திருமலை நாயக்கரின் காலத்தில் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட உரசல், திருமலை மன்னரின் மகனான முத்துவீரப்பரின் காலத்திலும் தொடர்ந்து, சொக்கநாதர் காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. விஜயராகவ நாயக்கரின் தூண்டுதலால் இருமுறை பீஜப்பூர் வீரர்களின் தாக்குதலுக்கு ஆளான சொக்கநாத நாயக்கர், அதன் காரணமாக வெகுண்டு தஞ்சை மீதே படையெடுக்க நேர்ந்தது. அவருடன் விஜயராகவ நாயக்கர் சமாதானம் செய்துகொண்டாலும் அது பெயரளவுக்கு இருந்ததே தவிர, அவர் மனதில் மதுரையுடன் நட்புறவு ஏற்படவே இல்லை. இதை நிரூபித்தது சொக்கநாதருக்கு தஞ்சை நாயக்கர் தனது பெண்ணைக் கொடுக்க மறுத்த நிகழ்வு.
விஜயராகவ நாயக்கரின் பெண் மீது சொக்கநாத நாயக்கருக்கு காதல் ஏற்பட்டது என்றும் அதனால் அந்தப் பெண்ணை மணந்துகொள்ள நினைத்து தஞ்சை நாயக்கருக்கு சொக்கநாதர் தூது அனுப்பினார் என்று சொல்வதுண்டு. இல்லை, அது ராஜீய ரீதியாக தஞ்சை நாயக்கருடன் உறவு கொள்ள நினைத்தே சொக்கநாதர் அனுப்பிய தூது என்றும் சொல்வதுண்டு. எப்படி இருந்தாலும், சொக்கநாத நாயக்கர் அனுப்பிய தூதை நிராகரித்த விஜயராகவ நாயக்கர், அவருக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்.
அதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். தஞ்சை நாயக்கர்கள் பரம்பரை அரச பதவியைச் சேர்ந்தவர்கள், அதாவது அச்சுதராயரின் உறவினரான செவ்வப்ப நாயக்கரின் வழிவந்தவர்கள். மதுரை நாயக்கர்களோ கிருஷ்ணதேவராயரின் ஊழியமாக இருந்த விஸ்வநாத நாயக்கரின் வழிவந்தவர்கள். எனவே அந்தஸ்து இந்த மண உறவுக்குக் குறுக்கே நின்றதாம். ஆனால் இந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏற்கனவே திருமலை நாயக்கர், தஞ்சை நாயக்கரின் வழி வந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என்பதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்க சொக்கநாத நாயக்கருக்கு தன் பெண்ணை மணம் செய்து கொடுக்க விஜயராகவ நாயக்கர் மறுத்ததற்குக் காரணம், மதுரை நாயக்கரின் மேல் அவர் கொண்ட தீராத பகையாகவே இருக்க முடியும்.
அதிவிரைவில் முடிவுகளை எடுக்கக் கூடிய சொக்கநாத நாயக்கர், தாம் பெண் கேட்டு அனுப்பிய தூதினை விஜயராகவ நாயக்கர் மறுத்தது கண்டு பெரும் கோபம் அடைந்தார். தஞ்சை நாயக்கருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பிய சொக்கநாதர், தளவாய் வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் தலைமையில் 1673ம் ஆண்டு ஒரு படையை தஞ்சை நோக்கி அனுப்பி வைத்தார். வேங்கடகிருஷ்ணப்பருடன் பேஷ்கார் சின்னத்தம்பி முதலியார், கன்னிவாடியின் பாளையக்காரரான காட்டீர நாயக்கர் ஆகியோரும் உடன் சென்றார்கள். ஏற்கனவே கைப்பற்றிய வல்லம் கோட்டையை முற்றுகையிட்ட மதுரை நாயக்கர் படை, அதை விரைவில் கைவசப்படுத்தியது. அதன் பின், தன்னுடைய படையை தஞ்சைக் கோட்டை நோக்கிச் செலுத்தினார் வேங்கடகிருஷ்ணப்பர். விஜயராகவ நாயக்கர் பூஜையில் ஆழ்ந்திருந்த சமயத்தில், மதுரைப் படைகள் தஞ்சை நோக்கி வருவது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே படைகளைத் திரட்டிய விஜயராகவர், மதுரைப் படைகளை வழியிலேயே எதிர்கொண்டார்.
இருதரப்பிற்கும் இடையில் நடந்த கடும் போரில், மதுரைப் படைகளுக்கு வெற்றி கிடைத்தது. தளவாய் வேங்கடகிருஷ்ணப்பர், விஜயராகவ நாயக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சொக்கநாதருக்குப் பெண் தருமாறு கேட்டார். அதை மறுத்த விஜயராகவர், போருக்குத் தயாராகுமாறு சொல்லிவிட்டு தஞ்சைக் கோட்டைக்குள் சென்றுவிட்டார். தஞ்சாவூர்க் கோட்டையை மதுரைப் படைகள் முற்றுகையிட்டன. இரண்டாவது முறையாக வேங்கட கிருஷ்ணப்பர், விஜயராகவ நாயக்கருக்குத் தூதனுப்பினார். அவருடைய பெண்ணைக் கொடுத்துவிட்டால் பேரழிவைத் தவிர்க்கலாம் என்றும் மதுரையுடன் நல்லுறவைப் பேணுவது தமிழகத்திற்கு நல்லதே செய்யும் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால் விஜயராகவ நாயக்கர் இவற்றைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்த அவர், தஞ்சை அரண்மனை முழுவதும் வெடி மருந்துகளால் நிரப்பினார். அவருடைய மகனான மன்னார்தாசன், விஜயராகவரின் குருவான கோவிந்த தீக்ஷதரின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை விடுதலை செய்து, மகனுடன் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு மீதி இருந்த படைகளுடன் மதுரைப் படைகளோடு மோதினார் விஜயராகவ நாயக்கர்.
கடுமையாகப் போர் செய்த மதுரைப் படைகளுக்கே மீண்டும் வெற்றி கிடைத்தது. போர்க்களத்தில் விஜயராகவரை நெருங்கிய வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர், மீண்டுமொருமுறை அவரிடம் சொக்கநாதருக்குப் பெண் தருமாறு கேட்டார். இம்முறையும் அசையாத விஜயராகவ நாயக்கர், ஒரு காவலனை அழைத்து அரண்மனையில் உள்ள வெடி மருந்துகளைக் கொளுத்துமாறு சொல்லிவிட்டு மீண்டும் போர் செய்யப்புகுந்தார். முடிவில் விஜயராகவ நாயக்கரும் அவரது மகனான மன்னார் தாசனும் போரில் மாண்டனர். கொளுத்தப்பட்ட வெடிகளால் தஞ்சை அரண்மனை முழுவதும் எரிந்து சாம்பலானது. விஜயராகவ நாயக்கரின் மனைவி, மகள் மற்றும் அரண்மனைப் பெண்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
மிகுந்த வருத்தத்தோடு, தஞ்சையைச் சீர் செய்யும் பொறுப்பை படைகளிடம் ஒப்படைத்துவிட்டு தளவாய் மதுரை திரும்பினார். அவருக்கு சொக்கநாதர் தகுந்த பரிசுகள் அளித்துக் கௌரவித்தார். வாரிசுகள் யாருமே இல்லாமல் தஞ்சை நாயக்கர் மாண்டதால், தஞ்சை அரசு மதுரை நாயக்கர்களின் கீழ் வந்தது. தனது சிற்றன்னையின் மகனும் ஒன்றுவிட்ட சகோதரனுமான அழகிரி என்பவரை தஞ்சையின் பொறுப்பாக நியமித்தார் சொக்கநாதர். செவ்வப்ப நாயக்கரால் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சை நாயக்கர் வம்சம் இப்படியாக முடிவுக்கு வந்தது.
அழகிரியின் துரோகம்
தனது சகோதரனால் 1674ம் ஆண்டு பதவியில் வைத்து அழகு பார்க்கப்பட்ட அழகிரி நீண்டகாலம் சும்மா இருக்கவில்லை. வெறும் வரியை வசூல் செய்து அதை மதுரைக்கு அனுப்பும் பணியைச் செய்ய விரும்பாத அழகிரி, தஞ்சை அரசு முழுவதையும் தன் கையில் எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆகவே சிறிது காலம் கழித்து, வசூலிக்கப்பட்ட தொகையை மதுரைக்குச் செலுத்தாமல் காலம் கடத்தினார். அதைக் கேட்ட சொக்கநாதருக்கு, ஏதோ சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக்கழித்துவிட்டார். தம்பி செய்யும் துரோகத்தை உணர்ந்து கொண்ட சொக்கநாதர் அழகிரியைத் தண்டிக்க விரும்பினார். ஆனால் மீண்டும் ஒரு போரைத் தொடங்குவது நாட்டிற்கு நல்லதல்ல என்ற அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்ட சொக்கநாதர், அந்த முயற்சியைக் கைவிட்டார். ஆனாலும் அழகிரி மீது அவர் கொண்ட கோபம் குறையவில்லை.
இதற்கிடையில் அழகிரிக்கு உறுதுணையாக ராயசம் என்ற பொறுப்பில் தஞ்சை அரசில் வெங்கண்ணா என்ற ஒருவர் இருந்தார். தனக்கு இன்னும் உயர்ந்த பதவி கிடைக்கும் என்று நினைத்த வெங்கண்ணா, அழகிரி அதற்கு ஒப்புக்கொள்ளாதது கண்டு அவரை வீழ்த்தும் முயற்சியில் இறங்கினார். சொக்கநாதருக்கும் அழகிரிக்கும் மோதல் முற்றுவதைக் கண்ட அவர், விரைவில் சொக்கநாதர் படையெடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை என்பதால் வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.
தஞ்சை நாயக்கர் வம்சம் முற்றிலும் மடிந்து விட்டது என்று நினைத்ததற்கு மாறாக, மன்னார் தாசனின் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று நாகப்பட்டினத்தில் ஒரு வணிகர் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றும் அதன் பெயர் செங்கமலதாசன் என்றும் கேள்விப்பட்டார் வெங்கண்ணா. (செங்கமலதாசனை விஜயராகவ நாயக்கர் மகன் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் மதுரை நாயக்கரிடம் அவர் போர் செய்து மடிந்தபோது அவருக்குக் கிட்டத்தட்ட எண்பது வயதிருக்கும். அப்படியிருக்க அவருக்கு இரண்டு வயதுக் குழந்தை இருந்தது என்ற செய்த நம்ப முடியாததல்லவா. அதனால் செங்கமலதாசன், விஜயராகவ நாயக்கரின் பேரனாகவே இருக்கக்கூடும்)
செங்கமலதாசன் இருக்கும் இடத்தை எப்படியோ கண்டுபிடித்த வெங்கண்ணா, சிறிது காலம் நாகப்பட்டினத்திற்குக் குடியேறி அங்கேயே வசித்து வந்தார். செங்கமலதாசன் தகுந்த வயதிற்கு வந்ததும் அவனுக்கு அரசை அளிக்கத் தீர்மானித்த வெங்கண்ணா, சொக்கநாதரிடம் முறையிடுவது பயன் அளிக்காது என்ற காரணத்தால், பீஜப்பூர் சுல்தானிடமே செல்வது என்று தீர்மானித்தார். சுல்தான் அடில்ஷாவிடம் சென்ற வெங்கண்ணா, தஞ்சை நாயக்கர் வம்சத்தின் உண்மையான வாரிசு செங்கமலதாசன் என்றும் மதுரை நாயக்கர்கள் தஞ்சையை அநியாயமாக அபகரித்துக்கொண்டார்கள் என்றும் முறையிட்டான். தஞ்சை மீது படையெடுக்க இன்னொரு சந்தர்ப்பம் வந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்த பீஜப்பூர் சுல்தான், அப்போது செஞ்சிக்கோட்டைத் தலைவனாக இருந்த வெங்கோஜி என்ற ஏகோஜியை ஒரு படையுடன் அனுப்பி அழகிரியை தஞ்சையிலிருந்து துரத்தி செங்கமலதாசனுக்கு அளிக்கும்படி ஆணையிட்டான். இந்த ஏகோஜி வேறு யாருமல்ல, பின்னாளில் சத்ரபதியாக உருவெடுத்த மாவீரர் சிவாஜியின் தந்தையான ஷாஷியின் இரண்டாம் மனைவியின் மகன். சிவாஜிக்கு சகோதரன் முறை. தன் தந்தையான ஷாஷியைப் போல, பீஜப்பூர் சுல்தானிடம் பணிபுரிந்து வந்த ஏகோஜி தஞ்சையை நோக்கிப் படையுடன் சென்றார்.
சுல்தானின் படைகள் வருவதை அறிந்த அழகிரி ஓடோடிச் சென்று சொக்கநாத நாயக்கரிடம் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அழகிரி செய்த துரோகத்தால் மனம் கசந்திருந்த சொக்கநாதர், அவருக்கு உதவ மறுத்துவிட்டார். அவர் மட்டும் துணைப்படையை அனுப்பியிருந்தால் தமிழகத்தின் சரித்திரம் வேறு எப்படியோ திரும்பியிருக்கும். சொக்கநாதர் கையை விரித்ததால் வேறு வழியில்லாமல் தானே போரில் ஈடுபடவேண்டிய சூழ்நிலைக்கு ஆளான அழகிரி, நீண்ட நேரம் போர்க்களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் தப்பியோடிவிட்டார்.
வெற்றியோடு 1676ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பீஜப்பூர் படைகள் ஏகோஜியின் தலைமையில் தஞ்சைக்குள் நுழைந்தன. செங்கமலதாசனின் செவிலித்தாய், தஞ்சை அரண்மனைக்குள் விஜயராகவ நாயக்கர் புதைத்து வைத்த செல்வம் எங்கே இருக்கிறது என்று அடையாளம் காட்டினாள். கிட்டத்தட்ட இருபத்தாறு லட்சம் வராகன்களும் ஏகப்பட்ட ஆபரணங்களும் அங்கிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. அதிலிருந்து ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்ட ஏகோஜி,கும்பகோணம் சென்று அங்கே தமது படையுடன் தங்கியிருந்தார். அவருக்கு கும்பகோணம், மன்னார்குடி, பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து வரிவசூலித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
இதனால் மகிழ்ந்த ஏகோஜி, செங்கமலதாசனுக்கு முடிசூட்டும்படி வெங்கண்ணாவிடம் கூறினார். அதன்படி தஞ்சை அரசராக முடிசூடிக்கொண்ட செங்கமலதாசன், தன்னை வளர்த்த வணிகரை தளவாயாகவும் பிரதானியாகவும் நியமித்து வெங்கண்ணாவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கிவிட்டான். தான் நினைத்தது நடக்காததைக் கண்டு ஆத்திரமடைந்த வெங்கண்ணா, செங்கமலதாசனையும் பதவியிலிருந்து அகற்றத் திட்டமிட்டார். கும்பகோணத்திற்குச் சென்று ஏகோஜியிடம் தஞ்சை மீது படையெடுக்குமாறு தூண்டினார் வெங்கண்ணா. ஆனால் பீஜப்பூர் சுல்தானின் உத்தரவுக்கு மாறாக எதையும் செய்ய மறுத்த ஏகோஜி, இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுத்தத் திட்டமிட்ட வெங்கண்ணா, மீண்டும் தஞ்சைக்கு வந்து ஏகோஜி தஞ்சை மீது படையெடுத்து அவனை அடியோடு அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி பயமுறுத்தினார். இதனால் அஞ்சிய செங்கமலதாசன், நாட்டை விட்டே ஓடிவிட்டான். இதற்கிடையில் பீஜப்பூர் சுல்தானான அடில்ஷா இறந்துபடவே, ஏகோஜி எந்தச் சிக்கலும் இல்லாமல் தஞ்சைக்குள் புகுந்து அதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து வெங்கண்ணா செய்துவந்த துரோகங்களைக் கண்ட ஏகோஜி, தமக்கும் அவர் துரோகம் செய்ய நீண்ட நாள் பிடிக்காது என்று கருதி வெங்கண்ணாவைச் சிறை செய்யத் திட்டமிட்டார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட வெங்கண்ணா, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாட்டை விட்டே ஓடிவிட்டார். பிறகு எந்தவிதத் தொந்தரவுமின்றி தஞ்சை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஏகோஜியினால் தஞ்சை மராட்டிய அரச வம்சம் தொடங்கி வைக்கப்பட்டது.
‘தஞ்சாவூரி ஆந்திர ராஜூல சரித்திரமு’ என்ற நூலும் வில்லியம் டெய்லரின் ‘Historical Manuscripts’ என்று நூலும் கூறும் மேற்குறிப்பிட்ட விவரங்களை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். தஞ்சை நாயக்கருக்கும் மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கருக்கும் ஏற்பட்ட போரில், தஞ்சை நாயக்கருக்கு உதவுமாறு ஏகோஜியை பீஜப்பூர் சுல்தான் கேட்டுக்கொண்டதாகவும், அதை ஏற்று தஞ்சை வந்த ஏகோஜி, விஜயராகவ நாயக்கர் மீதே போர் தொடுத்து அவரைக் கொன்று தஞ்சை அரசைக் கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கு மராட்டிய ஆவணங்களை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். எப்படி இருந்தாலும், தஞ்சை நாயக்க வம்சம் அழிந்து அங்கே மராட்டிய ஆட்சி 1675ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே மராட்டிய அரசை சமாளிக்க வேண்டிய கட்டாயம் சொக்கநாத நாயக்கருக்கு வந்து சேர்ந்தது.
(தொடரும்)