Skip to content
Home » பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #3 – அன்னை வழிபாடு: பெண் தெய்வ வழிபாடு

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #3 – அன்னை வழிபாடு: பெண் தெய்வ வழிபாடு

தொல்குடி சமூகங்கள், பழமையான வேட்டை, சேகரிப்பு சமூகங்கள், வேளாண்மை செழித்து எழுவதற்கு முன்பான வெண்கலக் கால கட்ட நாகரிகங்கள், கற்காலப் பண்பாடுகள், அனைத்திலும் அன்னை வழிபாடு, கன்னி வழிபாடு உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாடுகள்தான் பெரும்பாலும் இருக்கின்றன. இதற்கான பண்பாட்டு, மானுடவியல் காரணிகளாக மானுடவியலாளர்கள் சொல்லும் காரணங்கள் இந்தப் பண்பாட்டுப் புதிரை விடுவிக்கச் சில வெளிச்சங்களைக் காட்டுகிறது.

கரு வளம் – படைப்பு (பிறப்பு) – (மறு) உருவாக்கம் இந்த மூன்று நிலைகளையும் முப்பெரும் பெண் தெய்வாம்சம் என்று மானுடவியலாளர்கள் முன் வைக்கிறார்கள். தொல்குடி சமூகங்களில் பேறு, உருவாக்கம் ஆகியவற்றைப் படைப்போடு இணைத்துப் புரிந்து கொள்கிறார்கள். அதைத் தாண்டி தாய்மை பற்றிய பெருமிதம், இறையுணர்வாகவும், இயல்பான தலைமை வழிபாடாகவும் பேருருவம் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மூலச் சிந்தனை உந்துதலை நிலம் எனும் தாய் உருவகம் வழியாகவே மானுட மனம் உள் வாங்கிக்கொண்டிருக்கிறது.

உலகளவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள வழிபாட்டுச் சின்னங்களில் ஹோலே பெல்ஸ் குகையில் கிடைத்த வீனஸ் (venus of hohle fels) தந்தத்தால் செய்யப்பட்ட சுமார் 35,000 ஆண்டு பழமையான பெண் சிற்பம். 6 செமீ உயரம் உள்ள பருத்த மார்பகங்களும், பிரசவித்த வயிறும், பெண்ணுறுப்பும், அகன்ற பிருஷ்டங்களும் உடைய தாய்த் தெய்வ உருவம். இது ஜெர்மனியில் கிடைத்தது.

அடுத்த பழமையான தாய்த் தெய்வ உருவம் வெலெண்டோவில் கிடைத்த வீனஸ் ( venus of willendorf). இது சுமாராக 30,000 ஆண்டுகளுக்கு முன்பான பெண் சிற்பம். ஆஸ்திரியாவில் கண்டறியப்பட்ட இந்த 11.1 செமீ உயரச் சுண்ணாம்புப் பாறைச் சிற்பச் செதுக்கல் தளர்ந்த மார்பகத்தோடு அகன்ற வயிறும், பெரும் பிருஷ்டமும் கொண்ட பேரன்னையின் பெரு வடிவம். 1908 லேயே கண்டறியப்பட்டது.

சுடுமண் சிற்பமான வெஸ்டோனிஸ் வீனஸ் (venus of dolni vestonice) என அறியப்படும் செக்கஸ்லோவோக்கிய அன்னை, சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது. இதுவும் அன்னை சிற்பம், பிரசவித்த பேரிளம் பெண்ணின் உருவம். செக்கஸ்லோவாக்கியாவின் ஆஸ்ட்ராவா பகுதியில் கண்டறியப்பட்ட  பெட்கோவிஸ் வீனஸ் (venus of petrkovice)  இரும்புத் தாதுப்பாறைகளிலிருந்து வடிக்கப்பட்டது. 20,000 முதல் 22,000 ஆண்டு வரை பழமையானது எனக் கணக்கிடப்படும் இந்த சிற்பம் ஒரு பெண்ணை அரு உருவமாக உருவகப்படுத்திய சிற்பம்.

ப்ராஸம்பாய் (brassempouy) பகுதியில் வெறும் முகம் மட்டும் கிடைக்கும் சுடுமண் சிற்பம், ககாரினோ, கோஸ்டனக்கி ஆகிய இடங்களில் கிடைக்கும் அன்னை சிற்பங்களோடு நாம் லாவ்ஸல் அன்னை  (venus of laussel) சிற்பத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் காண்கிறோம். சுண்ணாம்புப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள இந்தப் புடைப்புச் சிற்பத்தில் அன்னை ஒரு கொம்பை ஏந்தி இருக்கிறாள். இது சுமார் 14,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பம்.

இதற்கு அடுத்ததாக மொன்ரூஸ் வீனஸ் (venus of monruz) இதுவும் எங்கன் எனும் ஜெர்மானியப் பகுதியில் கிடைத்த ஒரு கருவுற்ற பெண்ணின் தோற்றம் தான். சுமாராக 11,000 முதல் 15,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனத் தொல் பொருள் ஆய்வாளர்கள் குறிக்கும் இந்தச் சிற்பம், இதற்குப் பின்னர் 10,000 ஆண்டுகள் பழமையான கேட்டில் ஹயாக் அன்னை, வளர்ப்புச் சிங்கத்தோடே காட்சி தருகிறார்.  இந்தச் சிற்பங்களை, பழங்காலத்திய வழிபாட்டுப் பண்பாட்டில் எப்படிப் பெண் மைய அச்சாக இருக்கிறாள் என்பதற்கான முதன்மையான ஆதாரங்களாகக் கொள்ளலாம். இதற்கு அடுத்த நிலையில் சிந்து சரஸ்வதி நாகரிகத்தில் வளையல்களைத் தோள் வரை அணிந்து நடன அர்ப்பணம் மூலம் இறை வழிபாடு செய்யும் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகத்தின் நாட்டிய மங்கைச் சிற்பத்தையும், அதிலிருந்து நாயக்கர் கால ரதி, ஒப்பனை செய்யும் சிருங்கார மகளிரின் சிற்பம் வரையிலும் இந்தப் பண்பாட்டுக் கோட்டை நீட்டித்துப் பார்க்கலாம்.

அன்னை பிரசவிக்கிறாள்; உயிரைப் படைக்கிறாள்; நில அன்னை உயிர்க் குலங்களைப் பாதுகாக்கிறாள்; அவர்களைத் தாங்குகிறாள்; காப்பாற்றுகிறாள்; உயிர் ஊட்டுகிறாள்; மகிழ்ச்சியை அளிக்கிறாள். அன்னையையும் அதன் பதிலீடாகத்தான் மானுட மனம் உருவகித்து வழிபட்டிருக்கிறது. பாரதியத் தொன்மங்களில் பூமா தேவி, அன்னையாகவே உருவகிக்கப்படுகிறார். மைசீனியாவிலும், மினோவிய நாகரிகத்திலும், தொல் கிரீட்டிலும், சுமேரிய, பாபிலோனியத் தொன்மங்களிலும் நிலம் பெண்ணாகவே உருவகிக்கப்படுகிறது. மத்திய ஆசியத் தொன்மங்களிலும்  மேற்கத்தியத் தொன்மங்களிலும், செமிட்டிக் தொன்மங்களிலும் வரும் கையா (gaia) எனும் அன்னை வழிபாடு பற்றிய உச்சாடனங்களைப் பாருங்கள்.

அவள் எல்லா உயிரினங்களுக்கும் தாய்.

அவளே உணவு மற்றும் இல்லம்.

அவள் உயிரை நிலைநிறுத்துகிறாள்.

அவள் உயிரைப் பாதுகாக்கிறாள்.

அவள் வழிதவறிச் செல்பவர்களை அழிக்கிறாள்.

அவள் சமநிலையைப் பராமரிக்கிறாள்.

அவள் பொருள் மற்றும் ஆற்றல் பாயும் சுழற்சியும் அவளே.

அவள் கிரகம்.

அவளே கிரகத்தின் செயல்முறைகள்.

அவள் அலோஸ்டாஸிஸ் மற்றும் ஹோமியோஸ்டாஸிஸ் இரண்டும்.

அவள் கையா.

கிரேக்க ஆன்மவியலில் உள்ள தெய்வங்கள் தேவதைகள் பற்றிய  தியோகனி எழுதியுள்ள ஹேஸியாட், கையா எனும் புவி அன்னை பற்றிப் பதிவு செய்துள்ள   உச்சாடன உதாரணங்களையும் பாருங்கள்.

பொ.மு. 1400 காலத்தைய மினோவிய கிரீட்டின் நாக கன்னிகள் வழிபாட்டுத் தடங்கள், ஒரு மிகப் பெரிய வழிபாட்டுத் தொடர்ச்சியின் முக்கிய கண்ணி. ஆதி மனம் பெண் சக்தியை மானுட உருவாக்கத்தின் மைய அச்சாக உணர்ந்திருக்கிறது. கருணையை அன்பை, காதலை ஆற்றலை, இறை அனுபவமாக உணர்ந்த ஆதி மனம் பெண்ணை வழிபாட்டு இறை ரூபமாக உணர்ந்து வழிபட்டு வந்திருக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பு சக்தியாகப் பெண்மையை உணர்ந்த மானுட மூதாதையர்கள் அதனை ஒருங்கிணைந்த ஓர் அன்னை வழிபாடாக நெறிப்படுத்தி வழிபட்டனர். கையாவைப்போலவே இனானாவை வழிபடும் என்ஹிடுடைவானாவின் ஆதி காவிய ஸ்லோகங்களையும் இன்றைய லலிதா சகஸ்ர நாமங்களையும் பாருங்கள் பெரும் ஒற்றுமை தெரியும்.

அன்னை ஒரு வழிபாட்டு தெய்வம் போலவே கன்னிமையும் தத்துவார்த்தப் பொருளேற்றமும் பெற்று வழிபடத்தகுந்த ஓர் அனுபவமாகத் தானாக வளர்ந்து வந்திருக்கிறது. கன்னி உருவக வழிபாட்டில் கட்டற்ற ஆற்றல், புதிய துவக்கம், சிந்தனைப் பெருவெள்ளம், தூய்மையான ஒரு சக்தி வடிவாகக் கன்னிமையை மானுடக் கூட்டு உள்ளம் கொண்டாடி வழிபடுகிறது. கன்னி, தாய், பேரிளம் பெண் வழிபாடு எனும் உருவகமும் இதன் தொடர்ச்சியே. மேற்கத்திய மனங்களிலிருந்து மனோவியலாளர்களும் மானுடவியலாளர்களும் தங்களின் அறிதல்களைக் கட்டமைத்து முன்வைக்கிறார்கள். கிழக்கத்திய மனங்களுக்கு இந்த பேதங்கள் இல்லை. 8000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் சாக்தம் மிக மிக வலிமையான ஒரு வழிபாட்டுச் சமயம்தான்.

பாரதத்தின் பண்பாட்டு வேர்களில் அன்னை வழிபாடு ஓர் அடிப்படையான மையமாக இருக்கிறது. மேலை மனங்கள் பெண் மைய சமூக அமைப்புதான் அன்னை தெய்வங்கள் மற்றும் கன்னி தெய்வங்களுக்கான மூலாதாரம் எனச் சொல்லும் போது கிழக்கத்திய மனங்கள் அதைக் கொஞ்சமும் கணக்கில் கொள்ளாமல் பிரபஞ்சப் பெருக்கே அன்னையின் திருவிளையாடல் மட்டுமே என உணர்ந்து அதை இன்றும் நடைமுறையில் கொண்டிருக்கிறது. மரபியல்ரீதியாக சிந்தஸ்ட்டா, யமன்யா, ஜாக்ரோஸ், ஆண்ட்ரனோவா மூதாதைகள் அன்னை தெய்வ வழிபாடுகளையும் ஆண் மைய தெய்வங்களையும் சம அளவில் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜாக்ரோஸ் வேளாண்குடிக்கும், ஸ்டெப்பி புல் வெளி மேய்ப்புக்குடிக்கும் முன்பான தொல் அசிரிய, தொல் சுமேரிய, தொல் பாபிலோனிய, அயோனிய, மைசீனிய நாகரிகங்களிலும் அதே அளவு தொன்மையான சிந்து சரஸ்வதி நாகரிகத்திலும் அன்னை தெய்வங்கள், கன்னி தெய்வங்கள், பேருரு கொண்டு எழுந்து நிற்பதைக் காணலாம்.

யூரேசியா, மத்திய ஆசியா, ரஷ்ய, பாரதியப் பெரு நிலங்களில் வேர் கொண்டிருக்கும் இந்தக் கன்னி, அன்னை, மூதன்னையின் வழிபாடு பின்னர் தத்துவார்த்தமாக மாறி வேத கால நாகரிகத்தில் அன்னையைக் குறித்துச் சொல்லப்படும் பொழுது உயிரின் மூலாதாரணமான அக்கினியின் வடிவாக ஜாத வேதியான அன்னை என வடிவம் கொள்கிறாள். சுமேரியாவிலும் பாபிலோனிலும் கூட இனானா, பெண்ணின் நாபிக்குழியில் உறைபவளாக வழிபடப்படுகிறாள். தொப்புள் கொடியில் உறையும் உயிர் அவள் என சுமேரியத் தொன்மங்கள் சொல்கின்றன.

நாக வடிவிலும், நிலவு வடிவிலும், நில வடிவிலும் பெண் தெய்வங்கள் வேட்டை, சேகரிப்பு சமூகங்களில் கொண்டாடப்பட்டன. நாகத்தைப் பிறப்பு, இறப்பு, ரகசியம், ஆகியவற்றின் பரு வடிமாகவே தொல் சமூகங்கள் பார்த்தன. நிலவு வளர்தல், தேய்தல் ஆகியவற்றைப் பெண்ணின் மாதாந்தரக் கருவியல் சுழற்சியோடு இணைத்தும் புரிந்துகொண்டன. நிலவும் பிறப்பு, இறப்பு, மறு பிறப்பு, வளம் மற்றும் படைப்பின் விண்ணகக் குறியீடாகத்தான் பார்க்கப்பட்டது. எகிப்தியச்  சூரியக்கடவுளான ரா, அமுன், அட்டூன் ஆகியவற்றுக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பே நினா சுமேரியாவிலும்  ‘அல் உஸ்ஸா’ அரேபியாவிலும் பெரும் பின் தொடர்ச்சியைக் கொண்ட வழிபாட்டு முறை.

மெகாலித்திக் சின்னங்களில் பெரும்பாலும் நிலவின் தடம், நிலவின் விண் பயணத்தை ஒட்டிய வடிவ ஒற்றுமைகளை வானியலாளர்கள் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். பெருங்கற்காலக் கல்வட்டங்கள், கல் திட்டைகள், பதுக்கைகள் அனைத்தும் வானியல் ரீதியாக நிலவு மையக் கோள் சுழற்சியைக் குறியீடாகக் கொண்டவை. நிலவு இன்று வரை நளினமும் வசீகரமும் கொண்ட பெண்ணாகவே தொன்மங்களில் இருக்கிறது. பாரதியப் பண்பாட்டில் மனோகாரகனான சந்திரன் பெண் தன்மை மேலோங்கியவனே. இவை எல்லாவற்றையும் பெருங்கற்காலத்துக்கு வெகு முன்பிருந்து தொடர்ந்து வரும் பெண் மைய நிலவு தெய்வ வழிபாட்டின் பண்பாட்டுத்தடமாகவேதான் கொள்ளவேண்டும்.

மினோவிய கிரீட் தீவின் நாக அன்னையர், நிலவு அன்னையர், புவி அன்னையர் வழிபாடு எல்லாம் பின்னர் கிரேக்கத்திலும், எகிப்திலும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பின்னர் செமிட்டிக் மத நிறுவனங்களின் ஆண் மைய நோக்கு, அதன் நிறுவனமயமாக்கல் எல்லாம் மதம் என்ற நிலையிலிருந்து அரசியல் மதமாக, அதிகார பீட அரசியல் நிலைப்பாட்டை மத சட்டகத்தில் சமைத்தன. அதன் காலனியாக்க அதிகார வேட்கையின் ஊடகமாக மத அதிகாரத்தைக் கட்டமைத்தது. ஆண் மைய நோக்கு, ஒற்றைப்படியான இறை வழிபாடு, பிரமிடு அதிகார அடுக்கு, அடிமை முறை, காலனியாதிக்கம் ஆகிய அரசியல் ஆயுதங்களை கலை, வரலாறு, தத்துவம்,  பண்பாடு, தொன்மக்கதைகள் வழியாகவும் சதிக்கோட்பாடுகள், அச்சுறுத்தும் குற்றக்கோட்பாடுகள். பயமுறுத்தல்கள் வழியாகவும் தொடர்ச்சியான பயிற்றுவித்தல், பண்பாட்டு ஊடுருவல் மூலமும் உலகளாவிய அளவில் நிறுவியது.

ஆனால் பண்பாடு, கலாசாரம், வழிபாடு இவை எல்லாம் இப்படியான ஒற்றை அடுக்கு சதிக்கோட்பாடுகள், வரலாற்றுப் பொருள் முதல்வாத முலாம், தத்துவார்த்தக் கருத்து முதல்வாத முலாம் எல்லாம் பூசிக்கொண்டு சிலர் எடுக்கும் முடிவை ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பெருவெளியும் ஏற்று எதிரொலிக்கும் என்பதெல்லாம் வெறும் கற்பனை மட்டுமே. கிழக்கத்திய மானுடவியலாளர்கள், தொல்லியல் ஆய்வறிஞர்கள், மரபணு விஞ்ஞானிகளில் பலர் செமிட்டிக் எழுச்சியே அன்னை வழிபாட்டு முறையின் அழித்தொழிப்புக்குக் காரணம் எனப் பல்லாயிரக்கணக்கான ஆய்வுகளை அறிவியல்பூர்வமாக நிறுவினாலும் கல்விப்புலங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி மார்க்ஸிய மதவாதிகள் அதை ஒப்புக்கொள்வதில்லை. கத்தோலிக்க துணை மதமான மார்க்ஸியத்தின் வழியில் செமிட்டிக் அற்ற இறை நீக்கக் கோட்பாடுகள் மூலம், பழைய புதிய ஏற்பாடுகளுக்கேற்ப ஆய்வு முடிவுகளை அவர்கள் முன்வைப்பதைப் பார்க்கலாம்.

மைசீனிய கிரேக்கப் பண்பாட்டு விளை நிலமான கிரீட்டில் 70க்கும் மேலான தீவுகளில் 90 க்கும் மேற்பட்ட பெண்வழிபாட்டு நடைமுறைகளை கிரீட்டிய தொல்பொருள் ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பெண்கள் குழுத்தலைவர்களாக, படைத்தலைவர்களாக, ஆலயப் பூசகர்களாக, சடங்கு நிகழ்த்துபவர்களாக, நீதி பரிபாலனம் செய்பவர்களாக இருக்கிறார்கள். வீர விளையாட்டுக்கள், தடகளங்கள், மல்யுத்தம், குதிரை ஓட்டம் உள்ளிட்ட அனைத்திலும் ஆணும் பெண்ணும் சரி நிகராகக் கலந்துகொள்வதை க்ரிட்டின் நாஸ்ஸ்தீவிலும் சாண்ட்டினோரி தீவிலும் இருக்கும் ப்ரெஸ்கோ சுவர் ஓவியங்கள், அச்சு முத்திரைகள், அரசு ஆவணங்கள், தொல்லியலாளர்கள் காட்சிப்படுத்தி இருக்கும் அரசாணைகள், நில ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஏறு தழுவல் முதல் குதிரை ஓட்டம் வரை ஈடுபட்டது, பெண்கள் பாகுபாடின்றிப் பணி செய்வது, படை நகர்வை மேற்பார்வையிடுவது, தெய்விகச் சடங்குகளை முன்னின்று நிகழ்த்துவது  முதல் நீதி பரிபாலனத்தில் தண்டனை நிறைவேற்றுவது வரை பெண்கள் தலைமையேற்று நிகழ்த்துவது ஆகியவற்றைப் பார்க்கும் நாம், மைசீனிய அயோனிய பண்பாட்டு அடித்தளத்தில் இருந்த மேலெழுந்த செமிட்டிக் கிரீஸில் புணர்வுக்குக்கூட பெண்களைத் தேர்வு செய்யக்கூடாது என்பது போன்ற நடைமுறை வந்ததைப் பார்க்கிறோம்.

இந்தப் பண்பாட்டு மாற்ற அதிர்வு எகிப்திலும், கிரேக்கத்திலும், ரோமிலும் எதிரொலிக்கிறது. ஒட்டுமொத்த மத்திய தரைக்கடல், யுரேசிய நாகரிகங்களும் இதை ஏற்று எதிரொலிக்கின்றன. இதன் தாக்கம் பாரதத்திலும் தென்படுகிறது. கீழை ஆசிய நாடுகள் மட்டுமே இந்த செமிட்டிக் அரசியல் அதிகாரச் செயல்களுக்குச் செவி சாய்க்காமல் தங்களின் தாய்வழிச் சமூக வழிபாட்டு முறையை இன்றும் கைக்கொண்டு வருகிறார்கள். பர்மா, கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, லாவோஸில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

பண்பாட்டு ரீதியாக வேட்டைச் சமூக வாழ்க்கையிலிருந்து வேளாண் குடி சமூக வாழ்க்கைக்கு மாறியபோதே கொஞ்சம் கொஞ்சமாக  அன்னை மைய சமூகங்கள், ஆண் மைய சமூகங்களாகப் பரிணாம மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடு இறை வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் எதிரொலித்ததன் விளைவாகவே ஆண் மைய நோக்கு கொண்ட பல் இறை, ஓரிறை வழிபாட்டு மரபு எல்லா நாகரிகங்களிலும் மேலோங்கத் தொடங்குகிறது. ஆனால் கிழக்கத்தியப் பண்பாட்டுவெளியிலும், கிழக்கத்திய மனங்களிலும் அன்னை வழிபாடு, கன்னி வழிபாடு வெவ்வேறு வகையில் வேர் கொண்டு கிளைத்து மலர்ந்து பரவி நிற்கிறது. அரசு, ஆட்சி அதிகாரம் சொத்துரிமைகளில் பெண்ணுக்கான உரிமைகள் குறைபட்டபோதும், இறை வழிபாட்டுத் தளத்தில் அன்னை வழிபாடும் கன்னி வழிபாடும் உள்ளார்ந்த ஆற்றலோடு அப்படியே இன்று வரை தொடர்கிறது. வேத நாகரிகச் செல்வாக்கால்கூட இதைப் பதிலீடு செய்ய முடியவில்லை. இன்றும் பாரதம் முழுவதும் உள்ளவர்களின் குல தெய்வம் பெண் தெய்வம்தான். உடன் இன்னொரு காவல் தெய்வமாகத்தான் ஆண் தெய்வம் இருப்பதைப் பார்க்கலாம்.

மியான்மரிலும், பிலிப்பைன்ஸிலும், இந்தோனேஷியாவிலும், கம்போடியாவிலும் பெண் ஆட்சியாளர்களின் கீழ் வாழ மக்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் செமிட்டிக் மத நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் இருக்கும் அரேபியா முதல் அமெரிக்கா வரை பெண் ஆட்சியாளர்களை மட்டுமல்ல; பெண் வரலாற்று ஆசிரியர்கள், பெண் தத்துவவியலாளர்கள், ஓவியர்கள், கலைஞர்களைக்கூட அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை, அவர்கள் சமைக்கும் வரலாற்றிலும்கூட பெண்களுக்கு இடமளிக்க உறுதியாக மறுக்கிறார்கள். அதற்குப் பல்வேறு தத்துவார்த்தப் பூச்சுகளைப் பூசி நயம் போல நம்பச்செய்யும் சாகசக் கலையிலும் மேலைப் பண்பாட்டு ஆய்வாளர்கள், பெரு வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். செமிட்டிக் மத அரசியல் அதிகார நிறுவனங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய, மார்க்ஸிய நிறுவனங்கள் இந்த ஆதிப் பண்பாட்டுச் சிதைவை இன்றும் வெற்றிகரமாகத் தங்களின் பண்பாட்டு, கலாசார, தத்துவார்த்த அடியாள்கள் மூலமாகவும், அரசு, மத நிறுவனங்கள் மூலமாகவும் மூர்ககத்தனமாகச் சாதித்து வருகிறார்கள்.

இப்படி மையப்படுத்தப்பட்ட ஒரு குறுங்குழு, ஒட்டுமொத்தப் பண்பாட்டையோ நாகரிகத்தையோ முழுவதுமாகக் கையகப்படுத்திக் கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.  தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவதிகாரத்தை கலாச்சார, பண்பாட்டு அடியாட்கள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்தி தான் விரும்புவதை நிலைபெறச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. அதே நேரம் இப்படி நடந்துகொண்டிருப்பதை மறுக்கவும் முடியவில்லை. இது ஒரு வேதனையான வேடிக்கையான நகைமுரண்தான். அந்த அளவில் இந்த அன்னையர் வழிபாடு, கன்னியர் வழிபாடு, பெண் மைய நோக்கு சமூகம் உள்ளிட்ட பண்பாட்டு அலகுகள் முற்றிலும் அந்நியமாயமாக்கப்பட்டதோடு, சூனியக்காரி வேட்டை (விட்ச் ஹண்டிங்) மாதிரியான எதிர் செயல்பாடுகள் மூலமாகப் பெண்களின் அரசியல் அதிகாரத்தைத் சமூக அடுக்கில் அழுத்தி அடிமையாக்கி இரண்டாம் தரக் குடிகளாக்கிவிட்டன. இந்த எதிர் கலாசாரச் செயல்பாட்டில் செமிட்டிக் மத நிறுவனங்களும் ஒற்றைக் கடவுள் தத்துவ மதங்களும் 2500-3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஓர் அபாயகரமான கலாச்சாரப் புதிர்தான்.

வேட்டை, சேகர சமூகம் அதிலிருந்து நாடோடி, மேய்ச்சல், வேளாண் சமூகங்கள், அதன் பின் தொழில் பாய்ச்சல் சமூகம் என நகர்ந்துவந்த நிலையில் அதாவது  வாழ்க்கை முறை மாறுந்தோறும் வாழ்க்கை நம்பிக்கைகள், வழிபாட்டு வழிமுறைகள்  மாறிவந்துள்ளன. அனைத்தினூடாகவும் ஓர் ஆதார நம்பிக்கை அடியோடிக்கொண்டுதானே இருக்கும்.

கருவளம், பிறப்பு, உருவாக்கம் என ஆக்கபூர்வ அம்சங்களோடு நின்றுவிட்ட பெண் தெய்வங்கள் காளி போல் அழித்துக் காக்கும் குணத்தை எப்போது கைவிட்டனரோ…. எப்போது மீண்டும் கைக்கொள்ளுவார்களோ? பாலை, பனி நிலப் போர்க் குல ஆண் தெய்வங்கள் ஆதி மூலாதாரப் பேரன்னையிடம் புறமுதுகிட்டு ஓடும் நாள் எந்நாளோ?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *