மார்ச் 26, 1977 அன்று இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மது தண்டவதே. பதவியேற்றுக் கொண்ட மூன்றாவது நாளிலேயே இரயில்வே அமைச்சகத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார் (31.03.2017 வரை இரயில்வே அமைச்சகத்திற்கென்று தனி பட்ஜெட் இருந்தது. இரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்து வந்தார். 2017-18 நிதியாண்டு முதல் இந்த நடைமுறை நீக்கப்பட்டது. நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டோடு இரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டது). இரயில்வே வாரியம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்ஜெட் உரையை அப்படியே படித்திட அவர் விரும்பவில்லை. இரயில்வே அமைச்சகத்தின் நிர்வாகம், நிதிநிலை, செயல்பாடு ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை இரண்டு நாட்களில் படித்துப் புரிந்துகொண்டார். இடைக்கால பட்ஜெட் உரையைத் தானே தயாரித்துக் கொண்டு பேசினார்.
முந்தைய இந்திரா காந்தி ஆட்சியின்போது 1974இல், இரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய அளவில் மிகப்பெரும் வேலைநிறுத்தம் செய்திருந்தனர். வேலைநிறுத்தத்தை ஒடுக்கிடப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 50,000 தொழிலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். முந்தைய அரசின் இந்தப் பதவி நீக்க உத்தரவை ஜனதா அரசு திரும்பப் பெறுவதாகத் தன்னுடைய இடைக்கால பட்ஜெட்டின் முதல் அம்சமாக மது தண்டவதே அறிவித்தார். இந்த முடிவிற்கு இரயில்வே அதிகாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முடிவின் விளைவால் இரயில்வே துறையில் ஒழுங்கீனம் அதிகமாகும் என்று அவர்கள் கருதினர். மது தண்டவதே இதனை மறுத்தார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்த்தால், பதிலுக்கு அவர்களிடமிருந்தும் அதேபோன்ற அணுகுமுறையை எதிர்பார்க்கலாம் என்று கூறினார். மது தண்டவதே அறிவித்தபடி, ஐம்பதாயிரம் தொழிலாளர்களின் பணிநீக்க ஆணை திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரயில்வே தொழிற்சங்கங்கள் இதனைப் பெரிதும் வரவேற்றன.
இரயில்வே தொழிலாளர்களின் பேரணி ஒன்றில் பேசிய மது தண்டவதே, ‘நான் ஐம்பதாயிரம் தொழிலாளர்களை மீண்டும் பணிக்குக் கொண்டு வந்துள்ளேன். இது ஒரு சாதாரணமான முடிவு அல்ல. இந்திய இரயில்வேயின் வரலாற்றில், இரயில்வே தொழிலாளர்களின் நலனில் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மகத்தான முடிவு. இதற்கு முன் இப்படியொரு முடிவு ஒருபோதும் எடுக்கப்பட்டதில்லை. எனவே, இந்த முடிவிற்கு ஈடான உங்கள் ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன். இரயில்வே துறைக்கு அதிக வருவாயை நாம் ஈட்ட வேண்டும். நான் உங்களுக்குச் சிறந்த வசதிகளையும் சிறந்த ஊதியங்களையும் வழங்குவேன். ஆனால் அதே நேரத்தில், ஈட்டப்படும் வருவாய் அனைத்தும் தொழிலாளர்களைத் திருப்திப்படுத்துவதற்கே செலவிடப்படும் என்று எதிர்பார்க்காதீர்கள். நமது நாட்டின் பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் தேவைப்படுகின்றன. இரயில்வே துறைக்கு நீங்கள் ஈட்டும் வருவாய், நமது சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பகிரப்பட வேண்டும். இரயில்வே துறைக்கு நீங்கள் ஈட்ட உதவும் வருவாயில், உங்களுக்கு நியாயமான பங்கு கிடைப்பதை நான் உறுதி செய்வேன். இந்திய இரயில்வேயில் இதுவரையில் நிலவி வந்த வருவாய் பற்றாக்குறை எனும் கருப்புப் பாரம்பரியத்தை நாம் உடைப்போம்’ என்று கூறினார்.
பல ஆண்டுகளாகப் பற்றாக்குறை பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டிருந்த சூழலில், 1977-78ஆம் ஆண்டு இரயில்வே பட்ஜெட்டை உபரி பட்ஜெட்டாகத் தாக்கல் செய்தார் மது தண்டவதே. பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்தாமலேயே, சுமார் 85 கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டை அந்தாண்டு தாக்கல் செய்தார். மது தண்டவதே தாக்கல் செய்த உபரி பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. இரயில்வே துறையால் இந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இரயில்வே தொழிற்சங்கங்கள் அமைச்சருக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றின. ‘பணி நீக்கம் செய்யப்பட்ட ஐம்பதாயிரம் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்திய பெரிய முடிவை புதிய இரயில்வே அமைச்சர் எடுத்துள்ளார். எனவே, தற்போதைக்கு நாம் வேறு எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்க மாட்டோம். அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாம் கவனம் செலுத்துவோம்’ என்று அந்தத் தீர்மானம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. வேலைநிறுத்தத்தின்போது நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் முடிவு, இரயில்வே ஊழியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவு, இரயில்வேயின் செயல்திறனில் வெளிப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கடந்த இரயில்வே துறை, ரூபாய் 125 கோடி உபரியை அந்தாண்டில் ஈட்டியிருந்தது. 1853இல் நாட்டில் தொடங்கப்பட்ட இரயில்வே சேவைக்கு 1978ஆம் ஆண்டில் 125வது ஆண்டு நிறைவு. இதையும், இரயில்வே ஈட்டியிருந்த உபரித் தொகையையும் இணைத்துப் பேசினார் மது தண்டவதே. ‘என்னவொரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வு! இந்திய இரயில்வே தனது செயல்பாட்டில் 125 ஆண்டுகளை இந்தாண்டு நிறைவு செய்துள்ளது. இதே ஆண்டில் நாம் 125 கோடி ரூபாய் உபரியை ஈட்டியுள்ளோம். அதிர்ஷ்டவசமாக உங்கள் இரயில்வே அமைச்சருக்கு 125 வயதாகவில்லை. இல்லையெனில், இது 125 என்ற எண்ணின் மும்மடங்குக் கொண்டாட்டமாக இருந்திருக்கும்.’
ஒருமுறை, இரயில்வே துறையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுவதற்காக மது தண்டவதே ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தார். அங்கு இரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். வெவ்வேறு அரசியல் கட்சிகளின் சார்புநிலை கொண்ட தொழிற்சங்கங்கள் இரயில்வே துறையில் உண்டு. அவற்றுள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தின் வேலை இது. அவருடைய கார், கல்லூரியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, இந்தத் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் சாலையோரம் நின்றுகொண்டு, ‘மது தண்டவதே திரும்பிப் போ’ என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியில் தொடர்ந்து செல்ல வேண்டாமென்று காவல் வாகனத்தின் ஓட்டுநர் மது தண்டவதேவிடம் கூறினார். அதனை மது தண்டவதே மறுத்தார். ‘நான் மக்களின் பிரதிநிதி. மக்கள் இயக்கத்திலிருந்து வந்திருக்கிறேன். மக்களை எப்படி எதிர்கொள்ளாமல் இருக்க முடியும்? எனக்கு ஒரு படி கொண்டு வாருங்கள்!’ என்றார். படியில் ஏறி நின்றபடி, கோஷம் செய்பவர்களிடையே உரையாற்றினார். தான் இரயில்வே அமைச்சரான நாள் முதலாக, இரயில்வே ஊழியர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை விவரித்தார். போராட்டக்காரர்களின் மனம் மாறியது. அமைச்சரின் பேச்சுக்குக் கைதட்டத் தொடங்கினர். சற்று நேரத்தில் ‘மது தண்டவதே வாழ்க’ என்று முழங்கத் துவங்கினர். போராட்டக்காரர்களை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளிவதற்குப் பதிலாக, அவர்களிடம் நேரடியாகப் பேச மது தண்டவதே முன்வந்தது, அவர்களின் கண்ணோட்டங்களை மாற்ற உதவியது.
இரண்டு அங்குலப் பஞ்சு
2005ஆம் ஆண்டு காலமான மது தண்டவதேவைக் குறித்த நினைவுகளைத் தன் கட்டுரை ஒன்றில் அசைபோட்ட வரலாற்று ஆய்வாளர் இராமசந்திர குஹா, மது தண்டவதேயின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு என்று குறிப்பிட்டதுதான் இக்கட்டுரையின் தலைப்பு – ‘Two Inches of Foam!’. மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் இரயில்வே துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற மது தண்டவதே கொண்டு வந்திருந்த முக்கியமான சீர்திருத்தங்களுள் ஒன்று- அதுவரையில் இரயில் வண்டிகளில் மரக்கட்டைகளால் செய்யப்பட்டிருந்த இரண்டாம் வகுப்புச் சீட்டுகளை எல்லாம் மாற்றி, பஞ்சு வைத்த சீட்டுகளை வைக்குமாறு இடப்பட்ட உத்தரவு. மது தண்டவதே செயல்படுத்திய இம்முடிவு, பல கோடி சாமானிய மக்களின் இரயில் பயணங்களைச் சற்றேனும் இனிமையாக மாற்றியது. இரயில் பயணிகளுக்கு மலிவான விலையில் ‘ஜனதா சாப்பாடு’ தருகின்ற திட்டத்தையும் மது தண்டவதே கொண்டுவந்தார். பயணிகளின் இருக்கை முன்பதிவுகளைக் கணினிமயமாக்க அடித்தளம் இட்டவரும் இவரே. கொங்கன் இரயில்வே திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தவரும் இவரே.
இரயில்வே அமைச்சராக அவருடைய செயல்பாடு எப்படியிருந்தது? மது தண்டவதே இரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தபோது அவரிடம் தனிச் செயலாளராக இருந்த உபேந்திரா, (பின்னாளில் இவர் தகவல் தொடர்புத்துறையின் காபினட் அமைச்சராகவும் பதவி வகித்தார்) கூறியது:
‘அனைத்து இரயில்வே மண்டலங்களையும் பார்வையிட்ட முதல் இரயில்வே அமைச்சர் அநேகமாக மது தண்டவதே அவர்கள்தான். சராசரியாக, அவர் மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து இடங்களை ஆய்வு செய்வதற்காகச் சென்றிருக்கிறார். மிகுந்த மரியாதையும், பரிவும் கொண்ட மது தண்டவதே, தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கினார்; ஆனால், தேவையான நேரங்களில் உறுதியுடன் செயல்படுவதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. எடுத்துக்காட்டாக, தன்னுடைய உத்தரவைத் தொடர்ந்து மீறிச் செயல்பட்ட இரயில்வே வாரியத் தலைவரை அப்பதவியிலிருந்து விலக்கினார் மது தண்டவதே.’
ஒருமுறை, நிறைய எண்ணிக்கையிலான தனிப்பட்ட கடிதங்களை மது தண்டவதே அனுப்பும்படி நேர்ந்தது. தனிப்பட்ட கடிதங்களில் அலுவல் தபால் முத்திரையை ஒட்டவேண்டாமென்று மது தண்டவதே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தும், இரயில்வே குமாஸ்தாக்கள் அனைத்துக் கடிதங்களிலும் அலுவல் முத்திரையை இட்டு அனுப்பிவிட்டனர். இதனால், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதுகுறித்து ஒரு புகாரளிக்கவே, மது தண்டவதே மிகவும் வேதனை அடைந்தார். இத்தனைக்கும் அக்கடிதங்களில் செலவிடப்பட்ட அரசு முத்திரைகளின் விலை 80 ரூபாய் மட்டுமே. இத்தொகை இரயில்வே கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, அதற்குரிய இரசீதுகள் தனக்குக் காண்பிக்கப்படும் வரையில், உணவைத் தவிர்த்தார் மது தண்டவதே.
இரயில்வே துறை அமைச்சராக மது தண்டவதேயால் இரண்டாண்டுகள் மட்டுமே பணியாற்ற முடிந்தது. ஜனதா கட்சியின் ஆட்சி 1979இல் கவிழ்ந்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உத்தரவு வந்த அன்றே, தனக்கு அளிக்கப்பட்ட அலுவலகக் காரைப் பயன்படுத்தாமல் ஓர் ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றார் மது தண்டவதே. தான் அமைச்சராக இருந்தபோது ஒருமுறைகூட அலுவலகக் காரைத் தன் சொந்த உபயோகத்திற்கு அவர் பயன்படுத்தியதில்லை. அமைச்சரின் மனைவியாக இருந்தபோதும் எங்கு சென்றாலும் ஆட்டோவிலேயே சென்றார் பிரமிளா தண்டவதே. அவர்களின் மகனான உதய் தண்டவதே, சைக்கிளில் பயணித்தார்.
கதம்ப மாலை
1977 முதல் 1979 வரை ஆட்சி செய்த ஜனதா கட்சி, ஒரு கதம்ப மாலை. வலதுசாரிகளான ஜன சங்கத்தினரும் அக்கட்சியில் அங்கம் வகித்தனர்; இந்திரா காந்தியின் தலைமையை ஏற்காத பழைய காங்கிரஸ்காரர்களும் அக்கட்சியில் சேர்ந்தனர்; சோஷலிஸ்டுகளும் அக்கட்சியில் பங்குபெற்றனர். இந்திரா காந்திக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெறவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன், இந்திரா காந்தியின் எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து உருவாக்கப்பட்ட இக்கட்சி, ஆட்சிக்கு வந்ததும் பல சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியது.
ஜனதா கட்சியின் பல்வேறு தலைவர்களும் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்பட்டனர். மொரார்ஜிக்கு எதிராக சரண்சிங் வேலை பார்த்தார். நாடாளுமன்றத்தில் மொரார்ஜி அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரித்து மிக அருமையாக உரையாற்றிப் பாராட்டுகளைப் பெற்ற ஜார்ஜ் பெர்னான்டஸ், அவ்வாறு பேசிய மறுநாளே சரண்சிங் கோஷ்டிக்குத் தாவினார். சமயம் பார்த்து மொரார்ஜி அரசாங்கத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர, மொரார்ஜியின் ஆட்சி கவிழ்ந்தது. ஜனதா பாராளுமன்றக் கட்சியின் தலைவராக ஆனார் பாபு ஜெகஜீவன்ராம். அவருக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது என்ற செய்தி இராஷ்டிரபதி பவனுக்கு வந்து சேர்ந்தது. இடையில், ஆட்சியமைக்க சரண்சிங் உரிமை கோரினார். ஜெகஜீவன்ராம் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றாரா என்பதைச் சரிபார்க்காமல், சரண்சிங்கை அரசு அமைக்க அழைப்பு விடுத்தார் குடியரசுத்தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.
காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.எம்.ஜோஷி என்பவருக்குக் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது. எதற்கு? அவருடைய நண்பரான மது தண்டவதேவை எப்படியாவது மனம்மாற்றி, மொரார்ஜி அணியிலிருந்து பிரித்து, சரண்சிங் அமைச்சரவையில் இணைந்துகொள்ளச் சொல்லுமாறு வற்புறுத்தவே. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு நடக்கவேண்டிய குடியரசுத்தலைவர் இவ்வாறு கோஷ்டிக்கு ஆள் சேர்க்கும் அளவுக்கு இறங்கினார். குடியரசுத்தலைவரின் இந்த எண்ணத்திற்கு மறுப்பு தெரிவித்த எஸ்.எம்.ஜோஷி, மது தண்டவதே இதற்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாரென்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை எஸ்.எம்.ஜோஷி அவரது சுயசரிதையில் பதிவிட்டுள்ளதை மது தண்டவதே தன்னுடைய ‘Dialogue with life’ என்னும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். தன்னைப் பற்றி இவ்வாறு குடியரசுத் தலைவரிடம் எஸ்.எம்.ஜோஷி கூறியதைவிடத் தனக்கு மேலான பெருமை வேறெதுவும் இல்லையென்று மது தண்டவதே பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தன் தரப்புக்குப் பெரும்பான்மை இல்லாத சூழலிலும், காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்து விடலாம் என்றெண்ணியே சரண்சிங் ஆட்சி அமைத்தார்; காங்கிரசின் ஆதரவைக் கோரி இந்திரா காந்திக்குக் கடிதம் வேறு எழுதினார். இந்தக் கேலிக்கூத்தை மக்கள் பார்த்து முகம்சுளிக்க, ஜனதா கட்சியினரின் ஒற்றுமையின்மையை, பதவி ஆசையை முற்றும் புரிந்துகொண்ட இந்திரா காந்தியோ சரண் சிங் ஆட்சிக்கு ஆதரவு தராமல் காலை வாரிவிட, நாடாளுமன்றத்தை எதிர்கொள்ளாமலேயே பிரதமர் பதவியைத் துறந்தார் சரண்சிங்.
மக்களவைத் தேர்தல் வந்தது. ஜனதா கட்சியின் ஆட்சியைவிட இந்திரா காந்தியின் ஆட்சியே மேல் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தனர் மக்கள். மேலும், இந்திரா காந்தியைப் பழிவாங்க ஜனதா கட்சியினர் செய்த செயல்கள் யாவும் இந்திரா காந்தியின் மீது அனுதாபத்தைத் தோற்றுவித்திருந்தன. முழுதாக ஐந்தாண்டுகளைத் தாண்டமுடியாமல் தடுக்கிவிழுந்த ஜனதா கட்சியைப் பொதுமக்கள் 1980 தேர்தலில் புறக்கணித்தனர். ஜனதா கட்சியினர் மீதான வெறுப்பு அலை வீசிய அத்தேர்தலிலும், ஜனதா கட்சியின் மது தண்டவதே வெற்றிபெற்றார். அதுவும் எவ்வாறு? மொத்தம் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 74% வாக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அத்தேர்தலில் அதிக சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்திரா காந்தி ஆட்சியமைக்க, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார் மது தண்டவதே.
(தொடரும்)

