Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

‘உனக்கு காலரா பற்றி தெரியுமா ஹோவர்ட்?’

‘தெரியும் அம்மா…’

‘அந்நோய், கிருமிகளால் பரவக்கூடியது. தெரியுமா?’

‘தெரியும் அம்மா…’

‘அது நம்மை என்ன செய்யும் என்று தெரியுமா?’

‘ம்…தெரியும்…’

‘நம்முடைய வீட்டில்கூட நிறைய கிருமிகள் இருக்கலாம்…உனக்குத் தெரியுமா?’

‘ம்ம்ம்…’

‘ஹோவர்ட்…நீ பாதுகாப்பான உலகில் இல்லை…’

2004ஆம் ஆண்டு வெளியான, ‘தி ஏவியேட்டர்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி இது. சிறுவனான ஹோவர்ட்டுக்கும் அலீனுக்கும் இடையே நிகழும் உரையாடலை மிக அழகாகப் படமாக்கியிருப்பார், மார்ட்டின் ஸ்கோர்செஸி.

இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, ஹோவர்ட் ஹியூஸின் வாழ்க்கை வரலாறு.

‘நீ பாதுகாப்பான உலகில் இல்லை…’

அலீன் சொன்ன இந்த வாக்கியம், ஹோவர்ட்‌டின் ஹிப்போகாம்பஸில் ஆழமாகப் பதிந்திருக்க‌ வேண்டும். சாகும் வரை அதையே முழுமையாக நம்பிக் கொண்டிருந்தார் ஹோவர்ட்.

சரி, யார் இந்த ஹோவர்ட்?

ஹோவர்ட், 1940களில் அமெரிக்காவின் பெரும்புள்ளி. ‘பிசினஸ் மேக்னட்’ என்பார்களே, அதற்கு முழு அர்த்தம் கொடுத்தவர். அதுமட்டுமல்ல, சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், இன்ஜினியர், விமான ஓட்டி என இவர் ‘கை’ வைக்காத இடங்களே கிடையாது.

ஆனால் அவருக்கிருந்த ஓசிடி (Obsessive Compulsive Disorder) எனும் உளவியல் சிக்கல், அவருடைய வாழ்க்கையையே மொத்தமாகப் புரட்டிப் போட்டது. தொட்டதெல்லாம் ‘பொன்’ என்று இருந்தவரை, தொடுவதெல்லாம் ‘சின்’ என்று ஆக்கியது.

அது என்ன ஓசிடி?

ஓசிடி, தீவிர உளவியல் சிக்கல்களுள் முதன்மையானது‌. ஜெர்மானிய மதகுரு மார்டின் லூதர், ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன், அமெரிக்க விஞ்ஞானி நிக்கோலா டெஸ்லா போன்ற பலருக்கும் இந்த ஓசிடி இருந்துள்ளது. ஆனால் ஹோவர்ட் அளவுக்கு இல்லை.

‘ஹோவர்ட், ஓசிடியின் முழு உருவம். மனநலம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான கேஸ் ஸ்டெடி…’ என்கிறார் உளவியல் நிபுணரான ரெமாண்ட் ஃபோளர்.

ஹோவர்ட்டை அப்படி என்னதான் செய்தது இந்த ஓசிடி?

0

டிசம்பர் 24, 1905. இடம் – டெக்ஸாஸ், அமெரிக்கா.

அந்தக் கிறிஸ்துமஸ் ஈவில், ஹோவர்ட் ‘சீனியர்’ மற்றும் அலீன் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஹோவர்ட் ‘ஜூனியர்’.

சீனியர் அடிக்கடி பிசினஸ் ட்ரிப்காக வெளியே சென்று விட, ஜூனியரைக் கைக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டது அலீன் மட்டும்தான்.

இளம் ஹோவர்ட் பற்றி பிறரிடம் விசாரித்தால், அவர்கள் சொல்வது இதைத்தான்.

‘கூச்ச சுபாவமுடைய, நண்பர்கள் அதிகமில்லாத, சமூகத்திடமிருந்து ஒதுங்கியே நிற்கும், ஆனால் தாயின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் சுட்டிப் பையன்…’

அது 1922.

‘கர்ப்பப் பையில் ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணனும். ஹாஸ்பிடல் வர போயிட்டு வரேன்…’ என்று சொல்லிவிட்டுச் சென்ற அலீன், மீண்டும் வீடு திரும்பவில்லை. மயக்க மருந்து ஒவ்வாமையால் மருத்துவமனையிலேயே இறந்து போனார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ‘மீட்டிங் ஒன்னு இருக்கு. போயிட்டு வரேன்…’ என்று கிளம்பிச் சென்ற ஹோவர்ட் சீனியர், மீட்டிங் முடிவதற்குள் ஹார்ட் அட்டாக்கால் மரணித்தார்.

இப்படி அடுத்தடுத்து பெற்றோர்களை இழக்கும்போது, ஹோவர்ட்டின் வயது பதினெட்டைக்கூட தாண்டவில்லை.

சிறிது காலம் உறவினர்களின் அரவணைப்பில் இருந்தார்.

ஹோவர்ட் ‘சீனியர்’, பாறைகளை எளிதில் துளைக்கும் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார். அக்கருவி மூலம் எண்ணெய் உற்பத்தியில் பெரிய புரட்சி ஒன்றைச் செய்தார். பணமழை கொட்டியது.

தந்தை இறந்த பின், அதே வேலையைத் தானும் கையில் எடுத்தார் ஹோவார்ட். அதன்பின் அவருடைய வாழ்க்கையில் நடந்தது எல்லாமே ‘மேஜிக்’தான்!

பெரும் தொழிலதிபராக அறியப்பட்ட ஹோவர்ட்டின் பார்வை, ஹாலிவுட் பக்கம் மெல்லத் திரும்பியது. அடுத்த ஐந்தே வருடங்களில் திரைப்படம் தயாரிக்கும் நிலைக்கு வந்தார்.

ஆரம்பத்தில் ஹோவர்ட்டை ஒரு பணப்பையாக மட்டுமே பார்த்த ஹாலிவுட்வாசிகள், போகப் போக அவருடைய திறமையைப் புரிந்து கொண்டனர். ‘ஹெல்ஸ் ஏன்ஜல்ஸ் (1930)’, ‘தி அவுட்லா (1943)’ போன்ற திரைப்படங்களை இயக்கி உலகப்புகழ் பெற்றார் ஹோவர்ட்.

கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான் ஹோவர்ட்க்கு இருந்த ஓசிடி, ‘பிரசன்ட் சார்…’ எனk கையை உயர்த்தியது.

0

ஹோவர்ட்க்கு ‘அழுக்கை நினைத்து பயப்படும் (Fear of Contamination)’ பிரச்சினை இருந்தது. இது ஓசிடியின் முக்கியமான ஒரு வகை.

பெரும்பாலும் இவர்கள் தங்களுடைய கைகளில், கிருமிகள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வர். ‘நம்முடைய உடலில் கிருமி உட்புகுந்து விடுமோ…?’ என அஞ்சுவர்.

கிருமி எப்படி உடலினுள் செல்லும்? கைகள் மூலம் தானே?

எனவே இவர்கள் அடிக்கடி கைகளைs சுத்தம் செய்வர். ‘சுத்தம் செய்வது’ என்றால், அப்படியே டேப்பை ஓப்பன் செய்து கைகளை நனைப்பது அல்ல. விரல்களின் இடுக்குகளில் ஆரம்பித்து, முழங்கை வரை சோப்பு போட்டு நன்றாகத் தேய்ப்பது.

இப்படிக் கைகளைs சுத்தம் செய்வது நல்லது தானே என்கிறீர்களா? நாமெல்லாம் ஒருநாளைக்கு எத்தனை முறை கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வொம்? மூன்று முறை? ஐந்து முறை? அட…பத்து முறைகூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஓசிடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த எண்ணிக்கை ஐம்பதைக்கூட தாண்டும்!

சிலர் ஒவ்வொரு முறை கை கழுவும் போதும், ஒவ்வொரு புது சோப்பைப் பயன்படுத்துவர்.

ஒருநாளைக்கு இத்தனை முறை சுத்தம் செய்தால், அந்தக் கைகள் என்னாவது?

தோல் பிய்ந்து, வெளிறிப்போய், கைகளே புண் ஆகிவிடும் அல்லவா? ஹோவர்ட்டுக்கு அதுதான் நடந்தது.

எதைத் தொட்டாலும் கிருமி பற்றிய பயம் உடனே அவரை தொற்றிக் கொள்ளும். பயம், ஒரு பதற்ற நிலையை உண்டு பண்ணும். உடனே கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். அப்படி அவர் செய்யாவிடில், அந்தப் பதற்றம் இன்னும் தீவிரமாகும். வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது. அதே எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு கொடுக்கும்.

பொறுக்க முடியாமல், கைகளைச் சுத்தப்படுத்தத் தண்ணீரைத் தேடி ஓடுவார் ஹோவர்ட். சோப்பைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்வார். அதன் பிறகே அவருடைய மனம், ‘ரிலாக்ஸ்’ ஆகும்‌‌.

இத்தோடு பிரச்னை முடிந்ததா? அதுதான் இல்லை.

மீண்டும் அதே பயம் வரும். மீண்டும் அதே‌ பதற்ற நிலை உருவாகும். மீண்டும் கைகளைச் சுத்தம் செய்வார். மீண்டும் ரிலாக்ஸ்!

பயம். பதற்றம். சுத்தம். ரிலாக்ஸ். ரிப்பீட்டு…

பயம். பதற்றம். சுத்தம். ரிலாக்ஸ். ரிப்பீட்டு…

‘மாநாடு’ படத்தில் வரும் எஸ்‌.ஜே.சூர்யா போல, மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் ஹோவர்ட்டின் உருவத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இதில் திரும்பத் திரும்ப வரும் அந்த எண்ணம், ‘அப்சசன்’. அதனால் திரும்பத் திரும்பக் கைகளை சுத்தம் செய்வது, ‘கம்பல்சன்’.

மொத்தத்தில், ‘அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர் (OCD)’.

0

ஹோவர்ட்க்கு இந்த ஓசிடி எப்படி ஆரம்பித்தது?

பல காரணிகள் இருந்தாலும், அவருடைய தாயான அலீனைத் தான் உடனடியாகக் கை காட்டுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆம்…அலீன், சிறுவயதில் இருந்தே ஹோவர்ட்டை ஒரு பதற்றமான சூழ்நிலையில்தான் வளர்த்திருக்கிறார்.

அன்றைய அமெரிக்கா எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி கண்டிருந்தாலும், மருத்துவத் துறையில் ப்பின்தங்கியேயிருந்தது. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிறையப் பேருக்கு, சவப்பெட்டிகள் தயாராக இருந்தன. நம்மூர் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ‘மக்கள் அடிக்கடி மர்மக் காய்ச்சலால் மடிந்தனர்…’

அதுவரை கண்டுபிடிக்கப்படாத பல கிருமிகள், ‘எங்களத் தொட்ட…நீ கெட்ட…’ என்கிற ரீதியில் பஞ்ச் டயலாக் பேச, போதாக்குறைக்கு ‘டைப்பாய்டு மேரி’ சம்பவம் வேறு மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருந்தது.

இதனால் இயல்பாகவே எல்லோரிடத்திலும் ‘கிருமித் தொற்று’ பற்றிய பயம் இருந்தது (கொரானா சமயத்தில் நமக்கிருந்ததைப் போல).

ஆனால் அலீனுக்கு இந்தப் பயம் கொஞ்சம் ‘அதிகமாக’ இருந்ததுதான் பிரச்னையே.

நம்மூரில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது,’அங்க போகக்கூடாது…பேய் வந்துடும்…’ என்று பயமுறுத்தி வளர்ப்போம் அல்லவா? அதைத்தான் அலீனும் செய்திருக்கிறார். என்ன…பேய்க்குப் பதில் கிருமி.

ஆனால், ‘ஹோவர்ட் ஒரு மன நோயாளி…’ என்று ஊரெ பேச ஆரம்பிக்கும் அளவுக்கு அவருடைய ஓசிடி தீவிரமடைந்தது அந்த விமான விபத்திற்குப் பிறகுதான்.

ஹோவர்ட்க்கு ஒரு கனவு இருந்தது.

‘பறக்க வேண்டும்…’

ஆழ்மனதில் ரகசியமாகப் புதைந்து கிடந்த அது, தீடீரென ஒருநாள் விழித்துக் கொண்டது. பிறகென்ன…? விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தவர், அதைத் தயாரிக்கவும் செய்தார். ஹாலிவுட் போலவே குறிப்பிட்ட பல சாதனைகளை விமானத்துறையிலும் நிகழ்த்தினார்.

ஹோவார்ட்க்குத் தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தார் (உண்மையில் பறந்தார்!)

ஆனால் 1946இல் நடந்த அந்த விமான விபத்து, எல்லாவற்றையும் மாற்றியது.

விமான சோதனை ஓட்டம் ஒன்றில், ஹோவர்ட் ஓட்டிச் சென்ற விமானம் நிலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹோவர்ட்டின் விலா எலும்புகள் உடைந்தன. கழுத்து எலும்புகள் முறிந்தன. அதுமட்டுமல்ல, அவருடைய மண்டை ஓட்டில் லேசான விரிசல் விழுந்தது‌.

மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகரமான காயங்கள், முன்பே இருக்கும் உளவியல் சிக்கல்களை இன்னும் மோசமாக்கும் என்பது நாம் அறிந்ததே.

0

ஹோவர்ட், வெளியே செல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்தார். இருள் சூழ்ந்த தனிமையில் நேரத்தைச் செலவிட்டார். உடம்பில் ஒட்டுத்துணிகூட அணியாமல், அறையைச் சுற்றிச் சுற்றி வந்தார். இரண்டு கால்களிலும் ‘டிஷ்யூ பேப்பர்’ அடங்கிய பெட்டியைப் பொருத்திக் கொண்டார். இது போன்ற செயல்கள்தான், கிருமிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் என உறுதியாக நம்பினார்.

அவருக்கு உணவு கொண்டு வரும் பணியாளர்கள், தலை முதல் கால் வரை முழுவதுமாக ‘பாதுகாப்பு கவசம்’ அணிந்திட வேண்டும். குறிப்பிட்ட உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும். ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புது ப்ளேட், புது குவளை. அதில் சிறிய தவறு நடந்தால்கூட அன்றைய நாள் சாப்பிடாமல் உறங்கி விடுவார் ஹோவர்ட்.

மேலும் பணியாளர்கள் யாருக்காவது சிறிதளவு காய்ச்சல் வந்தால்கூட, அவர்கள் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் நெருப்பில் எரித்து விடச் சொல்வார்.

அவர் முன்பு யாராவது இருமினால் போதும், ஹோவர்ட்டின் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். அன்று ஒருநாள் முழுக்க அதையே நினைத்து மன அழுத்தத்தில் அவதிப்படுவார். இதனாலேயே அவரிடம் மற்றவர்கள் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்தனர்.

ஹோவர்ட், பல ஹாலிவுட் நடிகைகளுடன் உறவில் இருந்தார். அதில் மிகவும் நெருக்கமான இருந்தவர், ஜீன் பீட்டர்ஸ். இருவரும் 1957இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே ஹோவர்ட்டை விட்டுப் பிரிந்தார் பீட்டர்ஸ். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஹோவர்ட்டின் ஓசிடியே முக்கியக் காரணம்.

ஒரு கட்டத்தில், ‘டிஷ்யூ பேப்பர்தான் இந்தப் பாதுகாப்பற்ற உலகை எதிர்த்துப் போராடும் கேடயம்…’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார் ஹோவர்ட். அவர் தங்கியிருந்த அறை முழுவதும் டிஷ்யூ பேப்பர் ஒட்டப்பட்டது.

நாளிதழில் படிக்க வேண்டுமா? டிஷ்யூ பேப்பர் மீது வைத்துத் தான் படிக்க வேண்டும். டீ குடிக்க வேண்டுமா? கோப்பையைச் சுற்றி டிஸ்யூ பேப்பர் ஒட்டியிருக்க வேண்டும். அவருடைய அறைக் கதவை யாராவது திறக்க வேண்டுமென்றால், பதினைந்து டிஷ்யூ பேப்பர்கள் அடங்கிய கையுறையை பயன்படுத்த வேண்டும். அதில் ஒன்று குறைந்தாலும், ‘வெளியே போ…’ என்று அலறுவார் ஹோவர்ட்.

இப்படி ஹோவர்ட்டின் ஓசிடி, நாளாக நாளாகத் தீவிரமடைந்ததே தவிர குறைந்தபாடில்லை. அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளும் கை கொடுக்கவில்லை அல்லது அந்தக் காலத்தில் சரியான சிகிச்சை முறைகள் இல்லை.

அந்தச் சமயத்தில் பொது மக்களால் அவர் இப்படித்தான் அறியப்பட்டார்:

‘உயரமான, தசைகளே‌ இல்லாத எலும்புக்கூடுபோல காட்சியளிக்கும், கழுவப்படாத முடியுடன், முகத்தில் சிதைந்த தாடியும், விரல் நகங்களும் கால் நகங்களும் நீளமாக வளர்ந்து, அழுக்கேறிப்போன மனிதன்!’

எந்த அசுத்தத்தைக் கண்டு காலமெல்லாம் பயந்து பயந்து ஓடினாரோ, அதுவே அவரிடத்தில் குடிகொண்டது காலத்தின் முரண்.

உடலளவில் பலவீனமாகிக் கொண்டே வந்த ஹோவர்ட், பல்வேறு உடல் உபாதைகளால் ஏப்ரல் 5, 1976 அன்று மறைந்தார்.

‘தி ஏவியேட்டர்’ திரைப்படத்தில் ஹோவர்ட்டின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த லியோனார்டோ டிகாப்ரியோ, ‘இவ்வளவு வெற்றிகரமான மனிதர் எப்படி இவ்வளவு சிரமப்பட முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஹோவர்ட்டுக்கு எல்லா வளங்கள் இருந்தும், அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்றே இருந்ததில்லை…’ என்றார்.

ஹோவர்ட்டின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆராய்ச்சியாளர்கள் சிலர், ‘அவருக்கிருந்த ஓசிடியால்தான் அவர் இவ்வளவு உயரங்களைத் தொட முடிந்தது…’ என்கிறார்கள். அதில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

ஹோவர்ட்டின் வாழ்க்கையில் ஓசிடி என்கிற உளவியல் சிக்கல் இல்லாமல் இருந்திருந்தால், அவர் இன்னமும் நிறைய நிறைய உயரங்களைத் தொட்டிருப்பார் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

உங்கள் கருத்து என்ன?

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *