டெஸ்லாவின் வயர்லெஸ் சார்ந்த ஆராய்ச்சிகள் 1892ஆம் ஆண்டு முதல் விரிவடையத் துவங்கின. அப்போது அவர் வயது 36.
அந்த ஆண்டின் துவக்கத்திலேயே மீண்டும் ஒரு முறை அவரை ஐரோப்பிய அறிவியல் சமூகம், தங்கள் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்படி அழைத்தன.
எந்த ஐரோப்பா அவருக்குக் கல்வியும் கொடுத்து, அவரை அமெரிக்காவை நோக்கி வழியனுப்பி வைத்ததோ, அதே கண்டம் தற்போது தங்கள் பெருமையின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கிய டெஸ்லாவை, அவர்களின் வளர்ந்து வரும் தலைமுறைக்கு வழிகாட்டச் சொன்னது.
இதற்கிடையில், டெஸ்லாவின் உயர்ந்து வரும் செல்வாக்கைக் கண்டு, மிகவும் பொறாமைப்பட்ட எடிசன் அடுத்தகட்ட பாய்ச்சல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்தார். ஒரு சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து தாக்கும் மற்றொரு சிங்கம் போல, எடிசன் கட்டி ஆண்டு வந்த அமெரிக்காவின் AIEE அமைப்பிலேயே டெஸ்லாவுக்கு ஆதரவாளர்கள் பெருகிக் கொண்டே போயினர்.
இந்நிலையில் பிப்ரவரி 03, 1892 அன்று இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தனது அறிவியல் சுற்றுப்பயணத்தை டெஸ்லா இனிதே தொடங்கினார்.
‘அதிக அதிர்வெண்களும், அதி தீவிர திறனும் கொண்ட, மாற்று முன்னோட்ட அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்முறைகள்’ என்ற தலைப்பில் அவரது உரை இருந்தது. இது பிப்ரவரி மூன்றாம் தேதி இங்கிலாந்தின் ‘இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ்’ என்ற அந்நாட்டின் அமைப்பின்முன் நிகழத்தப்பட்டது. இதே உரையை மறுநாள் அவர் அதே லண்டனில் உள்ள, ‘தி ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் கிரேட் பிரிட்டன்’ அமைப்பின் தலைமையகத்திலும் நிகழ்த்தினார்.
‘கிரேட் மைண்ட்ஸ்: ஐசக் நியூட்டன், நிகோலா டெஸ்லா அண்ட் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – ஃபவுண்டர்ஸ் ஆஃப் தி சைன்டிஃபிக் ஏஜ்’ என்ற புத்தகத்தை எழுதிய மார்க் ஸ்டைன்பர்க், டெஸ்லாவைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
‘ஒரு மாயாவியின் கதை போன்று நிகோலா டெஸ்லாவின் வாழ்வு இருந்தது என்று பலரும் கூறினாலும் நன்கு ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அவரது வாழ்வு ஒரு திறந்த புத்தகம். அவரது அறிவியல் ஆய்வுகளைப் பற்றிய தரவுகளைத் தேடினால், அள்ள அள்ளக் குறையாத புதையல் போன்று தோண்டத் தோண்டப் பல தகவல்கள் வெளிவந்து, நம்மைச் சோர்வடைய வைக்கும்.
‘அவர் எத்தனை அறிவியல் விடயங்களை முன்பே கூறினார், எத்தனை சாதனங்களைக் காப்புரிமை இல்லாமல் கண்டுபிடித்தார் என்று எண்ணும்போதே மலைப்பாக இருக்கிறது. அவர் 183 காப்புரிமைகளை வைத்திருந்தார் என்று ஒரு தகவல் திரட்டும்; இல்லையில்லை 300க்கும் மேற்பட்ட உரிமங்கள் வைத்திருந்தார் என்று இன்னொரு திரட்டும் கூறுகிறது. இவற்றைப் பகுப்பாய்வு செய்து சரி பார்க்கவே நமக்குப் பல மாதங்கள் ஆகுமென்றால், அவரது பதிவு செய்யாத கண்டுபிடிப்புகளைப் பற்றி, சற்று எண்ணிப் பார்க்கவும்!’
லண்டனில் அவர் உரை நிகழ்த்தியபோது, இத்தகைய ஓர் மலைப்பைதான் அவர் விஞ்ஞான உலகில் ஏற்படுத்தினார் என்று அதைப்பற்றி பதிவு செய்தோர் கூறுகின்றனர்.
டெஸ்லாவிற்கு, ‘இண்டெலிஜெண்ட் கோஷண்ட்’ என்று அழைக்கப்படும் ஐ.க்யூ எத்தனை புள்ளிகள் இருந்தன தெரியுமா? சுமார் 160 முதல் 310 வரையில் இருக்குமென்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 120-130 இருந்தாலே, அவர்களை ஜீனியஸ் என்று கொண்டாடும் இவ்வுலகம் டெஸ்லாவை என்னவென்று அழைக்கவேண்டும்?
அவரின் பதிவு செய்யப்பட்ட ஐ.க்யூ புள்ளிகளாக, குறைந்தபட்சக் கணக்கான 160க்கு மேல் மட்டும் எடுத்துக்கொண்டாலே, அவர் உலகளவில் ஏழாம் இடம் பெறுகிறார். டெஸ்லா படித்து மகிழ்ந்த, ஏசி கண்டுபிடிப்பு வரைபடங்களை வரைய உந்துகோலாக இருந்த உலகப் புகழ்பெற்ற கவிஞர் கதேதான் இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார். அவருக்குப் பதிவு செய்யப்பட்ட மதிப்பீடு என்பது 210 முதல் 225 வரையிலானது.
19 பிப்ரவரி 1892 அன்று மேற்கண்ட அதே தலைப்பில், பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள, ‘சொசைட்டி ஃபிரான்காய்ஸ் டி பிஸிக்ஸ்’ என்ற அந்நாட்டின் மிகப்பெரிய இயற்பியல் விஞ்ஞான அமைப்பின் தலைமையகத்தில் உரையாற்றினார்.
அதே உரையை, நான்காம் முறையாக, மறுபடியும் பாரிஸில் நடத்த வேண்டுமென்று அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கும் ஒப்புக்கொண்டார் டெஸ்லா. ஆனால், அந்த நான்காம் உரை நிகழுமுன், டெஸ்லாவிற்கு அவரது மாமா பீட்டரிடம் இருந்து ஒரு தந்திச் செய்தி இடி போல் வந்திறங்கியது.
‘நிகோலா, உன் தாய் ஜீகா உடல்நலம் குன்றிய நிலையில் உள்ளார். உடனே புறப்பட்டு வரவும்!’ என்ற செய்தியைக் கண்டு துவண்டுபோன டெஸ்லா, உடனடியாக அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு, சொந்த ஊருக்குப் புறப்பட்டார். பிப்ரவரி மாதம் முதல், மார்ச் இறுதி வரையில், பாரிஸில் அவரது நண்பர்களையும் மற்ற விஞ்ஞானிகளையும் 1889 ஆம் ஆண்டு ஈபிள் டவர் திறப்பு விழாவில் சந்தித்தது போல, தொடர் சந்திப்புகளையும், ஆய்வுகளையும் செய்து கொண்டிருந்த டெஸ்லா எல்லாப் பணிகளையும், ஒப்புக்கொண்ட நான்காம் உரையையும் ரத்து செய்துவிட்டு, உடனடியாகத் தன் நாட்டிற்குப் புறப்பட்டார்.
ஏப்ரல் 03, 1892 ஈஸ்டர் திருநாளின் ஞாயிறன்று, இறந்துகொண்டிருக்கும் தன் தாயின் அருகே, அவரது கடைசி சில மணி நேரங்கள் மீதமிருக்கும் போது, வந்து சேர்ந்தார் டெஸ்லா. அந்த நிலையிலும், அந்தத் தாய், தன் உலகப்புகழ் கொண்ட மகனை, விஞ்ஞானத்தின் நிபுணனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.
அவரைக் கண்டதும், ‘நீ வந்துவிட்டாயா, நிட்ஸோ, என் பெருமையே!’ என்று கூறிக் கொஞ்சியிருக்கிறார். ‘நிட்ஸோ’ என்பது அவரது தாய் அவரையழைக்கும் செல்லப்பெயர். அதனைக் கேட்டு, டெஸ்லா மட்டுமின்றி, கூடியிருந்த அனைவரும் விம்மிப்போயினர். தன் தாயின் அருகிலேயே அவர் கைகளைப்பிடித்தபடி டெஸ்லா வீற்றிருக்க, மறுநாள் அதிகாலை ஒரு மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
தனக்காக ஒப்பற்ற தியாகங்களைச் செய்த அந்தத் தெய்வப்பிறவி இறந்த துக்கம் டெஸ்லாவைப் வாட்டியெடுத்தது. ஸ்மில்ஜென் பகுதிக்கு அருகிலுள்ள டிவோசெலோ என்ற ஊரில் உள்ள, ஜாசிகோவாச் நினைவுத் தோட்டத்தில், டெஸ்லாவின் தந்தை மிலுட்டின் டெஸ்லாவின் கல்லறை இருந்தது. அவருக்கு அருகிலேயே தாயைப் புதைத்த மகன், அழுது அழுது வாடிப்போனார். எதற்கும் கலங்காத டெஸ்லா தாயின் மறைவுக்குக் கலங்கியதைக் கண்டு, அவரது சகோதரிகளும் கண்ணீரில் மூழ்கினர்.
‘எனது சகோதரர் டேனின் இழப்புக்குப் பின் என்னை மிகவும் வாட்டியது, என் தாயின் இழப்புதான். என் தந்தை இருந்தபோது, ‘நான் இறந்தாலும், நீ உன் பணிகளைச் செய்வதை நிறுத்தினால், எனக்கு அது பிடிக்காமல் போகலாம்’ என்று கூறினார். எனவே, நான் எதையும் நிறுத்தாமல், துவளாமல், தொடர்ந்து முன்னேறிச் சென்றேன். அச்சமயம், என்னைத் தவிர ஆண்கள் இல்லாத என் வீட்டை, என் தாய் தான் பார்த்துக்கொண்டார். ‘நீ சென்று உன் அறிவியல் கனவுகளைத் தொடர வேண்டும் நிட்ஸோ! சகோதரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன என் தாய், சொன்னது போலவே, தன் சகோதரர்களின் உதவியுடனும், என் தந்தை விட்டுச்சென்ற குறைந்த அளவு சேமிப்பு மற்றும் தொடர்புகள் மூலமும், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார்.
‘நான் அவ்வப்போது குறைந்த அளவிலான பணம் மட்டும் தான் அனுப்பி வந்தேன். 1885 முதல் 1887 வரை, அதைக் கூட என்னால் அனுப்பமுடியவில்லை. பிறகு நான் முன்னேறி, எப்போது பணம் அனுப்பினாலும், ‘உனக்கு வைத்துக்கொண்டு அனுப்பு, இல்லையெனில் தேவையில்லை மகனே!’ என்று பதிலனுப்பி, என்னை நெகிழச் செய்தார்.
‘நான் உலகை வெற்றியுடன் வலம் வந்தபோதும் 1889ஆம் ஆண்டு, மகிழ்ச்சியுடன் அவர்களை வந்து சந்தித்தபொழுதும், அனைவரையும்விட, என் தாய் தான் மிகவும் பெருமைப்பட்டார். எனக்குத் திருமணம் செய்து வைக்க அவர் விரும்பினாலும், என் அறிவியல் ஆர்வத்தை எப்போதும் ஊக்கப்படுத்தியவர் அவர். எனக்காகவும், குடும்பத்திற்காகவும், சுய சுகங்களை விட்டுக்கொடுத்து, இறுதி வரை தியாகங்களைகச் செய்த பிறவி என் தாய் ஜீகா! இன்று நான் இவ்வளவு பெயரையும், புகழையும் பெறக் காரணம், என் தாயும் என் குடும்பத்தாரும் தான்!’ என்று 1930களில் அவர் அளித்த ஒரு பேட்டியில், கூறியுள்ளார் டெஸ்லா.
தாய் இறந்த பின், மூன்று வாரங்கள் நோய்வாய்ப்பட்ட டெஸ்லா, ஜீகாவின் சொந்த ஊரான, தற்போதைய குரோஷியாவில் உள்ள லிகாவில் தங்கியிருந்து, உடலையும் மனதையும் தேற்றிக் கொண்டார்.
மே 24ஆம் தேதி குரோஷியத் தலைநகரான ஜாக்ரெப் நகருக்கு விஜயம் செய்த நிகோலா டெஸ்லா அங்கு ஏசியைப் பற்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவுரையை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன கீழ்க்கண்ட கூற்றை, அவரது நினைவாக அங்கு கட்டப்பட்ட நினைவிடத்தில் பொறித்து வைத்துள்ளனர். ‘என் தாய்நிலத்தின் மகனாக, இந்த ஜாக்ரெப் நகருக்கு, என் அறிவியல், உழைப்பு மற்றும் செயல்களின் மூலம், அனைத்து விதங்களிலும் முன்னேற்றுவது என் கடமை!’
ஜாக்ரெப் அப்போதும் ஆஸ்திரியப் பேரரசாகத்தான் இருந்தது. 1918ஆம் ஆண்டு அது பிரிந்து, யூகோஸ்லாவியா நாடாக மாறி, பின்பு 1991ஆம் ஆண்டுதான் குரோஷியா பிறந்தது. ஆனால் டெஸ்லா அப்போதே அந்த மக்களிடத்தில், நிலத்தின் பெருமையையும் நாட்டுப்பற்றையும் விதைக்கும் விதத்தில் பேசினார் என்று அந்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் வியந்து கூறுகின்றனர்.
இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? டெஸ்லா செர்பிய நிலப்பரப்பைச் சார்ந்தவர் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அந்த இன உரிமையை, அவர் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. இதனைப் பல ஆதாரங்கள் வெளிப்படுத்துக்குகின்றன.
தற்போதைய குரோஷியா, யூகோஸ்லாவியா மற்றும் செர்பியாவின் பகுதிகள் அனைத்தையும், அவர் ஒன்றாகத்தான் பார்த்தார். இதனைத்தான் ஆய்வாளர்கள் அவரது எதிர்காலத்தைக் கூர்நோக்கும் பார்வைக்குச் சான்றாகக் கூறுகின்றனர்.
இதனை வெளிப்படுத்தும் விதமாக, ஜூன் 01, 1892 அன்று தற்போதைய செர்பியாவின் தலைநகரான பெல்கிரேட் நகருக்கு, அந்த நகரத்தின் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் சென்றபோது, ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன் நிகழ்த்திய உரையில் பின்வருமாறு கூறுகிறார்.
‘இளமை மற்றும் மகிழ்ச்சி கொண்ட உங்களைப் போன்ற அனைத்து இளம் வயதினரிடம் இருக்கும் ஏதோ ஒரு ஒளிதான் எனக்குள்ளும் இருக்கிறது. அதுதான் என்னை உந்துகிறது, உழைக்கச் செய்கிறது. இறைவனின் கருணையால் நான் எண்ணியிருக்கும் மக்கள் சார்ந்த அறிவியல் கொள்கைகளில் சிலவற்றை மட்டுமேனும் அடைந்துவிட்டேனென்றால் அது இந்த மனித சமுதாயம் முழுமைக்கும் சொந்தமானதாகத்தான் கருதப்பட வேண்டும். ஆயினும், என்னுடைய அந்த நம்பிக்கைகள் நிஜமானால் அவற்றை செயல் வடிவத்தில் கொண்டு வந்தது ஒரு செர்பியன்தான் என்று நீங்கள் பெருமையுடன் உலகெங்கிலும் சென்று பறையாற்றலாம். செர்பியதத்தனம் என்றென்றும் நிலைத்து வாழ வேண்டும்.’
இன்றைய ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, செர்பியா ஆகிய நாடுகளில் இருக்கும் செர்பிய இனத்தவர் அனைவரும், மதங்களையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து, இயன்ற அளவில், தன்னிறைவு பெற்ற செழிப்புடன், ஜனநாயகத்துடன், ஐரோப்பாவில் ஒற்றுமையாக வாழ்கின்ற உண்மை நிலைக்கு டெஸ்லா அப்போதே கட்டியம் கூறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் சிலாகிக்கின்றனர்.
அந்த உரைக்கு அடுத்த நாளான ஜூன் இரண்டாம் தேதி, அப்போதைய செர்பியாவின் இளம் அரசரான அலெக்ஸாண்டர் ஓப்ரெனோவிச்சைச் சந்தித்துப் பேசிய அவர், ஜனநாயகத்தின் வலிமையான தேவையையும், மக்களுக்கு அனைத்தும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற தனது கனவையும் தேர்தலின் மகத்துவத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். டெஸ்லா அறிவியலுக்குச் செய்த மகத்தான பங்களிப்பிற்காக 1893ஆம் ஆண்டு இதே மன்னர் அவருக்கு ‘புனிதர் சாவாவின் மெடல்’ என்னும் செர்பியாவின் பெருமைமிகு பதக்கத்தை வழங்கினார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் மறுபடியும் தனது நிரந்தர இருப்பிடமாக மாறிப்போன நியூ யார்க் நகருக்குத் திரும்பிய டெஸ்லா மூன்று வருடங்களாகத் தான் தங்கியிருந்த ‘அஸ்டோர் ஹவுஸ்’ சொகுசு ஓட்டலில் இருந்து, ‘கெர்லாச் ஓட்டல்’ என்ற இன்னொரு அதி மேன்மையான சொகுசு ஓட்டலுக்கு தனது வசிப்பிடத்தை மாற்றினார்.
அந்த ஓட்டல் பல அறிவியல் புதுமைகளோடு அப்போது சிறந்து விளங்கியது. எலிவேட்டர்கள், மிகப்பெரிய வண்ண அலங்கார விளக்குகள், விசாலமான உணவருந்தும் விடுதி என்று பல வசதிகளைப் பெற்றிருந்தது. ஒரு நாள் குறைந்தபட்ச வாடகையை பதினைந்து முதல் இருபது அமெரிக்க டாலர்கள் வரை இருக்கலாம் என்றும், மாத வாடகைக்கு எடுத்தால், அதில் பாதியளவு குறைந்த விலைக்குக்கூடக் கிடைத்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். தீயில் சேதப்படுத்தப்பட முடியாத ‘ஃபயர்ஃப்ரூப்’ முறையில் வடிவமைக்கப்பட்ட அந்த ஓட்டல், அதே வருடம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட இப்போதும் வெகு பிரபலமான மாடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு அருகில் அமைந்திருந்தது.
‘தாயை வழியனுப்பி வைத்து, உலகையும் சுற்றியாகிவிட்டது. இனி வழக்கமான பணிகளைப் பார்க்க வேண்டாமா!’ என்று எண்ணும் அளவிற்கு, வேகமாகப் பணிக்குத் திரும்பிய டெஸ்லா அதே சூட்டோடு, எடிசனுக்கு இன்னொரு பேரதிர்ச்சியினைப் பரிசாகத் தந்தார். ஆம், இரண்டு வருடங்கள் பதவிக்காலத்தோடு AIEE அமைப்பில் துணைத் தலைவராக நிகோலா டெஸ்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1893ஆம் ஆண்டு முதல் அறிவியல் ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது.
(தொடரும்)
படம்: ரேடியோ அலைகள் சாராத, இன்டக்ஷன் சார்ந்த வயர்லெஸ் பல்புகள் பற்றி தனது 1892ஆம் ஆண்டின் பாரிஸ் உரையில் டெஸ்லா பேசியபோது அதனைக் கண்ட பத்திரிக்கை ஓவியர் ஒருவர் வரைந்த நிகழ்படம்.