Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி துடித்துக்கொண்டிருந்தார். மதுரை நாயக்கர் அரசு கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனப்பட்டு வருகிறது என்பதைக் கண்ட சேதுபதி, நாயக்கர்களின் பழைய தளவாயான வேங்கட கிருஷ்ணப்பருடன் சேர்ந்து முத்து வீரப்பர் மீது தாக்குதல் தொடுக்க முனைந்தார். இதற்குத் தஞ்சையில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ஏகோஜி துணை செய்தார். ஆனால் சேதுபதியிடம் பணி செய்துகொண்டிருந்தவரும் சொக்கநாத நாயக்கரால் கிழவன் சேதுபதிக்கு ‘பரிசாக’ அளிக்கப்பட்டவருமான குமாரப்ப பிள்ளை இந்த முயற்சியைப் பற்றி முத்து வீரப்பரிடம் தகவல் அனுப்பிவிட்டார். அதனால் சுதாரித்துக் கொண்ட முத்துவீரப்பர் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார். இதனால் கிழவன் சேதுபதியின் முயற்சி தோல்வியடைந்தது.

வேறு இடத்தில் பணி புரிந்தாலும் தம்மை அந்த நிலைக்கு உயர்த்திய நாயக்கர்களுக்கு விசுவாசமாக குமாரப்ப பிள்ளை இந்த உதவியைச் செய்தார். ஆனால் தனக்குத் துரோகம் செய்துவிட்ட குமாரப்பரை கிழவன் சேதுபதி சும்மா விடவில்லை. அவருக்கு மரண தண்டனை விதித்தார். குமாரப்ப பிள்ளையின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டன. அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதை அறிந்த முத்து வீரப்பர் ராமநாதபுரத்தின் மீது படையெடுத்தார்.

இம்முறை சேதுபதிக்கு உதவியாக மராட்டிய மன்னர் ஷாஜி தன் படைகளை அனுப்பினார். இருதரப்புப் படைகளும் சேதுபுரம் என்ற இடத்தில் மோதிக்கொண்டன. கிழவன் சேதுபதியின் வீரத்தின் முன்னாலும் சேதுபதி – மராட்டியக் கூட்டணிப் படைகளின் வலிமையின் முன்னாலும் மதுரை நாயக்கர் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோல்வியோடு ராமநாதபுரத்திலிருந்து மதுரைப் படை பின்வாங்கியது. இந்த வெற்றியில் தமக்கு உதவிய தஞ்சை மராட்டிய மன்னர் ஷாஜிக்கு புதுக்கோட்டைக்கும் பாம்பனாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை விட்டுக்கொடுத்தார் கிழவன் சேதுபதி. புதுக்கோட்டைப் பகுதி முழுவதையும் தாம் வென்று விட்டதாக ஷாஜி மராட்டிய ஆவணங்களில் கூறிக்கொள்வது இப்படி தஞ்சை அரசுக்கு கிழவன் சேதுபதியால் அளிக்கப்பட்ட பகுதிகளை வைத்தே ஆகும்.

மதப் பிரசார முயற்சிகள்

மதுரை நாயக்கர் அரசில் சொக்கநாத நாயக்கரும் அவருடைய புதல்வர் முத்து வீரப்ப நாயக்கரும் தொடர்ந்து பல சிக்கல்களை எதிர்நோக்கி அவற்றைச் சமாளித்து வரும் அதே நேரத்தில் கிறித்துவ மதப் பிரசாரம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சொக்கநாத நாயக்கர் அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார். கங்குவார்பட்டி என்ற இடத்தில் ஆல்வாரஸ் பாதிரியார் மதப்பிரசாரம் செய்ய முயன்றபோது, அங்கிருந்தோர் போராட்டத்தில் இறங்கி அவரை வெளியேறுமாறு வற்புறுத்தினார்கள். அதே போன்று திருச்சியில் புரோயென்சா பாதிரியார் துன்புறுத்தப்பட்டு சொக்கநாதரிடம் அவர் வந்து முறையிட நேரிட்டது. இந்த இரு நிகழ்வுகளிலும் அந்தப் பாதிரியார்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக சொக்கநாத நாயக்கர் வாக்குறுதியளித்து அதன்படி நடந்துகொள்ளவும் செய்தார்.

இந்த நிலை முத்துவீரப்பர் காலத்தில் மாற்றமடைந்தது. அவருடைய காலத்தில் ஜான் டி பிரிட்டோ என்பவர் மதப்பிரசாரம் செய்ய மதுரை வந்து அங்கே சமயப் பணிக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றார். அருளானந்த சாமியார் என்று அழைக்கப்பட்ட அவருக்கு முத்து வீரப்பர் தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை. இதனால் ஏசு சபைக் கடிதங்களில் முத்து வீரப்பர் கொடுமையான அரசராகக் குறிப்பிடப்படுகிறார். அது மட்டுமல்லாமல் கொஞ்சம் அகலக்கால் வைத்த பிரிட்டோ, சேதுபதி சீமையில் சென்று தமது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கே மங்கலம் என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டு சிவலிங்கத்தை வழிபடுமாறு அந்த ஊர் மக்களால் வற்புறுத்தப்பட்டார். பிரிட்டோ அதை மறுக்கவே, அவர்கள் இருவரும் மரத்தில் கட்டிப்போடப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றிய கிழவன் சேதுபதியின் வீரர்கள், சேதுபதியிடம் அவரைக் கொண்டு சென்றனர். அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த கிழவன் சேதுபதி, பாதிரியாரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். சில காலம் கழித்து மீண்டும் மதப்பிரசாரம் செய்ய ராமநாதபுரம் திரும்பிய பிரிட்டோ, கிழவன் சேதுபதியின் உறவினரையே மதம் மாற்ற முயன்று, அதன் காரணமாக கிழவன் சேதுபதியால் தண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இப்படி தென் தமிழகத்தில் தகுந்த ஆதரவு கிடைக்காததால், மதப் பிரசாரம் சிறிது சுணக்கமடைந்தது.

முத்துவீரப்பரின் மறைவு

பல கோவில் திருப்பணிகளைச் செய்தும், பல அறச்செயல்களில் ஈடுபட்டும் ஆட்சி செய்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்பரின் குணநலன்களில் குறிப்பிடத்தக்கது, அவர் ஏகபத்தினி விரதனாக, ஒரே அரசியை மணம் புரிந்து வாழ்ந்ததாகும். பல மனைவிகளை மணந்து அரசாட்சி செய்த திருமலை நாயக்கரின் கொள்ளுப்பேரனாக இருந்தும் முத்தம்மாள் என்ற பெண்ணை மட்டும் மணந்து அவர் கூடவே வாழ்க்கையை கழித்தார் முத்து வீரப்பர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்குப் பெரியம்மை நோய் கண்டது. அதன் காரணமாக அவர் 1689ம் ஆண்டு இந்த உலகை விட்டுச் சென்றார். சிறிய காலமே ஆட்சி செய்தாலும், சீர்குலைந்திருந்த நாயக்கர் அரசை தன்னுடைய குணநலன்களால் மீட்ட பெருமை முத்துவீரப்ப நாயக்கரையே சேரும்.

மங்கம்மாளின் ஆட்சி

முத்துவீரப்பர் மறைந்தபோது அவர் மனைவி முத்தம்மாள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அதனால், அவர் உடன்கட்டை ஏற விரும்பினாலும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய விடவில்லை. அதனால் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அதற்குப் பிறகு நான்காம் நாளில் ஜன்னி கண்டு மாண்டார் முத்தம்மாள். மதுரை நாயக்க அரசின் ஒரே வாரிசைப் பாதுகாக்கும் பொறுப்பு மங்கம்மாளிடம் சென்றது.

சொக்கநாத நாயக்கரின் மனைவியும் மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கரின் அன்னையுமான மங்கம்மாளும் இதே போன்ற சூழ்நிலையைச் சந்தித்தவர்தான். சொக்கநாதர் இறந்தபோது அவரும் கர்ப்பிணியாக இருந்ததால், அவரால் உடன்கட்டை ஏற இயலவில்லை. ஆனால் அவருக்குப் பிறந்த குழந்தை உடனே இறந்துவிட்டது. அப்போது ஆட்சிக்கு வந்திருந்த அவரது மகன் முத்துவீரப்பர் மங்கம்மாளை அதன்பின் உடன்கட்டை ஏறாமல் தடுத்துவிட்டார். இப்போது முத்தம்மாளும் இறந்துபடவே, தனது பேரனான குழந்தையைக் காக்கும் பொறுப்பை மங்கம்மாள் ஏற்றுக்கொள்ள நேரிட்டது. அந்தக் குழந்தைக்கு விஜயரங்க சொக்கநாதர் என்று பெயர் வைத்து, தானே அந்தக் குழந்தையின் சார்பாக பொயு 1689ம் ஆண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தார் ராணி மங்கம்மாள்.

மதுரையை வரலாற்றுக் காலத்தில் ஆட்சி செய்த முதல் பெண்மணி என்று மங்கம்மாளைக் கூறலாம். அவரது ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் அவர் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது. தென்னகத்தைத் தூண் போலக் காத்துக்கொண்டிருந்த மராட்டிய மாமன்னர் சிவாஜி மறையவே, மீண்டும் முகலாயர் படைகள் தென்னகத்தை நோக்கிப் படையெடுத்தன. இதைத் தவிர தஞ்சை மராட்டியர்கள் வேறு மதுரைக்குச் சொந்தமான பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர். ராமநாதபுரத்திலிருந்து கிழவன் சேதுபதி தன்னுடைய தன்னாட்சி முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். இப்படிப் பல முனைகளிலும் இருந்த வந்த ஆபத்துகளை மங்கம்மாள் சமாளிக்க வேண்டியிருந்தது. பலரோடு ஒரே நேரத்தில் போர் செய்வது மதுரை நாயக்க வம்சத்திற்கு முடிவு கட்டிவிடும் என்பதை உணர்ந்த மங்கம்மாள், முதலில் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி மதுரை அரசை நிலைபெறச் செய்யும் முயற்சிகளில் இறங்கினார். தென்னாடு நோக்கி வந்த ஔரங்கசீப்பின் படைகளோடு அவர் சமாதானப் பேச்சு வார்த்தையில் இறங்கினார்.

முகலாயப் படைத்தலைவன் சுல்பிர்கான் படையெடுத்த போது, அவனுக்கு பல பரிசுகளைக் கொடுத்த மங்கம்மாள் அவனுடைய உதவியால் தஞ்சை மன்னர்கள் மதுரையிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை மீட்டுக்கொண்டார். போலவே முகலாயர் படைத்தலைவனான டாட்கான் என்பவனுக்குக் கடிதம் எழுதி அதனோடு 20000 ரூபாய் வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக அனுப்பி உடையார்பாளையம் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரை நாயக்கர்களுக்குச் சொந்தமான பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார் மங்கம்மாள். இருப்பினும் அவருக்கு முகலாயர்கள் முற்றிலும் உதவி செய்யவில்லை. அடிக்கடி படையெடுத்த தஞ்சை மராட்டியப் படைகளுக்குப் பணம் கொடுத்து மங்கம்மாள் நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

இது ஒருபுறமிருக்க மதுரை அரசு மீது தொடர்ந்து கண் வைத்திருந்த மைசூர் அரசனான சிக்க தேவராயன், மீண்டும் படையெடுத்து சேலம், கோவை ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அவனுடைய படைகள் குமரய்யாவின் தலைமையில் திருச்சி நோக்கி முன்னேறின. ஆனால் அதே சமயத்தில் மராட்டியப் படைகள் மைசூரைத் தாக்கின. அதன்காரணமாக மைசூர்ப் படைகள் பின்வாங்க நேரிட்டது. இதனால் மதுரை அரசுக்கு வந்த பெரும் அபாயம் நீங்கியது.

அடுத்ததாக அதுவரை மதுரை நாயக்கர் அரசுக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வந்த திருவாங்கூர் அரசு போர்க்கொடி தூக்கியது. ஏற்கனவே திருமலை நாயக்கர் காலத்தில் இதே போன்று கிளர்ச்சி செய்து அவருடைய படைகளினால் திருவாங்கூர் அரசு தோல்வியடைந்திருந்தது. ஆனால் மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், திருவாங்கூர் அரசனான ரவிவர்மன், ஒரு பெண் தானே மதுரையை ஆட்சி செய்கிறாள் என்ற நினைப்பில் போராட்டத்தில் இறங்கினான். மதுரைக்குக் கப்பம் கட்டுவதையும் நிறுத்த முடிவு செய்தான். இதற்கிடையில் அவனுடைய அமைச்சர்களான எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் ரவிவர்மனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அவர்களை சமாளிக்க முடியாமல் அரசன் திணறிக்கொண்டிருந்தான்.

1696ம் ஆண்டு மதுரைப் படை கப்பம் வசூலிக்க திருவாங்கூர் சென்ற போது, ரவிவர்மன் ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி மதுரைப் படைகளிடம் கற்குளம் என்ற இடத்திலுள்ள கோட்டையை ஒப்படைத்தான். தனக்குப் பிரச்சனை தரும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை ஒழித்துவிட்டால், அவர்களுக்குத் திருவாங்கூர் அரசின் பாதியைத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டான். அதை நம்பிய மதுரைப் படைகள் எட்டு வீட்டுப் பிள்ளைமாரிடம் மோதி அவர்களைக் கொன்றன. ஆனால் அதன்பின் தான் செய்த ஒப்பந்தத்தை மீறிய ரவிவர்மன், தன்னுடைய படையோடு கற்குளம் கோட்டையை முற்றுகையிட்டான். இதை எதிர்பாராத மதுரைப் படைகள் நிலைகுலைந்து தப்பி ஓடிவிட்டன. மதுரைக்குத் திரும்பி வந்த மதுரைப் படைத்தலைவன் நடந்த நிகழ்ச்சிகளை மங்கம்மாளிடம் கூறினான். இதனால் வெகுண்ட மங்கம்மாள், தன்னுடைய தளவாயும் பெரும் வீரருமான நரசப்பையாவின் தலைமையில் ஒரு படையைத் திருவிதாங்கூருக்கு அனுப்பினார். நரசப்பையாவின் படை பெரு வெற்றியடைந்தது. அதன்பின் திருவாங்கூர் அரசன் கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டான்.

(தொடரும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *