Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

என்ன இடம் இது? இவர்களெல்லாம் யார்? திடீரென வருகிறார்கள். என் பற்களின் நடுவில் எதையோ ஒன்றைப் பொருத்துகிறார்கள். முன்பே குழம்பிப் போயிருக்கும் என் மூளையில், மின்னதிர்வைச் செலுத்துகிறார்கள். நூறு வோல்டேஜ் கரெண்ட்டை அது தாங்குமா என்ன?

தூண்டிலில் சிக்கிய மீனைப்போல, என் உடல் துடிக்கிறது. கண்கள் இரண்டும் மேலே செல்கின்றன. வாயில் நுரை தள்ளுகிறது .

பிறகு?

பிறகு நான் இவ்வுலகை மறப்பேன்.

இதோ…என் கண்முன்னே வடிவமற்ற வேறொரு உலகம் விரிகிறது பாருங்கள். அதனுள் சென்று விடுவேன்.

அங்கே எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை.

பொறுப்புகள் இல்லை. வெறுப்புகள் இல்லை. கோபங்கள் இல்லை. காயங்கள் இல்லை.

ஆம்…அங்கே பெண்கள் சுதந்திரமாக வாழலாம். யோசிப்பதை எழுதலாம். நேசிப்பதைச் செய்யலாம். ஆக மொத்தத்தில் பெண்கள், பெண்களாக இருக்கலாம்.

ஆனால் ஒரே ஒரு சிக்கல் மட்டும் இருக்கிறது.

கண் விழித்தால், அந்த உலகம் காணாமல் போய் விடும். பின்னர் மீண்டும் இதே இடத்திற்கு வந்து விடுவேன்.

வேண்டாம். இந்த உலகம் எனக்கு வேண்டாம்.

என்னைக் கொண்டு போய் அக்கனவுலகில் விட்டுவிடுங்கள். நான் விரும்பும் சுதந்திரம் அங்கே தான் இருக்கிறது. நிரந்தரமான சுதந்திரம்!

நிரந்தரமான சுதந்திரத்தை அடைய என்ன செய்ய வேண்டும்?

மரணிக்க வேண்டும்.

மரணம் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே, நான் அதை மிகச் சிறப்பாகச் செய்வேன்.

0

ஒவ்வொரு முறையும் ‘மின்னதிர்வு சிகிச்சை (ஷாக் ட்ரீட்மெண்ட்)’ பெறும்போது, சில்வியா பிளாத் இப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு சிகிச்சையும் அவருக்கு இறுதி வரையில் கை கொடுக்கவில்லை. அவர் விரும்பியதுபோலவே, அந்த நிரந்தர சுதந்திரத்தை விரைவிலேயே பெற்றார்.

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்றக் கவிஞரும், ‘தி பெல் ஜார்’ நாவல் மூலம் உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளருமாகிய சில்வியா பிளாத்துக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? வெறும் முப்பதே வயதில் விசித்திரமான முறையில் அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

பார்ப்போம்…

0

அக்டோபர் 27, 1932.

பாஸ்டன்,‌‌ அமெரிக்கா.

‘அந்த ஜெர்மானியத் தந்தைக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது…’ என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் நேரிடையாக விஷயத்துக்குள் செல்வோம்‌.

இதுவரை ‘பிரபலங்களின் உளவியல்’ தொடரில் பார்த்த எல்லோரின் தந்தையைப் போலவேதான் பிளாத்தின் தந்தையும். பெயர் ஓட்டோ. மிகவும் கண்டிப்பானவர். ஓட்டோவுக்கு இந்த இலக்கியம், எழுத்து, புத்தகங்கள் எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், உயிரியல் மட்டுமே. உயிரியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் அவர்.

ஆனால் பிளாத்தின் தாயான அவ்ரீலியா அப்படி இல்லை. அவ்ரீலியாவுக்கு இலக்கியம் மீது ஆர்வம் இருந்தது. எனவே மிகச் சிறிய வயதிலேயே பிளாத்தைக் கவிதைகள் எழுத ஊக்குவித்தார்.

‘மிஸ்…மிஸ்…இந்தப் பையன் என்னோட பென்சில உடைச்சுட்டான் மிஸ்…’ என்று நாம் பென்சிலுக்காகச் சண்டை போடும் வயதில், பிளாத்தின் கவிதைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கின!

ஆம்…எட்டு வயதிலிருந்தே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார் பிளாத்.

அவருடைய முதல் கவிதையான ‘கவிதை (கவிதையின் தலைப்பே கவிதை தான்)’ 1940இல் ‘பாஸ்டன் ஹெரால்டு’ என்கிற உள்ளூர் நாளிதழில் வெளியானது.

அதே எட்டு வயதில் பிளாத்தின் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான சம்பவமும் நடந்தேறியது.

நீரிழிவு நோயின் தீவிரத்தால் ஓட்டோ இறந்து போனார்.

தந்தையின் எதிர்பாரா மரணம், பிளாத்தை ஆழமாகப் பாதித்தது. பின்னாளில், அவர் எழுதிய கவிதைகள் பலவற்றுள் தந்தையின் மரணம் குறித்த பாதிப்புகள் இருத்தன.

உதாரணத்திற்கு…

‘அப்பா உங்களை நான்
கொன்றிருக்க வேண்டும்
அதற்குள் நீங்கள் முந்திக்
கொண்டீர்கள்

உங்கள் ஜெர்மானிய மொழியில்
உங்களுடன்
பேச முடியவில்லை

என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
முள் வேலியல் அமைந்த பொரியில்
மாட்டிக் கொண்டது

எல்லா ஜெர்மானியர்களையும்
உங்களைப் போல
பாவித்தேன்

அந்த மொழியை ஆபாசமானதாகக் கருதினேன்’

இது பிளாத்தின் புகழ்பெற்ற ‘அப்பா’ என்கிற கவிதையின் ஒரு பகுதி. இதில் தந்தையை ஹிட்லருடன் ஒப்பிட்டிருப்பார் பிளாத்!

கவிதை எழுதுவதில் மட்டுமல்ல, படிப்பிலும் பிளாத்தான் நம்பர் ஒன். பள்ளியில் அவர் பெற்ற நல்ல மதிப்பெண்கள், அமெரிக்காவின் பிரபலமான ஸ்மித் கல்லூரியில் சேர உதவின. பிளாத்தின் பேனா கூர்மையானது அங்கே தான்.

மூளையில் ஒடும் எண்ணங்களை ஒன்று சேர்த்து, கவிதைகளாகத் தொகுக்க ஆரம்பித்தார் பிளாத். அதில் காதல், காமம், தனிமை, வெறுமை போன்ற உணர்வுகள் வழிந்தோடின.

ஒப்புதல் வாக்குமூலம் வடிவில் இருந்த அவருடைய கவிதைகள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்தன.

ஆனால் வெளியே தெரியாத மற்றொன்றையும் அவர் கூடவே வைத்திருந்தார்.

0

1953.

பிளாத், கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடியிருந்தது.

‘வாக்கிங் போயிட்டு வரேன் மா…’ என்று அவ்ரீலியாவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றார் பிளாத். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பொறுத்துப் பார்த்த அவ்ரீலியா, கடைசியில் போலீஸிடம் போய் நின்றார்.

‘ஸ்மித் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சில்வியா பிளாத் என்ற மாணவியை நேற்று முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்’

அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியே இதுதான்.

‘இது ஒரு திட்டமிட்ட கிட்நாப்…’ என்றனர் சிலர். ‘தனது காதலனுடன் ஓடிவிட்டாள் பிளாத்…’ என்றனர் பலர்.

ஆனால் நடந்ததோ வேறு.

மூன்று நாட்களுக்குப் பிறகு சொந்த வீட்டின் அடித்தளத்தில் சுயநினைவின்றிச் சுருண்டு கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் பிளாத்‌.

ஆம்…முதல் தற்கொலை முயற்சி!

பிளாத், ஏற்கெனவே தூக்கமின்மை காரணமாக தூக்க மாத்திரைகள் பயன்படுத்தி வந்தார். அதுவும் மொத்தமாகக் காணாமல் போயிருந்ததால், அவ்ரீலியாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது. அதற்கேற்ப வீட்டின் அடியிலிருந்து முனகல் சத்தம் கேட்க, வெலவெலத்துப் போய் அவ்ரீலியா அங்கே சென்று பார்க்க… இதெல்லாம் ‘கான்ஜூரிங்’ படக்காட்சிகளுக்கு ஒப்பானவை.

அதுவரை, ‘அந்தப் பொண்ணு செம ப்ரில்லியண்ட்…’ என்று சொன்னவர்களெல்லாம், ‘ஓ…அவளா? அவளுக்குக் கொஞ்சம் மனநலம் சரியில்லையே…’ என்று புருவங்களைச் சுருக்க ஆரம்பித்தனர்.

அடுத்த ஆறு மாதங்கள், பிளாத்தின் வாழ்க்கை மனநல விடுதியில் கழிந்தது. அங்கேதான் முன்னுரையில் பார்த்தது போல, அவருக்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுக்கப்பட்டது.

இந்த ஷாக் ட்ரீட்மெண்ட்டில் இரண்டு வகைகள் உண்டு.

1. மேம்படுத்தப்படாத பழைய முறை (Unmodified ECT) – மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அப்படியே படுக்க வைத்து, எவ்வித மயக்க மருந்துமின்றி நேரிடையாக கரெண்ட்டை தலைக்குள் செலுத்துவது. இதை முற்றிலுமாக இப்போது தடை செய்துவிட்டார்கள்.

2. மேம்படுத்தப்பட்ட புதிய முறை (Modified ECT) – தற்போது நடைமுறையில் இருக்கும் முறை இதுதான். இம்முறையில், பாதிக்கப்பட்ட நபருக்கு மயக்க மருந்து செலுத்தி விடுவார்கள். சுயநினைவை முற்றிலுமாக இழந்த பிறகே, கரெண்ட் செலுத்தப்படும்.

பிளாத் வாழ்ந்த காலத்தில் மேம்படுத்தப்படாத பழைய முறையே நடைமுறையில் இருந்தது.

தனக்கு வழங்கப்பட்ட ஷாக் ட்ரீட்மெண்ட் பற்றி, தான் எழுதிய ஒரே நாவலான ‘தி பெல் ஜார்’ல் எஸ்தர் கதாபாத்திரம் மூலம் விரிவாக எழுதியிருப்பார் பிளாத்.

பிளாத்தின் ‘தி பெல் ஜார்’ நாவல் புகழ்பெற்றது. அது அவருடைய சுயசரிதை என்றே நம்பப்படுகிறது.

அதில் வரும் எஸ்தர், சாட்சாத் பிளாத்தேதான்.

பிளாத்தைப் போலவே எஸ்தருக்கும் எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இருவருமே உளவியல் சிக்கல்களால் அவதிப்படுகிறார்கள். சமூகம் மற்றும் பெண்ணிய அமைப்புகளின் எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்கிறார்கள். தற்கொலை எண்ணங்கள், தூக்க மாத்திரைகள், ஷாக் ட்ரீட்மெண்ட் என நாவலின் ஓட்டத்தில் எஸ்தர் மறைந்து பிளாத்தே நம் கண்முன் தெரிகிறார்.

‘தீவிர மன அழுத்தம் பற்றியும், அதைச் சுற்றியுள்ள தவறான புரிதல்கள் பற்றியும் இதைவிட யாராலும் மிக நுணுக்கமாக எழுதமுடியாது…’

இந்நாவல் பற்றி பெரும்பாலான உளவியல் மருத்துவர்களின் கருத்து இதுதான்.

‘தி பெல் ஜார்’ எனும் தலைப்பை, பிளாத் ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

கண்ணாடி கும்பளிக்குள் சிக்கிக் கொண்டதைப் போன்ற வாழ்க்கை என்னுடையது…’ என்று ஒரு குறியீடாகவே அப்பெயரை வைத்திருக்கிறார் பிளாத்.

0

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றே அமைந்தன, பிளாத் வாழ்க்கையில் அரங்கேறிய அடுத்தடுத்த நிகழ்வுகள்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உயர்கல்வி படிக்கச் சென்ற இடத்தில், டெட் ஹ்யூஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிளாத். டெட்டும் ஒரு கவிஞரே.

இருவரும் 1956இல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்பத்தில் நன்றாகச் சென்ற இவர்களுடைய வாழ்க்கை, போகப் போக தேயத் தொடங்கியது. டெட், தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதாக தனக்குச் சிகிச்சை அளித்த உளவியல் மருத்துவருக்குக் கடிதம் எழுதினார் பிளாத்.

டெட்டுக்கு, அஸியா என்ற வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டானது. இத்தனைக்கும் பிளாத் – டெட் தம்பதிக்கு அப்போது இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இது தெரிந்தவுடன் அவரை விட்டுப் பிரிந்தார் பிளாத்.

இந்த நேரத்தில்தான் பிளாத்தின் உளவியல் சிக்கல்கள், மீண்டும் பனைமரம் ஏறின.

‘என்னால் எழுத முடியவில்லை. அப்படியே எழுதினாலும், எல்லாமே குப்பை. இதையெல்லாம் யார் படிப்பார்கள்?’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டார் பிளாத்.

‘எழுத முடியவில்லையே…’ என்கிற ஏக்கம், மீண்டும் மீண்டும் பிளாத்தைத் துன்புறுத்தியது.

உண்மையில், பிளாத் அந்தச் சமயத்தில் எழுதியவைதான் இன்றும் ‘கிளாசிக்’ அந்தஸ்தைத் தாங்கி நிற்கிறது. ‘தி பெல் ஜார்’ நாவல், அவர் இறப்பின் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியாகியிருந்தது.

சரி, பிளாத்துக்கு அப்படி என்னதான் உளவியல் சிக்கல்கள் இருந்தன?

உண்மையில் பிளாத்துக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் குறித்து தெளிவான தகவல்கள் ஏதுமில்லை. சில ஆராய்ச்சியாளர்கள், ‘பிளாத்துக்கு தீவிர மன அழுத்தம் மட்டுமே இருந்தது…’ என்கின்றனர். வேறு சிலரோ, பை போலார் டிசாடரை கை காட்டுகிறார்கள் (எர்னஸ்ட் ஹெமிங்வே, வெர்ஜினியா வூல்ஃப் போன்றோருக்கு இருந்த உளவியல் சிக்கல்).

இருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, பிளாத்துக்கு பைபோலார் டிசாடரே இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், பிளாத்துக்கு மொத்தமாக 26 முறை ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள். மன அழுத்தத்தையும் தாண்டி, மனச் சிதைவு இருந்தால் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகள் ஒருவருக்கு அளிக்கப்படும்.

பிளாத்தின் தந்தை வழியில் இருந்த உளவியல் சிக்கல்கள், தந்தையின் இறப்பு, தன்னுடைய கொள்கைகளின் மீது சமூகம் தந்த அழுத்தம் என இவையெல்லாமே சேர்ந்துதான் அவருக்கு உளவியல் சிக்கல்களை உண்டு பண்ணின.

0

பிப்ரவரி 11, 1963.

வழக்கம் போல அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்டார் பிளாத். மேசையில் இருக்கும் தட்டச்சில் தன்னுடைய கடைசி கவிதையை டைப் செய்ய ஆரம்பிக்கிறார். கவனம் சிதறுகிறது. கைகள் நடுங்குகின்றன. அர்த்தமற்ற இருள் சூழ்ந்து கொள்கிறது.

மேலே உறங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கச் செல்கிறார் பிளாத். அவர்களின் நெற்றியில் முத்தமிடுகிறார்.

மீண்டும் கீழே இறங்கி வந்து சமையல் அறைக்குள் செல்கிறார். கேஸ் அடுப்பை முழுவதுமாகத் திறந்து வைத்து புகையை வெளியேற்றுகிறார். அது அறை முழுக்கப் பரவுகிறது. புகை வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, அங்கிருக்கும் எல்லா சந்து பொந்துகளையும் துணிகள் கொண்டு அடைக்கிறார்.

சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ‘கார்பன் மோனாக்சைடு’ விஷத்தால் துடிதுடித்து இறந்து போகிறார் பிளாத்.

இறக்கும்போது அவருடைய வயது முப்பது!

பிளாத்தின் இறப்பு, உலகம் முழுக்க அதிர்வலையை உண்டாக்கியது. டெட்க்கு எதிராகப் பெண்கள் கோஷம் போட்டனர். ‘பிளாத்தின் மனதை டெட் புரிந்து கொள்ளவில்லை. பிளாத்தைக் கொன்றவர் அவர் தான்…’ எனக் கடிந்து கொண்டனர்.

பிளாத்தின் நெருங்கிய தோழியான கவிஞர் ஆன் செக்ஸ்டன்,’பிளாத்தின் இறப்பு என்னை ஆழமாகப் பாதித்திருக்கிறது…’ என்றார். பிளாத்துக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு,’சில்வியாஸ் டெத்’ என்றொரு கவிதை எழுதினார் (பின்னாளில் அவரும் தற்கொலை செய்து கொண்டது தனிக்கதை).

இன்று பிளாத்தின் படைப்புகளை பெண்கள் கொண்டாடுகிறார்கள். அவருடைய ஆழமான காட்சிப் படிமங்களையும், தீவிரமான மொழிநடையையும் தேடித்தேடி வாசிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். பிளாத்தின் எழுத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு கவிஞருக்கு வேறென்ன வேண்டும்?

(தொடரும்)

(‘அப்பா’ கவிதை, எழுத்தாளர் அனுராதா ஆனந்த் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *