Skip to content
Home » மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

தன்னை வளர்த்த ராணி மங்கம்மாளையே சிறையில் அடைத்தார் என்று ஒரு சிலர் கூறினாலும் அம்மாதிரிக் குற்றம் எதையும் செய்யாமல், மங்கமாளின் மறைவுக்குப் பிறகு பொயு 1706ம் ஆண்டு அரியணை ஏறினார் விஜயரங்க சொக்கநாதர். ஆனால் அவரிடம் ஆட்சித் திறம் இல்லையென்பது விரைவிலேயே வெளிப்பட்டது. நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல் வெறும் பயணம் செய்தே பொழுதைக் கழித்தார் விஜயரங்கர். நாட்டைக் கவனிக்காமல் அரசர் அலைந்துகொண்டிருந்தது மந்திரி, பிரதானிகளுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல பலரும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும் பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் மக்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து கொடுங்கோல் ஆட்சி செய்தனர். முன்பு ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் இறையிலியாக கோவில் பணியாளர்களுக்குக் கொடுத்திருந்த நிலங்களுக்கு எல்லாம் அதிக வரி போட்டு வசூலித்தனர் இருவரும். 1710ம் ஆண்டில் உள்ள கல்வெட்டு ஒன்று கோவில் பணியாளர் ஒருவர் இந்த வரிச்சுமையைத் தாங்க முடியாமல் கோவில் கோபுரத்திலிருந்து தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிடுகிறது.

ஆனால் அரசரோ தன்னுடைய முன்னோரான திருமலை நாயக்கர் போலச் செயல்படவேண்டும் என்ற ஆசையில் பல்வேறு கோவில்களின் நிர்வாகங்களைக் கவனிக்க ஆரம்பித்தார். அதன் காரணமாக அடிக்கடி தீர்த்த யாத்திரை செய்யவும் தலைப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஶ்ரீரங்கம், திருவானைக்காவல், மதுரை, திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, ஶ்ரீவைகுண்டம் போன்ற தலங்களுக்கு நீண்ட யாத்திரை செய்து அங்குள்ள கோவில்களுக்கு நிவந்தங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் விஜயரங்க சொக்கநாதர். இதனால் நிராசையடைந்த மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மதுரை அரசு நிலைகுலைந்து வருவதை அறிந்த மைசூர் அரசன் மீண்டும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து கோவை, சேலம் ஆகிய பகுதிகளை வென்று மைசூர் அரசோடு சேர்த்துக்கொண்டான். அவை நிரந்தரமாக மதுரை நாயக்கர் அரசை விட்டுச் சென்றுவிட்டன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத விஜயரங்க சொக்கநாதர் நிர்வாகத்தை தனது அதிகாரிகளிடமே விட்டுவிட்டார். ஒரு கட்டத்தில் மக்களின் கொந்தளிப்பைப் பொறுக்க முடியாமல் தளவாயும் பிரதானியும் வரிகளைக் குறைக்க ஆரம்பித்தனர். இருந்தாலும் விஜயரங்கர் மீதான மக்களின் வெறுப்புக் குறையவில்லை. நரவப்பையா, வேங்கடராகவாச்சார்யா போன்ற அமைச்சர்கள் அரசின் கஜானாவை வகை தொகையின்றிக் கொள்ளையடித்தனர். தவிர விஜயரங்கர் கொடுத்த நன்கொடைப் பொருட்களும் கோவில்களிலிருந்து திருடப்பட்டன. இதுபற்றிப் புகார்கள் வந்தபோதும் அதுபற்றிக் கவலைப் படாமல் மேலும் பல கொடைகளைக் கொடுத்தார் விஜயரங்கர். மதுரைக் கோவிலுக்கு அவர் ஆற்றிய திருப்பணிகளைப் பற்றி திருப்பணி மாலை இப்படிப் பட்டியலிடுகிறது.

தென்னவன் மகிழ்அங் கயற்கண்ணி கோயில்
திருப்பள்ளி யறையின் முன்பு.
சிங்கார அறைகட்டி அபிடேக மாதிச்
சிறப்புகள் விழாப்பூசையும்
எந்நாளும் நடக்கவில் லாபுரக் கோயில்
எழில் மண்டபமும்.
இதமாக வேகட்டி மதுரேசர் அம்மையுடன்
இனிதாய் எழுந்தருளியே
வன்னஅபி டேகவகை பாவாடை வரிசையும்
வளமையொடு கொண்டருளவே
வாகான செந்நெல்வகை வில்லா புரத்தையும்
மாதர்முத் தம்மைபேரால்
நன்னயத் தொடுதலத் தார்கள்பா ரிசமாக
நண்பினுட னேஉதவினான்
ரங்கக்ருட்டினமுத்து வீரனருள் விசயரங்
கச்சொக்க நாதேந்த்ரனே.

மீனாட்சி அம்மனின் பள்ளியறையின் முன்பு அறை ஒன்றைக் கட்டினார். வில்லாபுரத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டி சுந்தரேஸ்வரரையும் மீனாட்சியையும் அங்கே எழுந்தருளச் செய்து அவர்களுக்கு சிறப்புப் பூஜைகளையும் அபிஷேகங்களையும் செய்தார் என்கிறது இந்தப் பாடல்.

வீரமும் விவேகமும் மிக்க மதுரை நாயக்கர்களின் வரிசையில் வந்தாலும் அரசைப் பாழடித்தவராகவே விஜயரங்க சொக்கநாதர் அறியப்படுகிறார். அவருக்கு உரிய வயதில் மீனாட்சி என்பவரை அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். ஆயினும் அவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல், தனது அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்தினார் விஜயரங்கர். இப்படி இருபத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு விரோதிகிருது வருடம் மாசி மாதம் (பிப்ரவரி 3, 1732) இறைவனடி சேர்ந்தார் அவர். இந்தத் தகவலை ம்ருத்யுஞ்சய ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன. மதுரைத் தலவரலாறு சிவராத்திரி அன்று அவர் மறைந்ததாகக் குறிப்பிடுகிறது. நாயக்க அரசில் மிக மோசமான ஆட்சியைத் தந்தவராகவே விஜயரங்க சொக்கநாதர் அறியப்படுகிறார்.

ராணி மீனாட்சி (படம் நன்றி : ராஜபேரிகை புதினம்)

விஜயரங்க சொக்கநாதர் மறைந்ததும், ராணி மங்கம்மாளைப் போன்று தானும் புகழ்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டு அரியணை ஏறினார் விஜயரங்கரின் மனைவியான ராணி மீனாட்சி. ஆனால் மங்கம்மாளைப் போல புத்திசாதுரியமும் திறமையும் இல்லாததால் பெரும் சிக்கல்களை அவர் சந்தித்தார். அவருக்கு வாரிசு எதுவும் இல்லாததால், திருமலை நாயக்கரின் சகோதரரான குமாரமுத்துவின் வம்சத்தில் வந்த பங்காரு திருமலையின் மகனான விஜயகுமாரனை அவர் சுவீகாரம் செய்துகொண்டார். ஆனாலும் பங்காரு திருமலைக்குத் தானே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதற்கான சதி வேலைகளில் இறங்கினார் பங்காரு. அப்போது அரசின் தளவாயாக இருந்த வேங்கடாச்சார்யாவுடன் சேர்ந்து திருச்சிக்கோட்டைக்குள் நுழைந்து அரசைக் கைப்பற்ற முயன்றார் அவர். ஆனால் மக்களின் அனுதாபம் அரசியின் பக்கம் இருந்ததால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. பிரச்சனைகள் அதிகமாவதை அறிந்த மீனாட்சி தனது சகோதரனான வேங்கடப் பெருமாள் நாயக்கரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டார்.

இதற்கிடையில் ஆற்காட்டின் நவாப்பாக தோஸ்த் அலிகான் பொறுப்பேற்றார். தமிழகம் முழுவதையும் ஆள்வதற்கு ஆசைப்பட்ட அவர் தன் மகன் சப்தர் அலி, மருமகன் சந்தா சாகிப் ஆகியோரின் தலைமையில் ஒரு படையை தெற்கே அனுப்பினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்த பங்காரு திருமலை, சந்தா சாகிப்பைச் சந்தித்தார். அவரிடம் முப்பது லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து மீனாட்சியை அரியணையிலிருந்து அகற்றி மதுரை அரசை தமக்குக் கொடுத்துவிடும்படி கோரிக்கை விடுத்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த சப்தர் அலியும் சந்தா சாகிப்பும் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆனால் வலுவான திருச்சிக் கோட்டையை அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. பொறுமையிழந்த சப்தர் அலி, தாம் இரு தரப்புக்கும் சமாதானம் செய்துவைப்பதாகக் கூறி மீனாட்சிக்கும் பங்காரு திருமலைக்கும் அழைப்பு விடுத்தான். இந்த அழைப்பை ஏதோ காரணம் சொல்லித் தட்டிக் கழித்துவிட்டார் மீனாட்சி. அழைப்பை ஏற்று பங்காரு திருமலை மட்டுமே சப்தர் அலியைச் சந்திக்கச் சென்றார். பெயருக்கு விசாரணை ஒன்றைச் செய்துவிட்டு, மதுரை நாயக்க அரசு பங்காரு திருமலைக்கே உரியது என்று ‘ தீர்ப்பளித்தான் சப்தர் அலி. அரசை முறைப்படி பங்காருவுக்கு அளிக்குமாறு சந்தா சாகிப்பிடம் சொல்லிவிட்டு ஆற்காட்டிற்குத் திரும்பினான் அவன்.

முற்றுகையை நீண்ட நாள் நீடிக்கவிடுவது ஆபத்து என்பதை உணர்ந்த மீனாட்சி பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். முதலில் பங்காரு திருமலையுடன் சமரசம் செய்து கொள்ள முயன்றார். அது சுமுகமாக முடியவே, விஜயகுமாரனையும் பங்காரு திருமலையையும் மதுரைக்கு அனுப்பி வைத்தார். அடுத்து சந்தா சாகிப்பிடம் ஒரு கோடி ரூபாய் தந்துவிடுவதாகவும் அதைப் பெற்றுக்கொண்டு ஆற்காடு திரும்பிவிடும்படியும் தூது ஒன்றை மீனாட்சி அனுப்பினார். பங்காருவுக்கும் மீனாட்சிக்கும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தெரிந்து கொண்ட சந்தா சாகிப், அது தொடர்ந்தால் அரசு தன் கையை விட்டுப் போய் விடும் என்று முடிவு செய்தான். அதனால், ஒரு கோடி ரூபாய் பணத்தைத் தான் திருச்சிக் கோட்டைக்கே வந்து பெற்றுக்கொள்வதாகச் செய்தி அனுப்பினான். அதைப் பெற்றுக் கொண்டு தாம் ஆற்காடு திரும்புவதாக உறுதியளித்தான்.

சந்தா சாகிப்பை முழுவதும் நம்பாத ராணி மீனாட்சி, உடன்படிக்கையின் படி நடந்து கொள்வதாக அவனைச் சத்தியம் செய்யச் சொன்னார். அதன்படி குரானின் மீது சத்தியம் செய்தான் சந்தா சாகிப். அதை நம்பி திருச்சிக் கோட்டைக்குள் சந்தா சாகிப்பை அனுமதித்தார் ராணி மீனாட்சி. கோட்டைக்குள் வந்தவுடன், மீனாட்சியைச் சிறை செய்த சந்தா சாகிப், அவரை தளவாய் மண்டபம் என்ற இடத்தில் அடைத்து வைத்தான். சந்தா சாகிப்பின் பொய்ச் சத்தியத்தாலும் துரோகத்தாலும் மீனாட்சி திகைத்து நின்றார். அவருடைய படைகளைக் கைப்பற்றிய சந்தா சாகிப் அடுத்ததாக பங்காரு திருமலையின் மீது கவனம் செலுத்தினான். பங்காரு திருமலை அப்போது திண்டுக்கல்லில் இருந்தார். எண்பதாயிரம் வீரர்கள் கொண்ட படையை திண்டுக்கல்லுக்கு அனுப்பினான் சந்தா சாகிப். அங்கே நடந்த போரில் பங்காரு திருமலை தோல்வியடைந்தார். அடுத்ததாக மதுரையை நோக்கிச் சென்றன சந்தா சாகிப்பின் படைகள். இதற்கிடையில் பாளையக்காரர்கள் பலரைச் சேர்த்துக் கொண்ட பங்காரு திருமலை, சந்தா சாகிப்பின் படைகளை அம்மையநாயக்கனூர் என்ற இடத்தில் சந்தித்துப் போரிட்டார். கடுமையான நடந்த போரில் பங்காருவுக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது. அங்கிருந்து தப்பி சிவகங்கை சேதுபதியிடம் சரணடைந்தார் பங்காரு. சேதுபதி அவரை வெள்ளிக்குறிச்சிக் கோட்டையில் தகுந்த பாதுகாப்புக் கொடுத்துக் காப்பாற்றினார்.

எதிர்ப்பு ஏதும் இல்லாமல் மதுரையைக் கைப்பற்றின சந்தா சாகிப்பின் படைகள். மதுரைக் கோவில் சூறையாடப்பட்டு பூஜைகள் நின்று போயின. நடந்ததைக் கேள்விப்பட்டு மனம் புழுங்கிய ராணி மீனாட்சி, சிறையிலேயே விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டார். சிலர் அவர் தீக்குளித்தார் என்றும் கூறுகின்றனர். இப்படியாக, விஸ்வநாத நாயக்கரால் தோற்றுவிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக திருமலை நாயக்கரால் ஆட்சி செய்யப்பட்டு உச்சத்தை அடைந்த மதுரை நாயக்கர் வம்சம் ராணி மீனாட்சியுடன் அழிந்து போனது.

தன்னுடைய சகோதரர்களான இருவரில் மதுரையை ஒருவருக்கும் திண்டுக்கல்லை மற்றொருவருக்கும் அளித்து அவர்களை ஆட்சி செய்யச் சொன்ன சந்தா சாகிப், தான் திருச்சியில் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்தத் தொடங்கினான். தஞ்சை மராட்டியர்கள் மீதும் படையெடுத்து அவர்களையும் வென்றான். அதனால், தஞ்சை மராட்டிய மன்னனும் பங்காருவும் இணைந்து, சதாராவுக்குத் தூது அனுப்பினர். அங்கிருந்த மராட்டியப் படைகளின் உதவியால் மதுரையைக் கைப்பற்ற இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி குத்தி நகரில் இருந்து முராரி ராவ் என்பவரின் தலைமையில் வந்த மராட்டியப் படை, ஆற்காட்டு நவாப் தோஸ்த் அலிகானைக் கொன்று விட்டு சதாரா திரும்பியது. அடுத்ததாக சப்தர் அலி தன்னை ஆற்காட்டு நவாப்பாக அறிவித்துக்கொண்டான். அவனுக்குத் துணையாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு நவாப் பதவியைப் பறிக்க முயன்றான் சந்தா சாகிப். இதற்கிடையில் மீண்டும் முராரி ராவ் தமிழகத்திற்குப் படையோடு வந்து சந்தா சாகிப்பின் சகோதரர்களைக் கொன்று விட்டு சந்தா சாகிப்பை சிறைப்பிடித்துச் சென்றார். அதற்குப் பிறகு முராரி ராவ், தாமே மதுரையின் தலைவனாகப் பிரகடனம் செய்துகொண்டார். அடுத்ததாக, ஆற்காட்டு நவாப்பாக இருந்த சப்தர் அலி கொல்லப்பட்டு அன்வருத்தீன் என்பவன் நவாபாக பொறுப்பேற்றான். அவன் பங்காரு திருமலையை அழைத்து விஷம் வைத்துக் கொன்றுவிட்டான்.

தந்தை இறந்ததை அறிந்த விஜயகுமாரன் தப்பியோடித் தலைமறைவாக வாழ்க்கை நடத்த நேரிட்டது. பிற்காலத்தில் மருது சகோதரர்கள்,விஜயகுமாரனை மதுரை நாயக்கராக அறிவிக்குமாறு பிரிட்டிஷ் அரசை அறிவுறுத்தினர். தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நிபந்தனையையும் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

பெரும் புகழோடு மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களின் அரச பரம்பரை தமிழக வரலாற்றிலிருந்து மறைந்தாலும் அவர்கள் எழுப்பிய விண்ணளாவிய கோபுரங்களும், செய்த கோவில் திருப்பணிகளும், நடத்திய திருவிழாக்களும் அவர்கள் புகழை என்றும் தமிழகத்தில் சொல்லிக்கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(முற்றும்)

பகிர:
எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *