மைசூருக்குப் போர் செய்யச் சென்ற நாயக்கரின் படைகள் வெற்றிச் செய்தியைக் கொண்டுவருவதற்கு முன்னால் திருமலை நாயக்கர் மறைந்துவிட்டார் அல்லவா. அதன் காரணமாக அவருடைய மகனான முத்து வீரப்ப நாயக்கருக்கு அரண்மனைப் பிரமுகர்கள் முடிசூட்டினர். விளம்பி வருடம் (1659) மாசி மாதம் 5ம் தேதி அவர் முடிசூடியதாக மிருத்யுஞ்சய ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன. முத்துவீரப்பர் திருமலை நாயக்கரின் ஆசை நாயகி ஒருவரின் மகன் என்று நெல்சன் குறிப்பிட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மற்ற ஆவணங்கள் எல்லாம் அவரை திருமலை மன்னரின் பட்டமகிஷியின் மகனாகவே கருதுகின்றன.
ஆனால் போரிலிருந்து திரும்பி வந்த திருமலை நாயக்கரின் சகோதரரான குமாரமுத்து, தான் இல்லாத போது முத்துவீரப்பர் முடிசூடியதை ஏற்கவில்லை. அரியணைக்கு உரியவர் தாமே என்று அவர் கலகம் செய்தார். மைசூரிலிருந்து அவருடன் வந்த படையோடு அவர் மதுரை அருகே தங்கியிருந்தார். பிரச்சனை முற்றி உள்நாட்டுப் போர் தோன்றும் சூழ்நிலை உருவாவதை உணர்ந்த அமைச்சர்களும், ரங்கண்ண நாயக்கரும் அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில், குமாரமுத்துவுக்கு சிவகாசியின் ஆட்சியுரிமையும் திருநெல்வேலியைச் சேர்ந்த சில இடங்களும் வழங்கப்பட்டன. அதனால் சமாதானமடைந்த குமாரமுத்து படையை முத்துவீரப்பரிடம் ஒப்படைத்து விட்டு, தாம் சிவகாசிக்குச் சென்றுவிட்டார். இதனால் நாயக்கர் ஆட்சிக்கு நேரவிருந்த பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
நீண்ட காலம் ஆட்சி செய்த அரசர் ஒருவருக்குப் பின் பொறுப்பேற்கும் மகனின் பிரச்சனைகளை முத்துவீரப்பரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் அப்போது வயதாகியிருந்தது என்பது ஒருபுறம், அவருடைய பழக்க வழக்கங்களால் அவர் அடைந்த நோய்கள் மற்றொரு புறம் என்று பல சிக்கல்கள் அவருக்கு இருந்தன. ஆனாலும் திருமலை நாயக்கர் போன்ற வலுவான அரசர் விட்டுச்சென்ற நாட்டைக் காக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். வடக்கே மைசூரிலிருந்தும், வேலூர்-செஞ்சிப் பகுதியிலிருந்தும் எதிரிகளின் தொல்லைகள் வரக்கூடும் என்று கணித்த அவர், திருச்சி மலைக்கோட்டையை பலப்படுத்தும் பணியில் இறங்கினார்.கோட்டைச் சுவர்களைப் பலப்படுத்திக் கட்டினார். அங்குள்ள ஆயுதங்களை செப்பனிட்டுத் தயார் நிலையில் வைத்தார். திறமையான வீரர்களை அங்கு பணியில் அமர்த்தி அவர்களுக்குத் தளபதியாக லிங்கம நாயக்கர் என்பவரையும் நியமித்தார்.
தஞ்சாவூரை ஆட்சிசெய்துகொண்டிருந்த விஜயராகவ நாயக்கர், முத்து வீரப்ப நாயக்கர் செய்த இந்த முஸ்தீபுகளைக் கண்டதும் அச்சம் கொண்டார். எங்கே தஞ்சையைத் தாக்கத்தான் மதுரை நாயக்கர் திட்டமிடுகிறாரோ என்ற தேவையில்லாத பயத்தினால், திருமலை நாயக்கர் செய்த அதே தவறை விஜயராகவ நாயக்கரும் செய்தார். பீஜப்பூர் சுல்தானுக்கு செய்தியும் பணமும் அனுப்பி மதுரையைத் தாக்கத் தூண்டினார். தானாக வந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா, தனது படைத்தலைவர்களான சகோசியையும் முல்லாவையும் அழைத்து ஒரு படையுடன் மதுரை நாயக்கர்களைத் தாக்க தெற்கு நோக்கி அனுப்பிவைத்தான்.
முதலில் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்ட சுல்தானின் படை, அந்த வலுவான கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் திணறியது. கோட்டைக்குள்ளே இருந்து தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்த நாயக்கர் படையினால் சுல்தானிய வீரர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். லிங்கம நாயக்கர் பெரு வீரத்தோடு போர் செய்து சுல்தானியப் படைகளைத் திணறடித்தார். பொதுவாக முற்றுகையிடப்பட்டவர்கள் அதை நீண்ட நாள் சமாளிக்க முடியாமல் இருக்கும் நிலை இங்கே தலைகீழாக மாறியிருந்தது. அதாவது முற்றுகை இட்டவர்கள் அதை நீண்ட நாள் நடத்த முடியாமல் திண்டாடிய நிலையில் இருந்தார்கள். ஆத்திரமடைந்த சுல்தானிய வீரர்கள், தங்களை இந்தப் பிரச்சனையில் இழுத்துவிட்ட தஞ்சை நாயக்கரை ஒரு கை பார்ப்பது என்ற எண்ணத்தோடு தஞ்சாவூரை நோக்கிச் சென்று அங்கே உள்ள கோட்டையை முற்றுகையிட்டனர். தஞ்சைக் கோட்டையிலும் வெடி மருந்துகளுக்கும் வீரர்களுக்கும் குறைவில்லை. ஆனால் விஜயராகவ நாயக்கர் வீரத்தோடு போர் செய்யத் துணியவில்லை. அதனால் தஞ்சைக் கோட்டை எளிதில் கைப்பற்றப் பட்டு விஜயராகவ நாயக்கர் தோற்கடிக்கப்பட்டார். அதன்பின் தஞ்சை நாயக்கருக்கு உட்பட்ட மன்னார்கோவில், வல்லம் ஆகிய இடங்களும் பீஜப்பூர் படைகளால் கைப்பற்றப்பட்டன.
தாங்கள் பிடித்த இடங்களை எல்லாம் சுல்தானிய வீரர்கள் சூறையாடினர். அங்குள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் அந்தப் பொருட்களின் அளவு அவர்களுக்கு மன நிறைவைத் தரவில்லை. இதற்கிடையில் அங்கே வாழ்ந்துவந்த கள்ளர்கள், திருடர்களிடமே திருடும் முயற்சியாக, சுல்தானியப் படைவீடுகளில் புகுந்து அவர்கள் கொள்ளையடித்த பொருட்களையே திருடிச் சென்று விட்டனர். இதன் காரணமாக கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலை பீஜப்பூர் படைகளுக்கு ஏற்பட்டது.
நாடு முழுவதும் இப்படி நடந்த கொள்ளைகளினால், பெரும் பஞ்சம் மதுரையிலும் தஞ்சையிலும் ஏற்பட்டது. முத்து வீரப்ப நாயக்கர் இந்தப் பஞ்சத்தை திறமையுடன் சமாளித்தார். ஆனால் தஞ்சை நாயக்கரால் அவ்விதம் செய்ய முடியவில்லை. அங்கே முகாமிட்டிருந்த பீஜப்பூர் வீரர்களும் பஞ்சம் தாக்கியது. உணவில்லாமல் பல வீரர்கள் இறந்தனர். அவர்களைத் தகுந்த முறையில் அடக்கம் செய்யாததால், அந்தப் பகுதிகளில் கொள்ளை நோய் பரவ ஆரம்பித்தது. இதனால் பலர் மடிந்தனர். அதில் சுல்தானிய வீரர்களும் அடக்கம். அதையடுத்து பீஜப்பூர் வீரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் எழுந்தன. படையெடுப்பைச் சரியாக நடத்தவில்லை என்று படைத்தலைவனான முல்லாவை எதிர்த்து பலர் போர்க்கொடி தூக்கினர். நெருக்கடியில் சிக்கிய முல்லா, வேறு வழியில்லாமல் மதுரை,தஞ்சை நாயக்கர்களிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினான். அவர்கள் ‘ஏதாவது’ கொடுத்தால், அதை வாங்கிக்கொண்டு கௌரவமாக நாடு திரும்பிவிடலாம் என்று அவன் திட்டமிட்டான்.
ஆனால் வலுவான நிலையில் இருந்த முத்துவீரப்ப நாயக்கரும், எல்லாவற்றையும் இழந்துவிட்ட விஜயராகவ நாயக்கரும் அவனுடைய பேச்சுவார்த்தைக்கு மசியவில்லை. தங்களால் எதையும் தரமுடியாது என்று கைவிரித்துவிட்டனர் அவர்கள் இருவரும். இதனால் வெகுண்ட முல்லா, மீண்டும் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டான். மதுரை நாயக்க வீரர்கள் அஞ்சாது மீண்டும் சுல்தானிய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அது போதாதென்று, கள்ளர்கள் வேறு மீண்டும் பீஜப்பூர் பாசறைகளில் புகுந்து கொள்ளையடித்தனர். ஏசுசபைக் கடிதம் ஒன்றின் படி “சுல்தானிய வீரர்கள், நாயக்கரின் படைகளைக் காட்டிலும் இந்தக் கள்ளர்களிடம் பயந்து நடுங்கினர். தங்கள் பணம் அனைத்தையும் இழந்து வெறும் கையோடு திரும்ப நேரிடும் என்று பெரும் அச்சம் கொண்டனர்”. இப்படி எல்லாப் பக்கத்திலிருந்தும் நெருக்கப்பட்ட முல்லா, மீண்டும் முத்து வீரப்ப நாயக்கரிடம், கொஞ்சமாவது பணம் கொடுக்கும்படி இறைஞ்சினான். அதை ஏற்ற முத்து வீரப்பர், சிறிதளவு பணத்தைக் கொடுத்து பீஜப்பூர் படைகளை அனுப்பி வைத்தார். தலை தப்பியது புண்ணியம் என்ற நினைப்பில் கிடைத்ததை வாங்கிக்கொண்டு சுல்தானியப் படைகள் பின்வாங்கின.
மிகத் திறமையுடன் தன் மீது திணிக்கப்பட்ட பீஜப்பூர் படையெடுப்பையும் அதன் விளைவாக நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தையும் சமாளித்த முத்து வீரப்ப நாயக்கர் அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. ஆட்சிக்கு வந்த நாலே மாதங்களில், விகாரி வருடம் வைகாசி மாதம் (ஜூன் 1659) அவர் இந்த உலகை விட்டு மறைந்தார். அதற்கு அவருடைய சிற்றின்பப் பழக்க வழக்கங்கள்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் சிற்றப்பனால் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தையும் வெளியிலிருந்து வந்த பீஜப்பூர் படையெடுப்பையும் திறம்பட அவர் சமாளித்தார் என்றே கூறவேண்டும்.
சொக்கநாத நாயக்கர்
மிகக் குறைந்த காலத்தில் மதுரையை ஆட்சி செய்த முத்துவீரப்பர் மறைந்தபோது, அவரது மகனான சொக்கநாதன் வயதில் மிகவும் இளையவராக இருந்தார். பதினாறே வயதான சொக்கநாதர், விகாரி வருடம் ஆனி மாதம் (1659) ஆட்சிபீடம் ஏறினார். சில ஆய்வாளர்கள், அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது 1660 என்று கருதுகின்றன. ஆனால் முத்து வீரப்பர் மறைந்த பிறகு அவ்வளவு பெரிய இடைவெளி இருந்ததாகக் கருத ஆதாரம் ஏதுமில்லை.
சொக்கநாத நாயக்கருக்கு முடிசூடிய தளவாய் லிங்கம நாயக்கரும் பிரதானி, ராயசம் போன்ற அதிகாரிகளும் பெயரளவுக்கு அவரை அரியணையில் அமர்த்தி, நாட்டின் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். நாயக்கருக்கு விசுவாசமான அதிகாரிகள் பலரைப் பதவி நீக்கம் செய்தனர், பலரை நாடு கடத்தினர், சிலர் கொல்லப்பட்டனர். இப்படி தங்களுக்கு எதிராகத் திரும்பக் கூடியவர்கள் என்பவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்ட பிறகு, தங்கள் விருப்பப்படி மதுரை ஆட்சியை அவர்கள் நடத்தினர். சொக்கநாத நாயக்கர் இளைஞராக இருந்ததால், அவர்களது சூழ்ச்சியை அவர் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவரை ஒரு அரண்மனையில் வைத்து “சீரும் சிறப்புமாக” அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் பார்த்துக்கொண்டதால் நாட்டு நடப்பை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் மக்கள் விரைவில் விழித்துக்கொள்வார்கள் என்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள், ஒரு போரை வலிந்து உருவாக்கினார்கள். பீஜப்பூர் படையினரால மீண்டும் ஆபத்து வரும் என்றும் அதை வருமுன் காக்கவேண்டும் என்றும் கதை கட்டி, 40000 பேர் கொண்ட படையோடு லிங்கம நாயக்கர் பீஜப்பூரின் கீழ் இருந்த செஞ்சியை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். அவர் ஏற்கனவே பீஜப்பூர் படைகளுக்கு எதிராக முத்து வீரப்ப நாயக்கரின் காலத்தில் வீரச் செயல்கள் செய்திருப்பதால், மக்களும் அதைக் குறித்துப் பெரும் சந்தேகம் ஏதும் கொள்ளவில்லை. செஞ்சிக் கோட்டையை அப்போது பீஜப்பூரின் தளபதியான சகோசி ஆண்டுகொண்டிருந்தார்.
செஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்ட லிங்கம நாயக்கர் அதைத் தாக்காமல் காலம் தாழ்த்தினார். இடையில் சகோசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்து வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டார். பிரதானியும் ராயசமும் இங்கே நாட்டைக் கொள்ளையடித்து பெரும் செல்வத்தைத் திரட்டிக்கொண்டிருந்தனர். இப்படித் தேவையான பணத்தைச் சம்பாதித்த பிறகு லிங்கம நாயக்கர் நாடு திரும்பினார். நீண்ட நாட்கள் சொக்கநாதரைப் பதவியில் விட்டு வைப்பது ஆபத்து என்று உணர்ந்த ஆட்சியாளர்கள், சொக்கநாதரைச் சிறையில் அடைத்துவிட்டு அவருடைய சகோதரர் முறையுள்ள அழகாத்திரி என்பவரை அரியணையில் அமர்த்தத் திட்டம் தீட்டினர். ஆனால் அரண்மனைப் பணிப்பெண் ஒருவர் மூலம் இந்த விஷயம் சொக்கநாதருக்குத் தெரிந்து விட்டது. தனது பாட்டனாரைப் போன்ற திறமையுள்ள அவர், நாடு கடத்தப்பட்ட சில படைத்தலைவர்களோடு தொடர்பு கொண்டார். தனக்கு விசுவாசமானவர்களின் படை ஒன்றை அவர்கள் மூலம் திரட்டச் செய்து விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றினார் சொக்கநாதர்.
சதிச்செயலுக்கு உதவியாக இருந்த ராயசம் கொல்லப்பட்டார். பிரதானியின் கண்கள் பிடுங்கப்பட்டன. வீரரான லிங்கம நாயக்கரை உடனடியாகத் தண்டிக்க சொக்கநாதர் விரும்பவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட லிங்கமர், தப்பிச் சென்றுவிட்டார். அதன்பின், முழு அதிகாரத்தோடு சொக்கநாத நாயக்கர் மதுரை அரியணையில் அமர்ந்தார்.
(தொடரும்)