Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

வழக்கமாகச் சொல்லும் பழமொழிகளான “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்”, போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கவே பிறந்தவர் ராஜேந்திர சோழர். இந்திய வரலாற்றில் நாம் பார்க்கும் சிறந்த ஆட்சியாளர்களான தந்தை-மகன்களில் முக்கியமான இடம் ராஜராஜ சோழருக்கும் ராஜேந்திரருக்கும் உண்டு என்றால் அதன் பெரும்பங்கு ராஜேந்திர சோழரைச் சேரும்.

ராஜராஜரின் மனைவியான திருபுவனமாதேவி என்கிற வானவன் மாதேவிக்குப் பிறந்தவர் ராஜேந்திரர். வானவன் மாதேவி பட்டமகிஷி இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருவெண்காட்டில் உள்ள கல்வெட்டு ஒன்று ராஜேந்திரரை, திருபுவனமாதேவியார் திருவயிறு வாய்ச்சருளினவர் என்று குறிக்கிறது.

ஆடி மாதம் திருவாதிரை நாளன்று ராஜேந்திர சோழர் பிறந்தார் என்பது திருவாரூரில் உள்ள கல்வெட்டினால் தெரியவருகிறது. “நாம் பிறந்த ஆடித்திருவாதிரை நாள்” என்று ராஜேந்திரர் அதில் கூறியிருக்கிறார். இளமையிலேயே மிகுந்த அழகு படைத்தவராக மதுராந்தகன் என்ற இயற்பெயரை உடைய ராஜேந்திரர் இருந்தார் என்பதை, கன்னியாகுமாரி பகவதியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு இப்படிக் கூறுகிறது.

தஸ்ய சூனுரன (த)ஸ்ய சாஸிதா பாகசாஸன இவாரி சாசன :
சம்பராரி(ரு) சிராக்ருதிர் ந்ருப ஸ்ஸம்பபூவ மதுராந்தகாபித :

“அவனுக்கு (ராஜராஜனுக்கு) மதுராந்தகன் எனும் பெயர் கொண்ட அரசன் மகனாகத் தோன்றினான். அவன் இந்திரனைப் போன்று எதிரிகளை வெல்பவனாயும், காமனைப் போன்று அழகுடையவனாயும் திகழ்ந்தான்”

ராஜராஜருக்கு வேறு மகன்கள் இல்லை என்பதன் காரணமாக ராஜேந்திரரே அடுத்த பட்டத்திற்கு உரியவர் என்பது இளவயதிலேயே உறுதியாகிவிட்டது. அதற்கேற்ப அவருக்கு போர்க்கலைகள், குதிரையேற்றம், யானையேற்றம், தேர் ஓட்டுவது போன்றவை மட்டுமன்றி வேதங்களும் சாஸ்திரங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. இது கரந்தைச் செப்பேடுகளினால் தெரியவருகிறது.

பஞ்சவன் மாராயன்

பதவியேற்கும்போதே ராஜராஜருக்குக் கிட்டத்தட்ட நாற்பது வயது ஆனபடியால், இளவயதிலேயே ராஜேந்திர சோழர் போர்களில் ஈடுபடுத்தப்பட்டார். அவர் ஏற்ற முதல் பதவி, கர்நாடகத்தில் உள்ள பகுதிகளுக்கு தண்டநாயகராகப் பொறுப்பேற்றதாகும். கர்நாடகாவின் கிரங்கூர் என்ற ஊரிலுள்ள கோவிலில் “தனங்கடியாத பஞ்சவன் மாராயனாத ராஜேந்திர சோள” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பஞ்சவன் மாராயன் என்ற சிறப்புப் பெயருடன் ராஜேந்திரர் அங்கே பணி புரிந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அங்கே சாளுக்கியர்களுடன் நடந்த போர்களில் ராஜேந்திரர் பங்கு பெற்று சோழர்களுக்கு வெற்றி தேடித்தந்தார்.

ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலத்தில் இறுதிப்பகுதியில், அதாவது பொயு 1012ம் ஆண்டு ராஜேந்திரர் என்ற அபிஷேகப் பெயருடன் அவருக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்பட்டது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் ராஜராஜரும் ராஜேந்திரரும் இணைந்து ஆட்சி செய்தனர். ஆனால், அந்தக் காலத்தில் ராஜேந்திரர் தனிப்பட்ட முறையில் சாசனங்கள் எதையும் வெளியிடவில்லை. ராஜராஜர் பொயு 1014ம் ஆண்டில் மறைந்தபோது, முறையாக முழு ஆட்சிப்பொறுப்பையும் ராஜேந்திரர் ஏற்றுக்கொண்டார். அவருடைய இரண்டாம் ஆட்சிக்காலத்திலிருந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவருடைய முதல் கல்வெட்டுகள் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மூன்றாம் ஆண்டிலிருந்து “கோப்பரகேசரி பந்மரான ஶ்ரீராஜேந்திரசோழதேவர்” என்று அவர் சாசனங்கள் குறிக்கப்பெறுகின்றன. ராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்களை மாற்றி மாற்றி குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின் வழக்கத்தை ஒட்டியே அவரும் பரகேசரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்று தெரிகிறது. அவருடைய சாசன ஸ்லோகம்

“ஸ்வஸ்திஸ்ரீ ராஜத் ராஜந்ய மகுடஸ்ரேணி ரத்நேஷூ ஸாஸநம்
ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேஸரி வர்மணஹ”

மன்னர்களின் மணிமுடிகளின் வரிசையில் ரத்னம் போன்று திகழும் இது பரகேசரி வர்மனான ராஜேந்திர சோழனின் சாசனம்.

அரசராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜேந்திரர், ஆட்சியின் நிர்வாகச் சீர்திருத்தங்களில் சுமார் மூன்று ஆண்டுகள் வரை ஈடுபட்டிருக்கிறார். அவரது ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலிருந்தே அவரது வெற்றிகள் மெய்க்கீர்த்தி வடிவில் காணப்படுகின்றன

சாளுக்கியர்களுடன் போர்

“திருமன்னி வளர இருநிலமடந்தையும் போர்ச்செயப்பாவையும் சீர்த்தனிச் செல்வியும்” என்று தொடங்கி அவரது வெற்றிகளை மெய்க்கீர்த்தி பட்டியலிடுகிறது. அதில் முதல் வெற்றிகளாகக் குறிக்கப்படுபவை சாளுக்கியர்கள் மீது படையெடுத்து அவர் அடைந்த வெற்றிகளாகும். தனது தந்தையின் காலத்திலேயே அங்கு பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், சாளுக்கியர்களை அடக்குவதற்கு முதலில் ராஜேந்திரர் அங்கே படையெடுத்துச் சென்றதில் வியப்பில்லை அல்லவா.

இடைதுறை நாடு என்று சொல்லப்படும் கிருஷ்ணா, துங்கபத்திரை ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட கேந்திரமான பகுதியை ராஜேந்திர சோழர் முதலில் கைப்பற்றினார். அதன்பின் வனவாசி (பனவாசி), கொள்ளிப்பாகை (குல்பர்கா) ஆகிய சாளுக்கிய நாட்டுப் பகுதிகளும் சோழர்களின் கீழ் வந்தன. அடுத்ததாக ராஷ்டிரகூடர்களின் தலைநகராக இருந்த மண்ணைக்கடகம் (மானியகேடம் – மால்கேட்) வரை சென்ற சோழப்படைகள் அப்பகுதி முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. அதன்பின் கடல்கடந்து இலங்கை சென்ற சோழர்கள், அந்தத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களது குலதனமான மணிமுடியும் இந்திரன் ஆரமும் சிங்கள மன்னர்களிடம் கொடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை மீட்க, பராந்தக சோழரும் பின்னர் ராஜராஜ சோழரும் பல முயற்சிகள் எடுத்தும் அவை வெற்றிபெறவில்லை. ஆனால் அதை சாதித்தவர் ராஜேந்திரர் “முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும் தென் திரை ஈழமண்டலம் முழுவதும் மாப்பெருந்தண்டால் கொண்ட கோப்பரகேசரிவர்மர்” என்று அவரது ஐந்தாம் ஆண்டு மெய்க்கீர்த்தி இந்த வீரச்செயலை புகழ்கிறது.

அதற்குப் பிறகு மதுரை மேல் படையெடுத்துச் சென்று பாண்டிய அரசனை வென்று தனது மகன்களில் ஒருவருக்கு “சுந்தரசோழபாண்டியர்” என்ற பெயருடன் அந்த மணிமுடியைச் சூட்டி பாண்டிய மண்டலம் முழுவதையும் சோழநாட்டோடு இணைத்துக்கொண்டார் ராஜேந்திரர். தெற்கு நோக்கி மேலும் சென்ற சோழப்படைகள் சேரநாட்டு அரசனான பாஸ்கர ரவிவர்மனைத் தோற்கடித்தன. லட்சத்தீவுகளையும் முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவுகளையும் வெற்றிகொண்டன. லட்சத்தீவுகளிலிருந்து சேரர் குல தனமாகிய மணிமுடியையும் செங்கதிர் மாலையையும் எடுத்து வந்து ராஜேந்திரரிடம் அளித்தன. இதற்கிடையில் மீண்டும் கலகம் செய்யத்தொடங்கிய சாளுக்கிய அரசனான ஜெயசிம்மனை முசங்கிப் போரில் ராஜேந்திரரின் படைத்தலைவரான அரையன் ராஜராஜன் தோற்கடித்துத் துரத்தினார். “பயங்கொடு பழிமி முசங்கியில் முதுகிட்டு ஒளித்த சயசிங்கன்” என்று மெய்க்கீர்த்தி இந்த வெற்றியைப் புகழ்கிறது.

தனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு வாக்கில் இந்த வெற்றிகளையெல்லாம் அடைந்த ராஜேந்திரர், ஒரு வலிமையான தலைநகரை உருவாக்க வேண்டி கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு புதிய நகரை நிர்மாணிக்கத் தொடங்கினார். தஞ்சாவூரைப் போலவே அங்கேயும் சிவபெருமானுக்கு ஒரு கோவில் எழுப்ப ஆசை கொண்ட அவர், அதைப்போலவே ஒரு கோவிலையும் கட்டத்தொடங்கினார். அந்தக் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து நீர் எடுத்து வரவேண்டும் என்ற அவாவும் அவருக்கு இருந்தது. அதற்கேற்ப கங்கை வரை செல்ல ஒரு படையைத் திரட்டத்தொடங்கினார் ராஜேந்திரர்.

வடதிசைப் படையெடுப்பு

அவரது ஆட்சியின் பதினோராம் ஆட்சியாண்டில் இந்த வடதிசைப்படையெடுப்பு தொடங்கியது. சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் வடதிசை எல்லையான வேங்கியிலிருந்து கிளம்பிய சோழப்படைகளை அரையன் ராஜராஜன் நடத்திச் சென்றார். சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக் கோணை, பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம், ஆதிநகர், ஒட்டவிஷயம், கோசலம் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. இவை எல்லாம் தற்போதைய சட்டிஸ்கர், ஒடிசா, தெற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த அரசுகளாகும். அதன் பின் பால அரசர்களின் சிற்றரசுகளாக இருந்த தண்டபுக்தி, தக்கண லாடம், உத்தரலாடம் ஆகிய இடங்களை சோழர்கள் வெற்றிகொண்டனர். வங்காளம், பீகார் ஆகிய பகுதிகளில் அப்போது பேரரசாக இருந்த பாலர்களின் அரசனாக இருந்த மஹிபாலனின் படைகளுக்கும் சோழப்படைகளுக்கும் நடந்த போரில் சோழர்கள் பெருவெற்றி பெற்றனர். “தொடுகழற் சங்கொடு அடல் மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்து அருளி” என்று இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி.

விஜிதை: ததீய-தட-பூமி நாயகை ஸலிலம் ததீயமத பாவனம் பரம்
நிஜ நாயகாய மதுராந்தகாய தத் ஸமனீநயத் ஸபதி தண்ட நாயக:

சோழனின் படைத்தலைவன் தன்னால் வெல்லப்பட்ட அந்த நதியின் (கங்கையின்) கரையில் இருந்த அரசர்களைக் கொண்டு அந்த நதியின் புனித நீரை தனது தலைவனான மதுராந்தகனுக்காகக் கொண்டு வந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு அரையன் ராஜராஜன் கங்கை நதி நீரை கொண்டு வந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறது. இந்த புனித நீரை எதிர்கொள்ள ராஜேந்திரர், ஒடிசாவில் உள்ள மகேந்திரகிரிவரை தன்னுடைய படைகளோடு சென்றார். அங்கே வடதிசையிலிருந்து திரும்பிய படைகளை வரவேற்று, கங்கை நதி நிரப்பப்பட்ட குடங்களோடு தன் தலைநகர் திரும்பினார் ராஜேந்திரர். அங்கே கட்டப்பட்ட சிவன் கோவிலில், அந்தப் புனிதமான கங்கை நீரைக் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தினார். இந்த வெற்றியின் காரணமாக அவர் கங்கைகொண்டான் என்று புகழப்பட்டார். அவரது தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது. அந்தக் கோவிலும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில் எனப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய வெற்றிகள்

ராஜேந்திரரின் பதின்மூன்றாம் ஆண்டு கல்வெட்டுகள் அவர் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று ஶ்ரீவிஜயப் பேரரசின் மீது அவர் பெற்ற வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ராஜராஜரின் காலத்தில் சோழர்களுடன் நட்புறவு பாராட்டிய ஶ்ரீவிஜயம், வணிகப் போட்டியின் காரணமாக சோழர்களை மட்டம் தட்டத்தொடங்கியது. சீனர்களிடம் சோழர்கள் தங்களின் சிற்றரசர்கள் என்று தெரிவித்தது. இதனால் வெகுண்ட ராஜேந்திர சோழர் பொயு 1025ம் ஆண்டு ஒரு வலிமை மிக்க கடற்படையை ஶ்ரீவிஜயத்தை நோக்கி அனுப்பினார். அந்தப் படை சைலேந்திரர்களின் முக்கியத் துறைமுகங்களான கடாரம், ஶ்ரீவிஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், மாபப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தலைத்தக்கோலம், மாதமலிங்கம், இலாமுரிதேசம் ஆகிய இடங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதனால் ஶ்ரீவிஜயப் பேரரசு நிலை குலைந்து சோழர்களுக்கு அடிபணிந்தது. “அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி” என்று தொடங்கும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்திப் பகுதிகள் இந்தவெற்றிகளைப் பற்றிப் புகழ்கின்றன. இந்த வெற்றியால் சோழர்களின் வணிகத்திறன் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஓங்கியது.

இப்படிச் சென்ற இடமெல்லாம் வெற்றி கண்டு சோழர்களின் பெருமையை ஓங்கச் செய்த பிறகு ராஜேந்திரர், இளவரசராக இருந்த ராஜாதிராஜரின் பொறுப்புகளை விட்டுவிட்டு சிவபக்தியில் தன் மனதைச் செலுத்தினார். தன்னைச் “சிவசரண சேகரன்” என்று அழைத்துக்கொண்டார்.

ராஜேந்திர சோழருக்கு முக்கோக்கிழான் அடிகள், அரிந்தவன் மாதேவி, வானவன் மாதேவி, வீரமாதேவி, பஞ்சவன் மாதேவி என்ற ஐந்து மனைவிகள் இருந்தனர் . திருவிந்தளூர் செப்பேடுகள் அவரின் மனைவியாக சுத்தமல்லி எனும் ஒருவரை குறிப்பிடுகின்றன. இவர்கள் மூலம் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் ராஜேந்திரருக்குப் பிறந்தனர். அவர்களில் ராஜராஜன் என்பவர் சிறுவயதிலேயே மறைந்துவிட்டார். அவரைத் தவிர ஜயங்கொண்ட சோழன் (ராஜாதிராஜர்), தப்ரசபாபதி, வீரசோழன் ஆகிய மகன்களும் அருள்மொழிநங்கை, அம்மங்கை தேவி ஆகிய மகள்களும் ராஜேந்திரருக்கு இருந்தனர். அவரது மகள் அம்மங்கை தேவி, வேங்கி நாட்டின் ராஜராஜ நரேந்திரனைத் திருமணம் செய்துகொண்டார்.

ராஜேந்திரரின் குருவான சர்வசிவ பண்டிதர், எசாலத்தில் சிவபெருமானுக்காக ஒரு கோயில் கட்டினார். அவருக்கு ராஜேந்திரர் 2000 கலம் நெல் “ஆசார்ய போகமாக” (ஆசார்யருக்கான நன்கொடையாக) வழங்கினார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இப்படிப் பெரும் புகழுடன் ஆட்சி செய்த ராஜேந்திரரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி வீரமாதேவி உடன்கட்டை ஏறினார் என்று தெரியவருகிறது. வீரமாதேவியின் சகோதரர் மூவேந்த வேளார், விழுப்புரம் அருகிலுள்ள பிரம்மதேசத்தில், அவர்கள் தாகசாந்திக்காக தண்ணீர்ப் பந்தல் ஒன்றை நிறுவினார் என்கிறது ஒரு கல்வெட்டு. அதில் ராஜேந்திரர் மறைந்த அதே இடத்திலேயே வீரமாதேவி மறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ராஜேந்திரரின் மறைவு பிரம்மதேசத்திலேயே நிகழ்ந்தது என்றும், அங்குள்ள கோயில் அவருடைய பள்ளிப்படை ஆக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

ராஜேந்திரரின் மறைவுக்குப் பிறகு அவரது மூன்று மகன்களான ராஜாதிராஜர், இரண்டாம் ராஜேந்திரர், வீரராஜேந்திரர் ஆகியோரு ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்து ராஜேந்திரரின் ஆட்சிப்பகுதியை நிலைத்து நிற்கச் செய்தனர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *