Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

இவள்தான். இவள் மட்டும்தான்.

‘அரிசோனா’போல வறண்டு கிடந்த என் மனதை, ‘அலாஸ்கா’போல குளிரூட்டியவள். ‘நெவாடா’போல காய்ந்திருந்த என் நாட்களை, ‘ஒரிகன்’போல பசுமையாக்கியவள்.

ஆம்…இவள்தான். இவள் மட்டும்தான்.

‘புத்தகங்களைத் தாண்டி மனிதர்களையும் காதலிக்க முடியும்…’ என்று எனக்கு உணர்த்தியவள். ‘காதலிக்க அழகு தேவையில்லை. மனம் போதும்…’ என்று பாடம் எடுத்தவள்.

இவளால்தான் பசியை மறந்தேன். இவளால்தான் தூக்கத்தைத் தொலைத்தேன். இவளால்தான் புதிதாய் பிறந்தேன்.

ஆனால் காலம் கொடியது. அது, உங்களிடமிருந்து ஏதாவது ஒன்றை அபகரிக்கத்தான் பார்க்கும். முதலில் என்னுடைய தாயை அபகரித்தது. பிறகு சகோதரியை. இப்போது இவளையும்…!

‘இறுதிவரை உன்னுடன் இருப்பேன்…’ என்று சொன்னவளின் இறுதி யாத்திரைக்கு மலர் தூவிடுவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை.

என் இதய அறையிலிருந்து நீங்கி, இதோ இந்தக் கல்லறையில் அமைதியாக உறங்குகிறாள் பாருங்கள்.

இவள்தான். இவளேதான்.

அதுசரி, மழை பெய்தால் குளிருமே! அதை இவள் எப்படித் தாங்குவாள்? அதனால் என்ன? இவளுக்காக நான் குடை பிடிப்பேன்.

நாளைய வரலாறு எழுதட்டும், ‘அடிமைகளின் சூரியன் ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய காதலி ஆன் ரட்லெட்ஜ்ஜின் கல்லறைக்குக் குடை பிடித்தார்…’ என்று.

அப்படித்தான் எழுதினார்கள்.

ஆன் ரட்லெட்ஜ். இப்படி ஒருவர் லிங்கனின் வாழ்க்கையில் இருந்தாரா என்று கூடத் தெரியவில்லை. ஏனெனில், ஆன் பற்றி லிங்கன் எங்கேயும் மூச்சுகூட விட்டதில்லை. ஆனால் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள், ‘லிங்கன் – ஆன்’ காதல் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

சரி, லிங்கனின் உளவியலை ஆராயும்போது அவருடைய காதல் குறித்து ஏன் பேச வேண்டும்?

விஷயம் இருக்கிறது. லிங்கனுக்கு முதன் முதலாக மன அழுத்தம் உண்டானது, ஆனின் இறப்பின்போதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து அவர் மீண்டாரா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், அடிமை மக்களின் விடிவெள்ளியுமான லிங்கனின் உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை அவருடைய வாழ்க்கையிலும் அரசியலிலும் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணின?

பார்ப்போம்…

0

வருடம்: 1809.
நாள்: பிப்ரவரி 12.
இடம்: கென்டகி மாநிலம், அமெரிக்கா.

ஹாட்ஜன்ஸ் வில்லியிருந்து மூன்று மைல் தூரம் தள்ளியிருந்த அந்தக் கிராமத்து வீட்டில், ‘குவா…குவா…’ என்று கேட்ட அந்தக் குழந்தையின் சத்தம் அக்கம்பக்கத்து வீட்டின் தூக்கத்தைக் கலைத்தது. அழகான ஆண் குழந்தையை ஈன்ற மயக்கத்தில் சுருண்டு கிடந்தாள் நான்ஸி.

ஆனால் தந்தையான தாமஸ் முகத்தில் சிறிதளவுகூட மகிழ்ச்சி இல்லை. எப்படி இருக்கும்? ஒரே ஒரு அறை கொண்ட அந்தச் சிறிய வீட்டில், மூத்த மகள் சாராவையும் சேர்த்து இனி நான்கு பேர் தங்க வேண்டுமே!

அதை ‘வீடு’ என்றுகூட சொல்ல முடியாது. நான்கு புறமும் மரத்தால் அடைக்கப்பட்ட கதவுகள். அவ்வளவுதான்!

தாமஸ் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

‘விரைவில் வேறோரு இடத்துக்குச் செல்ல வேண்டும்…’

ஆனால் ‘ஆப்ரகாம் லிங்கன்’ என்று பெயரிடப்பட்ட அக்குழந்தைக்கு, எட்டு வயதாகும்போதுதான் தாமஸின் எண்ணம் நிறைவேறியது. ஆம், 816-ல் இண்டியானாவுக்குக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார் தாமஸ். அங்கேயும் அதே மாதிரியான வீடுதான். ஆனால் முந்தைய வீட்டுடன் ஒப்பிடுகையில் தேவலாம்.

சிறுவன் லிங்கனுக்குப் புதிய இடம் பிடித்திருந்தது. தந்தையுடன் வேட்டையாடுவது, மரம் வெட்டுவது போன்ற வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டான் லிங்கன். ஆனால் அந்த உற்சாகம் அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.

1818-ல் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ‘மர்ம நோய்’ ஒன்று பரவியது. அதீத காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மயக்கம் எனச் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் மக்கள் அனைவரையும் காவு வாங்கத் தொடங்கியது அந்நோய்‌. அதில் லிங்கனின் தாயும் ஒருவர்.

எந்நேரமும் தாயின் அரவணைப்பில் இருந்த லிங்கன், தனித்து விடப்பட்டதுபோல உணர்ந்தான். அப்போது லிங்கனுக்கு வயது வெறும் ஒன்பது!

ஆனால் விரைவிலேயே விதவைப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் தாமஸ். ‘புது அம்மா’ தந்த அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிய லிங்கனால், அடுத்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

1828. லிங்கனுக்கு இப்போது வயது பத்தொன்பது. அவருக்கு எல்லாமுமாய் இருந்த சகோதரி சாரா, பிரசவத்தின்போது இறந்தாள். குடும்பத்தில் அடுத்த மரணம். உடைந்தே விட்டார் லிங்கன்.

‘சாரா இறந்ததை லிங்கனால் ஜீரணிக்கவே முடியவில்லை. முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதார். அவர் விரல்களின் வழியே கண்ணீர் வழிந்தோடிய காட்சியை என்னால் மறக்கவே முடியாது…’

பின்னாளில் இத்துயரச் சம்பவம் பற்றி லிங்கனின் உறவுக்காரர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இவை.

ஆக‌, குடும்பத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த மரணங்கள்தான் லிங்கனுக்குப் பின்னாளில் மன அழுத்தத்தை உண்டாக்கியதா?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லிங்கன் வாழ்ந்த காலத்தில், அமெரிக்கா ஒன்றும் அவ்வளவு பெரிய வளர்ச்சியெல்லாம் கண்டிருக்கவில்லை. தொற்று நோய்களாலும், பிரசவ பாதிப்புகளாலும் மனிதர்கள் இறப்பது அப்போது சாதாரணம்தான். லிங்கனும் இதை அறிவார்.

எனவே லிங்கனின் மன அழுத்தத்திற்கு இவ்விரு மரணங்களே காரணமென்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவை அவருடைய மனதை மெல்லிதாக அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மைதான்.

அப்படியென்றால் லிங்கனின் மன அழுத்தம் எப்போது ஆரம்பித்தது?

0

ஜோஷுவா உல்ப் ஷென்க் என்பவர் எழுதிய,’Lincoln’s Melancholy: How Depression Challenged a President and Fueled His Greatness’ என்ற புத்தகத்தில் இதற்கான விடை கிடைக்கிறது. இது முழுக்க முழுக்க லிங்கனின் மன அழுத்தத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம். (இதில் ‘மெலன்கோலி’ என்பது, தீவிர மன அழுத்தத்தைக் குறிக்கிறது)

லிங்கன் தன்னுடைய இருபத்தி ஆறாவது வயதில், ஆன் ரட்லெட்ஜ் என்ற பெண்ணைக் காதலித்தார். ஆனைப் பார்க்கும் போதெல்லாம் லிங்கனின் ‘ஹார்ட் பீட்’ அதிகரித்தது. பெண்களைக் கண்டாலே ஓடி ஒளியும் லிங்கனால், ஆன் விஷயத்தில் அப்படி இருக்க முடியவில்லை. துணிந்து காதலைச் சொல்லி விட்டார். ஆனும் பச்சைக் கொடி காட்ட, பிறகென்ன காதல் வளர்ந்ததா? இல்லை…லிங்கனின் தாடிதான் வளர்ந்தது‌.

ஆம்‌..‌.மீண்டுமொரு மர்ம நோய்… மீண்டுமொரு மரணம்…மீண்டுமொரு துக்கம்…

அதுவரை மழையில் நனைந்த பட்டாசுபோல தேமேவென இருந்த லிங்கனின் மனச்சோர்வு, முதன் முதலாக வெடித்துச் சிதறியது அப்போதுதான்.

முன்னுரையில் பார்த்ததுபோல ஆனின் கல்லறைக்குக் குடை பிடிப்பது, தினமும் அங்கே சென்று அழுவது, தனியாகப் பேசுவது என நம்மூர் ‘சூப் பாய்ஸ்’ செய்யும் அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறார் லிங்கன்.

இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ‘லவ் ஃபெயிலியரின்போது எல்லோருக்கும் தானே மன அழுத்தம் வரும்? லிங்கன் மட்டும் விதிவிலக்கா என்ன? இதெல்லாம் ஒரு காரணமா?’

வாஸ்தவம்தான். ஆனால், மன அழுத்தம் என்றால் என்ன?

ஒருவரின் காதலி இறந்ததனால் ஏற்படும் வருத்தம் எல்லாம் மன அழுத்தத்தில் வருமா?

இல்லை.

அதற்கென குறிப்பிட்ட சில அறிகுறிகள் இருக்கின்றன. அவை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை செய்யவிடாமல் அவை தடுக்க வேண்டும்.

என்னென்ன அறிகுறிகள்?

முக்கியமான சில அறிகுறிகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்:

1. வெறுமையான மனநிலை.
2. எதிலும் ஆர்வமின்மை.
3. உடல் சோர்வு.
4. குற்ற உணர்ச்சி.
5. தூக்கமின்மை/ அதிக தூக்கம்.
6. தற்கொலை எண்ணங்கள்.

லிங்கனுக்கு இவையெல்லாமே இருந்தன.

நெருங்கிய நண்பர்களிடம் பலமுறை தன்னுடைய தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் லிங்கன். அதில் ஒன்று:

‘மேரி டாடை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஒரு சாதாரண பெண். என்னைப்பற்றி உனக்கே நன்கு தெரியும். உண்ண சில ரொட்டிகளும், தூங்க ஒரு மெத்தையும் இருந்தாலே எனக்குப் போதுமானது. இதையும் மீறி அவளைத் திருமணம் செய்துகொண்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை…’

ஆனால், மேரி டாட்டைத்தான் திருமணம் செய்து கொண்டார் லிங்கன். 1842-ல் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில், ஒருவித தயக்கத்துடன்தான் மேரியின் விரலுக்கு மோதிரம் போட்டார்.

லிங்கன் எதிர்பார்த்ததுபோலவே அவருடைய திருமண வாழ்க்கை, அவ்வளவு உவப்பானதாக இல்லை. அப்போது வழக்கறிஞராக இருந்த லிங்கனுக்கு சொற்ப வருமானமே வந்தது. எப்போதாவது வரும் ‘கேஸ்’களுக்கும் பாவம் பார்த்து ‘ஃபீஸ்’ வாங்க மாட்டார் லிங்கன். மேரிக்கு இதுவே எரிச்சலை உண்டாக்கியது. எரிச்சல், கோபமாகும். கோபம், சண்டையில் முடியும். வேலை சீக்கிரம் முடிந்தாலும், மேரிக்குப் பயந்து அலுவலகத்திலேயே இருப்பார் லிங்கன்.

இந்தக் காலகட்டத்தில், லிங்கன் எப்படி இருந்தார் என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்ன வாக்கியம் இது:

‘நான் பார்த்த மனிதர்களிலேயே மிகவும் சோகமான மனிதர் லிங்கன். அவருடைய கண்கள் எப்போதும் சோகத்தை மட்டுமே தாங்கி நிற்கும்…’

0

ராபர்ட், எட்வர்ட், வாலஸ், தாமஸ் என லிங்கனுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். எல்லோரின் மீதும் அளவற்ற அன்பை வைத்திருந்தார் லிங்கன். லிங்கன் ஒருவர் மீது அன்பு வைத்தால் என்னவாகும்?

அதேதான். நால்வரில் இரண்டு பேரை, தான் வாழ்ந்த காலத்திலேயே பறிகொடுத்தார் லிங்கன்.

இப்படி உள்ளே மன அழுத்தத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும், வெளியே எல்லோரிடமும் லிங்கனுக்கு நல்ல பெயர் இருந்தது. தன்னுடைய பேச்சுத்திறன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகவும் இருந்தார்.

‘நீ அரசியல்ல குதி தல…’ என்று நண்பர்கள் உசுப்பேத்திவிட, விக் கட்சியில் இணைந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லிங்கன்.

லிங்கன் ஒன்றும் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அரசியலில் குதிக்க வில்லை. அவரினுள் ஒரு கனவு இருந்தது.

‘அடிமைமுறை இல்லாத அமெரிக்கா…’

அமெரிக்காவின் வட மாநிலங்கள் அடிமைமுறையை எதிர்த்தும், தென் மாநிலங்கள் அடிமைமுறையை ஆதரித்தும் இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தன. இந்தப் பிளவு நாளைடைவில் பகையானது. பகை, போரைத் தோற்றுவித்தது.

1861-ல் அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியாக லிங்கன் பொறுப்பேற்றபோது, உள்நாட்டுப் போர் கிட்டத்தட்ட ஆரம்பமாகியிருந்தது.

சொந்த வாழ்க்கையில் நிம்மதி இல்லை. செய்த தொழிலில் பெரிய வருமானம் இல்லை. அடிபட்டு உதைபட்டு கடைசியாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கும் வேளையில், உள்நாட்டுப் போர்!‌

லிங்கனின் மனநிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

அமெரிக்க ஜனாதிபதியாக அவர் பதவியிலிருந்த 1503 நாட்களில், 1458 நாட்கள் போரில்தான் கழிந்தன. இந்நாட்களில் லிங்கனின் மன அழுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்தது. போரில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிவதைப் பார்த்து, ரத்தக் கண்ணீர் வடித்தார் லிங்கன்.

காலைச் சுற்றிய பாம்புபோல மரணத்தைக் கூடவே வைத்திருந்த லிங்கனுக்கு, அது கழுத்தை நெரிக்கும் நாளும் வந்தது.

வருடம்: 1865.
நாள்: ஏப்ரல் 14.
இடம்: ஃபோர்ட் அரங்கம், வாஷிங்டன்.

டாம் டெய்லரின் ‘அமெரிக்கன் கஸின்’ நாடகம் பார்த்துக் கொண்டிருந்த லிங்கனை, ஜான் வில்க்ஸ் பூத் என்பவன் கைத் துப்பாக்கியால் சுட்டான். லிங்கனின் தலையில் குண்டு பாய்ந்தது. லிங்கன் உடனே இறக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் அவருடைய உயிர் இழுபறியில் கிடந்தது.

சாகும்போதும் வேதனை!

0

லிங்கனின் ‘கெட்டிஸ்பர்க் உரை’ உலகப் புகழ்பெற்றது. உலகை மாற்றிய பேருரைகளுள் முக்கியமானது. ஆனால் அந்த நேரத்தில் லிங்கன் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தீவிர மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவர் உலகம் போற்றும் பேருரை ஒன்றை நிகழ்த்த முடியுமா?

இதை இரண்டு விதமாக பார்க்கலாம்.

1. லிங்கனுக்கு மன அழுத்தம் இருந்திருக்கிறது. அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் ‘தீவிர’ மன அழுத்தம் இருந்ததா என்பது கேள்விக்குறியே. வரலாறு எனும் பூதக்கண்ணாடி, அவருடைய மன அழுத்தத்தைப் பெரிதுப்படுத்தி காட்டிருக்கலாம் அல்லவா?

2. தீவிர மன அழுத்தத்தைக் கூட, ஆச்சரியப்படும் வகையில் தன்னுடைய செயல் திறனால் லிங்கன் வென்றிருக்கலாம்.

இறுதியாக…

‘நான் அழகாக இல்லை…’ என்கிற தாழ்வு மனப்பான்மை, லிங்கனுக்குச் சிறுவயதில் இருந்தே இருந்தது. சொல்லப்போனால் லிங்கனைக் காயப்படுத்த நினைப்பவர்கள், அவருடைய தோற்றத்தை முன்வைத்தே கல் எறிவர் (மேரி உட்பட).

ஆனால், லிங்கனின் வரலாறை ஆழ்ந்து படிக்கும் யாரும் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள் என்ன தெரியுமா?

‘லிங்கன், உலகிலேயே மிகவும் அழகான மனிதர்…’

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *