Skip to content
Home » பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #1 – ஏழு கன்னிகள் வழிபாடு

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #1 – ஏழு கன்னிகள் வழிபாடு

நாவல் வடிவங்களில் புதிர்த்தன்மையோடு கூடியவற்றின் செல்வாக்கு மிக மிகப் பழமையானது. மகாபாரதத்தின் யட்ச பிரசன்னம், விக்ரமாதித்தியன் வேதாளம் போன்றவை தொடங்கி ஜெயமோகனின் காவிய கானபூதி வரை நீண்ட நெடிய மரபுத் தொடர்ச்சி கொண்டது. இந்தப் புதிர் வடிவக் கதை சொல்லல், புதிர் வடிவப் பாடல்கள் பல்வேறு தொல்குடி சமூகங்களின் வாய்மொழிப் பாடல் மரபில் இன்றும் நிலைபெற்றிருக்கின்றன. கலாசாரரீதியாக வரலாற்றின் நீண்ட நெடுங்காலங்களுக்குப் பண்பாட்டின் கூறுகளைக் கொண்டுசெல்லத் தொல் குடிச் சமூகங்கள் இந்தப் புதிர் வடிவச் சடங்குகளையும் புதிர்களைக் காப்பாற்றிக் கையளித்தும் தன் தொல் மூதாதையரின் ஞானத் தொகுப்பை மீட்டெடுத்துக் கொள்கிறார்கள். அப்படியான சில கலாசாரப் புதிர்களை இந்தத் தொடரில் அறிமுகம் செய்கிறேன்.

பண்பாட்டுப் புதிர்கள்/கலாசாரப் புதிர்கள் என்பவை ஒரு பண்பாட்டின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், ஞானம், அனுபவங்கள், தொல்குடி மரபின் தொடர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், அவற்றைப் பின்னால்வரும் தலைமுறையினர் உணர்ந்து இந்தப் பேரொழுக்கில் இணைந்துகொள்ளவும் சமூகத்தின் கூட்டு மனம் இணைந்து உருவாக்கி வழங்கியவை. இவை கலாசாரங்களையும் பண்பாடுகளையும் அணுகி அறிந்து கொள்வதற்கான கடவுச் சொற்கள் போன்றவை. இந்தப் பண்பாட்டுப் புதிர்கள் பெரும்பாலும் நான்கு வடிவங்களில் இருப்பதைப் பார்க்கிறோம்.

1. வார்த்தை/வாக்கியப் புதிர்கள் (Word riddles)

2. கதை விவரணப் புதிர்கள் (Narrative riddles)

3. நிகழ்த்து கலை அடிப்படையிலான புதிர்கள் (Performence based riddles)

4. குறியீட்டுப் புதிர்கள் (symbolic riddles)

பழங்கால சமூகங்கள் பிரபஞ்சத்தை எப்படி அணுகி அறிந்தன; அவர்களின் சவால்கள், அதற்கான தீர்வுகள், அவர்களின் அறிதல்கள், தொகுக்கப்பட்ட மேம்பட்ட ஞானம் இவற்றை நிலவியல், மொழி இன எல்லைகளுக்கு அப்பால் இருந்து புரிந்து கொள்ள இந்தப் பண்பாட்டுப் புதிர்கள் உதவி செய்கின்றன.

பாரதப் பெரு நிலமெங்கும் இன்றும் நீடித்திருக்கும் ஒரு பழமையான உருவ/அருவ வழிபாடு கன்னிமார் வழிபாடு. மீனவத் தொல்குடிகள் தொடங்கி வேட்டைத் தொல்குடிகள், வேளாண் சமூகத்தோர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர், புவியியல் எல்லைக்கோடுகள், கால நேர வர்த்தமானங்கள் தாண்டி இன்றுவரை வழிபாட்டில் இருக்கும் ஒரு வழிபாடு கன்னிமார் வழிபாடு. கன்னிமார் வழிபாடு எனும் கலாசாரப் புதிர் பல்வேறு நாகரிகங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளின் துணைகொண்டு பார்க்கலாம்.

பரதவர் மக்களின் முக்கியமான தெய்வங்களான வேல் நெடுங்கண்ணி அம்மை, கன்னியாகுமரி அம்மை, ஏகவீர தேவி, மும்பாதேவி, கிரேக்க ப்ரிட்டோ மார்ட்டிஸ் (Brito Martis), ப்ரைஸோ (Brizo) சீனாவின் மாஸி (Matzu), அசிரிய அடர்கெடிஸ் (Atargatis), எகிப்திய அனுகெட் (Anuket), சுமேரிய இன்னன்னா (Inanana), மயன்களின் மாமா க்வெச்சா (Mama Qucha), பெளத்த தாரா உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் கன்னித் தெய்வங்கள். இந்தக் கன்னிகளின் வழிகாட்டுதலிலேதான் அவர்கள் கடலாடுகிறார்கள்; உண்கிறார்கள்; களிக்கிறார்கள்; மறுமையும் ஏகுகிறார்கள்.

ப்ராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, வாராஹி, கெளமாரி, சாமுண்டி சில இடங்களில் ஜேஷ்டா என்று சப்த மாதாக்களாக வழிபடப்படும் நித்திய கன்னிகள். பாரதம் முழுக்க இந்த சப்த மாதர் வழிபாடு இருக்கிறது. இதன் பண்பாட்டு வேர்கள் காந்தாரம், பாரசீகம், சுமேரியா, பாபிலோனியா, கீரீட் தீவு, எலாமைட், எகிப்து, எத்தியோப்பியா, பெரு என்று ஆழ்ந்து அகன்று நீள்கிறது. கீழைத் தீவுகளிலும் பாலியிலும் மலேசியாவிலும்கூட சப்த மாதர் வழிபாடு இன்றும் இருக்கிறது. சரவாக்கில் ப்ராம் இன மக்களிடையே

இருக்கும் செங்காலாங் பூரோங் கடவுளின் ஏழு மருமகன்களே அவர்களின் முதன்மை தெய்வங்கள். ஏழு என்ற எண்ணுடன் பிணைந்து கன்னி வழிபாடு, அன்னை வழிபாடு, அப்பன் வழிபாடு என்று பல்வேறு கலாசார மாறுபாடுகளுக்கு உட்பட்டும், இந்த வகைமை வழிபாடுகள் மாறாமல் இன்றும் தொடர்கிறது.

செங்கலாங் பூராங்

கன்னிமை வழிபாடு, குமரி வழிபாடு, குமரன் வழிபாடு எல்லாமே படைப்பின் முழுமையான களங்கமின்மையின் வடிவாகவே கன்னியையோ குமரனையோ உருவகிக்கிறது. அது ஆதி தெய்விகத்தின் நேரடியான பிரதிநிதித்துவமாகக் கொள்ளப்பட்டு, இறை வடிவில் பூஜிக்கப்படுகிறது. பிரார்த்தனைகளைக் கோருகிறது மானுடப் பெருக்கு. இதன் உருவ அம்சமாகவே கன்னி ரூபங்கள், நித்திய கன்னி வகைமைகள், குமரன் வடிவம், குழந்தை வடிவிலான இறை ரூபங்கள் என்று பண்பாடுகளுக்கு தக்கவாறு மாறுகிறது.

பாபிலோனிய நாகரிகத்துக்கு முந்தைய சைபோல், அயோனிய, பேகனிய, ஹெலனிஸ  கன்னி வழிபாடுகள், கிரேக்க (ஆர்டெமிஸ், எசிடியா, ஏதெனா), ரோமானிய (வெஸ்டா, மினெர்வா, டையானா)  கன்னித்தெய்வங்கள் பின்னர் கன்னி மேரியாக பண்பாட்டு மாற்றம் பெற்று செமிட்டிக் தொன்மங்களால் செரிக்கப்பட்டுவிட்டது.

கிரேக்க கன்னித்தெய்வங்கள் – ஆர்டெமிஸ், எசிடியா, ஏதெனா

 

ரோமானிய கன்னித்தெய்வங்கள் – டையானா, மினெர்வா, வெஸ்டா

பாரதிய பண்பாட்டு வெளியில் மெளரியர் காலத்திலும் சாதவாகனர் காலத்திலும் பின்னர் குப்தர் காலம் வரையிலுமே நிறைய சப்த மாதர் திரு உருவங்கள், செப்புத் தடங்கள், ஓவியங்கள் கிடைக்கின்றன, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சைவ, வைணவ, சாக்த பெருமத வழிபாட்டில் நிலைகொள்கிறது. பக்தி இயக்கத்தின் பெரும் அலையை உருவாக்கிய தென்னகத்தில் சோழர் காலம் வரை சப்த மாதர்கள் வழிபாடு நீடித்து இருந்தது. அதன் பின்னர் நாயக்கர் பேரெழுச்சியில் சைவ, வைணவ வழிபாட்டுக்கு கிடைத்த வெளிச்சத்தில் கன்னி வழிபாடு மைய நீரோட்டத்திலிருந்து விலகிவிட்டது.

சப்த மாதர்கள் – 8ம் நூற்றாண்டு

கன்னி, குமரன், குழந்தை வழிபாட்டின் மூலவேர் படைப்பின் முழு ஆற்றலும் விண்ணின் களங்கமின்மையும் கொண்டு, தூய்மையின் பரு வடிவமாகக் குழந்தைத் தன்மை, கன்னிமை இருக்கிறது. இக உலகின் எந்த நடைமுறை அழுக்குகளோ, மனச் சமாதானமோ சென்று தொட முடியாத இடத்தில் இருக்கிறது. இது சாங்கிய தத்துவம் சொல்லும் மூல பிரகிருதிக்கு இணையான இறை நிலை என ஆதி மனம் நினைத்திருக்கிறது. அதை வழிபாட்டுக்கும் ஆட்படுத்தியிருக்கிறது. இதன் பண்பாட்டு வேர்கள் நாம் ஊகிக்க முடியாத அகாலத்தின் தோற்றத் துவக்கத்தில் இருக்கிறது. மானுடப் பேரொழுக்கின் போக்கில் இது கலாசாரந்தோறும் காலந்தோறும் புதுப் புது அளவுகளையும் பண்புகளையும் சூடிக்கொண்டு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பாரதிய கலாசாரப் பெருவெளியில் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் மொஹஞ்சதாரோவிலும் டோலாவீராவிலும் கண்டெடுக்கப்பட்ட சப்த மாதர்களுக்கு முன்னிலையில் பலி பீடத்தில் தலை கொடுக்கக் காத்திருக்கும் மானுடச் சித்திரிப்பு கொண்ட அச்சுதான் சப்த கன்னியர், சப்த அன்னையர் வழிபாட்டை வேத காலத்துக்கு முன்பிருந்த தொன்மையான வழிபாடு என ஒப்புக்கொள்ளச்செய்த சான்று (ivc, dk 6847 seal). தலையில் கிடா மகுடம் சூடியும், இரண்டு கைகளிலும் முழுமையாக வளையல்கள் அணிந்தும், விண் நெருப்பில் எழும் அன்னைக்கு முன் ஏழு அன்னையர் அல்லது கன்னியர் சாட்சியாகப் பணியும் மனிதனாக இருக்கும் அச்சுச்செதுக்கு இதன் தொன்மையை (பொ.மு 5900) நமக்கு உணர்த்துகிறது. 8000 ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியை, வழிபாட்டு நடைமுறையை நாம் பின் தொடர்கிறோம்.

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களில் 16 வது குகையான கைலாச நாதர் குகையிலும், 21 வது குகையிலும் சப்த மாதரின் சிற்பங்கள் ஆஜானுபாகுவாக, நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் இருப்பதைக் காணலாம். இதையே குஷானர் காலத்திலும் குப்தர் காலத்திலும் செய்யப்பட்ட சிற்பத் தொகுதிகளில் நாம் பார்க்கிறோம். அதற்கு முன்பாக ஏழு கல் ஆயுதங்களைக் கொண்டு வழிபடும் நடைமுறை இன்றுவரையிலும் இருக்கிறது.

தென்னகத்தில் பொ.ஆ. 207-ல் குண்டூரில் சாதவாகன அரசர் விஜயரின் காலத்தில் செய்யப்பட்ட கல் சிற்ப தொகுதி, காஞ்சி கைலாச நாதர் ஆலய சப்த மாதர்கள், பொ.ஆ 700-ல் முக லிங்கேஸ்வர ஆலயத்தின் பிரகாரத்தில் உள்ள ஏழு அன்னைகள், தற்போதைய தெலுங்கானாவில் கங்கர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள், காகதீயர்கள் காலத்திய சப்த மாதர்கள் 13-ம் நூற்றாண்டு வரையில் இருந்துவந்திருக்கின்றன. கன்னோஜில் கண்டெடுக்கப்பட்ட பிரதிஹாரர்களின் வழிபாட்டில் இருந்த ஏழு அன்னைகள் சிற்பம் 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

ஹோய்சாளர்களின் சப்த மாதர்கள் மற்றும் கோலாரில் உள்ள கோலாரம்மா ஆலயத்தில் உள்ள சிற்பங்கள், வங்கத்தின் பாலர்கள் மற்றும் தேவர்களின் அன்னையர் சிற்பத்தொகுதிகள் இதன் தொடர்ச்சியே. இந்தியச் சிற்பக்கலையின் உன்னதங்களில் ஒன்று இவை. தமிழகத்தில் பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், ஆகியோர் செய்வித்த சப்த மாதர்களின் கற் சிற்பங்கள், பாறை செதுக்குகள் தொன்மையான கன்னி வழிபாட்டின் சான்றுகளே.

இலக்கியரீதியாக குமார சம்பவத்தில் சப்த மாதர் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அதற்கு முன்பாகவே மகாபாரதத்திலும் வருகிறது. ஏழு பத்தினி தெய்வங்களின் ஆதி வேர் கன்னி வழிபாட்டில்தான் இருக்கிறது. ஈழத்தில் கன்னி வழிபாடு, பத்தினி வழிபாடு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்க தாந்திரிக நடைமுறையிலும், தென்னக வாம மார்க்கத்திலும் கன்னி வழிபாடு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. தேவி பாகவதம், தேவி மகாத்மியம், நாட்டிய சாஸ்திரம், மத்ஸ்ய புராணம், மார்க்கண்டேய புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சப்த கன்னியர் வழிபாடு பற்றிய முழு விபரங்கள் இருக்கின்றன.

புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுஜலிகை, சுமுகை என்றும் சொல்லப்படும் இந்த சப்த கன்னிகைகளின் திரு உருவம் செப்புத் திருமேனியாக, வெண்கலச் சிற்பங்களாகக் கிடைக்கிறது. பாரதப் பெரு நிலமெங்கும் ஆல், அத்தி, வேம்பு, புளிய மரங்களுக்குக் கீழும், வயல்வெளி, வாய்க்கால், ஏரி, குளங்கள், ஊர் எல்லைகளில் பீடம் அமைத்து ஏழு கல் ஆயுதங்களை நிறுவியும் வழிபடப்படும் கன்னி வழிபாடு. அந்த தெய்வங்களுக்குப் படையலாக காதோலை, கருகமணி படைக்கப்படுவது இன்றும் பழக்கத்தில் இருக்கும் ஒரு வழிபாட்டு முறை. அவைதிக பிரமாணம் கொண்ட பெளத்தத்திலும் சமணத்திலும்கூட கன்னி வழிபாடு இருக்கிறது.

ஐஹொலெ, எல்லோரா, கோலாரம்மா ஆலயம், கைலாச நாதர் ஆலய சப்த மாதர் சிற்பங்களைப்போல சோழர் காலத்தில் திருக்கட்டளையில் முதலாம் ஆதித்தியனால் கட்டப்பட்ட சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் கன்னிமார் சிற்பங்கள் இருக்கின்றன. சிற்பத் தொகுதியாக இருக்கும் கன்னிமார்களுக்கு தென்னகத்தில் தனித்தனி ஆலயங்களே இருக்கின்றன. தமிழகத்திலும் ஆந்திர கர்நாடகவிலும் இன்றும் பல்வேறுவகையில் இந்த வழிபாட்டின் தொடர்ச்சி இருக்கிறது. புதுத் துணி, கண்ணாடி வளையல், காதோலை, கருகமணி, சீப்பு, கண்ணாடி ஆகியவை பனை ஓலைப்பெட்டியில் வைக்கப்பட்டு செவ்வாய்க் கிழமைகளில் கன்னி தெய்வத்துக்குப் படைக்கும் நடைமுறை இன்று வரை தென் தமிழக, வட தமிழகக் கிராமங்களில் இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் வீட்டின் தென் மேற்கு மூலையில் தலை வாழை இலையில் படையல் போடும் வழக்கம், வயல்வெளியில் கன்னி தெய்வத்துக்கான படையல் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

இன்று நாம் காணும் சப்த கன்னியர், சப்த அன்னையர், சப்த பதிவிரதைகள் இதெல்லாம் கன்னிமை, தூய்மை, தெய்விகத்தோடு தொடர்புபடுத்தி மானுட மனம் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுகள்தான். கன்னியாகுமரி வழிபாடு, பாலா திரிபுரசுந்தரி வழிபாடு இன்றும் மிகவும் புகழ்பெற்றது. கேரளாவின் மங்கல தேவி வழிபாடு, ஈழத்தின் பத்தினி வழிபாடு எல்லாமே இந்த கன்னியர் வழிபாட்டின் பண்பாட்டு மாற்றங்கள்தான் என மானுடவியலாளர்கள் சொல்கிறார்கள். இவை எல்லாம் வைதிக வேர்களில் முகிழ்த்த வழிபாடுகள். மயிலை சீனி வெங்கடசாமி, பெளத்தத்தில் இருக்கும் கன்னி வழிபாடு பற்றிச் சொல்லும்போது அவைதிக வேர்களில் நிலைகொண்டுள்ள கன்னி வழிபாட்டுத் தொடர்ச்சி என்கிறார். நாட்டார் வழிபாட்டில் இருக்கும் கன்னி வழிபாட்டின் ஒரு கூறாக ஈழத்தில் இன்றும் இருக்கும் கப்புரால பூசக மரபை மானுடவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆயுர்வேதம், வாஸ்து, ஜோதிஷ சாஸ்திரத்திலும் இந்தக் கன்னி வழிபாட்டுக் கூறுகள் இருக்கின்றன.

வாஸ்து சாஸ்த்திரத்தில் இருக்கும் கன்னி மூலைக்கான முக்கியத்துவம், ஆயுர்வேதத்தில் இருக்கும் பால ஆதுர மருத்துவ முறைகள், ஜோதிட சாஸ்த்திரத்தில் பாலாரிஷ்ட தோஷம் அதன் நிவர்த்தி முறைகள், என்றும் பெளராணிக மரபிலும் வாய்மொழிக் கதை கலாசார மரபிலும் கன்னிமார் சாமி கதை, அன்னையர் கதை எல்லாம் இந்தப் பண்பாட்டின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பால கிருஷ்ணன், பாலமுருகன் வழிபாட்டின் வேர்களுமே கன்னி வழிபாடு குமரன் வழிபாட்டில்தான் இருக்கிறது. நவராத்திரி மற்றும் கன்னி பூஜைகள் (தாந்திரிக மரபு), வாலைக் குமரி வழிபாடு இவையும் கன்னி வழிபாட்டின் நேர் தொடர்ச்சிதான். வளம், நலம், வலிமை மற்றும் பாதுகாப்பு கோரும் வழிபாடாக இன்றும் கன்னி வழிபாடு இருக்கிறது .

இந்த கன்னி வழிபாடு பாரதம் மட்டுமல்லாமல், அக்கிமெனாய்டு, பாரசீக, பாபிலோனிய, மெசபடோமிய, சுமேரிய, ஐயோனிய, கிரேக்க, ரோமானிய பண்பாடுகளிலும் இருப்பதைக் காணலாம். கிரேக்க, ரோமானிய பண்பாட்டில் இந்த கன்னி வழிபாட்டுப் பூசகர்களின் முக்கியத்துவம் அரசரின் அதிகாரத்துக்கும் ஒரு படி அதிகமாக இருந்தது. வெஸ்டல் வெர்ஜின்கள் எனும் வெஸ்டா ஆலய கன்னிகளுக்கு அரசர் கொடுத்த மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யும் அளவுக்கு மக்களின் ஏற்பும் அதிகாரமும் இருந்தது.

வரலாற்றுரீதியாக சுமேரிய ஆசுர தெய்வங்களான இஸ்தார், இன்னானா, ஹெலனிய கிரேக்கத்தின் ஏதெனா, ஆர்டெமிஸ், எசிடியா எகிப்தின் ஐசிஸ், பஸ்ட் கிரேக்க ரோமானிய வெஸ்டா, ஹேஸ்டியா, மாயன் மீஸோ அமெரிக்க கன்னி தெய்வங்களின் வழிபாட்டு முறை மேற்கத்திய நாகரிகம் கிழக்கத்திய நாகரிகம் அனைத்திலும் வேரோடி இருக்கிறது. ஐரோப்பியப் பண்பாட்டிலும் மத்திய ஆசிய, ஆசிய, ஆப்ரிக்கப் பண்பாட்டிலும், ஏன் உலகளாவிய நெய்தல், நீரோடிப் பண்பாட்டிலும் ஆதியிலிருந்தே கன்னி தெய்வங்கள், தாய் தெய்வங்களின் வழிபாடு பெரும் மக்கள் செல்வாக்கோடு இருந்திருக்கிறது.

கன்னி, தாய் தெய்வ வழிபாட்டின் பிரதிபலிப்பு சமூக அடுக்கிலும், இலக்கியம் இன்னபிற கலை வடிவங்களிலும், அதிகார அடுக்கு முறைகளிலும் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். ஆனால் இந்த வழிபாடுகள் பின்னாளில் வலிமையான உறுதியான, எதற்கும் அஞ்சாத மாதிரியான ‘ஆண்மை’ அதிகம் கொண்ட தெய்வங்களாக மாறிவிட்டன.

கன்னி, அன்னை வழிபாட்டின் குறியீட்டு முக்கியத்துவம் மற்றும் வழிபாடு செய்வதற்கான விருப்பத்தின் ஆதார மன நிலையை முன்மாதிரி வகைமைகள் மூலம் புரிந்துகொள்ள நவீன மனோதத்துவவியலாளர்கள் முயற்சி செய்கிறார்கள். சூல் (வளம்), தூய்மை, ஞானம் ஆகியவற்றைக் குறியீட்டுரீதியாகப் பொது மனதுக்கு வழங்கும் ஆதார முன்மாதிரிகள் அடிப்படையிலேயே கன்னி வழிபாடு வடிவம் கொண்டிருக்கிறது. இந்த வழிபாட்டின் மீதான ஈடுபாடுகள், விழாக்கள், படையல்கள், அர்ப்பணிப்புகளில் பெரும் ஒற்றுமை இருக்கிறது. அடிப்படையில் பாவ நிவர்த்தி, பய நீக்கம், தூய்மையாக்கம், புத்தாக்கம், மீட்சி இவையே நோக்கம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *