இந்த முறை எங்கே?
ஓ…அந்த வீடா?
அந்த வீடு கொஞ்சம் பரவாயில்லை. வேலை அதிகம் வாங்க மாட்டார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம். என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். கேட்டதெல்லாம் கிடைக்கும். அம்மாவின் ஞாபகமே வராது.
சென்ற முறை ஒரு வீட்டில் கொண்டு போய் விட்டார்களே! ஐயோ…அங்கே நான் திரும்ப போகமாட்டேன். மனசாட்சியே இல்லாதவர்கள் வாழும் வீடு அது.
ஏழு வயது சிறுமியை நடத்துவது போன்றா என்னை அவர்கள் நடத்தினார்கள்? அதுவும் அந்த வீட்டிலிருந்த பெரியவர் ஒருவர், என் உடைகளைக் கழற்றி…என் உடலைத் தீண்டி…! ச்சீ…அதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.
அதுசரி, அம்மா மீண்டும் எப்போது வருவாள்? ம்…இம்முறை எப்படியும் தாமதமாகும். அவளுடைய நோய் தீவிரமாகிக் கொண்டே போகிறது.
தனியாகப் பேசுகிறாள். தனியாகச் சிரிக்கிறாள். அடிக்கடி சாகப் போகிறேன் என்கிறாள்.
கோபம். சந்தேகம். வெறுப்பு. அழுகை. இப்படி எல்லா உணர்ச்சிகளும் சமநிலை தவறி, அவளைப் பாடாய் படுத்துகிறதே!
இதெல்லாம் எப்போது சரியாகும்?
நோர்மா ஜீனின் மனதில் தோன்றும் கேள்விகள், குழப்பங்களாக உருமாற நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ளவில்லை. பிறந்தது முதலே இம்மாதிரியான குழப்பங்களோடுதான் நோர்மா வளர்ந்தார். அதுவே பின்னாளில் அவருடைய உளவியல் சிக்கல்களுக்கு ‘திறப்பு விழா’ ரிப்பன் வெட்டியது.
ஆம்…அம்மா க்ளாடிஸிடமிருந்து வசீகரிக்கும் அழகை மட்டுமல்ல, காலம் முழுக்கத் தன் உணர்ச்சிகளோடு ‘கால்பந்து’ விளையாடிய உளவியல் சிக்கல்களையும் சேர்த்தேதான் அவர் கடன் வாங்கியிருந்தார்.
நோர்மா ஜீன் என்கிற அவருடைய நிஜப்பெயரைச் சொன்னால் இங்கே யாருக்கும் தெரியாது. மர்லின் மன்றோ என்றால்தான் தெரியும்.
மர்லின் மன்றோ.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பேரழகி. ஐம்பதுகளில் ஹாலிவுட்டைத் தன்வசம் வைத்திருந்தவர். ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை இவருடைய பாதிப்பு இல்லாமல் எந்த நடிகையும் இங்கில்லை.
மர்லினுக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை அவருடைய வாழ்க்கையிலும் சினிமாவிலும் உண்டாக்கிய தாக்கங்கள் எத்தகையது?
பார்ப்போம்…
0
ஜூன் 1,1926.
லாஸ் ஏஞ்சல்ஸ் பொது மருத்துவமனையில் அந்தப் பிஞ்சுப் பூவைப் பெற்றெடுக்கும்போது,’பின்னாளில் ஒட்டுமொத்த அமெரிக்காவே இவளுடைய கண் அசைவுக்குச் சொக்கி நிற்கப்போகிறது…’ என்பது க்ளாடிஸுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சொல்லப்போனால், இப்புது பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்றே அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘மேடம், குழந்தைக்கு பர்த் சர்டிபிகேட் எழுதனும்…’
‘சரி…’
‘அப்பா பேரு தேவை படுது, சொல்லுங்க…’
‘…’
க்ளாடிஸ், அப்போது முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று, இரண்டாவது கணவரையும் பிரிந்து, சார்லஸ் கிஃப்போர்ட் என்ற நபருடன் உறவில் இருந்தார். அவர்தான் மர்லினுடைய தந்தை என்று கூறப்படுகிறது.
க்ளாடிஸ் அடிக்கடி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், பெரும்பாலும் வளர்ப்பு வீட்டில்தான் நாட்களை ஓட்டினார் மர்லின். அதுவும் வெவ்வேறு வீடுகளில்.
தன்னுடைய சுயசரிதையில் க்ளாடிஸைப் பற்றி மர்லின் இப்படி எழுதியிருக்கிறார்:
‘அம்மாவின் அரவணைப்பு எனக்கு எப்போதுமே கிடைத்தது இல்லை. அவள் என்னுடன் அதிகம் பேசியது கிடையாது. சத்தம் போட்டால் அவளுக்குப் பிடிக்காது. புத்தகத்தின் பக்கங்களைக்கூட நான் மெதுவாகத்தான் புரட்டுவேன்…’
தந்தை யாரென்றே தெரியாது, தாயும் உடனில்லை. வளர்ப்பு வீடுகளில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவு. போதாக்குறைக்குக் குடும்ப ஜீன்களில் ஒட்டிக்கொண்டிருந்த உளவியல் சிக்கல்கள். இவை போதாதா மர்லினுக்கு உளவியல் சிக்கல்களை உண்டு பண்ண?
சிறுவயதில் மர்லினுக்கு ‘ஆட்டிஸம்’ இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பேசுவதில் சிக்கல், சமூக ஒவ்வாமை, தனிமை என ஆட்டிஸதுக்கு உண்டான எல்லா அறிகுறிகளும் மர்லினுக்கு இருந்தன.
மர்லின், பதின்ம வயதை எட்டியபோது அவரை சிறிது காலம் பார்த்துக் கொண்டவள் கிரேஸ். கிரேஸ், க்ளாடிஸின் தோழி. வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வையிலிருந்து மர்லினை விடுவிக்கவே கிரேஸுக்கு நேரம் சரியாக இருந்தது. மர்லினைச் சுற்றி பெர்லின் சுவர் எழுப்ப முயன்று தோற்றுப்போனாள் க்ரேஸ்.
இது சரிவராது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
எப்படி?
ஆம்…அதேதான்.
மர்லினின் முதல் திருமணம் 1942-ம் ஆண்டு நடந்தது. அப்போது மர்லினின் வயது வெறும் பதினாறு மட்டுமே. முதல் கணவரின் பெயர், ஜிம் டோகர்ட்டி. கல்யாணம் செய்த கையோடு இரண்டாம் உலகப்போருக்குச் சென்று விட்டார் ஜிம். இது, இருவருக்குள்ளும் பெரிய இடைவெளியை உண்டாக்கியது. போரில் குண்டு விழுந்ததோ இல்லையோ, இவர்களுடைய சொந்த வாழ்க்கையில் பெரிய பெரிய குண்டுகள் விழுந்தன.
அந்தச் சமயத்தில், டேவிட் கானோவர் எனும் புகைப்படக் கலைஞர் ஒருவரின் நட்பு மர்லினுக்குக் கிடைத்தது. அவர் எடுத்துக் கொடுத்த புகைப்படங்கள், மர்லினுக்கு இரண்டு பரிசுகளை பெற்றுத் தந்தன. ஒன்று விவாகரத்து. மற்றொன்று, மாடலிங்.
விவாகரத்து, சுதந்திரத்தை வழங்கியது.
மாடலிங், ஹாலிவுட் கதவைத் திறந்து வைத்தது.
கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான் மர்லினுக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை காட்டத் தொடங்கின.
0
தீவிர உளவியல் சிக்கலுக்கும், அதித் தீவிர உளவியல் சிக்கலுக்கும் நடுவில் இருப்பதை ‘பார்டர் லைன்’ என்கிறாம். மர்லினுக்கு இருந்தது, இந்த ‘பார்டர் லைன்’ சமாச்சாரம்தான். அதாவது, ‘பார்டர் லைன் பர்சனாலிட்டி டிசாடர்’.
இந்த பார்டர் லைன் பர்சனாலிட்டி டிசாடர் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்,’உணர்ச்சிகளில் குவியல்’ எனலாம்.
ஆம்…எல்லா உணர்ச்சிகளையும், ஒரு ஸ்பூன் ‘எக்ஸ்ட்ரா’ போட்டு சமைப்பது இவர்களுடைய வழக்கம். சந்தோஷமாக இருந்தால், அவர்களே வந்து கை குலுக்குவார்கள். சோகமாக இருந்தால் அவர்களே கையை அறுத்துக் கொள்வார்கள்!
நிலையற்ற உணர்ச்சிகளால் தடுமாறும் இவர்களுக்கு, நிலையான நட்பு என்று எதுவும் இருக்காது. சூர்யவம்ச குடும்பத்தில் வாழ்ந்தாலும், ‘சின்ராசு’ போல ஒதுங்கியே நிற்பார்கள். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாததுபோல், ‘ஐ ஃபீல் அலோன்’ என்று வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். பிடிவாதமும் முன்கோபமும் இவர்களுடைய இரண்டு கண்கள்.
மர்லினுக்கு இவையெல்லாமே இருந்தன.
திரையில் ஜொலித்த அவரால், சொந்த வாழ்க்கையில் சோபிக்க முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், இதுபோன்ற உணர்ச்சிகளின் திருவிளையாடல்கள்தான். ஜிம்மை விவாகரத்து செய்தபின், அடுத்தடுத்து இரண்டு திருமணங்களைச் செய்து கொண்டார் மர்லின். இரண்டிலுமே தோல்வி!
ஆனால் வெளியே அவருடைய ஆட்டோகிராப்புக்காக வரிசையில் காத்துக்கிடந்தோர் பலர்.
ஆரம்பத்தில் ஓரிரு திரைப்படங்களில் தலைகாட்டிய மர்லின், ‘ஆல் அபவுட் ஈவ் (1950)’ திரைப்படம் மூலம் பிரபலமானார். 1953-ல் வெளியான ‘நயகரா’, மர்லினுக்குத் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது. வில்லத்தனம் பொருந்திய கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் மர்லின். திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியவர்கள்,’நயகராவின் வளைவு, நெளிவுகள் அழகா அல்லது மர்லினின் இடையழகா என்று சொல்வது கடினம்…’ என்றனர்.
தொடர்ந்து வெளிவந்த ‘ஹௌ டூ மேரி எ மில்லியனர் (1953)’, ‘ரிவர் ஆஃப் நோ ரிட்டர்ன் (1954)’ போன்ற திரைப்படங்கள், ‘கனவுக் கன்னி’ பட்டத்தையும் தாண்டி ‘நல்ல நடிகை’ அந்தஸ்தையும் வழங்கியது.
ஆனால் 1955-ல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ திரைப்படம்தான், மர்லினை உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்தது. குட்டைப் பாவாடை காற்றில் பறப்பது போன்ற மர்லினின் புகழ்பெற்ற புகைப்படம் இடம்பெற்றது இத்திரைப்படத்தில்தான். அதில் அவர் அணிந்திருந்த வெள்ளைப் பாவாடை, பின்னாளில் சுமார் 4.6 மில்லியன் டாலருக்கு விலை போனது கூடுதல் தகவல்.
இப்படி ஹாலிவுட்டின் முடி சூடா ராணியாக வலம் வந்த மர்லின், மூளையின் ஒரு ஓரத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த உளவியல் சிக்கல்களை அவரே தண்ணீரை ஊற்றி எழுப்பினார். தண்ணீர் என்றால் H2O இல்லை. C2H6O.
குடிப்பழக்கம், எந்தவொரு உளவியல் சிக்கலையும் தீவிரப்படுத்தும். பார்டர் லைன் பர்சனாலிட்டியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? இயல்பாகவே இந்த பார்டர் லைன் ஆசாமிகள், ‘ரிஸ்க்’ எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். இதில் குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டால், எந்த உச்சநிலைக்கும் செல்லத் தயாராக இருப்பார்கள்.
மிதமிஞ்சிய குடி, தூக்க மாத்திரைகள், போதைப்பொருட்கள் என எதையெல்லாம் செய்யக் கூடாதே அதையெல்லாம் சரியாக செய்தார் மர்லின். இதுபோன்ற செயல்களால் எரிச்சலடைந்த பட நிறுவனங்கள், மர்லினுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தனர். மன அழுத்தத்தால் மேலும் குடித்தார்.
இப்படி வெளியே ஜொலித்துக் கொண்டிருந்த மர்லினின் வாழ்க்கை, உள்ளே இருண்டு கிடந்தது.
0
மர்லின், தனக்கிருந்த உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெறாமல் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து உளவியல் நிபுணர்களிடம் வெவ்வேறு காலகட்டங்களில் சிகிச்சை பெற்றார். உளப்பகுப்பாய்வின் தந்தையான சிக்மண்ட் பிராய்ட்டின் மகளான அன்னா பிராய்ட்டும் அதில் ஒருவர்.
ஆனால் எவ்விதமான சிகிச்சைகளும் மர்லினுக்குக் கை கொடுக்கவில்லை. மாறாக ‘சர்ச்சை’ என்னும் சிலந்தி வலையில் மேலும் மேலும் சிக்கினார் மர்லின். உச்சமாக அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியுடன் மர்லினைச் சேர்த்து வைத்து பேசினர்.
‘என் எல்லாவிதமான கவலைகளுக்கும் பிரச்னைகளுக்கும் ஒரே நிவாரணம் தூக்கம் மட்டும்தான். அப்போதுதான் கனவுகள் வரும்…’ என்று வாழ்நாள் முழுக்க கனவுலகில் வாழ்ந்த மர்லின், நிரந்தரமாகத் தூங்கிவிடும் நேரமும் வந்தது.
ஆகஸ்ட் 6, 1962. அதிகாலை 3 மணி.
மர்லின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண், மர்லினின் படுக்கை அறையில் இன்னமும் விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறாள். இந்நேரத்தில் மர்லின் விழித்திருக்கச் சாத்தியமே இல்லை.
சந்தேகம் உண்டாகிறது.
‘மேடம்…மேடம்…’ என்கிறாள்.
பதில் இல்லை.
கதவைத் தட்டிப் பார்க்கிறாள். அப்போதும் பதில் இல்லை.
சந்தேகம் வலுக்கிறது.
உடனே மர்லினுடைய மருத்துவ ஆலோசகரான ரால்ப் கிரீன்சனை அழைத்து விஷயத்தைச் சொல்கிறாள். சிறிது நேரத்தில் கிரீன்சன் அங்கு வர, கதவு உடைக்கப்படுகிறது.
கட்டிலில் நிர்வாணமாக, வலது கையில் டெலிபோனை பிடித்தபடி, கண்கள் மேலேறிப் போய் பிணமாகக் கிடந்தார் மர்லின். ‘நியூ யார்க் டெய்லி மிரர்’ செய்தித்தாள்,’மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார்…’ என அன்றே செய்தியை வெளியிட்டது.
மர்லினின் பிரேதப் பரிசோதனை அறிக்கை:
1. இறப்பு இரவு 8.30 முதல் 10.30 மணிக்குள் நடந்திருக்க வேண்டும்.
2. அவருடைய இரத்தத்தில் 4.5 மில்லிகிராம் அளவுக்கு பீனோபார்பிடால் மருந்து கலந்திருக்கிறது (பீனோபார்பிடால், அக்காலத்தில் தூக்கமின்மைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்து. இப்போது பயன்பாட்டில் இல்லை)
3. மேலும் 8 மில்லிகிராம் அளவுக்கு குளோரல் ஹைட்ரேட் மருந்து கலந்திருக்கிறது. இதுவும் பீனோபார்பிடாலின் ஒரு வகை தான்.
‘மர்லினின் சாவில் சந்தேகம் இருக்கிறது…இது திட்டமிட்ட கொலை…’ என்று இன்றுவரை பல தியரிகள் உருவாகிவிட்டன.
மர்லின், சிறுவயதில் இருந்தே அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்திருக்கிறார்தான். அது பார்டர் லைன் பர்சனாலிட்டிக்கே உரித்தான பிரச்னை. மன அழுத்தத்தை உடனே போக்கிக்கொள்ள இதுபோன்ற புத்திசாலித்தனமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவர். ஆனால் இதை வைத்து, மர்லினின் இறப்புக்குக் காரணம் தற்கொலைதான் என்று சொல்லிவிட முடியாது.
குடும்ப வரலாறு, சிக்கலான குழந்தைப் பருவம், பாலியல் தொந்தரவு, குடிப்பழக்கம், போதை மாத்திரை என இவையெல்லாம் சேர்ந்தே மர்லினுக்கு உளவியல் சிக்கல்களைத் தோற்றுவித்தன.
மர்லின் வாழ்ந்தது மொத்தமே முப்பது ஆறு வருடங்கள்தான். ஆனால் அவர் செய்த சாதனைகள், பிறர் தொட்டுக்கூடப் பார்க்க முடியாத உயரத்தில் நிலைத்தன.
இறுதியாக…
என்னதான் உளவியல் சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், மர்லின் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிர்; விடை கிடைக்காமல் போன விடுகதை என்பதே உண்மை!
(தொடரும்)