புதிர் வட்டங்கள், புதிர் பாதைகளை மைசீனிய கிரேக்க வார்த்தையான லேபிரிந் (labyrinth) என்ற சொல் மூலம் வகைப்படுத்துவார்கள். 30,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருக்கும் இந்தப் புதிர் வடிவங்கள் பெருங்கற்கால நாகரிக காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு இருந்திருப்பதை நிறைய இடங்களில் காணமுடிகிறது. தொல் பழங்காலத்தின் செல்வாக்கான குறியீடாக, மனித சமூகத்தின் மனதுக்கு நெருக்கமான குறியீடாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்தப் புதிர் வடிவங்கள் கலாசாரங்கள்தோறும், காலந்தோறும் வெவ்வேறு பரிமாணங்களில் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. தொன்மையான பண்பாட்டுச் சின்னம் என்ற அடையாளத்திலிருந்து நவீன உளவியல் கருதுகோள் வரை பல்வேறுவிதமான வடிவங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. நவீன யுகத்தில் இது ஆன்மிக வழிபாட்டு மரபாகவும், மெய்மை நோக்கிய பயணத்தில் இது புதிய அறிதலுக்குத் துணை செய்யும் கருவியாகவும் கூடப் பரிணமிக்கிறது.
தொல் பழங்காலத்தில் பாறைக்குடைவுகளாக, பாறைச்செதுக்குகளாக, சுடுமண் சிற்பங்களாக, குகை ஓவியங்களாக ஆப்ரிக்கா, ஐரோப்பா, பாரதம் மற்றும் அமெரிக்க நிலங்களில் இந்த வகைப் புதிர் வடிவங்களைப் பார்க்கிறோம். இந்தத் துவக்க நிலையிலான புதிர் வடிவங்கள், ஒற்றைப்படையான, மையத்தை நோக்கிய புதிர்ப்பாதையாக இருக்கின்றன (unicursal). இவற்றில் கட்டற்ற வெறியாட்டு, சமயச் சடங்கு நடனம், குறியீட்டு வடிவ தியானம், ஆன்மிக அகவய அனுபவம் ஆகியவற்றின் இயங்கு காரணியாகப் புதிர் நிலைகள் இன்றும் நீடிக்கின்றன. இது பொ.மு.4000 முதல் இன்று வரை தொடரும் 6000 ஆண்டு அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி.

இதற்கு அடுத்த நிலையில் மினோவிய கிரேக்கத்தின் விளைநிலமான கிரீட் தீவில் பொ.மு 2200 முதல் அதன் புகழ் மங்கிய பொ.மு. 1500 வரையிலான காலத்தில், நாஸஸ் புதிர்வளையம் (labyrinth of knossos) எனும் புகழ்மிக்க புதிர் நிலையானது டேடலஸ் (daedalus) மூலம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் வடிவம் நாஸஸ் காசுகளிலும் பிந்தைய கிரேக்க நாணயங்களிலும் காணப்படுகிறது. தொன்மங்களிலிருந்து உயிர்த்து வந்து அரசியுடன் புணர்ந்து மினட்டோர் எனும் மனிதன் பாதி விலங்கு பாதி உருவம் கொண்ட உயிரைக் கட்டுப்படுத்த இந்தப் புதிர் நிலை உருவாக்கப்பட்டதாகத் தொன்மக்கதை சொல்கிறது.

பின்னர் கிரேக்கப் பொற்காலத்தின் துவக்கத்தில் வந்த கிரேக்க ஸப்த ரிஷிகளில் (seven sages of greece) ஒருவரான மிலிட்டஸின் தேல்ஸ், கொரிந்தின் பெரியாண்டர் ஆகியோர் இந்தப் புதிர் நிலைகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தேல்ஸ் ஒரு குறிப்பில் எகிப்தியப் பிரமிடுகளுக்குக் கீழ் நிறையப் புதிர் வட்டங்கள் இருந்தது என்று சொன்னபோது, பண்டைய கிரேக்கம் அதை ஒரு கருதுகோளாக மட்டுமே எடுத்துக்கொண்டது. கார்ட்டர் காலத்தில்கூட இந்தப் புதிர் நிலைகள் பற்றிய தேல்ஸின் கருத்து ஒரு வகைக் கருதுகோளாகவும் ஊகமாகவும் மட்டுமே கொள்ளப்பட்டது. 21ம் நூற்றாண்டில்தான் பய்யூம் பாலை நிலத்தின் அமைந்திருக்கும் ஒரு பிரமிடின் கீழ் இருக்கும் புதிர் வட்டத்தைக் கண்டுபிடித்தார்கள்.
பய்யூம் புதிர் நிலை கண்டறியப்பட்ட தருணம் ஓர் அற்புதமான கணம், தொன்மம் உயிர் கொண்டு தரிசனம் கொடுத்த அரிய வரலாற்று தரிசன நிகழ்வு. இது போன்ற புதிர் நிலைகள் எகிப்தின் கல்லறை ஆலயங்களின் சுவரில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் ஏழு சுத்துக்கோட்டைகளின் அனைத்து வடிவங்களும் அச்சு மாறாமல், அளவு மாறாமல் மினோவிய கிரீட் தீவில் இருந்ததற்குத் தொல்லியல் சான்று இருக்கிறது. மினோவிய ஏழு சுற்றுக் கோட்டைகள் பற்றி பல்வேறு மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த ஏழு நிலை புதிர் வடிவங்களின் வடிவ மாதிரிகள் தமிழகத்திலும் இருப்பது மேற்குலக வரலாற்று ஆய்வாளர்களுக்குப் புதியதாக இருக்கலாம். சொல்லப்போனால் நம்முடைய தொல்லியல் துறையேகூட இந்தப் புதிர் நிலைகளை இன்னும் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கவில்லை.
கிரேக்கத்திலும் ரோமிலும் இந்த லேபிரிந்த் வகைப் புதிர் வடிவங்களை அவர்களின் தொன்மத்தோடு இணைத்துப் புரிந்துகொண்டதால் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து புதிர் வடிவை நினைவில் நிறுத்தினார்கள். கிரேக்க ரோம நாணயங்களிலும், அச்சுகளிலும் இருந்த லேபிரிந்த்கள், கிரேக்க ரோமானிய வில்லாக்களின் தள அலங்காரங்களிலும், உள் அலங்காரத்திலும் ஒரு பகுதியானது. ரோமானிய லேபிரிந்த் மொசைக்தளங்கள் அனடோலிய பகுதியிலும், கிரேக்க, ஐரோப்பியப் பகுதி வில்லாக்களிலும் முக்கியமான ஒரு வடிவமைப்புக் கூறாகவே ரோமானியக் கட்டுமானங்களில் பங்கு பெற்றிருக்கிறது. ரோமானியப் பொதுக் குளியலறைத்தளங்கள், கல்லறைத் தோட்டங்கள் மற்றும் பொதுப் பூங்காக்களிலும் இது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது.

ரோமானியப் பொற்கால கட்டத்தின் பகுதியாகப் புதிர் வட்டங்கள், வடிவங்கள் பொது மக்கள் மனதில் ஒரு தொன்மக்குறியீடாக, நடைமுறை வடிவமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. பின்னர் மத்திய கால ஐரோப்பியக் கட்டடக் கலையின் வடிவமைப்பில் இந்தப் புதிர் நிலைகள் ஒரு முக்கிய அங்கமாகப் பங்கு பெற்றன. பொ ஆ 800 க்கு பிறகு செமிட்டிக் மத நிறுவனங்கள் தொன்மையான கனியச் சின்னங்கள், பாகன் மதக் குறிகள், குறியீடுகளை கிறிஸ்தவத்துக்குள் செரித்து அதை மறு கட்டமைப்பு செய்தது. அவற்றை கிறிஸ்தவ இறையியல் அதிகார அரசியலுக்கான படி நிலையாக, தத்துவார்த்தப்படுத்தி மக்கள் திரளை ஈர்க்கப் பயன்படுத்தத் துவங்கியது. கனியச் சின்னங்கள், தொன்மங்கள், பன்மைத்தன்மை கொண்ட மத குறியீடுகள் எல்லாம் புதிய விவிலிய நோக்கில் கிறிஸ்தவ மத அடுக்குகள், மதப்பார்வைகள் வழியாக கிறிஸ்தவ மதச் சாயம் பூசி சுற்றுக்கு விடப்பட்டன.
செமிட்டிக் அதிகார மையங்கள், கத்தோலிக்க இறையியல் புரிதலுக்கு ஏற்ப தொன்மங்களையும் குறியீடுகளையும் கலை, ஓவியம், கட்டுமானம் ஆகியவற்றில் தோய்த்து பொது மக்களின் மன நிலை ஏற்பைக் கட்டமைத்தன. இதன் மூலம் அரசியல் அதிகாரம், மத அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதானது. ஒரு மாபெரும் மரபுத் தொடர்ச்சி கொண்ட கத்தோலிக்கம் எனும் கட்டமைப்பை மக்கள் மனதில் பதிய வைக்க மறைமுகமான மனோதத்துவ மூளைச் சலவைக்கு இவை பயன்படுத்தப்பட்டன. இந்த அரசியல் அதிகாரச் சுரண்டலின் ஒரு பகுதியாகவே தேவாலயக் கட்டடக்கலையின் ஒரு பகுதியாக ஏழு சுத்து புதிர் நிலையும் 11 சுத்து புதிர் நிலையும் தேவாலயக் கட்டட ஒழுங்கில் ஓர் அங்கமாக மாற்றப்பட்டன. இதன் உயரிய உதாரணமாக 12 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் கட்டப்பட்ட புகழ் பெற்ற சார்ட்டெர்ஸ் தேவாலய (chartres cathedral) லேபிரிந்த்தைச் சொல்லலாம்.

இன்றும் லெண்ட் தவக்காலத்தில் கத்தோலிக்க மக்கள் புனித பரிக்கிரம யாத்திரையாக சார்ட்டெர்ஸ் வந்து அங்குள்ள 11 நிலை புதிர் வடிவப் பாதையில் நடப்பதையும் அதைச் சுற்றுவதையும் ஒரு புனிதக் கடமையாகச் செய்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்கு ஜெருசெலம் செல்வது எவ்வளவு மத ரீதியான முக்கியத்துவம் மிக்க கடமையோ அதேபோலத்தான் உங்கள் பாவங்களிலிருந்து மீள கன்னி மேரி தேவ குமாரனைப் பிரசவித்தபோது அணிந்திருந்த உடைகள் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த ப்ரெஞ்சு தேவாயத்துக்கு வந்து இந்தப் புதிர் நிலையிலும் அதைச் சுற்றியும் பரிக்கிரமம் செய்வதும் புனிதமானது என்று ஆக்கப்பட்டிருக்கிறது. குறியீட்டு யாத்திரையாக இது 800 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் நீடித்து வருவதைப் பார்க்கலாம்.
வட ஐரோப்பியப் பகுதிகளில் இந்தப் புதிர் நிலைகள் புற்கள் கொண்டும், கற்கள் கொண்டும் அமைக்கப்பட்டுப் பொது மக்கள் பார்வைக்கும் பயன் பாட்டுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஐரோப்பிய வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கிராமங்களில், பொதுப் பூங்காக்களில், மலை உச்சியில், கடற்கரை ஓரங்களில் இது ஒரு பண்பாட்டுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்காண்டினேவிய, ரஷ்ய நாடுகளிலும் இந்த நடைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய பொது மனதில் புதிர் வடிவங்களை ஒரு தொன்மச் சின்னமாகவும், மறை குறியீடாகவும், வேற்று கிரகவாசிகளையும் பாதாள உலகையும் தொடர்பு கொள்ளும் ஒரு சுவாரசியமான புராணக் குறியீடாக உணர்கிறார்கள்.
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலகட்டத்தில் இந்தப் புதிர் நிலைகள், வடிவங்கள் கணித ஓவியம், ஜியோமெட்ரி ஆகியவற்றின் பெரும் செல்வாக்கால் மறு கண்டுபிடிப்புக்கு ஆட்பட்டு பல்வேறு வடிவங்களில் உருவாகின. இதன் புகழ் பெற்ற வடிவ உந்துதலில் உருவான புதிர் நிலைக்கு நல்ல எடுத்துக்காட்டு: ஹெட்ஜ் மேஸ் (hedge maze) எனப்படும் புதிர் வடிவத் தோட்டங்கள். ஐரோப்பியக் கணிதவியலாளர்களும், கணிதவியலாளர்களும் கட்டுமானக் குழுக்களோடு இணைந்து மிகவும் சிக்கலான பல்வேறு புதிர் நிலைகளையும் புதிர் வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பிய நாளிதழ்கள் இந்தப் புதிர் வடிவப் புகைப்படங்களைப் பகிர்ந்து அதைக் கட்டுடைக்கச் சொல்லி வாசகர்களிடம் கோரிக்கைவிடுத்தது. இங்கிலாந்தின் பிளாக்பூல் பீச்சில் உள்ள ஹெட்ஜ் மேஸ் மிகவும் சுவாரஸ்யமானதும் பெரிதும் ஆகும். அதே போல ஹெம்ப்டன் கோர்ட் மேஸும் மிகவும் புகழ் பெற்றது.

மறுமலர்ச்சி காலகட்டத்தின் கலை, அறிவியல், கட்டுமானம் ஆகியவற்றில் பெருத்த உற்சாகம் ஏற்பட்டது. பல்வேறு துறை அறிஞர்களிடையே நீடித்த தொடர் தத்துவ விவாதங்கள், அதற்கான புதிய கருதுகோள்கள் மலர்ந்தன. இவை கட்டுமானம் கலை ஆகிய துறைகளில் புது வெள்ளம் போன்ற ஆர்வ வெடிப்பைத் தூண்டி பல்வேறு புதிய சாத்தியங்களை நடைமுறைப்படுத்தின. 30,000 ஆண்டுகளாக ஒற்றை மையத்தை நோக்கியதாக இருந்த லேபிரிந்த்கள் பல மையங்களை நோக்கிய புதிர்ப்பாதைகளாகப் பரிணமித்தன. இந்த பல மையப் புதிர் பாதைகளில் பல்வேறு பாதைகள், திறப்புகள், கொண்டு சுவாரஸ்யமாகவும் ஆர்வமுட்டும் வகையிலும் அணி சேர்க்கப்பட்டு மக்கள் முன்னிலையில் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் புதிர்கள் கணிதவியலாளர்கள், மனோதத்துவ அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரால் செம்மைப்படுத்தப்பட்டு மக்களின் சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இன்ன பிற திறனறி சோதனைகளின் மையமாக மாற்றப்பட்டது.
இதன் பின் தொடர்ச்சியாகத் தொழிற்புரட்சி, இயந்திரவியல் புரட்சிக்குப் பிந்தைய கணினி, செயற்கை தொழில் நுட்ப அறிவுத்துறை புரட்சியின் துவக்கத்திலேயே புதிர் நிலைகள் நவீன வடிவம் கொண்டு கணிப்பொறி புதிர் நிலைகளாகவும், எளிய பொழுது போக்கு இயந்திர விளையாட்டாகவும், சுவாரஸ்யமான கதையாடலாகவும் மாறி இருக்கிறது. அதோடு இவை இப்போது மனோதத்துவ ஆற்றுப்படுத்துதல், இறையியல், தர்க்கவியல் துறைகளில் முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறது. நவீன கால கட்டத்தில் பொதுப் பூங்காக்கள், மலை உச்சிகள், கடற்கரை ஓரங்களிலும் இந்த வகை புதிர் நிலைகளை நாம் இன்றும் காணலாம். அதோடு பள்ளிகள், கல்லூரிகள், இயன்முறை மருத்துவ நிலையங்கள், ஓய்வு விடுதிகள் மட்டுமல்லாமல் தியான கேந்திரங்கள், மேம்பட்ட ஆன்மிக அனுபவ மையங்கள் என்றெல்லாம் புதிய பார்வையில் தத்துவப்படுத்தப்பட்டு இந்தத் தொல் சின்னம் காட்சிப்படுத்தப்படுகிறது.
கீழை நாடுகளில் இந்த வகைப் புதிர் வடிவங்களின் பரவல் கடல் வணிகம், மதம் சார் பிரார்த்தனைகள், குறியீட்டுப் பயன்பாடு ஆகிய அடிப்படையில் பரவி இருக்கலாம், குறிப்பாக பாரதத்தின் தென்னகத்தில் ஒற்றை மையத்தை நோக்கிய ஏழு சுத்துக்கோட்டை என்ற பெயரில் பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்தோனேஷியா, நேபாளிலும் இந்த வகைப் புதிர் வடிவங்கள் கிடைக்கிறது.
அதோடு மத்திய ஐரோப்பா, ஸ்காண்டி நேவிய நாடுகள், ரஷ்யா, வட, தென் அமெரிக்க நிலங்களிலும் இந்த தொல் வடிவம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
கார்ல் யூங் சொல்வதுபோல இது ஓர் உலகளாவிய வடிவம். இந்த மூல வடிவம் குறி, குறியீடு, கோட்பாடு, சிந்தனைகள் அனைத்தும் கால, நேர, புவியியல் வர்த்தமானங்களைத் தாண்டிய பொதுவான கூட்டு ஆழ்மனதிலிருந்து புதிய புதிய வடிவத்தில் வெளிப்படுகின்றது. அது தொன்மத்தில், கனவில், மதச் சடங்கில், கலையில், இலக்கியத்தில், நடனத்தில், இசையில் மனித நடத்தையில் நாம் அறியாத பரிமாணத்தில் வெளிவருகின்றது.
இந்தப் புதிர் நிலைகள் காலந்தோறும் பண்பாடுகள் தோறும் எப்படி எல்லாம் மாறி வந்திருக்கிறது என்று பார்த்தாலே இதன் பரப்பும் விரிவும் நமக்குப் புரிய வரும். தொல் பழங்காலத்தில் ஒரு மதக்குறியாக, சடங்கு வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பாறைகளிலும், குகைகளிலும் இந்த ஒற்றை மைய புதிர்வடிவங்கள் இருந்திருக்கின்றன. பின்னர் மட்பாண்டங்கள் செய்யத் துவங்கிய பிறகு அதில் இடம் பெறத் துவங்கியிருக்கின்றன. பின்னர் மினோவிய கிரிட்டில் கட்டுமானத்திலும் கலையிலும் ஊடுருவி நாணயமாக கட்டுமானங்களாக நிலைகொண்டிருக்கின்றன.
கிரேக்க ரோமானிய கால கட்டத்தில் கட்டுமானங்கள், பொதுப் பூங்காக்கள், அலங்காரச் சித்திரங்கள், மொசைக் தள ஓவியங்கள் ஆகியவற்றில் இடம் பெற்றன. பின்னர் மத்திய கால ஐரோப்பாவில் மத குறியீடாகவும் கத்தோலிக்கக் கட்டுமானங்களின் ஒரு பகுதியாகவும், ஆன்மிக அனுபவத்தைத் தூண்டும் கருவியாகவும் இருந்து வந்தன. இந்தப் புதிர் நிலைகள் கணிதத் தாக்கம், ஜியோமெட்ரி தாக்கம், கலைத்தாகம், புதுமை மீதான சுவாரஸ்யம் காரணமாகப் பொதுப் பூங்காக்கள், வடிவ கணிதப் புதிர்கள், ஆன்மிகக் கட்டுமானத்தின் ஒரு பகுதி என வளர்ச்சி பெற்றன.
நவீன காலகட்டத்தில் மத ஒழுங்கு, மனச்சமன்படுத்தும் கருவியாக மாறி இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்தப் புதிர் வடிவங்களின் இருப்பும் வழிபாடுமே ஒரு புதிர் போலவே பரிணமித்து நிலைபெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.
தொன்மங்கள் காலந்தோறும் வளர்வதையும், உருமாற்றம் கொள்வதையும் பார்த்திருப்போம். அது லேபிரிந்த்களுக்கும் பொருந்தும், மினோஸ் மன்னன் மினடோருக்கு சவால் விட எழுப்பிய புதிர் நிலை பற்றிய இலக்கியக் குறிப்புகள் பொ மு 700க்கு முந்தைய காலத்திய ஹோமரின் இலியட் காவியத்திலிருந்து நமக்குக் கிடைக்கத் துவங்குகிறது. மினட்டோரைக் கொன்று விட்டுத் திரும்பும் தீயஸ் நடனமாடும் பாதைகள், புதிர் வழியாக இளவரசி அரியாடினியின் வழிகாட்டுதலோடு தப்பியது பற்றிய விவரணைதான் முதன் முதலில் கிடைக்கும் எழுத்து பூர்வ ஆதாரம். அதற்கு முன்பு நாஸஸ் (knossos) காசுகளிலும், கிரேக்க மட்பாண்டங்களிலும், ரோமானியக் குளியலறையின் தரையிலும் பார்த்த குறியீடுகள் வார்த்தை வடிவம் பெற்றது ஹோமருக்குப் பின்தான்.
மஹாபாரதத்தில் வியாசர், மயன் கட்டிய இந்திர பிரஸ்தத்தில் புதிர் நிலைகள் நிறுவப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். இந்தப் புதிர் நிலைகளின் வழியாக துரியோதனன் செல்லும் போது அதைக் கடக்க முடியாமல் கோபம் அடைகிறான். அதைக் கண்டு திரெளபதி சிரிப்பதில் இருந்து பெருவஞ்சம் கருக்கொள்வதாகவே மஹாபாரதம் சொல்கிறது. இந்தப் புதிர் நிலையை வெற்றிகரமாகத் தாண்டுபவர்கள் கர்ணனும் ஜெயத்ரதனும் மட்டுமே. இதிலிருந்தே ஊக்கம் பெற்ற கர்ணன், துரோணர் 13 ஆம் நாள் போர் வியூகங்களை வகுக்கும் போது லேபிரிந் வகை 7 அடுக்கு ஒற்றை மைய லேபிரிந்த் வடிவில் படையை அமைக்கிறார். இந்த ஏழு நிலைகளையும் காக்க துரோணர், கர்ணன், ஜெயத்ரதன், கிருபர், அஸ்வத்தாமா, கிருத வர்மன், பிருஹத்பாலன் உள்ளிட்ட எழுவரும் மையத்தில் துர்முகனுமாக அபிமன்யுவைத் தாக்கிக் கொல்கிறார்கள்.
தனுர் வேதத்தில் கணித அறிவும், ஜியோமிதியும் மிக மிக முக்கியமான அடிப்படைப் பாடம். இதை அறிந்ததாலேயே துரோணரும் கர்ணனும் பத்ம வியூகத்தை அமைக்கிறார்கள். இந்த அறிவு உந்துதல் அவர்களுக்குத் தொன்மங்கள் கொடுத்த உலகளாவிய கூட்டு மனப்பதிவிலிருந்து கிடைத்திருக்கலாம். சக்ர வியூகம் ஓர் ஏழு அடுக்கு லேபிரிந்த் என்பது நமக்குச் சிறு வயதிலேயே மனதில் பதிந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே நாம் இந்திய ஏழு சுத்துக்கோட்டைகளைப் பார்க்கவேண்டும்.

வியாசர், ஹோமருக்கு அடுத்து ரோமானிய மூத்த பிளினி பல்வேறு புதிர் நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தேல்ஸை உதாரணம் காட்டி எகிப்தியப் புதிர் நிலைகளைச் சொல்லும் பிளினி, கிரீட் தீவுக்குச் சென்று அங்கு லேபிரிந்தகளைத் தேடுகிறார். ஆனால் அவற்றைக் காணமுடியவில்லை என்பதோடு முடிக்கிறார். ஆனால் கிரேக்க ரோமானியப் பானை வனைவோர், கலைப் பொருட்கள் செய்பவர்கள், பூ ஜாடிகள் செய்வோர் தொடர்ந்து தீஸியஸ் மினட்டோரைக் கொல்லும் தொன்மக்காட்சியைப் பல்வேறு வடிவில் வரைந்து சமூகப் பொது மனதில் நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இதற்குப் பிறகு பைசாண்டிய வரலாற்றாளர்கள் ரோமானியக் குடியேற்றப்பகுதியான க்ரீட் தீவின் நாஸஸில் புதிர் நிலை இல்லை: அருகில் இருக்கும் கோர்ட்டின் மலை மீது இருக்கும் புதிர் நிலையே கிரேக்க தொன்மங்கள் காட்டும் புதிர் நிலை என சொல்கிறார்கள். பைசாண்டிய எழுத்தாளரும் பயணியுமான லோனஸ் மலாலுஸ் (Loannes malalus) (க்ரோனோ க்ராபியாவின் ஆசிரியர்) எகிப்திய கிரேக்க ரோமானிய புதிர் நிலைகளைச் சென்று பார்த்துப் பதிவு செய்கிறார். அவர் கோர்ட்டின் புதிர் நிலையே நாஸஸ் புதிர் வழி எனச் சொல்கிறார். அதற்குப் பின்பு ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் தொல் கிரேக்கப் புதிர் நிலை பற்றிய ஆர்வம் சாகசக்காரர்கள், பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள், கணிதவியலாளர்கள், கலைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக ப்ளாரெண்டைனின் கத்தோலிக்கத் துறவி ப்யூண்டல்மொண்டி (buondelmonti), கிரீட், கோர்ட்டின் பகுதிகளை ஆய்வு செய்து இங்கு புதிர் நிலை இல்லை அல்லது சிதைந்துவிட்டது என அறிவித்தார்.
இவரைப் பின்தொடர்ந்தே உல்ப்காங்க்லேசியஸ், தாமஸ் ஸ்ப்ராட் வரையிலான சாகசப்பயணிகளின் ஆர்வமுட்டும் பயணத் தேடுதலில் புதிர் நிலைகள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றன. அது ஆர்தர் கோனான் டாயில், அகதா கிறிஸ்டி முதல் டான் ப்ரவுன் வரை தொடர்கிறது. இந்தத் தேடுதலுக்கான விடையாக ஜெர்மானியத் தொல்லியலாளர் ஆர்தர் இவான்ஸ் 1894-ல் தொல் பழங்காலத்தில் இரட்டைத் தலைக் கோடாரியைப் புதிர் நிலையைச் சுட்டும் குறியீடாக இருந்ததை அறிந்து பழங்கால வரைபடங்கள், இலக்கியங்கள், வாய்மொழிப் பாடல்கள் ஆகியவற்றில் இருந்து தகவல்களைத் திரட்டினார். நாஸிஸில் தேடத்துவங்கி 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிர் நிலையைக் கண்டறிந்து பின்னர் அதை மறு கட்டமைப்பும் செய்தார்.
தொன்மங்கள் உயிர் கொண்டு எழும்போது அது புதிய அதிர்வலைகளையும் புதிய சிந்தனைகளையும் தூண்டிவிடுகின்றன. ஆர்தர் இவான்ஸின் மறு கட்டமைப்புத் தத்துவம், கணிதம், தர்க்கம், பகுப்பாய்வு ஆகிய துறைகளில் புதிய அலையைத் தோற்றுவித்தது. அது கணினி அறிவியலிலும், எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் புதிய பாதைகளைத் திறந்தது. பாரதத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கோவாவின் பன்சோய்மல்(pansoimol), மஹாராஷ்ட்ராவின் உசாக்கலிமாலில் (usaagalimal) ஆகிய இடங்களில் கிடைத்த பெருங்கற்காலத்துக்கு முந்தைய லேபிரிந்த்கள், பத்மவியூகம் பற்றிய வாய்மொழித் தொன்மங்கள், மஹாபாரதக் கதைகள், ஏழு சுத்துக் கோட்டைகள் என்று லேபிரிந்த் எனும் புதிர் நிலைகள் நம்மோடும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் பொது மனதில் அது பற்றிய போதம் குறைவாக இருக்கிறது என்பது பெரிய ஆச்சர்யம்தான்.
(தொடரும்)

