Skip to content
Home » பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #2 – ஏழு கன்னிகள் வழிபாடு (தொடர்ச்சி)

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #2 – ஏழு கன்னிகள் வழிபாடு (தொடர்ச்சி)

கன்னிமார்சாமி, சப்த கன்னிகள், சப்த மாத்ரிகாக்கள், பேகனிய ஏழு தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து இறை ரூபங்களும் இரண்டு அடிப்படை வகைமைகளில் இருந்து தோன்றுகின்றன எனக் கருதுகிறேன்.

1. பயமுறுத்தும் தெய்வங்கள் / தேவதைகள்
2. காக்கும் தெய்வங்கள் / சர்வ வல்லமை படைத்த தெய்வங்கள்

இந்த இரண்டு அடிப்படை வகைமைகளிலிருந்துதான் மற்ற 12 வகைகளும் கிளைக்கின்றன. எப்படி தந்திராவில் வாம, தட்சிண மார்க்கக் கிளைகள் இருக்கின்றனவோ அப்படி.

பயம் சார்ந்த வகைமையில் வரும் கடவுள்கள்தான் மானுட மனதுக்கு மாபெரும் ஆறுதல் அல்லது மீட்பை வழங்குகிறார்கள். பயம், பதற்றம், சலிப்பு இவை மூன்றும்தான் மானுடருக்குப் பெரும் சவாலாகவும் கலைக்கு உந்து சக்தியாகவும் இருக்கின்றன. இந்த வகைமைகளை, கலை வாகனமாக்கி படைப்பூக்க உருமாற்றம் செய்யும்போது மனித மனத்துக்கு இளைப்பாறல் கிடைக்கிறது. ஆதார வகைமைகளின் முக்கிய பேசுமொழிகள் குறியீடும் சிற்பமும்தான். சப்த மாதர்கள் தொல் பழங்காலம் முதலே மானுட கூட்டுமனத்தின் கண்டடைதலாக இருந்துவருகிறார்கள்.

எதையும் தள்ளிப் போடுபவர் (The Procrastinator); விதிமுறைகளைப் பின்பற்றுபவர் ( The Rule Follower); மக்களை மகிழ்விப்பவர் (The People Pleaser); விலக்கப்பட்டவர் (The Outcast); சந்தேகப் பிராணி (The Self-Doubter); சாக்குப் போக்கு சொல்பவர் (The Excuse Maker); அவ நம்பிக்கைவாதி (Pessimist) – இந்த ஏழு நிலைகளிலான பயங்கள் மற்றும் அதன் ஏழு படி நிலைகளாக முடக்கம் (paralysis); செய் நேர்த்தியின்மை (inefficiency); அதீத அழிவு பற்றிய பயம் (Catastrophizing); தேக்கம் (holding on); (சுய) சந்தேகம் (self-doubt); சராசரித்தனம் (normalcy); நம்பிக்கையின்மை (disbelief) இருக்கின்றன.

இந்த பயங்களை நிஜத்திலும், அதீதக் கனவு நிலையிலும் நம் கூட்டு மனம் பெருக்கிக் கொள்கிறது. அதைத் தீர்க்க ‘அஞ்சேல்’ என அருளும் முத்திரையோடு இறை ரூபங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வாராகியும் சாமுண்டியும் கெளமாரியும் இப்படித்தான் நாம் அறியாமல் நம் பயத்தைக் களைகிறார்கள். காளி, ஆஞ்சனேயர், நரசிம்மர், பைரவர், சின்னமஸ்தா, துர்கா போலதான் சப்த கன்னியர்களும்.

சாத்விக, ரஜோ, தமோ குணங்களில் இந்த அடிப்படை 12 வகைமைகளைப் பொருத்தித்தான் அனைத்து கடவுள்களையும் தத்துவார்த்தமாக உள்வாங்கிக்கொள்கிறோம். கன்னிமை, நித்ய கன்னி, படைப்பின் குறியீடாக தாய் (ஜேஷ்ட தாய்) இவற்றின் வேறு வேறு வகைமைகள்தான் உலகம் முழுக்க இருக்கும் பெண் கடவுள் உருவகங்கள்.

இந்த இறை ரூபங்கள் ஏன் பயம் சார்ந்து இருக்கின்றனவென்றால் உயிர்க்குலங்களை முன்நகர்த்தும் முக்கிய விசையாக பயமே இருக்கிறது. பயம், நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கி மானுட மனங்களை ஆளுமை செய்கிறது. நமக்கெல்லாம் பிடித்த கார்ல் யூங் இந்த வகைமை பற்றிய கிழக்கத்திய விளக்கத்தை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
வரலாற்று உளவியல் (ஹிஸ்டாரிகல் சைக்காலஜி) என ஒரு தனித்துறை உருவானபின் இது தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன.

சைவ சித்தாந்தமும் பெளத்தமும் 5 முக்கியமான பயங்கள் பற்றியும் அதை வெல்லும் வழிகள் பற்றியும் தொடர்ந்து சொல்கின்றன.

பெளத்தம் சொல்லும் ஐந்து பெரும் பயங்கள்: மரணம், நோய், தன்னிலை இழப்பு, எதிர்காலம், சுயம்.

பிழையீடு, ஊழ், ஊழகம், பிரார்த்தனை, அனுஷ்டானம் வழியாக இதைக் கடக்க சமயங்கள் அறிவுறுத்துகின்றன. கிறிஸ்த்தவம் இந்த  ‘பய’ அம்சத்தைப் பெரியளவில் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டது எனலாம்.

உங்களின் பய வகைமை எதுவோ அதற்கு மீட்பு வழங்கும் கடவுளை வணங்கச் சொல்வது இதன் அடிப்படையிலேதான்.

சுய சந்தேகம் கொண்டவருக்குத் தன்னால் எதையும் சாதிக்க முடியவில்லை; தான் எதற்கும் லாயக்கற்றவர் என்ற பயம் இருக்கும்.

சாக்குப் போக்குகள் சொல்பவருக்குத் தன்னை மற்றவர்கள் குறை சொல்வார்களோ… தவறுகளுக்குப் பொறுப்பாக்கிவிடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

அவநம்பிக்கைவாதிக்கு வலி, எதிர்மறைகள் குறித்த பயம் இருக்கும்.

இந்த நோய்களை நன்கு அலசி ஆராய்ந்து என்னவிதமான பயம் இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். அதுவே அந்த வகை பயத்திலிருந்து தப்பிக்கவும் தாண்டிவரவும் தேவையான சிகிச்சைத் தர வழிவகுக்கும். நாம் எந்த பய வகைமையில் சிக்குண்டு கிடக்கிறோம் என்பது தெரிந்துவிட்டால் அவை நம் வாழ்க்கையில் என்னென்ன விதமான இடையூறுகளை விளைவிக்கின்றன; அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வழி பிறக்கும்.

இந்த இறை ரூபங்கள் ஒரு விஷ முறி மருந்து அல்லது நோய் தீர்க்கும் மருந்து என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் இருளை நீக்கி ஒளி பாய்ச்சும் தெய்வங்கள். அவர்கள் நித்ய கன்னிகள், கன்னிமை மாறாத ஈனும் தாய்மார்கள்.

இதன் அடிப்படையில்தான் உங்களின் பயத்தின் வகைமை எதுவோ அதற்குரிய மீட்பு வழங்கும் கடவுளை வணங்கச்சொல்கிறார்கள்.

பெண் தெய்வ வழிபாட்டில் ஏழு அடிப்படை வகைமைகளை நம் கூட்டு மானுட மனம் அடைந்துள்ளதாக யூங் சொல்கிறார். அன்னை (the mother), குமரி (the maiden), அரசி (the queen), வேட்டை தெய்வம் (the huntress), ரிஷி (the sage), மாந்திரிகர் (the mystic), பிரேமி (the lover). இவை அல்லாமல் கலை தேவதை (the muse), இரசவாதி (the alchemist), வன தேவதை (the wild), ஞானாம்பிகை (the wise), புனிதவதி (the sacred). இந்த பன்னிரண்டு வகைகளுக்குள்ளேயேt பெண் தெய்வங்களை வகைப்படுத்துகிறார்கள்.

அன்னை, பேரன்னை, விநதை, கத்ரு, மானஸா மாதிரியான பேரன்னை, எளிய ஏழ்மையில் இருக்கும் சகல கல்யாண குணங்கள் கொண்டவர். மகிஷாசுரமர்த்தினி, வஜ்ரதாரா, ஐசிஸ், திரெளபதி, சுபத்திரை, இன்னும் பல இணைவிகள், துணைவிகள் எல்லாம் இந்த வகைதான். பல்வேறு ஆண்களின் ரகசிய சினேகிதிக்கான ஏக்கம் இந்த வகைமையில் அடங்கும்.

சத்வ குணம் கொண்ட மேன்மை தாங்கிய வகை, சரஸ்வதி, தாரா, ப்ராம்மி எல்லாம் இந்த வகையைச் சார்ந்தவர்கள்.

ரஜஸ் நிரம்பிய ஆளுமையும் சத்வ குணமும் மிக்க எதிர் பாலினரைக் கவர்ந்திழுக்கும் தலைவி வகை. க்ளியோபாட்ரா, ராணி மங்கம்மா, அகல்யா பாய் கேல்கர், சத்யவதி, சம்வகை இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

அக்கமாதேவி, சாரதாதேவி, கவுந்தி அடிகள், மங்கையர்க்கரசி, செம்பியன்மாதேவி, இவர்கள் எல்லாம் மெய்மை நாடும் வகைமைக்கு உதாரணம்.

காதலிக்கும் கடவுள், இந்திராணி, ரதி, கெளமாரி அப்ரோடைட் எல்லாம் கன்னி, நித்ய கன்னி, தாய் முதலான வலிமையான வகைமைகள்தான்.

கற்பு, ஒழுக்கம் இவை பழம் சமூகங்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டன. அதேபோல தாய்மையும் கொண்டாடப்பட்டது. ஆனால் கன்னிமைக்கு உலக கடவுள்களில் இருக்கும் குதூகலம் தாய்மைக்கும் சற்றேறக்குறைய இருக்கிறது. கன்னியா குமரி, பாலா திரிபுர சுந்தரி ஆகியோரை நினைவில் கொள்க.

வகை மாதிரிகளைப் பொறுத்தவரை வெவ்வேறு கலாசாரவெளிகளில் வேறு வேறு பொருள் கொள்ளப்படும். அதனால்தான் சப்த கன்னிமாரில் கத்தாயியும், முத்தாலம்மனும், அந்தந்த கலாச்சாரத்துக்குத் தகுந்தாற்போல வெளிப்படுகிறார்கள். ஆனால் மானுடக் கூட்டுமனத்தின் அடி ஆழத்தில் இவை அனைத்தும் ஒரே கலாச்சார வேரிலிருந்தே முகிழ்ந்து வருகின்றன.

கன்னிமை என்பது கலாசாரப் புலங்கள் தோறும் புதுப்புதுவிதமாகப் பொருள் கொள்ளப்படுவதைப் பார்க்கலாம். இன்று கன்னிமை என்பது பொதுத்தளத்தில் பாலியல்ரீதியான ஒறுப்பு எனக் கொள்ளப்படுகிறது. ஆனால் தத்துவார்த்தத் தளத்தில் தூய்மை, சிறுமைகள் சிறிதும் அண்டாத சீராண்மை, தூய அறிவு ஆகியவற்றின் குறியீடாகத்தான் பல்வேறு கலாசாரங்களில் பொருள் கொள்ளப்படுகிறது.

கற்பு பற்றி ஜெயமோகன் சொல்வது அப்படியே கன்னிமைக்கும் பொருந்தும். கன்னிமை என்பது தூய அறிவின் துலக்கம், ஆழ்ந்து அறிந்த அறிவு. இவை கற்பு என கொளளப்பட்டது. பின்னர் கம்பர் காலத்திலேயே பிறன் மனம் புகா கற்பு என்னும் அளவுக்கு தமிழ் கலாசாரப் பெருவெளியே மாறிவிட்டது.

பைசாண்டிய இறையியலாளர்கள், விக்டோரிய ஒழுக்கவியல் ஆகியவற்றுக்குப் பிறகே கற்பு, கன்னிமை பற்றிய நம் பண்பாட்டுப் பார்வையில் இந்த மாற்றம் என்றுதான் ஆரம்பத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் சங்கம் மருவிய காலத்திலேயே நாம் சுதந்திர பெண்ணிய மைய சமூக நோக்கிலிருந்து மாறி கற்பை ஒழுக்கத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம் என நினைக்கிறேன்.

பாரதக் கூட்டு மனதில் கற்பு ஒழுக்கத்துக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நல்லொழுக்க அலகுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு முன், அதற்குப் பின் என்று பகுப்பாய்வு செய்தால் இன்னும் நுட்பமாக விளங்கிக்கொள்ளலாம். இந்த கற்புக் கோட்பாடு பெண் மைய சமூகங்களில் எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது என்றும் தனியாக ஆராய்ந்தால் புதிய அறிதலை வழங்கலாம்.

மறுமலர்ச்சி கால கட்டத்துக்குப் பிந்தைய ஐரோப்பியக் கலாசார வெளியில் கற்பும் இறையியலும், மிகவும் இறுகிய பைசாண்டிய மற்மலர்ச்சி மற்றும் ரோமாபுரியின் அழிவுக்கால ஐரோப்பிய கலாசார சூழலுடன் ஒப்பிடப்பட்டு ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தால் கூடுதல் புரிதல்களை பெரக்கூடும்.

ஒருபுறம் அழகு, கற்பு, பணிவு, தாய்மை போன்றவற்றைப் பேசுகிறோம். பெண்மையின் ஏமாற்று, கொடூரம் போன்ற இருண்மை அம்சங்களையும் நாம் பேச வேண்டியது அவசியம். சுமேரிய தெய்வமான சக்யூபஸ் பழைய ஏற்பாட்டில் வரும் லிலித்தோடு மிகவும் நெருங்கிய தெய்வம். மிகவும் தந்திரமான, சூனியக்கார இருண்மை தெய்வம். யூத நாட்டாரியல் தொன்மங்களில் ஆதாமின் முதல் மனைவியாக வந்து பாலியல் இன்பத்தைக் கொடும் அனுபவமாக்கும் பெண். ‘வெண்முரசு’ நாவல் வரிசையில் ஜேஷ்டை பற்றிய வர்ணனைகள், புஷ்கரன் வேட்கும் மூதன்னையின் குணங்கள் ஆகியவற்றில் ஆச்சர்யப்படத்தக்க ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.

அக்கேடிய, சுமேரிய இஸ்தர், இனைனாவுமே சில நேரங்களில் தங்கள் இருண்மையை வெளிப்படுத்துவார்கள். நம் பகாளமுகி, சின்னமஸ்தா மாதிரி (தன் தலையைக் கொடுக்கும் சின்ன மஸ்தா). அவலச்சுவைக்காக டார்த்தீனியம், ஆலம் போன்ற படைப்புகளில் இந்த குணங்களை ஜெயமோகன் கையாண்டிருப்பார்.

இனைனாவுக்கான துதி, கில்காமேஷ் முதல் நவீன காவியம் வரை கன்னியரும் அன்னையரும் கொள்ளும் விஸ்வரூபமே நம் தரிசனம். இந்த விராட விஸ்வரூபத்துக்கு கலாசார, நிலவியல், பண்பாட்டு எல்லைகள் எதுவும் கிடையாது. பண்பாட்டுப் புதிர்களில் முதன்மையானதும் சிக்கலானதுமான கன்னி-அன்னை தெய்வ வழிபாடு இன்னும் நமக்குப் பல திறப்புகளைக் கொடுக்கவல்ல பண்பாட்டுப் புதிர்தான்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *