Skip to content
Home » நிகோலா டெஸ்லா #7 – எடிசனைக் கவர்ந்த டெஸ்லா

நிகோலா டெஸ்லா #7 – எடிசனைக் கவர்ந்த டெஸ்லா

சிட்டி ஆஃப் ரிச்மாண்ட்

அமெரிக்காவுக்குக் கப்பலில் வந்தபோது நடந்த நிகழ்வுகளை நிகோலா டெஸ்லா பின்வருமாறு நினைவுகூர்கிறார்.

‘எனது கப்பல் பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது. நான் எப்போதும் புத்தகங்களுடன் பயணிப்பதையே விரும்புபவன். ஆராய்ச்சிக் கூடம், வீடு, பயணம், காடு என எங்கு சென்றாலும், நல்ல புத்தகங்களே எனக்குத் துணை வரும் உண்மையான நண்பர்கள்.

‘எனது தொலைந்த உடைமைகளில் சில புத்தகங்களும் அடக்கம். அவற்றை இழந்து வருந்தினாலும், மேலும் சில புத்தகங்கள் கையில் இருந்தமையால், என்னை நானே தேற்றிக் கொண்டேன். அங்கிருந்த அழகிய பெண்கள் சிலர், அவ்வப்போது என்னிடம் வந்து அளவளாவினர். நான் யாரென்று தெரிந்ததும், அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகமானது.

‘அவர்களுக்கு அடிப்படை அறிவியல் சொல்லிக் கொடுத்தேன். பெரும்பான்மையான நேரம் நான் தனிமையில் இருந்தாலும், என்னைச் சுற்றி அவ்வப்போது ஒரு சிறிய கூட்டம் கூடியது. பிறகொரு நாள், எதிர்பாராத கலவரம் ஒன்று மூண்டுவிட்டது. அவர்கள் சண்டையிடும் போதும்கூட நான் அதில் கலந்து கொள்ளாமல், கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கொண்டு, கவிதைகள் எழுதிக் கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், பெண்களிடம் பேசிக்கொண்டும், அவர்களோடு சேர்ந்து எப்போதேனும் ஒரு முறை சுருட்டுப் பிடித்துக் கொண்டும், போக்கர் ஆடிக் கொண்டும், அவர்கள் அந்த இடர்ப்பாட்டிலும் கொண்டு வந்து கொடுத்த பானங்களை அருந்திக் கொண்டும், காலங்கழித்து வந்தேன். எப்போதடா இப்பயணம் முடியும் என்றாகி விட்டது!’

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், டெஸ்லா குடும்பத்தாருடன் இருந்தபோது, அவரது அக்கா மில்கா என்கிற மிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவர் சகோதரியைக் கடிந்து கொண்டார். ஆனாலும் வீட்டிற்குள்ளேயே புகைப்பிடித்தும் வந்தார். இதைக் கண்டு கடுப்பான மிகா, ‘நிகோலா, நீ வீட்டுக்குள் புகைப்பதை நிறுத்தினால் எனக்கு உடல்நலம் தானாகவே சரியாகிவிடும். நாங்கள் யாரும் நோய்வாய்ப்பட மாட்டோம்!’ என்று பதிலடி கொடுத்தார்.

அப்போதே நிகோலா டெஸ்லா புகை பிடிப்பதை விட்டுவிட்டார் என்று அவரது வாழ்வியல் பதிவாளர்கள் பலர் கூறினாலும், அவரது பிற்காலக் கூற்றுகள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், அவர் அப்பழக்கத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டார் என்பது மட்டுமே. சரியான நண்பர்கள் கூட்டம் சேர்ந்தால் எப்போதேனும் அவர் சுருட்டு பிடித்து வந்தார் என்பதையும் மேற்கண்ட அவரது பேட்டி உணர்த்துகிறது.

இதே போல, ஐரோப்பாவில் கடும் தேநீரும், கடுங்காப்பியும் குடித்து வந்தவர் அதையும் குறைத்துக்கொண்டார் என்று கூறப்பட்டாலும், அமெரிக்கா வந்த பிறகு, கடுங்காப்பியில் பாலின் கெட்டியான க்ரீம் கலந்து காபி அருந்தும் அமெரிக்க வழக்கம் அவரையும் தொற்றிக் கொண்டது. ஆனால், இவ்விரண்டு பழக்கங்களையும் அவர் அளவோடு வைத்துக்கொண்டார்.

அவருடைய கப்பல் பயண அனுபவம் தொடர்கிறது.

‘டிக்கெட்டும் ஏற்கெனவே தொலைந்து போயிருந்த காரணத்தால், எனது நிலைமை மேலும் சிக்கலானது. நான் சண்டையில் எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்காததாலும், நான் என் பாட்டுக்கு சிறு கூட்டத்தோடு சேர்ந்து வந்து கொண்டிருந்ததாலும், என்னைக் குறிவைத்த சில கயவர்கள், ‘இவனிடம் டிக்கெட் இல்லை, இவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி’ என்று குற்றஞ்சாட்டி, சண்டை உச்சத்தில் இருந்தபோது, மற்ற கலவரக்காரர்களோடு சேர்ந்து, என்னைக் குண்டுக்கட்டாகக் கட்டிவிட்டனர்.

‘சற்று தாமதித்திருந்தாலும், என்னை அப்படியே கடலுக்குள் வீசி எறிந்திருப்பார்கள். அதற்குள் அக்கப்பலில் பயணம் செய்த என்னைப் பற்றி அறிந்திருந்த சிலர், நான் விஞ்ஞானி டெஸ்லா என்பதை அவர்களிடம் எடுத்துக்கூறி என்னைக் காப்பாற்றினர். பிறகு என் பயணத்தைத் தடையின்றித் தொடரச் செய்தனர். ஏற்கெனவே என் வாழ்வில் பல்வேறு இன்னல்களை நான் பார்த்திருந்தமையால், இது போன்ற சம்பவங்களை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.’

இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் தொலைத்த அவரது பெயர் கொண்ட டிக்கெட்டைத் திருடிய நபரும், அகப்படாமல் நைச்சியமாக அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டார். இது, அமெரிக்காவில் அனைவரும் இறங்கிய பிறகு, பயணச்சீட்டு சரிபார்க்கும் போது, கப்பல் நிறுவனம் மூலமாக டெஸ்லாவுக்குத் தெரியவந்த உண்மை.

டெஸ்லாவிடம் இன்னொரு விசித்திரமான வழக்கம் இருந்தது. அவருக்கு முத்துகள் என்றால் பிடிக்காது. முத்து மாலையோ, பவழ மாலையோ அணிந்திருக்கும் பெண்களைக் கண்டால் அவர் முகம் கொடுத்துப் பேச மாட்டார்.

‘அந்தப் பயணச் சீட்டைத் திருடவும் செய்து, என் பெயரிலேயே, அகப்பட்டுக் கொள்ளாமல் பயணமும் செய்து முடித்தவன், நிச்சயம் குள்ளநரி புத்தி கொண்டவனாகத்தான் இருந்திருப்பான் போல. இறுதியாக, வேற்று நாடுகளுக்குத் தஞ்சம் புகும் அகதிகள் போன்று, அக்கப்பலில் இருந்த பல நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களோடு, நானும் அமெரிக்காவினுள் புகுந்தேன்.’

டெஸ்லா அமெரிக்காவில் வந்திறங்கிய நகரம் எது? உலகின் புகழ்பெற்ற நகரங்களுள் ஒன்றான நியூ யார்க்தான் அது. இங்கு தான் நிகோலா டெஸ்லாவின் வாழ்வில் அடுத்தத் திருப்பம் ஏற்பட்டது.

கான்டினென்டல் எடிசன் கம்பெனி, அவரை நேரடியாக தாமஸ் ஆல்வா எடிசனையே சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஆம், சார்லஸ் பாச்சலர் அவருக்குக் கொடுத்திருந்த சிபாரிசுக் கடிதம், எடிசனை நேரடியாகச் சென்று பார்ப்பதற்கே என்பதை அறிந்து, டெஸ்லா அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் கொண்டார்.

அந்த நிறுவனம் எடிசனின் பெயரில் இயங்கி வந்தாலும், எடிசனும் தனியாக ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை அமெரிக்காவில் நடத்தி வந்தார். சார்லஸ் பாச்சலர் மூலம் நிகோலா டெஸ்லாவைப் பற்றி கேள்விப்பட்ட எடிசன், இப்படிப்பட்ட அறிவு மிகுந்த விஞ்ஞானி, தன்னிடமே நேரடியாக வேலை செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

கியுசெப்பி கொலம்போவின் நிறுவனம், எடிசனின் நிறுவனத்துடன் ஒரு பின்வழி ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், அதில் தாமஸ் ஆல்வா எடிசனின் பங்கும் இருந்ததாகவும் சில தரவுகள் கூறுகின்றன. அதனை சார்லஸ் பாச்சலரின் சிபாரிசுக் கடிதம் உறுதிப்படுத்திக் காட்டுகிறது என்றே சொல்லலாம். ‘மை டியர் எடிசன், எனக்கு இரு மேன்மையான நபர்களைத் தெரியும். ஒன்று நீங்கள், இன்னொருவர் நிகோலா டெஸ்லா’ என்று அக்கடிதத்தில் சார்லஸ் பாச்சலர் புகழ்ந்துள்ளார்.

பிறகு எடிசனை நேரில் சந்தித்தார் டெஸ்லா. ‘என் வாழ்வில் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய நாட்களில், எடிசனை நான் சந்தித்த நாளும் ஒன்று!’ என்று அந்தச் சந்திப்பை நினைவுகூர்கிறார் டெஸ்லா. தனது ஆல்டர்னேட் கரண்ட் பற்றியும், அதன் மோட்டார்கள் பற்றியும், அது தொடர்பான தன் ஆய்வுகள் பற்றியும் எடிசனிடம் விரிவாக எடுத்துக் கூறினார் டெஸ்லா.

ஆனால் எடிசன் இவற்றையெல்லாம் சந்தேகக் கண் கொண்டே அணுகியிருக்கிறார். ஏனெனில், அவர் டிசி எனப்படும், டைரக்ட் கரண்ட் முறையை ஆராய்ச்சி செய்து, அதற்கான மோட்டார்களில் பல்லாயிரம் டாலர்களை முதலீடு செய்து வைத்திருந்தார். டெஸ்லா முன்மொழிந்த ஏசி கரண்ட் பற்றி அவர் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இல்லை. அதே சமயம் டெஸ்லாவிடம் வெளிப்பட்ட கூர்மையான அறிவொளியைக் கவனிக்கத் தவறவில்லை எடிசன். டெஸ்லாவை அவர் பணியில் சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டதற்குக் காரணம் அதுதான்.

இன்னொரு முக்கியமான தகவலும் தரவுகளின்மூலம் நமக்குக் கிடைக்கிறது. எடிசனின் டிசி மோட்டார்கள் அவர் எதிர்பார்த்த வகையில் வேலை செய்யவில்லை. புதிதாகச் சேர்ந்த இளம் விஞ்ஞானியைக் கொண்டு குறைகளைச் சரி செய்துவிடலாம் என்று எடிசன் மனக்கணக்குப் போட்டிருக்கிறார்.

6 ஜூன் 1884 அன்று நியூ யார்க் வந்திறங்கிய நிகோலா டெஸ்லாவை, மறுநாளே எடிசன் தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதல் நாளிலேயே டெஸ்லாவைச் சந்தித்தும் விட்டார். டெஸ்லா அன்றே வேலையைத் தொடங்கிவிட்டார் என்றும் ஓரிரு நாட்கள் கழித்தே பணியைத் தொடங்கினார் என்றும் இருவேறு பதிவுகள் காணப்படுகின்றன. பெரும்பான்மைத் தரவுகளின்படி ஜூன் 7ஆம் தேதி முதல் எடிசன் மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஊழியராக மாறிவிட்டார் டெஸ்லா. எடிசனின் நேரடிப் பார்வையின் கீழ், மின்சாரப் பொறியியலாளராக, டிசியின் மிகவும் கடினமான பிரச்னைகளைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஓர் ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கியபடி, உற்சாகமாகத் தன் பணியைத் தொடங்கினார் டெஸ்லா. இதுவே அவர் வழக்கமாகவும் மாறிப்போனது. தன் வாழ்வின் பெரும்பகுதியை வெவ்வேறு ஹோட்டல்களில் அறையெடுத்துத் தங்கியே கழித்திருக்கிறார் அவர்.

முதல் சந்திப்பில் மட்டுமல்ல தொடர்ந்து எடிசனைத் தன் பணிகள்மூலமாக ஈர்த்து வந்திருக்கிறார் டெஸ்லா. ஹென்றி வில்லார்ட் என்னும் பெரும் பணக்காரரின் ‘தி எஸ்எஸ் ஒரேகான்’ எனும் சொகுசுக் கப்பலின் விளக்குகளைச் சரி செய்யும் பணிக்கு முதல் முதலில் டெஸ்லாவை அனுப்பி வைத்தார் எடிசன். உலகிலேயே முதன் முறையாக, கரி மூலமான மின்சக்தியின்றி, மோட்டார் மூலம் பெறப்பட்ட மின் சக்தியைக் கொண்டு இயங்கி வந்த சொகுசுக் கப்பல் அது. மிகவும் சக்திவாய்ந்த இரு மின்சார டைனமோக்கள் அதில் பொருத்தப்பட்டிருந்தன. அவை இரண்டும் செயலிழந்து போனதால், பெரும் சிக்கலைச் சந்தித்தது.

இதனைத் தன் கடின உழைப்பின் மூலம் சரி செய்தார் நிகோலா டெஸ்லா. மின்சார டைனமோ ஆராய்ச்சியில், அவர் ஏற்கெனவே கரை கண்டவராக இருந்ததுதான் அதற்குக் காரணம். ஸ்ட்ராஸ்பெர்க் நகரில், ஜெர்மானிய ரயில் நிறுவனப் பாதையின் டிசி விளக்குகளை முன்னர் அவர் சரி செய்திருந்தார். அந்த அனுபவமும் அவருக்கு இப்போது கைகொடுத்தது.

எஸ்எஸ் ஒரேகான் சொகுசுக் கப்பலில் டைனமோக்கள் சரிசெய்யும் பணியில் நிகோலா டெஸ்லா. இப்படம் மிகவும் அரியது. காப்புரிமை, ‘டெஸ்லா யூனிவர்ஸ்’ நிறுவனம்.

கப்பலின் பிரச்னை சரியானதை அறிந்த எடிசன் வியந்துபோனார். சார்லஸ் சரியான நபரைத்தான் சிபாரிசு செய்திருக்கிறார் என்பதை ஆதாரபூர்வமாக அவரால் இப்போது உணரமுடிந்தது. ‘உண்மையிலேயே நீ ஒரு ஆகச் சிறந்த மனிதன்’ என்று அவர் டெஸ்லாவை மனம் திறந்து பாராட்டியதாகத் தரவுகள் கூறுகின்றன.

அதைத் தொடர்ந்து எடிசன் நேரடியாகவே டெஸ்லாவுக்கு ஒரு பணியை அளித்திருக்கிறார். தனது டிசி ஜெனரேட்டர்கள் மற்றும் மோட்டார்களை சரி செய்து புதுப்பித்துத் தந்தால் குறைந்தபட்ச சம்பளம் போக, 50,000 அமெரிக்க டாலர்கள் சிறப்புத் தொகையாகத் தருவதாக அவர் டெஸ்லாவுக்கு உறுதியளித்தார்.

அதன் பிறகு டெஸ்லா, எடிசனின் கம்பெனியில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். எடிசனின் சாதனைகளையே தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவர் செயல்பாடு அமைந்திருந்தது. எடிசனை மட்டுமல்ல முழு அமெரிக்காவையும் டெஸ்லா வசப்படுத்திவிட்டார். ஒரு நகரத்தையே தன் விளக்கொளியில் ஆடிப்பாடச் செய்த கடவுள் போல, டெஸ்லா விளங்கினார் என்று ஒரு பத்திரிகைச் செய்தி வியக்கிறது.

(தொடரும்)

________
கப்பல் படம்: நிகோலா டெஸ்லா அமெரிக்கா வந்திறங்கிய ‘சிட்டி ஆஃப் ரிச்மாண்ட்’ என்னும் பெயர் கொண்ட நீராவிக் கப்பல்.

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *