Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

பிரபலங்களின் உளவியல் #12 – ஜூடி கார்லேண்ட்

நான், ‘சோர்வாக இருக்கிறது…’ என்றேன்.

‘சோர்வைப் போக்கிக் கொள்ள இந்த மாத்திரையை உட்கொள்…’ என்றார்கள்.

பின்பு, ‘தூக்கம் வரவில்லை…’ என்றேன்.

‘இந்த மாத்திரையை உட்கொள். தூக்கம் நன்றாக வரும்…’ என்றார்கள்.

‘நிம்மதி இல்லை…’ என்றேன். அதற்கும் ஒரு மாத்திரை தந்தார்கள்.

‘கோபம் வருகிறது…’

‘இதோ மாத்திரை…’

‘தற்கொலை எண்ணம்’

‘ம்…அதற்கும் இருக்கிறது’

இப்படி எல்லா உணர்ச்சிகளுக்கும் மாத்திரைகளை வழங்கிவிட்டு, இப்போது அதற்கு அடிமை ஆகிவிட்டேன் என்கிறார்கள். இது எவ்வகையில் நியாயம்? 

என்னுடைய மொத்த வாழ்க்கையும் கடுகளவு கொண்ட இந்த மாத்திரையில் அடங்கிவிட்டது. இல்லை இல்லை…அடைத்துவிட்டார்கள்.

யோசித்துப் பார்த்தால் என்னுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது ஒன்றுதான்.

தூக்கம். 

அதை வரவைக்கத் தானே இத்தனை போராட்டம்!

அதுசரி, நீங்கள் நன்றாகத் தூங்குகிறீர்களா?

ஹாலிவுட் வரலாற்றில் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ‘தி விஸார்ட் ஆஃப் ஒஸ்’ திரைப்படத்தில் நடித்தபோது ஜூடி கார்லேண்ட்டின் வயது வெறும் பதினாறு.

  

எதிர்காலத்தைப் பற்றிய மிகப்பெரிய கனவுகளுடன் இருந்த அச்சிறுமிக்கு, திரை வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க அப்போது தெரியவில்லை. ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்றே நினைத்தாள். வாழ்நாள் முழுவதும் அவளை ஒரு கைப்பாவையாகவே பலரும் வைத்திருந்தனர்.

1940 காலகட்டத்தில் ஹாலிவுட் திரைப்படங்களிலும், மேடைக் கச்சேரிகளிலும், தொலைக்காட்சியிலும் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் ஜூடி கார்லேண்ட்.

அவருக்கிருந்த உளவியல் சிக்கல்கள் என்னென்ன? அவை அவருடைய கலையிலும் வாழ்க்கையிலும் எவ்வாறு பிரதிபலித்தன? 

பார்ப்போம்…

0

ஜூன் 10, 1922. 

மினிசொட்டா, அமெரிக்கா.

ஈத்தல், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஃப்ரான்க்கின் முகத்திலோ, பதற்றத்துடன் கூடிய ஒரு எதிர்ப்பார்ப்பு.

‘இந்த முறை கண்டிப்பாக ஆண் குழந்தைதான் பிறக்கும்…’

சிறிது நேரத்தில் ஈத்தல் வெடித்து அலறும் சத்தம் கேட்டது. ஃப்ரான்க் பரபரப்பானார். ஆம்…குழந்தை பிறந்துவிட்டது.

‘ஆண் குழந்தை தானே?’

பிரசவம் பார்த்த செவிலியரிடம் கேட்டார் ஃபார்ன்க்.

அவள், ‘இல்லை…’ என்பதைப்போல உதட்டைப் பிதுக்க, ஃப்ரான்க்கின் முகம் சுருங்கிப்போனது. ஏமாற்றத்தை வெளியே காட்டாமல், குழந்தையை வாங்கிக் கொண்டார்.

குழந்தை வளர்ந்தது. அக்குழந்தைக்கு ‘பிரான்ஸிஸ் ஈத்தல் கம்ம்’ என்று பெயரிடப்பட்டது. ஜூடி கார்லேண்ட்டின் இயற்பெயர் இது தான் (நாம் ஜூடி என்றே அழைப்போம்).

ஜூடியின் குடும்பத்தை, ‘கலைக் குடும்பம்’ என்றே சொல்லலாம். ஃப்ரான்க், ஈத்தல் –  இருவருமே பாடகர்கள். அதிலும் ஈத்தல் பியானோ வாசிப்பதில் வல்லவர். மேரி, டோரோதி என ஜூடிக்கு ஏற்கெனவே இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். ஜூடிதான் கடைக்குட்டி.

அந்தக் காலகட்டத்தில் தியேட்டரை வாடகைக்கு எடுத்து, அதில் மேடை நாடகம் போடுவது பிரபலம். இசை, நடனம், மேஜிக் ஷோ போன்ற மற்ற கலைகளும் அதில் அரங்கேறும்.

அப்படி ஆரம்பத்தில் ஊர் ஊராகச் சென்று தங்களுடைய திறமையை வெளியே காண்பித்த ஃப்ரான்க்- ஈத்தல் ஜோடி, ஜூடி பிறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிபோர்னியாவில் செட்டில் ஆனார்கள். 

புலிகளுக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்ன?

இரண்டு வயதிலேயே மேடையேறி விட்டாள் சிறுமி ஜூடி!

மூன்று பெண் பிள்ளைகளையும் ஒன்றாக இணைத்து, ‘தி கம்ம் சிஸ்டர்ஸ்’ என்ற குழுவை உருவாக்கினார் ஃப்ரான்க். மேரி, டோரோதி, ஜூடி என மூவரும் சேர்ந்து மேடையில் பாட, ஈத்தல் பியானோ வாசிப்பார். ‘தி கம்ம் சிஸ்டர்ஸ்’ குழு, உள்ளூரில் அப்போதே பிரபலமாக இருந்தது‌.

இதில், ஜூடியின் வசீகரக் குரல் அனைவரையும் கவர்ந்தது. ஈத்தல், தன்னுடைய மகள் எப்படியாவது இசைத்துறையில் புகழ் பெற வேண்டும் என்று நினைத்தார். இசைப் போட்டி எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஜூடியை அழைத்துச் சென்றார். அப்படி ஜூடிக்கு பதிமூன்று வயதாகும்போது, லூயிஸ் மேயர் முன்னிலையில் பாட வைத்தார். லூயிஸ் வேறு யாரும் அல்ல, அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஜி.எம் திரைப்பட நிறுவனத்தின் தலைவர். அப்போதைய ஹாலிவுட்டின் அடையாளம்.

பிறகென்ன? ஜூடியின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் லூயிஸ். என்ன, அவ்விளக்கு சீக்கிரமே அணைந்து போனதுதான் காலத்தின் கணக்கு.

0

ஜூடியின் உளவியலை ஆராயும் முன்பு, ஈத்தல் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் ஜூடிக்குப் பின்னாளில் வரப்போகும் உளவியல் சிக்கல்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தவரே ஈத்தல்தான்.

ஆம்…ஈத்தல் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். வெளியே ஜொலித்துக் கொண்டிருக்கும் ஆடம்பர வாழ்க்கை, இயல்பாகவே அவரை ஈர்த்தது. எந்நேரமும் பகல் கனவில் மூழ்கியிருந்தார். மேடையில் தோன்றி பாட வேண்டும், ஹாலிவுட்டுக்குச் சென்று புகழ் பெற வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது. ஆனால் மேடையில் பாடுவதோடு அவருடைய கனவு மூழ்கடிக்கப்பட்டது. தான் கண்ட ஹாலிவுட் கனவை ஜூடி மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தார் ஈத்தல்.

ஜூடியின் திறமையைக் கண்ட மாத்திரத்தில், அவளைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் ஈத்தல். 

‘அம்மா…இந்த உடை எனக்குப் பிடிக்கவில்லை…’

‘இல்லை…இதைத்தான் நீ அணிய வேண்டும்…’

‘அம்மா…இந்த உணவு எனக்கு வேண்டாம்…’

‘இல்லை…இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்…’

‘அம்மா… எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது…நான் தூங்க வேண்டும்…’

‘இதோ இந்த மாத்திரையை எடுத்துக் கொள். சோர்வு வராது…’

அது, ‘ஆம்ஃபிடமைன்’. 

ஆம்ஃபிடமைன் என்பது நம்முடைய மூளையைத் தூண்டி, அதிக ஆற்றலைக் கொண்டு வரும் மருந்து. பிரச்னை என்னவென்றால் இலவச இணைப்பாக இம்மருந்து, தூக்கத்தைக் கெடுத்துவிடும். எனவே அதற்குத் தனியாக தூக்க மாத்திரையை உட்கொள்வர் சிலர். 

ஜூடிக்கு தூக்க மாத்திரைகள் அறிமுகமானது இப்படித்தான்.

ஈத்தலுக்கு இதுபோன்ற மாத்திரைகளின் இன்னொரு முகம் பற்றி அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் பொருத்தவரை, மகள் நன்றாக பாடவேண்டும். அதைக் கேட்கும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டும். அதற்காக எதுவும் செய்யத் தயார்.

0

எம்.ஜி.எம் படைப்புகளில் நடிக்க அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனார் ஜூடி. 

எம்.ஜி.எம் ஓர் தனி உலகம். அதனுள் நுழைந்து விட்டால் வெளியே வருவது சிரமம். தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு, கையெழுத்து வாங்கி விடுவார்கள். அவர்களே அனுப்பி வைத்தால்தான் உண்டு. ஜூடிக்கு அதுதான் நடந்தது.

தூண்டிலில் இருந்து விலகி பறவைக்கு இரையான மீனைப்போல, ஈத்தலின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜூடி இப்போது எம்‌.ஜி.எம்மின் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்.

ஜூடியை உளவு பார்ப்பதற்கென்றே ஆட்கள் போடப்பட்டது. அவர் யாரிடம் பேசுகிறார்,  என்ன சாப்பிடுகிறார், எப்போது தூங்குகிறார் என எல்லா விவரங்களும் மேலிடத்துக்குப் போய்விடும். இவ்வளவு விதிமுறைகளைக் கையாண்ட எம்.ஜி.எம், ஜூடிக்கு இருந்த தூக்க மாத்திரை பிரச்னையை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் தலையைக் காட்டிய ஜூடி, 1939 ஆம் ஆண்டு வெளியான ‘தி விஸார்ட் ஆஃப் ஒஸ் (The Wizard of Oz)’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பாடுவதையும் நிறுத்தவில்லை.

மிகவும் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட ‘தி விஸார்ட் ஆஃப் ஒஸ்’, விமர்சகர்களிடமும் மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் டோரோதி‌ என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த இளம் நடிகை’ விருதை வென்றார் ஜூடி.

ஜூடியின் புகழ், மெல்லப் பரவத் தொடங்கியது. அந்த நேரத்தில்தான் எம்.ஜி.எம்மை எரிச்சலடைய வைக்கும் காரியம் ஒன்றைச் செய்தார் ஜூடி. ஆம்…திடீரென, டேவிட் ரோஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது ஜூடிக்கு வயது வெறும் பத்தொன்பது. ஆனால் இரண்டே வருடங்களில் இவர்களுடைய உறவு முறிந்தது. அதுமட்டுமல்ல, ஜூடி அதன்பிறகு திருமணம் செய்து கொண்ட யாருடனும் நீண்ட நாட்களுக்கு உறவைப் பேண முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம், நிலையற்ற அவருடைய உணர்ச்சிகள்.

1940 காலகட்டத்தில் வருடத்திற்கு நான்கு திரைப்படங்கள் என மிகவும் பிஸியாக இருந்தார் ஜூடி. நடிப்பு ஒருபுறம், பாடல் ஒருபுறம் என ஜூடி கொடிகட்டிப் பறந்த நேரம் அது. ஆனால் ஒரு கட்டத்தில் எம்.ஜி.எம் கொடுத்த அழுத்தத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பின் போது சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பதற்றம் ஆனார். தேவையில்லாத பயம் தொற்றிக் கொண்டது. முன்பே எடுத்துக் கொள்ளும் தூக்க மாத்திரைகளின் அளவைக் கூட்டினார். ஒரு கட்டத்தில், ‘தூக்க மாத்திரை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை…’ என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார். 

அப்போது பிரபலமாக இருந்த உளவியல் நிபுணரான எர்னஸ்ட் சிம்மெல்லிடம் சிகிச்சை பெற்றார் ஜூடி. ஆனால் அது எவ்வகையிலும் அவருக்குக் கை கொடுக்கவில்லை. சிம்மெல் மட்டுமல்ல, கிட்டத்தட்ட நான்கு வெவ்வேறு உளவியல் நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார். அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தன. அதற்கு முக்கியக் காரணம், தனக்கிருந்த போதை மாத்திரை பழக்கம் பற்றி ஜூடி வெளிப்படையாகச் சொல்லாதது தான்.

ஆம்ஃபிடமைன் மாத்திரையை ஒரு நாளைக்கு அவர் எடுத்துக் கொண்ட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? நாற்பது! இதுபோக பல்வேறு வகையான தூக்க மாத்திரைகள், மது, புகையிலை எனப் போதை மருந்துகளின் கூடாரமாக மாறியிருந்தது ஜூடியின் உடல்.

எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும், நடிப்புக்காக தன்னைச் சீராக வைத்துக் கொள்ளும் திறன் ஜூடிக்கு இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அசாதாரண நினைவாற்றல், இயல்பான நடிப்பு திறன், வசீகர குரல் இவையெல்லாம் அவரை விட்டு விலகத் தொடங்கின.

ஜூடியை வெளியேற்ற சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது எம்.ஜி.எம். அதற்கேற்ப ‘சம்மர் ஸ்டாக்’ திரைப்பட படபிடிப்பின்போது, அவர் செய்த ரகளையை முன்வைத்து அத்தோடு ஜூடியைத் தங்களுடைய நிறுவனத்திலிருந்து விலக்கிக் கொண்டது எம்.ஜி.எம்.

இது ஜூடியை மேலும் பாதித்தது. முதன் முதலாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் ஜூடி. குடும்பத்தினரின் உதவியால் காப்பாற்றப்பட்டார்.

நடுநடுவே மற்ற திரைப்பட நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுத்த ஜூடியால், முன்புபோல சோபிக்க முடியவில்லை. 

0

பல ஆண்டுகள் வெளியே தலை காட்டாமல் இருந்த அவர், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று நியூயார்க்கில் ஒரு மாபெரும் இசைக் கச்சேரி நிகழ்த்தினார்.

மேடையில் அவர் ஒருவர் மட்டுமே இருந்தார். உடை மாற்றம் இல்லை. நடனக் குழு இல்லை. பெரியளவில் ஒளி அமைப்பு இல்லை. இப்படி எந்த ஆடம்பர அலங்காரமும் இல்லாமல் இருபத்தாறு பாடல்களைத் தொடர்ச்சியாக அவர் பாடியபோது, ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கினர். அதனை நேரில் கண்டவர்கள், ‘அது தங்கள் வாழ்நாளில் கிடைத்த மிகச் சிறந்த மாயாஜால இரவு…’ என்றனர்‌.

ஆனால் ஜூடிக்குச் சொந்த வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே மன அழுத்தம், அதே தூக்க மாத்திரைகள்!

எத்தனை நாட்களுக்குத்தான் அத்தனை மாத்திரைகளை அந்த கல்லீரல் தாங்கும்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அது, இறுதியாகச் செயல் இழக்கத் தொடங்கியது.

‘நீ யார் என் உயிரைப் போக்குவது? அதை நானே பார்த்துக் கொள்கிறேன்…’ என்று நினைத்தாரோ என்னவோ, 1969ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார் ஜூடி.

கழிப்பறை இருக்கையில் அமர்ந்தபடி, தலையைத் தாழ்த்திய நிலையில் இருந்த அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுதாள் லைசா (ஜூடியின் மூத்த மகள்). சாகும்போது ஜூடியின் வயது நாற்பத்தேழு‌. 

‘நான் வாழ்ந்த வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. காதல், மகிழ்ச்சி, துன்பம், துயரம், அவமானம், துரோகம் என எல்லாவற்றையும் நான் சந்தித்திருக்கிறேன்‌. இதையெல்லாம் எழுதித் தீர்க்க முடியாது. அதற்கு முன்பு நான் இறப்பதே எளிமையான ஒன்று…’

வாழ்வின் கடைசி தருணத்தில் ஜூடி சொன்ன ஆழமான வார்த்தைகள் இவை. 

இத்தொடரில் முன்பே நான் சொல்லியிருந்ததைப்போல, போதை ஒரு புதைகுழி. அதிலிருந்து மீண்டு வருவது சிரமம். ‘பழக்கம்’ என்றளவில் இருக்கும்போதே அதற்குண்டான சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியம். ‘அடிமை’ என்கிற நிலைக்குச் சென்றுவிட்டால் ஜூடியின் நிலைதான் யாருக்கும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *