Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

மதுரை நாயக்கர்கள் #26 – சொக்கநாத நாயக்கர்

மிக இளைய வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சொக்கநாத நாயக்கர் வீரம் மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்க வீரம் மட்டுமே போதாதல்லவா. அவருக்குத் தகுந்த ஆலோசனை சொல்லி வழிகாட்டுவதற்குத் தகுந்த பெரியோர்களும் அங்கே இல்லை. ஆகவே அவர் எடுத்த முடிவுகளில் சில சாதகமாக அமைந்தாலும் சில அவருக்கு எதிராகவே திரும்பின.

பீஜப்பூருடன் போர்கள்

தனக்கு எதிராகச் செயல்பட்ட துரோகிகளை ஒருவாறு ஒழித்துக்கட்டிய பிறகு அரியணையில் ஸ்திரமாக அமர்ந்த சொக்கநாத நாயக்கர், அந்தத் துரோகிகளில் ஒருவனைத் தப்பிக்கவிட்டதன் பலனை உடனே அனுபவிக்க நேரிட்டது. மதுரையிலிருந்து தப்பிச் சென்ற லிங்கம நாயக்கர், ஏற்கனவே தனக்கு உதவிகள் செய்திருந்த பீஜப்பூர் தளபதி சகோசியைச் சென்றடைந்தார். திருச்சிக் கோட்டை தற்போது அதிக பாதுகாப்பில்லாமல் இருக்கிறது என்றும் அதனை உடனே தாக்கினால் எளிதாகப் பிடித்துவிடலாம் என்று சொல்லி அவருக்கு ஆசை மூட்டினார். முன்பு ஒருமுறை திருச்சிக் கோட்டையைப் பிடிக்க முடியாமல் திரும்பிய சகோசி, இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டு 12000 காலாட் படையினரையும் 7000 குதிரைப் படையினரையும் அழைத்துக் கொண்டு லிங்கம நாயக்கரோடு திருச்சி விரைந்தார். தமக்கு உதவுமாறு தஞ்சை நாயக்கருக்கும் தூது அனுப்பினார் சகோசி.

இம்முறையும் நாட்டு நலனைக் கருதாமல் அபத்தமான முடிவு ஒன்றை எடுத்த தஞ்சை விஜயராகவ நாயக்கர், சகோசிக்கு உதவியாக தன்னுடைய படை ஒன்றை அனுப்பி வைத்தார். இப்படி பீஜப்பூர், தஞ்சைப் படைகள் திருச்சியை முற்றுகையிட்டபோது சொக்கநாத நாயக்கர் அசரவில்லை. தன்னுடைய பிரதானியின் தலைமையில் மதுரையில் இருந்து ஒரு படையை அனுப்பிவைத்தார். ஆனால், இந்தப் பிரதானியும் முன்பு இருந்தவரைப் போல துரோகம் செய்து தன்னுடைய படையில் சேதம் அதிகமாக இருக்குமாறு செய்தான். இதனால் மதுரைப் படை தோல்வியைச் சந்தித்தது. படைத்தலைவனின் துரோகத்தைக் கேள்விப்பட்ட சொக்கநாத நாயக்கர், தாமே படைக்குத் தலைமை வகித்து பீஜப்பூர் படைகளோடு மோதினார். இளைஞரான அரசரே படைக்குத் தலைமை வகித்து மும்முரமாகப் போர் செய்வதைக் கண்ட படை வீரர்கள் ஊக்கமுற்று பீஜப்பூர் படைகளைத் தாக்கினார். அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாமல் லிங்கமனும் சகோசியும் பின்வாங்கினர்.

இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பெரும் போர்களால் ஏற்கனவே நாட்டின் நிலவிய பஞ்சம் தீவிரமடைந்தது. விஜயராகவ நாயக்கரின் அறிவற்ற செயல்களால் தஞ்சை மக்கள் பெரும் துன்பமடைந்தனர். பஞ்சத்தின் காரணமாக அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வடக்கு திசை நோக்கியும் மதுரை நோக்கியும் வந்தனர். பஞ்சத்தால் தவித்துக்கொண்டிருந்த மதுரைப் பகுதியில் இப்படி வெளியூரிலிருந்து வந்தவர்களும் சேர்ந்துகொள்ள நிலைமை மேலும் சிக்கலானது. மக்களின் இந்தக் கையறு நிலையை இங்கே வணிகம் செய்ய வந்திருந்த டச்சுக்காரர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களை அடிமைகளாக மேல் நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களில் விற்றனர் டச்சுக்காரர்கள். “உணவைக் காரணம் காட்டி அவர்களை தங்கள் முகாம்களுக்கு அழைத்த டச்சுக்காரர்கள், அவர்கள் உடல்நிலை நன்கு தேறியபிறகு அடிமைகளாக கப்பல்களுக்குக் கொண்டுசென்று விற்றுவிடுவது வெட்ககரமான செயல்” என்று ஏசு சபைக் கடிதம் ஒன்று கூறுகிறது.

ஆனால் நாட்டில் நிலவிய உணவுப் பஞ்சத்தை சொக்கநாத நாயக்கர் திறமையாகச் சமாளித்தார். மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே அடிக்கடி பயணித்த சொக்கநாத நாயக்கர், வெளியூர்க்காரர்களாக இருந்தாலும் சரி உள்ளூர் வாசிகளாக இருந்தாலும் சரி, அவர்களது பசியை ஆற்றி உணவு கொடுக்கும் பணியைச் செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். “அண்டை நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வந்த ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. பரந்து விரிந்த காவிரிக் கரையே உணவகமாயிற்று. ஆற்றங்கரையில் இலைகள் போடப்பட்டு சோறும், குழம்பும் கறிகளும் பரிமாறப்பட்டன. அவர்கள் உண்ணும் போது சொக்கநாத நாயக்கர், குதிரையிலிருந்து வந்து பந்தி விசாரணை செய்வார்” என்று ஏசு சபையினர் எழுதியிருக்கின்றனர்.

ஒரு வழியாகப் பஞ்சத்தை சமாளித்த சொக்கநாத நாயக்கருக்கு மேலும் ஒரு துன்பம் காட்டு விலங்குகளால் ஏற்பட்டது. ஊர்ப்புறங்களில் விலங்குகள் புகுந்து மனிதர்களையும் பயிர்களையும் தாக்கி அழித்தன. இதனால் படைவீரர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடி வீழ்த்த வேண்டியிருந்தது. இது போதாதென்று விஷப்பூச்சிகள் படையெடுத்து பயிர்களை அழித்தன. நாட்டில் கொள்ளை நோய் பரவியது. இதையெல்லாம் மக்கள் வரப்போகும் ஒரு பெரும் துன்பத்திற்கு அறிகுறிகளாக நினைத்தனர். ஆனால் விரைவில் இந்தச் சிக்கல்கள் தீர்ந்தன.

இந்தப் பிரச்சனைகளெல்லாம் முடிவதற்கு முன்பே மீண்டும் பீஜப்பூர் படைகள் மதுரை நோக்கைப் படையெடுத்தன. வானமியான் என்பவன் தலைமையில் 1663ம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா ஒரு படையை அனுப்பி வைத்தான். பீஜப்பூர் படைகளுக்கு விஜயராகவ நாயக்கர் உதவி செய்தார். இந்தப் படை திருச்சிக் கோட்டையின் மேல் கடும் தாக்குதல் நிகழ்த்தியது. ஆனால், இது போன்ற ஒரு நிலைமையை எதிர்பார்த்து அந்தக் கோட்டையில் வெடி மருந்துகளையும் திறமை மிக்க வீரர்களையும் சொக்கநாத நாயக்கர் சேர்த்து வைத்திருந்தார். பீஜப்பூர் படைகளின் மீது மதுரைப் படை வெடிகுண்டுகளை வீசியது. அதன் காரணமாக வானமியானின் படையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த வானமியான், சுற்றுப்புறத்தில் இருந்த ஊர்களை எல்லாம் தாக்கத்தொடங்கினான். போர்ப்பயிற்சி சிறிதும் இல்லாத அந்த ஊர் மக்கள் தங்களால் இயன்றவரை பீஜப்பூர் படைகளை எதிர்த்து நின்றனர். முடியாத போது ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் ஒரே இடத்தில் கூடி, ஒட்டுமொத்தமாகத் தங்களை தீக்கிரையாக்கிக் கொண்டு மாண்டனர். தொடர்ந்து இப்படிச் சூறையாடல்கள் நடக்கும் என்றும் அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் தங்களுக்குப் பெரும்பணம் கொடுக்க வேண்டும் என்றும் வானமியான் நிபந்தனைகள் விதித்தான். மக்களின் துன்பத்தைத் தாங்க முடியாத சொக்கநாத நாயக்கர், அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து அவனை நாட்டை விட்டு ஓட்டினார்.

தஞ்சைப் படையெடுப்பு

பீஜப்பூர் படைகள் இங்கு வரும்போதெல்லாம் அவர்களோடு சேர்ந்துகொண்டு மதுரைக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தஞ்சை விஜயராகவ நாயக்கருக்கு பாடம் கற்பிக்கத் திட்டமிட்ட சொக்கநாத நாயக்கர், தஞ்சை மீது படையெடுத்தார். வல்லம் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்ட சொக்கநாத நாயக்கர், அடுத்ததாக தஞ்சாவூரின் மீது தாக்குதல் நடத்த முனைந்தார். அவரைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட விஜயராகவ நாயக்கர், சொக்கநாதரிடம் சரணடைந்தார். தஞ்சை மன்னரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட சொக்கநாத நாயக்கர், வல்லத்தில் ஒரு படையை நிறுத்தி விட்டு மீண்டும் மதுரை திரும்பினார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வல்லத்தை தஞ்சை மன்னர் தன்னுடைய அரசில் சேர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது.

சேதுபதிகளுடன் போர்

இளவயதிலேயே பதவிக்கு வந்த சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தன்னுடைய வீரத்தால் பல சிக்கல்களை அவர் திறம்படச் சமாளித்தாலும் அவருடைய அனுபவமின்மையால் சில தடாலடி முடிவுகளை எடுத்து பல பிரச்சனைகளை அவர் தாமே வரவழைத்துக் கொண்டதையும் காணமுடிகிறது. அப்படி ஒரு செயல்தான், சொக்கநாதர் சேதுபதிகளின் மேல் நிகழ்த்திய தாக்குதல். திருமலை நாயக்கரின் காலத்தில் அவருக்குப் பல உதவிகள் செய்தவரும் அதன் காரணமாக திருமலை சேதுபதி என்ற பெயர் பெற்று பல பரிசுகளை திருமலை மன்னரிடமிருந்து பெற்றவருமான ரகுநாத சேதுபதியுடன் சொக்கநாதர் மோதச் சென்றார். பீஜப்பூர் படையெடுப்புகளின் போது தமக்கு உதவ வராத காரணத்தால் சேதுபதியின் மீது கோபம் கொண்ட சொக்கநாத அவர் மீது படையெடுத்தார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வயதில் முதிர்ந்தவரும் பெரு வீரருமான திருமலை சேதுபதியுடன் போர் செய்ய நினைத்தது சொக்கநாதர் செய்த தவறுகளில் ஒன்று.

இந்தப் போரின் ஆரம்பத்தில் மதுரைப் படைகளுக்கு வெற்றியே கிடைத்தது. திருப்பத்தூர், மானாமதுரை, காளையார் கோவில் ஆகிய இடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன. இதனால் ஊக்கமடைந்த மதுரைப் படை மேலும் முன்னேறியது. ஆனால் அனுபவம் வாய்ந்த திருமலை சேதுபதி மறைந்து கொண்டு திடீர்த்தாக்குதல் நடத்தும் முறையைக் கையாண்டார். அடிக்கடி மதுரைப் படைகளுக்கு எதிராகத் தோன்றி மின்னல் வேகத் தாக்குதல் நடத்திவிட்டு ராமநாதபுரம் படைகள் மறைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த சொக்கநாத நாயக்கர், சேதுபதியின் படைகளை முறியடிக்க முடியாமல் திணறினார். இதற்கிடையில் மதுரையில் நவராத்திரி விழா ஆரம்பித்துவிடவே, படையை நடத்தும் பொறுப்பைத் தனது படைத்தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதுரை திரும்பினார் சொக்கநாத நாயக்கர். ஆனால், சேதுபதிகளின் படைகள் தொடர்ந்து நடத்திய தாக்குதலால் மதுரைப் படைகள் நிலைகுலைந்தன. பிடித்த இடங்களை விட்டு நாயக்கரின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் இது போன்று தொடர்ந்து போர் நடத்துவது பெரும் தோல்வியில் முடியும் என்பதை உணர்ந்து கொண்ட சொக்கநாதர், ராமநாதபுரம் சேதுபதியோடு நடத்திய இந்தப் போரை அடியோடு கைவிட்டார்.

தலைநகர் மாற்றம்

மதுரையைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்த நாயக்கர் வம்சத்தில், முத்து வீரப்ப நாயக்கர் வடதிசைப் படையெடுப்புகளைச் சமாளிக்க வேண்டி, தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதையும் அதன்பின் திருமலை நாயக்கர் மீண்டும் தலைநகரை மதுரைக்கு மாற்றியதையும் பார்த்தோம். சொக்கநாத நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்திலேயே இருமுறை பீஜப்பூர் சுல்தான்களை எதிர்கொள்ள நேரிட்டது. தவிர, தஞ்சை நாயக்கரும் தொடர்ந்து தொல்லைகள் தந்துகொண்டிருந்தார். தென்பகுதியில் பகைவர்கள் இல்லாத காரணத்தால், தலைநகரை திருச்சிக்கு மாற்றுவது வடக்கில் இருந்து வரும் ஆபத்துகளை சமாளிக்க உதவியாக இருக்கும் என்று நினைத்த சொக்கநாதர் மீண்டும் தலைநகரை திருச்சிக்கு மாற்றும் முயற்சிகளை எடுத்தார்.

இந்த முயற்சியில் மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனையை இடித்து, அதன் பகுதிகளையும் அங்கேயிருந்த பொருட்களையும் திருச்சிக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தார். இதனால் பெரும்பாடுபட்டு திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனை பாழானது. அவசர புத்தியால் சொக்கநாதர் செய்த இந்தச் செயல் அவர் நினைத்த படி திருச்சியில் அரண்மனை கட்டவும் உதவவில்லை. திருமலை நாயக்கர் மகால் இடிந்ததுதான் மிச்சம். ஒரு வழியாக 1665ம் ஆண்டு திருச்சி மீண்டும் மதுரை நாயக்கர்களின் தலைநகராயிற்று. ப்ரோயன்ஸா பாதிரியார் எழுதிய கடிதம் ஒன்றில் ’1665ம் ஆண்டு சொக்கநாதர் தனது தலைநகரை திரிசிரபுரத்தில் அமைத்துவிட்டார்” என்று எழுதியிருக்கிறார்.

திருச்சிக்குத் தலைநகரை மாற்றிய சொக்கநாதர், மைசூர் அரசு மீது படையெடுத்ததாகவும் ஆனால் அந்தப் படையெடுப்பில் தோல்வியடைந்ததாகவும் ரங்காச்சாரி குறிப்பிட்டிருக்கிறார். அதன் காரணமாக ஈரோடு, தாராபுரம் ஆகிய இடங்களை மைசூர் மன்னருக்கு அளிக்கவேண்டிய நிலையில் இருந்ததாகவும் பெரும் பணம் கொடுத்து அவற்றை மீட்டதாகவும் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் இந்தத் தகவல்களை சத்தியநாத நாயக்கர் மறுத்திருக்கிறார். சொக்கநாத நாயக்கர் இப்படி ஒரு படையெடுப்பை நடத்தியதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்கிறார் அவர்.

இது ஒரு புறமிருக்க, சொக்கநாதர் தஞ்சை நாயக்கரோடு பெரும் போர் ஒன்றில் ஈடுபட வேண்டியிருந்தது. ஏன் ?

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *