Skip to content
Home » நிகோலா டெஸ்லா #13 – பொதுவெளியில் ஒரு போர்

நிகோலா டெஸ்லா #13 – பொதுவெளியில் ஒரு போர்

பொதுவெளியில் ஒரு போர்

டெஸ்லாவுக்கு எதிராக எடிசன் செய்த விஷமப் பிரசாரங்களைப் பார்த்தோம்.

டெஸ்லா எடிசனிடம் வேலை செய்த போது, ‘மின் விநியோகத்தின் எதிர்காலம்’, நேரடி மின்னோட்டத்தைவிட (டிசி) மாற்று மின்னோட்டத்தில்தான் (ஏசி) உள்ளது என்று ஆணித்தரமாகக் கூறியதையும் டெஸ்லாவின் ஆலோசனையை எடிசன் ஏற்கவில்லை என்பதையும் நாம் பார்த்தோம்.

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் தனது சொந்த மாற்று மின்னோட்ட ஜெனரேட்டர்களை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினார். ‘1887 வாக்கில், வணிகத்தில் ஒரு வருடத்திற்குப் பிறகு, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி, ஏற்கெனவே எடிசனைவிடப் பாதிக்கும் மேற்பட்ட உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருந்தது’ என்று கில்பர்ட் கிங் என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.

அதற்குக் காரணம் டெஸ்லாவுடனான அவரது ஒப்பந்தங்கள். 1887 முதல் 1890 வரையிலான இவர்கள் இருவரது தொழில் வளர்ச்சி அபாரமாக இருந்தது என்பதையும் நாம் ஏற்கெனவே கண்டோம்.

இவர்களின் வளர்ச்சியை அழிக்க தான் செய்ய வேண்டியது ஒன்றுதான் என்று முடிவு செய்தார் எடிசன். வெஸ்டிங்ஹவுஸின் ஏசி ஜெனரேட்டர்கள் தன்னுடைய டிசி ஜெனரேட்டர்களை விட ஆபத்தானவை என்பதை அறிவியல்பூர்வமாகக் காட்சிப்படுத்தி நிரூபிக்கவேண்டும்.

அவரது கூற்றை நிரூபிப்பதற்காக, அவர் தெருவில் சுற்றித்திரிந்த நாய்கள், பூனைகள், சாகக் கிடக்கும் நிலையில் உள்ள குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு ஏசி கரண்டின் மூலம், பொது மரணதண்டனைகளை நடத்தினார். நிருபர்கள் முன்பும் அடிக்கடி இதை அவர் செய்து காட்டினார்.

இந்த நேரத்தில்தான் நியூ யார்க்கின் பஃபலோவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆல்ஃபிரட் பி. சவுத்விக் என்பவர் மரண தண்டனையை எவ்வாறு ‘மனிதாபிமான’ முறையில் நிறைவேற்றுவது என்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார். தூக்கு தண்டனைக்கு ஒரு நல்ல மாற்று கண்டுபிடிக்கமுடியும் என்பது அவர் நம்பிக்கை. இந்நிலையில் ஒரு குடிகாரன் தற்செயலாக ஜெனரேட்டரைத் தொட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டார். மின்சாரம்தான் சிறந்த வழி என்று முடிவு செய்தார். அவர் எடிசனை அணுகி உதவி கேட்டார்.

எடிசன் மரண தண்டனைக்கு எதிராகப் பகிரங்கமாக இருந்தவர். இருப்பினும், தனக்கு வந்த வாய்ப்பை ஏசியை அழிக்கப் பயன்படுத்த நினைத்த அவர், சவுத்விக்கைத் தந்திரமாக வெஸ்டிங்ஹவுஸிடம் அனுப்பினார். ‘மரண இயந்திரம்’ என்ற பெயர் ஏசியின் மாற்று மின்னோட்ட ஜெனரேட்டர்களுக்கு ஒத்ததாக இருக்கும் என்று நம்பினார்.

உண்மையில், எடிசனின் தொடர் பொய்ப் பிரசாரத்தின் காரணமாக, ‘வெஸ்டிங்ஹவுஸ்டு’ என்பது ஆங்கிலத்தில் மின்சாரம் தாக்குதலால் ஏற்படும் மரணத்திற்கான ஒரு ஸ்லாங் வார்த்தையாக மாறியது.

வெஸ்டிங்ஹவுஸ், இயற்கையாகவே, அவரது ஜெனரேட்டரை மரண தண்டனையுடன் தொடர்புபடுத்த விரும்பவில்லை. மேலும் அவர் தனது ஜெனரேட்டர்களைப் பொது அதிகாரிகளுக்கு விற்க மறுத்துவிட்டார். இதன் விளைவாக, முதல் அதிகாரப்பூர்வ மின்சார நாற்காலியை உருவாக்க நியூயார்க் மாநில நிர்வாகம் மற்றொரு படைப்பாளரான ஹரோல்ட் பிரவுன் என்பவரை நியமித்தது.

மரண தண்டனையைப் பகிரங்கமாகக் கண்டித்த போதிலும், முதல் மின்சார மரண நாற்காலி ஏசியின் மாற்று நீரோட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படுவதை உறுதி செய்வதற்காக ஹரோல்ட் பிரவுனின் திட்டத்திற்கு எடிசன் ரகசியமாக நிதியளித்தார்.

இறுதியில் முதல் மின்சார நாற்காலி மரண தண்டனை நாள் வந்தது. அந்த நாள், 6 ஆகஸ்ட் 1890. துரதிர்ஷ்டவசமான கினிப் பன்றியாக வில்லியம் கெம்லர் என்ற கொலைக் குற்றவாளி சிக்கினான். அவன் தனது காதலியான மாடில்டா ஜீக்லரைக் கோடரியால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவன். இந்நிகழ்வில் கலந்துகொள்ள, சவுத்விக்கும் சம்பிரதாயப்பூர்வமாக அழைக்கப்பட்டார்.

17 வினாடிகள். ஏசியில் உருவாக்கப்பட்ட சேரில் இருந்து கெம்லரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது, அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆர்தர் சவுத்விக் கூடியிருந்தோர் மத்தியில் இவ்வாறு கூறினார்: ‘இது பத்து வருட வேலை மற்றும் ஆராய்ச்சியின் உச்சம். இன்று நாம் ஒரு உயர்ந்த நாகரிகத்தில் வாழ்கிறோம்.’ இவ்வாறு அவர் கூறிக்கொண்டிருந்தபோதே, கெம்லர் இன்னும் உயிருடன் இருப்பதை அனைவரும் கவனித்து அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.

மின்சார நாற்காலி அதன் மின்னோட்டத்தை மீண்டும் உருவாக்க சிறிது நேரம் எடுத்தது. கெம்லருக்கு இரண்டாவது முறையாக மின்சாரம் செலுத்தப்பட்டது. ஏற்கனவே சேதமடைந்த உடல் மேலும் சேதமடைந்தது. அதைக் கண்ட பலர் மயங்கி விழுந்தனர். சதை எரியும் வாசனையால் அறையைவிட்டு சிலர் வெளியே ஓடினர். மற்றவர்கள் கெம்லரின் தலையின் உச்சியில் ‘புகையைப் பார்ப்பதாகக்’ கூறினர்.

‘இதைவிடச் சிறப்பாக, கோரம் குறைவாக, அவன் செய்த குற்றத்தைப் போலவே, ஒரு கோடாரியை வைத்து, கெம்லரின் கதையை முடித்திருக்கலாம்’ என்று ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் விமரிசித்தார்.

‘அவர்களுடைய எண்ணம் என்னையும் ஜார்ஜையும் அழிக்கவேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக அவர்கள் செய்த பொதுவெளி நிகழ்வுகள் கோரத்தின் உச்சம். இதற்கு ஊடகங்களும் பச்சோந்தி போல் துணைபோயின. அவர்களைப் பொருத்தவரை யாரிடமிருந்து லாபம் கிடைக்குமோ, யாரிடம் சென்றால் கூத்துகள் கிடைக்குமோ அவர்களுக்கு ஆதரவாக என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள்‘ என்று டெஸ்லா ஒரு பேட்டியில் வருத்தமுறக் கூறுகிறார்.

இருப்பினும், தாமஸ் எடிசனுக்கு இது போதுமானதாக இல்லை. மாற்று மின்னோட்டம் உண்மையில் விரைவாகக் கொல்லும் என்பதை நிரூபிக்க முயன்றார். கோனி தீவில் அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், டாப்சி என்ற சர்க்கஸ் யானையை மின்சாரம் தாக்கச் செய்து, துடிதுடிக்கக் கொன்றார்.

இது 1890ஆம் ஆண்டில் ஜார்ஜின் தொழிலுக்கு, பலத்த அடியைக் கொடுத்தது. ஆனால் இதனை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த அவர், தனது முதலீட்டின் அளவுகளை ஜாக்கிரதையாகக் குறைத்துக்கொண்டார். பொதுவெளியில் தோன்றுவதையும் சற்றே குறைத்துக்கொண்டார். டெஸ்லாவின் ஏசியைப் பற்றிய பயம், அமெரிக்க மக்களை மிகவும் அச்சம் கொள்ளச் செய்தது.

இறுதியில், எடிசனின் அனைத்து வஞ்சகத் திட்டங்களும் அவரது போட்டியின் வெற்றியை அழிக்க முயற்சித்த போதிலும் டெஸ்லா மற்றும் வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மாற்று மின்னோட்டம், டிசியைக் காட்டிலும் பெரியது என்பதைக் காலப்போக்கில் நிரூபித்தது.

‘தனது பங்குக்கு டெஸ்லாவின் ஆலோசனையைப் பெறாததற்கு வருந்துவதாக எடிசன் பின்னர் ஒப்புக்கொண்டார்’ என்று கில்பர்ட் கிங் எழுதினார்.

0

இனி டெஸ்லாவின் வாழ்வில் 1890ஆம் ஆண்டு நடந்த மற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

வெஸ்டிங்ஹவுஸ் கம்பெனியின் பொறியாளர்களின் தேவைக்கு இணங்க உயர்மட்ட அதிர்வெண்கள் கொண்ட சாதனத்தை உருவாக்க முடியாததால், முன்னேறிய வடிவம் கொண்ட காயிலை உருவாக்கும் முயற்சியில் டெஸ்லா தோல்வியடைந்தார்.

இதன் காரணமாக, ஒரு யூனிட் கரண்ட்டுக்கு ஜார்ஜ் $2.50 கொடுக்க வேண்டிய ராயல்டி ஒப்பந்தத்தை டெஸ்லா ரத்து செய்து தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டது. பிற்காலத்தில், இதனை எண்ணி அவர் மிகவும் வருந்தினார். அவர் உலகின் முன்னணிப் பணக்காரராக அன்று உருவாக முடியாமல் போனதில் இந்த ஒப்பந்த ரத்துக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.

பிறகு, கிராண்ட் தெருவின் அவென்யூவில் இருந்து, நியூயார்க் தெற்கு அவென்யூவில் உள்ள கதவெண் 33 முதல் 35 முதல் பதிவு செய்யப்பட்ட ஆறு மாடிக் கட்டடத்தில் உள்ள நான்காம் தளம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் வண்ணம் தனது பிரதான ஆய்வுக்கூடத்தைத் திடீரென மாற்றினார்.

அதற்கான காரணம் தெரியவில்லை. தன்னைக் கண்காணிக்கும் தொழில் எதிரிகள், அரசாங்க ஒற்றர்கள் ஆகியோரிடம் இருந்து சற்று மறைந்து உள்வாங்கியே ஆய்வுக்கூடம் இருக்கவேண்டும் என்பதற்காகவும் அவர் இம்மாற்றத்தைச் செய்திருக்கலாம்.

இந்தப் புதிய ஆய்வகத்தில்தான் டெஸ்லா 1895 வரை பல புதிய அறிவியல் சாதனைகள் புரிந்தார். இந்த ஆய்வகம்தான் ஒரு தீவிபத்தில் சேதமடைந்தது என்று பார்த்தோம்.

அனைத்துத் தடைகளையும் கடந்து 1890ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டெஸ்லா மூன்று முக்கியச் சாதனைகளை நிகழ்த்தினார்.

1. நியான் மற்றும் ஃபுளாரசண்ட் ஒளி அலைகளையும் அவை சார்ந்த பல்புகளையும் முதன்முதலில் கண்டுபிடித்தார்.

2. முதல் எக்ஸ்ரே போட்டோக்களை எடுத்துக்காட்டி அறிவியல் உலகையே ஆச்சரியம் கொள்ளச் செய்தார்.

3. இவையிரண்டையும் ஒன்றுமில்லை என்று சொல்லவைக்கும் விதமாக ஒரு வெற்றிடக் குழாயைக் கம்பியின்றி காற்றின்மூலம் மின்சார ஆற்றலைக் கடத்தி, ஒளிரச்செய்தார்.

இன்று நாம் அனைவரும் கொண்டாடும், தினசரி பயன்படுத்தும், வயர்லெஸ் ஆற்றலின் முதல் வெற்றிகரமான ஆராய்ச்சியின் துவக்கப் படிநிலை இதுதான். இதன் பிறகுதான் டெஸ்லாவின் ஆர்வம் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தின் பக்கம் திரும்பியது.

(தொடரும்)

படம்:  நிகோலா டெஸ்லாவின் முகத்தை மீசையில்லாமல், அவரது கண்டுபிடிப்புகளையும் அவரது ஏசி மோட்டாரையும் பின்புலமாக வைத்து, ‘வால்-இ’ என்கிற செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, வார்த்தைகள் வழியே படம் தயாரிக்கும் இணையதள புரோகிராமின்மூலம் இக்கட்டுரையாசிரியர் உருவாக்கிய படம்.

பகிர:
nv-author-image

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *