆட்சியைத் திருமலை நாயக்கர் தந்ததே அவரது பெருவீரத்திற்கும் அரசியல் திறனுக்கும் அத்தாட்சியாக இருக்கிறது.
ஆனால், திருமலை நாயக்கர் குறையே இல்லாத மனிதர் என்றும் கூறிவிட முடியாது. ராமநாதபுரம் சேதுபதிகளின் மீதான போரில் போர்ச்சுக்கீசியர்களுடன் சேர்ந்தது, விஜயநகர அரசை அழிக்கும் முயற்சியில் தக்காண சுல்தான்களுடன் கூட்டணி வைத்தது, மதமாற்றங்களை ஒடுக்காதது என்று பல குறைகள் அவரிடமும் இருந்தன. ஆயினும் இவற்றை வைத்து மட்டுமே அவர் ஒரு சிறந்த அரசர் அல்ல என்று சொல்லிவிட முடியாது. மதுரை அரசை சிறந்த முறையில் ஆட்சி செய்தது, பொருளாதாரத்தை உயர்த்தியது, பல சீர்திருத்தங்களைச் செய்தது, பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தது என்று பல சிறப்பு அம்சங்கள் அவரிடம் இருந்தன. தான் தவறு இழைத்துவிட்டோம் என்று தெரிந்தால் அதைத் திருத்திக் கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது என்பதை முதல் மைசூர்ப் போருக்குப் பிறகு ராமப்பையரை அவர் நடத்திய முறை, தளவாய் சேதுபதியை விடுதலை செய்தது, நீலகண்ட தீட்சதரிடம் மன்னிப்புக் கோரியது போன்ற பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தனக்கு உதவி செய்தவர்களுடன் அவர் தொடர்ந்து நன்றி பாராட்டினார் என்பதை ராமநாதபுரம் ரகுநாத சேதுபதியைக் கௌரவித்தது, ரங்கண்ண நாயக்கரின் பதவியை உயர்த்தியது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
அன்றாட வழக்கங்கள்
திருமலை நாயக்கர் அதிகாலை நேரத்திலேயே எழுந்து சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர். மற்போரில் பெரும் ஆர்வம் உள்ளவர். பல தடவை தாமே மல்லர்களுடன் போர் செய்திருக்கிறார். சில சமயம், விலங்குகளை வீரர்களோடு பொருத விட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமும் அவருக்கு இருந்தது. மாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்றை தாமே ஓட்டிக்கொண்டு நகர்வலம் செய்யும் வழக்கம் அவருக்கு இருந்தது. அப்படிச் செல்லும்போது ஒருநாள் ஐந்தே வயதான சிறுவன் ஒருவன் வண்டியின் குறுக்கே ஓடிவந்துவிட்டான். நல்லவேளையாக திருமலை நாயக்கர் வண்டியை நிறுத்திவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளோர்கள் அவன் கோவில் பட்டர் ஒருவரின் மகன் என்ற தகவலைத் தெரிவிக்கவே ‘ஏலனிவாரு’ என்று சொல்லி, அந்தச் சிறுவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று தந்தையிடம் ஒப்படைத்தாராம் திருமலை நாயக்கர். அந்தச் சிறுவன் மேல் பெரும் அன்பு கொண்ட நாயக்கர், அவனுக்குப் பட்டன் புத்தூர் என்ற கிராமத்தைத் தானமாக அளித்தார். அந்தப் பையனுக்கு திருமலை ராஜேந்திர பட்டர் என்ற பெயரும் வைக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தந்த சத்தியநாத ஐயர், பட்டரின் பரம்பரையின் அந்தக் கிராமத்தை அனுபவித்துக் கொண்டுவருகின்றனர் என்று 1922ம் ஆண்டு குறிப்பிட்டிருக்கிறார்.
சிறந்த உடல் வலிமை கொண்டவராக இருந்த திருமலை நாயக்கர், பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்தார். பண்டிதர்கள் பலரை தம்முடைய அரண்மனைக்கு அழைத்து தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடத்துவது அவர் வழக்கம். நொபிலி பாதிரியார் “என்னைத் தமிழிலும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பேசக் கேட்டு மகிழக் கூடியவர் திருமலை நாயக்கர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமலை நாயக்கர் மகாலில் உள்ள நாட்டிய மண்டபத்தில் நாட்டியக் காரர்கள், பாடகர்கள் போன்றோரை வைத்து நிகழ்ச்சிகள் செய்வதோடு மட்டும் நிற்காமல் ஜாலவித்தை செய்பவர்கள், பாம்பாட்டிகள் ஆகியோரையும் அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தச் சொல்லி அதைத் தன் அரசிகளோடு கண்டுகளிப்பாராம் அவர். மாலையில் மகாலில் தீப்பந்த வணக்கம் என்ற நிகழ்வு நடப்பதுண்டு. காவலர்கள் தரும் தீப்பந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தீப்பந்த விளையாட்டுகளை நடத்தச் சொல்வதும் திருமலை மன்னரின் வழக்கமாக இருந்தது.
எது எப்படி நடந்தாலும் இரவில் கோவிலுக்குச் சென்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்காமல் படுக்கையறைக்குச் செல்வதில்லை என்ற வழக்கத்தையும் திருமலை நாயக்கர் கொண்டிருந்தார். அதற்காக அவர் சுரங்கம் ஒன்றை அமைத்ததைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு 200க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக பலர் கூறுவதுண்டு. ஆனால் இது அதீதமாகவே தோன்றுகிறது. அவருடைய சிற்பங்கள் இரு மனைவியரோடே எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அவர்களைத் தவிர அக்கால வழக்கப்படி மேலும் பல மனைவிகள் அவருக்கு இருந்திருக்கக் கூடும். ஆனால் 200 மனைவிகள் என்பது உயர்வு நவிற்சியாகவே கூறப்பட்டிருக்கவேண்டும்.
மறைவு
இப்படிப் பெருவாழ்வு வாழ்ந்து சிறப்பான ஆட்சியைத் தந்த திருமலை நாயக்கர் தமது 75ம் வயதில் பொயு 1659ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விளம்பி வருடம் மாசி 4ம் தேதி இந்த உலகை விட்டுச் சென்றார். ஆனால் அவர் வாழும்போது தொடர்ந்த சர்ச்சைகள் அவரின் மறைவிலும் தொடர்ந்தன. அவரது இறப்பைப் பற்றி பல கட்டுக்கதைகள் இன்று வரை தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்று கோவில் பட்டர் மனைவியுடன் திருமலை நாயக்கர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவளைப் பார்க்க ஒரு நாள் இரவு சென்றபோது வழியில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார் என்றும் கூறப்படும் கதை. ஒருபுறம் 200 மனைவிகளை மணம் புரிந்திருந்தாரா என்று சொல்லிவிட்டு மறுபுறம் பட்டர் மனைவியோடு தொடர்பு கொண்டிருந்தார் என்று கூறுவது அபத்தமான ஒன்று. அதிலும் 75 வயதில் அவளைப் பார்க்கச் சென்றதாகச் சொல்வது கொஞ்சம் கூடப் பொருந்தாத செய்தி. சர்வ அதிகாரங்களும் படைத்திருந்த திருமலை நாயக்கர் யாருக்கு அஞ்சி அப்படி இரவில் ஒருவரைச் சென்று பார்க்கவேண்டும். ஆகவே திருமலை நாயக்கரின் மேல் பொறாமை கொண்டவர்கள் கட்டிவிட்ட கதை இது என்பதில் சந்தேகமேயில்லை.
இன்னொரு நகைப்புக்குரிய கதை, மதுரைக் கோவிலில் ஒரு புதையல் இருந்ததாகவும் அது இருந்த இடம் திருமலை நாயக்கருக்குத் தெரியும் என்பதால் அவரைக் கோவிலின் நிலவறைக்கு அழைத்துச் சென்று அந்தப் புதையலை எடுத்துக்கொண்டு திருமலை நாயக்கரை ஒரு கல்லை வைத்து அங்கேயே புதைத்துவிட்டனராம் கோவில் பட்டர்கள் சிலர். அதன்பின், திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மனின் பாதங்களை அடைந்துவிட்டார் என்று எல்லாரிடமும் சொல்லிவிட்டனராம் அவர்கள். நாட்டின் மன்னராக இருந்த ஒருவரை அவ்வளவு எளிதாக மெய்க்காவலர்கள் இன்றி ஒரு நிலவறைக்குள் கொண்டு சென்றுவிடமுடியுமா? அப்படி அவரை கொன்றுவிட்டால், தளவாய் பிரதானிகள் சும்மா இருப்பார்களா? அரசர் உள்ளே சென்ற செய்தி யாருக்கும் தெரியாதா என்ன? நம்ப முடியாத இந்தக் கதையையும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
மற்றொரு செய்தி திருமலை நாயக்கர் கிறித்துவ சமயத்தைத் தழுவியதால் பட்டர்கள் அவரைக் கொன்று விட்டார்கள் என்று சொல்வது. இந்தக் கதைகள் எல்லாம் பட்டர்களைச் சுற்றி வருவதிலேயே ஒரு செய்தி இருக்கிறது என்று கருதுகிறேன். முதலில் திருமலை நாயக்கர் கிறித்துவ சமயத்திற்கு மாறிவிட்டார் என்பதே ஒரு முழுப் பொய். கடைசி வரை அவர் மீனாட்சி அம்மனின் பக்தராகவே வாழ்ந்து மறைந்தவர். இதில் நகைச்சுவை திருமலை நாயக்கரின் பெயரில் வரும் சவுரி என்பது கிறித்துவப் பெயர் என்று இந்தக் கதை கட்டிவிட்டவர்கள் கருதியதுதான். திருமலை சவுரி அய்யநாயனுகாரு என்ற பெயரில் வரும் சவுரி, சௌரிராஜப் பெருமாளுக்கு வழங்கும் வைணவப் பெயராகும். அதை தவறாகப் பரப்பி அதிலிருந்து மேலும் ஒரு கதையைக் கட்டிவிட்டனர் இதுபோன்று அவதூறு செய்யும் கூட்டத்தினர்.
உண்மையில் சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டே திருமலை நாயக்கர் இறந்தார் என்பதே வரலாறு நமக்குக் கூறும் செய்தி. மைசூர் அரசர்கள் நடத்திய மூக்கறு போரின் போது தாம் உடல்நலம் இன்றி இருந்ததினால்தான் அவர் ரகுநாத சேதுபதியை உதவிக்கு அழைத்தார். அந்தப் போர் ஒருவாறு முடிந்த பிறகு பதிலடி கொடுக்க அவர் தனது தம்பியான குமாரமுத்துவை அனுப்பி வைத்தார். “நான் நோயால் அவதிப்படுகிறேன் என்பதை மைசூர் அரசர் தெரிந்துகொண்டு நம் நாட்டின் மீது அவர்கள் படையெடுத்தனர். ஆகவே நீ உடனே வீரர்களைத் திரட்டி அவர்களைத் துரத்தி அவர்களின் சீமையைப் பிடித்து வரவேண்டியது” என்று கடிதம் ஒன்றைத் திருமலை நாயக்கர் அனுப்பி வைத்ததாக மெக்கின்ஸி ஓலைச்சுவடி குறிப்பிடுகிறது.
தவிர புரோயன்ஸி பாதிரியார் திருச்சியிலிருந்து 1659ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் “திருமலை நாயக்கர் (அவரது தம்பி கொண்டுவந்த) வெற்றிச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடையக் கொடுத்து வைக்கவில்லை. இந்தப் பூவுலகில் அவர் செய்த செயல்களைச் சொல்லுமாறு கடவுள் அவரை மேலுலகிற்கு அழைத்துவிட்டார். முப்பதாண்டு ஆட்சி செய்து அவர் தமது எழுபத்தைந்தாவது வயதில் இறந்தார். உயர்ந்த குணங்கள் பலவற்றை அவர் கொண்டிருந்தாலும் அவர் செய்த சில தவறுகள் அவருடைய புகழுக்கு சிறிது களங்கம் கற்பித்துவிட்டன. மிக அழகான கட்டடங்களையும் புகழ் வாய்ந்த மதுரைக் கோவிலையும் தீப்ஸ் நாட்டிலுள்ள உயர்ந்த கட்டடங்களைப் போன்ற பெரும் அரண்மனையையும் அவர் கட்டினார். கிறித்துவ சமயத்தின் மீது அன்பு கொண்டிருந்தாலும் அந்த சமயத்தை அவர் தழுவவில்லை. அதற்குக் காரணம் அவரது 200 மனைவியரே” என்று எழுதியிருக்கிறார்.
திருமலை மன்னரின் ஆட்சியாண்டுகளைத் தவறாகக் குறிப்பிட்டிருந்தாலும் மன்னரைப் பற்றிய அவரது மதிப்பீடு மிகச் சரியானது என்பது திருமலை நாயக்கரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது உறுதியாகிறது. அவருக்கு இதைவிடச் சரியான மதிப்பீட்டை அக்காலத்தில் யாரும் அளித்திருக்க முடியாது. திருமலை நாயக்கர் நோய்வாய்ப்பட்டு வயது முதிர்ந்த நிலையில் இறந்துபட்டார் என்பதுவும் அவரது மறைவைப் பற்றி உலவும் கட்டுக்கதைகள் பொய்யானவை என்பதையும் இக்கடிதம் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
வானளாவிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் அதன் மண்டபங்களும் திருப்பரங்குன்றம், அழகர் கோவில் ஆகிய திருத்தலங்களில் அவர் செய்த திருப்பணிகளும் சித்திரைத் திருவிழா போன்ற பல திருவிழாக்களும் புதுமண்டபம், திருமலை நாயக்கர் மகால் போன்ற அழகு வாய்ந்த பல கட்டடங்களும் வண்டியூர்த் தெப்பக்குளம் போன்ற நீர் நிலைகளும் உலகம் உள்ளவரை திருமலை நாயக்கரின் புகழைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
(தொடரும்)