தமிழகத்தில் கம்பைய நல்லூர், வேம்படித்தாவளம், கெடிமேடு ஏழு சுத்துக்கோட்டைகள், மினோவிய, அயோனிய நாகரீகங்களில் கிடைக்கும் ‘லேப்ரிந்த்’ எனும் புதிர் பாதை, க்ரீட் தீவின் மேஸ்கள் (Maze), ஃபயூம் (Fayyum) பாலையில் அமைந்திருக்கும் ஹவாரா புதிர்ப் பாதை (Hawara labyrinth) அதன் மீதான ஸ்டெப் பிரமிடுகள், கிங் ஜோசெர் (Djoser) காலத்திய சக்யூரா பிரமிடின் கீழ் அமைந்துள்ள புதிர் வட்டங்கள். இவற்றின் பின் தொடர்ச்சி, வரலாறு, வேறுபாடு, நீடித்திருக்கும் வழிபாட்டு முறைமைகள் இவற்றைக் கொண்டு இந்தப் பண்பாட்டுப் புதிரை அணுகி அறிய முயற்சி செய்யலாம்.
புதிர் வட்டங்கள், புதிர்ப்பாதைகள் என்பவை ஒரு மையமான புள்ளியைச் சென்று சேர, சுருள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பாதைகள். லேபிரிந்த்கள் பெரும்பாலும் மையத்தை அணுகச் சுற்றும் சுழல் பாதையில் கவனத்தோடு செல்லும் வழி. இதில் திசை திருப்பும் மாய வழிகளும், கவனத்தைத் திருப்பும் வாசல்களும் இருக்கும். மேஸ் (Maze) மையத்தை அணுகாமல் திசை திருப்பப் பல்வேறு சாத்தியங்களையும் அணுகுப் பாதையாகக் கொண்டிருக்கும்.
இந்தப் புதிர் பாதைகள் மீண்டும் மீண்டும் குறுக்கிடும் தன்மை கொண்டவை. இவை சதுர வடிவிலும் சுருள் வட்ட வடிவிலும் அமைந்திருக்கும். இந்தப் புதிர் வட்டங்கள் முதலில் தொல்லியல் சின்னங்களாகவும் பின்னர் ஆழ்மனதைச் சீர்படுத்தும் அல்லது பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவும் இருக்கும். வாழ்வின் புதிர் தன்மை, எதிர்பாராத சுவாரஸ்யங்களை நமக்களிக்கக்கூடியதாகவும் ஆர்வமூட்டும் மனம் சார் குறியீடாகவும் மாறுகிறது.
இந்த லேபிரிந்த்களை நாம் சுருள் புதிர்பாதைகள் மற்றும் புதிர் வட்டங்கள் என அழைக்கலாம். தமிழகத்தில் ஏழு சுத்துக்கோட்டை என்று வழங்கப்படும் லேபிரிந்த்கள், தொன்மையான பெருவழிச்சாலைகள் எனக் குறிக்கப்படும் பழங்கால வணிக நெடுஞ்சாலைகளுக்கு அருகில் காணக்கிடைக்கின்றன. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் தொல் கிரேக்கம், துருக்கி, எகிப்து, ஸ்பெயின், தென் அமெரிக்கா என உலகின் பல நாகரிகங்களில் இந்தப் புதிர் வட்டங்கள் கிடைக்கின்றன. இது ஒரு பெருங்கற்கால நினைவுச் சின்னம் என்றும் பெருங்கற்காலத்துக்கு முந்தைய நினைவுச்சின்னம் என்றும் இரு வேறு நிலைகளில் வகைப்படுத்தப்படுகிறது.
நவீன காலத்தில் புதிர்வட்டப்பாதைகள் மீதான ஆர்வ அலை ஐரோப்பிய மறுமலர்ச்சி கால கட்டத்துக்குப் பின்பு நிகழ்ந்த தொல்லியல் ஆர்வ வெடிப்பின் ஒரு பகுதியாக ஆரம்பித்தது. ஐரோப்பிய நாகரிகத்தின் ஆரம்பம் ஆப்ரிக்கா என்பதை ஒப்புக்கொள்ள மறுத்த ஐரோப்பிய மனங்களுக்கு மினோவிய நாகரிகமும் அதன் விளைநிலமான க்ரீட் தீவும் மிக முக்கிய பண்பாட்டு மூலப்பொருளாக மாறியது. கீரிட் தீவின் புதிர் வட்டப்பாதையும், மினட்டோரின் தொன்மமும் ஆர்வத்தையும் கற்பனையையும் தூண்டியன. அதை அப்போதைய மலின உணர்ச்சிமய பாணி கதை இயக்கம் தனக்கான கச்சாப்பொருளாகக் கொண்டு புனைவுகளை அதன் மீது கட்டமைத்தது. அதையொட்டி புதிர் வட்டங்கள், புதிர்பாதைகள் மீதான முதல் அலை சர் ஆர்தர் கோனான் டாயலின் எழுதிய ‘தி கேஸ் ஆப் மரியாரிட்டி லையர்’ நாவலிலிருந்து தொடங்கியது எனலாம். அதில் ஷெர்லக் ஹோம்ஸ் லேபிரிந்த்களின் லாஜிக் வழியே ஜிம் மரியார்ட்டியை எப்படி நெருங்குகிறார் என்பது விவரிக்கப்பட்டிருக்கும். அதை அடியொற்றி நிறைய கணிதப்புதிர் குழுக்கள் வெவ்வேறு புதிர் வட்டங்களை உருவாக்கித் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். மனோதத்துவ அறிஞர்களும், கணிதவியலாளர்களும் புதிர் வட்டங்கள், புதிர் பாதைக் கணிதத்தை மரபுசாரா சிந்தனை மற்றும் தீர்வு காண் வழிமுறையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதோடு கணித மேதமைக்கு ஓர் அலகாகவும் கொண்டார்கள்.
விரைந்து சிந்தித்துச் சரியான முடிவெடுத்தல், புரிதல் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான பயிற்சியாகச் சிக்கலான லேப்ரிந்த்களும் மேஸ்களும் சுற்றுக்கு விடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 1952:ல் கணிதவியலாளர் க்ளாட் ஷனான் (Claude Shannon) புதிர் வட்டப்பாதையை எளிதில் உணர்ந்து கடக்கும் தீஸியஸ் (Theseus) எனும் எலக்ட்ரானிக் எலியை உருவாக்கிச் செயல்படுத்தினார். இன்றைய இயந்திரக் கற்றலின் துவக்கப்புள்ளி என்று அதனை சொல்லலாம். எலக்ட்ரானிக் எலக்ட்ரிகல் அமைப்பான IEEE 1975 முதல் சுழல் பாதை – மெளஸ் போட்டிகளை நடத்தி வருகிறது.
தொன்மையான அனைத்துப் புதிர் வட்டங்களைக் கணிதரீதியாக கணக்கில் கொண்டும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சிக்கலான புதிர் வட்டங்களையும், புதிர் பாதைகளையும் கணிதவியலாளர்களும், மனோதத்துவ அறிஞர்களும் இணைந்து உருவாக்கி வருகிறார்கள். இந்தப் புதிர்களை விடுவிக்க உலகின் கணிதவியல் மாணவர்களும் இன்ன பிற புதிர் பிரியர்களும் இன்றும் ஆர்வத்துடன் முயற்சி செய்கிறார்கள்.
இரண்டாம் அலை ஆழ்நிலை தியானம் ( Transcedental meditation), விபாசனா ஆகியவற்றைக் கற்பித்த கிழக்கத்திய யோக ஆசிரிய மரபு மற்றும் திக் நாட் ஹன் (Thich nhat hanh) கார்சென் ரின்போச் (Garchan Rinpoche) ஆகியோரின் நடை பயிற்சி வழியாக சிந்தனை ஒருமுக தியானம் எனும் பயிற்சி, அதன் தொடர்ச்சியாக Walking a sacred path : Rediscovering the labyrinth எனும் நூலை எழுதிய மனோதத்துவ ஆலோசகரான லாரென் அர்ட்ரஸ் (Lauren Artress) ஆகியோர் லேப்ரிந்த்களை ஒரு மனத்தூய்மையாக்கலுக்கான தொன்மையான வழிகாட்டல் என்று சொல்லி ஓர் அலையை உருவாக்கினர். அது ஒரு பழங்கால கீழைத்தேய யோக ஞானம் என்ற வகையில் அமெரிக்க ஐரோப்பிய நகரங்களில் உள்வாங்கப்பட்டுப் பிரபலமடைந்தது. இதனால் உலகம் முழுக்க இருக்கும் பயணிகள் பாறை ஓவியங்களில் (Petroglyph, Geoglyph) இருக்கும் தொன்மையான லேபிரிந்த்களைப் பார்க்க ஆர்வத்தோடு சாகசப் பயணங்களை ஆரம்பித்தனர். பொழுது போக்குப் பூங்காக்கள், நகரமைப்பு ஆகியவற்றில் இந்தப் புதிர் வட்டங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டன.
மினோவிய நாகரிகத்தின் கிரீட் தீவில் கிடைத்த நோசொஸ் (Knososs) நாணயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் சதுர வடிவ புதிர் பாதையில் இருந்துதான் லேபிரிந்த்கள் பற்றிய விரிவான சித்திரம் நமக்குக் கிடைக்கின்றன. பொமு 2700 முதல் பொமு 1450 ஆண்டு வரை செழித்திருந்த மினோவிய நாகரிகத்தின் உச்சபட்சப் பண்பாட்டுக் கொடையாகப் புதிர்வட்டங்களையும் புதிர் பாதைகளையும் தொல்லியலாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள். இவற்றைக் கோட்டைகள் உருவாக்கத்துக்கு முன்பான மினோவியக் கட்டுமானம் என்று சொல்லக்கூடிய ஆய்வாளர்களும் இருக்கிறார்கள்.

க்ரீட்டின் தொன்மையான புதிர் வட்டம் பொமு 3500 கால கட்டத்தைச் சார்ந்தது என்று சொல்பவர்களுக்கு மாற்றாக இந்தப் புதிர் வட்டங்கள் கோட்டைகள் கட்டப்படுவதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தவையே என்று உறுதிபடச்சொல்லும் தொல்லியலாளர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் வெண்கலக் கால கட்டத்தைச் சார்ந்த குறியீடாகத்தான் இவற்றைப் பொதுவான வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
க்ரீட் தீவின் மினோவியத் தொன்மத்தின்படி அரசன் மினோஸ் மிகவும் அஞ்சக்கூடிய ஒரு வடிவமாகக் காளை தலையும், மனித உடலும் கொண்ட மினட்டோர் (Meta morphic) எனும் தொல் மானுட விலங்கு ஆற்றலின் மொத்த வடிவமாக உருவகிக்கப்படுகிறார். மினோவிய அரசி பாஸிபே (Pasiphae) காளையோடு கொண்ட உறவின் அடிப்படையில் காளைத் தலையும் மானுட உடலும் கொண்ட மினட்டோர் பிறக்கிறது. அது கட்டுக்கடங்காத ஆற்றலையும் கொடூரத்தையும் கொண்டிருக்கிறது. மினட்டோரின் நாளையும் கோளையும் கொண்டு அதன் எதிர்காலத்தைக் கணிக்கும் அரசன் மினட்டோரின் அழிவு மினோவிய நாகரீகத்தின் அழிவு என்ற தெய்வ வாக்கைப் பெறுகிறார். எனவே மினட்டோரைப் பாதுகாக்கவும், மினோவிய எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டும் அதைக் காக்க ஒரு புதிர் பாதையை அமைக்க முடிவு செய்கிறார்.
ஆனால் அதனை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தத் தயங்கும் அரசன் அவரின் முதன்மை பொறியாளரான டேடுலாஸ் (Daedulus) இடம் யாரும் எளிதில் அணுக முடியாத ஒரு கணிதப் புதிர்ப்பாதையை அமைக்கச் சொல்கிறார். அதன் மீது ஓர் அரண்மனையையும் கட்டுகிறார். மினட்டோரை அரண்மனைக்குக் கீழ் ஒளித்து வைக்கிறார். இதன் ஆற்றலையும் அழிவையும் கட்டுப்படுத்த மானுட உயிர் பலியைக் கோருகிறது. அதற்காகத் தொடர்ச்சியாக ஏதென்ஸ் மக்களைப் பலியிடுகிறார்கள்.
ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் என்று மினோட்டோருக்கு பலிகள் வழங்கப்படுகிறது. ஏதென்ஸ் மக்களை மீண்டும் மினோட்டோருக்குப் பலியாகக் கோரும் போது ஏதெனிய வீரன் தீஸியஸ் தானே முன்வந்து இந்த உயிர்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறான். மினோவிய அரசகுமாரி அர்யாடின் (Ariadne) தீஸியஸ் மீதான காதலில் புதிர் வட்டப்பாதையை, மன மயக்கமின்றிக் கடக்கும் வழிமுறையைக் கணித முறைப்படி விடுவிக்கக் கற்றுக்கொடுக்கிறாள். அந்த வழிமுறைப்படி மினோட்டோரைப் போரிட்டு வீழ்த்தும் தீஸியஸ் அதற்குப் பலனாக ஏதென்ஸின் விடுதலையைக் கோரிப்பெற்று கீரிட் தீவை விட்டு நீங்குகிறான்.
மினோவிய நாகரிகம் மத்திய தரைக்கடல் பகுதியின் முக்கிய தீவு நாகரிகம். கடல் வணிகத்தில் 5000 ஆண்டு காலத்துக்கு முன்பு கோலோச்சியவர்கள். மினோவிய நாகரிகத்தோடு கடல் வணிகம் செய்த அனைத்து இடங்களிலும் புதிர் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழகத்தில் தொன்மையான கடல் வணிகப் பாதையின் நீட்சியாக இருக்கும் ஆசுர பெருவழிப்பாதை என்றும் பின்னர் வீர நாராயணப் பெருவழி எனச் சொல்லப்படும் சேர நாடு, சோழ, பாண்டிய நாட்டை பாலக்காட்டுக் கணவாய் வழியாக இணைக்கும் ஆனைமலை, வடபூதி நத்தம், பழனி, திண்டுக்கல், திருத்தங்கல், அருகன் குளம் வழியான ராஜகேசரி பெருவழிப்பாதையில் கொங்கல் நகருக்கு அருகில் ஏழு சுத்துக்கோட்டை என்ற பெயரில் மினோவிய லேப்ரிந்த் இன்றும் உபயோகத்தில் இருக்கிறது.
இன்னொரு புதிர் வட்டப்பாதை கோவை சேலம் வழியில் இருக்கும் ராஜகேசரி பெருவழிப்பாதையின் வேம்படித் தாவளத்தில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கம்பைய நல்லூர் முதல் பெங்களூரின் நகர மையத்தில் பன்னேர்ஹட்டாவிலும் இன்றும் உபயோகத்தில் இருக்கிறது. தமிழகத்தின் கம்பைய நல்லூரில் இருக்கும் ஒற்றைப் பாதை லேபிரிந்த் (Unicursal Labyrinth) உலகளவில் வெண்கலக் கால கட்டத்துக்கு முன்பாகத் தொல் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது.

ஸ்பெயினில், எகிப்தில் கண்டறியப்பட்டுள்ள சில பாறைச் செதுக்குகளைப் போலிருக்கிறது. தமிழக ஆலயங்கள் சிலவற்றில் தூண் சிற்பமாக இருக்கும் இந்த சுய குறுக்கீட்டு நிகழ்வுப் புதிர் பாதையை ‘சக்ர வியூகத்தில் அபிமன்யூ’ என்று சொல்கிறார்கள் . ஆனால் அவை சுய ஒற்றைப்பாதை லேபிரிந்த்களே. கர்நாடகாவில் இருக்கும் சித்திர துர்கா கோட்டையிலும், குடி பண்டே கோட்டையிலும் இருக்கும் வெளிச்சுற்று ஏழு சுத்துக்கோட்டையின் தாக்கத்தில் கட்டப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. ஆந்திராவின் குப்பத்திலும் ஓர் ஏழு சுத்துக்கோட்டை எனும் புதிர் நிலை இருக்கிறது. உடுமலை அருகில் கெடிமேட்டிலும், திருமயம் அருகில் பொற்பனைக்கோட்டையிலும் இந்தப் புதிர் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன.

மத்திய தரைக்கடல் நாகரீகங்களில் இந்தப் புதிர் வட்டப்பாதைகள் பற்றிய குறிப்புகள், ஓவியங்கள், நாணயங்கள், கருங்கல் தளங்கள், மற்றும் கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. நோசஸ் நாணயங்கள், ரோமாபுரி நாணயங்கள், லேபிரிந்த் மொசைக்கள், ரோமானிய வீடுகளில் காணப்படும் லேபிரிந்த் கருங்கல் தளங்கள், லேபிரிந்த் பூங்காக்கள், மேஸ் பூங்காக்கள் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்க முடிகிறது. ரோமானிய வீடுகளில் வழுக்குத் தரைகளில் புதிர் வட்டங்களைப் பொறிப்பது ஒரு பெருமிதம். மத்திய கால ஐரோப்பாவிலும் இந்த ரோமானியக் கலாச்சாரச் செயல்பாட்டின் தொடர்ச்சியாகப் பல்வேறு தேவாலயங்களில் புதிர்ப் பாதைகளின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டன. ஐரோப்பிய நகரங்களின் முக்கியமான பூங்காக்களில் ஒற்றைப் பாதை லேபிரிந்த்கள், பல பாதை மேஸ்கள் அமைப்பது வெகுஜன விருப்ப வழிமுறையாக இருந்திருக்கிறது.

இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காண்டி நேவியா, இந்தியாவின் மகாராஷ்ட்ரா பகுதியிலும் தொன்மையான பாறைச் செதுக்குகளாக இந்தப் புதிர் வட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால் இதன் காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எகிப்தில் பய்யூமில் அக்க்யூரா ஸ்டெப் பிரமிடுக்குக் கீழே மிகப் பெரிய சதுர வடிவப் புதிர் வட்டப்பாதை கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்டறிதலுக்குப் பிறகுதான் இந்தப் புதிர் வட்டங்களுக்குச் சடங்குரீதியான முக்கியத்துவம் இருக்கலாம் என்பது மாதிரியான தொடர் விவாதங்கள் நடக்கின்றன. எகிப்திய மூன்றாம் அமெனோடாப்புக்கு (பொமு 1850) அர்ப்பணிக்கப்பட்ட புதிர் வட்டப்பாதை எகிப்தியவியலாளர்களால் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொன்மையான புதிர், குறியீடு மானுடக் கூட்டு மனத்தில் உருவகமாகப் பதிந்திருக்கிறது. திக்கு திசை தெரியாமல் யதார்த்தத்தின் கரங்கள் நம்மை வழி நடத்தும்போது நாம் ஒரு கலவையான புதிர் வட்டத்தில் மையம் நோக்கிச் செல்லும் பாதையில் செல்வதாக உணர்கிறோம். தெரியாதவற்றினுடான சாகஸப் பயணம், சிக்கலான புதிர்களுக்குத் தீர்வுகாணுதல் இது மாதிரியான மன நிலைகளை நாம் அனுபவிப்பதிலிருந்து மினோவிய மனம், மினோவிய பண்பாடு எப்படி அறிதலிலிருந்து மேலான அறிதலுக்குச் செல்ல சுவாரஸ்யத்தோடும் ஆர்வமூட்டும் தன்மையோடும் நகர்ந்திருக்கிறது என்பதை உணரலாம்.
அதோடு ஒரு புதிர் வட்டப்பாதைப் பயணம் நமக்குச் சொல்வது, வேகமாகச் செல்லும் பயணத்தைவிட நிதானத்தோடும் குவிக்கப்பட்ட கவனத்தோடும் மெதுவாகச் செல்லும் பயணம் எப்படி நமக்கு வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது என்பதற்கான அறிதலை அளிப்பதாக மானுட நடத்தையியல் நிபுணர்களும், மனோதத்துவ ஆளுமைகளும் சொல்கிறார்கள்.
சுவாரஸ்யமாக, தமிழ் நாட்டார் பண்பாட்டில் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரனுக்குப் பாடப்படும் ஒரு நாட்டுப்புறப்பாடலில் புதிர் வட்டப்பாதை இடம்பெறுகிறது.
‘நாடு சுத்தி கோட்டை… நடுவிலே நீர்வாவி!
ஏழு சுத்து கோட்டை… எறும்பேறா மண்டபம்!
பத்து சுத்து கோட்டை… பாம்பேறா மண்டபம்!
தங்க பனையை உருவாக்கி எங்குலத்து மக்களுக்கு…
தங்கக் கனியை பசிக்குண்ண குடுத்த அய்யனே!
தெற்கே விழுந்த சடை அய்யனே உங்களுக்கு…
தென்னாடும் பூசையில!
வடக்கே விழுந்த சடை அய்யனே உங்களுக்கு…
வடநாடும் பூசையில!
பூட்டய்யா உங்குதிர…
புறப்படய்யா கொஞ்ச நேரம்…
வந்தமரய்யா உன் மந்தையிலே!
வந்திருக்கும் புள்ளைகளுக்கு…
வந்து நில்லய்யா வாக்குச் சொல்ல!’
மத்தியதரைக்கடலில் அமைந்திருக்கும் கீரிட் தீவின் புதிர் வட்டமும் தமிழக பொற்பனைக்கோட்டையின் புதிர் வட்டமும் பொதுவான கலாச்சார மனத்தை, பண்பாட்டு ஒருமையைக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு ஆச்சரியமான விஷயம் இல்லையா.