Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

தனக்குப் பெண் கொடுக்க மறுத்ததற்காக தஞ்சை நாயக்கரான விஜயராகவர் மீது படையெடுத்து, அந்தப் படையெடுப்பின் விளைவாக தஞ்சை நாயக்கர் வம்சமே அடியோடு அழியக் காரணமாக இருந்த சொக்கநாத நாயக்கர், அதற்குப் பிறகும் தஞ்சைப் பகுதிகளை மதுரையோடு இணைத்துக்கொள்ள முடியவில்லை. முதலில் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான அழகிரி துரோகம் செய்தார். அதன்பின் மராட்டியர்கள் ஏகோஜியின் தலைமையில் தஞ்சைமீது படையெடுத்து அதைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆட்சி தனது கைக்கு வந்ததும், குடிமக்களின் அபிமானத்தைப் பெற விரும்பிய ஏகோஜி பல சீர்திருத்தங்களைச் செய்தார். விளைநிலங்களைச் செம்மையாக்கி நீர்ப்பாசன வசதி சரியாகக் கிடைக்கும்படி செய்தார். கால்வாய்களை வெட்டினார். அதனால் அறுவடையும் பெருகியது. விஜயராகவர் காலத்திலிருந்து தொடர்ந்து போர்களையும் பஞ்சத்தையும் பார்த்துச் சலித்துப்போன தஞ்சைப் பகுதி மக்கள் சிறிது காலம் கிடைத்த இந்த அமைதியாலும் வளத்தினாலும் மனம் மகிழ்ந்து ஏகோஜியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டனர்.

தஞ்சைமீது மீண்டும் படையெடுக்க தகுந்த சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த சொக்கநாதர், அதற்கான வாய்ப்புக் கிடைக்காமல் பொறுமையிழந்தார். ஏகோஜியின் நல்லாட்சி தவிர வேறு பல காரணங்களாலும் அவரது தஞ்சைப் படையெடுப்பு தடைப்பட்டது. மைசூர் அரசனான சிக்கதேவராயன், சத்தியமங்கலம் உட்பட்ட பல வட பகுதிக் கோட்டைகளைப் பிடித்துக்கொண்டு மதுரை நாயக்கர்களை மேலும் நெருக்கினான். இது போதாததென்று மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் படையையும் சொக்கநாதர் எதிர்கொள்ள நேரிட்டது. இதன் பின்புலத்தைக் கொஞ்சம் ஆராய்வோம்.

சிவாஜியின் படையெழுச்சி

பீஜப்பூர் சுல்தானிடம் பணிபுரிந்துவந்த ஷாஷி என்பவருக்கும் ஜீஜாபாய்க்கும் மகனாகப் பிறந்தவர் சிவாஜி. பெரும் வீரர். மராட்டியத்தில் மட்டுமல்லாது பாரதத்தின் பல பகுதிகளிலும் தமது வீரத்தைக் காட்டி ஹிந்து சாம்ராஜ்யம் ஒன்று உருவாவதற்கு அடிக்கல் நாட்டியவர். ஷாஷியின் இரண்டாம் மனைவி துக்காபாய்க்குப் பிறந்த ஏகோஜி, தமது தந்தையைப்போல பீஜப்பூர் சுல்தானிடம் பணிபுரிந்ததையும் அதன் காரணமாக தஞ்சை மீது படையெடுத்து முடிவில் தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்வுகளெல்லாம் நடப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிவாஜி மராட்டிய மன்னராக, பொயு 1674ம் ஆண்டு முடிசூட்டிக்கொண்டிருந்தார்.
அதன் பின் க்ஷத்திரிய தர்மப்படி நாட்டை விரிவாக்க நினைத்த சிவாஜி, பீஜப்பூர் சுல்தானின் கீழ் இருந்த தென்னகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்ற நினைத்தார். அதற்காக தகுந்த சமயத்தை எதிர்பார்த்திருந்த சிவாஜிக்கு அந்த வாய்ப்பு விரைவில் கிடைத்தது. பீஜப்பூர் சுல்தானான அடில்ஷா இறந்ததும் அவனுக்குப் பிறகு சிக்கந்தர் என்ற இளவயதினன் புதிய சுல்தானாகப் பதவியேற்றான். ஆனால் அவனால் நாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பீஜப்பூரின் படைத்தலைவர்களாக ஆங்காங்கே இருந்தவர்கள் கலகம் செய்து தன்னாட்சியை ஏற்படுத்த முனைந்தனர். அவர்களில் ஒருவன் செஞ்சியின் தலைவனான ஷெர்கான் லோடி. அடில்ஷா இறந்தபின் எழுந்த குழப்பதைப் பயன்படுத்திக்கொண்ட ஷெர்கான், அப்போது புதுச்சேரியில் குடியேறியிருந்த பிரஞ்சுக்காரர்களோடு சேர்ந்துகொண்டு பறங்கிப்பேட்டை போன்ற ஊர்களைக் கைப்பற்றினான். பின் செஞ்சிக்கோட்டையை தன் ஆதிக்கத்தின் கீழ் முழுமையாகக் கொண்டுவந்து நாசிர் முகமது என்பவனை செஞ்சிக் கோட்டையின் தலைவனாக நியமித்தான். அதன்பின் வேலூரையும் கைப்பற்றிவிட்டு, தெற்கு நோக்கிச் சென்று வாலிகொண்டபுரம் கோட்டையைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். அங்கிருந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தான் ஷெர்கான்.

தஞ்சை மன்னரான ஏகோஜியின் ஆலோசகராக இருந்தவர் ரகுநாத பந்த். ஏகோஜியின் தகப்பனாரான ஷாஷியின் சொத்து விவகாரங்களை கவனித்து வந்தவர். பீஜப்பூர் சுல்தானகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் ஷெர்கான் தொடர்ந்து கோட்டைகளைக் கைப்பற்றி முன்னேறுவதையும் கண்ட பந்த், ஏகோஜியிடம் ஷெர்கானைத் தாக்கி அவன் ஆதிக்கத்தை உடைக்குமாறு சொன்னார். ஏற்கனவே பீஜப்பூர் சுல்தானிடம் பணிபுரிந்ததால் ஏற்பட்ட விசுவாசத்தினாலும் தமது படையிலேயே பல இஸ்லாமியப் படைத்தலைவர்கள் இருந்ததாலும் இந்த யோசனையை நிராகரித்த ஏகோஜி, தனக்கு தஞ்சை அரசே போதும் என்று கூறிவிட்டார். இதனால் மனக்கசப்பு அடைந்த பந்த், தாம் காசி யாத்திரை செல்வதாகச் சொல்லிவிட்டு, சிவாஜியைச் சந்தித்தார். பீஜப்பூர் சுல்தானகம் இருந்த ஆபத்தான நிலையைக் கூறிய அவர், அதற்கு அடங்கிய பகுதிகளை வெல்வதற்கு இதுதான் சரியான சமயம் என்று வற்புறுத்தினார். மேலும் ஏகோஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஷாஷியின் சொத்துப் பிரிவினையைச் செய்து சிவாஜிக்குரிய பங்கைப் பெறுமாறும் அவர் வற்புறுத்தினார்.

பீஜப்பூரின் மீது படையெடுத்துச் செல்ல தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த சிவாஜி, இதனால் உற்சாகம் அடைந்தார். 1677ம் ஆண்டு தமது படையுடன் புறப்பட்ட அவர், பீஜப்பூரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதும் பட்டாணி இனத்தவரால் ஆளப்பட்டுக்கொண்டிருந்ததுமான கொப்பல் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினார். அதன்பின் ஹைதராபாத்தை அடைந்த அவர், அங்கிருந்த கோல்கொண்டா சுல்தானோடு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டு அவனிடமிருந்து படையுதவி பெற்றுக்கொண்டு தெற்கு நோக்கித் திரும்பினார். வழியில் ஶ்ரீசைலம் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு கடப்பை, திருப்பதி, திருக்காளத்தி வழியாகச் சென்னை வந்தார். சென்னையில் அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள அம்மனைத் தரிசித்ததாக அந்தக் கோவிலில் உள்ள குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சென்னையிலிருந்து செஞ்சிக் கோட்டையை நோக்கித் திரும்பிய சிவாஜி, தனது படைத்தலைவன் ஒருவனிடம் 5000 பேர் அடங்கிய படையைக் கொடுத்து செஞ்சியைக் கைப்பற்றுமாறு கூறினார். அந்தப் படைத்தலைவனுடன் சமாதானம் செய்துகொண்ட செஞ்சிக் கோட்டைத்தலைவனான நாசிர் முகமது, அவனுக்குப் பணம் கொடுத்துவிட்டு கோட்டையைவிட்டு ஓடிவிட்டான். அதிகச் சேதமில்லாமல் செஞ்சியைக் கைப்பற்றிய சிவாஜி, பல புதிய கட்டடங்களை அங்கே கட்டினார். படையின் சிறு பகுதி ஒன்றை அங்கே நிறுத்திவிட்டு வேலூருக்குச் சென்றார்.

வேலூர்க் கோட்டை அப்போது அப்துல்லாகான் என்பவனிடம் இருந்தது. அப்துல்லாகானுக்கு பிரஞ்சுக்காரர்களின் உதவி கிடைத்து வந்தது. வேலூர்க் கோட்டை மிகவும் வலிமையானது. ஆழமான அகழிகளை உடையது. தன் படையிலிருந்த பீரங்கிகளிலிருந்து குண்டுகளைக் கோட்டையை நோக்கிச் செலுத்தி தமது வருகையை சிவாஜி அறிவித்தார். அதைக் கண்ட வேலூர்க் கோட்டைக் கதவுகள் சாத்திக்கொண்டன. சிவாஜி கோட்டையை முற்றுகையிட்டார். இருதரப்புப் படைகளும் பீரங்கிப் பிரயோகம் செய்தன. ஆனால் வேலூர்க் கோட்டை விழவில்லை. ஆகவே அதைக் கைப்பற்றும் பொறுப்பை தனது படைத்தலைவன் ஒருவனிடம் விட்டுவிட்டு, வாலிகொண்டபுரத்திற்குச் சென்றார் சிவாஜி. அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த ஷெர்கான் லோடிக்கும் சிவாஜியின் படைகளுக்கும் கடும் போர் மூண்டது. முடிவில் வெற்றியடைந்த சிவாஜியிடம் ஷெர்கான் லோடி சரணடைந்தான். அவருக்குப் பிணைப்பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினான் ஷெர்கான்.

வாலி கொண்டபுரம் வரையுள்ள தமிழகப் பகுதிகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த சிவாஜியின் பார்வை அடுத்து மதுரை நோக்கித் திரும்பியது. அப்போது திருச்சியில் இருந்த சொக்கநாத நாயக்கருக்குக் கைகொடுத்தது பருவமழைக் காலமும் அதன் காரணமாக கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த வெள்ளமும். வெள்ளம் வடியும் வரை சிவாஜியின் படைகள் ஆற்றைக் கடந்து வரமுடியாது என்ற காரணத்தினால், தன் குடும்பத்தாரை மதுரைக்கு அனுப்பிய சொக்கநாதர், சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு வரும் சிவாஜியுடன் மோதலைத் தவிர்க்க எண்ணினார். அதனால் அவருடன் சமாதானம் பேச தூதர்களை அனுப்பினார். சிவாஜியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ரகுநாத பந்த் ஈடுபட்டார். முடிவில் சொக்கநாத நாயக்கர் 24 லட்சம் ரூபாய் (6 லட்சம் ஹன்) கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். முன்பணமாக ஒன்றரை லட்சம் ரூபாயும் கொடுத்து அனுப்பினார். அதன் காரணமாக மதுரை மீதான தமது படையெடுப்பை சிவாஜி கைவிட்டார்.

அடுத்து ஏகோஜியைச் சந்திப்பதற்காக தூது அனுப்பினார் சிவாஜி. இருவரும் திருமழபாடியில் சந்தித்தனர். சொத்து விவரங்களைப் பற்றிய பேச்சு நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் ஏகோஜி தப்பியோடி தஞ்சையில் சென்று புகுந்து கொண்டார். அதனால் வெகுண்ட சிவாஜி முதலில் தஞ்சை மீது படையெடுக்க நினைத்தார். ஆனால் சகோதரனோடு போர் செய்யும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, ரகுநாத பந்திடம் ஏகோஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னார். இதற்கிடையில் முகலாய மன்னன் ஔரங்கசீப் தக்காணத்தின் மீது படையெடுப்பதாகச் செய்தி வரவே, செஞ்சிக் கோட்டையின் தலைவனாக தன் மகன் சம்பாஜியை நியமித்து விட்டு ஹம்பிர் ராவ் என்பவனை படைத்தலைவனாக அறிவித்துவிட்டு, சிவாஜி மராட்டியம் திரும்பினார்.

சிவாஜி சென்றவுடன் துணிச்சலடைந்த ஏகோஜி, அவருடைய மராட்டிய வீரர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க நினைத்தார். அதற்குப் படை உதவி செய்யுமாறு சொக்கநாத நாயக்கரையும் மைசூர் சிக்கதேவராயனையும் கேட்டுக்கொண்டார். சிவாஜியுடன் மோதலை விரும்பாத அவர்கள் இருவரும் இந்த ஏற்பாட்டுக்கு மறுத்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராமல், தன்னுடைய படையோடு வாலிகொண்டபுரம் நோக்கிச் சென்ற ஏகோஜி சிவாஜியின் படைகளோடு மோதினார். சம்பாஜியும் ஹம்பிர் ராவும் கடுமையாகப் போரிட்டனர். ஒரு கட்டத்தில் பின்வாங்குவது போலப் போக்குக் காட்டி போர்க்களத்திலிருந்து ஓடினர் அவர்கள் இருவரும். மகிழ்ச்சியடைந்த ஏகோஜியின் படைவீரர்கள் போர் முடிந்து விட்டது என்று நினைத்து பாசறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, சிவாஜியின் வீரர்கள் திடீர்த்தாக்குதல் நடத்தினர். தஞ்சைப் படைவீரர்களில் பலர் கொல்லப்பட்டனர். மீதியிருந்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தஞ்சை நோக்கி ஓடிவிட்டனர்.

தஞ்சையைக் கைப்பற்ற தகுந்த சமயம் வந்துவிட்டதை உணர்ந்த சொக்கநாத நாயக்கர், தமது படையுடன் சென்று, தோற்றுத் திரும்பிய தஞ்சைப் படைகளுடன் மோதாமல், கத்தியின்றி ரத்தமின்றி அந்த அரசைக் கைக்கொள்ள நினைத்தார். சிவாஜியின் படைத்தலைவர்களிடம் பெரும் பணத்தைக் கொடுத்து தஞ்சையைத் தனக்கு உரிமையாக்கும்படி கோரிக்கை விடுத்தார் சொக்கநாதர்.

இதற்கிடையில் தன் மனைவியும் பெரும் அறிவாளியுமான தீபாபாயின் ஆலோசனைப்படி ரகுநாத பந்திடம் பேச்சு நடத்திய ஏகோஜி ஆறு லட்சம் ரூபாயைக் கொடுத்துவிட்டு தஞ்சைப் பகுதிகளை ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றுக்கொண்டார். தமிழகத்தின் வடபகுதிகளைச் சிவாஜியிடமே ஒப்படைப்பது என்ற நிபந்தனைக்கும் அவர் ஒப்புக்கொண்டார். தமது படையிலுள்ள இஸ்லாமியப் படைத்தலைவர்களை நீக்கிவிடுவதற்கும் ஏகோஜி சம்மதித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால், ஹம்பிர் ராவின் தலைமையிலான படையை சிவாஜி திரும்பப் பெற்றுக் கொண்டார். சுளுவாக தஞ்சையைக் கைப்பற்றிவிடலாம் என்ற சொக்கநாத நாயக்கரின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஒன்றுபட்ட மராட்டியப் படைகளை எதிர்க்கமுடியாது என்ற காரணத்தால் வெறும் கையோடு அவர் திருச்சி திரும்பினார்.

சொக்கநாதரின் இந்த குயுக்தியான செய்கைகளால் மக்கள் வெறுப்படைந்தனர். ஏகப்பட்ட பணம் செலவழித்து சொக்கநாதர் சமாதானத்தை விலைக்கு வாங்கியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மைசூர் மன்னன் வேறு நாட்டின் வடபகுதிகளைப் பிடித்துக்கொண்டு மதுரை மீது போர் தொடுக்க தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். நாட்டில் பெய்த பெருமழையால் வெள்ளம் ஏற்பட்டு பல ஊர்களைப் பாழடித்தது. இந்தக் காரணங்களால் மக்களின் மனதில் ஏற்பட்ட வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்ட சொக்கநாத நாயக்கரின் ஒன்றுவிட்ட சகோதரனான முத்து அழகாத்திரி என்பவன், சொக்கநாதருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி அவரைச் சிறையில் அடைத்துவிட்டு தானே மன்னன் என்று அறிவித்துக் கொண்டான். சொக்கநாதர் திருச்சிச் சிறையில் வாடலானார்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *