Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

சொக்கநாத நாயக்கரின் படையில் ருஸ்தம் கான் என்ற தளபதி ஒருவன் இருந்தான். தன் சகோதரனால் மனநோயாளிப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் வாடிய சொக்கநாதர், ருஸ்தம் கானின் உதவியால் எப்படியாவது சிறையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிட்டார். அதன்படி, நம்பிக்கையான ஒருவரிடம் செய்தி அனுப்பி ருஸ்தம் கானுக்கு உதவி செய்யுமாறு தன்னைச் சேர்ந்தவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒருநாள் ‘புது அரசனான’ முத்து அழகாத்திரி திருச்சிக் கோட்டையைவிட்டு வெளியே சென்றிருந்தபோது வீரர்களுடன் கோட்டைக்குள் புகுந்த ருஸ்தம் கான், சொக்கநாதரை சிறையிலிருந்து விடுவித்தான். பாதுகாப்புடன் அவரை மதுரைக்கு அனுப்பி வைத்துவிட்டு, முத்து அழகாத்திரியையும் அவரோடு சேர்ந்த வீரர்களையும் அடித்துத் துரத்தினான்.

ஆனால், ஆட்சி தனக்கு மீண்டும் கிடைக்கும் என்று நினைத்த சொக்கநாதரின் எண்ணத்தில் மண் விழுந்தது. மதுரைக் கோட்டைக்குள் அவரைப் பாதுகாப்புடன் வைத்த ருஸ்தம் கான், தானே மதுரையின் ஆட்சியாளன் என்று பிரகடனம் செய்துகொண்டான். இரண்டு ஆண்டுகள் மதுரையில் நடந்த ருஸ்தம் கானின் ஆட்சியில் கொடுமைகள் அதிகரித்தன. அவனது கொடுங்கோல் ஆட்சியைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திணறினார்கள். இதற்கிடையில் மைசூர் அரசனான சிக்கதேவராயன், குமரய்யா என்ற தளபதியின் தலைமையில் ஒரு படையை மதுரைக்கு அனுப்பி வைத்தான். மதுரை அரசின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட குமரய்யா, அடுத்ததாகத் திருச்சியைத் தாக்க தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்தான்.

அந்தக் காலகட்டத்தில், ராமநாதபுரத்தில் திருமலை சேதுபதியின் காலம் நிறைவடைந்து, கிழவன் சேதுபதி பதவிக்கு வந்திருந்தார். இங்கே கிழவன் என்றால் வயதானவர் என்று பொருளல்ல, தலைவன் என்ற பொருளில் சேதுபதியைக் கிழவன் என்று அழைத்தனர். அவருடைய இயற்பெயரும் ரகுநாத சேதுபதிதான். கிழவன் சேதுபதி பெரும் வீரர். சேது நாட்டைத் திறமையுடன் ஆட்சி செய்தவர். மதுரை நாயக்க வம்சத்தில் ஏற்பட்ட குழப்பங்களைக் கவனித்த கிழவன் சேதுபதி, ருஸ்தம் கானின் கொடுங்கோல் செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டார். தமது முன்னோர்கள் நாயக்க மன்னர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவை மனதில் கொண்டு, இருபதாயிரம் வீரர்கள் கொண்ட படையைத் திரட்டி அதற்குத் தாமே தலைமை வகித்து 1680ம் ஆண்டு மதுரை நோக்கிக் கிளம்பினார். சொக்கநாதருக்கு இந்தச் செய்தி கிடைத்தவுடன், தனது தளவாயான கோவிந்தப்பையாவை சேதுபதிக்கு உதவுமாறு கூறினார். அவர்களுடன் கன்னிவாடியின் சின்னக் காட்டீர நாயக்கரும் சேர்ந்து கொண்டார். மதுரைக் கோட்டையை இந்தப் படை முற்றுகையிட்டது. வலுவான சேதுபதியின் படையை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த ருஸ்தம் கான், சொக்கநாத நாயக்கரையும் அவரது குடும்பத்தாரையும் கொன்றுவிடுமாறு தன் வீரர்களுக்கு ஆணையிட்டான்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கிழவன் சேதுபதி, உடனடியாக மூவாயிரம் வீரர்களைக் கோட்டையைத் தகர்க்கச் சொல்லி அனுப்பினார். சேதுபதி வீரர்கள் மதுரைக் கோட்டையில் குண்டுமாரி பொழிந்தனர். தெற்கு வாசல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. சேதுபதி தன் வீரர்களுடன் புகுந்து ருஸ்தம் கானின் படைவீரர்களைத் தாக்கினார். நடந்த போரில் ருஸ்தாம் கான் கொல்லப்பட்டான். சொக்கநாத நாயக்கர் சிறை மீட்கப்பட்டார். மீண்டும் மதுரை அரியணையில் சொக்கநாதரை அமர்த்தினார் கிழவன் சேதுபதி. இதனால் மனம் மகிழ்ந்த சொக்கநாதர், கிழவன் சேதுபதிக்குப் பல பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். யானையில் அவரை ஊர்வலமாக ஏற்றிச் சென்று சேதுபதிக்கு ‘பரராஜ கேசரி’ என்ற விருதுப் பெயரை வழங்கினார். தன்னுடைய அமைச்சர்களில் சிறந்தவரான குமார பிள்ளையை சேதுபதியிடம் பணிபுரிய அனுப்பிவைத்தார் நாயக்கர்.

சொக்கநாதருக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. மைசூர்ப் படைத்தலைவனான குமரய்யா திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டான். தனக்கு உதவி செய்ய வருமாறு செஞ்சிக் கோட்டைக்கும் தஞ்சை மராட்டிய அரசுக்கும் சொக்கநாதர் ஓலை அனுப்பினார். அதை ஏற்று செஞ்சியின் தலைவரான சம்பாஜி, தனது படைத்தலைவனான அரசுமலை என்பவனின் தலைமையில் ஒரு படையைத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார். ஏகோஜியும் தனது சேனையை சொக்கநாதருக்கு உதவியாக அனுப்பினார். கிழவன் சேதுபதியும் ராமநாதபுரம் படையை தந்து உதவவே, குமரய்யாவின் பாடு திண்டாட்டமாகியது. மதுரைப் படையோடு இந்த மூன்று அரசர்களின் படைகளும் சேருவது தமக்குப் பெரும் அபாயம் என்பதை உணர்ந்த குமரய்யா, சண்டைக்காரனிடம் சரணடைவதே மேல் என்ற கொள்கையைப் பின்பற்றி, அந்தப் படைகளை இருவரும் சேர்ந்து விரட்டிவிடலாம் என்றும் அதன்பின் தஞ்சையை வென்று மதுரை நாயக்க அரசோடு சேர்க்க தாம் உதவுவதாகவும் கூறி சொக்கநாதரிடமே தூதனுப்பினான். தமக்கு உதவியாக வந்த படைகளைத் தோற்கடிக்க தன்னோடு சேர்வதாக எதிரி அனுப்பிய இந்த தூதை சொக்கநாதர் நிராகரித்தார். உடனே மைசூருக்குத் திரும்பிவிடும்படி அவர் குமரய்யாவுக்குச் சொல்லி அனுப்பினார். ஆனால் அதைக் கேட்காத குமரய்யா, தனக்கு உதவிப் படைகளை அனுப்புமாறு மைசூருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினான். அந்தக் கடிதம் செஞ்சிப் படைகளிடம் சிக்கிக் கொண்டது. ஆகவே படை உதவி வரவில்லை.

நிலைமை சிக்கலாவதைக் கண்ட குமரய்யா, செஞ்சிக் கோட்டைத் தளபதியான அரசுமலைக்கு லஞ்சம் கொடுத்து அவனுடைய படைகளைத் திருப்பி அனுப்ப முயன்றான். ஆனால் அரசுமலை இதைச் செய்ய மறுத்துவிடவே, வேறு வழியில்லாமல் முன்னேறுவது போலப் போக்குக் காட்டி மைசூருக்குத் தன் படைகளோடு தப்பியோட முயன்றான் குமரய்யா. அந்தப் படைகள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய செஞ்சிப் படைகள் மைசூர் வீரர்களைக் கொன்று குவித்தன. குமரய்யாவும் சிறைப் பிடிக்கப்பட்டான். மீதியுள்ள படைகளைத் துரத்திச் சென்ற செஞ்சி வீரர்கள் தமிழகத்தின் வட பகுதிகளை மைசூரிடமிருந்து மீட்டனர். வெற்றியோடு திரும்பி வந்த அரசுமலை, பெரும் துரோகம் ஒன்றைச் செய்தான். யாருக்கு உதவி செய்ய செஞ்சியிலிருந்து வந்தானோ, அவருக்கே எதிராகத் திரும்பி திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டான். இந்தத் துரோகத்தைத் தாங்க முடியாத சொக்கநாத நாயக்கர் 1682ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

சொக்கநாதரின் ஆளுமை

சிறிய வயதிலேயே ஆட்சிக்கு வந்த சொக்கநாத நாயக்கர், பெரும் வீரராக இருந்தாலும் அவருக்குச் சரியான ஆலோசகர் இல்லாத குறை அவரது ஆட்சிக்காலத்தில் பல நிகழ்வுகளில் எதிரொலித்தது. அதைத் தவிர இயற்கை சீரழிவுகளும் கொள்ளை நோய்களும் அவரது ஆட்சிக்காலத்தில் பெரும் துன்பங்களை ஏற்படுத்தியது. இவற்றையெல்லாம் சமாளித்து ஓரளவுக்குத் திறமையான ஆட்சியைத் தந்தவராகவே சொக்கநாத நாயக்கரைக் கருதலாம். அவரது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் மக்களின் மதிப்பைப் பெற்றவராகவும் அவர்களது நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் இருந்தார். ஆனால் அவரது எதிரிகளைச் சரியாகக் கணிக்காமல் பல சமயங்களில் அவர் தேவையில்லாத போர்களில் ஈடுபட்டது, அவரது புகழைக் குலைத்தது. இயற்கைச் சீற்றங்கள் ஒருபுறம் இருக்க, போரால் ஏற்பட்ட பேரழிவுகள் மக்கள் அவர் மீது வெறுப்புக் கொள்ள காரணமாயிற்று. எந்த நேரத்தில் விட்டுக்கொடுத்துப் போவது, எந்த நேரத்தில் சண்டையில் இறங்குவது என்ற கலை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ருஸ்தம் கான் போன்ற துரோகிகளையும் அவர் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார். இவையெல்லாம் அவரது ஆளுமைக்கு ஏற்பட்ட கரும்புள்ளிகள் என்றே சொல்லவேண்டும். திருமலை மன்னரால் உச்சத்தை அடைந்த மதுரை நாயக்க அரசை தன் வீரத்தினாலும் திறமையினாலும் இன்னும் புகழடையச் செய்யக்கூடிய எல்லாத் தகுதிகளும் சொக்கநாதருக்கு இருந்தது. ஆனால் பல தவறான செய்கைகளால் ‘நந்தவனத்து ஆண்டியைப்’ போல மதுரை நாயக்க அரசை பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டு மறைந்தார் சொக்கநாத நாயக்கர்.

மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர்

சொக்கநாத நாயக்கருக்கும் அவரது அரசியும் பின்னாளில் பெரும்புகழ் பெற்றவருமான மங்கம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முத்துவீரப்பர். இவரது இயற்பெயர் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர். சிலர் இவரை வேறொரு அரசிக்குப் பிறந்தவர் என்று கூறுவர். ஆனால் நெல்சன் இவரை மங்கம்மாளுக்குப் பிறந்தவர் என்றே குறிக்கிறார். மெக்கின்ஸி ஓலைச்சுவடிகள் மங்கம்மாளை லிங்கம நாயக்கரின் மகள் என்று கூறுகின்றன. ஏசு சபைக் கடிதம் ஒன்று மங்கம்மாளை தளவாய் லிங்கம நாயக்கரின் மகள் என்று குறிப்பிடுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது சொக்கநாத நாயக்கர் மங்கம்மாளை பொயு 1665ம் ஆண்டு வாக்கில் மணந்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படியானால், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அரியணை ஏறும்போது அவருக்கு 15-16 வயது இருந்திருக்கலாம். ஆனால் திருமலசமுத்திரத்தில் உள்ள ரங்க கிருஷ்ண முத்து வீரப்பரின் கல்வெட்டு ஒன்று அந்த சாசனம் அளிக்கப்பட்ட ஆண்டையும் (சக வருடம் 1579 – ஹேவிளம்பி) அவரது ஆட்சியாண்டையும் குறிப்பிடுகிறது. அதை வைத்துப் பார்த்தால், அவர் தனது இருபத்து ஐந்தாம் வயதில் ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. அவர் எந்த வயதில் ஆட்சிக்கு வந்தார் என்ற குழப்பங்கள் இருந்தாலும், அவர் 1682ம் ஆண்டு மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மிருத்யுஞ்சய ஓலைச்சுவடிகள் துந்துபி வருடம் ஆடி மாதம் அவர் அரியணை ஏறியதாகத் தெரிவிக்கின்றன.

நாட்டின் நிலைமை

மிகுந்த சிக்கலான நிலையில் முத்து வீரப்பர் நாட்டின் அரசராகப் பொறுப்பேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். செஞ்சிப் படைகள் திருச்சியை முற்றுகையிட்டிருந்தன. கிழவன் சேதுபதி வேறு தனது படைகளைத் திருப்பியழைத்துக் கொண்டு ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெற்றதாக ஆக்க முயன்றுகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் திருச்சியைக் கைப்பற்றிய சம்பாஜியின் செஞ்சிப் படைகள் மதுரையை நோக்கி முன்னேறி அந்த நகரையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. செஞ்சிப் படைகளிடம் தோற்றியோடிய மைசூர் அரசும் இந்த நிலையைக் கவனித்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. மதுரையை வெல்ல மற்றொரு படைப்பிரிவை மைசூர் அரசன் அனுப்பினான். இம்முறை ராமநாதபுரம் அரசு மைசூருக்கு உதவி செய்தது. சம்பாஜியின் படைகள் மைசூர்ப் படைகளைக் கடுமையாகப் போரிட்டுத் துரத்தின. இதற்கிடையில் கடும் வரிச்சுமையால் மைசூரில் உள்நாட்டுக் கலகங்கள் எழுந்தன. மைசூர் அரசின் கொடுமையான வரிச்சுமைகளைக் கண்ட மக்கள் கொதித்தெழுந்தனர். அந்தக் கலவரத்தை அடக்கும் முயற்சியில் மைசூர் அரசன் இறங்கினான். மைசூரைக் கைப்பற்ற தகுந்த தருணம் அதுதான் என்று நினைத்த சம்பாஜி தனது படைகளை மதுரையிலிருந்து மைசூருக்கு அனுப்பினார்.

மதுரையில் ஏற்பட்ட இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்ட ரங்க கிருஷ்ண நாயக்கர், தனக்கு உதவியாக இருந்த சில பாளையக்காரர்களின் உதவியுடன் மதுரையைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார். மைசூருக்கும் செஞ்சிக்கும் ஏற்பட்ட போரைப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மதுரை நாயக்க அரசைக் கட்டியெழுப்பினார். நிர்வாகச் சீர்திருத்தத்தில் கவனம் செய்து நாட்டைச் சீராக்கினார். இவையெல்லாவற்றையும் செய்ய அவருக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. இதற்கிடையில் டெல்லியிலிருந்து பெரும் அபாயம் ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது.

ஔரங்கசீப்பின் செருப்பு

அக்காலகட்டத்தில் டெல்லி முகலாய அரசின் பேரரசராக இருந்த ஔரங்கசீப், ஒரு விநோதமான வழக்கத்தைப் பின்பற்றியிருந்தார். அவருடைய ஒற்றைச் செருப்பை யானை மேல் வைத்து ஊர்வலமாக அனுப்புவார். அதோடு படை ஒன்று செல்லும். அந்த ஊர்வலம் செல்லுமிடங்களில் உள்ள அரசர்கள், அந்தச் செருப்புக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும். அதைக் கௌரவித்து முகலாய அரசுக்குத் திறை செலுத்த வேண்டும். இப்படிச் செய்ய மறுத்தால், அந்த அரசின் மீது முகலாய வீரர்கள் போர் தொடுப்பார்கள். முகலாயப் பேரரசின் படைபலத்திற்கு அஞ்சி பல அரசர்கள் செருப்புக்குத் தலை வணங்கி, திறை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்தச் செருப்பு ஊர்வலம், முத்து வீரப்பர் காலத்தில் மதுரைக்கு வந்தது. முத்து வீரப்பர் செருப்புக்குப் பணிந்து போக விரும்பவில்லை. அதே சமயம் முகலாயர்களோடு மோதவும் விரும்பவில்லை. அதனால், தனக்கு உடல் நலம் சரியில்லை என்று ஔரங்கசீப்பின் செருப்போடு வந்த படைத்தலைவனுக்குச் செய்தியனுப்பிவிட்டு, முத்துவீரப்பர் திருச்சிக்குச் சென்றுவிட்டார். விடக்கண்டனான ஔரங்கசீப்பின் படைத்தலைவன் திருச்சிக்குச் சென்றான். செருப்பு ஊர்வலம் திருச்சி அரண்மனையை அடைந்தது. படைத்தலைவன் செருப்பை எடுத்துக்கொண்டு அரண்மனையை அடைந்தான். அதற்குத் தலை வணங்குமாறு முத்துவீரப்ப நாயக்கரை வலியுறுத்தினான். அந்த அவமானத்தைச் சகிக்காத முத்துவீரப்பர், அந்த செருப்பைக் காலில் அணிந்துகொண்டார். மேலும் படைத்தலைவனை நோக்கி ‘ஏனப்பா, உன் அரசர் ஒரு செருப்பை மட்டும் கொடுத்து அனுப்பியிருக்கிறாரே. இன்னொரு செருப்பு எங்கே?’ என்று கேட்டார். இதனால் வெகுண்ட முகலாயப் படைத்தலைவன், தனது படைகளைத் திரட்டிக்கொண்டு முத்துவீரப்பரின் படைகளைத் தாக்கினான். மதுரைப் படைகள் முகலாய வீரர்களை வெட்டி வீழ்த்தின. முகலாயப் படைவீரன் டெல்லிக்குத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். முத்துவீரப்ப நாயக்கரின் துணிச்சலையும் வீரத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டும் இந்த நிகழ்வு வில்லியம் டெய்லர் தொகுத்த ‘ஓரியண்டல் ஹிஸ்டாரிக்கல் மனுஸ்கிரிப்ட்ஸ்’ இரண்டாம் தொகுதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *