Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

பிரபலங்களின் உளவியல் #3 – வெர்ஜீனிஉயா வூல்ஃப்

இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

படிக்க வேண்டிய புத்தகங்கள் அவ்வளவு இருக்கின்றன. என் பேனா எனக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நாவலுக்கு முன்னுரை எழுத வேண்டாமா? என்னைக் கொண்டு வந்து இந்தச் சிறிய அறைக்குள் அடைத்திருப்பது எவ்வகையில் நியாயம்?

என் முன்னே பற்பல உருவங்கள் தோன்றி மறைகின்றன. எல்லா உருவத்திற்கும் கை கால்கள் நீண்டு நிற்கின்றன. அதோ அந்த அருவருப்பான உருவத்தைப் பாருங்கள். நாக்கை வெளியே நீட்டி என்னை விழுங்கப் பார்க்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வே இல்லையா? தனி அறையில் பூட்டி வைத்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? மனநல மருத்துவர் என்ற பெயரில், யார் யாரோ வருகிறார்கள். போகிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி?‌ என் உணர்வுகள் பற்றி தெரியுமா? என் சிந்தனைகள் பற்றி தெரியுமா? நான் எழுதிய புத்தகங்களையாவது அவர்கள் படித்திருப்பார்களா? கண்டிப்பாக மாட்டார்கள். படித்திருந்தால் ஒரு பெண்ணைத் தனியறையில் பூட்டி இப்படித்தான் கொடுமை படுத்துவார்களா?

அதுசரி, எங்கே என் கணவர்? அவர் எங்கே போயிருப்பார்? என்னைப் போலவே மன அழுத்தத்தில் எங்காவது அமர்ந்து புலம்பிக் கொண்டிருப்பார்.

வெர்ஜீனியா வூல்ஃபின் மனதில் தோன்றும் கேள்விகளை வரிசையாக நிற்க வைத்து ஓட்டப்பந்தயம் வைத்தால், ஒன்றுக்கொன்று முட்டிமோதி கீழே விழுந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய மூளை, ட்ராஃபிக் ஜாமைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

யார் இந்த வெர்ஜீனியா வூல்ஃப்? இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவராகப் பார்க்கப்படும் இவருக்கிருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன?

கொசுவத்திச் சுருளை சுழற்றுங்கள். சற்று பின்நோக்கி செல்வோம்.

0

ஜனவரி 25, 1882. லண்டன்.

‘முன்பே ஆறு. இப்போது பிறக்கப்போவதைச் சேர்த்து ஏழு. கணக்கு பெரிதாகிக் கொண்டே போகிறதே…’

தனது நீண்ட தாடியைத் தடவியபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார் லெஸ்லி ஸ்டீஃபன்.

‘உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கு சார்…’ என்று செவிலியர் கூறும் காட்சிகளை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

‘அடிலின் வெர்ஜீனியா ஸ்டீஃபன்.’

இதுதான் பிறந்தபோது வெர்ஜீனியா வூல்ஃப்க்கு வைத்திருந்த பெயர். பின்னாளில் ‘வெர்ஜினியா’ மட்டும் நிலைத்து, அதனோடு ‘வூல்ஃப்’ ஒட்டிக் கொண்டது (இனி வூல்ஃப் என்றே அழைக்கலாம்).

வூல்ஃபின் குடும்ப அமைப்பே சற்று வித்தியாசமானது. சொல்லப்போனால், வூல்ஃபின் உளவியல் சிக்கல்களுக்கு கருவிலேயே ‘கனெக்சன்’ கொடுத்தது அவருடைய குடும்பம்தான். வூல்ஃப்பின் தந்தை வழியில் நிறையப் பேருக்கு உளவியல் சிக்கல்கள் இருந்தன.

அந்தத் தாடிக்காரர் லெஸ்லி ஸ்டீஃபனுக்கும், ஜூலியாவுக்கும் மொத்தம் நான்கு குழந்தைகள். அதில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தை தான் வூல்ஃப்.

நிற்க…

அதற்கு முன்பே லெஸ்லிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும், ஜூலியாவுக்கு வேறொரு ஆணுடன் திருமணமாகி மூன்று பிள்ளைகளும் இருந்தனர்.

ஆக மொத்தம், எட்டு! (கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளவும்)

எட்டு பேரும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். அதாவது ஒரு ஆரம்ப பள்ளி நடத்துவதற்குண்டான எல்லாத் தகுதியும் அவ்வீட்டுக்கு இருந்தது.

தாடிக்காரரை ஏதோ சாமியார் என்று நினைத்துவிட வேண்டாம். அவரும் ஒரு எழுத்தாளரே. இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர்.

சிறுமியான வூல்ஃப், தந்தையின் நூலகத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுவாள். ‘அந்தக் கரடி பொம்ம வேணும்‌…’ என்று நாம் அடம்பிடிக்கும் வயதில், ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ படிப்பது அவள் வழக்கம். இப்படி மிகச்சிறிய வயதிலேயே வூல்ஃபுக்குப் புத்தகங்கள் அறிமுகமாகிவிட்டன.

துடிப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்திருந்த வூல்ஃபின் ஆறாவது வயதில் ‘அந்த விஷயம்’ நடந்தது.

*

‘நான் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அவன் என்னருகில் வந்தான். வந்தவன், என்னுடைய உடலை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். அவனுடைய கைகள், என் ஆடைக்குள் சுதந்திரமாக உலா வந்தன. அதை அவன் நிறுத்தி விடுவான் என்றே நான் நம்பினேன். ஆனால் அவன் நிறுத்தவில்லை. என்னுடைய அந்தரங்க உறுப்பில்…’

தனக்கேற்பட்ட முதல் பாலியல் சீண்டலை இப்படித் தான் எழுதியிருக்கிறார் வூல்ஃப்.

இதில் ‘அவன்’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது வேறு யாரையும் அல்ல, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான ஜெரால்ட்டைத்தான் (ஜூலியாவின் முதல் கணவருக்குப் பிறந்த பிள்ளைகளுள் ஒருவன்).

‘முதல் பாலியல் சீண்டல்’ என்று குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆம்…வூல்ஃபுக்கு, பல வருடங்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் கொடுத்திருக்கிறான் இந்த ஜெரால்டு.

ஆணோ, பெண்ணோ சிறுவயதில் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டால், அது பின்னாளில் ஒரு புத்தகம் போடும் அளவுக்குப் பல ஆழமான உளவியல் பிரச்னைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். அதற்கு வூல்ஃபே ஓர் உதாரணம்.

லூயிஸ் டிசால்வோ (Louise DeSalvo) எழுதிய ‘Virginia Woolf: The Impact of Childhood Sexual Abuse on her Life and Work’ என்ற புத்தகம், வூல்ஃபுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அதனால் அவர் அனுபவித்த உளவியல் சிக்கல்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. வூல்ஃபின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது.

வாழ்நாள் முழுக்க பாலியல் தொடர்பான விஷயங்களில், வூல்ஃபுக்கு நிறையக் குழப்பங்கள் இருந்தன. டீன் ஏஜ் பருவத்தை எட்டியபோது அதுவொரு ஒவ்வாமையாகவே மாறியது. வூல்ஃபுக்கு, ‘செக்ஸ்’ என்றாலே ‘விக்ஸ்’ தேய்க்கும் அளவுக்குத் தலைவலி வந்துவிடும். பதற்றம் உண்டாகும்.

அந்த முதல் பாலியல் சீண்டல்…! அது வேறு வூல்ஃபின் மனக்கண்ணில் அடிக்கடி தோன்றி, காட்சிகளாக ‘ஃப்ளாஷ்’ அடித்துக் கொண்டிருந்தது. அதனால் மன அழுத்தத்தில் அவதிப்பட்டார். தூக்கம் கெட்டது. கவனம் சிதறியது. எல்லாவற்றிலும் குழப்பம்.

வூல்ஃபின் பதிமூன்றாவது வயதில் ஜூலியானா இறந்தார். அதுவரை மூளையின் ஏதோவொரு இடத்தில் ‘பார்ட் டைம்’ வேலை பார்த்த வூல்ஃபின் உளவியல் சிக்கல்கள், தாயின் இறப்புக்குப் பிறகு முழுநேரமும் வேலை செய்யத் தொடங்கின‌.

சென்ற வார கட்டுரையில் ஹெமிங்வேக்கு இருந்த ‘பைபோலார் டிசார்டர்’ பற்றி பார்த்தோம் அல்லவா? அதே பிரச்சினைதான் வூல்ஃபுக்கும். புகழ்பெற்ற உளவியல் மருத்துவரான தாமஸ் சாஸ் உள்ளிட்ட பலரும் வூல்ஃபின் பைபோலார் டிசார்டர் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

வூல்ஃப் வாழ்ந்த காலத்தில் உளவியல் துறை இப்போதுபோல பெரும் வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை. சேட்டை செய்பவர்களைத் தனியறையில் அடைத்து வைப்பதுதான் சிகிச்சை!

வூல்ஃபை இப்படிப் பலமுறை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவே அவருடைய மன அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தியது. மாயக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. மாய பிம்பங்கள் தோன்றி மறைந்தன.

பலமுறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் வூல்ஃப். ஒருமுறை மாடி அறையின் ஜன்னல் வழியே கீழே குதித்து, காலில் மாவுக்கட்டு போட்டுக் கொண்டார்.

மன எழுச்சியாலும் மன அழுத்தத்தாலும் மாறி மாறி ‘சீசா’ விளையாடிய வூல்ஃபின் நிலையற்ற உணர்ச்சிகள், அவர் சாகும் வரை ஓயவே இல்லை.

அப்படியிருந்தும், உலகம் கொண்டாடும் செம்மாயான படைப்புகளை அவரால் எப்படி எழுத முடிந்தது?

0

இலக்கியத்தில் ‘Stream of Consciousness’ என்றொரு வார்த்தை இருக்கிறது. இதன் பொருள், ஒரு மனிதனுடைய எண்ணங்கள், உள்ளுணர்வுகள், நினைவுகள் ஆகியவற்றை அவன் யோசிப்பது போலவே எழுதுவது. வூல்ஃப், அதில் மாஸ்டர்!

உளவியல் சிக்கல்கள் இடை மறித்தாலும், தன்னுடைய உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் அப்படியே எழுத்துக்களாக மாற்றினார் வூல்ஃப். அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதே இந்தத் தனித்திறன்தான்.

எனில், வூல்ஃப்புக்கு இருந்த உளவியல் சிக்கல்கள்தான் அவருடைய எழுத்தைச் செழுமை படுத்தியதா?

அதுதான் இல்லை.

வேண்டுமானால் இப்படி சொல்லலாம்:

எழுத்தை, தனக்கிருந்த உளவியல் சிக்கல்களின் வடிகாலாக அமைத்துக் கொண்டார் வூல்ஃப். எழுதுவது மட்டுமே அவருக்கிருந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருந்தது. தன்னுடைய உளவியல் சிக்கல்கள் உச்சத்தில் இருந்தபோதும் எழுதுவதை அவர் நிறுத்தவே இல்லை (இடைப்பட்ட சில ஆண்டுகளைத் தவிர்த்து).

வூல்ஃபின் முதல் நாவலான மிசஸ் டாலவே (Mrs. Dalloway) மிகவும் புகழ் பெற்ற ஒன்று. ஐம்பது வயதான டாலவேதான் இந்நாவலின் மையப் பாத்திரம். தனது வீட்டில், ஓர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் டாலவே. அதற்குத் தேவையான பொருட்களை வாங்கச் சாலையில் இறங்கி நடக்கிறார். அப்போது விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்களைப் பற்றி டாலவேக்குள் ஓடும் எண்ணங்கள்தான் முழு நாவலும்.

வூல்ஃபின் சுயசரிதை போலவே இந்நாவல் பார்க்கப்படுகிறது.

டூ தி லைட் ஹவுஸ், தி வேல்ஸ்,  ஜகாப்ஸ் ரூம் போன்ற வூல்ஃபின் மற்ற படைப்புகளும் பிரபலமானவை.

0

வூல்ஃப்பின் பேனாவில் பெண்ணியமும் நவீனத்துவமும் வழிந்தோடியது. ‘அட…இது நம்ம கதையாச்சே…’ என்று சாமானிய மக்கள், வூல்ஃபின் எழுத்தைக் கொண்டாடினர். முக்கியமாகப் பெண்கள்.

டைம்ஸ் லிட்ரரி சப்ளிமென்ட் என்ற இலக்கிய விமர்சனப் பத்திரிகைக்கு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் வூல்ஃப். பிரபல எழுத்தாளரான ஈ.எம்.பாஸ்டர், பொருளாதார நிபுணரான ஜெ.எம்‌.கியேஸ் மற்றுமொரு எழுத்தாளரான லிட்டன் ஸ்ட்ராசே போன்றோரின் நட்பு, வூல்ஃபுக்கு புதிய உத்வேகத்தை தந்தது.

இவர்களெல்லாம் சேர்ந்து உருவாக்கியதுதான் ப்ளூம்ஸ்பர்க் குழு. முற்போக்குச் சிந்தனை, பெண்ணியம், பாலியல் சுதந்திரம் போன்றவற்றை விவாதிக்கும் தீவிர குழுவாக இவர்கள் செயல்பட்டனர். வூல்ஃபின் கூரிய எழுத்துக்கு இக்குழுவும் ஒரு காரணம்.

1912-ல் லியோனர்டு என்ற எழுத்தாளரை மணந்த வூல்ஃப், அவருடன் சேர்ந்து ‘ஹோகர்த் பிரஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் ரஷ்ய படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். அதேபோல உளப்பகுப்பாய்வின் தந்தையான சிக்மண்ட் பிராய்ட்டின் கோட்பாடுகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சிறப்பும் வூல்ஃபுக்கு இருக்கிறது.

முன்பே சொல்லியிருந்ததைப்போல செக்ஸில் அவருக்கிருந்த குழப்பம், கணவரான லியோனர்டை அவரிடமிருந்து தள்ளியே வைத்தது. மாறாக, வீட்டா என்ற பெண்ணுடன் லெஸ்பியன் உறவில் இருந்தார் வூல்ஃப். இருவருக்குள்ளும் இருந்த உறவை மையமாக வைத்து வூல்ஃப் எழுதிய புத்தகம் தான் ‘ஆர்லாண்டோ’.

இருந்தும் லியோனர்டு, வூல்ஃப்பின் மீது அதிக அன்பு வைத்திருந்தார். லியோனர்டுக்கும் மன அழுத்தம் இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் துணை நின்றனர்.

0

மார்ச் 28, 1941.

வூல்ஃபின் கால்கள், இங்கிலாந்தின் ஓஸ் நதியை நோக்கி நடந்தன. வூல்ஃப், தன்னுடைய ஆடைக்குள் கனமான சில கற்களை நிரப்பிக் கொண்டார். இம்முறை கண்டிப்பாக தவறக்கூடாது என்று நினைத்திருக்கக்கூடும்.

ஓஸ் நதி, வழக்கம்போல அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் அருகே சென்ற அவர், ஒருநிமிடம் கூட தாமதிக்கவில்லை..‌‌.

‘மீண்டும் நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அந்த துயரமூட்டும் காலங்களை இன்னொரு முறை என்னால் கடக்க முடியாது. இந்த முறை நான் மீண்டு வரமாட்டேன். என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, எனக்குச் சிறந்ததாகத் தோன்றும் முடிவை நான் எடுத்துள்ளேன். நீங்கள் என்னை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டீர்கள். ஆனால் நான் அப்படி இல்லை. உங்கள் வாழ்க்கையை முழுமையாக அழிக்கிறேன். நான் இல்லாமல் நீங்கள் உங்களுடைய பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும். இனியும் உங்களுக்குத் தொந்தரவாக நான் இருக்கப்போவதில்லை…’

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, லியோனர்டுக்கு வூல்ஃப் எழுதிய கடிதம் இது.

கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகே வூல்ஃபின் உடல் கண்டறியப்பட்டது. அதே ஓஸ் நதியின் ஒரு ஓரத்தில், உடல் உப்பி மிதந்து கொண்டிருந்தார் உலகின் தலைசிறந்த நவீனத்துவ எழுத்தாளர்.

குடும்பத்தில் கரைபுரண்டு ஓடிய உளவியல் சிக்கல்கள், சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள், நெருங்கிய உறவுகளின் எதிர்பாரா மரணங்கள் என இவை எல்லாம் சேர்ந்தே வூல்ஃபின் உளவியல் சிக்கல்களுக்கு அடிக்கல் நாட்டின. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘இலக்கியம் இருக்கும் வரை நானும் இருப்பேன்…’ என்று பேனாவை ஸ்டைலாக சுழற்றும் வூல்ஃப், அறிவியலை வென்றவர் தானே?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *