சென்னையைச் சேர்ந்த ‘கணித அறிவியல் கழகம்’ (Institute of Mathematical Sciences), ஒவ்வோர் ஆண்டும் Science at the Sabha என்ற நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாடெமியில் நடத்திவருகிறது. தமிழில் மோனை வேண்டி, இதனை ‘அகாடெமியில் அறிவியல்’ என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஓரிரு முறை ஊரில் இல்லாத ஆண்டுகளைத் தவிர்த்து, பிற அனைத்து நிகழ்வுகளுக்கும் போயிருக்கிறேன். கடைசியாக, 29 மார்ச் 2026, ஞாயிறு அன்றும் சென்றேன்.
கணித அறிவியல் கழகத்தின் ஆதார விதை, மைலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் அல்லாடி ராமகிருஷ்ணாவின் ஏகாம்ர நிவாஸ் வீட்டில் போடப்பட்டது. அல்லாடி ராமகிருஷ்ணா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றபின், இந்தியா வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக ஆனார். பிரின்ஸ்டனில் நடப்பதுபோல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் உலகின் முக்கியமான இயற்பியல் ஆராய்ச்சியாளர்களை அழைத்துவந்து மாணவர்களுடன் உரையாடவைக்க விரும்பினார்.

ஆனால் பல்கலைக்கழகத்தில் அதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியவில்லை. மனம் தளராமல், தன் வீட்டிலேயே இதனைச் செய்யத் தொடங்கினார். நீல்ஸ் போர், அப்துஸ் சலாம் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் ஏகாம்ர நிவாஸில் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த விஷயம் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குத் தெரிய வர, அவருடைய உதவியினால் சென்னையில் 1962-ல் உருவானதுதான் The Institute of Mathematical Sciences. அதன் முதல் நாளிலிருந்து 2008-ல் அவர் இறக்கும்வரை அல்லாடி ராமகிருஷ்ணா இந்த அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றினார்.
இன்றுவரையில் உலக அளவில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் மிக முக்கியமான ஆராய்ச்சி நிறுவனமாக இந்த அமைப்பு விளங்கிவருகிறது.

உயர்கல்வித் துறைக்குள்ளாக மட்டுமே இருக்கும் முன்னோடி அறிவியல் கருத்துகளைச் சாதாரண மக்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டும் என்று உருவானதே ‘சயன்ஸ் அட் தி சபா’.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில் நான்கு ஆராய்ச்சியாளர்கள் தத்தம் துறையை அறிமுகப்படுத்திப் பேசினர்.
0
தேவரதி சாட்டர்ஜி, பூனா நகரில் உள்ள Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA) எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஈர்ப்பலைகள் (Gravitational Waves) குறித்துப் பேசினார்.

நியூட்டன் ஈர்ப்பு விசை குறித்துக் கொடுத்திருந்த சித்திரத்தை ஐன்ஸ்டைன் மாற்றியமைத்தார். இந்தப் பிரபஞ்சத்தை காலவெளி (Time-Space) ஜமக்காளத்தால் ஆனதாக உருவகித்துக்கொள்ளுங்கள். பெருத்த நிறை கொண்ட பொருள்கள் இந்தக் காலவெளி ஜமக்காளத்தைத் தம் நிறைக்கேற்பத் தொய்ய வைக்கும். இவ்வாறு தொய்ந்து வளைந்திருக்கும் காலவெளி ஜமக்காளத்தில் பயணம் செய்யும் பொருள்கள், வளைவுகளுக்கு ஏற்ப ஈர்ப்பு விசையை உணரும். இதுதான் ஐன்ஸ்டைன் உருவாக்கிய பொதுச் சார்பியல் கொள்கை.
தஜமக்காளத்தைச் சுருட்டி மடிப்பதற்குமுன், அதனை ஒருமுனையில் ஓர் உதறு உதறினால் என்ன ஆகும்? சின்ன அலைபோல ஒன்று ஜமக்காளத்தில் படருமல்லவா? அதேபோலத்தான் காலவெளி ஜமக்காளமும். இரண்டு பெருநிறைப் பொருள்கள் ஒன்றோடொன்று மோதி ஒன்றானால் அந்த இடத்தில் ஏற்படும் மாற்றம் காலவெளியில் அசைவுகளை ஏற்படுத்தும். இந்த அசைவு அலைகள்தான் ஈர்ப்பலைகள்.
இவ்வாறான ஈர்ப்பலைகள் இருக்கின்றன என்பதை ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கொள்கை உணர்த்தினாலும் இவற்றைத் தேடக்கூடி கருவிகளை உருவாக்கக்கூடிய நுட்பம் நம்மிடையே இல்லாமல் இருந்தது. அமெரிக்காவில் 1990களில் லிகோ (Laser Interferometry Gravitational-Wave Observatory – LIGO) என்னும் ஈர்ப்பலையை உணரக்கூடிய நிலையம் அமைக்கப்பட்டது. 2000ங்களில் தொடக்கத்தில் இது பயன்பாட்டுக்கு வந்தது. காலவெளியில் ஏற்படும் சிற்சிறு மாற்றங்களை இதன்பின்னர்தான் உணரவும் அளவிடவும் முடிந்தது. இரண்டு கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகளை 2015ல் இந்த நிலையம் உணர்ந்தது. இதனால் லிகோவை உருவாக்கிய ரைனர் வெய்ஸ், கிப் தார்ன், பேரி பாரிஷ் ஆகியோருக்கு 2017ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது.
அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியில் ஒரு லிகோ அமைக்கப்பட்டது. ஜப்பானில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, தற்போது இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் லிகோ ஒன்று அமைக்கப்பட உள்ளது. தேவரதி சாட்டர்ஜி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.


கருந்துளைகள் மட்டுமின்றி, நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போதும் ஈர்ப்பலைகள் ஏற்படுகின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகளை அமெரிக்கா, இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் உள்ள லிகோ நிலையங்கள் 2017ல் உணர்ந்து அளவிட்டன. இந்த மோதலைப் பிற தொலைநோக்கிகள் (கண்ணுக்குத் தெரியும் ஒளி, காமா கதிர்கள்) மூலமாகவும் பார்க்கமுடிந்தது. அளக்க முடிந்தது.
தேவரதி சாட்டர்ஜி, இவற்றைப் பலவாறாகத் தொகுத்து அழகாக விளக்கிச் சென்றார். கூடவே இந்த அலைகளை ஓசையாக மாற்றினால் அது எப்படி ஒலிக்கும் என்பதைத் தன் பேச்சின் பொருண்மையாக இவர் எடுத்துக்கொண்டிருந்தார். பல்சார் எனும் வகை நியூட்ரான் நட்சத்திரங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வலுவான ஒளியை உமிழும். இதனை ஒலியாக மாற்றினால், இது டப்-டப்-டப்-டப் என்று இதயம் சீராக அடிப்பதுபோல் இருக்கும். அதேபோல இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதும்போது உருவாகும் ஈர்ப்பலைகளை ஒலியாக மாற்றினால் எப்படி ஒலிக்கும் என்றும் காட்டினார்.
இயற்பியலில் ஆர்வம்கொண்ட மாணவர்கள், ஹிங்கோலியில் எப்போது லிகோ அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடங்கும் என்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
0
மனிதர்களுக்கு மன அழுத்தம் இருப்பதுபோல் விலங்குகளுக்கும் உண்டா? அனைத்து மனிதர்களுக்கும் ஒரேபோன்ற பிரச்னைகள் வரும்போது ஒரேபோன்ற மன அழுத்தம் ஏற்படுகிறதா? மன அழுத்தம் ஏற்படுவது சூழலாலா அல்லது மரபணுக் காரணங்களாலா?
இந்தக் கேள்விகளை முன்வைத்து அம்ருதா சுவாமிநாதன் அருமையான ஓர் உரையை நிகழ்த்தினார். திருவனந்தபுரத்தின் Indian Institute of Science Education and Research (IISER) கல்வி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

மனிதர்களை வைத்து இந்தமாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்வது எளிதல்ல. தார்மீகக் காரணங்களுக்காகவும் இதனைச் செய்ய அனுமதி கிடைக்காது. நன்னீரில் வாழும் வரிமீன் (Zebra Fish) என்பதை எடுத்துக்கொண்டு தன் ஆராய்ச்சிகளை இவரது குழுமம் செய்துள்ளது. இந்த மீனுக்கும் மனித இனத்துக்கும் சுமார் 80% பொதுவான மரபணுக்கள் உள்ளன. இரு உயிரினங்களுக்கும் அழுத்தம் ஏற்படும்போது கார்ட்டிசால் என்ற இயக்குநீர் சுரக்கிறது.
வரிமீன், முட்டையிலிருந்து லார்வா ஆகி, அடுத்து முழுமையான மீனாகிறது. இந்த லார்வா வடிவத்திலிருந்தே தனித்தனியாக இந்த லார்வாக்களை நீர்தாங்கிகளில் வைத்து அழுத்தம் கொடுப்பதன்மூலம் அவை எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்க்கிறார்கள். ஒரு சின்னஞ்சிறு வரிமீன் லார்வாவுக்கு எப்படி அழுத்தம் தரமுடியும்? நன்னீர் மீன் என்பதால், நீரில் சிறிது உப்பு சேர்த்தாலேயே அவற்றின்மீதான அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும். இந்த அழுத்தம் காரணமாக, சில லார்வாக்கள் தாங்கள் இயல்பாக நீந்துவதை நிறுத்தி, நீர்தாங்கியின் அடிப்பாகத்திலேயே தங்கிவிடுகின்றன. ஆனால் சில லார்வாக்கள் இந்த அழுத்தத்துக்குக் கவலைப்படாமல் மேலும் கீழும் சுற்றிவருகின்றன.

இதே லார்வாக்கள் முழுமையான மீனாக ஆகும்போதும் இந்த நிலை தொடர்கிறது. மேலும் அழுத்தத்துக்கு உள்ளாகும் மீன்களை இனப்பெருக்கம் செய்யும்போது அவற்றின் வாரிசுகளும் பெரும்பாலும் இந்த அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. இதிலிருந்து மரபணுரீதியாகவே அழுத்தத்துக்கான எதிர்வினை நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஒவ்வொரு லார்வாவின் டி.என்.ஏவை டீகோட் செய்வதன்மூலம் அழுத்தத்துக்கு ஆட்படும் மீனின் மரபணுவுக்கும் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ளும் மீனின் மரபணுவுக்கும் உள்ள வித்தியாசங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
அழுத்தத்துக்கான எதிர்வினை நோய் எதிர்ப்பு மண்டலத்தோடு தொடர்புள்ளது என்பதை அம்ருதாவின் குழு கண்டறிந்துள்ளது.
அம்ருதா மிகத் தெளிவான கருதுகோளை முன்வைத்து, அதனைப் படிப்படியாக நகர்த்தி, பரிசோதனையை உருவாக்கிய விதத்தையும் அந்தப் பரிசோதனையின் முடிவுகளையும் அனைவரும் புரிந்துகொள்ள வைத்த பாங்கு சிறப்பானதாக இருந்தது.
0
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்று சொல்பவர்கள் இந்தப் பகுதியைக் கடந்துவிடவும். எனக்கு மிகவும் பிடித்த பகுதி இதுவாகத்தான் இருந்தது. இந்த உரையை நிகழ்த்திய விஷ்வநாத், இந்த நிகழ்ச்சியை நடத்தும் கணித அறிவியல் கழகத்திலேயே கணிதத்துறையில் ஆராய்ச்சி செய்பவர். “தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் எண்களின் ரகசியங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நேரடியாக இரண்டு கணிதச் சிக்கல்களைக் கதையாக அறிமுகப்படுத்தினார்.
முதலாவது, அடையாற்றில் படகு விடும் சிக்கல். அடையாற்றில் எந்தத் தைரியத்தில் படகு விடுவீர்கள், அதன் தற்போதைய நாற்றத்தை உங்களால் எதிர்கொள்ள முடியுமா என்றெல்லாம் கேட்காதீர்கள். ‘போட் கிளப்’ என்பதைப் பற்றி ஒருவேளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்.
சரி, விஷ்வநாத்தின் முதல் கணிதச் சிக்கலுக்கு வருவோம். ஒரு படகில் ஒருவர் அல்லது இருவர்தான் அமர முடியும். ஒரேயொருவர்தான் இருக்கிறார் என்றால் ஒரேயொரு சாத்தியம் மட்டுமே உள்ளது. இரண்டு பேர் உள்ளனர் என்றால், இரண்டே இரண்டு சாத்தியங்கள் மட்டுமே உள்ளன:- இருவரும் தனித்தனியான படகுகளில், அல்லது இருவரும் ஒரே படகில்.
மூன்று பேர் இருந்தால்? 4 சாத்தியங்கள்.
நான்கு பேர் என்றால்? 10 சாத்தியங்கள்.
ஐந்து பேர் என்றால்? 26 சாத்தியங்கள்.
கணிதச் சார்பு வகைமையில் எழுதுவதென்றால்,
f(1)=1
f(2)=2
f(3)=4
f(4)=10
f(5)=26
கணிதத்தை ஓரளவுக்குக் கற்றவர்கள் கூர்ந்து பார்த்தால், ஓர் ஒழுங்குமுறை தோன்றுவதைப் பார்க்கலாம்.
f(n) = f(n-1) + (n-1)*f(n-2)
இதை நீட்டித்தால், f(6)=72, f(7)=232 என்று நாம் எழுதிக்கொண்டே போகலாம்.
விஷ்வநாத்தின் இரண்டாவது கணிதச் சிக்கலுக்குப் போவோம். முன்னாள் சென்னை போர்ட் டிரஸ்ட், இப்போது சென்னை போர்ட் அத்தாரிட்டி (சென்னைத் துறைமுக ஆணையம்) இருக்கும் ராயபுரத்துக்குப் போவோம். கப்பலில் கொள்கலன் பெட்டிகளை (கண்டெயினர்கள்) ஏற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கொள்கலன்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கவேண்டும். எளிமை கருதி, இரு பரிமாணத்தில் மட்டுமே இந்த அடுக்குதல்கள் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். அதாவது x, y அச்சுகளில் மட்டுமே. இடது ஓரத்திலிருந்துதான் அடுக்கத் தொடங்கவேண்டும். இடமிருந்து வலமாக, அல்லது கீழிருந்து மேலாக. இவ்வாறு அடுக்கும்போது இடைவெளி ஏதும் இருக்கக்கூடாது. 1, 2, 3 என்று எண் கொண்ட கொள்கலன்களை அதே வரிசையில்தான் அடுக்கவேண்டும். ஒன்றாம் எண் கொள்கலனை அடுக்கியபின் அடுத்த கொள்கலன் இரண்டாம் எண்தான். அதற்குப் பின்னர்தான் மூன்றாம் எண்.
எத்தனை சாத்தியங்கள் இப்போது தென்படுகின்றன? இதனைச் சரியாகச் செய்துபார்த்தால், இங்கும்
f(1)=1
f(2)=2
f(3)=4
f(4)=10
f(5)=26
என்றுதான் வரும். அதாவது முதல் கணிதச் சிக்கலுக்கும் இரண்டாம் கணிதச் சிக்கலுக்கும் ஒரே விடைதான். இரண்டும் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் இருந்தாலும்.
இவ்விரண்டும் இணையான சிக்கல்கள் என்பதை Robinson-Schensted-Knuth (RSK) Correspondence என்று இதனைக் கண்டுபிடித்த மூவரின் பெயரால் அழைக்கிறார்கள்.
Combinatorics, Geometry, Algebra போன்ற பலதுறைகளை ஒருங்கிணைக்கும் இந்த முறையை, கணித அறிவியல் கழகத்தின் பேராசிரியர் காஞ்சிபுரம் ஶ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்ற இந்தியாவின் மிக முக்கியமான கணித நிபுணரும் அவரது மாணவியான வி லக்ஷ்மிபாயும் மேற்கொண்டு ஆராய்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
RSK Correspondence என்பது குழப்பமான எண்களின் வரிசைகளை Combinatorics வழியில் ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்தது. சேஷாத்ரி-லக்ஷ்மிபாய் இந்த முறையை எடுத்துக்கொண்டு குழப்பமான ‘வடிவியல் வெளி’களை மேலே சொன்ன Combinatorics வழியில் ஒழுங்குபடுத்தும் வழியை உருவாக்கினார்கள்.
மேலே சொன்ன இரண்டு சிக்கல்களோடும் தொடர்புடைய ஒரு சிக்கல், சென்னை போர்ட் டிரஸ்டில் கிளர்க்காகப் பணியாற்றிய கணிதமேதை ஶ்ரீநிவாச ராமானுஜன் பல ஆராய்ச்சிகளைச் செய்த ‘பார்ட்டிஷன் ப்ராப்ளம்’ என்பதாகும்.
குறிப்பிட்ட ஓர் எண்ணை எத்தனைவிதமாகக் கூட்டுவதன்மூலம் பெறலாம்? அதுதான் அந்த எண்ணின் பார்ட்டிஷன் எண் (பகிர்வு எண்) எனப்படும்.
1 = 1
2 = 1+1 = 2
3 = 1+1+1 = 1+2 = 3
4 = 1+1+1+1 = 1+1+2 = 2+2 = 1+3 = 4
அதாவது,
P(1)=1
P(2)=2
P(3)=3
P(4)=5
P(5)=7
ஆனால், n அதிகமாக அதிகமாக P(n) படுவேகமாக அதிகரிக்கும். P(10)=42, P(20)=627, P(100)=190,569,292!
இந்தப் பகிர்வு எண்கள் குறித்த பல்வேறு கருத்தாக்கங்களை ராமானுஜன் உருவாக்கினார். ராமானுஜனும் ஹார்டியும் இணைந்து, n மிகப்பெரியதாக இருக்கும்பட்சத்தில் P(n) என்பதை உத்தேசமாகக் கணக்கிட ஒரு சமன்பாட்டை உருவாகியிருந்தனர்.
விஷ்வநாத் இவற்றையெல்லாம் விவரித்துப் பேசினார். எனக்கு மிகவும் பிடித்தமான உரையாக இது இருந்தது.
0
இறுதி உரை, ஐஐடி சென்னையில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பேராசிரியராக இருக்கும் ரவீந்திரன் பேசியது. தலைப்பு ‘Deus ex Machina’ என்பது. கதாசிரியர்கள் கதையை எழுதிக்கொண்டிருக்கும்போது தீர்க்கவே முடியாத ஒரு சிக்கல் கதையில் ஏற்பட்டால், கடவுள் அல்லது சூப்பர்பவர் ஒன்றை உள்ளே கொண்டுவந்து, அந்தப் பிரச்னையைத் தீர்த்து, கதையை முன்னேற்றிச் செல்வது.

செயற்கை நுண்ணறிவின் வரலாற்றை அருமையாக விளக்கிச் சொன்னார் பேராசிரியர். இவை இன்று பெரும்பாலும் பல புத்தகங்களிலும் உரைகளிலும் வருவதுதான். பொதுவாகக் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்:
- 1940-50களில் ஆலன் டூரிங், ‘டூரிங் சோதனை’ என்பதைக் கோட்பாட்டுரீதியில் உருவாக்கினார். ஒரு மனிதனையும் ஓர் இயந்திரத்தையும் வேறுபடுத்த முடியாத நிலையில் ஓர் இயந்திரம் நடந்துகொண்டால் அது டூரிங் சோதனையைக் கடந்துவிட்டதாகப் பொருள். அதாவது அந்த இயந்திரம், மனிதனைப்போல் சிந்திக்கக்கூடியதாக ஆகிவிட்டது என்று பொருள்.
- 1956ல் செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்) என்ற பதம் உருவாக்கப்படுகிறது. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் செயற்கை நுண்ணறிவை உருவாகிவிடலாம் என்ற அபத்தமான கருத்து.
- 1960-70களில் நிறையப் பரிசோதனைகள், கோட்பாட்டு வளர்ச்சிகள் என்றாலும் கணினிகளின் திறன் போதாமை.
- 1970-80கள் – AI Winter எனப்படும் காலகட்டம். ஏ.ஐ துறையில் யாரும் அதிகமாகக் கவனத்தைக் குவிக்கவில்லை.
எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ் - 1980-1990 – மீண்டும் AI Winter. எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்பதால் ஏற்பட்ட சுணக்கம்.
- 1990-2000 – மெஷின் லேர்னிங்
- 2000-2010 – டீப் லேர்னிங்
- 2020-க்குப்பிறகு: ஜெனரேடிவ் ஏஐ, எல்.எல்.எம், அட்டானமஸ் சிஸ்டம்
விளைவாக, சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட், கோ-பைலட் எனப் பலப்பல.
இடையிடையே எலைஸா, டீப் மைண்ட், ஐபிஎம் வாட்சன் போன்றவை உருவானதையும் அவற்றின் திறன்களையும் ரவீந்திரன் விவரித்தார்.
நவீன ஏஐ குறித்துப் பேசுகையில் அவற்றின் போதாமைகள் குறித்தும் பேசினார். மிகவும் நம்பிக்கையுடன் தவறாக உளறுவது, மனிதர்கள் என்ன சொன்னாலும் ‘ஆம், நீங்கள் சொல்வது சரிதான்’ என்று உங்களை ஊக்குவிப்பது போன்றவற்றைப் பற்றிச் சொன்னார்.
உரையின் ஆரம்பத்திலேயே பத்திரிகைச் செய்திகள் எவ்வாறு ஏஐ என்பதை கன்னாபின்னாவென்று உயர்த்திப் பேசுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘நாயின் கேன்சரை குணமாக்கிய ஏஐ’ என்ற செய்தியைக் காண்பித்தார். இது ஓரளவுக்குத்தான் உண்மை. ஏஐ நிச்சயமாக உதவியது; ஆனால் பல நிபுணர்களின் உதவியும் தேவைப்பட்டது.
தேர்ந்த ஒரு நிபுணர் கையில் ஏஐ என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மூன்றாவது உரையின்போது வந்த RSK எனும் மூவரில் இறுதியில் வரும் K-க்கு சொந்தக்காரரான Donald Knuth-ன் சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையை வைத்துக் காண்பித்தார்.
நுத், ஏஐயால் கடினமான கணிதச் சிக்கல்களைக் கையாள முடியாது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். காம்பினடோரிக்ஸ் துறையில் ஒரு சிக்கலைத் தீர்க்க அவர் முயன்றுகொண்டிருந்தார். பல வாரங்களாக முட்டி மோதிக்கொண்டிருக்கையில், அவருடைய நண்பர் ஒருவர் அந்தச் சிக்கலை கிளாட் ஓபஸ் 4.6 என்ற எல்.எல்.எம்மிடம் கொடுத்தார். கிளாட் இந்தச் சிக்கலைத் தீர்க்க சில வழிமுறைகளைச் சொன்னது. நுத் அதனைச் செய்துபார்த்து, உண்மை என்று தீர்மானித்தார். அதனை ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாகச் சமர்ப்பித்துள்ளார்.
“Shock! Shock! I learned yesterday that an open problem I’d been working on for several weeks had just been solved by Claude Opus 4.6— Anthropic’s hybrid reasoning model that had been released three weeks earlier! It seems that I’ll have to revise my opinions about “generative AI” one of these days.”
இவ்வாறு செல்லும் இந்தக் கட்டுரை நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். ஏஐ என்பது தனித்துச் சாதிப்பதைவிட, தேர்ந்த நிபுணர்கள் கையில் மிகப் பெரிய ஆயுதமாக மாறும் என்பதை.
நீங்கள் முட்டுச் சந்தில் நிற்கும்போது ஆபத்பாந்தவனாக வந்துநின்று, உங்கள் சிக்கலைத் தீர்த்துவைத்துவிட்டு மாயமாகும் Deux Ex Machina என்பது இதுதானோ?
0
நான்கு மணி நேரம். நான்கு வெவ்வேறு தலைப்புகளில், நான்கு நிபுணர்கள். இசைக் கச்சேரிகள் நிரம்பிவழியும் அவையில் குழந்தைகள், பெற்றோர்கள், இளைஞர்கள், கிழவர்கள் என்று கூட்டம். தங்கள் சிறு குழந்தைகளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்த பெற்றோர்கள். பெற்றோருக்கு விளக்கிக்கொண்டிருந்த பிள்ளைகள். இடைவேளையில் அதிரசம், முறுக்கு, காபி, டீ. (இந்த காபி, டீக்கு நல்ல ஏற்பாடு ஒன்றை அடுத்த முறையாவது ஏற்பாட்டாளர்கள் செய்யவேண்டும். கூட்டம் தாங்கமுடியவில்லை.)
அல்லாடி ராமகிருஷ்ணா மனம் மகிழ்ந்திருப்பார்.

